காற்று வெம்மையாக இருந்தபோதிலும், வியர்த்திருந்த்தால் அதிகம் சூடு தெரியவில்லை. சட்டையின்றி, டவுசரில் நான்குபேர் மட்டும் கிருஷ்ணன் கோவில் வாசலெதிரில் மண் தரையில் பம்ப்ரம் விட்டுக்கொண்டிருந்தோம்.
“லே, பம்பரத்த மரியாதக்கி நடுவுல வைய்யி. தோத்துட்டு ஓடியா போற?” மணி, சங்கரனின் கையை இறுகப்பிடித்தான். “கைய வுடுல..வுடுங்கேம்லா?” சண்டை மெல்ல முற்றிக்கொண்டுவர, நான் மறுபுறம் விழிவைத்துக் காத்திருந்தேன். ராஜாமணி இன்னும் வரவில்லை.
அப்படியொன்றும் அவன் பெரிய பம்பர வீரனில்லை. ஆனால் பம்பரம் என்றால் அது ராஜாமணியுடையதுதான் . அடிக்க ஆளில்லை.
காரணம் உண்டு. அவன் அப்பா கடைசல் கம்பெனி வைத்திருக்கிறார். சின்ன மரக்கட்டைகளில் சொப்பு சாமான் செய்து,பனையோலைப் பெட்டியில் வைத்துத் தருவார். அம்மி, குழவி, ஆட்டுக்கல், அடுப்பு, சைக்கிள், வகைவகையான பாத்திரங்கள் என சிறு வீடே அதினுள் இருக்கும். பொதுவாகப் பெண் குழந்தைகள் வைத்து விளையாடுவார்கள். சிறு அளவில் குடும்பங்களை அவர்கள் விளையாட்டில் பார்க்கலாம்.
அதோடு, ராஜாமணி அழுது புலம்பி, சில ஸ்பெஷல் பம்பரங்களைத் தனக்கென செய்துகொள்வான். பெரிய பம்பரம், டபுள் ஆணி பம்பரம், மேலும் கீழும் ஆணி கொண்டது, சுற்றும்போது விர்ர்ரென சப்தம் போடும் பம்பரம்… பொறாமையாக இருக்கும்.
ராஜாமணி இன்னும் வரவில்லை.
பள்ளியிலிருந்து வருகையில் ஒரு மாலை அவனுடன் பேச நேர்ந்தது. ஆங்கில வீட்டுப்பாட நோட்டு கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்ட்தும். அவன் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வாசலில், ஒரு இயந்திரத்தின் ஒலி. அங்கங்கே சொப்புச் சாமான்களும், மரத்துண்டுகளும், சுருள் சுருளாக மர இழைகளூமாக இறைந்து கிட்ந்தன.
“அப்பா, கடைசல் வச்சிருக்காரு. சொப்புச்சாமான்”
சுற்றிக்கொண்டிருந்த ஒரு இரும்புத் தண்டில் , ஒரு மரக்கட்டை வைக்கப்பட்ட்தும், அது மரச்சுருள் விடுத்து, வளைவாகத் தேய்ந்துஒரு பெண்ணின் இடையாக மாறுவதை வியப்புடன் பார்த்திருந்தேன்.
“இங்கிட்டு நிக்காத. மரத்தூள் கண்ல விழுந்துரும். லே ராஜாமணி, இங்கிட்டு வா” குனிந்து, இயந்திரத்தில் மரக்கட்டையை வைத்து, லாகவமாக எடுத்த அந்த ஒல்லி மனிதர் , ராஜாமணியின் தந்தை என ஊகித்தேன்.
“லே , என் பம்பரத்துல ஆக்கர் வைச்சே, கொன்னுருவேன்” சங்கரன் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் பம்பரம் வட்டத்தின் நடுவே கிடந்த்து. மற்றவர்கள், குறிவைத்து அதன் தலையில் தங்கள் பம்பரத்தின் ஆணியால் குத்தவேண்டும். அதுதான் ஆக்கர். பெரிய ஆணியாக இருந்தால், கீழே கிடக்கும் பம்பரம் உடைந்துகூடப் போகும்.
