Saturday, April 30, 2005

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததின் பின்னே இருக்கும் உலக வர்த்தக அரசியல் குறித்து பல விவரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.

ஏர்பஸ் கன்ஸார்டியம் இரண்டுதள அசுர விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றியானது குறித்து, ஷாம்பெய்ன் பாட்டில்களைத் திறந்த நேரத்தில் இந்த போயிங் ஆர்டர் , ஏர்பஸ் நிறுவனத்தை சற்றே ஆட வைத்துவிட்டது. வர்த்தகத்தின் மதிப்பு அப்படி..

கிளின்Tடன் அரசின் முக்கிய பொறுப்பிலிருந்த தாமஸ் பிக்கரிங், போயிங்-கில் வைஸ் ப்ரசிடென்Tட்டாக, புஷ் அரசு பொறுப்பேற்றதும், சேர்ந்தது நடந்தது 2001-ல். இதன் பின்னணி குறீத்து அமெரிக்கப் பத்திரிகைகள் "புது அரசு, தனக்கு ஆதரவாக உலக அரசியலில் பேசுவதற்காகவே, அரசியல் புள்ளியான பிக்கரிங்-கை போயிங் எடுத்திருக்கிறது" என்னுமளவிற்கு துக்கடாவாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, ஒதுக்கிவிட்டன.
இந்தப்பின்னணியில் சீனாவும், இந்தியாவும் விமானப் போக்குவரத்தில் பெருமளவில் முன்னேற்றமடையும் என்னும் எதிர்பார்ப்பில் இரு விமானக் கம்பெனிகளும் 2002-ல் இருந்தே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன. சீனாவின் விமானப் போக்குவரத்து , பலமடங்காகப் பெருகிவந்தாலும், 2008 ஒலிம்பிக் விளையாட்டிற்காக சீனா தனது விமானதளங்களை நவீனப்படுத்திப் பெரிதுபெரிதாகக் கட்டிவருகிறது. எனவே, முதல் கவனம் , இக்கம்பெனிகளுக்கு சீனாதான்.

திடீரென ஏர் இந்தியா போயிங்-கிற்கு ஆதரவாக முடிவெடுத்ததில் அண்மையில் அமெரிக்க போக்குவரத்து செக்ரட்டெரி நார்ம் மினேட்டா,இந்தியா வருகை என ஒரு பின்னணி இருக்கிறது. போயிங் , அவரது தேர்தலுக்கு பணம் கொடுத்திருந்தது எனச் சொல்லப்படுகிறது. நார்ம் மினேட்டாவின் வருகையின் பின்னும், கொண்டலீஸா ரைஸ் வந்திருந்த போதும்,போயிங் தனது விற்பனை நுட்பங்களை உச்சப்படுத்தியது.
ஏர்பஸ் சும்மாஇருக்கவில்லை எனினும், அதன் lobbying power சற்றே குறைந்திருந்தது எனவும், "இவர்கள் காலம் காலமாகப் பேசிவருகிறார்கள். எங்கே வாங்கப்போகிறார்கள்?" என்ற அலுப்பும் அலட்சியமும் அவர்கள் தரப்பில் சற்று மேலோங்கியிருந்ததெனவும், உள்நாட்டு விமானத் துறையில் கூறுகிறர்கள். இந்த நேரத்தில்.. ஏர் இந்தியா தனது முடிவை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.

ஏர் பஸ் கன்ஸார்டியம், " ஏர் இந்தியாவின் முடிவில் ஏதோ இருக்கிறது" என Central Vigilance Committee இடம் புகார் செய்திருக்கிறது.
அமெரிக்கா f16 விற்கிறது என்றால் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோரின் வேலை தக்கவைக்கப்பட்டிருக்கிறது என்னும் அமெரிக்க உள்நாட்டு அரசியல்தானே ஒழிய, சாதாரண டெக்ஸஸ் குடிமகனுக்கு, இந்தியா பாகிஸ்தான் யார் வாங்கினால் என்ன? யார் மேல் குண்டு போட்டால் என்ன?

போயிங் விமானங்கள் அமெரிக்காவின் எந்த விமானதளத்திலிருந்து இந்தியாவின் எந்தப் பன்னாட்டு விமானதளத்திற்கும் நேரடி விமானப் போக்குவரத்து நடைபெற வழிவகுக்கும் எனவும் , குறைந்த எரிபொருள் செலவாக்கும் தொழில் நுட்பமுள்ளவை எனவும் ஏர் இந்தியா தரப்பில்சொல்லப் பட்டாலும்...
உலோகப்பறவை வர்த்தகம் , உலக( அமெரிக்க) அரசியல் நிலை கொண்டே அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Thursday, April 28, 2005

மனநலமும் காவல்துறையும்

மனநலமும் காவல்துறையும்
சாம்னாவில் வந்த சிவசேனாவின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கல்லூரி மாணவ/மாணவியர் "எங்கள் ஆடைகளை நோக்குவதை விட்டுவிட்டு உருப்படியாக எதாவது செய்யுங்கள்" எனச் சொல்லப்போக, வேண்டாத விவாதங்கள் பத்திரிகைகளை நிரப்புகின்றன. "கலாச்சாரச் சீரழிவு ஆடையின் குறைப்பில் தொடங்குகிறது" என்பது ஒரு கட்சி. "ஆடை குறைப்பு செய்யாத பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள்" என்கிறது இன்னொன்று. பத்திரிகைகளுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்குக் கவலையில்லை.
அடிப்படை நோயை விட்டுவிட்டு எங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

உளவியல் அடிப்படையான தேர்வு காவல் துறைக்கு அவசியம் கொண்டுவரவேண்டும் என்பது என் எண்ணம். வன்முறைகளை தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனதில் அதன் கறைபடியாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்கு , அத்தகைய மன நிலை அடித்தளத்தில் உண்டான மனிதர்களே தேர்வு செய்யப்படவேண்டும்.

உடல் நிலை கண்காணிப்பு எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மனநிலைக் கண்காணிப்பும் சீரமைப்பும். வருடம் ஒரு முறை மருத்துவச் சோதனை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் மேநிலை காவல்துறை அதிகாரிகள் , கட்டாய மனநிலை சோதனை குறித்து ஏனோ இதுவரை பேசவில்லை. மனநிலை ஆலோசனை என்பது காவல்துறையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

இரு நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய சர்வே யில் ,"பாதுகாப்பு/உதவிதேவையென்றால் நீங்கள் காவலர்களை அணுகுவீர்களா ?" என்ற கேள்விக்குப் பல பெண்கள் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளையும் தனியாக விளையாட விடுவதற்கு இப்போது தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு தனிமனிதனின் செய்கை காவல்துறையின் ஒழுங்கையே கேள்விக்குறியாக்கியிருக்கும் பட்சத்தில், அத்துறை, தனது நடப்பினையும், காவலர்களின் ஒருங்கிணைந்த நலப்பாதுகாப்பையும் குறித்து முழுக்கவனத்துடன் ஒரு மீள்பார்வை செய்யவேண்டியது அவசியம். இது போன்ற சÁÂங்களில காவல்துறை அதிகாரிகள் பேசுகிறார்களே ஒழிய, இன்னும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யக்காணோம்.

Wednesday, April 27, 2005

வேலியே பயிரை மேய்கையில்..

வேலியே பயிரை மேய்கையில்..

இதுகாறும் மும்பை பெண்களுக்கு மிகவும் பத்திரமான இடம் என்னும் கருத்து நிலவி வந்தது. இன்றும் பெருமளவு இது உண்மைதானெனினும், அண்மையில் ஒரு கல்லூரிப் பெண், பட்டப்பகலில், ஒரு காவலனால், காவல் நிலையத்தினுள்ளேயே கற்பழிக்கப்பட்ட செய்து, மும்பையின் பெருமிதத்தைத் தகர்த்து விட்டது.

மூன்று நாட்களுக்கு மக்களின் ஆத்திரம், கொந்தளிப்பு வீதியில் உணரப்பட்டது. மெரைன்லைன்ஸ் என்னும் பகுதியில்( இச் சோகச் சம்பவம் நிகழ்ந்த இடம்), பொதுமக்கள் சாலையை மறித்து காவல்துறையினரை, அக் காமுகனைத் தங்களிடம் விடுமாறு கோஷமெழுப்பினர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக,பொருளாதார மட்டத்தில் மிக மிக உயர்ந்த தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சரியான விளக்கம் அளிக்கத் திணறியது. "மிகவும் சீரியஸான விஷயம். தக்க தண்டனை வழங்கப்படும்" என்றெல்லாம் காவல்துறை மேலிடம் அறிக்கை விட்டது. துணை முதலமைச்சர்" அப்பெண்ணின் வீட்டில் தானே சென்று மன்னிப்புக் கேட்பதாகவும், அப்பெண்ணின் புனர்வாழ்விற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் " சொன்னார்.
இதிலெல்லாம் எவரும் சமாதானமானதாகத் தெரியவில்லைல்.

தலைவலியாக, சிவசேனாவின் சங்கப் பத்திரிகையான சாம்னா " பெண்கள் படு கவர்ச்சியாக ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்" எனச் சொன்னதோடு நிற்காமல் " இதெல்லாம்தான் ஒரு மனிதனை இவ்வாறு தவறான செயல்களுக்குத் தூண்டுகின்றன" என்றும் சொல்லிவைத்து, ஒர் விவாதத்தைக் கிளப்பி வைத்திருக்கிறது.
பெண்கள் கவர்ச்சியாக ஆடைஅணிவதால் ஒரு மனிதன் , அதுவும் காவல் துறையில் இருப்பவன் கற்பழிக்கும் அளவிற்குத் தூண்டப்படுகிறான் என்பது நியாயமல்ல. காவல்துறைக்கு இச்செயல் பெரும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால்,அடிப்படையில் அவன் அத்தொழிலுக்கே அருகதையற்றவன். காவல்துறையின் செலக்ஷன் முறைகளில் மாற்றம் வேண்டும்.
காவலர்கள் பணிநேரம் மிக அதிகமாக இருப்பதால், பெரும் மனச் சோர்வு, உடல் தளர்ச்சியும் அடைகிறார்கள் என்றும், அவர்களுக்கு இம்மனச்சுமைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை அளிக்கப்படவேண்டும் என மனவியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃ இண்டியா மும்பை கூறுகிறது. மனத்தையும் உடலையும் சீராக வைத்திருக்க கட்டாய உடற்பயிற்சி, யோகா, கட்டாய வார விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
உளவியல் வல்லுநர்களின் இக்கருத்துகள் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் காவல் துறை எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும், ராணுவம், அதிகரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் உளவியல் வல்லுநர்களைப் பயன்படுத்துவதை, காவலர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையிலும் பயன்படுத்தினால், மிருகங்கள், காவல்துறையில் சேர்வதைத் தடுக்கலாம்.

