Wednesday, November 12, 2014

உறவுகள்

                              
காருக்குள் ’தொம்’ என்றமர்ந்த ரமேஷ் மிஷ்ராவின் முகம் இறுகியிருந்தது. ஓட்டுநர் ஒன்றுமே பேசாமல் வண்டியைக் கிளப்பினார். இந்தூர்- பீதம்ப்பூர் சாலையில் ஐ.ஐ.எம் வளாகம் மலைமேல் தெரியும் இடத்தைத் தாண்டியபோது, ரமேஷின் போன் கிணுகிணுக்க, வண்டியை ஓரம் கட்டச் சொன்னான். இறங்கி சாலையோரம் முன்னும் பின்னும் நடந்தவாறே, கைககளை ஆட்டி நாடகபாணியில் பேசத் தொடங்கினான்.
“என்ன ஆச்சு?” என்றேன் ஓட்டுநரிடம். ரமேஷிடம் ஐந்து வருடங்களாக வேலை பார்ப்பவர். கண்ணாடியில் என்னைப் பார்த்தவாறே “ தங்கச்சி சமாச்சாரமா இருக்கும். ரெண்டாவது தடவையா கோர்ட்டுல இழுத்திருக்காங்க, சார் பாவம்” என்றார். “என்ன?” என்று நானும் கேட்கவில்லை. ரமேஷின் சொந்த விசயம்

மீண்டும் ‘தொம்’. பீதம்ப்பூரில் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும்வரும்போது ரமேஷ்  செருமித் தொடங்கினான். ‘சாரி.இன்னிக்கு கொஞ்சம் அப்ஸெட்டா இருக்கேன்.  ஒழுங்கா உங்களோட டிஸ்கஷன்ல கலந்துக்க முடியலை”

“பரவாயில்லை” என்றேன். ‘ எனக்கு இது பழகிப்போன ஒன்று. வழக்கமா , பத்துபேர் கேள்வியில உரிப்பாங்க. இன்னிக்கு அஞ்சு பேர்தானே?”

அவன் சிரிக்கவில்லை. “ என் தங்கச்சி...கட்னியில இருக்கா. வீட்டுல பங்கு வேணும்னு கேட்டா.அவ கல்யாணத்துக்கே நாந்தான் நிறைய செலவழிச்சேன். ரெண்டு வருஷம் கழிச்சு வரதட்சிணை பத்தாதுன்னு... அதுவும் கொடுத்தேன். உஜ்ஜையின்ல அப்பா, பரம்பரைச் சொத்தா இருக்கிற வீடு.. அதை எம்பேருக்குக் கொடுத்தாரு. இவ அத வித்து ஒரு பாதி கொடு-ங்கறா. ரெண்டு வருஷம் முன்னாடி வக்கீல் நோட்டீஸ்..” ரமேஷின் வார்த்தைகளில் வலி தெரிந்தது. கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“ மாப்பிள்ளை வீட்டுல தூண்டறாங்கன்னா, அவரு கிட்ட தனியாப் பேசிப் பாக்கலாமே?” என்றேன் பொதுப்படையாக.

“ அவரு தங்கமான மனுசன். அவங்க வீட்டுல இதெல்லாம் கேக்கலை. கேட்டதெல்லம் இவதான்”

அதிர்ச்சியாக இருந்தது. “ நிசமாவா?”

“அவளுக்கு ஒரு காம்ப்ளெக்ஸ். அழகா இருப்பா. மாப்பிள்ளை கொஞ்சம் சுமார்தான். ஆனா மனசு தங்கம். ஒரு குறையில்ல. இவளுக்கு, நாங்க அவளை குறைவா கட்டிக் கொடுத்துட்டேன்னு ஒரு கோவம். பழி வாங்கறாளாம்.. இடியட்.”

”அடுத்த வாரம் கட்னி போறேன். வக்கீலையும் கூட்டிட்டுப் போணும். மும்பை மீட் வேற இருக்கு. லீவு...” அவர் வார்த்தைகள் யதார்த்த நிலைக்குத் திரும்பியிருந்தன. சொத்து என்று வந்துவிட்டால் அண்ணன், தங்கை உறவும் இப்படி ஆகிவிடுகிறது போலும்.
” நாளைக்கு ப்ரோக்ராம் கேன்ஸல் சார். இப்பத்தான் கஸ்டமர் போன் பண்ணினாரு” இரவு எட்டு மணிக்கு அவனது அழைப்பு வந்தது.

“ஓ.. சரி. வேற கஸ்டமர் யாராவது..”

“எல்லாம் கேட்டுப் பாத்துட்டேன். ஒருத்தரும் கிடைக்கலை. காலேலேயே நீங்க கிளம்பிறலாம்”

ஒரு விமான சேவையும் சரியான விலையில் கிடைக்கவில்லை. 12000, 14000 ரூபாய்.. கம்பெனியில் கொன்னே போடுவார்கள்.

அடுத்த நாள் இரவுதான் எனது விமானம். அதுவரை இந்தூரில் என்ன செய்ய? ரமேஷ் மீண்டும் அழைத்தான் “ ஒண்ணு பண்ணுங்க. காலேல மகாகாளேஷ்வர் பாத்துட்டு வந்துடுங்க. உஜ்ஜயின் போக ஒன்றரை மணிநேரம், வர ஒன்றரை.. அங்க கோயில் ரெண்டு மணி நேரம் வைங்க. சாயங்காலத்துக்குள்ள வந்துடலாம்.”

விக்ரமாதித்யனும் வேதாளமும் -கதைகளில் அவனது தலைநகராக வருவது உஜ்ஜயின். மிகப் புராதனமான நகரம். அதில் இருக்கும் மஹாகாளேஷ்வரர் ஜோதிர்லிங்கம் மிகவும் ப்ரசித்தி பெற்றது. இத்தனை தூரம் வந்தாகிவிட்டது. வேற வேலை ஒன்றுமில்லை. போய்த்தான் பார்ப்பமே என்று காலையில் கிளம்பினேன்.

உஜ்ஜயின் போகும் பேருந்துகள் வெளியே இருபதாம் நூற்றாண்டிலும் உள்ளே விக்ரம மன்னன் காலத்திலுமாக  உறைந்திருந்தன. அழுக்கான இருக்கைகள். குழந்தைகள் வாந்திஎடுத்து அரைகுறையாக கழுவியதின் கறைகள், சிவப்பாக வெற்றிலைத் துப்பல்களாகக் கறைகள் என அங்கங்கே இருந்தன. சொளதாகர், மேனே ப்யார் கியா என்று 90களின் பாடல்கள்...

போலீஸ் வளாகமருகே வண்டி நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு பெண்ணை இருவர் தலைமாட்டிலும், கால்மாட்டிலுமாகத் தூக்கி வர, பஸ்ஸில் தடுமாறி அவளை ஏற்றினர். அனைவரும் கிராமத்தினர். குப் என ஒரு அழுக்கு வாடை. முனகிக் கொண்டே இருந்த அவளை ஒரு நீண்ட இருக்கையில் கிடத்த முயன்றனர்.

நெடுநெடுவென ஒல்லியாக இருந்த ஒருவன், மற்றவனை “ ஸீட்டை தூசி தட்டு.” என்றான். மற்றவன் அவள் காலை பிடித்தவாறே தூசி தட்ட முயன்று தடுமாறினான். “ருக்கோ” என்றான் நெடியவன் உயர்ந்த குரலில். அவளைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு “ இப்ப தட்டு” என்றான்.

கீழே நின்றிருந்தவர்களில் சிலர் பரபரப்பானார்கள். “அவளை நீ தூக்காதே, பையா” என்றான் ஒருவன். உள்ளே ஏறி விரைந்து வந்தவாறே. நெடியவன் , நில் என்பது போல் அவனை கை காட்டித் தடுத்தான். சீட்டில் அந்தப் பெண்ணை படுக்க வைத்துவிட்டு எனது அருகில் , போய்வரும் பாதையின் மறுபுறம் இருந்த சீட்டில் அமர்ந்தான்.

விரைந்து உள்ளே வந்தவன், என் பக்கத்தில் உள்ளே சன்னலோரம் அமர்ந்துகொண்டான். சிறிது நேரம் கழித்து ”எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை?” என்று கேட்டான். சொன்னேன். இன்னும் சில நிமிடங்கள் கழித்து   “ பாவம் பையா. அவருக்கு ஏற்கெனவே முதுகுத் தண்டில் அடிபட்டிருக்கிறது. அதில் இவளை வேறு தூக்கினால்.” என்று புலம்பிவிட்டு சற்றே எட்டி, என்னைத் தாண்டி “ பையா, முதுகு வலிக்கிறதா?” என்றான்.
“இல்ல. வலி இல்லை” என்றான் நெடியவன். சமாளிக்கிறான் என்று முகத்திலேயே தெரிந்தது. வயல்களில் வெயிலில் காய்ந்து, கீறல்கள் பல விழுந்த முகம். காய்த்துப் போன கைகள், கால்கள். அவனது சட்டை மட்டும் அதீத வெள்ளையாக இருந்தது.
அருகில் இருந்தவன் என் தோளைத் தொட்டான். “மும்பைல டாட்டா ஹாஸ்பிட்டலாமே? அங்க போனா கான்ஸர் குணமாகுமா?”

“யாருக்கு கான்ஸர்?” என்றேன் திகைத்து.

“அவளுக்குத்தான். வயித்துல கான்ஸராம். ரத்தமா கக்கறா. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க அரசு மருத்துவமனையில. ரொம்பவே அவ நிலமை மோசமாயிருச்சு. அவரு புலம்பிகிட்டே இருக்காரு. அதான் கேக்கறேன். மும்பை,தில்லின்னு போனா...”

