Saturday, January 02, 2016

பாட்டி சொன்ன பிரபந்தம்



"மார்கழின்னா திருப்பாவை, திருவெம்பாவைன்னு எல்லாச் சேனல்கள்லயும் காலேல காட்டறாங்க. கேக்கறப்ப புரியுது , ஆனா அப்புறம் மற்ந்து போவுது”

குருநாதன் என்னை விட சில வருடங்கள் இளையவன். ஆனாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகிய நல்ல தோழன். இப்படி அவன் சொன்னதும் சற்றே வியந்துபோனேன். 

ஏனெனில், குருநாதன் படித்து வளர்ந்தது தமிழகச் சூழலிலல்ல. ஆந்திராவில் , அவனது அப்பா மின்சார உற்பத்தி ப்ராஜெக்டுகளில் பணி செய்தவர். அதன்பின் ஹைதராபாத் வாழ்க்கை. திருப்பாவையெல்லாம் கேட்டிருக்ககூட சாத்தியங்கள் குறைவு. எனவே, மண்ணின் கலாச்சாரம் பற்றிய உரைகளில் மெல்ல நகர்ந்து போய்விடுவான், தவிர்த்துவிடுவான். 

“இன்னிக்கென்ன திடீர்-னு?” என்றேன். 

“இல்ல, சரோஜா சொன்னா.. என்ன இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்க,பிள்ளைங்க நம்மப் பாத்து வளருதுங்க. அதுகளூக்கு வேர்ப்பற்று வரணும்னா நாமதான சொல்லணும்?” சட்டுனு இந்த வார்த்த என்னமோ உள்ள அசைச்சிருச்சு, சுதாகர். நாம மேலோட்டமா, சினிமா, அரசியல், ட்விட்டர், பேஸ்புக்குனு வாழ்ந்து போறோமோ? யோசிச்சுப் பாத்தா, வார விடுமுறை கழிக்கிற பழக்கங்கள்ல ஒரு வெறுமைதான் தெரியுது.”

அவன் தொடர்ந்தான். “நேத்தி ராத்திரி, பொண்ணுகிட்ட  ஏன் வாட்ஸப்புல பழியாக் கிடக்கற?ன்னு குரல் உசத்திக் கேட்டுட்டேன் . நீயும்தான சாட்ல இருக்கே?-ங்கறா. சரோஜா அவள அதட்டப்போக.. அப்படி இப்படி விவாதம்.. அதுல வந்த உணர்வுதான் இது”

“சரி. இதெல்லாம் படிக்க நாளாகும்ப்பா. மெதுவா ஒண்ணொண்ணா ஆரம்பிச்சுப் பாரு. பொறுமை வேணும் ஆனா”

“எனக்குத் தமிழே  படிக்க வராதே?” அவனது இயலாமையின் அடித்தளம் புரிந்தது.

“சரி, நிறைய சொற்பொழிவுகள், சி.டிலயே கிடைக்குது. இல்ல காலேல டி.வில வருது. கேட்டுப்பாரு. பிள்ளைங்களும் ஒரு பழக்கம் வர்றதுல கேட்டுப்பழகும்”

“சி.ஏ இண்ட்டெருக்கு எப்படிப் படிக்கணும், மேத்ஸ் பேப்பருக்கு எப்படி தயார்பண்ணனும்ங்கற லெவல்லதான் நான் நிக்க முடியும். ஆனா, அதை ஒரு கோச்சிங் கிளாஸ்ல என்னை விட நல்லாச் சொல்லிக்கொடுத்துருவாங்க. எனக்கு...” நிறுத்தினான்.