எது எப்படியோ, வேலி பயிரை மேய்ந்துவிட்டது. "இது முதல்முறையல்ல - முதல்முறை வெளிவந்த செய்தி என்கிறார்கள்" பெண்ணுரிமை வாதிகள்.
ஒரு கல்லூரிப் பெண்ணின் வாழ்வே குலைந்திருப்பதும் மும்பைக் காவல்துறையின் சீருடை கறைபட்டிருப்பதும் மட்டும் இப்போது நிதர்சனம்.

Sunday, April 24, 2005

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழி மூலம் கல்வி என்பது அரசியலாகிவிட்டது. எந்த காரணத்திற்காக கல்வியியல் வல்லுநர்கள் தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வியாவது வேண்டும் என அறிவுறுத்திக்கொண்டிருக்கிறார்களோ, அது விவாதங்களில் செறிவடையாமல் நீர்த்து வருவது வேதனைக்குரியது. சரி, கல்விக்கூடங்களில்தான் தமிழ் இல்லை... வீட்டிலாவது இருக்கவேண்டாமா என்னும் கேள்விக்கு " ஆங்கிலத்தில், ஹிந்தியில் பேசச்பேசத்தான் அதில் சரளமாக புழங்க வரும்" என்னும் வாதத்தை முன்வைக்கின்றனர் பெற்றோர். அவர்களின் கவலை, உலகமயமாக்கலில், ஆங்கிலம் பேச எழுதத் திணறினால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் சற்றுதான் உண்மையிருக்கிறது.

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த சிறுவர் நாடகப் பயிற்சி முகாமிற்கு சென்று வந்த பேராசிரியர் இராமானுஜம் ,குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் பேசிவரும் தமிழ்+ஆங்கிலம் கலந்த "இரண்டும் கெட்டான்" மொழி பெரும் தடையாக இருப்பதாகச் சொன்னார். சென்னை நகரிலிருந்து வந்திருந்த குழந்தைகளைக் குறித்துக் கூறுகையில் "குழந்தைகள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயல்பாக தாய்மொழி உதவும். வேற்று மொழியில் அவர்களால் ,சொற்செறிவில் தங்கள் உணர்வுகளைத் தோய்க்க இயலுவதில்லை. அவ்வாறு வலுவான வேறுமொழிச் சொற்களைக் கையாடினாலும், அவை தனது உணர்வுகளைச் செய்தியாகச் சுட்டும் வார்த்தைக் கோர்வையாக மட்டுமே காணப்படுகின்றன. உணர்வுகளின் உயிர் அதிலில்லை. இது அக்குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் உணர்வதில்லை " என்றார். முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த தாத்தா,பாட்டிகள் இதனைப் பெரிதும் ஆமோதித்து வரவேற்றனர் என்றும், மாறாக,குழந்தைகளின் பெற்றோர் இதிலிருக்கும் சிரமங்களை முன் வைத்தனர் என்றும் சொன்னார்.அதே நேரத்தில், தான் கிராமங்களில் நடத்திய நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் , தமிழ் சொற்றடர்களையும் அதிலூடும் உணர்வுகளையும் உள்வாங்கி, தமிழில் தனக்குத் தெரிந்த அளவில் உயிரோடு வெளிப்படுத்துகின்றனர் என்றார்.

நமது குழந்தைகள் நம்மிடம் சொல்லுவதின் செய்தி மட்டும் அறிகிறோம். அவர்கள் தங்கள் சிறிய உலகத்தில் சேர்த்துவைத்திருக்கும் வார்த்தைகளின் வெளிப்பாடுகள், உடல் மொழி வெளிப்பாடுகள் முதலியனவற்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம். அவர்கள் சரியாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அறியவேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு பெரும் சுமையல்ல. குழந்தைகள் வெகு விரைவாக வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ளூம் சக்திபெற்றவர்கள் என சிறுவர் மன நல வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்மொழிச் சொற்கள் மிக விரைவாக அவர்களின் மூளைக்கும், நெஞ்சிற்கும் சென்றடைகின்றன. பிற மொழிச் சொற்கள் மூளையைச் சென்றடைந்து, வெறும் லாஜிக்-கில் பேசும்போது பிரயோகிக்கப்படுகிறது. இதுவே உயிரற்ற சொற்றொடர்கள் உமிழப்படுவதின் காரணம் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்குத் தாய்மொழியில் சரியான வார்த்தைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில்(வடக்குப்பட்டு) நான் நேராகக் கண்ட அனுபவம் இது. உலையில் இருக்கும் நெருப்பு "தீ" என்று அழைக்கப்படுவதில்லை. "அனல்" என்கின்றனர். அது"அணைக்க"ப் படுவதில்லை. "இறக்கப்" படுகிறது. மீண்டும் " ஏற்றப்" படுகிறது. அடுப்பின் இருக்கும் நெருப்பு உயிரைக் காப்பதால் "அணைக்கப்" படுவதில்லை. மீண்டும் "மூட்டவும்" படுவதில்லை. அருமையான வாழ்வியல் தத்துவங்களை தீ, நெருப்பு, அனல் போன்ற சொற்களைப் பயன்படுத்துபவர் தமிழ்ப் புலவர்களோ, அறிஞர்களோ இல்லை. கிராம மக்கள். இது ஏன் நகரக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படக் கூடாது?
தாய்மொழியில் வீட்டில் பேசுவது என்பது, குழந்தைகளின் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடும்.
தொலைக்காட்சி சீரியல்களிலிருந்து சற்றே மீண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதென்பது சிரமமானாலும், இயலாததில்லை.

Saturday, April 23, 2005

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்
--------------------------------

ரசனை என்பது ஒரு தனி மனித தளம். ஆயின் எவ்வாறு தமிழ் நாடகங்கள் தொய்வுற்றிருக்க பிற மாநிலங்களில் நாடகங்கள் வலுவடைந்திருக்கின்றன?
இக்கேள்வியை சற்றே திரித்து "மராத்தியில் எவ்வாறு நாடகம் இன்னும் வலுவாக இருக்கிறதென?" எனது நண்பரும், நாடக ரசிகருமான திரு.சி.ºÅ¡ñ அவர்களுடன் கேட்டிருந்தேன். அவர் சொன்னதில் இùவிடயங்கள் முக்கியமானதாகப் பட்டது.
1. நாடக ஆசிரியர்கள், அவர்களது படைப்புகள் பள்ளிகளிலேயே சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கல்லூரிக்கு வரும்போது மாணவர்கள் குறைந்தபட்சம் பு.லெ. தேஷ்பாண்டே குறித்து அறிந்திருக்கின்றனர். பலர் டென்Tடுல்கரின் நாடகங்கள் படித்திருக்கின்றனர் அல்லது பார்த்திருக்கின்றனர். எனவே, தற்கால நாடகம் குறித்து அவர்களால் இயல்பாகப் பேச முடிகிறது.
2. மகாராஷ்டிராவில் மராத்தி சினிமா அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. பாலிவுட் ஆசீர்வாதம்.. ஆயின், மராத்திய கலாச்சார,மொழிக்கு ஏற்ப இயல்பாக மராத்தி நாடகங்கள் அமைந்துவிட்டன. ஒரு சீரியலைவிட, பொதுஜன மராட்டியானவன், நாடகத்தை பார்க்கவும், அது குறித்துப் பேசவும் விரும்புகிறான். அவ்வாறு உரையாடப் பலர் கிடைக்கின்றனர். இது மும்பையிலிருந்து , ஓஸ்மனாபாத் மாவட்ட கிராமம் வரை பொதுவானது.
3. மராத்திய மொழி அறிவாளர்கள், எழுத்தாளர்கள், மராத்திய பத்திரிகைகள் மராட்டிய நாடகங்களைப் பற்றி பேசுகின்றனர். விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் இலக்கியத்துறையில் ஒரு செங்குத்துப் பிளவு (verticalization) காணப்படுகிறது. எழுத்தாளர்கள், கலை இலக்கியத்துறை சார்ந்தவர்கள் எத்தனைபேர் நாடகம் குறித்து பேசுகின்றனர் மக்களிடம்?
4. நாடகம் பார்ப்பதென்பது தனிமனித அளவில் மட்டுமல்லாமல், சமூக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பமாக நாடகம் பார்க்கச் செல்வதும், நண்பர்களூடன் செல்வதும் சகஜமாகப்போனதால், நாடகத்திற்கு வருமானம் அவ்வளவு பஞ்சமில்லை. புது நாடக முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இது குஜராத்தி நாடகங்களுக்கும் பொருந்தும்.

நாடக நடிகர்கள் சீரியலில் செல்வது இங்கும் உண்டு. குஜராத்தி நாடகங்களில் முக்கியமான நடிகை அபாரா மேத்தா ,பல ப்ரபலமான ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.ஆனால், அவர் குஜராத்தி நாடகமேடையை இன்னும் விட்டுவிடவில்லையே? தின்யார் கான்Tட்ட்ராக்டர், வர்ஷா உஸ்காங்கர்,ஷபானா ஆஸ்மி ,தமிழில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே... பலரைச் சொல்லலாம்.

தமிழ் மக்கள் நாடகம் பார்க்க வருவார்களானால், பொருளாதாரச் சிக்கல் இக் குழுக்களுக்குக் குறையும். போட்டியில் நல்ல நாடகங்களூம் காணக் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், மக்கள் பிற மாநிலங்களில் நாடகத்தை சமூகத்திலிருந்து விலக்கிவிடவில்லை. இந்த ஆதரவு இருக்குமானால் தமிழ்நாடகங்கள் மேலும் வளரும்.

The world will never starve for want of wonders; but only
for want of wonder. G.K.Chesterton

இந்த மேற்கோளைத் தமிழ் நாடகத்திற்குப் பொருத்தி எழுதினால்..
The Tamil world will never starve for want of Good plays ; but only
for want of play.
மக்களிடம் நல்ல நாடகத்திற்கான விருப்பம் வளரவேண்டும். Who will bell the cat and how?

Thursday, April 21, 2005

தமிழ் நாடகங்கள் (தொடர்ச்சி)

ஊக்கப்படுத்திய நண்பர்கள அனைவருக்கும் நன்றிகள். மக்களிடம் ரசனை குறைந்து விட்டது எனச்சொல்லவில்லை. எதுநாடகம்எதுதிரைக்கதையின்அரங்கச் செயலாக்கம்
என்பதில் உள்ள மனப்பிறழ்வே நமது நாடகங்களின் இந்நிலைக்குக்காரணம் எனவே சொல்லியிருக்கிறேன்.
ரசனை என்பது தனிமனித தளத்தைச் சேர்ந்தது.
பாய்ஸ் கம்பனியின் நாடக நடிகர்கள் திரையுலகில் எவ்வாறு பரிமளித்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அன்று திரையுலகு நாடக வசனங்களையும், காட்சியமைப்பையும் பெரிதும் உள்வாங்கியது. இன்று நாடகத்தில் நாம் திரையுலக சிரிப்புக் காட்சி அங்கங்களையும், வெள்ளித்திரையின் காட்சியமைப்பு தாக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். நாடகம், முப்பரிமாணத்தில் நடிக்கப்படும் சினிமா அல்ல என்பது நம் மக்கள் உணரவேண்டும். அதன் வீச்சு அலாதியானது.