அருகில் மறுபுறம் நெடியவனைப் பார்த்தேன்.  முன் இருக்கையின் மேற்கம்பியை இறுகப் பிடித்து கைகளில் முன்புறம் சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருக்க வாய் அகலமாகத் திறந்து, எச்சில் சொட்டியது. அதுகூட உணராமல் அவன் முதுகு குலுங்கியது.மவுனமாக அழுகிறான் போலும்.

இரு நிமிடங்களில் நிமிர்ந்தான். ஜன்னலோரம் இருந்தவனை அழைத்தான். “டாக்ஸி சொல்லியிருக்கியா? இறங்கிட்டு, நேரா என் வீட்டுக்கு..”
“பையா, டாக்ஸி  நாளைக்குத்தான் வரும்னான். ஆட்டோ ? இல்ல சுக்லாஜி-யின் ட்ராக்ட்டர்..”

“வேணாம்” என்றான் நெடியவன். “ தூக்கிட்டு, வயல் வழியாப் போயிருவோம். சீக்கிரம் போயிறலாம்”

அவன் தயங்கினான் “ பையா. உங்களால தூக்கமுடியுமா. இங்க சரி.. ரெண்டு கிலோமீட்டர் போணும். நானும் , அவனுமாத் தூக்கறோம்” பேசிக்கொண்டே வந்தவன் சட்டெனப் பதறினான்.”பையா, உங்க சட்டைல ரத்தம்..முதுகுப் பக்கம்”

நெடியவன் ,சலனமின்றி சட்டையை பஸ்ஸினுள்ளேயே கழற்றினான். “ தீபாவளிக்கு அவ எடுத்துத் தந்தது. அவ ரத்தம்தான். பரவாயில்ல.”


ஜன்னலோரம் இருந்தவனைப் பார்த்து ஆறுதலாகச் சொன்னான் “கவலைப் படாதே. தூக்கிறுவேன். பாரமாகவே இருக்காது. அவ என் தங்கச்சி”

Thursday, September 11, 2014

எதிர்பார்ப்புகள்

”அதான் சொன்னேன், இதுக்கெல்லாம் முக்கியத்துவமே கொடுக்கக் கூடாது” ப்ரேம் சொல்லிக்கொண்டே வண்டியை ஓரம் கட்டினார். வெளியே மழை தொடங்கியிருந்தது. வைப்பர்கள் மெல்ல அசையத் தொடங்கியதில்,கண்ணாடியின் ஓரத்தில் ஒரு கோடாக அழுக்குப் படலம் சேர்ந்தது.
என்னை , எனது அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டு, அவர் மேற்கொண்டு செல்லவிருந்தார். வண்டியை பராமரிப்பிற்குக் கொடுத்திருந்ததால், பேருந்திற்குக் காத்திருந்த என்னை, நிறுத்தத்தில் அடையாளம் கண்டுகொண்டு, ஏற்றிக் கொண்டு வந்திருந்தார் அவர். பேச்சு , சமீபத்தில் எனக்கு ஒரு நண்பர் அவமரியாதையாகப் பேசியதில் தொடங்கி சுனில் என்ற பழைய நண்பனைப் பற்றி விரிந்தது. அந்த உரையாடலின் முடிவுதான் மேலே அவர் சொன்ன வரிகள்..
சுனிலைப் பற்றி பேசியபோது எனக்கு நினவு வந்து “ப்ரேம், உங்க கம்பெனியிலயா அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கீங்க?” என்றேன்.
சுனில் நல்ல வேலையில் இருந்தான். நல்ல சம்பளம். ஹோண்டா சிடி, பன்வேல் அருகே ரெண்டாவது வீடு என்று வளர்ந்து வரும் மும்பைக்கரின் செல்வாக்கு வெளியே தெரியுமளவுக்கு வளர்ச்சி. நல்ல உழைப்பாளி. திடீரென்று அவனது அமெரிக்கக் கம்பெனி இந்தியாவின் தனது இயக்கத்தைக் குறைத்துக் கொண்டது. அதில் வேலையிழந்தவர்களில் சுனிலும் ஒருவன்.
“ஆமா.. பத்து வருஷத்துக்கு அப்புறம் திடீர்னு ஒரு போன். ’ப்ரேம், ஒரு ஹெல்ப்’ -ன்னான். ரெண்டு குழந்தைகளும் பெரிய ஸ்கூல்ல சேத்திருக்கான். மனைவி வேலைக்குப் போகலை. இவனுக்கு அளவுக்கு மீறிய லோன் . இ.எம்.ஐ மட்டுமே மாசத்துக்கு ஒரு லட்சம் வருதாம்.. ”
”அடேயப்பா” என்றேன். இதெல்லாம் தேவையா? என்று ஒரு கேள்வி வந்தாலும் அடக்கிக் கொண்டேன். அவனனவன் விருப்பம். ஹோண்டா சிட்டி தேவையா, அல்ட்டோ போதுமே? என்பது ஒரு சிந்தனை. அல்ட்டோவே தேவையா? என்பது மற்றொரு சிந்த்னை. இருக்கும் நிலைக்கு ஏற்றாற்போல் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கலாம்.
“அவனோட தகுதிக்கு என் கம்பெனியில வேலை இல்லை. என் காம்பெடிட்டர் கம்பெனியில ஷம்பு ஜா இருக்கான். ஞாபகமிருக்கா. உசரமா இருப்பானே.. கன்னத்துல பெருசா ஒரு மச்சம்.."
“ஷம்பு நினைவிருக்கு. “ என்றேன்.
“ ஆங். அவன் கம்பெனியில ஆள் சேர்ப்புக்கு அனுமதி கிடைக்கலை. ஹெட் கவுண்ட் இல்லேன்னான். நம்ம ஃப்ரெண்டு சுனில்.. ரைட்டுன்னு ஷம்பு கூட அவன் எம்.டியைப் பாத்து பேசிட்டு, ஸ்பெஷலா இவனுக்குன்னு ஒரு ப்ரொபைல் உண்டாக்கி, சேத்து விட்டேன். “
எனக்கு உள்ளூற ஒரு குறுகுறுப்பு. சுனில் அப்படியொன்றும் நல்ல நண்பனில்லை-, எனக்கும், ப்ரேமுக்கும்..ஏன் எவருக்குமே. சுயநலக் காரன் என்று ஏசப்பட்டவன். தனக்கு காரியம் ஆகும் வரை குழையப் பேசிவிட்டு, அதன்பின் அம்போவென விட்டுப் போகிற ரகம். ஏற்கெனவே ப்ரேம் ஒரு முறை அனுப்வப்பட்டிருக்கிறார். நானும் ஒரு முறை கையைச் சுட்டுக்கொண்டிருக்கிறேன்.
அவரிடம் கேட்க எத்தனித்தபோது அவரது செல் போன் அதிர்ந்தது “ அலோ” என்றவரின் முகம் சற்றே இறுகியது. “ம்..ம்.. ஓகே. ஆல் தி பெஸ்ட்” என்று இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு போனை வைத்தார்.
“ஷம்பு ஜா” என்றார் எங்கோ பார்த்தபடி
“என்னவாம்?”
“சுனில் வேலையை விட்டுட்டானாம். அவங்களோட காம்பெடிட்டர் கம்பெனி சிங்கப்பூர்ல வேலை கொடுத்திருக்காங்களாம். நாளைக்குக் கிளம்பறான். ரெண்டு முக்கியமான ப்ராஜெக்ட். அம்போன்னு விட்டுட்டு இவங்களுக்கே எதிரா அந்த ப்ராஜெக்டுகளை எடுக்கறதுக்கு வேலை பாக்கப்போறான். “
“ஓ” என்றேன் என்ன சொல்வதென்று தெரியாமல்.
“ ஷம்புவோட எம்.டி ரொம்ப அப்செட் ஆயிட்டாராம். இவ்வளவு பெரிய பதவியில இருக்கறவன் திடீர்னு முதுகுல குத்தறது நியாயமில்லன்னு சொல்றார். அது கரெக்டுதான். நம்பிக்கை துரோகம் இது. சின்ன பொசிஷன்ல இருக்கறவன் விட்டுப் போறான்னா புரிஞ்சுக்கலாம். “
“நோட்டீஸ் பீரியட் இருக்குமே?”
“அவன் அதுக்கெல்லாம் நிக்க மாட்டேங்கறான். மூணுமாசம் சம்பளத்தை அவன் போற கம்பெனி கட்டிடறேன்னு சொல்லுது. இவன் இங்க இருந்துகிட்டே அதுக்கு வேலை பாத்தானான்னும் தெரியலை.” ஒரு நிமிடம் மவுனமாக இருந்தோம்.. காரின் கூரையில் மழை தம் தம் என விழும் சப்தம் உரக்கக் கேட்டது.
“ நான் தான் அவனை சிபாரிசு பண்ணினேன்னு ஷம்புவும் மறைமுகமா குற்றம் சாட்டறான். இதெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல.. ஆனா வருத்த்மா இருந்தது. இப்படி நம்பிக்கை துரோகம் செஞ்சிருக்கானே?ன்னு கோபமாக்வும் வந்தது. “ சிறு நிறுத்தத்தின் பின் மீண்டும் தொடர்ந்தார்.
“ ஏங்கிட்ட கூட சொல்லல. இப்பத்தான் ஷம்பு சொல்லி தெரியுது. சேத்துவிட்டவன் என்கிற அளவுக்கு ஒரு மரியாதைக்காவது சுனில் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்”
எனக்கு நன்றாகவே புரிந்தது. இது ஏமாற்றம் மட்டுமல்ல, பயன்படுத்திக்கொண்டு விட்டு, பின் உதாசீனமாக எறிகிற உத்தி.
“சுனிலுக்கு போன் போட்டு பேசலாமா?”என்றேன்.
“விடுங்க. இது எனக்கு ஒரு பாடம். இனிமே எச்சரிக்கையா இருக்கணும். பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு சொல்லுவாங்களே , அதுமாதிரி”
“இருந்தாலும் இது நம்பிக்கை துரோகம் இல்லையா? ரெண்டு வார்த்தை நாக்கைப் புடுங்கற மாதிரி கேட்டுடுங்க. இல்லேன்னா வருத்தம் போகாது. நினைக்க நினைக்க கோபமா வரும். பட்டதுனால சொல்றேன்”
ப்ரேம் என்னை ஊடுருவுவது போலப் பார்த்தார்.
”அவனை நான் நண்பனா மதிக்கமாட்டேன். சரி, அவனை வெறுப்பேன். கரெக்ட். ஆனா அவனப் பத்தி நினைச்சு மருகுவேன்னு யார் சொன்னது?”
“இல்லையா பின்னே? திடீர்னு ராத்திரி முழிப்பு வர்றப்போ இந்த நினைவு வந்தா அப்புறம் தூங்கின மாதிரிதான். நாலு வார்த்தை கேட்டுட்டு போடா-ன்னு விட்டுருங்க”
“அது ரொம்ப கஷ்டம் சுதாகர். நாலு வார்த்தை கேக்கறதுக்கு நீங்க தயார் பண்ணறப்போ கோபம் கொப்புளிக்கும். அது இன்னும் மோசம். விடுங்க. அவன் என் நண்பனில்ல. ஒரு அறிமுகப்பட்டவன் என்கிற அளவுல இனிமே அவங்கிட்ட் நடந்துக்குவேன்”
“ இது சாத்தியமா?”
“ சாத்தியப் படுத்திக்கணும். வேற வழியில்ல. எவனோ செஞ்ச தீமையினால, நினைச்சு நினைச்சு உங்க ரத்த அழுத்தத்தை ஏத்திக்கறதுல என்ன லாபம்?”
“மன்னிக்க முடியாது ப்ரேம். சொல்லறதுக்கு ஈஸி. நடைமுறைக்கு சாத்தியமில்ல. இவங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சுக்கணும்னு ஒரு ப்ரொஃபைலிங்க் பண்ணி வச்சு நடந்துக்க முடியாது. யதார்த்தத்துக்கு வாங்க”
“இப்ப நீங்க என்னையும் ஒரு ப்ரொஃபைலிங்தானே பண்ணி வச்சுருக்கீங்க? மன்னிச்சு விட்டுடற கடவுளர் டைப்-ன்னு” என்றார் சூடாக.
சற்றே ஆடிப்போனேன். இவர் சொல்வது சரிதான். வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைன்னு , ஒன்று குரோதம் கொண்டவரகளாக , இல்லை கடவுளாக மட்டுமே ஏன் மக்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறோம்.? இன்னா செய்தாரை ஒறுத்தல் என்பது போன்ற நல்வரிகள் நம்மை இரண்டு எல்லைகளில் மட்டுமே சிந்திக்கச் செய்துவிட்டதோ? தவறு செய்தவன் வில்லன், அவர் செய்த தவறுகளால் வருத்தப்படுபவர்கள், குரோதம் கொள்ளாமல், தீயவர்களை மன்னித்துவிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கடவுளர் நிலை மட்டுமே சாத்தியமாகக் காட்டப்படுகிறது. கோபம் கொள்ள அவர்களுக்கு அனுமதியில்லை.
“ஹலோ, அவனை மன்னிக்கவே வேணாம். வெறுப்பே வைச்சுக்குங்க. கடவுள் மாதிரி உங்கள ஆகச் சொல்லலை. அவனை தரத்துல கீழிறக்குங்க. அப்புறம், இதோ, ரோட்டோரம் ஒருத்தன் கிடக்கிறானே, அவனப்பத்தி என்ன நினைப்பீங்களோ, அவ்வளவுதான் இவன்களையும் நாம நினைப்போம்.”
சற்றே உள்வாங்கினேன். இது ஒரு சாத்தியமான வழியோ? மனிதர்கள் தங்கள் இயல்பான உணர்ச்சிகளை அடக்காமல், அதே நேரம் பழியுணர்வில் வெறிகொள்ளாமல், மனிதன் மனிதனாக வாழும் ஒரு நிலை.
“I don't forgive who hurt me. Neither I forget; but, I don't lose my sleep over them." எங்கோ படித்த வரிகள்...யார் சொன்னது?
மழை மேலும் வலுவாகப் பெய்தது. குடையை விரித்து சென்றவர்களும் சற்றே நனைந்திருந்தனர். குடை ,ஓரளவுக்குத்தான் நனைவதைத் தடுக்கும். சாரல்துளிகளால் நனைவதை பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அதுதான் நடை.

