Monday, November 20, 2017

கோரஸ்ஸும் ரெஜினா டீச்சரும்.

கோரஸ் பாடுவோர் நிற்கும் விதத்தைப் பற்றி எழுதியதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உண்மையில் கோரஸுக்குப் பாடுவோரை வரிசையாக நிறுத்தும் சடங்கு அரசியல், ஜால்ரா, பாலியல் வசீகரம் எனப் பல உள்ளடுக்குகளைக் கொண்டது.
ஏழாம் கிளாஸ் என நினைக்கிறேன். பள்ளிக்கு சில முக்கியஸ்தர்கள் , குழந்தைகள் தினவிழாவிற்கு வருகிறார்கள் என பெரிய டீச்சர் சொல்ல, வகுப்புகள் திமிலோகப் பட்டன.
”ரோசம்மா டீச்சர், உங்க பிள்ளேள் எக்ஸர்ஸைஸ். செவன் ஏ, வளையம் வைச்சு போனவருசம்மாதிரி பெர்பார்மென்ஸ். 6 ஏ, பி, ஸி ’கயவனுக்கும் கதிமோட்சம்’ டிராமா... விக்டோரியா டீச்சர், நீங்க ஸ்க்ரிப்ட் வைச்சிருக்கீங்கள்ளா?”
படுவிரைவாக யார்யார் என்ன செய்யவேண்டுமெனச் சொல்லி வந்த பெரிய டீச்சர் ‘ரெஜினா டீச்சர், நீங்க கோரஸ் தயார் பண்ணுங்க. ஒரு நேரு பாட்டு கடைசில வைச்சிருங்க. ஆண்டவர் தோத்திரம் முதல்ல. வெளங்கா?”
ரெஜினா டீச்சரை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பல் துருத்தி, எப்பவும் கடுவென இருப்பார். அவர் வாயில் எங்களைப் பற்றி மனித விளிகளே வராது
“ நாயே, எங்கிட்டுலா ஓடுத? கிளாஸுக்குப் போ. ஒண்ணுக்கெல்லாம் ரீஸஸ்லதான் போணும். ஏலே, வெள்ளப்பன்னி.. ஒனக்குத் தனியாச் சொல்லணுமோ?”
என்னை அவர் “ வெள்ளைப் பன்னி “என்றோ “கண்ணாடி” என்றோதான் அழைப்பார். 6ம் கிளாஸில் கண்ணாடி போட்டதன் பட்டப்பெயர் அது. கூட இரூப்பவர்கள் படுகறுப்பாக இருக்கையில், மாநிறம் - வெள்ளை.
ரெஜினா டீச்சர் , “ரோசம்மா, ஒரு நிமிசம்” என்று க்ளாஸ் டீச்சரிடம் கேட்டுவிட்டு “ பிள்ளேளா, யாரெல்லாம் பாட வாரீய?” என்றார். ஒருவரும் பேசவில்லை.
“நீயாச் சொல்லுதியா, இல்ல கூப்பிடட்டா? நாயிங்க ஒழுங்காச் சொன்னா கேக்கா பாரு?”
அதற்கும் மவுனம்.
“சரி, வள்ளி, செல்வி, கலைவாணி, மரிய ரோஜா, ஆறுமுகம், செல்வன், விக்டர், சுதாகர் ..லே கண்ணாடி -உன்னியத்தான். எந்திரி”
அனைவரும் பெரியடீச்சர் ரூம் வாசலில் நிறுத்தப்பட்டு “ எங்கே இறைவா இருக்கின்றாய்? எனை நீ எதற்கு அழைக்கின்றாய்?” என்று பாடினோம்.. கைகளை முன்னே சேர்த்து , மர்மஸ்தானத்தை மறைத்தபடி வைத்து நிற்கவேண்டும். ஒரே மாதிரி சட்டை வேண்டும். இறுதியில் ஸ்கூல் யூனிபார்ம் போதுமென அறிவிக்கப்பட்டது.
உயரவரிசைப்படி நிறுத்தப்பட்டதில் நான் கடைசிக்கு முந்திய வரிசை. ஓரங்களில் பசங்கள். நடுவில் பெண்கள். செல்வி, முத்துராணி பக்கம் நான். கொஞ்சம் மகிழ்வான வெக்கமாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
