Friday, April 20, 2018

கடவுளின் ஐஸ்க்ரீம்

”மூவர்  நீ முதல்வநீ, முற்றுநீ, மற்றுநீ, பாவநீ, தருமநீ, பகையுநீ, உறவுநீ”

இறக்குமுன் வாலி இராமனைப் பார்த்துச் சொல்கிறான் இப்படிச் சொல்றான்,  நல்லது சொல்றான் சரி; எதுக்கு  நீயே பாவம், நீயே பகை எல்லாம் இராமன் மீது அடுக்குகிறான்? நல்லது மட்டுமே இறைவன் என்றால் போதாதா? ”  சுதீர்குமார் கேட்டார்.

எப்போதோ சென்னை போகியிருக்கையில், உமா பதிப்பகத்தில் கம்பராமாயணம் - வைமுகோ வின் உரை ஒரு செட்டு தூக்கிக்கொண்டுவந்துவிட்டார். நிதானமாக வாசிக்கிறார்.

”அப்படி இல்லாவிட்டால் , இறைவன் இல்லாத ஒன்று இருப்பதாக ஆகிவிடுமே?” என்றார் சுனில் , அவரது தம்பி. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது.

அவர்களது வீட்டில் ஒரு நாள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் சில மாதங்கள் முன்பு. கலியாண சீசனோ என்னமோ,  போபால் நகரில்  ஓட்டல் ஒன்றுமே கிடைக்கவில்லை.

இரவு சாப்பாட்டின் பிறகு இந்த அரட்டை சில நிமிடங்களே நீடித்தது. ஸ்டாக் மார்க்கெட், மோடி, கார் வகைகள் எனப் பேச்சு விரிந்தது.

திடீரென சுனிலின் சிறு குழந்தை வீறிட்டது. லேசான மூச்சிழுப்பு வீட்டில் அனைவரும் அதனை தூக்கிவைத்து சமாதானப்படுத்தியும் அடங்கவில்லை. இரவு 10 மணிக்குமேல். ஆஸ்பத்திரியெல்லாம் அடைத்திருப்பார்கள்.

இருவீடுகள் தாண்டி இருந்த ஒரு நர்ஸ், வந்து பரிசோதித்தார்.

”என்னத்தையோ தின்னிருக்கு. அலர்ஜியோ?”

”ஐஸ்க்ரீம்தான். திங்காதே, திங்காதேன்னு எத்தனை தடவை பின்னாடியே நிக்கிறது? கேட்டாத்தானே?” சுனிலின் அம்மா புலம்பினார்.

“அதுக்கு ரெண்டு வயசு. நீ சொன்னாக் கேக்குமா?”   சுனிலின் அப்பா , அதட்டினார். “ரெண்டுங்கெட்டான் வயசு. கொஞ்சநாள் நாமதான் பாத்துக்கணும்”

சுனிலின் மனைவி அமைதியாயிருந்தாள். ’நீ எதுக்கு குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கொடுத்தே?” என்று சுனில் கண்டிக்க, அவள் ஒன்றுமே சொல்லாமல் ,குழந்தையுடன் உள்ளே சென்றாள்.

அடுத்தநாள் காலையில்,  நாங்கள் ஏரி வரை சென்று திரும்பிய பொழுது, குழந்தையை வாசலில் நிறுத்திப் பேசிக்கொண்டிருந்தாள்். “நெஞ்சு வலிக்கிறதா பாப்பா?”
“உம்” என்று தலையாட்டியது.
ஐஸ்க்ரீமைக் காட்டினாள் தாய் “ இத வாயில போட்டேல்ல? அதுல பூச்சி இருக்கு. அதான் வயிறு வலிக்கிறது. இன்னும் ஜில் ஐஸ்க்ரீம் வேணுமா?”
அது பீதியில் பார்த்தது. அவள் ஐஸ்க்ரீம் கிண்ணத்தைக் கையிலெடுத்து வாயருகே கொண்டு வந்தாள்
“ஐஸ்க்ரீம் திங்கணுமா? வயிறு வலிக்கணுமா உனக்கு?”
அது, தலையை வேகமாக ஆட்டி மறுத்து, அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டது.

”இனிமே ஜில் தண்ணீர் சாப்பிடுவாயாடி, தங்கம்?”

”ஊஹூம்” என்றது அது.

சுதீரிடம் இதனைக் காட்டிச் சொன்னேன் “ இதுதான் கடவுளும் செய்யறான். நமக்கே அறிவு வந்து தீயதை விலக்கணும்னுதான், சொற்புத்திக்கு சாத்திரங்களைக் கொடுத்தான். அது புரியாம தீமைகளை நாடிப்போறோம்; சரி, படட்டும், பட்டறிவு வந்தா விலகி வருவான்” என்று நம்மைத் தீமையில் பட வைக்கிறான். இது அதீத அன்பினால் செய்கிறான். சொற்புத்தி இல்லாதவனுக்கு சுயபுத்தியாச்சும் வேணுமே?”

”சும்மா நீங்களா ஒண்ணு இட்டுக் கட்டப்படாது. இதெல்லாம் எந்த சாஸ்திரத்துல இருக்கு?”

“ஆச்சார்ய ஹ்ருதயம்னு ஒரு புத்தகம் , 12ம் நூற்றாண்டுல , நம்மாழ்வாரின் புகழ் பாடி எழுதப்பட்ட சூர்ணைகள் கொண்ட நூல். அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்னு ஒரு ஆச்சாரியார் எழுதியது. அதுல சொல்கிறார்.
சாத்திரங்களைக் கொடுத்து, அதற்கு மாறாக பிற இந்திரிய நுகர்வு அனுப்வஙக்ளையும் கொடுத்தது ஏன் எனில்?
வாத்ஸல்யமான தாய், பிள்ளை மனம் பேகணியாமல்,  மண் தின்ன விட்டுப் பின் ஒளஷதம் இடுமாப்போலே, எவ்வுயிருக்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும், ருசீகேடாகப் பந்தமும் அதனை அறுப்பதோர் மருந்தும்  காட்டுமிறே”

குறிப்பா இதில் வாத்ஸல்யமான தாய் என்பதைக் கவனியுங்கள். அதீதக் கருணை கொண்ட தாய், , ரும வினையால் நாம் படாதபாடு பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே, கொஞ்சமாகப் பற்றைக் கொடுத்து,  அவதியுறச் செய்து,  பட்டறிவினால் புத்தி வரச்செய்கிறான். இதற்குத்தான் மூளையே அவன் கொடுத்திருக்கிறான்.”

சுதீர் மெல்லத் தலையாட்டினார். புன்னகையுடன் நிமிர்ந்தவர் “ புக் பேரு என்ன சொன்னீங்க?”
சட்டெனக் கவலை வந்தது.  சுதீரின் அடுத்த சென்னைப் படையெடுப்பில்  ஆச்சார்ய ஹ்ருதயம் பி.ஆர். புருஷோத்தம நாயுடு விளக்கவுரை இருக்கிறது. சென்னைப் பல்கலை அதனை மீண்டும் ப்ரசுரிக்க வேண்டுமே? பிரதிகள் அங்குக்  கரையான் அரித்து அல்லவா கிடக்கிறது?

No comments:

Post a Comment