கதகளிக்கும், யக்ஷகானத்திற்கும் கிடைக்கும் மரியாதையும் தனி அந்தஸ்தும் தமிழ்நாடக வடிவங்களுக்குக்கிடைப்பதில்லை. பெரும்பாலானோர்க்கு எது நமது மரபுக்கலை என்பதும் தெரியாது. மரபுக்கலைக்கும் நாடகத்ற்கும்தொடர்பு
இருப்பினும் இரண்டும் வேவேறு தளங்களைச் சேர்ந்தவை.

நாடகங்களின் தொய்விற்கு பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்குமென நான் நம்பவில்லை.நாடகக் குழுக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள, அனுமதிச்சீட்டின் விலையை நம்பியிருக்கின்றன.
சினிமா போல ஒரே நேரத்தில் பல இடங்களில் ஒரு நாடகக் குழு நடத்த முடியாது.எனவே அவற்றின் வருமானத்திற்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு எல்லை இருக்கிறது. டி வி டி கலாச்சாரம் நாடகத்தில் எடுபடாதது. நரைன் சொன்னது போல
ஒரு சீசன் முயற்சி செய்துபார்க்கலாம்.

மும்பையில் என் சி பி ஏ என்னும் அரங்கு, வருடம் தோறும் பன்னாட்டு நாடகங்களை செயலாக்கச் செய்கிறது. இதே போல ப்ருத்வி தியேட்டர் ( ப்ருத்வி ராஜ் கபூர் நினைவாக) பன்னாட்டு நாடக வாரம் கொண்டு வருகிறது மும்பையில், வருடம் தோறும். நம்நாட்டின் சிறுவர் நாடக முயற்சிகளும் இங்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலிருந்து பல குழுக்கள் இதனை நல்ல மேடையாக பயன்படுத்தியிருக்கின்றன. .இது போல ஒரு வலுவான அமைப்பு தமிழ் நாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

Tuesday, April 19, 2005

¾Á¢Æ¢ø ¿¡¼í¸û Tamil Theater

தமிழில் நாடகங்கள்

நவீன நாடங்கள் என்றாலே நம்மிடையே பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. அது என்னமோ அறிவு ஜீவிகளுக்காக ( அல்லது அவ்வாறு நடந்துகொள்பவர்களுக்காக), அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும் மக்களுக்காகவே ,அம்மக்களால் இயற்றப்படும் நாடகங்கள் என. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரிகிறது - அவை அப்படியில்லை.

நாடகமென்பது இப்போது திடீர் நகைச்சுவை வசனங்களும், மேடையில் திரைப்படக் கதைத் துணுக்குபோல ஒன்றை நடித்துக் காட்டும் காட்சியமைப்புகளுமாக மட்டுமே என நமது எண்ணம் சுருங்கிவிட்டது. இதில் திரைப்படத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று வெறுமே குற்றப்படுத்துவது மட்டும் போதாது. மக்களிடம் "எது நாடகம், எது திரைப்படம்" என்னும் பிரித்தறியும் ஆற்றல் குறைந்துவிட்டது. ஏதோ பார்த்தோம் வந்தோம் என்பது மட்டுமல்ல நாடகம்.
பார்ப்பவரின் பங்களிப்பு நாடகத்தின் இயல்பில் முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான நாடக நிகழ்வு, அவையினரின் பங்களிப்பில் பரிணமிக்கிறது என்கின்றனர் நாடக மேதைகள். தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் அவையினரின் பங்கு பார்ப்பதில் மட்டுமே. நாடகத்தை இவ்வாறு பார்க்க நினைப்பது தவறெனவே நினைக்கிறேன். இதுவே அடிப்படையில் தமிழ் நாடகத்தின் தொய்வுநிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

நவீன நாடகங்கள் நம்மை பன்னாட்டு சமுதாயத்தில் பிணைக்கின்றன. தமிழ் நாடகம் என்பதை விட தமிழில் நாடகம் என்பது மேலும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளம். தமிழில் நல்ல நாடகங்கள் இருக்கின்றன. ஆயின், நவீன நாடகத்தில், ப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்றவர்களின் நாடகப் பாங்குகள் நம்மில் வந்தடைவதை நாம் ஏன் அறியாமல் தள்ளுகிறோம்? "போப்பா. எவனுக்கு இந்த அளவு நேரமிருக்கு?" என்பது ரசனைக்குறைவு என்பதாக மட்டும் ஆகாது... ஒரு மனித வளர்ச்சியின் சீரழிவு எனவே கொள்ளவேண்டும்.

திரு. அண்ணாமலை அவர்கள்(பி.பி.சி சென்னை) தினமணியில் 25.3.2005 அன்று எழுதிய கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. இருவது வருடங்களாக ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை எவ்வாறு அவர்கள் அடைக்கலம் புகுந்த சுவிட்சர்லாந்து மக்கள் நாடகமெனும் ஊடகம் மூலம் அறிந்துகொள்கின்றனர் என்பதை விவரித்திருக்கிறார். இது ஒன்று போதும் "நாடகம் , பிற ஊடங்களைவிட எவ்வாறு மனிதன் ,மற்றொரு மனிதனைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்பதைக் காட்டுவதற்ற்கு.ஒரு interactive media ஆக இருப்பதால், நாடகம் மனிதனை மனித நேயத்தின் அருகிலேயே வைக்கிறது.
தினமணி கட்டுரையினைக்கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். எழுத்துரு தேவைப்படின்,தினமணி தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.dinamani.com/news.asp?ID=DNE20050325104518&lTitle=R%FBXVeLm&Title=Editorial+Page

Thursday, March 24, 2005

கடைவீதி- Kadaiveedhi ( poem)

கடைவீதி
--------

கோணலாக அழுந்திய
கற்கள் பாதையாக,
இரூபுறமும் கடைகள்
கூவிக்கூவி விற்பனை
இக்கடைவீதியில்.


விழாச்சந்தையில்லை
இக்கடைவீதி - நேற்றிருந்து
இன்றில்லாது போக...


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கூட்டம்
விற்பவனும் மாறுவான்
சிலபொழுதில்..

விற்பவனும் வாங்க,
வாங்குபவனும் ஏதோ
விற்கவே வாங்கும்
விபரீத வியாபரம்...

அழகுச் சாதனங்கள்,
அரிசி பருப்பு, தண்ணீர்
அண்ணன் தம்பி, அம்மா அப்பாவென
என எதை விட்டுவைத்தது
இக்கடைவீதி?

விற்பவனும் போக
வாங்குபவனும் போக
அன்றைய குப்பைகளும் வாரிப் போக..

நாளைய வியாபாரம்
எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது
கடைவீதி.

சுவர்க்கோழி சப்தங்களில்
எலிகளையும்,
திருட்டுப்பூனைகளையும்
சகித்தபடி,
நடுஇரவில்
படுசுத்தமாக.

Saturday, March 19, 2005

பரிசு -ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருப்பது தமிழர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய செய்தி. "அகிலனுக்குப் பிறகு யாருமே தகுதியானவர்கள் இல்லையா?" எனப் பொருமிக்கொண்டிருப்பவர்கள் சற்று ஆசுவாசப்படலாம். காலம் தாழ்ந்த மரியாதைதான். ±É¢Ûõ better late than never.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, தூத்துக்குடி பொது நூலகத்தில் கேட்ட புத்தகம் இல்லாமல், வேண்டாவெறுப்பாகப் புரட்டிய ஜெயகாந்தனின் "யுகசந்தி" எனது கண்ணோட்டத்தையே மாற்றியது. எனது கணிப்பில் புரட்சியான சிறுகதைகளில் தமிழைத்திசை திருப்பியதில் ஜெயகாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவரது பல கதைகள் project madurai-ல் படிக்கக் கிடைக்கின்றன. project maduraiக்கு இந்த இணைய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது... புரட்சி எழுத்துக்களுக்காக நாம் என்றென்றும் ஜெயகாந்தனுக்குக் கடமைப்பட்டிருப்பதைபோலவே.

Eccha mikuthikal -எச்ச மிகுதிகள்

எச்ச மிகுதிகள்
___________

என்றும்போலவே
அன்றும்,
கடமைக் கனலில்
கனன்று சிவந்தபடி
மாலைக் கங்கில்
எரிந்ததைத் தேடியலுத்து
இருளில் புகைகிறேன்.

வினையெச்சத்துடன்
பெயரும் பிற எச்சங்களும் கூட்டி
நாளை விரிக்க
சுருட்டிப்பந்தாக்கி
மிடறு விழுங்கித் திணறுகிறேன்..
நினைவில் சேர்த்த
கனத்தில்
காற்றில் அழுந்தியபடி.


தோட்டத்து மூலையில்
மூடச் செடிகளோவெனில்
மூடிய மலர்களில் நம்பிக்கையைச்
சேர்த்துவைத்து வைக்கின்றன
வெறுமே நாளை விரியுமென அறிந்திருந்தும்.

பரிணாமத்தில் திரும்புதல்
சாத்தியமிருக்கிறதா?
மலர்கள் குலுங்கும்
அம்மல்லிகைக் கொடியாகாவிட்டாலும்
நாய் கூட முகராத
பேர்தெரியாத அப்புதராக மாறினாலும்
போதும்.

Wednesday, March 16, 2005

Kaisikam -2 (concluding) கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை

கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை
-------------------------------------------------------

பக்திஇயக்கம் சாதியமைப்பு உள்ள சமூகச் சூழலில், இறைவனைத் துதிக்க ஜாதியில்லை என்ற புரட்சிக் கொள்கையை முக்கியமாக முன்வைத்தது. பக்தி இயக்கத்திற்கு முன்பும் இது காணப்பட்டது.ஆழ்வார்களும், நாயன்மார்களும்,ஆச்சார்யார்களும் இதனைத் தங்கள் வாழ்விலும், இயற்றிய நூல்களிலும் பல இடங்களில் உணர்த்தியிருக்கிறார்கள்.

கைசிகபுராணக் கதையமைப்பு இதனைத் தன் கருவில் கொண்டிருக்கிறது. கைசிகபுராணத்தைக் கொண்டுள்ள வராஹ புராணமும் இதனை மற்ற இடங்களிலும் தெளிவாக்கியுள்ளது.
பலவகையான பக்தி நிலைகளை விவரித்தபின் ,
"இத்தகைய பக்தி எவனொருவன் அமையப்பெற்றுள்ளானோ, அவன் எக்குலத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், அவனோடு பிற பக்தர்கள் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்" என்கிறது வராஹ புராணம்.

இதில் எவனொருவன் என்னும் ஒற்றை விளி, ஜாதியற்று பொதுநிலையில் காணப்படுவதை கவனிக்கவும்.

"ஒரு வைணவ பக்தன், சக வைணவபக்தனின் ஜாதியைச் சோதித்தால் அவன் தன் தாயின் கருப்பையைச் சந்தேகித்த பாவத்தை செய்தவன் " என்கிறது ஆச்சார்ய ஹ்ருதயம்."மாத்ரு யோனி பரீக்க்ஷா".(நன்றி: திரு. பி.ஏ. கிருஷ்ணன்- புலி நகக் கொன்றை ஆசிரியர்)

இவ்வாறே பக்தரிடம் ஜாதி வேறுபாடில்லை என்பதை கைசிகபுராணம், பிற முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் விரதங்களுக்கு நிகராக, பிறப்பினால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பக்தனின் ஏகாதசி விரதத்தை சிறப்பாகக் காட்டுகிறது.
வைணவ பக்தர்களில் முக்கியமானவர்களுக்கு நம் என்ற அடைமொழி மிகுந்த மரியாதையுடன் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார், நம்பிள்ளை, நஞ்சீயர்,நம்பெருமாள், நம்பிராட்டி என்பதோடு நம்பாடுவான் என்று பாணர் குலப் பக்தனின் பெயர் கைசிகபுராணத்தில் காணப்படுவதால், இப் பக்தனின் சிறப்பு பன்மடங்காகிறது.

,இறைவனைப் பாடித்துதித்தல் என்பது பக்தியின் முக்கிய வெளிப்பாடு என்பதையும் கைசிகம் காட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் பாடித்துதிப்பதற்கு மிகமுக்கியத்துவம் இருப்பதைத் தெளிவாக அறியலாம்.
"வாயினற்பாடி மனத்தினாற் சிந்தித்து.."
"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி.."
"உன்னைப்பாடிப்பறைகொண்டு நாம் பெற்ற சன்மானம்" போன்ற வரிகள் இதனை விளக்குகின்றன.
மாணிக்கவாசகரின் திருவாசகமும் "சோதித்திறம்பாடி" இறைவனைத் துதிக்கத் தூண்டுகின்றது.

புராணக்கதையின் வழக்கு இப்படியென்றால், நாடகம் இன்னும் சிறப்பாக தன் செய்தியை வலுவுடன் தெரிவிக்கின்றது.
பேராசிரியர் இராமானுஜம், கீழ்க்கண்டவற்றை இந்நாடகத்தின் சிறப்பென்கிறார்.
1. நாடகக் கலைஞர்கள் , பிரம்மராட்சசன் தவிர அனைவரும் பெண்கள். பொதுவாக , மேடையில் ஆண்கள் பெண்வேடமணிந்து நடிக்கும் வழக்கிற்கு மாறாக பெண்கள் ஆண்வேடமணிந்து நடிக்கும் புதுமை இந்நாடகத்தில் நூற்றாண்டுகளாக வழங்கிவருகிறது.
2.இப்பெண்கள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள், ஏகாதசி விரதமிருந்தே, நாடகத்தில் பங்குகொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
3.விரதமிருக்கும் உயர்குலத்தோர் தரையில் அமர்ந்திருக்க, இந்நாடகம் மேடையில் நடிக்கப்பெறுகிறது.

நாடகம் என்ற ஊடகம் ,சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகத்திலிருந்து வேறுபடுவதில் ஒரு முக்கிய காரணம் நாடகத்தில் பார்வையாளர்களின் பங்கு. ஒவ்வொரு நாடகமும், வேறு வேறு சமயங்களில், தளத்தில் செயலாக்கப்படும்போது, அதன் வீச்சு, பார்வையாளர்களின் பங்கு கொண்டு மாறுபடும். It is a cocreative activity.

கைசிகநாடகத்தில், கிழவராக வரும் நம்பிப் பெருமான், தன் பங்கு முடிந்ததும் "நாமும் நம் இடம் செல்வோம்" எனக்கூறி மேடையிலிருந்து இறங்கிச் செல்லும் போது, இரு புறமும் அமர்ந்திருக்கும் மக்கள் அவரை வணங்குவதும், நாடகம் முடிந்ததும், நடிகர்கள் வேடம் கலைக்குமுன், பக்தர்கள் அவர்களை வணங்கும் வழக்கம் இன்றும் காணலாம். இப்படியொரு பார்வையாளர்களின் பங்களிப்பை ஆழமாகக் கொண்டுள்ளது கைசிக நாடகம்.

இந்நாடகத்தில் பரதக்கலை, கூடியாட்டம் மற்றும் யக்ஷகானம் போன்றவற்றின் தாக்கம் தெரிகிறது. எனினும், தனது புரட்சியான வடிவமைப்பை சிதைக்காமல், பிற ஒழுங்குகளையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது இதன் சிறப்பு.

பொதுவாக புரட்சியான கருத்தை முதலில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப சடங்குகள் (rituals) அமைவது வழக்கம். கைசிகநாடகத்தில், முதலில் நாடகப்பாங்கு அமையப்பெற்று, அதனுள் கைசிகம் தன் கரு சிதையாமல் உள்வாங்கப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர்.இராமானுஜம்.
இதனை நோக்கும்போது, இந்நாடகப்பாங்கு மிகத் தெளிவாகச் சிந்திக்கப்பட்டு, அதனுள் கதை சிதையாமல் ஏற்கப்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

சமூகப் புரட்சியென்பதை , மதத்தின் வாயிலாக, மதக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அனுட்டானச் சைகைகள் (rites) மற்றும் சடங்குகள் மூலமாகவும் (rituals) மெல்லப் பரப்பி மக்களை அடிமனத்திலிருந்து உணரவைக்க இயலும்.புரட்சியென்பது முரட்டுத்தனமான எதிர்ப்பு மட்டுமே கொண்டு வருவதல்ல. சமூகத்தில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட புரையோடிப்போன கொள்கைகளை, அச்சமூகம் நம்பும் பிற கொள்கைகள் , நம்பிக்கைகள் கொண்டும் சீர்திருத்த இயலும். ஆயின், இச்சீர்திருத்த எண்ணங்கள் மீண்டும் சடங்குகளாக மட்டுமே உள்வாங்கப் பெறின், அதன் மூலங்கள் மீண்டும், அனுட்டானங்களின் சாம்பல் மண்டி, உள்மட்டும் கனன்றுகொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது.

கைசிகநாடகம் மீண்டும் புத்தொளி பெற்றதில், இவ்வமைதியான புரட்சி மீண்டும் காண்பவர் மனத்தில் எழும் வாய்ப்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நாடகம் காணவிரும்புவோர், வைணவத் தலங்களைத் தொடர்பு கொண்டால், கைசிகஏகாதசி நாளறிந்து, திருக்குறுங்குடி சேரலாம். நெல்லையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

Saturday, March 12, 2005

Kaiskam -1

கைசிகம் - ஒரு அறிமுகம்
(இக் கட்டுரையின் கருத்துகள் பேராசிரியர் சே.ராமானுஜம் அவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும், "சே.ராமானுஜம் -நாடகக் கட்டுரைகள்" தொகுப்பு- சி. அண்ணாமலை ,காவ்யா வெளியீடு புத்தகத்தையும், அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் பக்கங்களின் எண்களில் தரப்பட்டிருக்கின்றன )
நமது முன்னோர்கள் தங்களது செய்திகள் மக்களைக் காலம் காலமாகச் சென்றடைய பல உத்திகளைப் பயன்படுத்தினர்.
அனுட்டானச் சைகைகள் (rites), அவற்றைச் செய்யும் வழிமுறைகள் கொண்ட சடங்குகள்( rituals),
நிகழ்வுச்செயல்களை(events)ப் படம்பிடிக்கும் மீள்நிகழ்வுகள்(enactment), நிகழ்வுச் செயலாக்கங்கள் (performance) என இவற்றை வரையறுக்கலாம்.
இவற்றால் , தங்களது மரபுச் சிந்தனைகளை மட்டுமே, சந்ததிகளுக்குச் செய்தியாகத் தந்தனர் என்ற கோட்பாடு , சற்றே மீள்பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று ஒரு நாடகம் சிந்திக்க வைக்கிறது.
அது கைசிகபுராண நாடகம்.

கைசிகபுராணக் கதை வராஹ புராணத்தில் காணப்படுவதிலிருந்து அதன் தொன்மையை உணரலாம். ( வராஹ புராணம் -நாற்பத்தியெட்டாம் அத்தியாயம்). (பக்: 341)
வராஹ புராணத்தின் வியாக்கியானம் பராசரபட்டரால் ( கி.பி 12ம் நூற்றாண்டு) மணிப்ப்ரவாள நடையில் எழுதப்பட்டது எனக்காணக்கிடைக்கிறது.(பக் 347)

பெருமாளை கைசிகப்பண்கொண்டு பாடிய பக்தன் ஒருவனின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது இப்புராணக்கதை. கைசிகப்பண் என்பது தமிழ்ப்பண் -பைரவி ராகம் எனலாம்..
கைசிகபுராணம் , கைசிக அமாவாசையின் மறுநாள் -துவாதசியன்று வைணவத் திருத்தலங்களில் மணிப்ப்ரவாள நடையில் வாசிக்கப்பட்டு போற்றப்படுகிறது. பக் 341
முக்கியமாக, நிகழ்வுச் செயலாக்கமாக ( performance), நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக செயலாக்கப்பட்டு வந்த இந்நாடகம் காலத்தின் மாற்றத்தால் பொலிவிழந்து, சடங்காக ஆக்கப்பட்டு, "கைசிகம் கண்டால் புண்ணியம் உண்டு' என்ற எண்ணத்தால் மட்டுமே உந்தப்பட்ட சில பக்தர்களால் மட்டுமே காணப்பட்டு வந்தது அண்மையில் சில ஆண்டுகள் முன்பு வரை.

திருமதி. அனிதா ரத்தினம் (T.V.S group) அவர்களின் முயற்சி மற்றும் கொடையாலும், பேராசிரியர். இராமானுஜம் அவர்களின் முயற்சியாலும், இந்நாடகம் புதுப்பிக்கப்பட்டு, புது வாழ்வு பெற்று பொலிவுடன் மீண்டும் அரங்கேறியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
இந்நாடகம் ஆண்டுதோறும் திருக்குறுங்குடி ஊரில் (நெல்லைமாவட்டம் நாங்குநேரியருகில் ) கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் ஏகாதசிதினத்தன்று சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

கைசிக புராணத்தின் கதைச் சுருக்கம்:
நம்பாடுவான் என்ற , நால்வகை வருணத்தாரினும் தாழ்த்தப்பட்ட குடிப்பிறந்த வைணவ பக்தன், தனது யாழினால் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாளை தினமும் பாடி வணங்கிவந்தான். ஒரு கார்த்திகை மாதத்து ஏகாதசியன்று இரவில் பெருமானைப் பாடிவணங்கச் சென்ற போது, அவனை ஒர் பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு கொன்று தின்னப்போவதாகச் சொன்னது. உயிர்போவது குறித்து வருந்தாத நம்பாடுவான், ஓர் ஏகாதசி இரவில் பெருமானைப்பாடும் வாய்ப்பு போகிறதே என வருந்தி, " நான் வணங்கி வந்தபின் என்னைப் புசித்துக்கொள்" எனப் பிரம்மராட்சசனிடம் கூறினான்.முதலில் நம்பாத பிரம்மராட்சசன், பின் இரக்கம் கொண்டு அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது. கோவிலில் பண்பாடி வணங்கித் திரும்பிவந்த நம்பாடுவான் தன்னைப்புசித்துக்கொள்ளும்படி பிரம்மராட்சசனிடம் சொன்ன சொல் தவறாது திரும்பிவந்தான். இதனால் மனம்மாறிய ப்ரம்மராட்சசன் "உன்னைக்கொல்ல மனம் வரவில்லை. இன்று நீ இறைமுன் பாடியதின் புண்ணியத்தைக் கொடு " என இறைஞ்ச, நம்பாடுவான் மறுத்தான். "நீ கைசிகப் பண் கொண்டுபாடியதின் புண்ணியத்தையாவது கொடு" என ப்ரம்மராட்சசன் மன்றாட, இறுதியில் நம்பாடுவான்"தந்தேன்" எனச் சொல்ல, பிரம்மராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த ஒர் அந்தணன் ,சாபவிமோசனமடைந்து, நம்பாடுவானை வணங்கி, இறைவனின் திருவடிகளை அடைந்தான்

இக்கதையில், நம்பாடுவான் கோவிலிலிருந்து திரும்பி ப்ரம்மராட்சசனிடம் வர முயலும்போது, திருக்குறுங்குடிப் பெருமாளான நம்பி , ஒர் கிழவன் வடிவம் கொண்டு " நீ தப்பிச்செல்லலாம்" என நம்பாடுவானிடம் ஆசைகாட்டிச் சோதிக்க , "வைணவ பக்தன் சொன்ன சொல் தவறான்" எனச்சொல்லி நம்பாடுவான் ப்ரம்மராட்சசனிடம் செல்ல உறுதியாயிருக்கிறான் எனவும் வருகிறது. இது நாடகத்தில் காணப்பெறுகிறது.

இக்கதையின் மூலம் திருக்குறுங்குடி தலபுராணம் பக் XXVI -XXVII - என சே.ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் பக் 346 ல் காணக்கிடைக்கிறது

இந்நம்பாடுவானைக்குறித்து வைணவப் பெரு நூலான நாலாயிரத்திவ்யப் ப்ரபந்தத்தில் காணப்பெறவில்லை. ஆயின் நம்பிள்ளை ஸ்வாமியின் ஈடுரையிலும், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திலும் , கைசிகம் எடுத்துக்காட்டப்படுகிறது.
இவ்வாறே புகழேந்திப்ப்புலவரின் பாடலிலும், பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பாடலிலும் நம்பாடுவான்பற்றி விவரங்கள் காணக்கிடைக்கின்றன ( பக் 346-7)

இக்கதையின் புரட்சிகரமான சமூகச்சிந்தனை வெளிப்பாடு நாடகத்தில் எவ்வாறு காணக்கிடைக்கிறது என்பதைப் பின் காண்போம்.

Saturday, March 05, 2005

NaatuppuRappaadalkaL-2

சில நாட்கள் முன்பு நாட்டுப்புறப்பாடல்களின் முன்னோடியென அமரர். திரு. அன்னகாமு அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1950-60களில் நடைபெற்ற அவரது நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டு முயற்சிகள், அதற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றி விவரங்கள் தேடும் முயற்சியிலிருந்தேன். அதிர்ஷ்டம் எனச் சொல்லவேண்டும். பேராசிரியர் இராமானுஜம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல விவரங்கள் கிடைத்தன.

பேராசிரியர் இராமானுஜம் , காந்திகிராம ஆசிரியர் கல்லூரியில் அன்னகாமு அவர்களின் மாணவர். காந்திகிராமத்தில் வாழ்ந்தவர்.அன்னகாமு அவர்களுடன் கிராமங்களுக்குச் சென்று, பாடல்களை எழுதிப் பதிவு செய்த மாணவர்களில் ஒருவர். அவர் குறிப்பிட்ட சில செய்திகள் இவை.

அன்னகாமு அவர்கள் 50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.மதுரைமாவட்ட கிராமங்களில் நேரில் சென்று, பாடல்களைத் திரட்டினார். குறிப்பாக ஆலம்பட்டி,முருகன் பட்டி, கன்னிவாடி போன்ற கிராமங்கள் ( காந்திகிராமத்தைச் சுற்றிய கிராமங்கள் இவை).
பாடல்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் ஏற்பட்டன.
1. நாட்டுப்புறப்பாடல்கள் , தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. பாடும் இடம், காலம், பாடுபவரின் உணர்வு அனைத்தும் கலந்த புலப்பாடு. அவ்வாறு பாடுபவர்களுக்கு பிறர் நகலெடுக்கப் பாடுவதில் தயக்கம் வெட்கம் இருந்தது.அதனால், பாடல்களைப் பதிவு செய்வதற்கு, அவர்கள் அத்தயக்கத்தினை மீறி வந்து பாடுவதற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.. அவர்கள் மொழியில் பேசி, நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
2. ஒலிப்பதிவு இல்லாததாலும், மொழியின் மாறுபாடுகளாலும், வரிகளை ஒழுங்குபடுத்துவதில் உண்டான சிரமங்கள் பல. அன்னகாமு அவர்கள், கிராம வழக்குப்படி வழங்கிய மொழிச்சொற்களைச் சிதைக்காமல் அப்படியே கையாளுவதில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதனால், நாலு மாணவர்களோடு சேர்ந்து தானும் கிராம மக்கள் பாடும்போது எழுதியெடுப்பார். அனைவரின் எழுத்துப்படிவங்களையும் ஒப்பிட்டு, அன்னகாமு அவர்கள் எந்தச் சொல் எந்த இடத்தில் வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவார்.
3.எழுதியபின், அதன் மெட்டுகளை வரிசைப்படுத்துவதில் முதலில் சிரமமிருந்தது.
இதில் மறைந்த திருமதி. சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள்(நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் அவர்களின் அண்ணி) பெரும்பங்கு ஆற்றினார். கிராமங்களில் பாடல்களைப் பாடும்போது , அருகிலிருந்து கேட்டு, மெட்டுகளை அப்படியே உள்வாங்கி, பாடல்களை அந்த இசைவடிவு மாறாமல் ஒருங்கமைத்துக் கொடுத்தார். அவரது அபார இசையறிவால், பாடல்கள் மெட்டு, சிதையாமல் பொலிவுடன் பதிவு செய்யப்பட்டன.

சில நாட்டுப்புறப்பாடல்களின் திரட்டுகளில், வரிகள் சரியாக அமையாதிருந்தால், திரட்டியவரே, சில வரிகளை தானே எழுதி அல்லது மாற்றியமைத்து பாடல்களைப் பதிவு செய்திருந்த காலமது. அக்காலக்கட்டத்தில், வார்த்தைகள் சிதைந்திருப்பினும், பாடல் வழக்கிலிருந்த வார்த்தைகளையே அன்னகாமு அவர்கள் பதிவு செய்தார். அவரது திரட்டுகள் உண்மையான பாடல்களைக்கொண்டிருந்தன.
திரைப்படங்களிலும் நாட்டுப்புறப்பாடல்கள் வந்திருந்தாலும், பெருமளவில் திரைக்கேற்ப மாற்றப்பட்டிருந்தன. சில திரைப்படப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல் பண்ணிலும், மொழியமைப்பிலும், பாடலாசிரியர்களால் எழுதப்பட்டிருந்தன.இவ்வழக்கம் 70 களிலும் தொடர்ந்தது.

அன்னகாமு அவர்களது வாழ்க்கைப்பின்னணி குறித்து மேற்கொண்டு தகவல் கிடைக்கப்பெறும்போது மேலும காண்போம்

Saturday, February 26, 2005

Pulinagak Konrai- my observations 6 (Concluding)

கதாபாத்திரம்:

கண்ணன் :
இப்பாத்திரம் கண்ணாடியெனச் சொல்லலாம். கதையின் ஓட்டத்தில், கண்ணனின் பாத்திரத்தின் வழியே , அவரது சிந்தனையின் வழியே , பல எண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. நம்பியின் ஒன்றுவிட்ட தம்பியாக வரும் கண்ணன், நம்பியின் கருத்துக்களால் ஆட்கொள்ளப்படுகிறார். அவரது அரசியல் கொள்கைகள், சமூகச் சிந்தனைகள் நம்பி, கோபாலபிள்ளை ,ராஜாராமன் போன்றோரின் பேச்சுக்களால் தாக்கம் பெறுகின்றன. மாறும் கொள்கைகள் கொண்டிருப்பதை ஒளிவில்லாமல் காட்டியிருப்பது, கண்ணனின் பாத்திரத்தை கண்ணாடியாகவே காணச்செய்கிறது.

மக்களின் போலித்தனத்தையும், தனிமனித மனமீறல்களையும் கண்ணனின் பாத்திர அமைப்பில் காட்டியிருக்கிறார்.
"கண்ணனுக்கு வெட்கமாக இருந்தது. மற்றவர்கள் தன்னைவிட மோசம் என்பதை அறியும்வரை.
கண்ணனின் சிந்தனைகள் என நடுவே ஆசிரியர் பேசியிருப்பது நன்று. எல்லாரும் தங்களது படிப்பின் ஆழத்தை மேற்கோள் காட்டுவதின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள். என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே, பலமணிநேரம் பேசுவார்கள்"

உமாவைக் காதலிக்கும் கண்ணன், பேருந்தில் போகும்போது, தான் படிக்கும் புத்தகத்தைப் பார்த்துப் பெண்களைக் கவரமுடியுமா எனப்பார்ப்பதான சிறிய சபலம்...
"உமா இதுபோல் குட்டித் துரோகங்கள் செய்வாளா?அவளது இருத்தலின் மையப்புள்ளியே நான் என ஒருமுறை எழுதியிருந்தாள். ஓரங்கள் எப்படியெனத் தெரியவில்லை. என்னுடையவை போல அவளுடையவையும் கறவப்படுகின்றனவா?" பக் 64

ராஜாராமன் அமெரிக்காவின் கலாச்சாரத்தைப் பற்றிப்பேசுவதால் கவரப்பட்ட கண்ணன், அவரோடு குழுவில் கலந்துகொள்கிறார்.
"அதிகம் தொந்தரவு செய்யாத குழு அது. கதீட்ரல் சாலையில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முனால் - அநேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் மூடியிருக்கும்போது- தொண்டை கிழியக் கத்திவிட்டு அருகில் இருக்கும் ட்ட்ரைவ் இன் உணவகத்துக்கு காபி குடிக்கப் போவார்கள்" பக் 211
ராஜாராமன் மைதிலியுடன் அமெரிக்காவில் குடியேறுகிறார்.

"ரெண்டு பேரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைஞ்சுட்டான்னு சொல்லு " என்கிறார் நம்பி கிண்டலாக. பக் 211

இதனால் கண்ணனின் பாத்திரம் கறைபடியவில்லை. உள்ளிருக்கும் கறைகளையும், பிற வழுகல் நிலங்களையும் காட்டுகிறது- தன்னில் ஒளி ஊடுரவ அனுமதித்து.

மது, ஆண்டாள், பட்சி ஐயங்கார், ரோஸா எனப் பலபாத்திரங்கள் இப்புலிநகக்கொன்றைத் தோட்டத்தில் அடர்ந்திருப்பினும், கவர்ந்த சிலபாத்திரங்களைப் பற்றி மட்டுமே என் எண்ணங்களை எழுதியிருக்கிறேன். பல சிந்தனை ஓட்டங்களை வாசகர்கள் தங்கள் வாசிப்பில் மேலும் சந்திக்கக் கூடும்.

நிதானமாகப் பலமுறை விட்டுவிட்டுப் படிக்கவேண்டிய புத்தகம் இது.
நல்ல வாசிப்பு அனுபவத்தை அளித்த பி.ஏ.கிருஷ்ணன் அவர்களூக்கு என் நன்றிகள்.

Friday, February 25, 2005

Pulinagak Konrai- my observations 5

பாத்திரப் படைப்பு

நம்பி : மார்க்ஸீயவாதத்தில் நிஜமாக வாழ்கின்ற மருத்துவர் . கம்யூனிசம் குறித்தான அவரது சிந்தனை இழைகள் இந்திய யதார்த்தமாக இருப்பினும், கண்மூடித்தனமான கம்யுனிசப் புரட்சிக்காற்றுக்கு அவை மிக மிக மென்மையானவை. அலட்சியப்படுத்தப்படுகின்றன. கலப்பு மணம் எனபதை அலட்டலாக, புரட்சியாகக் காட்டாமல், தனது வாழ்வின் இயல்பான மாற்றமாகவே ஆக்கிக்கொள்கிறார். ரோஸா என்ற சக மருத்துவரை(தன்னிலும் வயது முதிர்ந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்) மணந்துகொள்வதும் , கிராமங்களில் இலவசமாக மருத்துவ உதவிசெய்வதும், தனது கொள்கைகளின் காரணமாக என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், தன் மனதின்படி , சிந்தனையின் ஆழங்களில் , தானாகவே நம்பி எடுக்கும் முடிவுகள்.
நம்பியின் மார்க்சீயவாதம் கண்மூடித்தனமானதன்று. தவறாக எழுதப்பட்ட கம்யூனிச வாதங்களைத் தூக்கிஎறிகிறார்.

"சம்பாரண் விவசாயிகளின் போராட்டகாலத்திலிருந்தே, பெரு முதலாளிகள் மற்றும் பெருநிலப்பிரபுக்களின் ப்ரதிநிதியான காங்கிரஸ் தலைமை அகிம்சை, ராட்டை போன்றவற்றால் தேசீய இயக்கத்தை , ஏகாதிபத்தியத்திற்கும்.... இயந்ததாக அமைய முயற்சி செய்தது" இவ்வளவு வருஷத்திற்கு அப்புறமும் , காந்தியப்பற்றி இதுதான் இவங்களோட மதிப்பீடு-ன்னா இவங்க சங்காத்தமே வேண்டாம்-னு தோணுது" (பக் 282-83)
இந்த வார்த்தைகளைப்ப் பேசுவது, கம்யூனிசப் பாதையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பி.

தனது கம்யூனிசக் கொள்கைகள் எவ்வாறு இந்திய இயல்பிற்கு ஒத்துவரும் எனத் தெளிவாக இருக்கிறார். முக்கியமாக முகுந்தன் என்ற நக்ஸல் ஆதரவாளருக்கும் , நம்பிக்கும் ஏற்படும் வாக்குவாதம். (பக் 321-323)



கம்யூனிஸ ஆதரவாளர்கள் என்றாலே, மதத்தை எதிர்க்கவேண்டுமென நம்பி நினைக்கவில்லை. மதம் மக்களுக்குக் கொடுக்கும் ஒரு நல்ல சக்தி - நம்பிக்கை. அது எல்லைகளுக்கு அப்பால் போய், மூடநம்பிக்கையாகும்போது விபரீதமாகிறது. அதுவே , சரியாக அணுகப்பட்டால் , வாழ்வினை சமாளிக்கத் தன்னம்பிக்கையையும் அளிக்கமுடியும். அளித்திருக்கிறது பல நூற்றாண்டுகளாக. மதத்தில் பல குறைகள் இருப்பினும் இது ஒன்றிற்காகவே அதன் இருத்தலை நியாயப்படுத்தமுடிகிறது. இதுதான் எதிர்காலத்தில் அதன் raison de etre ஆக இருக்க முடியும்- மதத்தின் பிற வெளிப்பாடுகள் சிதைபட்டாலும்
ஒரு மனிதனிடமிருந்து அவனது மதநம்பிக்கையென்னும் ஒரு கோட்டையைத் தகர்த்துவிடுவதற்கு சமூக அநியாங்கள், லாஜிக் கொண்டு நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் போன்றவற்றை கைக்கொள்ளலாம். ஆயின், அவ்வாறு நம்பிக்கை நீக்கப்பட்ட மனிதன், காப்பின்றி நிற்கிறான். அவன் காலபோக்கில் சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் என்னும் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வது எங்ஙனம்?
மனிதன் கூடிவாழும் இயல்பினன். உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் பெருமளவில் கட்டுப்பட்டவன். எந்த தாக்குதல்களுக்கும் அவன் இந்த இரு சக்திகளின் உதவியை நாடுகிறான். இதில் தாக்கப்பட்ட உணர்வுகள் நம்பிக்கையில் அடைக்கலம் புகுகின்றன.. உணர்வுகள் தாக்கப்பட்ட சிந்தனைகள் கனன்று , மறுபடி தாக்கப்படுகையில், தானும் சேர்ந்து தளர்க்கும். இந்த விஷச் சுழற்றியில் (vicious circle) சிக்கித் திணறும் மனிதன் மீண்டும் நம்பிக்கையின் போதையை நாடுகிறான். அந்நேரம் தன்னம்பிக்கை கிட்டுமானால் பிழைத்தான். இல்லையேல், மூடப்பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதனிலும் கீழிறங்குகிறான், சமுகத்தின் முன்னே கனமான வீரமெனும் அங்கியணிந்து, உள்ளே நடுங்கி, இரட்டை வாழ்வு நடத்தியபடி.

எனவே, கம்யூனிசப் பாதைகள் கொள்ளவேண்டிய தார்மீகப் பொறுப்பு மனிதனை, வீண் நம்பிக்கையிலிருந்து, கம்யூனிச நம்பிக்கைக்கு தானே மாறச் செய்யத் தூண்டுவது, அதேநேரம், அவன் காலம்காலமாகக் கைக்கொண்டிருந்த நல்மத நம்பிக்கையில் கைவைக்காதபடி..

இதனை நம்பி சுருக்கமாகக் கூறுகிறார் - முகுந்தனுடனான வாக்குவாதத்தில்.
நாம(கம்யூனிசவாதிகள்), மக்களின் கலாச்சார, ஆன்மீகத் தவிப்புகளைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளலை.... நாம இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரத்தின் பின்னே போறவங்க என்ற எண்ணத்தைப் பரப்பிண்டு இருக்கோம். அது அவங்களுக்கு பல நன்மைகளை உண்மையிலேயே கொடுத்தாலும்...(பக் 320-321)

" கம்யூனிச மொழியே தனி மொழியா இருக்கு. நாம மக்களை மாறணும்னு சொல்லறோம். எப்படி மாறணும்னு சொல்லறது கிடையாது. ....
இந்த வழியெல்லாம் ( வழிபாடுகள்) குப்பைக்கூளம். ..ஒத்துக்கறேன்.ஆனா நம்பறவனுக்கு நாத்தம் பெரிசில்லை. நாம சொல்லறோம். எங்க வழில வா. நல்லதுதான் ஆனா அவன் வழியை அடைச்சுட்டு இதுல வா-ன்னா அவன் நம்பபோறதில்லை. நாம ஏன் அவனோட அந்த வழில கொஞ்சதூரம் போகக்கூடாது. குப்பையள்ளற வேலையைச் செய்யக்கூடாது? கடைசில நாம திசைதிரும்பி, இப்போ எங்ககூட வாங்க-ன்னு சொன்னா, அவன் நம்மவழியில வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு." (பக் 321)
"நான் மதத்தை மனிதகுலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த உபயோகப்படுத்தலாங்கறதை நிச்சயம் நம்பறேன்.அம்புலிமாமா கதைகள், மக்களுக்கு, அதுவும் மாற்றத்தின் விளிம்பில் இருக்கிற மக்களுக்கு, நிச்சயம் தேவை." (பக் 322).
"மதத்தின் மேல நமக்கு இருக்கிற மூடத்தனமான வெறுப்பும் , அதன் நல்ல அம்சங்களைக் கண்டுக்காம விடுவதும்தான் நம்மை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கு" பக்க் 323


இத்தனைத் தெளிவாக இருக்கும் நம்பி, தனது மரணத்தில் , கடிதம் மூலம் அவர் தனது வலிகளினூடே, தான் நடந்து வந்த பாதை தவறாகத் தெரிவதாகக் காண்பித்திருப்ப்பது யதார்த்தமாக இருக்கலாம். அது, நம்மாழ்வாரின் தயக்கப் புரட்சியாளரின் பாத்திரத்தையும் உறுதிப்படுத்தியிர்க்கலாம். ஆயின், நம்பியென்ற மிக அருமையான பாத்திரம் வீணே, கதைக்காக இறுதியில் வலுவிழக்கிறது எனப்படுகிறது.

Wednesday, February 23, 2005

BIG THANKS!

சகோதரி ஜெயந்தி சங்கர் (சிங்கை) அவர்களுக்கு நன்றி. ஏனோதானோவெனக் கிடந்த இந்த வலைப்பூவின் வரிகளை உரிமையுடன் சீரமைத்துக் கொடுத்து உதவியதற்கு.

Tuesday, February 22, 2005

NaatuppuRappaadalkaL

நாட்டுப்புறப்பாடல்களுக்கெனத் தனி இடமுண்டு எந்த இலக்கியத்திலும். நமது நாட்டுப்புறப்பாடல்களின் எளிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும்பாங்கு, பொருட்செறிவு குறித்து எவ்வளவு எழுதினாலும் குறைவாகவே இருக்கும்.

பிற மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு ஆராயப்பட்டு பதிவு செய்யப்பட்டு , அம்முயற்சிகளின் முன்னோடிகளுக்கு மதிப்பும் கொடுக்கப் படுகிறது. இங்கு தான் நமது மொழி வளர்ச்சிக் கொள்கைகள் பிறழ்கின்றன.

1940-50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் திரு.அன்னகாமு அவர்கள். தென் தமிழ் நாட்டில்(குறிப்பாக மதுரை மாவட்டம்) கிராமம் கிராமமாகச் சொன்று இப் பாடல்களை மிகச் சிரமத்துடன் திரட்டியவர். ஒலிப்பதிவு வசதிகள், போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அக்காலக்கட்டத்தில் இப்பணி எளிதல்ல.இப் பாடல்களைத் திரட்டி, பதிவு செய்து புத்தகமாகவும் வெளியிட்டார். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்"எனப் பெயரிட்ட இப்புத்தகம் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தால் வெளியிடப் பட்டது 1970 களில் இறுதிப் பதிவாகியது - நான் அறிந்த வரை.

இந்நூலின் முகவுரையில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் இம்முயற்சியைப் பாராட்டி எழுதியிருக்கிறார். எனது இம்மடலின் நோக்கம் இந்நூலைப்பற்றி நாட்டுப்புறப் பாடல்களின் இக்காலத்து மன்னர்கள் பலரும் குறிப்பிடுவதில்லை என்னும் வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். எவரேனும் இதனை மறுதலித்து, இந்நூலைப்பற்றிப் பேசியிருப்பதை சுட்டிக்காட்டின், மிக மகிழ்வேன்.

இது பரவாயில்லை. இந்நூலில் நான் படித்த பாடல்கள் பலவும் திரைப்படங்களில்பெருவெற்றி பெற்ற பாடல்கள். ஒருவர் கூட அமரர். அன்னகாமு அவர்களின் முயற்சியைத் தம் திரைப்படங்களில் நன்றி தெரிவிக்கவில்லை என்பது மிக வருத்தற்குரியது.

உதாரணம் - சிந்து பைரவி "பாடறியேன் படிப்பறியேன்" - பாடல். இது இந்நூலில் பிரதானமாகக்காணப்படுகிறது. கவிஞர்கள் நாட்டுப் புறப்பாடலுக்கு என்ன ராயல்டி கொடுக்க வேண்டும் ? எனக் கேட்கலாம். நான் கேட்பது ராயல்டி -யல்ல. இப்பாடல் நமக்குக் கிடைக்கத் தந்ததற்கான நன்றியும், மதிப்பும்திரு.அன்னகாமு அவர்களுக்குக் கிடைக்கப் பெறவேண்டுமென்பதே.'ஊரார் உறங்கையிலே, உற்றாரும் தூங்கையிலே" -திருச்சி.லோகநாதன்டூயட்டாகப் பாடிய பழைய பாடல். பல பாடல்கள் , இந்நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் பெற்றவை என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்நூல் கிடைத்ததே ஒரு கதை.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகில் ஒரு அல்வாக் கடையருகே நின்று கொண்டிருந்தபோது, அருகேயிருந்த சைவசித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் கடையில் இருந்த புத்தகங்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அட்டை கிழிந்துப்போய், வேறு கலர் காகிதத்தால் அட்டை தைக்கப்பட்டு, கையால் தலைப்பு எழுதப்பட்டிருந்த இப்புத்தகம் கவனத்தைக் கவரவே, எடுத்துப்பார்த்து துணுக்குற்றேன். பத்து வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம்.... "இதுதான் கடைசிப் புத்தகம். கடைசிப்பதிப்பு" என்று கடைக்காரர் சொன்னபோது வருத்தம் வந்ததை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
என்று நாம் இம்முன்னோடிகளுக்கு மதிப்பு தரக்கற்றுக் கொள்கிறோமோ, அன்று தான் நம் மொழி வளர்ச்சி-களுக்கான முயற்சிகள் அர்த்தம் பெறும்.

Pulinagak Konrai- my observations 4

பாத்திரப் படைப்பு
--------------

பொன்னா: புரட்சிகரமானப் பாத்திரம் என்றில்லாவிட்டாலும், யதார்த்தமாகவும், அதே நேரம் தெளிவாகவும் சிந்தித்துச் செயல்படும் பெண்பாத்திரம். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏழ்மையிலிருந்து, வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண், தன் கணவனின் குறைபாடுகளை அறிந்து, தெளிவாகத் தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து தெளிவாக முடிவெடுக்கிறாள் - திருநெல்வேலியில் படிக்க வைப்பதாக.

பெண்கள் அதிகம் படிக்காத, தன் உணர்வுகளைப் பேசி வெளிக்காட்டவும் முடியாத காலகட்டத்தில், ஒரு சமையற்காரரின் பெண், இத்தனை தெளிவாக முடிவெடுப்பதே ஒரு புரட்சிதான்.

இளம் விதவையான தன் பெண்ணின் இளமைமீறல்களைப் பொறுமையாகவும், நிதர்சனமாகவும் எதிர்கொள்வதாகக் காட்டியிருப்பது,அப்பாத்திரத்தின் மேல் மதிப்பு கூட்டுகிறது.

நம்மாழ்வார்: மிகப்பிடித்த பாத்திரங்களில் ஒன்று. சுயராஜ்ஜியச் சிந்தனை, புரட்சிப்பாதை, ஆஷ் கொலையின் பிண்ணணியில் வந்த பயம், ஒரு reluctant revolutionary எனக் கொள்ளலாம். வீட்டைவிட்டுப் போவதற்கான பின்னணி அழுத்தமாக இல்லை. அவரது தயக்கங்கள் ,மனைவி இறந்தபின் மனப் போராட்டம் போன்றவற்றால் சுயராஜ்ஜிய கொள்கையில் மனம் வழுகியது, என்பதைக் காட்டுவதாக எழுதப்பட்ட கடிதம் - வெளிப்படையாக அவரது குணாதிசய கவசத்தில் விழுந்த ஓட்டைகளைக் காட்டியிருப்பதாகக் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் வலிதாகக் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. திண்ணம், வீரம் போன்றவை பிராமண தயக்கங்களில் அழுந்திப்போகும் என்பதையும் காட்டுகிறது.

இதே போல, மற்றொரு கடிதத்தின் உதவியையும் ஆசிரியர் நாடியிருக்கிறார். அது நம்பியின் கடிதம் - கண்ணனுக்கு. "நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோஸாவுக்கோ ஒருபயனையும் இதுவரை அளிக்கவில்லை என இப்போது தோன்றுகிறது.....நிறைவேறவே முடியாதக் கொள்கைகளைக் கட்டிக்காப்பதில் என்ன கிடைக்கப்போகிறது? Now Gods, stand up for bastards. அவன் எப்போதும் வடிகட்டிய அயோக்கியர்களூக்கே துணை நிற்கிறான். அயோக்கியர்களுக்கு மட்டும்....

என் தவளை வயிறு அவளுக்குத் தெரியவேண்டாம்" பக் 327-328

வலியின் உச்சத்தில் , மனவுறுதி குலைந்த நிலையில் ஒர் கிறக்கத்தில் அவர் எழுதியதாகவே இருக்கட்டும். இருப்பினும், .இது மீண்டும் நம்மாழ்வாரின் நிலையைத் திரும்பிக்கொணர்கிறதோ ? கடைசி வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன "அவன் ( கண்ணன்) முடிவெடுக்கத் தெரியாதவர்களூக்கும் துணை நிற்கலாம்" பக் 328

Monday, February 21, 2005

Pulinagak Konrai- my observations 3

பாத்திரங்களின் சொற்ப்ரயோகங்கள் (º¢Ä ÁðÎõ)
--------------------------------------

தென்கலை ஐயங்கார் வார்த்தைப் ப்ரயோகங்கள் 19ம் நூற்றாண்டு- 20ம் நூற்றாண்டுத் தொடக்க வருடங்கள் ( 30கள் வரை)அதிக மணிப்பிரவாளமாகவே இருந்திருக்க வேண்டும்...( திருநெல்வேலித் தமிழ் கலந்ததாக - குறீப்பாக வானமாமலையில்) காலத்தால் ,சில வார்த்தைகள் இப்போது வழக்கில் இல்லை. இந்த CONVERSATIONAL DIALECT ஐக் கொண்டுவந்த விதம் பல இடங்களில் பாராட்டிற்க்கும், ஓரிரு இடங்களில் ஒரு மீள்பார்வைக்கும் வைக்கப்ப்படலாம்.

அன்றைய வக்கீல்/கல்லூரி படிப்புப் படித்தவர்களின் பேச்சில் ஆங்கிலம் பெரிதும் காணப்பட்டது.பெரும்பாலும் சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். (18ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் லத்தீனில் பேசுவது படித்தவர்களின் அடையாளமாக கருதப்பட்டது போல. இதனை கவனித்துக் கொணர்ந்திருக்கிறார்.) ஆயினும் தமிழில் இருக்கவேண்டும் என்பதற்காக , சில உரையாடல்களைத் தமிழில் நகர்த்தியிருப்பது ( அது தென்கலை ஐயங்கார் dialect ஆக இருப்பினும்), conscious efforts போலத் தோன்றுகிறது.

வரலாற்றுப் பாத்திரங்களின் அறிமுகம் இயற்கையாக அமைந்துள்ளது. பாரதியின் அறிமுகம் அவருக்கே உரித்தான முத்திரையுடன் நம்மாழ்வாருடன் உரையாடுவதாகத் தொடங்கியது மிக இயல்பு.

" உன் பெயரென்னடா? நம்மாழ்வார்.. இந்தப்பெயரை வைச்சுண்டு சிறியன சிந்திக்க முடியுமா?." பக் 124

"நம்மாழ்வார் ஈயைப் போல வாழ்க்கை நடத்தவேணுமா?பெரிதாகவே நினை." பக் 125 சத்தியமான பாரதி முத்திரைகள்..

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், திருவைகுண்டம் எனப் போகும் இடங்களில், பனங்காற்று வட்டாரமொழியில் கலந்திருக்கும். திருநெல்வேலித் தாமிரபரணியின் ஈரத்தோடு.. இது இருந்து பார்த்தவர்களுக்கு சற்று எளிதில் புலப்படும். சிதம்பரம்பிள்ளையுடனான உரையாடலில் திருநெல்வேலி வட்டாரமொழியோடு, தூத்துக்குடி வட்டாரவழக்கை சற்றுத் தூக்கலாகவே பயன்படுத்தியிருப்பது, மிக மிக நுண்ணிய வட்டார மொழி வேறுபாடுகளைப் பிடிப்பதில் ஆசிரியர் எடுத்துக்கொண்ட சிரமம் தெரிகிறது.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் அறிமுகம் தொடங்குவது அவர் வீட்டில்.