Sunday, August 03, 2014

நிறக்குருடுகள்.

வினய் குப்தாவின் கார் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு நிழற்குடையை விடுத்து மழையில் முன்சென்றேன். பின்னால் அலறும் வண்டிகளின் ஹார்ன் ஒலியில் எரிச்சலடைந்தோம். எரிச்சலை மாற்றப் பேச்சை மாற்றினேன்      
               
அந்த ராபர்ட்...அவனுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க ஹவுசிங் சொசய்ட்டி கடைசில அனுமதிச்சதா  இல்லையா?”

வினய்  சற்று மவுனத்தின் பின் “எங்க?”என்றார்.

இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும். வினய் குப்தாவின்  வீட்டிலிருந்து  ஒரு ஆபீஸ் பொருளை எடுத்து வர வேண்டியிருந்தது. அதற்காக அங்கு போயிருந்தபோது, சொசயிட்டி காரியதரிசி  ரங்கனேக்கர் லிஃப்ட்டிற்கு நின்றிருந்தார். குப்தாவிற்கு இரு வீடுகள் அங்கிருந்தன. ஒன்றை வாடகைக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.

யாருக்கு கொடுக்கறீங்க குப்தாஜீ? பாச்சலர் இல்லையே?”ரங்கனேக்கர் தொடங்கினார். 

 “அவர் பேரு ராபர்ட். ஒரு ஆப்பிரிக்கர். அவரும் அவர் மனைவியும் இருக்காங்க.. டாக்குமெண்ட்ஸ்  எல்லாம் கரெக்ட்டு...அதான் சரின்னு...”
ரங்கனேக்கர் இடைமறித்தார் “ சொல்றேனேன்னு நினைக்காதீங்க. நம்ம சொசயிட்டில இருக்கறதுக்கு அவங்கெல்லாம் சரி கிடையாது. “

கோபமாக இடைமறிக்கப் போன குப்தாவை அலட்சியப்படுத்தினார் ரங்கனேக்கர் “ சமத்துவம், நிறவெறின்னு ஆரம்பிக்காதீங்க. எனக்கும் தெரியும். நான் ப்ராக்டீஸிங் லாயர். பின்னால வரப்போற ப்ரச்சனைகளை நினைச்சுப் பாத்தீங்கன்னா, நீங்க வாக்குக் கொடுத்திருக்க மாட்டீங்க”

“அப்படி அந்தாளு என்ன செஞ்சுடுவாருன்னு நீங்க மறுக்கறீங்க?” என்றார் குப்தா. அவர் தர்மசங்கடத்தில் இருந்தார். அட்வான்ஸ் வேறு வாங்கிவிட்டார். இப்போ புதுத் தலைவலி, ரங்கனேக்கர் உருவில்.

“மும்பையில இருக்கற ஆப்பிரிக்கர்கள்ல தொண்ணூறு சதவீதம் போதைப்பொருள் கடத்தல், ஆன்லைன் பைனான்ஸ் ஏமாற்று வேலை, ஏ.டி.எம் ஃப்ராடுன்னுதான் இருக்காங்க. இவங்களைத் தட்டிக்கேட்க போலீஸ் போனா, எம்பஸி வந்துடும். இங்க வந்து ட்ரக்ஸ் வித்தான்னு போலீஸ் உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு வைங்க...என்ன சொல்வீங்க?”

வினய் சற்றே சிந்தித்தார் “ அவர் ஒரு ஆப்பிரிக்க ஷிப்பிங் கம்பெனியில வேலை பாக்கறார்., நாம கேக்கிற ஆவணங்கள் எல்லாத்தையும் தந்திருக்கார். போலீஸ்ல போட்டோ கொடுத்து என்.ஓ.ஸி வாங்கிட்டேன். இனிமே மாட்டேன்னா நல்லாயிருக்கமா ரங்க்னேக்கர் சார்?”

ரங்கனேக்கர் சிரித்தார். “உங்களுக்கு மன அமைதி வேணுமா, இன்னிக்கு கொடுத்த வாக்கு , புல்ஷிட் முக்கியமா? வீட்டுக்கு அவன் குடி வந்தப்புறம் சுலபமாக் காலி பண்ண வைக்க முடியாது. அவங்க திருமணம்..அதுவேற தலைவலி.. நீங்களும் அடுத்த டவர்லதான் இருக்கீங்க. சொசய்ட்டி மக்கள் உங்களை ஒதுக்கிருவாங்க. பாத்துக்குங்க” நாலாம் மாடியில் ரங்கனேக்கர் சென்றுவிட, நாங்கள் அமைதியாக ஆறாம் மாடி வரை சென்றோம்.

குப்தாவின் மனைவி சாக்‌ஷி “ அவங்க ரெண்டுபேரும் மீரா-ரோடு ஸ்டேஷன்ல ராத்திரி 11.05 வண்டில வருவாங்க. ட்ரெயின்லயே ஆட்கள் அவங்களை ஒரு மாதிரித்தான் பாப்பாங்க.”

”ஏன் ?”என்றேன் டீயை உறிஞ்சியவாறே.

“அந்தப் பெண் இந்தியர். அந்தாளு ஆப்பிரிக்கர். ”

வியந்துபோனேன். இதுவரை மும்பையில் அப்படி ஒரு ஜோடியை நான் கண்டதில்லை.