” முண்டக்கண்ணி, ஒழுங்காப் பாடுவியாட்டி?” கிசுகிசுத்தேன் முத்துராணியிடம்.
’போல கண்ணாடி”
சில்வியா டீச்சர் அடுத்தநாள் காலையில் எங்கள் அணியைப் பார்த்தார். பெரிய டீச்சரிடம் எதோ சொல்ல அவர் அவசரமாக வெளியே வந்தார்.
“ரெஜினா டீச்சர்? எங்க டீச்சர்?”
ரெஜினா டீச்சர் கையில் பிரம்புடன் வந்தார். பாலகணேசன் ஒழுங்காகப் பாடாமல் சிரித்ததால் அவனுக்கு அடிகொடுக்க ஏழு ஸியில் பிரம்பு வாங்கிவரப் போயிருந்தார்.
“டீச்சர், என்ன இப்படி நிறுத்தி வச்சிருக்கீங்க? பொட்டப் பிள்ளேளா நிறுத்துங்க. செவத்த புள்ளேள் முன்னாடி நிறுத்தணும். ஏ,செல்வகுமாரி, நீ கடைச் வரிசைக்குப் போ. செல்வி, நீ மரிய ரோஜா இடத்துல வா.”
திருடர்களைப் பிடித்து வைத்த வரிசையில் போலீஸ் நோட்டமிடுவது போல பெரியடீச்சர் வரிசையை வலம் வந்தார்.
” பசங்கள எதுக்கு வச்சிருக்கறீங்க?”
“மேல் வாய்ஸ் வேணும் டீச்சர். நல்ல பிட்ச் போற பசங்களத்தான் எடுத்திருக்கம்”
“பசங்க வேணாம். பொம்பளப் பிள்ளேள மட்டும் நிறுத்துங்க. வர்ற கெஸ்ட் எல்லாம் இந்த கருமூஞ்சிகளப் பாக்க வேண்டாம்.வெளங்கா ஒங்களுக்கு?”
சில்வியா டீச்சர் “ வேணா எங்கிளாஸ்ல இருந்து மூணு பிள்ளேள அனுப்பட்டா டீச்சர்? வசந்தி, பரிமளா, ஜோஸஃபைன்...”
பெரியடீச்சர் போனதும், ரெஜினா டீச்சர் “சில்வியா டீச்சர், கொஞ்சம் இரிங்க” என்றார்.
“அவதான் சொல்லுதான்னா நீங்களும் சேந்து பாடுதீங்க? பிள்ளைகளை பாட்டுப்பாட கூப்புடுதோமா, இல்ல வந்திருக்கறவன் வக்கிரமாக்ப்பாக்க குளுகுளுன்னு செவத்தபொண்ணுகளா முன்னாடி நிறுத்துறோமா?”
சில்வியா டீச்சர் அதிந்து போனார் “இல்ல, நான் என்ன சொல்லுதேன்னா..”
“ நம்ம வேலை என்ன? என்ன தொழில் செய்யச் சொல்லுதாக? பாடுற பாட்டு எங்கே இறைவா?ன்னு , செய்யறது சாக்கடை வேலை. தூ”
சில்வியா டீச்சர் கண்களைத் துடைத்துக்கொண்டு விரைந்தார்.
ரெஜினா டீச்சர் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார் .

“ செவத்த பிள்ளேளா முன்னாடி நிறுத்தினாத்தான் ஸ்கூலுக்கு காசு கிடைக்கும்னா, அது வேற தொழிலுட்டீ. பாவி மக்களா. சேசு மன்னிக்கமாட்டாருட்டீ உங்கள. கறுப்பு ஆடு..எல்லாம் கறுப்பு ஆடு.”
நாங்கள் கோரஸில் இருந்தோம். விழா முடிந்த இரு நாட்களில் ரெஜினா டீச்சரைப் பள்ளியில் காணவில்லை. வேலையை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றார்கள்..

நான் ரெஜினா டீச்சரின் மாணவன் என்பதில் ஒரு பெருமை இருக்கிறது.

No comments:

Post a Comment