Saturday, August 27, 2016

பேசாதே..வாயுள்ள ஊமை நீ...

ஒழுங்காகப் பேசுவதாக நினைத்து எசகுபிசகாக உளறி விட்டு, பேந்தப்பேந்த விழிப்பதென்பது சிலருக்கு வாழ்வியல் விதி. பெரும்பாலும் இதில் ஆண்களே மாட்டுவார்கள். மறதியோடு, விபரீதமாக வேறொரு நினைவைத் தொடர்புபடுத்திக் கொள்பவர்களுக்கு “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”.

ஊர்ப்பக்கம் போனால் மிக ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ உளறி மாட்டிக்கொள்வேன். மறதி அதிகமானதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க ஒருபோலி தன்னம்பிக்கையுடன் ”அங்! நீங்க செல்லமுத்துதானே?” என்பேன். கேட்கப்பட்ட அன்வர் பாய் என்னை அடிக்க யாரை அழைக்கலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்து அங்கிருந்து நகர்வார். அதன்பின் நிஜமான செல்லமுத்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து ’ டே, தொம்மையோட தம்பிதானே நீயி?’ என்றிருப்பேன். விடுங்கள், இதெல்லாம் அதிகம் பாதிப்பில்லாதவை.

சிலவருடங்கள் முன்பு ஒரு கலியாண மண்டபத்தில் வாயெல்லாம் சிரிப்பாய் வரவேற்ற ஒருவரிடம் “கங்க்ராஜுலேஷன்ஸ்! பொண்ணுக்கு சீமந்தமாமே?! எப்ப டெலிவரி?” என்றேன். அவர் , ஜாங்கிரியை வாயில் அடைக்கும்போது எதிரே வந்த மனைவியைக் கண்டு விழி பிதுங்கும் டயாபடீஸ்காரனைப் போல ஒரு முகபாவம் வைத்துக்கொண்டு அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தார்.

 இருநிமிடங்களில் அங்கு விரைந்து வந்த மங்கை “ அவர்கிட்ட என்ன கேட்டுத் தொலைச்சீங்க?” என்றாள்.

”பொண்ணுக்கு எப்ப டெலிவரி?ன்னேன். போன மாசம் சீமந்தத்துக்குப் பத்திரிகை வந்ததே?”

“நாசமாப் போச்சு. அது இவர் அண்ணன் பொண்ணுக்கு..”

“அப்ப இவர் பொண்ணுக்கு எப்ப டெலிவரி?” நான் விடவில்லை.

“வாயை மூடுங்க. அதுக்கு இன்னும் கலியாணமே ஆகலை”

”அண்ணன் தம்பிகளெல்லாம் பொண்களுக்கு ஒரே நேரத்தில் கலியாணம் செய்துவைக்க மாட்டார்களோ? அல்லது இந்தப் பெண்கள்தான் ஒரே நேரத்தில் டெலிவரி வைச்சுக்கொள்ளாதுகளோ?” என்று லாஜிக்கே இல்லாமல் உளறி, மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லுமுன் நகர்ந்துவிட்டேன்.

உறவுகள், ஒரே மாதிரியாக இருத்தல் என்பதில் வரும் சிக்கல்,. பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பதில்லை. யாருடைய அத்தைபெண்ணை யாருடைய மூன்றாவது தம்பிக்கு எங்கே கலியாணம் செய்து கொடுத்தார்கள் என்பதிலிருந்து, இப்ப பிறந்த சிசுவரை கணக்கு கரெக்டாய் வைத்திருப்பார்கள்.
இந்த உறவுகள், உட்கணங்கள், சார்புகள் எளிதில் அவர்கள் அறிவதால்தான், கம்ப்யூட்டர் பொறியியல், கணக்கியல் போன்றவை அவர்களுக்கு எளிதில் வந்துவிடுகின்றன போலும். பசங்க, முட்டி முட்டிப் படிச்சுதான்  ஜாவா, .நெட் , பைதான் கோட் எழுதுவான்கள்.
.
Aravindan Neelakandan பார்க்கும்போதெல்லாம் “ எளமையா இருக்கீங்களே?”ன்னுவார். “தம்பி, எம் ஜி யார் கலர்ல சும்மா செவ செவன்னு இருக்கீங்களே?”என்று கேட்கப்பட்ட வடிவேலு நினைவில் வந்துபோவார்.