குப்தா. மனைவியைப் பார்த்து “ இப்ப எப்படி அந்த ராபர்ட் கிட்ட சொல்றது?” என்று  சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் அழைப்புமணி ஒலி கேட்டது. காவலாளி  “ சார் , இவர் உங்களைப் பாக்கணும்னு சொன்னார். சந்தேகமாயிருந்தது. அதான் நானே கூட வந்தேன்:” என்றபடி சற்றே விலகினான். பின்னால் ஒரு ஆப்பிரிக்கர் வெள்ளைப் பற்களைக் காட்டி சிரித்தபடி நின்றிருந்தார்.

“ஹலோ, நான் ராபர்ட்” என்றார் கனமான ஆங்கிலத்தில்.

“உள்ளே வாங்க” என்றார் குப்தா. மீண்டும் டீ ஒரு ரவுண்டு வர, தயங்கித் தயங்கி குப்தா மெல்லத் தொடங்கினார் “ ராபர்ட் , தப்பா எடுத்துக்க்க் கூடாது.”

ராபர்ட்டின் புருவங்கள் உயர்ந்தன “ ஓ, வீடு கொடுக்க சொசயிட்டி மறுத்துவிட்டதா?”

குப்தாவின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது “ஆ...ஆம்மா..அதுவும் உங்க திருமணம் பற்றித் தெரியாம, குடும்பம் என்று சொல்லிவிட முடியாதுன்னு ஒரு எதிர் வாதம். இதற்கு நான் உங்ககிட்ட ஆவணம் கேட்க முடியாது.. இல்லாம நிரூபிக்கவும் முடியாது. சட்டப்படி திருமணமானவர்களுக்கு மட்டுமே வீடு கொடுக்கலாம். சொசய்ட்டி ரூல்ஸ்”

ராபர்ட் தனது தாடியைச் சொறிந்தார் “இதே கேள்வி, நான் வெள்ளையாக இருந்திருந்தால் வந்திருக்காது இல்லையா?”

கனத்த மவுனம் நிலவியது.

ராபர்ட் எழுந்தார் “ தாங்க்ஸ். பரவாயில்லை. பலதடவை இதக் கேட்டிருக்கேன். பழகிப்போயிருச்சு.. கொஞ்சம் டீஸண்ட்டா இடம் வேணும். என் மனைவிக்கு இப்ப இருக்கிற இட்த்துல ப்ரச்சனை. எல்லாம் எங்க நிறம் படுத்தற பாடு.”

அவர் சென்றபின்னும் பல நிமிடங்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். இனம்புரியாத உணர்ச்சிகள். அவமானமாக இருந்தது.

”நம்ம பெண்கள் ஒரு வெள்ளைக்காரனைப் பிடிச்சிருந்தா,  மக்கள் அதனை ஒன்றும் சொல்லமாட்டாங்க.. இந்தாளு கறுப்பர். அதான் ப்ரச்சனை. நமக்கும் நிறவெறி இருக்கு சுதாகர். மத்த நாட்டுக்காரங்களைக் குறை சொல்றதுல அர்த்தமே இல்லை”

“ஆமா” என்றேன் எழுந்தவாறே.. அந்த ஆப்பிரிக்கர் என்ன பதவியில் இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார் என்பதெல்லாம் தெரியாமல், அவரையும், அவருடன் வாழ்வதால் அப்பெண்ணையும் குறைகூற நமக்கென்ன உரிமை? என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும், ரங்கனேக்கர் சொன்னதில் நியாயமான பயம் இருக்கத்தான் செய்த்து. நாளை ஒரு ப்ரச்சனை என்று வந்தால் யார் நிற்பது? யாருக்காக நிற்பது?

வினய் குப்தாவை அதன்பின் இன்றுதான் சந்திக்கிறேன். லேசாகச் சாரல்...

“ராபர்ட்டின் மனைவி , சாக்‌ஷி வேலைபார்க்கும் வளாகத்தில் ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.. “

”அவங்களுக்கு வீடு கிடைச்சிருச்சா?” என்றேன் ஒரு குற்ற உணர்வு மேலோங்க.

“ கிடைச்சுருச்சு, விரார் மேற்குல. திடீர்னு ஒரு நாள் ராபர்ட் காணாமப் போயிட்டான். ஆபீஸ்லேர்ந்து மத்தியானம் வெளிய போனவன் திரும்பி வரலை. மாலையில இந்தப் பொண்ணு அவன் ஆபீஸ்ல தேடி, ரயில்வே ஸ்டேஷன்ல தேடி...ஒரு வாரமாவுது. இன்னும் அவன் வரலை. சொசயிட்டில அவளை வீட்டைக் காலி பண்ணச் சொல்றாங்க.”

“அடப்பாவமே” என்றேன் அதிர்ந்து.

“ அவளோட குடும்பம் மாலேகான்வ் பக்கத்துல இருக்கு. அவங்க மத உணர்வுல ரொம்ப ஊறினவங்க. இப்பத்தான் அவங்களுக்கு பொண்ணு இப்படி ஒரு கறுப்பரோடு வாழ்ந்திருக்கா-ன்னு தெரிய வந்திருக்கு. அவளைத் தலை முழுகிட்டாங்க. இவளுக்கு இப்போ போக்கிடம் இல்லை. நேத்திக்கு சாக்‌ஷி அவள ஆபீஸ் வளாகத்துல பாத்துப் பேசியிருக்கா. பாவம் கதறி அழுதுட்டாளாம்”

“இருக்காதா பின்னே?” என்றேன்.

“ ஏன் இப்படி உன் வாழ்வைச் சீரழிச்சுக்கிட்டே? -ன்னாளாம் சாக்‌ஷி. அதுக்கு அவ சொன்ன பதில்தான்..”

நான் மவுனமாக்க் கேட்டிருந்தேன். மழைச்சாரலுக்கு, கார் கண்ணாடியின் வைப்பர்கள் உயிர்த்திருந்தன.

“ ராபர்ட் என்னை விட்டுட்டுப் போகலை மேடம். அவனை நார்க்கோடிக்ஸ் , ட்ரக்ஸ் கேஸ்ல வேணும்னே பிடிச்சுப் போட்டிருப்பாங்க. அதுக்கு எம்பஸிலேர்ந்து ஆளுங்க வர்றதுக்குள்ள மிரட்டி ஒப்புக்க வைச்சு, ஊருக்குத் திரும்பி அனுப்பிருவாங்க. இல்ல...அடிச்சு ரயில் ட்ராக்ஸ்ல போட்டுருவாங்க”ன்னாளாம். அவ உடம்பு நடுங்கிச்சு-ன்னா சாக்‌ஷி.”

நான் முன்னே வெறித்திருந்தேன். மழை மெல்ல வலுத்திருக்க, வைப்பர்கள் மேலும் வேகமாக பக்கவாட்டில் அலைந்தன.

“ ஒருவருஷம் முந்தி வரை அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. என்னை யாருன்னு அவனுக்குத் தெரியாது. அவன் குடும்பம் என் குடும்பம்..சந்திச்சது கூடக் கிடையாது. ஆனா மனசு இணைஞ்சு போச்சு. எங்க கண்ணுக்குத் தெரியாத தோல் நிறம்  ரெண்டுபேருக்கும் நடுவுல பெருசா வந்துபோச்சு. எங்களுக்கு நிறக் குருடா, இல்ல இந்த சமூகத்துக்குத்தான்  நிறக் குருடா...தெரியலை. எனக்குக் கவலையுமில்லை. அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணறேன். ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு டெல்லி போறேன். அங்கேர்ந்து ராபர்ட்டைத் தேடப்போறேன். நிச்சயம் கிடைப்பான் மேடம், நீங்களே பாருங்க”

மழை ஒரு தகடு போலக் கொட்டிக்கொண்டிருக்க, வைப்பர்கள் வெறிபிடித்த மாதிரி வீசி ஆடின. க்றீச் க்றீச் என்ற் ஒலியுடன் அவை மழைப் படுகையைத் தள்ளத் தள்ள, முன்னே காட்சி , சற்றுதெளிவாகத் தெரிந்து பின் மழைத்திரையில் மங்கியது. மண்ணில் நீர் வீழ்ந்து, கலங்கி கருப்பாக , சில இடங்களில் சிவப்பாக சாலையோரத்தில் ஓடி வழிந்தது.
யார் யாருடன் இணையவேண்டுமென்பதை நிறமோ, மதமோ, மொழியோ தீர்மானம் செய்வதில்லை. எப்படி எந்த மழைத்துளி எந்த நிலத்தில் விழுந்து எந்த நிறச் சகதியை உண்டாக்குமென்பது மண்ணுக்கும் மழைக்கும் தெரியாதோ அதைப்போல...

குறுந்தொகையில், காதலன் , தான் சற்றும் அறியாத பெண் காதலியானதை வியந்து சொல்கிறான்.

”யாயும் ஞாயும்   யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
- செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை.

