Friday, February 29, 2008

சுஜாதா - சில எண்ணங்கள்

சுஜாதாவின் மரணம் குறித்து மரத்தடியில் அறிந்தேன்.
ஒரு மானசீக வழிகாட்டியை தொலைத்திருக்கும் கனத்தில் மனசு இடறியதில் கொஞ்சம் எழுதத் தோன்றியது.

அவரது கதைகளின் மூலமே கொஞ்சம் தரமான கதைகள் பக்கம் கால்வைத்த பலர் உண்டு.குறிப்பாக 70, 80களில் "அட, இப்படியும் போகுமா கதை?" என ஆச்சரியமாக சிறுகதைகள் படித்தவர்களில் நானும் ஒருவன்.
"ராகினி என் வசமாக' என்ற கதையின் இறுதியில் " நான் இறங்கி நடந்து போவதை நானே பார்த்தேன்" என வரும்.. இது கொஞ்சம் குழப்பமாக் இருந்தது முதலில். சிறிது சிறிதாக உணரத் தொடங்கியதும், நூலகத்தில் சுஜாதா கதைகளை காத்துக்கிடந்து படிக்கலானேன். சில புரிந்தது - சில புரியாமல் சீண்டியது. இது அவரது பெரும் வெற்றி எனலாம்.மேலும் பல புத்தகங்களைப் படிக்கவும், ரெஃபரன்ஸ் பார்க்கவும் தூண்டியது.

இதனால் நான் என்னமோ இலக்கியவாதியாக ஆகிவிடவில்லை. "பேயாகத் திரிந்த பங்காரு, ரத்தக்காட்டேரியின் பழி" போன்ற கதைகளையும், ராஜேந்திர குமார்-இன் கதைகளையும் படித்து புளகித்த என்னைப்போல் பலருக்கும் ,' அறிவியல் கதைகள் என ஒன்று உண்டுடே ' என அவர் அறிமுகப் படுத்தியது உண்மை.
தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி எனலாம் அவரை - தைரியமாக.

சில அறிவியல் உண்மைகளை அவர் சரி பார்க்காதது தவறாக இருக்கலாம். லேசர், ஹோலோகிராஃபி என்பதெல்லாம் "கொலையுதிர் காலங்கள் " வரும் வரை பலரும் அறிந்த வார்த்தைகள் இல்லை. அறிவியல் புனைக்கதைகளில் அவர் மேலும் கவனம் செலுத்தி இன்னமும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கலாம். தமிழகத்தின் துரதிருஷ்டம்- அவருக்குப் பின் அப்படி எழுத எவரும் வரவைல்லை இன்னும்.

ஜனரஞ்ஜகத்தில் இருந்து இலக்கியவாதியாக பரிமளிக்க முடியாது என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அவரது அறிவியல் புனைக்கதைகள் மூலம் தனி இடத்தை இன்னும் மேலாகவே அவர் பெற்றிருக்க முடியும்.தமிழகம் அவரது எழுத்தை கணேஷ் வசந்த் , வைணவர் ,ஜனரஞ்சகம் என்பதாகவே சிலாகித்தது. அவரும் நாமும் ஒரு வேலிக்கு இரு புறமும் நின்று ஒருவரை ஒருவர் ரசித்திருக்கிறோம்.

இழப்பு பெரிது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.