முன்பொருமுறை, மிகக்கரிசனமாகக் கேட்பதாக நினைத்து “மாமா,, காடராக்ட் ஆபரேஷன்னு கேள்விப்பட்டேன். அரவிந்த் ஆஸ்பிட்டல்லயா? வலது கண் சிகப்பா இருக்கே?” என்க , மாமா மேலும் கீழும் பார்த்து , தனது எம்.ஜி.ஆர் கூலிங்கிளாஸை எடுத்துவிட்டு, கோபத்தில் மேலும் சிவந்த விழிகளால் , செங்கட் சீயமாய் நோக்கி “ ஆபரேஷன், இடது கண்லடா, அறிவு கெட்டவனே” என்றார்.

கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலே, இப்போதெல்லாம் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக இருந்துவிடுகிறேன். “போனமாசம்தான் ஒரு ஹெர்னியா ஆபரேஷன்... அதான் மெதுவா டாக்ஸில வர்றேன். ஆட்டோ குலுங்கறது” என்றவரின் அண்ணன் அடுத்த திருமண மண்டபத்தில் ஆட்டோவில் வந்து இறங்குகையில் “ சார் பாத்து, ஆபரேஷன் ஆன இடம்” என்று ஏகக் கரிசனமாகச் சொல்லி , அவரிடம் இருப்பதை இல்லாமல் போக வைக்க விருப்பமில்லை.

இது புரியாமல் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நானும் ஜாதவ் என்பவரும் , எங்களது முந்திய கம்பெனி சக ஊழியரைச் சந்திக்க அவர் வீட்டிற்குப் போயிருந்தோம். ”பிள்ளைகளுக்கு வரன் பாத்துகிட்டிருக்கோம், இன்னும் அமையலை” என்றார் அவரது மனைவி மிகக்கவலையாக. உள்ளேயிருந்து வந்த ஆஜானுபாகுவான இளைய உருவம் ,குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு, எங்களை கால் தொட்டு வணங்கி, தலைமுடி சிலுப்பி, “பை அங்கிள்” என்று கனத்த தொண்டையில் சொல்லிவிட்டு வாசலில் விரைந்தது.
“அட, இவ்வளவு ஹாண்ட்ஸம் ஆன, அடக்கமான பையனுக்கு பொண்ணு வரிசையில நிப்பாங்க. கவலையே படாதீங்க” என்றார் ஜாதவ், மிகக் கரிசனத்துடன். நண்பரின் மனைவி முகத்தில் ஒரு இறுக்கம்.. உள்ளே சென்றுவிட்டார்.

காரைக் கிளப்ப்பும்போது ”ஜாதவ்ஜி, என்ன சொன்னீங்க?” என்றேன்
.
“நல்ல ஹான்ஸம்மான பையன்-ன்னேன் இல்லையா பின்னே?”

“அது அவரோட மூத்த பொண்ணு”

Saturday, August 20, 2016

கம்பனும் அலைகடல் சந்தமும்


கம்பராமாயணத்தில் சந்தம் ஜிங்கு ஜின்கு என்பதாக மட்டுமல்ல, இடத்திற்கும் நிகழ்விற்கும் தகுந்தாற்போல பொருத்தமான இயற்கை ரிதம் கொண்டும் வருவதுண்டு. யுத்தகாண்டத்தில் ஒரு இடத்தைப் பார்க்கலாம்.

அலைகள் எழுந்து ஆராவரிப்பதை நினைவில் கொள்வோம். . முதலில் அகடு (கீழ்நிலை),அதன்பின் முகடு ( மேல் எழும் நிலை), பின் மீண்டும் அகடு, முகடு என்று மாறிமாறி ஒரு சீராக வரும்.

 சொல்லின் அசையில், அகடு - நிரை , முகடு - நேர்.   டட -டா -டட- டட-டா-டட _/\_ _/\_   நிரை நேர் நிரை, நிரை நேர் நிரை  என்று போவதாக  அலைகள் ஏறி இறங்குவதை கற்பனையில் பொருத்திக்கொள்ளுங்கள்.



இந்திரஜித்திற்கும் , இலக்குவனுக்கும் போர்... இருவரும் கடுமையாக அங்குமிங்கும் இடம் மாறி போர் புரிகிறார்கள். மூன்று இடங்களுக்கு அவர்கள் செல்வதை மற்ற வீரர்கள் பார்க்க முடிகிறது. வீரர்களின் முன்புறம், இரு பக்கங்கள்.  (பின்புறம் வீரர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இருவரும் வேறு இடங்களுக்குள் பெயர்ந்து விடுகிறார்கள்.)..
பாடலை கம்பன் இவ்வாறு அமைக்கிறான்.