”எனது தாயும் , உனது தாயும் எவ்வகையில் உறவு ? எனது தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நானும் நீயும் இதன்முன் எவ்வாறு அறிந்தோம்? இவையெல்லாம் ஒன்றுமில்லாதபோது நமது நெஞ்சங்கள். செம்மையான நிற மண்ணில் மழைபெய்து தானும் மண்ணின் நிறம் கொண்டு, இரண்டும் ஒன்றையொன்று பிரித்தறிய முடியாதது போல ஒன்றாய்க் கலந்துவிட்டன. ”



Monday, July 28, 2014

எல்லாம் தெரிந்தவன்

இப்பத்தான் சாட் செய்து முடித்தேன். சற்றே ஆயாசமாக இருக்கிறது. ஒரு இனம்புரியாத கனமும் கூடவே மனதில்...
மாலை பேஸ்புக்கில் ஒரு மெஸேஜ் வந்திருந்தது. ”உங்களுடன் பேசலாமா அண்ணா?” என்று. எனது நண்பர் வட்டத்தில் இருக்கிறார் என்றாலும் அதிகப் பழக்கமில்லை. ஒரு கமெண்ட்டும் அவர் இட்டதாக நினைவில்லை. சாட்டில் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
நண்பர் சற்று அதிகம் படிக்காதவர். வெளியுலக நடவடிக்கைகள் அதிகம் தெரியாதவர்/ தெரிந்துகொள்ள முயன்று கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம்.
இன்று காலை அவரது அலுவலக நண்பர் ஒருவர் “ எபோலா ஆப்பிரிக்காவுல பரவிருச்சாம். கடல் தாண்டிச்சுதுன்னா, நாம செத்தோம்” என்றிருக்கிறார்.
இவர் ‘எபோலா-ன்னா என்ன?” என்று கேட்டிருக்கிறார். நண்பர் எகத்தாளமாகப் பார்த்து சிரித்திருக்கிறார். இவ்வளவுதான் நடந்திருக்கிறது.
மனிதர் ஆக அப்செட்டாகி, பேஸ்புக்கில் நுழைந்தவர் எபோலா குறித்த எனது குறும்பதிவைப் பார்த்திருக்கிறார். அதன் விளைவுதான் இந்த சாட்.
”எனக்கு எபோலான்னு தெரியலண்ணா. இதுக்கு அவங்க சிரிக்கறாங்க. எனக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது. ஒரு முட்டாளா இருக்கேனோ?ன்னு ஒரு உணர்வு.” இப்படித் தொடங்கியது..
”எபோலான்னா என்னன்னு தெரியலைன்னா...தெரியலை. சரி, அதுக்கு நாம முட்டாளாயிருவோமா? ” எவ்வளவோ எழுதிப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அதே கேள்வி. என்ன எதிர்பார்க்கிறார் ? என்பது எனக்குப் புரியவில்லை.
“நீங்க என்னிடம் ‘ ஐயோ பாவம் சார் நீங்க. பரவாயில்ல’ என்று சொல்வேன் என எதிர்பார்க்கிறீர்களா?” நான் யாரு ஆறுதல் சொல்வதற்கு? ” என்றும் எழுதிவிட்டேன். மீண்டும் மீண்டும் அவர் அதே பாட்டு.....
ஒரு நிகழ்வு சாட் முடிந்ததும் நினைவு வந்தது.
1993 என நினைக்கிறேன். மும்பையில் ட்ரெயினி சேல்ஸ் இஞ்சினீயரிலிருந்து நிரந்தர பதவிக்கு வைக்கப் பட்டிருந்தேன். கம்ப்யூட்டர் என்று இரண்டு மாடுகள் எங்கள் ஆபீஸில் இருந்தன. ஒன்று இராமன் நாயரிடம். அவர் அதை விட்டுவிட்டு பாஸிட் டைப்ரைட்டரில்தான் அடிப்பார். “மட மடன்னு வேலை முடிக்கணும்னா இதுதான் சரி” என்பார்.
எங்கள் பிரிவு இரண்டாம் தட்டில் இருந்தது. மூன்றாம் தட்டில் அலுவலக நிர்வாகம், அக்கவுண்ட்ஸ் செக்‌ஷன். வவுச்சர் ஒன்றில் கையெழுத்து இடுவதற்கு அக்கவுண்ட்ஸில் போயிருந்தேன். ”நீலா தேசாய் தெரியுமா? ” என்றார் காவலாளி. இல்லை என்றேன். “மூணாவது கேபின், வவுச்சர் எல்லாம் அவங்கதான் பாப்பாங்க. “
எனது ப்ரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது. அப்போதுதான் வெகு சமீபத்தில் எனக்கு க்ரெடிட் கார்டு கிடைத்திருந்தது. பெரிய recognition அது அப்போதெல்லாம். உற்சாகத்தில் தலைகால் தெரியாமல் , கம்பெனியின் செலவு ஒன்றினை அந்த கார்டில் செய்துவிட்டிருந்தேன். ’எங்கிட்ட க்ரெடிட் கார்டு இருக்குடா’ என்று காட்டும் அல்ப அலட்டல்.
செலவுக்கான ரசீதைத் தொலைத்துவிட்டேன். க்ரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்ட்டை வைத்துக்கொண்டு வவுச்சர் பாஸ் செய்யலாம் என்று யாரோ சொல்ல, இப்போது நீலா தேசாய் இடம் சரணம்.
சும்மா இருந்திருக்கலாம். தெரியாத்தனமாக “ மேடம், இந்த க்ரெடிட் கார்டை ஏன் க்ரெடிட் கார்டுங்கறாங்க?” என்றேன்.
“உனக்கு கடன் கொடுத்திருக்காங்கல்ல. அதான்”
“அப்ப ஏன் ஸ்டேட்மெண்ட்ல ‘உன் கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டிருக்கிறது.”ன்னு போடறாங்க.? க்ரெடிட்னா கணக்குல பைசா கூடறதுதானே? நான் செலவுல்ல பண்ணியிருக்கேன்?”
நீலா தேசாய் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள்.
“உன் க்ரெடிட் கணக்குல ஏறியிருக்கு. “
எனக்குப் புரியவில்லை “ அதெப்படி? கடன்னா செலவுதானே? அவங்க கடன் கொடுத்திருக்காங்க. நான் செலவு பண்ணினதுக்கு அவங்க டெபிட்ன்னுல்ல போடணும்?”
அவள் தலையில் கைவைத்துக் கொண்டாள். “ அர்ரே. உனக்கு க்ரெடிட் டெபிட்ன்னா என்னன்னு தெரியுமா?” சட்டென அவள் கத்தியதில் திடுக்கிட்டுப் போனேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். அதன் பின் அவள் பேசவில்லை. என் வவுச்சரில் கையிஎழுத்துப் போட்டுவிட்டு, ஒரு மூலையில் வைத்துவிட்டு, தன் வேலையில் உம் என்ற முகத்துடன் மும்முரமாக இறங்கினாள்.
எனக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. ஒரு அசட்டுச் சிரிப்புடன் , அவமானத்தில் முகம் சிறுக்க திரும்பினபோது, அருகில் இராமன் நாயர். இவரும் பார்த்துவிட்டாரோ? கீழே டிபார்ட்மெண்ட்டில் இதைச் சொல்லிச் சிரிப்பார்களோ?
நாயர் என்னுடன் படியில் இறங்கினார். “ இந்த கம்ப்யூட்டர் இருக்கே.. அதான் என் டேபிள்ள ..? அதுக்குள்ள என்னவெல்லாமோ சாஃப்ட்வேர் இருக்கு. எனக்கு ஒன்னும் புரியலை. ஆனா, ASDFGF :LKJHJ ன்னு என் டைப்ரட்டர் மாரியே இருக்கு. ஒரு லெட்டர் டைப் பண்ண அது போதும் இல்லையா? ”
நான் ஒன்றும் பேசாமல் இறங்கினேன். நாயர் தொடர்ந்தார்.
“ஒரு பெரிய்ய கம்ப்யூட்டரை வச்சு எப்படி லெட்டர் அடிக்கணும்னு மட்டுந்தான் எனக்குத் தெரியணும். அது போறும். உங்கிட்ட க்ரெடிட் கார்டு இருக்கு. அதுல வாங்கறதுக்கும், அதுக்கு பைசா கட்டறதுக்கும் தெரிஞ்சாப் போறுமே உனக்கு? க்ரெடிட் டெபிட் எல்லாம் அக்கவுண்ட்ஸ் காரங்களுக்கு அரிச்சுவடி. அதுல வீணா கேள்வி கேட்டா கோவம் வரத்தான் செய்யும். உங்கிட்ட அவ mass spectrometer பத்தி கேணத்தனமாக் கேட்டா நீ என்ன செய்வே?”
நான் மவுனமாயிருந்தேன். இன்னும் இரு படிகள் பாக்கியிருக்கின்றன.
நாயர் என் தோளைத் தொட்டார் “ எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு ஒன்ணுமே இல்லை. தெரிஞ்சவன் எல்லாம் உன்ன விட புத்திசாலியும் இல்லை. மேனேஜர் டே இருக்காரே. அவருக்கு டிக்டேஷன் பண்ண மட்டும்தான் தெரியும். ஒரு லெட்டர் அடிக்கச் சொல்லிப் பாரு. தவிடு தாங்கும். அதுக்காக நான் பெரியவன் என்று அர்த்தமில்ல. நீ வேற, நான் வேற நீலா வேறெ... முக்கியமா அக்கவுண்ட்ஸ் ஒரு வேற உலகம். அவங்க வேறு கிரக மக்கள்” சிரித்தார்.
டிப்பார்ட்மெண்ட் கதவு திறந்தது. மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்குகளின் குளிர் ஒளியில் அலுவலகமே எதோ வித்தியாசமாகத் தெரிந்தது.
இன்றும் அக்கவுண்ட்ஸ் தெரியாது. இன்கம்டாக்ஸ் வரிகள் புரிவதில்லை. ஏதோ இன்னும் கட்டவேண்டும் என்பார்கள். நானும் மரியாதையாக கட்டிவிட்டு செல்லான் கொண்டு வந்து சேர்ப்பேன். அதற்கும் என் அறிவியலுக்கும் எட்டாம் பொருத்தம்.
நண்பரே , நீங்கள் படிக்கிறீர்களா என்று தெரியவில்லை. இது புரியவில்லை என்றால்... வருத்தப்படாதீர்கள். நீங்கள் ஒன்றும் இழந்துவிடவில்லை. உயிர்க்கொல்லி எபோலா உங்கள் மனதில்தான் இருக்கிறது.