“ஒரு தகப்பனா, என்னால் மட்டும் காட்ட முடிகிற வாழ்க்கை, வேர்ப்பற்று எல்லாம் காட்டத் தவறிட்டேனோ? இனிமே முடியுமா? என்ன மரியாதை இருக்கும் என் பிள்ளைகளுக்கு எங்கிட்ட? ஸ்கூலும், காலேஜும் அவங்களை வாழ்க்கைக்குத்  தயார் பண்ணிடுது. ஆனா எப்படி வாழணும்ங்கறத நாமல்ல எடுத்துக்காட்டா நின்னு காட்டியிருக்கணும்? எனக்கு.. எனக்கு முதியோர் இல்லம்தான் சுதாகர். தெளிவா தெரியுது” 

“இல்லப்பா” என்றேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு விரக்தியின் நீட்டலில் எதையோ சிந்திக்கிறான். நல்லதல்ல. 

“உனக்கு எதாவது பழைய செய்யுள், பாட்டுன்னு தெரியுமா? அறஞ்செய விரும்பு,, ஆறுவது சினம்.. இந்த மாதிரி”

இல்லையெனத் தலையசைத்தான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தான். கை நீட்டி குலுக்கி “சரி பாப்போம்” என்று சொல்ல எத்தனித்தவன் எதையோ நினைத்து நின்றான்/

“எங்க பாட்டி ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. சமயபுரம் பக்கம் எங்க கிராமம். எப்பவாச்சும் பாக்கப் போவோம். பாட்டி உக்கார வைச்சு இந்த பாட்டு பாடுவாங்க..அம்ம்ம்.. “ நினைவு கூர்ந்து, பிறர் கேட்டுவிடாதவாறு வெட்கத்துடன் ஒரு புன்சிரிப்புடன் வரிகளைச் சொன்னான். சொன்னான் அல்ல, இழுத்துப் பாடினான். சொற்கள் அந்த ராகத்தில் மட்டுமே நினைவில் நின்றிருக்கின்றன. 

“கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....ஏஏஏ
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவேஏஏ”

“அப்புறம்.. மறந்துபோச்சே. வரிகள் கிடைச்சா மடமடன்னு ஞாபகம் வந்துரும். இத எங்கபோய்ப் பிடிக்க?” என்றான் அயர்வுடன். எனக்கு அப்பாடல் வரிகள் பிடித்துப் போயின. பின்னாளில் பல சொற்கள் மறந்தும்போயின.இது நடந்து  ஒரு வருடமாகிவிட்டது என்பதே மறந்து போனது.

அண்மையில் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்களது புத்தக அலமாரியிலிருந்து எடுத்து வந்த அஷ்டப்பிரபந்தம் புத்தகத்தை கவனமாக இருநாள்முன் கையிலெடுத்தேன். 1957-ல் முர்ரே & கம்பெனி, ராஜம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட புத்தகம்.. அங்கங்கே காகிதம் ஒடிந்து போயிருந்தது.
அதில் திருவரங்கக் கலம்பகம் பகுதியிற் புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது.

”கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதோர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த வனந்தொறும் அதிசயம் உளவே”

”குரு” என்றேன் போனில் பதட்டமாக ““வாட்ஸப்ப்ல உனக்கு ஒரு போட்டோ அனுப்பறேன் உங்க பாட்டி சொல்லிக்கொடுத்த வரிகள். அத மட்டும் படிச்சுக்கோ. போதும். ”

“அஹ்?!” என்றான் ஒரு வியப்புடன். ”இது என்ன? திருப்பாவையா?”

“அஷ்டப் பிரபந்தம். எதுவா இருந்தா என்ன? இதப் பிடிச்சு , மெள்ள மெள்ள மேல ஏறிடலாம். “

“ஆமா, என்ன?” என்றான் குரு. அவன் குரலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. 

பாட்டிகள் இறந்தபின்னும், வேரைத் தேடிப்பிடிக்க துணை நிற்கிறார்கள். நாம கொஞ்சம் நினைவுகளை தோண்டி, நடப்பில் புத்தகங்களைப் புரட்டினால் போதும். அதைவிட.. அனுபவத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.



No comments:

Post a Comment