இருவீரரும் இவன்- இன்னன் இவன்- இன்னன் இவன் -இன்னனென
பெருவீரரும் அறியா வகை திரிந்தார் , கணை சொரிந்தார்.
ஒருவீரரும் இவர் ஒக்கிலை எனவானவர் உகந்தார் .
பெருவீரையும் பெருவீரையும் பொருதால் எனப் பொருதார்.

இரு-வீ -ரரும் இவ-னின் -னனி வனி-ன்
தட-தா-தட தட-தா-தட தட-தா-தட .... 
முழுப்பாடலுக்கும் இந்த ஏறி இறங்கும் சந்தம் அமையும்.

வீரை - கடல். 
நான்காம் அடியில் இரு பெருங்கடல்கள் போர்செய்வதைப் போல போர்செய்கிறார்கள் என்கிறார் கம்பர்.

இருகடல்கள் அலைகள் ஆர்ப்பரிக்க மோதுவதாக அமைந்த இப்பாடல் அந்த அலைச்சந்தத்தில் அமைந்திருப்பது எவ்வளவு பொருத்தம்?!

கம்பன் பல நேரங்களில் திணற அடித்துவிடுகிறான்.

Saturday, August 06, 2016

வட்டம்.



  
’சாமுவேல் பலசரக்குக் கடை, தூத்துக்குடி 2’ என்ற போர்டு துருப்பிடித்துப் போய் ’வேல் பலசரக்கு’ என்று தெரிந்ததை யாரும் பொருட்படுத்தியதில்லை. அண்ணாச்சி கடை என்பது மட்டுமே அவரது ப்ராண்டாக இருந்தது.
” 70களில் ஒரு குடிசைவாசலில் நாலு டப்பா வைத்து தொடங்கிய கடை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து , ரெண்டாம் கேட் பக்கம் கடைவீதியில் விரியுமென அவர் மட்டுமே எதிர்பார்த்திருக்க முடியும்.
”ஏட்டி, கிளி டீத்தூளு ரெண்டு பாக்கெட்டு , அந்தா,அங்கன அண்ணாச்சி கடயில வாங்கிட்டு வா. ஓடு ” என்ற குரலுக்கு மெல்ல ஓடிவரும் பெண்ணிடம், “ஏப்பிள்ளே, ஒங்க மாமா வந்திருக்காரோ?” என்பார் அண்ணாச்சி, டீத்தூள் பாக்கெட்டுகளை ஒரு காகிதத்தில் வைத்துக் கட்டியபடி.
“ஆமா, அக்காவும் வந்திருக்கா.”
“ஆங்? அம்மா அதுக்குத்தான் போயிருந்தாங்களோ? முந்தாநா, பஸ் ஸடாண்டுல வச்சிப் பாத்தன்”
“அம்மாதான் கூட்டியாந்துச்சு”
அந்த வீட்டுப் பெண்மணி தெருவில் போகும்போது ,“வாங்கம்மா” என்பார், கடையிலிருந்தே கை கூப்பியபடி “ பொண்ணுக்கு ப்ரசவமாங்கும்? நல்லா நடக்கட்டும். நம்ம கடையிலயே பொறந்த பிள்ளைக்கு வேணும்கறத வாங்கிரலாம், பாத்துகிடுங்க. சின்னபொண்ணுட்ட சொல்லிவிடுங்க, கொடுத்துவிட்ரலாம்”
மசாலா பொடி, நயம் மாசி என கடை கமகமக்கிறதே என்றால் “லே, ரெண்டு வாரத்துல ஆடி மாசம் வருதுல்லா? புதுசா கலியாணமான பொண்ணுகள அம்மா வீட்டுல கொண்டு வந்து விடுற  காலம் பாத்துக்க. அந்தப் பய ஒன்னு ரெண்டு மாசம் என்ன செய்வான்? சரி, போவுதுன்னு, மாப்பிளைக்கு , மாமியா வீட்டுல நல்லா சாப்பாடு போட்டு அனுப்புவாங்க. மட்டன் என்னா, கோழி என்னா..மாசி என்னா? அங்? அப்பம் நம்ம கடைல மசாலா, மாசி இருந்துச்சின்னா...”
ஆவணியிலிருந்து எட்டாவது மாதத்தில் கடை ,பிறக்கும் குழந்தைகளுக்கான துணிகளுடன்  ஃபீடிங் பாட்டில் கழுவும் ப்ளாஸ்டிக் ப்ரஷ், ஜான்ஸன் சோப்பு, பவுடர் லாக்டோஜன் என தோற்றமே மாறியிருக்கும்.
“நம்ம பயலுவளத் தெரியாதாடே?” என்பார் சிரித்தபடி “காஞ்சமாடு கம்பம்புல்ல விழுந்தா மாரி, ஆவணி வந்திச்சின்னா...”
அண்ணாச்சியின் மகன் பி.ஈ படிக்கப்போனது அவருக்கு வள்ளிசாகப் பிடிக்கவில்லை. ”எந்த *** பயலோ இவம் மனச மாத்தியிருக்கான் கேட்டியா? கடையில ரெண்டு மாசம் ஒக்காருல, நெளிவுசுளிவு கத்துக்க, திரேஸ்புரம் வீட்ட ஒத்திக்கு வச்சி, பணம்தாரன். வி.ஈ ரோடுல புதுசா கடை போடுங்கேன்.. எஞ்சினீயரிங்கு படிக்கணுங்கான். என்ன கிழிக்கப்போறான்? இந்தா, ஸ்பிக் நகர்லேர்ந்து  வாராரே, தொரசாமி.. அவருகூட ஏதோ ஏ.ஈங்காரு. கடலப் பருப்புக்கும், கடலைக்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு வார்த்தைக்கு சொல்லுதேன்.. என்ன படிச்சு என்ன கிழிச்சாருங்கேன்? இதுக்கு நாலு பொட்டலம் போட்டா, அதே சம்பளம் வந்திட்டுப் போவுது”
ஜெபராஜ் பி.ஈ முடித்து, அன்று வந்த அலையில் அமெரிக்கா அடித்துப் போகப்பட்டான். சாமுவேல் அண்ணாச்சி கடை, சூப்பர் மார்கெட்களில், மால்களில் பொலிவிழந்தது. ஐந்து வருடமுன்பு பார்த்தபோது மிகவும் மெலிந்திருந்தார். கடை இருளடித்துக் கிடந்தது.
“என்ணண்ணாச்சி, திருநவேலி இருட்டுக்கட கணக்கா வச்சிருக்கீயளே?அல்வா விக்கீங்களோ?”
அவருக்கு அந்த நையாண்டி சுகப்படவில்லை என அறிந்ததும் பேச்சை மாற்றினேன்.
“பையன் கூட்டிட்டிருந்தானே? அமெரிக்கா போவலியா அண்ணாச்சி?”
“எளவு அந்தூருக்கு எவம் போவான்?” என்றார் சலிப்புடன் ”லே , அவன் இருக்கற ஊர்ல , அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க”
“இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி.? இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு? இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா? பையன் கிட்ட இரிங்க”
அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா.” என்றார் அன்பாக “ இந்தாரு,( இங்க பாரு), ஒலகம் ஒரு வட்டம் பாத்துக்க. மேல கீழன்னு ஒண்ணுமேயில்ல. அங்கிட்டிருந்து பாக்கச்சே, மேல போற மாரித்தெரியறது, இங்கிட்டு இருந்து பாக்கச்ச, கீழ வர்ற மாரித்தெரியும். ஆனா, எதுவும் மேல கீழ போவல்ல. எப்படிப் போனாலும், ஒரே எளவுதான். ஒரே எடத்துலதான் கிளம்பறோன், அதே எடத்துக்குத்தான் வாறோம். நீ டாலர்ல சம்பாரிச்சாலும், அணாவுல சம்பாரிச்சாலும் ஒண்ணுதான். “
“இதெல்லாம் ஏட்டுச் சொரக்கா அண்ணாச்சி. கூட்டுக்கு ஒதவாது”
“எவஞ்சொன்னான்?” என்றார் விழி சிவந்து “ டே, நீ யோசிக்கியே, அதுகூட முந்தியே யோசிச்சதுதான். புதுசுன்னு நினைக்கியே அது அதரப்பழசு. எல்லாம் வட்டம்தாம்டே, புரிஞ்சிக்க, மண்ணுல வர்றோம். மண்ணுல போறம். இதுல எது பெரிசு , எது சிறுசு,? போல, போக்கத்தவனே”
"கடைய யாரு பாப்பா? அண்ணாச்சி, சொல்றதக் கேளுங்க. பேசாம அடைச்சுப் போட்டுட்டு, மவங்கிட்ட இரிங்க. கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். பொறவு பழகிப் போவும்”
“தம்பி” என்றார் சிரித்தபடி “ ஒனக்கு ஒண்ணு புரியல. கடைங்கறது என்னன்னு நினைச்சே? அது இந்த பத்துக்கு அஞ்சு இடமோ, பின்னாடி இருக்கற சரக்கு ரூமோ இல்ல. எங்கப்பா, தலையில ஒரு பெட்டியில பனங்கற்கண்டு, கருப்பட்டி வச்சி வித்தாரு. அவரு கடை தலையில இருந்துச்சு. எந் தாத்தா பனையோலை விசிறி செஞ்சாரு. கடை அவருக்கு கையில இருந்திச்சி.
கடைங்கறது மனசுல இருக்கு தம்பி வெளங்கா? சிலருக்கு வாயில இருக்கும், சிலருக்கு கையில இருக்கும். ஆனா, அது நெஞ்சுல, மூளையில இருக்கணும். இருக்கும். இது வட்டம். எங்கிட்டு போனாலும், வெசயம் ஒண்ணுதான்”
அடுத்த வருடம் , நெடிய விடுமுறையில் ஊரில் இருக்கும்போது சாமுவேல் அண்ணாச்சி இறந்துபோனார். “துஸ்டி கேட்டிட்டு வாரன்”என்று வீட்டில் சொல்லிவிட்டு, அவர் வீட்டிற்குப் போனேன். வழியில் அவர் கடையின் முன்னே ஒரு லாரி நின்றுகொண்டிருக்க, கடையின் கதவுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. உள்ளிருந்த பொருட்களை மலிவு விலையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“கடையை அடைக்கோம்” என்றான் ஜெபராஜ். அரை டவுசர் போன்று ஒன்றும், டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். அருகே நெடிய , ஒல்லியாக ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
“ஏ, ஜெபா, அப்பா போயிட்டாரே” என்று துக்கம் விசாரித்துவிட்டு, “இவன் யாருடே?, ஒஞ்சாடையில இருக்கானே?” என்றேன்.
“எம் மூத்த மவன். தாத்தாவப் பாக்கணும்னான்.சே.ரின்னு கூட்டியாந்தேன். மேரியும், பொண்ணும் வரல”
“என்னடே செய்யுத?” என்று கேட்டேன் அவனைப் பார்த்தபடி.
“அம். அங்கிள். ஐ யாம் இன் அன் இண்டெர்ன்ஷிப்”
" என்ன படிக்கே? ” புரியாமல், சும்மா கேட்கவேண்டுமே என்றுதான் கேட்டேன்.
“வெல்.. ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் வைச்சு, மக்களோட சைக்காலஜி அல்கோரிதம் எழுதறோம். பையிங் பேட்டர்ன், நாம கடையில வாங்கற முறையில எதாவது ஒரு வடிவம் இருக்கும், யாரு, என்ன வயசு, எங்க இருக்காங்க, என்ன வாங்கறாங்கன்னு பாத்து, அதுக்கு ஏத்தமாதிரி, கடையில எந்த மாதிரி பொருட்களை, எப்ப வாங்கி வைக்க்றதுன்னு , ரியல் டைம்ல , கடைகளுக்கு. அவங்க மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட்டுக்கு, டிஸ்ப்ளே யூனிட்களுக்கு சொல்ற ஒரு க்ளவுட் பேஸ்டு சாஃப்ட்வேர். எந்த கடையில யாரு, எங்க வாங்கினாலும், டேட்டா எங்களுக்கு வந்துரும்.. எங்க சாஃப்ட்வேர் வச்சிருக்கிற அத்தனை கடையிலயும் இது பயன்படும்.ரொம்பவே பெர்சனலைஸ் பண்றோம்.“
யாரோ அருகில் வந்த நிழல் தெரிந்தது. “அண்ணாச்சி போட்டோக்கு ஃப்ரேம் போட்டு கேட்டிருந்தாங்க. யார்ட்ட கொடுக்கணும்?”
செவ்வக சட்டத்துள் நீள் வட்ட போட்டோவில் அண்ணாச்சி சிரித்துக் கொண்டிருந்தார்.