Wednesday, July 16, 2014

மழையும் மனிதமும்

அடைமழை நேற்று மும்பையில். ஆபீஸை விட்டுக் கிளம்பும்போது லேசாகத் தூறிக்கொண்டிருந்ததால், நிதானமாகக் கிளம்பினேன். ஜோகேஷ்வரி லிங்க் ரோடு தொடக்கத்தில் பிடித்த மழை நிற்கவேயில்லை. மனைவி வேறொரு ஆட்டோவில் அந்த வழியாக வருகிறார் என்று தெரிந்ததும், காத்திருக்கலாம் என்று, வண்டியை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அலுவலகமருகே ஓரம் கட்டினேன். எனக்கு முன்னே ஒரு I 20 மினுக் மினுக்கென விளக்கைப் போட்டபடி நின்றிருக்க, புத்திசாலித்தனமாக அதற்கும் ஓரமாக வண்டியைக் கொண்டு போனேன். அவ்வளவுதான் தெரியும்.
திடீர் என்று முன்னே வண்டி இடப்புறம் சாய, என்ன என்று தெளியுமுன்... ஒரு சாக்கடையில் இறங்கிவிட்டது. பின்புறம் வடிவேலு மாதிரி தூக்கி இருந்தது. இத்தனைக்கும் வங்கியின் வளாக வாசல் கேட் அருகே. ... ஒரு எச்சரிக்கைப் பலகை ஒன்றுமில்லாமல் எப்படித்தான் இதை தினமும் சமாளிக்கிறார்களோ என்று எரிச்சலும் கோபமுமாகத் திட்டிக்கொண்டே மழையில் முழுக்க நனைந்து வெளியே வந்தபோது, ரோட்டில் போய்க்கொண்டிருந்த பஸ், ஆட்டோவில் இருந்த பயணிகள் எட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சிலர் சாய்ந்து நின்றிருந்த வண்டியைப் பார்த்து சிரித்தபடி சென்றனர்.
ஒருவரும் உதவ வரவில்லை.
வளாகத்தினுள் இருந்த காண்ட்ராக்ட் பேருந்துகளின் ஓட்டுநர்கள்,க்ளீனர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவன் பஸ்ஸினுள் பார்த்துக் கூவினான். “ அபே,,, ரெண்டாவது வண்டி.”
அடப் பாவிகளா. என்னடா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே மற்றொரு I20 காரைக் காட்டியபடி சொன்னான்.“பாய் ஸாப், பத்து நிமிஷம் முன்னாடிதான் இந்தக் காரை வெளியே எடுத்தோம்.”
இது வழக்கமான ஒன்றா? என்றெல்லாம் யோசிக்க மழை விடவில்லை. வண்டி கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் சரிந்து கொண்டிருந்தது.
யாரும் ஏன் முனைப்பாக வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒருவன் கண்ணாடியில் தட்டினான். “ஸாப், ஐநூறு ரூபாய் தருவீங்கன்னா, நாங்களே எடுக்கறோம்”
இது ஒரு சம்பாதிப்பா? என்று திகைத்திருக்க , சரியென்றேன். வண்டி வெளியே வந்தாப் போதும் இப்போதைக்கு. மனைவியின் ஆட்டோ வேறு மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது. வண்டி சாக்கடையில் இறங்கியிருப்பது தெரிந்ததும், அவர் வேறு படபடப்பிலிருந்தார்.
ஐந்து பேராக வந்து வண்டியை, சாக்கடையிலிருந்து வெளியே தூக்க, ரிவர்ஸ் கியரில் மெல்ல எடுத்தேன். வெளி வந்ததும், பையில் துளவிப் பார்த்தேன்.
எழுபது ரூபாய், பத்து பத்தாக முழுக்க நனைந்த நோட்டுகள்.
ஐநூறு கேட்டவனிடத்தில் , எழுவது ரூபாயா?
மீண்டும் சாக்கடையில் வண்டியைத் தள்ளி விட்டுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையில் வண்டியை வளாகத்தினுள் கொண்டு போய் நிறுத்தினேன்.
பக்கத்தில் ஏ.டி.எம் இருக்கிறதா ? என்றேன். பாலத்துக்கு அடுத்த பக்கம் என்றார்கள். அதுவரை நடக்க என்னோடு வந்தவன், மரியாதையாக எனக்கு ஒரு குடையைப் பிடித்தான். முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற நினைப்பில் மழையில் முன்னே நடந்தேன்.
எதிர்பார்த்தபடியே, அந்த SBI ATM வேலை செய்யாமலிருந்தது. சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாது...
விரக்தியில் அவன் குடையை தனக்கு மட்டும் பிடித்தபடி முன்னே திரும்பி நடந்தான். உள்ளூற சிரித்தபடி மழையில் திரும்பி நடந்தேன்.
பஸ்ஸினுள் அமர்ந்திருந்தவர்கள் ஏமாற்றத்தில் “அரே...”என்றனர். டிரைவர் சீட்டில் இருந்தவன், “ பரவாயில்லை. அடுத்ததடவை..”
“விழணும்னு சொல்றீங்களா?” என்றேன்.
சிரித்தபடி “ இல்ல சார். இந்தப் பக்கமா வரும்போது, நினைவில வச்சிருந்து ஏதோ முடிஞ்சதக் கொடுங்க போதும்” என்றார்
.
“யாருங்க, சாக்கடையில இறங்கி தூக்கினது?” என்றேன்
“நான் சார்” என்றான் உள்ளிருந்து ஒருவன்.
“ என் பையில எவ்வளவு இருந்தாலும் அதை உனக்குத் தந்துடறேன். சாரி. எழுவது ரூபாய்க்கு மேல தேறாது. “ என்றேன்.
“அட பரவாயில்ல.சார்.” என்றான் சிரித்தபடி. அதிலிருந்து ஒரு பத்து ரூவாயை , கூட நடந்து வந்த பையனுக்குக் கொடுத்தான். “சூடா ஒரு சாய் குடி” என்றான். இந்த இயல்பான கொடையை வியந்து பார்த்தபடி நின்றிருந்தேன்.
” மழை பெய்யறப்போ, ரோடு ஓரமா என்னிக்கும் நிறுத்திடாதீங்க. மும்பை மழை ,எங்களையே சில நேரத்துல காவு வாங்கிரும். நடு ரோட்டுல போங்க. இல்ல, நிப்பாட்டிருங்க. தண்ணி வடிஞ்சப்புறம் போங்க” என்றான் டிரைவர்.
மனைவி , பாலத்தைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தி பதட்டமாக விரைந்து வர, நான் ஜோராக வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினேன். நிதானமாக 2ம் கியரில் ஓட்டியபடி வந்தபோது , பார்க்கும் தூரம் 50 மீட்டர் வரை குறைந்திருந்தது.
சாக்கடை அருகிலிருக்கிறது என்ற எச்சரிக்கை பலகை வைக்காதது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் குற்றமா?, முனிசிபாலிடியின் குற்றமா? விழுந்த காரில் இருப்பவர்கள் 500 ரூபாய் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்,புடுங்கலாம் என்ற நினைப்பு அந்த மனிதர்களுக்கு வந்தது தவறா? அல்லது செய்த வேலைக்கு கூலி கிடைக்காததைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருந்தது அவர்கள் பெருந்தன்மையா?
வெளியே பேய் மழை... உள்ளேயும்.

Saturday, July 12, 2014

ஆர்.சூடாமணி அவர்களின் கதைகள் - ஒரு வாசிப்பு


ஆர். சூடாமணி அவர்களின் கதைகள் மிக நுட்பமான உணர்வுகளை, இயல்பான கதையோட்டத்தில் , அவற்றின்  நுட்பம் குறையாத வகையில் வெளிக்கொணர்வன.  ஓடும் ஆறாக கதை ஒழுகிச்செல்ல, படுகையில் கூழாங்கற்களாக உணர்வுகளும், உறவுகளும் உட்பாதங்களை நெருடுவதாகப் படைப்பதில் தனி ஆற்றல் கொண்டவர் அவர்.  அவரது கதைகளை பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், மனித உணர்வுகளை, கதையின் தொடக்கக் காட்சிகளில் அறிமுகப்படுத்தி, நடுவே கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியாகவோ, சுய அலசல்களின் வழியாகவோ வெளிப்படையாக வரவைத்து , இறுதியில் அவ்வுணர்வுகளின் தாக்கத்தை கதையின் இயக்கத்தில் ஏற்றி. உணர்வுகள், உறவுகள் இவற்றின் தொடர்புகள், அலசல்கள் என்பவற்றிலேயே அவர் கதைகளை நகர்த்தி வந்தார் என்றளவில் பொதுமைப் படுத்தலாம்.

மூன்று கதைகள் அழியாச்சுடர்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்நியர்கள், பூமாலை, இணைப்பறவை.. மூன்று தலைப்புகளும் சற்றே நேரடித் தொடர்பு என்றளவில் கதையில் ஏறவில்லை. கதையைப் படித்தபின்னரே, தலைப்பின் தொடர்பை அறிந்து உணர முடியும்.  1960களில் அருமையான உத்தி அது.

அன்னியர்கள் கதையில் இரு சகோதரிகள், தங்களது பொதுமையான வளர்ப்பையும், அதன்மூலமாகவோ, அதில்லாமலோ கிடைத்த பொதுக்க்குணங்களை வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் கண்டெடுத்து அதில் திளைத்திருக்கையில், தனித்துவம் என்ற பண்பு எவ்வாறு இருவரையும் வேற்றுமைப் படுத்துகிறது என்பதை பல நிகழ்வுகளில் உணர்கிறார்கள்.  யதார்த்தம் என்பதும், உறவின் வழி, வளர்ப்பின் வழி வருகின்ற எதிர்பார்ப்புகளும் வேறுபட்டவை என்பதை சிறு அதிர்ச்சிகளில் உணர்வதை மிக அழகாக உணர்த்தும் கதை “அந்நியர்கள்”

”பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக்காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.”
இப்படி ஆழமான அழுத்தமான உறவும், புரிதலும் கொண்ட சகோதரிகள் இறுதியில் சிந்திக்கும்பொழுது,
”ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல...”
என்பது உறவுகளின் பொது அலசலை சுயத்தில் ஏற்றிச் சிந்திக்க வைத்த சூடாமணியின் அபார சாதுர்யம். 
சிறுவயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்த பெண் , திருமணமான பின் முழு அன்பினை எதிர்பார்த்து, கணவன் ஒரு அழகான பெண்ணை ரசித்ததில் வெகுண்டு, தன் ஏமாற்றங்களில் வெந்த எதிர்ப்பார்ப்புகளை மனத்தில் வைத்து வாழ்கிறாள். ஒரு கடிதம் மூலம் அந்த விஷ விதைகளை வெளியேற்றச் சொல்லும் உத்தியை லாகவமாக சூடாமணி கையாண்டிருக்கிறார். பழைய புண்களை இன்றும் சுமந்து, நிகழ்கால நிக்ழ்வுகளை அப்புண்களின் வலியின் எதிர்ப்பாக வெளிப்படுத்துவதை இடித்துரைக்கும் கடிதம் முற்றுப் பெறுவதும்,ஒரு எதிர்பார்ப்புடனே...

“அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.”

வாழ்வில் இன்பத்தை அனுபவிக்காது, பழங்கால துன்பத்தை நினைவு கூர்ந்தே வலியில் கழிப்பதை அழகாக எடுத்துக்காட்டிய வரிகள் இவை.


உறவின் வலிமை, அதனை இழக்கும் போதுதான் தெரிகிறது என்பதைக் காட்டுகிறது இணைப்பறவை என்ற கதை..   வீட்டில் பாட்டி இறந்துவிட, அவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணங்களையும், இழப்பினைத்  தாங்கும் விதத்தையும் காட்டிய கதை இது. தன் மனைவி இறந்தபோது அழாத முதியவரின் அழுத்தம் அனைவரையும் திகைக்க வைக்கிறது, கவலை கொள்ள வைக்கிறது. ஓவ்வொருவரும் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் முதியவர் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாகக் காட்டிய விதம் சூடாமணி அவர்களின் எழுத்துத் திறனுக்கு ஒரு சான்று.

வாழ்வினைப் பாட்டி எப்படி எடுத்துக் கொண்டாள் என்பதை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக இப்படிச் சொல்கிறார்

“ நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு”

ஆர். சூடாமணி அவர்களின் கதைகளின் மூலம் மனிதர்களின் உணர்வை வாசிக்கிறோம்.

நன்றி அழியாச்சுடர்கள்   http://azhiyasudargal.blogspot.in

Friday, July 04, 2014

ஃப்ளெக்ஸ் பேனர் அநாகரிகங்கள்.

”எல்லாத்தையும் விட்டுட்டு அதென்ன நம்மூர் ஃப்ளெக்ஸ் பேனர் பின்னாடி போய் ஒரு போஸ்ட்டு? என்றார் நண்பர் ஒருவர். ரொம்ப நாளாவே உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் அது. இது போன்ற அசிங்கங்கள் நம்மூரில் மட்டும்தான் நடக்கின்றனவா? என்று அறிய நான் செல்லும் சில ஊர்களில் தேடினேன். அரசியல் வாதிகளின் பிறந்தநாள் வாழ்த்துகள், நல்வரவு பேனர்கள் கர்நாடகாவில் ஆந்திராவில் தெரிந்தன.

 நம்மூரில் மட்டும்தான் இந்த பூப்புனித நீராட்டுவிழாவுக்கு எல்லாம் பேனர் வைக்கும் பழக்கம் இருக்கிறது.  அந்தச் சிறுபெண்ணின் போட்டோவை வேறு போட்டு வைப்பார்கள். அதைச் சுற்றி அவள் அண்ணன், அண்ணனின் தோழர்கள் என ஒரு படையின் போட்டோ...

வாழ்வில் உடல்ரீதியான ஒரு மாற்றமடையும், ஒரு சிறுபெண்ணின் பயங்களையும், வினோத தர்மசங்கடமான உணர்வுகளையும் சற்றும் புரிந்து கொள்ளாமல் தெரு முக்குகளில் வைக்கப் படும் இந்த வெளிப்படையான விளம்பரங்கள் அவள் மனத்தில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் புரிந்துகொள்கிறார்களா?

தெருவில் போகிறவர்கள் தற்செயலாகப் பார்த்தால் கூட ’என்னை அதனால்தான் விசித்திரமாகப் பார்க்கிறார்களோ? ’ என்ற எண்ணம் அச்சிறுமிகளுக்கு எழும். இந்த உள உளைச்சல்களை அவள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்னும் நம் சமுதாயம் பண்பட்டு விடவில்லை. இது நிதர்சனம். இதற்காகவாவது பள்ளிகளில் செக்ஸாலஜி வகுப்புகள் நடத்தப் படவேண்டும். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு,  பேனர் ப்ரியர்களாக தெருவில் சோவாறும் தறுதலைகளுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

இந்த பேனர்கள் ஒரு சமூக வழக்கத்தின் கால மாறுபாட்டின் வெளிப்பாடல்ல. தன்னை ரசிக்கும் ஒரு நார்சிஸிஸத்தின் (Narcissism) குரூர வெளிப்பாடு. இல்லையென்றால் எதற்கு அந்த நிகழ்வுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஆண்களின் போட்டோக்கள் அதில் நிறைந்து வரவேண்டும்?

70களில் தீவிர  எம்.ஜி.ஆர் ரசிகர்கள், சிவாஜி படத்தின் போஸ்டர்களில் சாணி அடித்து தன் வெறுப்பைக் காட்டுவதும், அது திரும்பிக் கொடுக்கப் படுவதும் வழக்கமாக சிறு நகரங்களில், கிராமங்களில் இருந்தன. இவை சில சமயங்களில் பெரும் கலகமாகவே வெடித்த வரலாறுகள் உண்டு.

இந்த சாணி அடித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமோ?  

Wednesday, July 02, 2014

லாரா கோம்ஸ்


குஜராத் எக்ஸ்ப்ரஸ் ப்ளாட்பார்ம் நாலுக்குப் பதிலாக இன்று ப்ளாட்பார்ம் ஆறில் வருகிறது. பயணிகளுக்கு...” இயந்திர கதியில் போரிவல்லி ரயில்வே நிலையத்தில்  ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருக்க, நான் வேகமாக படிகளில் ஏறினேன். ஆறாம் ப்ளாட்பார்ம் அடுத்ததுதான் என்றாலும், இந்த வேகம் இல்லாவிட்டால், அடுத்த லோக்கல் ரயிலில் வரும் கூட்டம் , சிதறிய நெல்லி மூட்டையைப் போல் ப்ளாட்பாரத்தில் வழிந்து, முழு படிக்கட்டையும் ஆக்ரமித்துவிடும். அதற்குள் நாம் ஏறாவிட்டால் நமது ரயில் போவதைப் பார்க்கலாம். மும்பையில் எதையெல்லாம் கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கு?

லேசான மூச்சிரைப்புடன் எனது கம்ப்பார்ட்மெண்ட் வரும் இடத்தருகே நிற்கையில். ‘எக்ஸ்க்யூஸ்மி, 3rd AC இங்கதான வரும்?” என்றது ஒரு சன்னமான குரல். “ ஆம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே தலையசைத்துவிட்டு அதன் பின் நிதானமாக யார் என்று பார்த்தேன்.

இவள்...?

“நீங்க, நீங்க லாரா... லாரா கோம்ஸ் தானே?”

அவள் கண்களை இடுக்கி என்னைப் பார்த்தாள். சற்றே புஜங்கள் பெரிதாகியிருக்கின்றன. முகம் சற்று ஊதியிருக்கிறாள். ஆனால் என்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது புரிந்தது. அறிமுகப்படுத்தியும் தெரியவில்லை. இறுதியில் அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினேன்.

முகம் மலர “ மை காட்... நீங்க..” என்றவள் வியப்பில் விரிந்த வாயைக் கைகளால் பொத்திக்கொண்டாள்.

”இப்பவும் கால் வலிக்குது” என்றேன் புன்னகைத்தபடி.

“ ஹ ஹா... Wow, so sorry, though fifteen years late" என்றாள் லாரா பெருத்த சிரிப்பினூடே.

பதினைந்து வருடம் முன்பு, நானும் என் நண்பனும், அந்தேரி ஸீப்ஸ் அருகே இருக்கும் துங்கா ரெஸ்டாரண்ட்டில் ஒரு மாலையில் நுழைந்து கொண்டிருந்தோம். சட்டென அவன் யாரையோ பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றான்.

 “ தோஸ்த், பொறுங்க”

புரியாமல் அவனருகே நின்றேன். “ என் பைக் -ஐ எடுத்துட்டு சக்காலா சிக்னல் வந்துடுங்க. அங்கயே வி.ஐ.பி ஷோரூம் பக்கம் நில்லுங்க. நான் பதினைஞ்சு நிமிசத்துல வந்துடறேன்” என்றவன் நான் மேற்கொண்டு எதுவும் கேட்குமுன், சாவியை கையில் திணித்துவிட்டு சாலையின் மறுபுறம் கடந்து ஸாங்கி ஆக்ஸிஜன் கம்பெனி வளாகத்துள் நுழைந்தான்.
விழித்தபடி நின்றிருந்த நான் பைக்-ஐ கிளப்பும்போதுதான், அந்தப் பெண் அவனருகே வந்து நின்றாள். இருவரும் வளாகத்தின் உட்புறம்  மரங்கள் அடர்ந்த கார் பார்க்கிங் பகுதியில் சென்று மறைந்தார்கள்.