'கறுப்பு, குள்ளம். துளைக்கும் கண்கள் (சிதம்பரம் பிள்ளை) பக் 115

"இந்த மழையில வாரத்துக்கு என்ன அவசரம். எங்கவீட்டுல காப்பி குடிப்பீரா?" பக் 115

வெகு இயல்பான வார்த்தைகளின் ப்ரயோகம். 80களிலும் இந்தக் கேள்வி பல வீடுகளிலும் கேட்கப்பட்டது. "பேரு என்ன? நம்மாழ்வாரா?.. ஐயங்கார்ல இந்தப் பேரு பாக்குது சிரமமாச்சே?" பக் 115

"பேரு பாக்குது" என்பது தனிவட்டார வழக்கு. தென் மண்டலத்தில் ( குறிப்பாக நெல்லைக்குத் தென் கிழக்காக )குறிப்பாக சைவப்பிள்ளைமார்கள் வெகு சகஜமாகப் பயன்படுத்தும் வார்த்தைப் ப்ரயோகம். சிதம்பரனார் இவ்வாறு பேசினார் என்றால் கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்.

சிதம்பரனாரின் நகைச்சுவை உணர்வு வரலாற்றில் பல இடங்களில் சிலகிக்கப்படுகிறது.. அது வெள்ளையர்களை எதிர்த்துப் பேசுவதிலாகட்டும், சுப்பிரமணிய சிவாவுடனும், பாரதியுடனும் பேசுவதிலாகட்டும் - தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது satire பரவலாகவே வெளிப்பட்டது. இதனைக் கவனமாக அவரது உரையாடல்களில் ஆசிரியர் கையாடியிருக்கிறார். சிவாவுடன் சிதம்பரனார் மேடையினின்று மக்களிடம் பேசும்போது, அவர்களின் திடீர் உரையாடல்கள் மக்களை மேலும் தட்டியெழுப்பும். உற்சாகப் படுத்தும்.

உதாரணமாக
சிதம்பரம் ஒரு மேடைப் பேச்சில் சொன்னார் " வெள்ளையர்கள் இந்த நாட்டை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறவேண்டும்" சிவா உடனே எழுந்தார். "ஏல சிதம்பரம். என்ன சொன்னாய்? மூட்டை முடிச்சுகளுடனா? அவை நம்முடையவை. எல்லாத்தையும் இங்கனயே போட்டுட்டு ஓடணும்னு சொல்லு"

இது போன்ற பேச்சுகள் சர்வ சாதாரணமாய் புழங்கிய காலத்தில் கதையில் நம்மாழ்வார் சிதம்பரனாரைச் சந்திக்கிறார். "..வடகலையா? தென்கலையா? தென்கலைதானே? அதான பாத்தேன். வடகலையார் தமிழ்ப்பேர் வைக்கிறதாவது." பக் 115 உள்சாதிப் பூசல்களை கிண்டலாகச் சொல்வதில் சிதம்பரனாரின் satire தெரிகிறது. "எந்த ஊரு? ஆழ்வார் பிறந்த ஊரா? நாங்குநேரியா? "நோற்ற நோண்பிலேன் நுண்ணறிவிலேன். " இதுதான உம்ம ஊர்ப் பாட்டு? உமக்கு ரெண்டும் இருக்கும்போல இருக்கே?"
சிதம்பரனாரின் சொல்லாடல் , கூர்மையான அறிவுத்திறம், சமயோசிதமாகப் பேசும் திறம் எல்லாம் வெளிப்பட அமைந்திருக்கிறது.

Sunday, February 20, 2005

Pulinagak Konrai- my observations 2

புலி நகக்கொன்றை- 2

சாதி ஒழுங்குகளும் தனிமனித மீறல் முயற்சிகளும்
-----------------------------------------------

தென்கலை ஐயங்கார்கள் என்ற வகுப்பினை எடுத்துக் கொள்ளூம் போது ஆசிரியருக்கு பல வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. இச் சமூகத்தில் வடமொழி,
பிராமணீயம் சார்ந்த வேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை." பட்சி தென்கலை சம்ப்ரதாயத்தை விட்டுட்டு இப்படி மீமாம்சகா வழியிலே போறது ஆச்சரியமாயிருக்கு.அவனை நம்மாழ்வாரைத் திரும்பிப் படிக்கச் சொல்லு. குறிப்பா "சூழ் விசும்பி அணி முகில்" பாசுரங்களைப் படிக்கச் சொல்லு" நம்மாழ்வார் ( பக் 320)

ஆயினும் ,ப்ராமண சமூகமென முத்திரையிடப்பட்டதால், சடங்குகள் அவசியமாகின்றன.நாளடைவில் , சடங்குகள் வெற்றி கொண்டுள்ளன - இறுதியில்
கண்ணனை வைதிகம், புறவாழ்வில் வெற்றிகொள்வது போல சாதி அற்ற சமுதாயத்தை ஏற்படுத்த முயன்ற இராமானுசரின் கொள்கைகள் காலப்போக்கில் ஒரு சடங்குகள் நிறைந்த சாதியில் புதைந்தது.அச்சடங்குகளை மீறுவதில் உள்ள போராட்டத்தைக் காட்டுவதற்கு ,பிற கொள்கைகள் ( கம்யூனிசம், நாத்திகவாதம்) எவ்வாறு சாதீய வாதத்தை எவ்வாறு தாக்கின என்பதை இக்கதை யோட்டத்தில் பின்னிப் பிணைக்க ஆசிரியரால் முடிகிறது. ஒரு புறம் பகுத்தறிவு வாதம், மற்றொரு புறம் கற்றவர்களின் கையில் கம்யூனிசம் எனப் போர்க்கோலம் பூண்டிருக்க, சாதீய வாத ஒழுங்குகளைப் பின்பற்றவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் திணறிய இரு தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரால் நன்கு கையாளப் பட்டிருக்கிறது. பெரியாரின் பேச்சுகள், பகுத்தறிவாளர் ஒருவரின் மேடைப்பேச்சு ( பக்241-243)

இதற்கெல்லாம் முன்னே, ஆங்கிலேயரின் முயற்சிகள் -தாழ்சாதியைச் சேர்ந்தவொருவனின் பிண ஊர்வலம் நகருக்குள் செல்வதில் இருந்த எதிர்ப்பு, அதன் விளைவுகள்(பக் 34 ) இவை கதையை நகர்த்த தக்க இடங்களில் வசதியாக இருந்திருக்கின்றன.

.வடகலை- தென்கலை பிரிவினரின் பூசல்கள், ஐயர்-ஐயங்கார் பூசல்கள் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனை சமூகத்தில் பெரிதுபடுத்திக்காட்டியது
என்பது இக்கதையில் நன்கு உதவியிருக்கிறது.

வைணவச் சாதிஒழுங்குகள், உள்சாதி அரசியல்கள் எவ்வாறு பெண்களைப் பின் தள்ளியது என்பதற்கு ஆண்டாளின் மறுமண முயற்சித் தோல்வி காட்டுகிறது. ஜீயர் சொல்கிறார்" நான் இருக்கிற வரை சாஸ்திரத்திற்கு எதிரா நடக்க விடமாட்டேன். சாண்டில்யர் என்ன சொல்லறார் தெரியுமா?. விதவையானவா.. புருஷ சேர்க்கையையும் அறவே தவிர்க்கணுமாம். இதைப்பண்ணற விதவைகளெல்லாம் ரொளரவம் என்கிற நரகத்துக்குப் போவாளாம். மகாக் கொடூரமான நரகங்கள்ள ஒண்ணு ரெளரவம். உம்ம பொண் அங்க போக உமக்கு இஷ்டமா?.....ஏற்கெனவே வடகலையாரெல்லாம் நம்ம விதவைகள் முண்ணடனம் செய்துக்கலைன்னு தூஷிக்கிறா. இப்போ மறுவிவாகம் பண்ண ஆரம்பிச்சோமோ,
நாமெல்லாம் ப்ராம்ணாளே இல்லைன்னு சொல்லிடுவா....
தென்கலையாருக்கும் கெட்டபேர் வர்றபடியா எதாவது செய்துடாதயும்." (பக் 63)

இரு விதமான சங்கிலிகள் இங்கு கட்டிப்போட்டிருக்கின்றன.

1. புராணங்களின் அடிப்படையிலமைந்த ஒழுங்குமுறைகள் (mythical regulations).

2. பிற சமூகத்துடனான போராட்டம் ( inter group rivalry).

இந்த சமூகப்போராட்டங்களின் வலு, பட்சி ஐயங்கார் ஏற்று நடத்திய வழக்குகளில் தெரிகிறது.

இளம்விதவையான ஆண்டாளின் தேவைகள் சமூக ஒழுங்கால் காலநீரில் அமுக்கப்படுகையில், அவை பொத்துக் கொண்டு வெளிவர, எழும் போராட்டங்கள் ... அவள் பின்னால் மனநிலை குலைந்த நிலையில் இறக்கும்வரை வருவதாய்க் காட்டியிருப்பது , நம்மில் கனத்த மொளனத்தைக் கொண்டு
வருவது நிஜம்.

இச்சமூக ஒழுங்குகள் எவ்வாறு கண்ணனைத் தாக்கின என்பதையும், அவர் எவ்வாறு ஊரோடு ஒழுகுதல் என்பதற்காக சடங்குகளில் ஈடுபடுகிறார்
என்பதையும் இறுதியில் காட்டியிருப்பதில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதும் அவரது மனநிலையைச் சொன்னவிதம் நன்று.."அவனது(கண்ணனின்) பூணூல் புதியது. பளீர் என்ற வெள்ளை ( பக்கம்319)

நம்பி கண்ணைக் கசக்கிக்கொண்டு இக்குண்டத்தை வட்டமிடுகிறானா? அவனது மார்க்சிய ஆத்மா அவனுக்குப் படைக்கப்படுபவைகளை ஏற்றுக்கொள்கிறதா? (பக் 319)

பட்சி தென்கலை மார்க்கத்தை மறந்துவிட்டதாகத் தெரியவில்லை. அவரது வற்புறுத்தலால் கண்ணன் ஜீயர் செய்த பஞ்ச சம்ஸ்காரத்தில்
சேர்ந்துகொண்டான்.அவன் வைணவ மார்க்கத்தில் சேரும் சடங்கு (319)

புகை கண்ணை எரித்தது ....என்னுடைய ஆயுள் என வரும்போது கொள்கைகள் மறைந்துவிடுகின்றன....மதம் மனத்திற்கு அமைதி தருமானால் அதன்
மடியில் சேர்வது என்ன தவறு? (பக் 320)

அவன் ( நம்பி) நிச்சயமாக ப்ரத்யங்காரா வேள்வி பற்றிப் பேசவில்லை.அவன் பிராமண மதத்தோடு கை குலுக்கியிருப்பானா?இந்த நெய்யைக் குடிக்கின்ற
சடங்குகளில் கலந்து கொண்டு இருப்பானா? ( பக் 323)"

உள்ளெளும் கேள்விகளுடன் கண்ணன் நடத்தும் போராட்டங்களில் வெளியில் சமூகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆயின் , இந்தப் போராட்டமே
வெற்றியாகத் தான் எனக்குப் படுகிறது.