ராஜாமணி என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அவன் தங்கை ஒருகாலில் தவழ்ந்து வந்து, ஹாலைக் கடந்து போனாள். “ காலு சூம்பிருச்சி. சின்னப் பிள்ளேல, காய்ச்சல் வந்திச்சி பாரு,. அப்பம். ஸ்கூலுக்குப் போறா. அம்மா தூக்கிட்டுப் போவாங்க”
பல வெற்றுப் பனையோலைப்பெட்டிகள் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இதுல நானும் தங்கச்சியும் சொப்பு சாமான் அடுக்குவோம். ஒரு ஆட்டுக்கல்லு, ஒரு உரலு, மூணு பாத்திரம், ஒரு அடுப்பு. பாத்து வைக்கணும். ஒரு மூடியில, ரெண்டு ஆட்டுக்கல்லு போச்சின்னு வைய்யி, ஆத்தா கொன்னுரும்”
கடைசல் கடையென்பது பெரிய பணக்கார வியாபாரம் என நினைத்திருந்தேன். “போல கூறுகெட்டவனே” என்று சிரித்தான் ராஜாமணி. பாக்கத்தான் சொப்பு செட்டு அழகா இருக்கும். செய்ய எம்புட்டு கஷ்டம்தெரியுமா? இந்தா, இங்கிட்டிருக்குல்லா, சாயம்? அத சொப்புல ஏத்தணும்னா எங்கப்பாவால மட்டும்தான் முடியும். வில ஜாஸ்தில அதுக்கு. சாயம் வேங்கணும்னா, ரொம்ப துட்டு வேணும். அப்பா, கடன் சொல்லித்தான் சாயம் வேங்குவாரு”
”ரோட்டுல கண்ணன் கடைசல்னு ஒண்ணு இருக்குல்லா? அது உங்க கடையா?”
“இல்லலே. அது மாரி சில கடைக்கு அப்பா , செஞ்சு குடுப்பாரு. நாங்களும் தனியா விக்கோம். ஆனா கடை இல்ல பாத்தியா, நிறைய பேரு வேங்க மாட்டாவ.”
மிரட்டலுக்கு ஒருவரும் பணியாத்தால், சங்கரன் அழுதுபார்த்தான். “ஆக்கரு வைக்காதீஙக்டே மக்கா. ஒரேயொரு பம்பரம்தாண்டே இருக்கு. போச்சுன்னா, அம்மா வையும்” எவன் கேப்பான்?
“யம்மா, சோலையூர் ஆச்சி வந்திருக்காக” என்றாள் தங்கை. வந்த வயோதிகப் பெண்மணி “லே ராஜா, தள்ளி நில்லுல. காத்துவரட்டு” என்றாள், சேலையில் முகம் துடைத்தபடி
“ஏட்டி, இவளே” ஆச்சி, அவன் அம்மாவிடம் அவசரமாகப் பேசினாள் “ ரெண்டு செட்டு எடுத்து வையி. மதுரைல எம் பொண்ணு கேட்டிருக்கா . அவ கொழுந்தியாளுக்கு வேணுமாம். பணம் அடுத்த மாசம் வாங்கிக்க”
“ஆச்சி” என்றாள் ராஜாமணியின் அம்மா “ போன தடவெ ஒண்ணு கொண்டுபோனிய. அதுக்கே பைசா வரல. எங்கிட்டுருந்து செட்டு போடுவேன்? பத்து ரூவாயாச்சும் கொடுத்துட்டுப் போங்க”
“பத்தா? வெளங்கும்” என்றாள் ஆச்சி. “ நான் கண்ணன் கடைசல்ல வேங்கிக்கிடுதேன். அவன் எட்டு ரூபா சொல்லுதான்”
ஆச்சி , கையெடுத்துக் கும்பிட்டாள் ராஜாமணியின் அம்மா. “நொடிச்சுப்போயிட்டிருக்கம். நீங்கதான் ஒத்தாச பண்ணனும். சரி ஒரு செட்டு கொண்டுபோங்க. அஞ்சு ரூபா கொடுப்ப்பீயளா?”
“பேராசைப் படாதட்டீ. ஒரு செட்டுக்கு எனக்கே அஞ்சு ரூவா கேக்க.” வைதுகொண்டே ஆச்சி ஐந்து ரூபாயை இடுப்புச் சுற்றிலிருந்து எடுத்தாள்.
சுப்புவின் பம்பரம் முதலில் வட்டத்தில் இறங்கியது. சங்கரனின் பம்பரத்தில்லிருந்து சற்றே தொலைவில் சர்ரென ஓசைப்படாமல் சுற்றியது. ‘சே” என்றான் சுப்பு. சங்கரனின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது.
லே, இங்கிட்டு வா” ராஜாமணி அவசரமாக அழைத்தான். மரத்துண்டுகளைத் தாண்டி விரைந்தேன். அவன் காட்டிய இட்த்தில் இரு பல்லிகள் எதிரும்புதிருமாக நின்றிந்தன்.
”பல்லிச்சண்டை பாத்திருக்கியாடே? பாரு” திடீரென ஒரு பல்லி மற்றதனைக் கவ்வ, இரண்டும் புரண்டன. வெள்ளையாக மென் வயிறு தெரிய , தரையில் துடித்தன. மீண்டும் நிமிர்ந்தன. ஒரு நிமிடம் ஒன்றையொன்று கவ்வியபடி நிலைத்து அசையாது நின்றன. ”எவ்ளோ நேரம் இப்படி நிக்கும்?” என்றேன். அவற்றைப் பார்த்தபடியே ராஜாமணி சொன்னான் “ தெரியாது. எதாச்சும் ஒன்னு பலவீனமாவும் பாரு. அப்ப அசையும். அடுத்த பல்லி, இன்னும் வேகமா அத இறுக்கும். சிலது செத்துப்போகும். சிலது ஓடீரும்”
இயந்திரத்தை நிறூத்திவிட்டு ராஜாமணியின் அப்பா வந்தார். காபியைக் கொடுத்தபடியே “பணம் கேக்கப்போறியளா?”என்றாள் ராஜமணியின் அம்மா. “எங்க?” என்றார் அவர் “ போனதடவையே முதலியார் சொல்லிட்டாரு. இனிமே கேக்காதியன்னு. சாயம் நாலு செட்டுதான் வரும்”
“பொறவு என்ன செய்ய?”
“பாப்பம்” என்றார்.
”லே, கணேசா” என்றான் சங்கரன் கெஞ்சியபடி “ பம்பரத்துல அடிக்காதடே. பக்கத்துல அடி. வேணும்னா, பொறவு, பம்பரம் தர்ரேன். சும்மானாச்சிக்கு ஒரு சின்ன குத்து வையி. ஆக்கரு வைக்காதடே” கணேசன் ரொம்ப மும்முரமாக, தன் பம்பரத்தில் , கயிற்றை அழுத்திச் சுற்றிக்கொண்டிருந்தான். விடும்போது , படுவேகமாக களத்தில் இறங்கும் அது.
யப்பா, என்றான் ராஜாமணி. “ ரெண்டு பம்பரம் செஞ்சு தாங்கப்பா. ஒண்ணு எனக்கு, இன்னொண்ணு இவனுக்கு.”
“சரி”என்றார் நினைவின்றி. “யப்பா”கெஞ்சினான் அவன் “ ரெண்டுத்தலயும் மண்டைல கலர் வட்டம் வேண்டும்”
“லே”அதட்டினாள் அம்மா “சும்மாயிரி. குடிக்கவே கஞ்சியில்லயாம். ஊருக்குக் கூழு ஊத்தப்போறானாம். சாயம் ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, மொண்ணை பம்பரம் போதும், இப்ப”
”யம்மா “ அழுதான் ராஜாமணி.
”இந்த ஒரேயொருவாட்டி மட்டும்”
மவுனமாக அவன் தந்தை எழுந்து சென்று இயந்திரத்தை இயக்கினார். விஷ் என்ற ஒலியிடன் அது சுற்றியது. ஆவலுடன் ராஜாமணி காத்திருந்தான். இரு கட்டைகளை எடுத்து மெல்ல இழைத்தார். பம்பரத்தின் தலை மெல்லமெல்ல தோன்றியது.
“யப்பா பெரிய பம்பரம்.. உசரமா… ஆணி டபுள்”
அவர் ஒன்றும் சொல்லாமல் இரு நிமிட்த்தில் ஆஸ்பத்திரியில் நர்ஸ், குழந்தையைக் காட்டுவது போல் பம்பரத்தைக் காட்டினார்.
“போதுமால?”
“ம்” ராஜாமணி குதித்தான். “யப்பா,இன்னொண்ணு” என் பம்பரம் சற்றே சூம்பியிருந்த்து. பரவாயில்லை. கண்முன்னே பம்பரம் உயிர்பெறுவது கண்டேன்.
யப்பா, சாயம்”
“ராஜாமணி… அடி வேணுங்கோ? சாயம் கிடையாதுன்னேம்லா?” அவன் அம்மா கத்துவது கேட்ட்து.
“போட்டு” என்றார் அவன் தந்தை பம்பரத்தை ஒரு இடுக்கியில் பொருத்தினார். பம்பரம் இடுக்கியில் சுழன்றது.
“என்ன கலர் வேணும். சீக்கிரம் சொல்லு”
”அங் ஊதா, அப்புறம் உள்ளாற சேப்பு, மஞ்ச, வெள்ள..வெள்ள வேண்டாம். ம்ம்..”
”நீ சொல்லு” என்றார் என்னிடம் “ ஊதா, உள்ளாற நீலம்” “ஊதாக்குப்புறம் நீலம் நல்லா இருக்காது. எடுக்காது. மஞ்ச போடுதேன். அப்புறம் நீலம்”
இருவரின் பம்பரமும் பளபளவென வந்தன. “ஆணி?”என்றான் ராஜாமணி.
“எதுத்த கடையில கோவாலு சித்தப்பாகிட்ட ஆணி வச்சித்தரச்சொல்லு”
கோபால் சித்தப்பா அன்று இல்லாத்தால், அடுத்தநாள் கொண்டுவருவதாக ராஜாமணி சொல்லியிருந்தான். ஏக்கத்துடன் அன்று பிரிந்து நடந்தேன்.
இன்னும் ராஜாமணி வரவில்லை.. இருட்டிக்கொண்டு வந்துவிட்டது. நண்பர்கள் ஒவ்வொருவராக்க் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
ரோட்டிலிருந்து யாரோ என்னை அழைப்பதாகச் சன்னமாய் குரல் கேட்டது. ஜெகன்நாதனா அது?
”மக்கா, ராஜாமணி ஒன்கிளாஸ்தானே? அவங்கப்பா இன்னிக்கு செத்துட்டாரு. விசம் குடிச்சிட்டாராம்.”
கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. ராஜாமணி? அவன் தங்கை?
“கடம் ரொம்ப இருந்திச்சாம். வீட்டுல சொல்லாமலே சமாளிச்சிருக்காரு. பாவம். முடியல. தம்பிகிட்ட ‘பையனையும் பொண்ணையும், பாத்துக்கடே’ன்னு காலேல சொன்னாராம். பதினோரு மணிக்கு…” ஜகன்னாதனுடன் வந்த யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்.
”கடைசி குத்து” மணிகண்டன் அறிவிக்க, சங்கரன் ஒரு நிம்மதியுடனும், ஒரு திகிலுடனும் தன் பம்பரத்தைப் பார்த்திருந்தான். நங் என கணேசனின் சிறிய பம்பரம் , அதன்மீது இறங்க, இரு பல்லிகள் சண்டையிடுகையில் , வெள்ளையாக வயிறு தெரிய, மல்லாந்து துடித்து மீள்வது போல் இரண்டு பம்பரங்களும் துள்ளிச் சிதறின.
சங்கரன் அழத்தொடங்கினான்