லாரா என்பது அவள் பெயர் என்று அவன் சொல்லியிருக்கிறான். அவள் மும்பையின் வஸாய் என்ற புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எங்கள் அலுவலகத்தை அடுத்த ஒரு நடுத்தர அளவிலான மருந்து உற்பத்திக் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் என்ற அளவில் எனக்குத் தெரியும். ஒரு முறை அலோ என்றிருக்கிறோம். அவ்வளவுதான்.
எனது நண்பன் வேறு மதத்தைச் சார்ந்தவன். உத்தரப் பிரதேசத்தில் அவனது பெற்றோர், விரிவான , வசதியான குடும்பம். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து இரு வருடங்களாயிற்று .இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கிறது  என்றான் ஒரு முறை
பைக்-கில் சக்காலா சிக்னல் சேரும்போது, போலீஸ் “தாம்பா ( நில்லு)” என்ற போதுதான் நினைவு வந்தது. ஹெல்மெட் போடவில்லை. நாசமாப் போனவன் ஹெல்மெட் தர மறந்திருக்கிறான்.

போலீஸ் “இன்ஸ்யூரன்ஸ் குட்டே(எங்கே)?” என்றபோது இன்னும் விழித்தேன். அனைத்து பேப்பர்களும் அவனது பையில். திருட்டு பைக் என்று பிடித்து வைத்தார் அவர். நண்பனின் வண்டி என்று விளக்கியும், கெஞ்சியும் பார்த்துவிட்டேன். மசிவதாகத் தெரியவில்லை.
அப்போதெல்லாம் செல்போன் பரவலாகக் கிடையாது. அவனை எப்படி அழைப்பது? அங்கேயே வண்டியோடு கால் கடுக்க நின்றிருந்தேன். ஒரு மணி நேரமானது, இரண்டு மணி நேரமானது. அவனைக் காணவில்லை.

போலீஸ்காரர் முகத்தில் இப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அங்கிருந்து மெல்ல அவரோடு வண்டியை உருட்டியபடியே காவல் நிலையத்துக்குச் சென்றேன். கால் விண் விண் எனத் தெறித்தது. பசியும் கோபமும் சேர்ந்து சற்றே அழுகையும் வந்தது.

இருட்டிய பின்  நண்பனும் அவனோடு அந்தப்பெண் லாராவும் நுழைந்தனர். “சார் இது என் வண்டி. இது என் நண்பன்” என்று அவன் விளக்கி, படிவங்களைக் காட்டி நூறு ரூபாய் கொடுத்தபின்னே என்னை விட்டார்கள்.

‘சாரி, சாரி” என்றான் பலமுறை. கோபத்தில் ஒன்றும் பேசாதிருந்தேன்.

அவள் “ என் சார்பிலும் ஸாரி”என்றாள். அருகே ஒரு ஓட்டலில் அமர்ந்தோம்

“லெட் மி எக்ஸ்ப்ளெய்ன். லாராவுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். அவள் வீட்டில் காதலைச் சொல்லிவிட்டாள். அண்ணன்கள் மதம் மாறி கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. வேற வழியில்லை. நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ்..”

வியப்புடனும் ஆயாசத்துடனும் அவனை ஏறிட்டேன். “ நோ வொர்ரிஸ். நான் எங்க அண்ணனை சரிக்கட்டி வைச்சிருக்கேன். அவர் பாத்துக்குவார். “

இரு வார விடுப்பின் பின் ஆபீஸில் சேர்ந்த நண்பன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான். ‘துபாய்ல வேலை கிடைச்சிருச்சு, லாராவுக்கு கொஞ்ச நாளாவும்” என்றான். அன்று போன அவனும், லாராவும்  மெல்ல மெல்ல நினைவிலிருந்தும் தேய்ந்து போனார்கள்.

ரயில் விரார் தாண்டி , பெரிய பாலத்தில் தடங் தடங் என்று சென்றுகொண்டிருக்க, சன்னலோரம் அமர்ந்திருந்த லாரா வெளியே பார்த்தபடி இருந்தாள். அவள் அருகே  இருக்கை காலியாயிருக்க, ’அமரலாமா?’ என்று கேட்டு அமர்ந்தேன்.

“ அவன் எங்கே? “ என்றேன்.

”மும்பையிலதான். எதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி பேரு” என்றாள். விசித்திரமாகப் பார்த்தேன்.

என்னை ஏறிட்டாள் “ நாங்க  பிரிஞ்சுட்டோம். டைவர்ஸ் இன்னும் வாங்கலை”
திகைத்துப்போனேன். எத்தனை சிரமப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பொசுக்கென்று ‘ பிரிஞ்சுட்டோம் ’ என்றால் ?

லாரா இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

“துபாய்ல அவன் போனப்புறம் நான் அங்க போய்ச் சேர்றதுக்கு  ஒரு வருசம் ஆயிருச்சு. கல்யாணம் ஆனவுடனேயே என்னை வீட்டுல துரத்திட்டாங்க. ஒரு ப்ரெண்டு வீட்டுல ஒரு வாரம், அப்புறம் லேடீஸ் ஹாஸ்டல்...னு ஒரு பாதுகாப்பில்லாத  வாழ்க்கை.ரொம்பக் கஷ்டப்பட்ட காலம் அது.
 அவங்க விட்டுக்காரங்க வந்து மிரட்டினாங்க. விவாகரத்து பண்ணிரு.இல்லேன்னா கொன்னுருவோம்னாங்க. எல்லாம் தாண்டி ஒரு வருசம் கழிச்சு அவன்கூடப் போயி சேர்ந்துட்டேன்.
முதல்ல ரெண்டு வருசம் நல்லாத்தான் இருந்தான். எங்கயோ மதப் ப்ரச்சாரம் கேட்டவன், மெல்ல மெல்ல அதுல ரொம்ப ஈடுபாடு கொள்ள ஆரம்பிச்சான். முதல்ல நானும் அத ரொம்பக் கண்டுக்கலை. எனக்கு மத ஈடுபாடு எல்லாம் கிடையாது. அது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம்னு விட்டுட்டேன்.அவன்  கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வந்ததை கவலையோடு பாத்துட்டிருந்தேன். ஒரு நாள் “ நான் தப்புப் பண்ணிட்டேன். உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டது என் மதக் கொள்கைக்கு மீறினது.” ன்னான். திடுக்கிட்டுப்போயிட்டேன். அதுக்குப் பரிகாரமா என்னை மதம் மாறச் சொன்னான். முடியாது ன்னுட்டேன். ஒருவரின் மத நம்பிக்கைக்கும் , காதலுக்கும், குடும்பத்துக்கும்  சம்பந்தமே இல்லைன்னு என் எண்ணம். கொஞ்சம் கொஞ்சமா சண்டை வர ஆரம்பிச்சது. அடிக்க ஆரம்பிச்சாரு.

பொறுத்து பாத்து, ஒரு நாள் கிளம்பி மும்பை வந்துட்டேன். வீட்டுல ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க. திரும்ப லேடீஸ் ஹாஸ்டல். வேலை தேடல். இப்ப ஒரு மருந்து கம்பெனியில தர நிர்ணயத்துறையில இருக்கேன். கம்பெனி ஆடிட்க்குத்தான் வாபி போயிட்டிருக்கேன்.”

லாரா சற்றே நிறுத்தினாள். சூரியன் கீழ்வானில் செஞ்சாந்தைத் தீற்றியிருந்தது. ஒளிதான் எவ்வளவு அழகு? அனைத்து இருட்டையும் அழித்து விடுகிறது, ஒரு கணத்தில். 

லாரா தொடர்ந்தாள்.

”அப்புறம் அவனும் மும்பைக்கு வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். இப்ப அவங்க மத்த்துலயே ஒரு பெண்ணைக் கட்டி வைச்சிருக்காங்க. நல்ல சம்பளம், ஊர்ல சொத்து, பணக்கார பொண்டாட்டி. அவன் உண்டு, அவனை வாழ வைச்ச மதம் உண்டுன்னு இப்ப அவனும் நிம்மதியா இருக்கான்.

நானும் இப்ப நிம்மதியா இருக்கேன் சுதாகர். யோசிச்சுப் பாத்த்துல , எனக்குமே அது காதல்தானான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. மெல்ல மெல்ல என் அன்பும் அவன்மேல குறைஞ்சுகிட்டே வந்துருச்சு. இப்ப ஒண்ணுமே இல்லை. அவனும், இந்த ரயில்ல வர்ற ஏதோ ஒரு சக பயணிபோல,முகமறியாத ஒருவன் இப்ப, அவ்வளவுதான்.”

இருவரும் வெளியே பார்த்தபடி இருந்தோம். காலை சூரியனை மேகம் சூழ , கம்பார்ட்மெண்ட் சற்றே இருண்டது.

சூரியன் என்னதான் ஒளி பொருந்தியதாக இருந்தாலும், மேகங்கள் பூமிக்கு அதனை மறைத்துவிடுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தன்னைக் காதலித்தவன், காதலை விடுத்து, தீவிரமாக வேறு ஒன்றில் ஈடுபடுவது போன்று வாழ்ந்திருப்பதைக் கண்டு வெதும்பி, தன் காதலை அழித்தவாறே ஒரு பெண்  சொல்கிறாள்.

”மலை இடைஇட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊர்ரும் அல்லர்,
கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்.
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓரீஇ ஒழுகிய என்னைக்குப்
பரியிலமன் யான் பண்டொரு காலே
       - நெடும்பல்லியத்தனார்,  குறுந்தொகை

”என்னைச் சேர்ந்தவன் மலைகள் சேர்ந்த மலைநாடனும் அல்லன். மரங்கள் அடர்ந்து செழித்த காடுவளமுடைய ஊரனும் அல்லன். இந்த ஊரிலேயே, என்னைக் கண்ணில் காணும் வழியிருந்தும், கடவுள் சிந்தனை பெருகிய ஒருவன் எவ்வாறு பிறரைக் காணாது தனது வழிபாட்டில் குறியாயிருப்பது போல, என்னை அறியாது போல பாசாங்கு செய்து வருகின்றான். அவன் மேல் நான் கொண்டிருந்த காதலும் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது”