Thursday, December 14, 2017

க்ருஷ்ண சரண் தாஸின் குக்ரி

இருட்டில் “கோன் ஹை?” என்ற குரல் ,சுவர்க்கோழிகளின் சத்தத்தில் கேட்கவில்லை. முன்னே ஒரு உருவம் வழிமறித்தபோது, நடுங்கித்தான் போனேன். மலை வாசஸ்தலம் போன்ற இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ். வளைந்து செல்லும் பாதையில் சில நாட்கள் முன்பு பெரியதாக ஒன்று ஊர்ந்து சென்றதைப் பார்த்தில் இருந்தே சற்று நடுக்கம்தாம். “எங்கே போகிறாய்?” கோ வாடீஸ்?” என்ற தத்துவார்த்தக் கேள்விகளை உதிர்த்த அந்த உருவம் டார்ச்சை அடித்தபோது, சற்றே ஆசுவாசமானேன். “தாஸ் ஜி, இப்படியா பயமுறுத்துவது? சே..” என்றேன். “ஒரு வார்த்தை சொல்ல்யிருக்கலாம், சர்ஜீ” என்றார் கே.ஸி. தாஸ் , கெஸ்ட் ஹவுஸ் காவலாளி. சற்றே கால் வலிக்க, அவர் இருக்குமிடத்தின் அருகே ஒரு பாறையில் அமர்ந்தேன். “ஸர் ஜீ, அறைக்குப் போங்க. குளிர் தலையைத் தாக்கினால்...” “உங்களுக்கும்தான் தாக்குகிறது” ” இந்தத் தலை, லடாக்கில் இருந்து, ஃபல்காம் வரை குளீரைத் தாங்கியிருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை சர் ஜி. நாது லா, கார்டுங் லா, அங்கேயெல்லாம் இல்லத குளிரா?” “எந்தப் போரில் இரூந்திருக்கிறீர்கள் தாஸ்” தலைக்கு மேலே சொய்ங் என வட்டமடித்துப் பறந்த கொசுக்கூட்டத்டில் ஒரு அடியில் பத்து செத்திருக்கும். கதையின் ஆர்வத்தில் கொசுக் கடியை மறந்தேன். “ ஆ..” சைனா வார், அப்புறம் இஃம்பாலில் இருந்து பங்களாதேஷ் நுழைவு. என்ன. நான் நுழைந்த ஒரே நாளில் போர் முடிந்துவிட்டது. பெருத்த ஏமாற்றம். குறைந்தது 4 பாகிஸ்தானியர்களைக் கொன்றிருக்கவேண்டும்”
“அதென்ன நாலு கணக்கு?”
தாஸ் உள்ளே சென்று, ஒரு பாக்கெட்டை எடுத்து வந்தார். “ மசாலா பாக்கு” நீட்டினார். மறுத்ததில் அவருக்கு வருத்தமில்லை.
“ மால்டா பக்கம் எனது வீடு. அப்பா அடித்தது பொறுக்காமல் ஓடி வந்துவிட்டேன். ஆர்மியில் ஆளெடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு வரிசையில் நின்றேன்
அப்போதெல்லாம் அதிகம் சர்டிபிகேட் அது இது எனக் கேட்கமாட்டார்கள். 1960 ல் நடந்தது இது. பசி கண்ணை இருட்டிக்கொண்டு வருகிறது. படா ஸாப் ( பெரிய ஆபீஸர்) முன்னே நிற்கீறேன். கன்னா என்பது அவர் பெயர். கன்னா சாப் கேட்கிறார். ”ஆர்மியில் சேர்ந்து என்ன செய்வாய், க்ருஷ்ண சர்ண் தாஸ்?” எவனோ சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வந்தது. ” நாட்டுக்கு உயிரைக் கொடுப்பேன் சர் ஜீ” பளீர் என கன்னத்தில் ஒரு அறை . “ நீ செத்ததும் பீகிள் வாசிக்கவா என் படை இருக்கிறது? முட்டாளே. நீ சாக வேண்டுமானால் எங்கே வேணுமானாலும் போ. இப்போது சொல், ஆர்மியில் என்ன செய்வாய்?” இப்போது என் கண்கள் அவரை தீர்க்கமாக நோக்குகின்றன. நான் சொல்கிறேன். “ குறைந்தது நாலு பாக்கிஸ்தானிய வீரர்களைக் கொல்வேன் சர்ஜி. இது மாகாளி மேல் சத்தியம்” கன்னா சாப் என்னை நேராகப் பார்க்கிறார். வலப்புறம் செல்லக் கை காட்டிவிட்டு “ நெக்ஸ்ட்” அதன் பின் பங்களாதேஷ் போர். இம்ஃபாலில் இருந்து எல்லை வரை பயணம். அதன்பின் காட்டினூடே குன்றின் மீது ஏறுகிறோம். தவழ்ந்து ... எதிரிகள் குன்றின் மறுபுறம் இருக்கிறார்கள். முன்னே காட்டுப் பன்றிகள் ஓடுகின்றன. அப்படியே கிடக்கவேண்டும். பன்றிகள் ஓடுவது, பாகிஸ்தானியர்களை இங்கே கவனிக்க வைக்கும். கன்னா சாப் - இடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். குறைந்தது 4 எதிரி வீரர்களைக் கொல்வேன். மெல்ல மறுபுறம் தவழ்ந்து இறங்குகிறோம். தலை கீழாக. இது கடினமாக இறங்குதல் முறை. எவனோ பார்த்துவிட்டான். துப்பாக்கிச் சத்தம். மெல்ல சுழன்று திரும்புகிறேன். கால் கீழ்ப்பக்கம். தலை மலைப்பக்கம். மெல்ல மெல்லத் தவழ்ந்து பாறையில் ஒதுங்கி காத்திருக்கிறேன். நாலுபேர் மலை மேல் ஏறி வருகிறார்கள். என் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. இடுப்பில் தடவுகிறேன். குக்ரி கனக்கிறது. எவனாவது ஒருத்தன் பார்த்தாலும் நான் தொலைந்தேன். ஆனால் , சர் ஜீ, சாவதற்கு அல்ல நான் ஆர்மியில் நுழைந்தது. கொல்வதற்கு., எதிரிகளைக் கொல்வதற்கு. குக்ரியுடன் பாய்கிறேன். முதலாவது எதிரியின் விலாவில் குக்ரி பாய்கிறது. மற்றவன் திரும்பிச் சுடுமுன் அவனை நோக்கிப் பாய்கிறேன்.. அவன் வயிற்றில் அமரந்தபடி, ஓங்கி நெஞ்சில் ... குக்ரி மீண்டும் ரத்தம் பார்க்கிறது.. என் மடங்கிய உள்ளங்கையில் வெம்மையாக ரத்தப் படலம். மூன்றாமவன் என்னைச் சுடுமுன், அவன் என்னுடன் வந்த ஒருவனால் சுடப்படுகிறான்.. நான்காமவனை யார் சுட்டதெனத் தெரியவில்லை. கீழ்நோக்கி உருண்டு, சறுக்கி விரைகிறோம். சிராய்ப்பில் கைத் தொலி உரிந்து எரிகிறது.. துப்பாக்கி கையில் இருப்பது வீண் சுமை. குக்ரியை வைத்துக்கொண்டு, மேல் நோக்கி விரைந்து வந்த மற்றொரு குழுவில் பாய்கிறேன்.. எத்தனை பேர், எங்கு குத்தினேன் ... தெரியவில்லை. அவர்களைக் கடந்து மற்றொரு குழு. கீழே வந்ந்து சேர்ந்ததும் குன்றில் சுற்றி வந்த படையுடன் சேர்ந்துகொள்கிறோம். இனி அந்த டாக்கா.. கன்னா ஸாப் எங்கே எனத் தெரியவில்லை. அவரிடம் சொல்லவேண்டும். சர்ஜீ, நான் நான்கு பேரைச் சாய்த்துவிட்டேன்” தாஸ் எங்கோ பார்த்தபடி சொல்லிக்கொண்டே இருந்தார். நிறுத்தும்படி பல முறை சொல்லியும் பேச்சு தொடர்ந்தது. ” போரில் காது செவிடானது போகட்டும். எங்கோ மூளை கலங்கி விட்டது. அல்லது மிக அதிகமான மன அழுத்தம்.. நம் படை வீரர்களுக்கு மன நிலை ஆரோக்கியம் அவசியம் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும். “ தாஸின் தலைமை அதிகாரி , இரவு உணவின்போது காண்ட்டீனில் சொல்லிக்கொண்டிருந்தார். இரவுகள் இப்போதெல்லாம் கனக்கின்றன.

Monday, November 20, 2017

கோரஸ்ஸும் ரெஜினா டீச்சரும்.

கோரஸ் பாடுவோர் நிற்கும் விதத்தைப் பற்றி எழுதியதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உண்மையில் கோரஸுக்குப் பாடுவோரை வரிசையாக நிறுத்தும் சடங்கு அரசியல், ஜால்ரா, பாலியல் வசீகரம் எனப் பல உள்ளடுக்குகளைக் கொண்டது.
ஏழாம் கிளாஸ் என நினைக்கிறேன். பள்ளிக்கு சில முக்கியஸ்தர்கள் , குழந்தைகள் தினவிழாவிற்கு வருகிறார்கள் என பெரிய டீச்சர் சொல்ல, வகுப்புகள் திமிலோகப் பட்டன.
”ரோசம்மா டீச்சர், உங்க பிள்ளேள் எக்ஸர்ஸைஸ். செவன் ஏ, வளையம் வைச்சு போனவருசம்மாதிரி பெர்பார்மென்ஸ். 6 ஏ, பி, ஸி ’கயவனுக்கும் கதிமோட்சம்’ டிராமா... விக்டோரியா டீச்சர், நீங்க ஸ்க்ரிப்ட் வைச்சிருக்கீங்கள்ளா?”
படுவிரைவாக யார்யார் என்ன செய்யவேண்டுமெனச் சொல்லி வந்த பெரிய டீச்சர் ‘ரெஜினா டீச்சர், நீங்க கோரஸ் தயார் பண்ணுங்க. ஒரு நேரு பாட்டு கடைசில வைச்சிருங்க. ஆண்டவர் தோத்திரம் முதல்ல. வெளங்கா?”
ரெஜினா டீச்சரை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பல் துருத்தி, எப்பவும் கடுவென இருப்பார். அவர் வாயில் எங்களைப் பற்றி மனித விளிகளே வராது
“ நாயே, எங்கிட்டுலா ஓடுத? கிளாஸுக்குப் போ. ஒண்ணுக்கெல்லாம் ரீஸஸ்லதான் போணும். ஏலே, வெள்ளப்பன்னி.. ஒனக்குத் தனியாச் சொல்லணுமோ?”
என்னை அவர் “ வெள்ளைப் பன்னி “என்றோ “கண்ணாடி” என்றோதான் அழைப்பார். 6ம் கிளாஸில் கண்ணாடி போட்டதன் பட்டப்பெயர் அது. கூட இரூப்பவர்கள் படுகறுப்பாக இருக்கையில், மாநிறம் - வெள்ளை.
ரெஜினா டீச்சர் , “ரோசம்மா, ஒரு நிமிசம்” என்று க்ளாஸ் டீச்சரிடம் கேட்டுவிட்டு “ பிள்ளேளா, யாரெல்லாம் பாட வாரீய?” என்றார். ஒருவரும் பேசவில்லை.
“நீயாச் சொல்லுதியா, இல்ல கூப்பிடட்டா? நாயிங்க ஒழுங்காச் சொன்னா கேக்கா பாரு?”
அதற்கும் மவுனம்.
“சரி, வள்ளி, செல்வி, கலைவாணி, மரிய ரோஜா, ஆறுமுகம், செல்வன், விக்டர், சுதாகர் ..லே கண்ணாடி -உன்னியத்தான். எந்திரி”
அனைவரும் பெரியடீச்சர் ரூம் வாசலில் நிறுத்தப்பட்டு “ எங்கே இறைவா இருக்கின்றாய்? எனை நீ எதற்கு அழைக்கின்றாய்?” என்று பாடினோம்.. கைகளை முன்னே சேர்த்து , மர்மஸ்தானத்தை மறைத்தபடி வைத்து நிற்கவேண்டும். ஒரே மாதிரி சட்டை வேண்டும். இறுதியில் ஸ்கூல் யூனிபார்ம் போதுமென அறிவிக்கப்பட்டது.
உயரவரிசைப்படி நிறுத்தப்பட்டதில் நான் கடைசிக்கு முந்திய வரிசை. ஓரங்களில் பசங்கள். நடுவில் பெண்கள். செல்வி, முத்துராணி பக்கம் நான். கொஞ்சம் மகிழ்வான வெக்கமாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
” முண்டக்கண்ணி, ஒழுங்காப் பாடுவியாட்டி?” கிசுகிசுத்தேன் முத்துராணியிடம்.
’போல கண்ணாடி”
சில்வியா டீச்சர் அடுத்தநாள் காலையில் எங்கள் அணியைப் பார்த்தார். பெரிய டீச்சரிடம் எதோ சொல்ல அவர் அவசரமாக வெளியே வந்தார்.
“ரெஜினா டீச்சர்? எங்க டீச்சர்?”
ரெஜினா டீச்சர் கையில் பிரம்புடன் வந்தார். பாலகணேசன் ஒழுங்காகப் பாடாமல் சிரித்ததால் அவனுக்கு அடிகொடுக்க ஏழு ஸியில் பிரம்பு வாங்கிவரப் போயிருந்தார்.
“டீச்சர், என்ன இப்படி நிறுத்தி வச்சிருக்கீங்க? பொட்டப் பிள்ளேளா நிறுத்துங்க. செவத்த புள்ளேள் முன்னாடி நிறுத்தணும். ஏ,செல்வகுமாரி, நீ கடைச் வரிசைக்குப் போ. செல்வி, நீ மரிய ரோஜா இடத்துல வா.”
திருடர்களைப் பிடித்து வைத்த வரிசையில் போலீஸ் நோட்டமிடுவது போல பெரியடீச்சர் வரிசையை வலம் வந்தார்.
” பசங்கள எதுக்கு வச்சிருக்கறீங்க?”
“மேல் வாய்ஸ் வேணும் டீச்சர். நல்ல பிட்ச் போற பசங்களத்தான் எடுத்திருக்கம்”
“பசங்க வேணாம். பொம்பளப் பிள்ளேள மட்டும் நிறுத்துங்க. வர்ற கெஸ்ட் எல்லாம் இந்த கருமூஞ்சிகளப் பாக்க வேண்டாம்.வெளங்கா ஒங்களுக்கு?”
சில்வியா டீச்சர் “ வேணா எங்கிளாஸ்ல இருந்து மூணு பிள்ளேள அனுப்பட்டா டீச்சர்? வசந்தி, பரிமளா, ஜோஸஃபைன்...”
பெரியடீச்சர் போனதும், ரெஜினா டீச்சர் “சில்வியா டீச்சர், கொஞ்சம் இரிங்க” என்றார்.
“அவதான் சொல்லுதான்னா நீங்களும் சேந்து பாடுதீங்க? பிள்ளைகளை பாட்டுப்பாட கூப்புடுதோமா, இல்ல வந்திருக்கறவன் வக்கிரமாக்ப்பாக்க குளுகுளுன்னு செவத்தபொண்ணுகளா முன்னாடி நிறுத்துறோமா?”
சில்வியா டீச்சர் அதிந்து போனார் “இல்ல, நான் என்ன சொல்லுதேன்னா..”
“ நம்ம வேலை என்ன? என்ன தொழில் செய்யச் சொல்லுதாக? பாடுற பாட்டு எங்கே இறைவா?ன்னு , செய்யறது சாக்கடை வேலை. தூ”
சில்வியா டீச்சர் கண்களைத் துடைத்துக்கொண்டு விரைந்தார்.
ரெஜினா டீச்சர் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார் .

“ செவத்த பிள்ளேளா முன்னாடி நிறுத்தினாத்தான் ஸ்கூலுக்கு காசு கிடைக்கும்னா, அது வேற தொழிலுட்டீ. பாவி மக்களா. சேசு மன்னிக்கமாட்டாருட்டீ உங்கள. கறுப்பு ஆடு..எல்லாம் கறுப்பு ஆடு.”
நாங்கள் கோரஸில் இருந்தோம். விழா முடிந்த இரு நாட்களில் ரெஜினா டீச்சரைப் பள்ளியில் காணவில்லை. வேலையை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றார்கள்..

நான் ரெஜினா டீச்சரின் மாணவன் என்பதில் ஒரு பெருமை இருக்கிறது.

Monday, November 13, 2017

6174 - மின்நூல் வடிவில்

6174 புத்தகம் இப்போது இ புக் வடிவில் கிண்டிலில் வெளிவந்துள்ளது.
ஆரம்பகாலத் தள்ளுபடி விலையாக ரூ 150 வைக்கப்பட்டிருக்கிறது . (420+ சொச்சம் பக்கங்கள்).
amazon.in கிடைக்கிறது. உலகில் பல நாடுகளின் அமேசான் தளத்தில் அந்தந்த கரன்ஸியில் விற்பனைக்கு இருக்கிறது.
kindle unlimited பயனாளர்களுக்கு இலவசம்.
அமேசான் தளத்தில் தேடுவதற்கு sudhakar kasturi என்றோ 6174 tamil book என்றோ இட்டு, e book வகையைத் தேர்ந்தெடுக்கலாம்.
படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி.

Saturday, November 11, 2017

ஆறுமுகம் அண்ணாச்சி

சுப்பிரமணி என்ற எஸ் எஸ், போன் செய்தபோது இரவு 9 மணி. “ஏ, தூங்கிட்டியா? ஒண்ணு பேசணுமே” என்றான். ந்யூஜெர்ஸியிலிருந்து அழைப்பதால் எதாச்சும் அர்ஜெண்ட் மேட்டர் இருக்குமெனவே நினைத்தேன். ”இல்லடே, சொல்லு”
”வாட்ஸப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன். யார்னு சொல்லு பாப்பம் ”
வாட்ஸப்பை உயிர்ப்பித்தேன். “ லே, மக்கா! இது ஆறுமுவம்லா?!”
அட, ஞாபகம் இருக்காடே?”
ஞாபகம் இருக்காவா? அவரிடமல்லவா நாங்கள் ஆங்கிலம் பேசிக்கற்றோம்? இன்று கற்பனை வளத்தைப் பெருக்கியதற்கு அவரல்லவா காரணம்?
“ஒரு நிமிசம் இருடே” என்றேன் “ குட்டியை லைன்ல எடுக்கேன். அவனும் கேக்கட்டு”
குட்டி என்ற சுந்தரராஜன் உறங்கியிருந்தான். எழுப்பவேண்டாமென நினைத்து பிற பேச்சுக்களைத் தொடர்ந்தோம். ஆனால் நினைவில் குடைந்து கொண்டே இருந்தது “ சே, குட்டியும் பேசியிருந்தா நல்லாயிருந்திருக்குமே?”
தூத்துக்குடி ஹார்பர் குவாட்டர்ஸில் இருந்த காலம் அது. மாணவப் பருவம்.
82ல் குட்டியும் நானும் எங்கள் தெருவில் ( இதே சுப்ரமணியின் வீட்டின் முன்னே) நடந்து கொண்டிருக்கும்போது “தம்பி” என்று குரல் கேட்டது. பரட்டைத் தலையும், ஒல்லியான உருவமுமாய் ஆறுமுகம் பின்னே வந்துகொண்டிருந்தார்.
“ஒரு சந்தேகம் தம்பிகளா, இந்தா இங்கிட்டு அய்யரு வீட்டுல ட்யூப்லைட்டு எரிதுல்லா? அது ஏன் நீலமா எரிது? அங்கிட்டு மேல பாக்கச்சே, மாடி வீட்டுல ( அது சுப்ரமணி வீடு), டீப்லைட்டு வெள்ளையா எரிது. ஏம்டே?”
எங்களுக்கும் வேறு வேலை வெட்டியில்லை. குட்டி என்னைப் பார்க்க...புரிந்துகொண்டேன்.
”அதுவா அண்ணாச்சி?, நீலமா எரிதுல்லா, அதுல அல்ட்ராவயலட் ரேடியேஷன் வருது. அவங்க வீட்டுல அதை வச்சித்தான் ஹால்ல டி.வி போடுதாங்க. அவங்க வீட்டுல ப்ரிட்ஜு இருக்குல்லா, அதுக்கும் அது வேணுமாங்கும். எல்லாம் அந்த நீல லைட்டுலேர்ந்துதான் வருது”
பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள நான் பாடுபட, குட்டி தொடங்கினான் “ மேல் வீடு இருக்கு பாத்தியளாண்ணாச்சி? அவங்க வீட்டுல வெள்ளை லைட்டுலயே டி.வி ஓடிருது. அதுக்கு இன்ஃப்ரா ரெட் லைட்னு பேரு ”
ஆறுமுகம் சந்தேகமாக எங்களைப் பார்த்தார்.
“வேணும்னா அவங்க வீட்டுப் பையனையே கேளுங்க. லே , எஸ் எஸ்ஸைக் கூப்பிடு. அவனே சொல்லட்டு” அவனையும் எங்கள் களவாணிதனத்தில் இழுக்க முயற்சித்தோம்.
அப்பவும் ஆறுமுகத்தின் கண்களில் சந்தேகம் மின்னியது.
”இதெல்லாம் இங்க்லீஷ்லல்லா இருக்கும்? தமிழ்ல சொல்லுதீயளே?”
ஆஹா.. இதுதான் சந்தேகமா?
ஆனால் ப்ரச்சனை எங்களுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியாது. தமிழ்மீடியப் பயல்கள் இருவரும்.
ஆங்கிலத்தில் சொல்லியே ஆகவேண்டும்.
எனக்கு ஆங்கிலப் பாடத்தில் டாகூரின் மனப்பாடக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
“அண்ணாச்சி, இத This is my prayer to Thee My Lord" ன்னுவாங்க”
குட்டி தொடர்ந்தான் “ அந்த வெள்ளை லைட்டுக்கு Strike strike at the root of penury in my heart ' ன்னுவாங்க. விடுறே நம போவோம். அண்ணாச்சி நம்மள நம்பமாட்டிக்காரு”
’அடடே ’ என்றார் ஆறுமுகம் நெகிழ்ந்து போய் “ என்னமா இங்க்லீசு பேசுதுக, நம்ம ஹார்பர் பிள்ளேள்? நீங்க கெட்டிக்காரப் பயலுவடே.”
ஆறுமுகம் ஒரு நடமாடும் பல்வினை வித்தகர். முக்கியமாக நடமாடும் முடிதிருத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் போய், தோட்டத்தில் நாற்காலி போட்டு, முடி திருத்துவார். சிறியதாகக் குழிபறித்து, முடியை அதில் போட்டு மூடிவிடுவோம். ஹார்பர் குவாட்டர்ஸ்ஸில் 80களின் இறுதி வரை இது இருந்தது.
எங்கிருந்து வந்தார், அவருக்கு யார் சொந்தம்? யாருக்கும் தெரியாது. எங்கே தங்கியிருப்பார் என்பதும் தெரியாது. ஹார்பர் குவாட்டர்ஸில் அங்குமிங்கும் நடமாடுவார். ஏதோ சில்லறைப் பணிகள் செய்துபோவார் என்பதுதான் பலருக்கும் அவர் குறித்துத் தெரிந்த செய்திகள்.
டவுணுக்குச் சென்றோ,அல்லது கடைகள் வளாகத்திலோ முடிவெட்டுவதை விட ஆறுமுகத்தை அழைத்து வெட்டிக்கொள்வதை நாங்கள் விரும்பினோம்.
”ஏம்டே லேட்டு? ” என்பார், முடியை நீரில் நனைத்து விட்டவாறே. “அதா? ஒரு சுறாமீன் நம்ம வீட்டுல புல்லு திங்க வந்திச்சில்லா?, வெரட்டி விட நேரமாயிட்டு..”
“அப்டியா?! கழுத்த நேர வையி தம்பி. தலையாட்டாத. ஆங் அப்படித்தான். பொறவு?”
“பொறவென்னா? நானும் குட்டியும்தான் கொண்டுபோய் கடல்ல விட்டுட்டு வந்தம். அண்ணாச்சி சொறா மீன் பாத்திருக்கீயளா?”
“இல்லயடே? அண்ணாச்சிய ஒரு கொரலு கூப்டிருக்கலாம்லாடே? ரெண்டுபேரும் என்னை மறந்துட்டீய. ஆ.. கொஞ்சம் தலைய குனிஞ்சிக்க. அங் அங்கனயே வச்சிரி. கவனம் தம்பி. கத்தி வெட்டிரும். இந்தா ஒரே நிமிசம்..ஆங்.ஆயிட்டு. அப்புறம்?”
இப்படியெல்லாம் பேச்சு, ஸ்டெப் கட்டிங் புகழ் சலூன்களில் சாத்தியமில்லை.
அவருக்கு நாங்கள் விடும் புருடாக்கள், கட்டுக்கதைகள் என நன்றாகவே தெரிந்திருந்தும், வெள்ளந்தியாகவே நடித்தார்.
“ இந்த கேணப்பயலுவோ சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடுதீயளே அண்ணாச்சி? “ என்று அண்ணன் கேட்டபோது “ சின்னப் புள்ளேள். நம்மள வச்சி சிரிக்குது. சிரிச்சிட்டுப் போட்டு.என்ன இப்ப?” என்பார் கண்சிமிட்டிச் சிரித்து.
சில இளைஞர்களிடம் கிளுகிளுப்பான கதைகள் சொல்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களிடம் அதே அறியா வெகுளி நடிப்பு மட்டும். 86ன்பின் அவரை நான் பார்க்கவில்லை.
எஸ் எஸ், “இந்த போட்டோவை நம்ம ஆனந்து Joseph Sugananth 5 வருசம் முன்னாடி எடுத்திருக்கான். அது இப்ப வாட்ஸப்ல எங்கிட்ட வந்திச்சி” என்றான். இப்போது ஆறுமுகம் இருக்கிறாரா ? தெரியாது.
எம்.பி.ஏ வகுப்பில் ஒரு முறை Transactional analysis ல் Eric Berneன் Games People Play பற்றிப் பேசுகையில் ஆறுமுகத்தின் நடிப்பு பற்றிச் சொன்னேன். Transactional Analysis expert ஒருவர் “அது விளையாட்டு என்பதாக வராது’ என்றார். ஆனாலும், 'இது மிக சுவாரஸ்யமான பரிமாற்றம்”' என்றார்.
பல முகங்கள் நமக்கு. ஆறுமுகத்துக்கு எங்களிடம் ஒரே முகம். அது ஏமாற்றுவதும் ஏமாறுவதாக நடிப்பதிலும் பொய்யில்லாத முகம்.
பி.கு : குட்டி நேற்று அழைத்திருந்தான் “ அதென்னடே மனப்பாடப் பாட்டு? ..This is my prayer. ஆறுமுகத்துகிட்ட பாடிப் பாடி, படிச்சதுல இப்ப அது ஒண்ணுதான் ஞாபகத்துல இருக்கு”
தாகூர் , ஆறுமுகத்திற்கு நன்றி சொல்லியிருப்பார்.

Wednesday, November 08, 2017

ஏழும் நம்பிக்கையும்

திருமண வரவேற்பு இன்னும் தொடங்கவில்லை. ட்ராஃபிக் இருக்குமே என விரைவாகக் கிளம்பியதால், விரைவாக மண்டபத்தை அடைந்து வருபவர்களை வெறுமே வேடிக்கை பார்த்திருந்தேன்.பலரும் அறியா முகங்கள். வாழ்வில் ஒரே முறை அணியப்போகும் வேஷத்துக்காக ,தொளதொளவென ஜிப்பாவும் டைட்டான பைஜாமாவும் பழகாத சிலர் , கைகளை அகட்டி வைத்துத் தடுமாறி, கோமாளிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
”ஹலோ” என்ற குரலில் ஆசுவாசமடைந்தேன். தியாகராஜன் பின்னால் நின்றிருந்தார். “ எங்க மாமனார் “ என்று அவருக்கு அருகில் நின்றிருந்த பெரியவரை அறிமுகம் செய்துவைத்தார். “ ஊர்ல இருந்து வந்து பத்து நாளாவுது. போரடிக்குதுன்னாரு. சரி, இங்க வந்தா நம்ம ஆட்களாப் பாக்கலாமேன்னு”
பெரியவர் கை கூப்பினார். பேசவில்லை . பெரிய விபூதிப்பட்டை, நடுவே பெரிய குங்குமப் பொட்டு என சிவப்பழமாக நின்றிருந்தார். கொஞ்சம் பெண் முகக் கட்டு.
அப்படியே பவுடர் போட்டு, காவி கட்டி விட்டிருந்தால் “அரியது கேட்கின் வரிவடி வேலா” என்று பாடும் கே.பி.சுந்தராம்பாள் போல இருந்திருப்பார்.
”பெரியவளுக்கு நாளைக்கு எக்ஸாம். அதான் வீட்டுல விட்டுட்டு வந்துட்டோம். சாப்டதும் உடனே கிளம்பணும்” தியாகராஜன் அவர்பாட்டுக்கு எதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்னமோ ஒரு பிடிப்பு வரவில்லை. எல்லாம் பகட்டாகத் தெரிந்தது.
”எல்லாச் சடங்குகளுக்கும் ஏதாச்சும் காரணம் இருக்கும். ஆனா இந்த வரவேற்புக்கு பணமும், ஆடம்பரமும்தான் காரணமாயிருக்க முடியும்” என்றார் தியாகராஜன். முன் வரிசையில் இருந்த முரளி திரும்பிப் பார்த்தார். “ எல்லாத்துக்கும் காரணம் இருக்காது சார். சிலதெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணியிருப்பாங்க. கேட்டுப்பாருங்க , பெரியவங்களூக்கே தெரியாது” என்றார் முரளி.
தியாகராஜன் ஆமோதித்தார். நான் “ தெரிஞ்சிருக்காதுங்கறதுனால காரணம் இல்லேன்னு சொல்லிட முடியாது இல்லையா?” என்றேன்.
முரளி எழுந்து எங்கள் வரிசையில் அமர்ந்தார் “ எங்க மாமி, எண்பது வயசாகுது. இப்பவும் அதச் செய்யாதே, இதச்செய்யாதேன்னு சொல்லிகிட்டே இருப்பா. கேட்டா” இப்படித்தான் எங்கம்மா சொல்லுவா” என்பாள். பாருங்க போனமாசம் ஊருக்குப் போயிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்துல ராமர் கோயில். அன்னிக்கு என்னமோ விசேஷம். சாயங்காலமா, எல்லாரும் போயிட்டு ஒரு அர்ச்சனை செஞ்சுடலாம்னு போனோம். நடை திறக்கலை. சன்னதிப் படியில உக்கார்ந்திருந்த அர்ச்சகர் , எங்கம்மா கிட்ட “ மூத்தவன் வரலையா?”-ன்னார். அம்மா பதில் சொல்றதுக்குள்ளே எம்பொண்ணு “ பெரியப்பா ஏழுநாள்ல வருவார்”ன்னுது.”
கே.பி சுந்தராம்பாள் சலனமின்றி அமர்ந்திருந்தார்.
“ மாமி அவள் தலையில சின்னதாக் குட்டினாள் “ அசடு. ஆறு நாள்னு சொல்லு” “இல்ல பாட்டி, ஏழுநாள்னுதான் இமெயில் எழுதியிருந்தார்”
மாமியின் கண்களில் லேசாக் கோபம் எட்டிப் பார்த்தது “டீ, இவளே, ஒண்ணு ஆறுன்னு சொல்லு, இல்ல எட்டுன்னு சொல்லு. சாரங்கன் சந்நதியாக்கும்”
சுந்தராம்பாள் சற்றே தலையைத் திருப்பினார். முரளி தொடர்ந்தார்.
“ என் பொண்ணுக்குக் கோபம். எல்லார் முன்னாலயும் குட்டிட்டுத் திட்டவும் செய்யறா இந்த மாமிப்பாட்டி. “ பாட்டி, வாட்ஸ் ராங் இன் ஸேயிங் செவன்? அவர் எழுதினதைத்தான் சொன்னேன். ஏன் ஏழு சொல்லக்கூடாது?”
” சார்ங்கம் விடாதுடீ. பாத்துண்டே இருக்கும். யாராச்சும் ஏழுன்னா அது எழுந்துடும். பாரு நடை திறந்தாச்சு. ஸ்வாமிகிட்டே வேண்டிக்கோ.” என்றவள் கன்னத்தில் போட்டுக்கொண்டு “ ராமா ராமா, குழந்தை தெரியாமச் சொல்லிடுத்து. க்‌ஷமிக்கணும்” ன்னா.” முரளி நிறுத்திச் சிரித்தார் “ ஏழுக்கும், சாரங்கபாணிக்கும் என்ன ஏழாம் படையா? ஆகாதுன்னுட்டு . கேட்டா, எங்கம்மா சொன்னா”ன்னுவா
சுந்தராம்பாள் முன்னே குனிந்தார். முரளியைப் பார்த்து “ உங்க மாமி இங்க வந்திருக்காங்களா?”
“இல்ல. ஊர்ல இருக்கா” என்ற முரளி சற்றே கலவரமடைந்தார்.
“இங்க இருந்திருந்தா, கால்ல விழுந்து வணங்கியிருப்பேன். என் துரதிருஷ்டம்” என்றார் மனிதர். நான் வியப்புடன் ஏறிட்டேன்.
“அவங்க சொன்னது கம்பராமாயணத்துல வர்ற காட்சி. வாலியுடன் போர் செய்யப்போகுமுன் சுக்ரீவன் ராமனின் பலத்தைச் சோதிக்கிறான். ஏழு பெரிய மராமரங்களை அம்பால் அடித்துக் காட்டச் சொல்கிறான். ராமன் தன் பாணத்தை விடுமுன் “ ஏழு தன்னை துளைத்து வா” என்று ஏவுகிறான். ராமபாணம் அந்த ஏழு மரங்களைத் துளைத்து , அதன்பின் கீழுலகங்கள் ஏழையும் ஊடுருவிப் பின் மற்ற ஏழு என்ற எண்கொண்டவற்றைக் காணாது ராமனின் அம்புறாத் தூளியில் வந்து நின்றது. ஏழு என்றால் அப்போது கிளம்பும் எத்தனிப்புடன் அது காத்திருக்கிறது” என்கிறான் கம்பன்.
“ஏழு மரா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்,ஒழிவது அன்று, இன்னும்.”.

சந்தேகித்துச் சும்மா இருக்கறதை விட, அறியாது நல்லது செய்து போவதில் என்ன தவறு? எப்போவாவது உண்மை ஒரு தேரில் ஏறி வரும். அன்று நாம் தரிசிக்க, இன்றும் தேரின் வடத்தை விடாது பிடித்து இழுக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் வணங்கத்தக்கவர்கள்”
சுந்தராம்பாள் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.
எழுந்து, நீண்ட வரிசையில் அடங்கினோம்.
மேடையில் ஏதோ ஒரு முதிய தம்பதிகள் ஏறிவர, மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினர். முன்னே ஒரு வரிசையில் ஒரு இளைஞன் அதைப் பார்த்து சிரித்தபடி அருகிலிருந்தவளிடம் ஏதோ சொன்னான்.
அரங்கம் இப்போது செயற்கையாகத் தெரியவில்லை. இதற்கென எதாவது பாடல் இருக்கும். ஒரு சுந்தராம்பாள் இருப்பார்.
ஒரு மாமியும் இருப்பாள்.

வாடகை சைக்கிள்


பஸ்ஸ்டாண்டில் இருந்து சிவன்கோவில் ஐந்து நிமிட நடை. திருநெல்வேலிக்காரர்கள் பாஷையில் ”ரெண்டு எட்டு எடுத்து வச்சா வந்துரும்.”
“என்ன மெதுவா நடக்கீங்க? வேல கெடக்கு. நைட்டு சோறு யாரு பொங்குவா?” சீதாலட்சுமியின் குரலைப் பொருட்படுத்தாது வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்துப் பின்னே நடந்தான் சிவராமன். கோபத்தில் அவன் மூச்சு சீரற்று வந்தது.
சீதா ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேகத்தில் கோவிலை நோக்கி நடந்தாள். “இந்தாளு எப்பவுமே இப்படித்தான். மத்தியானம் பேசினோம்லா? அதான் வேதாளம் முருங்க மரம் ஏறிக்கெடக்கு. விடுடி. வருவாரு” அருகில் நடந்த தங்கையிடம் கடுப்புடன் பேசியபடி நடந்தாள்.
சிவராமன் தனிச்சையாகத் தலை திருப்பினான். முன்பு இங்கு தனராஜ் அண்ணன் கடை இருந்தது. ஆறுமுக நாடார் வாடகை சைக்கிள் கடை. என்று போர்டு போட்டு “ கடம் அன்பை முரிக்கும்” என்று இலக்கணத்தை முறித்துப்போட்ட சாக்பீஸ் எழுத்து எச்சரிக்கையுடன் போர்டு தொங்கியது
பச்சைக்கலர் ஹெர்குலிஸ், டபுள் பார் ராலே, முன் வீல் பக்கம் ட்புள் ஸ்ப்ரிங், காரியர் வைச்சது , வைக்காதது எனப் பல சைக்கிள்கள், பெயிண்ட்டால் எண் இடப்பட்டு வரிசையாக நின்றிருக்கும்.
சிறுவர்களுக்கு இரு குட்டையான சைக்கிள்கள் இருந்தன. “ஐஞ்சு பைசாக்கு அரை மணி நேரம்- சிகப்பு சைக்கிள், ரெண்டு பைசாவுக்கு - ஊதா சைக்கிள்” என்று தனராஜ் தன் இச்சைக்கு விலை வைத்திருந்தார். சில பசங்களுக்கு அரைமணி நேரம் முடிந்திருந்தாலும் அதிகம் வாங்க மாட்டார் .
சிலநேரம், பெரிய சைக்கிள் ஓட்டும் மிதமிஞ்சிய ஆசையில், சின்ன சைக்கிளை வைத்துவிட்டு, “அண்ணாச்சி இன்னும் ரெண்டு நிமிசம் இருக்குல்லா?. ஒரேயொருவாட்டி, அந்த திருப்பம் வரை அரைப்பெடல் போயிட்டு வந்துர்றேன்” என்று கெஞ்சினாலும் “போடே, ? பெரிய சைக்கிளெல்லாம் மீசை இல்லாத பயலுவளுக்குக் கிடையாது. ” என்று இரக்கமே இல்லாமல் மறுத்துவிடுவார். அவரை , இசக்கி ஆச்சியின் கெட்ட வார்த்தை வரிகளில் திட்டிக்கொண்டே சிறுவர்கள் திரும்பிப் போவார்கள். . (இசக்கி ஆச்சியின் கொடுவாய் மொழியை இங்கு பதிவு செய்ய முடியாது).
தனராஜ் அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் மொபைல் கடை ஒன்று முளைத்திருந்தது. சிவராமன் நின்று உள்ளே கவனித்தான். அந்த முதியவர்...தனராஜ்... தனராஜ் அண்ணாச்சியேதான்.
”தெரியுதா அண்ணாச்சி?” கேட்டு அறிமுகப்படுத்திக்கொண்டான். “ டே, நீ முரளி தம்பில்லா?! எப்படி இருக்க? ஒங்கண்ணன் எங்கிட்டிருக்கான்? முப்பது வருசமாச்சேய்யா பாத்து?!” அண்ணாச்சியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
”ஒக்காருடே, அப்பா எங்கிட்டிருக்காரு?”
”அப்பா, போயாச்சி அண்ணாச்சி. பத்து வருசமாவுது”
தனராஜ் சற்றே மவுனித்தார் “அவர மாரி ஆட்களையெல்லாம் இனிமேப் பாக்க முடியாது. கடைமேல ஒரு கேஸ் வந்தப்ப, அவர்தான் முன்னாடி நின்னு முடிச்சுக்கொடுத்தாரு. இல்லேன்னா, வள்ளிசா கடை போயிருக்கும், கேட்டியா? ”
”ஆமா” என்றவர் தயங்கியபடி தொடர்ந்தார் “ ஒனக்கு முன்னாடி போச்சே, ரெண்டு பொம்பளேள்? அது ஒன் சம்சாரமும், அவ தங்கச்சியுமா?”
“ஆமாண்ணாச்சி. வடக்குத்தெருவுலதான் அவங்க அப்பா வீடு”
“தெரியும்டே” சிரித்தார் அவர் “ மணிகண்டன் சாரோட மூத்த மவ. கலியாணத்துக்குக் கூப்டிருந்தாரு பாத்துக்க. நான் அப்பப் பாத்து தென்காசிக்குப் போயிருந்தன். நீதான் மாப்பிளைன்னு தெரியாமப் போச்சே. சரி, எல்லாம் இந்தூர்ல நமக்குச் சொந்தந்தானேய்யா, என்ன சொல்லுத?”
சட்டென முகம் சீரியசானார் “ அதென்னா முகம் வாடி இருக்கே? அவளும் கோபமால்லா போனா? என்ன விசயம்? அண்ணாச்சிகிட்ட சொல்லலாம்னா சொல்லு”
“ஓண்ணுமில்லண்ணாச்சி. அவ தம்பிக்கு புல்லட்டு வேங்கணும்னா. நா ’இப்ப வேணாம். அவனா, கடன அடைக்கற புத்தியோட வர்றப்போ வேங்கித்தாறன்னேன். அதாம் கோபம். பயல்னா ஒரு பொறுப்பு வேணாமாண்ணாச்சி? சும்மா வேங்கிக்கொடுத்து குட்டிச்சுவராக்குதாங்க”
அண்ணாச்சி மவுனமாக இருந்தார் “நீ சொல்றது நியாயந்தான்.” சட்டென நிறுத்தி “ டே, ரெண்டு டீ போடுறே, தம்பி யாருன்னு தெரிதா? நம்ம முரளி தம்பி. சின்ன சைக்கிள் கேப்பாம்லா? ஆங், அவந்தான்!”
டீக்கடை அண்ணாச்சி வாயெல்லாம் பல்லாக “ டே, ஒம்பேரு மற்ந்திட்டு. முரளி நல்லாருக்கானா? நம்ம கடைல திருட்டு தம் அடிச்சு, கடம் வச்சில்லா டீ குடிப்பான் ஒங்கண்ணன்? அவ்னக்கிட்ட ”செல்லையாவப் பாத்தேன். ஒங்கணக்குல இன்னும் அம்பது ரூவா கடனா நிக்கி”ன்னாருன்னு சொல்லு. என்ன சொல்லுவியாடே?” இருவரும் சிரித்தார்கள்.
அண்ணாச்சி “ டே, நீ சொல்ற மாரி பயலுவளுக்குப் பொறுப்பு வரணும்தான். ஆனா, பொம்பளேள் புத்தி இருக்கே, அதுல பாசம் கண்ணக் கட்டிரும் பாத்துக்க. எந்தம்பிக்கு இல்லேன்னா சொல்லுதீரு?ன்னுதான் அவளுக்கு முதல்ல வருமே தவிர, நீ என்னத்துக்குச் சொல்லுதே?ன்னு தோணாது. இதெல்லாம் பதவிசா எடுத்துச் சொல்லணும்டே”
“என்னண்ணாச்சி சொல்ல? எளவு ஒண்ணும் புரியாம கத்துதாளுவோ. போட்டி-ன்னு வந்துட்டேன்.’ கோயிலுக்கு வேங்க’-ன்னு இழுக்கா இப்ப”
”மரியாதைக்கி அவ கூடக் கோயிலுக்குப் போயிட்டு வா. அதான் முறை”
“எப்படீண்ணே? மனசு கொதிச்சுக் கிடக்கு. என்னத்தையாச்சும் சொன்னாள்னா, இடம் காலம் பாக்காம, களுத கன்னத்துல ஒரு இளுப்பு இளுத்துருவேன்”
“டே” என்றார் அண்ணாச்சி “ அடங்கி இரி” கையைக் காட்டி அமர்த்தினார். ஒரு நிமிடம் மவுனமாயிருந்தனர் இருவரும்.
“டே, இப்ப நான் தனியாளு. ஒனக்குத் தெரியுமான்னு தெரியல. எம்பொண்டாட்டி பரமேஸ்வரி கண்ணாலம் கட்டி ஒருவருசத்துல பிரிஞ்சி போனா. அப்ப, நீயெல்லாம் சின்னப் பய. முரளிக்குத்தெரியும். அவம் பாத்திருக்கான்.
கோபம் இருக்கு பாரு, மோசமான குணம் பாத்துக்க. நாம என்னதான் நல்லது பண்ணி ஒரு்குடம் பால் மாரி இருந்தாலும், ஒரு நிமிச கோபம், அதுல ஒரு கள்ளிச் சொட்டா விழுந்துரும். பின்னென்ன, குடம் பூரா வெசம் தானே?
பரமேஸ்வரி அன்பாத்தான் இருந்தா பாத்துக்க.
ஒரு நாள் அவ கடைக்கு வந்து “ மாமா, தம்பி வந்திருக்கான். அம்பது ரூவா கொடுங்க. ” அன்னிக்கின்னு பாத்து எனக்கு என்னமோ சின்ன கோபம் .
“எதுக்குட்டீ?” ந்னேன்.
“கோளியடிச்சி குளம்பு வச்சிருதேன். கறி வேணும்னா, கடைல சும்மாவா தருவாக?”ன்னா. இவ்வளவுதான் சொன்னா பாத்துக்க.
எனக்கு வந்திச்சே கோபம் “ செருக்கியுள்ள, எனக்கா சொல்லித்தாரே? நானே இங்க ஓட்டாண்டியா நிக்கேன். நீயென்னன்னா, தம்பிக்கு கோழி குழம்பு வக்கணும்னு வந்து நிக்க, என்னட்டீ? நாயே, பிச்சிருவேம் பிச்சி”
சொன்னவன் சொன்னதோட நின்னிருக்கணும். கையை ஓங்கிட்டேன். அவ அழுதுகிட்டே என்னமோ சொல்ல, நான் அவளைக் கடையிலேர்ந்து தரதரன்னு தெருவுல , இந்தா இங்கதான், ஒரு மூங்கில் கம்பு இருக்கும்லா, நம்ம கடைக் கூரைக்கி? அதுல மோதவிட்டு அடிச்சிட்டேன்.
அன்னிக்கு அவ அம்மா வீட்டுக்குப் போனவதான். நான் போயிக் கூப்பிடல, எங்காத்தா அப்பா, மாமா.. யாரு பேசப் போவல சொல்லு? அவ அந்த மிருகத்தோட வாழ மாட்டேன்னுட்டா. நானும் ‘பொட்டச் சிறுக்கிக்கு இம்புட்டு கோவம், அங்? நான் போயிக் கூப்பிடமாட்டேன். வந்தா வீட்டுல இருந்து வாழட்டும் இல்ல, சிவம்பாறைலேர்ந்து ஆத்துல விழுந்து சாவட்டு” ந்னு விட்டுட்டேன்.
இருவத்தைஞ்சு வருசம் ஓடிட்டு. அவளுக்கு என்னமோ மார்ல கட்டின்னாங்க. புத்து நோய்னு மெட்ராஸ் கூட்டிட்டுப் போனாவ. அப்பத்தான் எனக்கு விசயம் தெரீயுது. அங்க போயிப் பாத்தம் பாரு.”
அண்ணாச்சியின் குரல் நடுங்கியது. “ லே, “ சட்டென அழுகையில் வெடித்தார் “ லே, ரெண்டு பேருக்கும் மத்தியில கிடந்த ஒரு சீலை கிழிஞ்சி தொங்கிச்சி அங்கிட்டு. “ஏம்மாமா, என்ன முன்னாலயே பாக்க வரல?”னு அவ கேக்கா... என்ன சொல்ல?
”சிறுக்கி மவளே, இந்த கூறுகெட்டவன் மனசுல நீதாண்டி இருந்த... ஆனா அதோட விசமா வீம்பு ஒண்ணு நின்னு போச்சே?”ன்னு விம்முதேன்.
அவ கண்ணுல நீரா வடியுது “ நாந்தான் மாமா தப்பு செஞ்சிட்டேன். ஒங்கள ஒ்க்காத்தி வச்சி, ஒரு வாய்ச் சோறு சமச்சிப் போடலயே ? எனக்கும்லா வீம்பு வளந்துகிடக்கு? அதான் ஆத்தா , ஈரமில்லா நெஞ்சுல ஒனக்கு எதுக்குட்டீ உசிரு?ன்னு எடுக்கா போலுக்கு. எல்லாம் என் பாவம். என்னோட போவட்டு”ன்னா. ரெண்டு வாரத்துல போயிட்டா.
இப்ப எனக்கு வீம்பு பிடிக்கக்கூட ஆளில்ல தம்பி. ஒங்கூட சண்டை போட பொண்டாட்டி இருக்கா. போ.. அவகூட சண்ட போட்டு, சமரசமா இரி.

வாடகை சைக்கிளை ஒருநாள் போட்டுட்டுத்தான் எல்லாரும் போவணும். நேரம் முடியறதுக்குள்ள வண்டி ஒட்டி வேலையப் பாக்கறவன் புத்திசாலி. அத விட்டுட்டு, ரோட்டுல சண்டை போட்டு நின்னு, சோலி முடிக்காம, வண்டியத் திருப்பிக் கொடுக்கறவன என்ன சொல்ல? வண்டி ஓட்டறப்ப அடிபடாம, சந்தோசமா ஓட்டணும். அதான் சூச்சுமம். 
சிவராமன் எழுந்து வீடு நோக்கி நடந்தான் . ஒரு நிமிடம் கழித்து அதே தெருவில் கோயிலைப் பார்த்துத் திரும்பி நடந்தான். அண்ணாச்சி கடை விளக்கு அணைந்திருந்தது.
கதையா? நிஜமா ? என்று கேட்காதீர்கள்.உங்கள் மனம், இது கதை என்றால் கதை. நிஜமென்றால் நிஜம்.

Thursday, October 19, 2017

தீபாவளிக்குத் துணி

வழக்கமாக ரெண்டு மணி நேரமெடுக்கும் பயணம் ஒன்றேகால் மணிநேரமே எடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். தீபாவளி என்றால் மக்கள் எங்கேதான் போவார்களோ? கார்காலம் கழிந்தபின் நீல வானம் காணும் நிறைவுபோல, கரிய தார் ரோடு தெரிவதும் ஒரு சுகம்தான்.
பகவதி நான் வருமுன்னே வந்திருந்தார். இன்னும் கஸ்டமர் வரவில்லை என்பதால் சற்றே வெளியேறி, காலார நடந்து பேசிக்கொண்டிருந்தோம்.
”தீபாவளி எப்படிக் கொண்டாடப் போறீங்க, பகவதி? ஊருக்குப் போறீங்களா?”
“சொந்த ஊரே பாம்பேதான். அப்பா ரகுவன்ஷி மில்ல வேலை பாத்தாரு. தாத்தா காலத்துலேர்ந்தே பரேல்-ல இருக்கம். நீங்க?”
”எனக்கு என்ன? ஒண்ணுமில்ல. பையனுக்கு ஒரு துணி எடுத்திருகேன். அவ்வ்ளவுதான். அதிகம்
தீபாவளி பர்ச்சேஸ் பிடிப்பதில்லை. ”
“பையனுக்கு, மனைவிக்கு எத்தனை தடவை ட்ரெஸ் எடுத்திருப்பீங்க?”
“யார் கணக்குல வைச்சிருக்காங்க? நான் வாங்குவதில்லை. மங்கை வாங்கினால் உண்டு.”
“வீட்டுக்குன்னு வாங்கறது ஒரு சுகம் சார்”
“இருக்கலாம். பசங்களுக்கு கொஞ்சம் நீளமான பேண்ட்டா வாங்கணும். டக்-னு வளர்ந்துருவானுங்க பையனுக்கு என்ன வயசு?”
“ பதினொண்ணு.”
“ உங்கள மாதிரி் உயரமா ?”
“தெரியாது”
விழித்தேன்.
பகவதி நடந்தார் “ நான் அவனைப் பாத்து ஆறு வருசமாச்சு. சமீபத்து போட்டோ கூடப் பாத்தது கிடையாது”
நான் தயங்கித் தொடர்ந்து ந்டந்தேன்.
“ என் பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் மொதல்ல கொஞ்சம் மனஸ்தாபம். பரேல் வீடு சின்னது. கூட்டுக் குடும்பம். தனியாப் போணும்னா. பைசா இல்ல. டெய்லி இது ஒரு ரோதனையாப் போச்சு. ”
“அன்னிக்கு நான் கையை ஒங்கியிருக்கக் கூடாது. அவ கிளம்பி அம்மா வீட்டுக்குப் போனப்போ கூட, சரி, வந்திருவான்னு நினைச்சேன். வரல. அம்மாவும் நானுமாப் போனோம். அவ அண்ணன் அவமரியாதையாப் பேசிட்டாரு. கிளம்பி வந்துட்டோம். “
“சின்ன கோபமெல்லாம், தூண்டி விடத் தூண்டி விடப் பெரிசாகுது. குரங்குக்குப் புண்ணு வந்தா சொறிஞ்சு சொறிஞ்சு பெரிசாக்கி அதுலயே சாகற மாதிரி... . அவ ஷோலாப்பூர்லயே டீச்சர் வேலைக்குச் சேந்துட்டா. டைவர்ஸ்னு ஒண்ணு ஆகல. வீட்டுல பெரியவஙகளா பாத்து, பையன் அவகிட்ட இருக்கனும். பாக்க வரக்கூடாதுன்னுட்டாங்க. நானும் வேற கலியாணம் பத்தி யோசிக்கல. துபாய் போயிட்டேன்.
ஆறு வருசமுன்னாடி இந்தியா வந்தப்போ, பையனை ஒரு கலியாணத்துல பாத்தேன். சட்டுனு என்னமோ உள்ளே ஏதோ உடைஞ்சு போய், அவள் பக்கத்துல போய் கையைப் பிடிச்சிட்டேன். அவளும் ஒண்ன்ணும் சொல்லல. விருட்டுனு கிளம்பிப் போயிட்டா.
ரெண்டுபேர் வீட்டுலயும் விட்டுக்கொடுக்கல. போனவருடம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி பேச்சு எடுத்து, இப்பத்தான் சரி, டோம்பிவிலில புது வீட்டுல வந்து இருக்கேன்ன்னு சொல்லியிருக்கா. இந்த தீபாவளில போய் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன். ”
உணர்வு ஒருபுறம் இருந்தாலும், வேலை இருக்கிறதே? மணியைப் பார்த்தேன். கஸ்டமர் வந்திருப்பார். திரும்பி நடந்தோம். பழைய டெமோ சிஸ்டம்தான். நூறுதடவை இந்த பயாஸ்கோப் காட்டியிருப்பேன்.
பகவதி பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தார் “ பதினோரு வயசுப் பையனுக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியலை சார். என்ன வாங்கிட்டுப் போலாம்? அவளுக்கு என்ன வாங்கலாம்? எப்பவோ ப்ளூ கலர் பிடிக்கும்னு சொன்னது நினைவிருக்கு. இந்த தவிப்பு கொடுமை . நீங்க அதிர்ஷ்டசாலி சார்”
நானா ?
டெமோ கொஞ்சம் சுமாராகத்தான் போச்சு என்றே நினைக்கிறேன்.
வெடிகளில் திடீரென திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தீபாவளி நன்று.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Sunday, September 03, 2017

‘ஒரு நொடி.. ஒரே நொடி ..

‘ஒரு நொடி.. ஒரே நொடி சற்றே யோசித்திருந்தால்…’
இந்த உணர்வு நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். சிகரெட்டால்  புற்றுநோய் முற்றியவருக்கு,  வீட்டை விட்டு ஓடிப்போய்க்  கைபிடித்தவன் ஒரு தறுதலை என்பதை உணர்ந்தவருக்கு, போலி ஃபைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தவருக்கு,தன் ஓய்வூதியத் தொகையெல்லாம்  மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் கொடுத்தவருக்கு என வாழ்வில் பல தருணங்கள் வாய்ப்பதுண்டு.
’ஏன் அப்ப,  இப்படி யோசித்தேன்?’ என்பதை வருத்தத்துடன் வியக்காதவர்கள் இதில் இல்லை. ”நான் எப்பவுமே ஒரு நாள் போகட்டும் என தள்ளிப்போட்டு விட்டுத்தான் முடிவெடுப்பேன். ஆனால் அன்னிக்குன்னு பார்த்து…  சே, விதி”
இது விதியின் விளையாட்டா? விதியை நம்பாதவர்கள் ஏமாற்றப்படும்போது என்ன சொல்லிக்கொள்ள வேண்டும்?
பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுவாகச் சொல்வது ஒன்றுதான் ” சட்டுனு ஒரு முடிவெடுக்கணும்னு ஒரு உந்துதல் வந்தது.  சரி, கொடுத்துருவோம்னு தோணிருச்சு. ஏன்? தெரியாது. ஆனா என்னையும் மீறி ஒரு எச்சரிக்கை  உணர்வு வந்தது உண்மை. அதைக் கவனிக்காமப் போயிட்டேன்”
அதன்பின்பும் அந்த  ‘செய்” என்ற உந்துதல்  உணர்வு நீடித்ததா?  என்றால், இல்லை என்றுதான் பெரும்பாலும் சொல்லுவார்கள் . ஒரூ இனம்புரியாத அச்ச உணர்வு, தயக்கம்  தப்பு பண்ணிட்டமோ? என்ற பயம் ‘ என்பது அதன்பின் நெருடிக்கொண்டிருந்திருக்கும் ( இதற்கு ஆதார பூர்வமான புள்ளியியல் கணக்கு இல்லை. பெரும்பாலும் சொல்வது என்பது என் அனுபவத்தின் தகவல் மட்டுமே)
தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள 60%க்கு மேல் தயாராக இருந்திருக்கிறார்கள். ஆனால் மாற்றத் தயக்கம். பிறர் என்ன சொல்வார்களோ? என்ற பயமும், சமூக அழுத்தமும் முக்கிய காரணிகள்.
இந்த எச்சரிக்கை உணர்வு,  முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது,  ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். “எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா…”  என்பதில் உள்ள ’ஆனா”வை விமர்சிப்பவர்கள், அதன் பின்னிற்கும் அச்ச உணர்வின் அடிப்படையை தன்னிலைபோல் உணர்வதில்லை ( Lack of Empathy ). ஒருவருக்குக் கீற்றாகத் தோன்றி உள்ளிருக்கும் சந்தேகம், அச்சம், தவிர்த்து விலகும் உணர்வு ஏன் மற்றவருக்கு அதே நேரம் தோன்றுவதில்லை?
இதனை ஆராயுமுன் அறிவின் இருநிலைகளைப் பார்த்துவிடுவோம்.
மால்கம் க்ளேட்வெல் தனது blink ப்ளிங்க் புத்தகத்தில் பொறியாகத் தோன்றும் உள்ளூணர்வு கட்டளைகளைப் பற்றிச் சொல்கிறார்.  1/10 வினாடிக்குள் நமது உள்மனம், பொறிகளின் வாயிலாக நாம் அறியும் தகவலை உள்வாங்கி, ஒரு கருத்தும் தந்துவிடுகிறது. அதனைத் தாண்டியே, பெருமூளையின் தருக்கப்பகுதி, தகவலை அசை போட்டு முடிவெடுக்கிறது. இது பல நேரம் தகவலின் அடிப்படையிலேயே முடிவெடுக்கிறது. இதன் பின்னணியில் அனுபவமும், அந்நேரத் தகவலின் சூழ்நிலையுமே நிற்கின்றன..
அனுபவம் இந்த நிலையில் இருதள அமைப்பாக மட்டுமே இருக்கிறது . அதன் விளைவு.  அனுபவத்தின் முக்கிய   மறை விளைவும் காரணியுமான உணர்வு மழுங்கடிக்கப் படுகிறது. ஏனெனில், உணர்வு பூர்வ முடிவுகள் ஆபத்தானவை ‘என்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு எதிர்வினையாற்றுமுன், மனம் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது. “இது தேவையா? “ என்றோ,தீர்மானமாக “ வேணாம்” என்றோ வரும் அந்த உணர்வு ஒரு நொடிப்பொழுதினும் சற்றே அதிக அளவு மட்டுமே நீடிக்கிறது. இது எப்போதும் எதிர்மறையானதாகவே இருக்கவேண்டுமென்பதில்லை. “இதை வாங்கிவிடு” என்றோ “ ஆங். இவன்தான் உனக்குப் பொருத்தமான ராஜகுமாரன்” என்றோ குறக்களி அடிக்கும்.
மால்கம்  இதனை, slicing என்று சொல்கிறார். சிறு துண்டுகளாக தகவலை கிரகித்து,  அதனை மனத்தளவில், ஆழ்மனத்தின் அறிவுகொண்டு முழுமையுறச் செய்வது. உதாரணமாக,  15 வினாடி மட்டுமே காட்டப்படும்  ஒரு காணொளியில், வார்த்தைகள் தெளிவுறாதிருக்கும் நிலையிலும் மனம் அதனைப் புரிந்துகொள்கிறது. இதற்கு வீடியோ மெதுவாக, முழுமையாக இருக்கவேண்டுமென்பதில்லை. மனம் அதனை முழுமைபெறச் செய்துவிடுகிறது.  இதனை  உள்மன அறிவு என்று வைத்துக்கொள்வோம்.
இதனை மால்கம் க்ளாட்வெல் முதல் பலரும் பாராட்டி வந்தனர். அறிதல் என்ற பரப்பின் ஒரு பக்கம் மட்டுமே அது. மனம் சற்றே சிந்திக்குமானால், ப்ளிங்க் நிலையிலிருந்து நாம் தாண்டி விட்டோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடுத்த நிலையாக, தெளிவாக சிந்திக்கும் தருக்க சிந்தனை நிலை. இதில் எல்லாமே நிதானித்து, அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமாக முடிவெடுக்கிறோம் என நினைத்தால் அது தவறு.  இந்த தருக்க நிலைச் சிந்தனையை இரண்டாகப் பிரிக்கிறார்கள்.
ஒன்றைப் பற்றிச் சிந்திக்கும்போது,  நமது சாய்வுநிலை சிந்தனைகளும், முன் அனுபவங்களும் முடிவெடுக்க முனைகின்றன. காலை பத்து மணிக்குக் கதவைத் தட்டுபவர் போஸ்ட்மேனாக இருக்குமென்பது நம் முன் முன் அனுபவத்தின் நீட்சி. “ஓ நீங்களா?!, போஸ்ட்மேன்னு நினைச்சேன்” என்பதின் முன் நிலை அது.  விமானத்தில் தாடியுடன் வந்த ஒருவரைப் பார்த்த்தும் “ஒரு தீவிரவாதி ப்ளேனில் இருக்கிறார், ஆபத்து!” என்று ட்வீட் செய்யும் நபரின் சிந்தனை இதன் வலிமையான பகுதியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
காரணம் , இதன் முன் அனுபவம். அரசியல் கட்சிகள் உருவாக்கிய தகவல் வலையில் அகப்பட்ட அவரது மூளை. இதனை கிடைத்த தகவல் நிலைச் சாய்வு Availability bias எனவும் சொல்ல்லாம். ஆனால் யதார்த்தம் வேறாக இருப்பின், “நிஜமாகவே தீவிரவாதியாக இருந்திருந்தால்? ” என்றே சமாதானம் சொல்லிக்கொண்டு போவார் அவர்.
இதற்கும் ப்ளிங்க் நிலைக்கும் பல நொடிகளின் இடைவெளி இருக்கிறது. இந்த சாய்வுநிலை, முன் அனுபவ அறிவுகளின் தவறான வழிகாட்டல் என்பதை நிரூபித்த  டேனியல் கானேமான், அமோஸ் ட்வெர்ஸ்கியின் ஆய்வு ஒரு   சிந்தனைப் போக்கு குறித்த சிந்தனையில்  ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.  நேர்காணல் நிகழ்ச்சிகளில் சட்டெனப் பேசுபவரின் மனநிலையையும், அவரது சார்பு, சாய்வுநிலையையும் பொதுமக்கள் அவதானிப்பது தவறாகவே முடியும். அனுபவமிக்க பேச்சாளர்கள், இந்தச் சாய்வை, ஒரு தருக்க வெளிப்பாடாக்க் காட்டிப் பேசிவிடமுடியும்
ஒரு தூண்டுதலில், உணர்ச்சியுடன் உடனே பொங்குவது ஒரு இயக்க வகை. தருக்கத்தில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது மற்றொரு இயக்க வகை. ஆக்க நிலை அனிச்சைச் செயலில் தொடங்கி, ஒரு கெட்ட வார்த்தையில் பொங்கி, கத்தியைஎடுப்பது வரை முதல்வகை இயக்கம் வியாபிக்கிறது.  கரப்பான் பூச்சியைக் கண்டால் நாற்காலியில் ஏறி நிற்பதும், தெரு கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட பந்து நம்மை நோக்கி வரும்போது, சட்டெனக் குனிவதும் இதன் வெளிப்பாடு.
சில தூண்டுதல்களின் தகவல்களைப் புலன்களால் மெல்ல கிரகித்து, சிந்தனைக்கு நேரம் கொடுத்து, அனுபவமும், அதிகப்படியான தகவல்களும் கொண்டு முடிவெடுப்பது இரண்டாவது வகை இயக்கம். நண்பனின் மகளுக்காக, இன்சினீயரிங்கில் எந்தப் பிரிவை எடுப்பது? என்று ஆராய்வதும்,   பங்குச்சந்தையின் சரிவின் பின் இந்தப் பங்கிலிருந்து முதலீட்டை எடுக்கவா வேண்டாமா?என்ற  ஆலோசனை பிறருக்குக் கொடுப்பதுமான சிந்தைகள் இந்த வகையைச் சேர்ந்தது. (தனக்கென வரும்போது அதில் உணர்வும், சாய்வுச் சிந்தைகளும் கலந்துவிட வாய்ப்புகள் அதிகம். )
மேற்சொன்ன இரண்டையும் நாம் பல நேரங்களில் மாற்றித்தான் செய்து வைக்கிறோம். இதனை Thinking fast , thinking slow என்ற புத்தகத்தில் டேனியல் கானேமான் விளக்குகிறார்.
முதல் நிலைச் சிந்தை ப்ளிங்க் நேரத்தின் பின் நிகழ்வது. இரண்டாவது நிலைச் சிந்தை, அதன்பின் பல மணிகள் அவகாசத்தின் பின் நிகழ்வது. இரண்டாவது நிலைச் சிந்தை, மனக்குவியத்தால் பாதிக்கப்படுகிறது. மனம் வேறொரு சவாலில் ஆழ்ந்திருக்கும்போது , அதனால் வேறு தகவல்களைச் சேகரித்து தருக்கத்தில் ஆய்ந்து முடிவெடுக்க இயலாது. தகவல் மனதில் படியாது ,பொறிகளின் வழி உள்வந்து கடந்து போகும்.
இதனை கொரில்லா பரிசோதனை அழகாக விளக்கியது. ஒரு கால்பந்து விளையாட்டில் , பார்வையாளர்கள் சிலரை, ‘ஒரு குழு , எத்தனை பாஸ் செய்கிறார்கள் ?என்பதைக் கவனித்து வருமாறு பணித்த்ருந்தார்கள். அவர்களும் மிக்க் கவனமாக, எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்ட்து? என்பதைக் கணக்கிட்டு வந்தார்கள்.  விளையாட்டின் நடுவே, கொரில்லா போல் வேடமணிந்த ஒருவர், திடலில் ஓடினார்.  விளையாட்டு முடிந்தபின், அந்த பார்வையாளர்களிடம் “ விளையாட்டின் நடுவே, ஒரு கொரில்லா  போனதைக் கண்டீர்களா?” என்றபோது அவர்கள் கொரில்லாவா? அப்படி ஒன்று போகவே இல்லை” என்றார்கள் தீர்மானமாக. ஒரு ஒளீப்பதிவு அவர்களுக்குக் காட்டப்பட்டபோது அவர்கள் வியந்தார்கள். கொரில்லா , ஓடியதையே அவர்கள் மனம் பதிவு செய்யவில்லை. மூளை , ஒரு செயல்பாட்டில் ஆழ்ந்திருக்கும்போது, பிற அவயங்களின் மூலம் வரும் சமிக்ஞைகள் , தகவல்களை மூளை கவனிக்கத் தவறிவிடுகிறது.
குவியம் என்பது மட்டுமல்ல இச்சோதனை முன்னிறுத்தும் செய்தி. எதைக் கவனிக்க மனம் விழைகிறதோ, அதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்துமாறும், பிற அவயன்ங்களின் வழி வரும் செய்திகளை பதிவு செய்யாமல் / பதிவு செய்தாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க பெருமூளையின் முற்பகுதிக்குக் கட்டளைகள் செல்கின்றன. அந்த நிலையிலும், உறங்காது உள்ளிருந்து தன் பணியைத் தவறோ/சரியோ செய்துவருவது   அமைக்டலா போன்ற மிகப்புராதானமான உணர்வுப்பகுதிகள்தாம்.
உணர்வுகொண்டு தோன்றும் எச்சரிக்கைகளில் பல இன்று பெரிய ஆபத்தினைக் குறிப்பதில்லை. ஆனால் அவற்ரிற்குப் பல ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளை தருக்கமின்றி உணர்ந்து , கலவையான ஒரு சூழலில் உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இதன் மூலகாரணம் ஒன்றல்ல, பல. எதிரே இருப்பவரின் பேச்சு, உடல் மொழி, இட்த்தின் அமைப்பு, வேண்டிய தகவல்கள் நேரத்தில் கிடைக்காமை போன்றவை.
இப்படி பல காரணிகளின் கூட்டுத் தொகையாக , உணர்வு சார்ந்த முடிவுகள், எதிர் இயக்கங்கள் தூண்டப்படுவதால், காரணிகள் பலருக்கும் பலவிதமாக இருக்குமென்பதால், ஒரே சூழ்நிலையில் இருவருடைய உணர்வு சார்ந்த இயக்கங்கள் ஒரே போல இருப்பதில்லை.
5+5 =10 என்பதை அனைவராலும் சொல்ல முடியும். “அந்த ஓவியத்தில் தென்னை மரம் அழகா இருக்குல்ல?” என்று ஒருவர் சொல்லும்போது “ அது யானையோட தும்பிக்கை சார்” என்று மற்றொருத்தர் சொல்ல சாத்தியமுண்டு. உணர்வுகள் அடிப்படையில் பற்காரணிதூண்டல் கொண்டது.
ஒருவரது உணர்வை, அதன் விளைவைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதா? ஓரளவு சாத்தியம். பற்காரணிகளின் தாக்கத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலமும், உணர்வை தருக்க ரீதியாக விளக்க முயற்சிப்பதன் மூலமும் இரு உணர்வு அறிவின் இடைவெளியைக் குறைக்க முடியும். எனவேதான் உறவுகள் பலவீனப்பட்ட தம்பதியரை,  அதிகம் சிந்தனை கவரப்படாத இடத்தில் , தெளிவாக ஒருவருக்கொருவர் பேசுங்கள் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். மிகவும் குழம்பிய நிலையில் இருப்பவர்கள்,தங்களைத் தாங்களே புரிந்துகொள்வதற்கு, ஒரு ஜர்னல் போல எழுதி எழுதிக் கிழித்துப் போடவும் அறிவுறுத்துவார்கள். எழுத்து தருக்கம் சார்ந்த்து. உணர்வு தருக்க ரீதியாக வெளிப்படுகையில் அதன் தாறுமாறான ஓட்டம் குறைந்து நீரொழுக்குப் போல வரும் சாத்தியமிருக்கிறது.
வீட்டில் இருக்கும்போது அலுவலகக் கவலைகளிலோ, அல்லது சந்தேகம், பொறாமை போன்ற எதிர்மறைச் சிந்தனைகளிலோ ஆழும்போது , பிற தகவல்களைக் கவனிக்க, பதிந்துகொள்ள மூளை தவறுகிறது. இதனாலேயே, ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே சிந்திப்பது ,செயல்படுவது நல்லது என்கிறார்கள் உளநிலை ஆய்வாளர்கள்.
நமது சிந்தை, பெருமளவு  சாய்வுகளையும், நாம் சந்தேகிக்காத முன் அனுபவ முடிவுகளையும் கொண்டது என்பதை உணர்ந்தாலே, இவை இரண்டில் எதனைக் கொண்டு ,எப்படிச் சிந்திக்கவேண்டுமென்பதற்கான வழி புலப்படும். அதன்பின், பழக்கமாக இந்தச் சிந்தனைமுறையை நடைமுறை வாழ்வில் கொண்டுவரவேண்டும்.
எங்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும், எங்கு சிந்திக்காது, உள்மனத்தின் வழிகாட்டலில் இயங்கவேண்டுமென்பது ஒரு கலை மட்டுமல்ல, ஒரு அறிவியலும் கூட.
மிக முக்கியமாக அது  ஒரு நற்பழக்கம் .
நன்றி www.solvanam.com
http://solvanam.com/?p=50145

Tuesday, August 08, 2017

ஆபீஸும் கோவா செக்ரட்டரிகளும்

Prakash Ramasamy தன் ஆபீஸ் செக்ரெட்டரி எசகு பிசகாக ப்ரிண்ட்டரை அணைக்க, அது கிக்காகிப் போய் ப்ரிண்ட் எடுக்க மறந்த கதையைச் சொல்லியிருந்தார். 25 வருடமுன்பு , செக்ரெட்டரிகளு்ம், டைப்ரைட்டர்களும், ஸ்டெனோகிராஃபியும் ஆதிக்கம் செய்த காலம். Godrej, Facit, Remington என்ற பெயர்களுடன் ,ஆனை தண்டிக்கு இருந்த , ஆபீஸில் டைப்ரைட்டர்கள் முன்பு சற்றே பேரிளம்பெண்கள் , அல்லது பெரிய பேரிளம்பெண்கள் அமர்ந்து கோலோச்சிய காலம்...
கம்ப்யூட்டர்கள் இருந்தாலும், எங்கள் ஆபீஸ் கோவா க்றிஸ்டியன் செக்ரெட்டரிகள் டைப்ரட்டர் மேலேயே காதலாக இருந்தனர். Control Alt Del எல்லாம் இல்லாமல் அது சவமாகும். அடித்தால் உயிர்க்கும். ்பாஸ்வேர்ட் வேண்டாம்.
டைப்ரைட்டர்களை குழந்தைகளைப் போல பாசத்துவடன் கவனித்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லவேண்டும். டயாப்பர் போல கீழே கம்பளிப் படுகை / மடித்த போர்வை ஒன்றுவிரித்து அதன் மேல் வைத்திருந்த டைப்ரைட்டரை, தினமும் ஜொனீட்டா ஃபெர்ண்டாண்டஸ் , ஒரு சிறிய கைக்குட்டை கொண்டு துடைப்பாள். காலா காலத்தில் அதற்கு சொட்டு எண்ணை கொடுப்பாள் . அவளது டைப்ரைட்டரில் வேறு யாராவது உட்கார்ந்தால் , அதுவரை பேசிய ஆங்கில இந்தி , தரை டிக்கட் மொழியாக மாறும்.
மாதாமாதம் டைப்ரைட்டர் பராமரிப்பிற்கு வரும் பையனை அவள் அழைப்பதே விபரீதமாக இருக்கும். “ Lissen, bhaiya, why mine needs a hard touch? Check them out na bhaiyaa? . அருகே , இரண்டு அர்த்தத்தில் மாதவன் நாயர் குலுங்கிச் சிரிப்பார். Shee man, Maddie! you shameless fellow ...
எனக்கு டைப்ரைட்டிங் தெரியுமென்பதால் சிலர் , அவசர லெட்டர்களை அடித்துக்கொள்ள பெரிய மனத்துடன் சம்மதிப்பார்கள். க்ளஃபீரா, ரகசியமாக வந்து சொல்வாள் “Boy, you want to send that tender na? Come, lemme type that covering letter. Lissen, dont tell my boss.ok? He would jump like a bundher that has lost it's balls"
அவள் பாஸ்ஸுக்கு , அவள் சொன்னது நடந்தால் எப்படி குதிப்பார் என்று கற்பனை செய்து பார்ப்பேன். விகாரமாக இருந்தது.
ஜொனிட்டா என்னை விட பத்து வயத் மூத்தவளாக இருப்பாள். எனக்கும் என் பாஸுக்கும் செக்ரெட்டரி . என்னை விடப் பெரியவருக்கு எப்படி டிக்டேஷன் சொல்வது எனத் தயக்கமாக இருக்கும். கீழே பார்த்துக்கொண்டே மென்று விழுங்கி “ Dear Sir, It was a pleasure to meet you on..." .
ஜொனிட்டா மூன்றாவது நாள் பென்ஸிலால் என தலையில் தட்டினாள் “ Lissen boy, dont be shhhyyyy. ok? I am not your date"
அதிர்ந்தே போனேன். குபீரெனச் சிரித்தவள் பக்கத்தில் அனைவரையும் அழைத்தாள் “ this boy blushes! . oh my! he blushes!! Look , his face is turning red!"
கொஞ்சம் கொஞ்சமாக நானும் தேறிவிட்டேன். ஒரு முறை ரொம்ப சீனியரான ஒரு பெண் உரக்கக் கேட்டாள் “லிஸ்ஸன், சுதாகர், Did you see my pink slip?”
“Your's slip? I have some standards " கத்தினேன் பதிலுக்கு.
அவள் எழுந்து நின்று கடகடவெனச் சிரித்தாள். நான் அவளருகே சென்று “ There is already a gossip , don't prove that " என்றேன். பதிலுக்கு குட்டும், கிள்ளும் கிடைத்தது. “ you lil' pervert! I am like your sister"
"Have you heard of incests? ” என்றேன். ஸ்கேலால் அடி கிடைத்தது.
டைஃபாய்டில் கிடந்தபோது, Get well cardகளும், சர்ச்சில் ப்ரேயர்களும் எனக்கு வாய்த்தன.
அந்த ஆரோக்கியமான சிரிப்பும், கிண்டலும், சற்றே அடல்ட்ஸ் ஒன்லியான ஜோக்குகளுமாக இருந்த அலுவலகத்தில் "In case of harassment , call this number' என்ற சுவரொட்டிகளின் அவசியம் இருந்ததில்லை.
கம்ப்யூட்டர்கள், வெள்ளந்தியான சிரிப்பையும், ஆரோக்கியமான உறவுகளையும் , அவர்களது வேலையையும் கவர்ந்து போயின. அனைத்தும் பாஸ்வேர்டுகளின் பின் மறைந்த வக்கிரங்களாயின.
இன்று ,அமைதியாக இருப்பதே ஆபீஸ் என்றாகிவிட்டது. அது ஆபீஸல்ல, சுத்தமாக, அழகாக இருக்கும் கல்லறைத் தோட்டம்.

Tuesday, July 11, 2017

தேறேன் யானிது

வரும் போதே கால் செருப்பை கழற்றி வீசி விட்டு, தடுமாறி உள்ளே வேகமாக நுழைந்த சங்கரி அலறியது,“ஃபேனைப் போடுங்க முதல்ல. அம்மாவுக்கு வேர்க்கும். அய்யோ, அம்மா, எப்படீம்மா , இப்படிப் படுத்திருக்கே?”
முகத்தில் பெரிதாக குங்குமம் அப்பி, அமைதியாகக் கிடந்திருந்த அந்த முதியவளிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. அவர் உயிர் நீத்து இரண்டு மணி நேரமாகியிருந்தது.
“அம்மா காலெல்லாம் ஏன் கட்டியிருக்கு? ஏன் மூக்குல பஞ்சு?. எடுடா, நாகராஜா, எடுடா அதை. அய்யோ, வயறு கலங்குதே? நான் என்ன ப்ண்ணுவேன், நான் என்ன பண்ணுவேன்?”
பதைபதைத்து, அம்மாவின் கையை, காலைத் தொட்டு, அலறி விழுந்த சங்கரி, டாய்லெட் போய்வந்து, தேம்பி அழுது, ஒரு மூலையில் துவண்டு மயக்கமாகக் கிடந்தாள்.
அரைமணி நேரம் அழுதபின் சங்கரி செல்ஃபோனில் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “நாளைக்குத்தான் எடுக்கப்போறாங்க. ஆமா, பெரியண்ணன் நைட் பஸ்லதான் கிளம்பராரு. நாளைக்கு நீங்க பிள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, சாவியை சரிதா அம்மா கிட்ட கொடுத்திருங்க. அவங்க மத்தியானம் கூட்டிட்டு வந்திருவாங்க. பால்காரன் நம்பர்….”
மிகத் தெளிவாகச் சிந்திக்கிற இதே சங்கரிதானா, அரைமணி முன்னே அரற்றியது? எப்படி ஒரு இழப்பு இருக்கும்போதே, நிமிடங்களில் மூளை மற்ற விசயங்களைத் தானே மாற்றியமைத்துக் கொள்கிறது? கண்கலங்கி நின்றிருந்த பலரும் சில நிமிடங்களில் சிரித்துப் பேசியதையும் நாம் கண்டிருக்கலாம். அவர்களது உணர்ச்சிகள் பொய்யானவையா? நிச்சயமாக இல்லை.
சரி, சோக உணர்வு  அடங்கியபின், ஏன் நகைச்சுவை வருகிறது? வீட்டில் ஒரு சோகச் சூழல் இருப்பது, தருக்கம் செறிந்த மூளைக்குத் தெரியுமே? அப்புறமும் ஏன் , சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு சிரிக்கச் செய்கிறது?
மனிதன் சமூக விலங்கு. சமூகத்தின் அடையாளம் சுமுகமாகச் செல்லுதல். சூழ்நிலை கனத்திருப்பதால், பெருமூளையிலிருந்து மீண்டும் ஆளுமை விலகிச்செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே, சமூகத் தொடர்பை மீட்டெடுத்துக் கொள்ள, மூளை இயல்பாக நடக்க முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதி நகைச்சுவை, சுமூகப் பேச்சு வார்த்தைகள்.
மூளையைப் பற்றிச் சில வரிகள். மனித மூளையைப் பெருமூளை, சிறுமூளை, லிம்பிக் அமைப்பு மற்றும் மூளைத்தண்டு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் கவனத்திற்குப் பெருமூளையையும், லிம்பிக் அமைப்பையும் மட்டும் எடுத்துக்கொள்வோம்.  பெருமூளையின் முற்பகுதி (Pre-frontal cortex) கவனத்தையும், தருக்க ரீதியான சிந்தனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. லிம்பிக் அமைப்பு (limbic system) மிகப் புராதான அமைப்பு. அதாவது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பரிணாம வளர்ச்சியில் உயிரிகளில் இருக்கும் ஒர் அமைப்பு. பரிணாமத்தில் வளர்ந்த ஒரு அமைப்பு. அதிலும் பெருமூளையின் முற்பகுதி, பாலூட்டிகளில் சமீபத்தில் வளர்ந்த உறுப்பு. இதுவே, பாலூட்டிகளுக்கு மேலதிக அறிவினை தக்கவைக்கும் பகுதி.
தருக்கம், ஆய்வு சார்ந்த சிந்தனை போன்றவை பெருமூளையின் முற்பகுதியின் பணி. உணர்வுகள், அதன் அடிப்படையான இயக்கத் தூண்டல்கள், லிம்பிக் அமைப்பின் உள்ளே இருக்கும் அமிக்டெலாவின் பணி.
மூளையில் அமிக்டெலாவும், பெருமூளையின்  முற்பகுதியும், தகவல் மேலாட்சியைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவரும் போட்டியில், நமது உணர்ச்சிகளும், யதார்த்த நடத்தைகளும் மாறுவதன் வெளிப்பாடுதான் சங்கரியின் வேறுபட்ட இயக்கங்கள் போன்றன.
இழப்பு அல்லது ஒரு அதிர்ச்சிச் செய்தி என்பது முதலில் தற்பாதுகாப்பற்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்கால மனிதனில் இது நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டி, அட்ரினலினை ரத்தத்தில் செலுத்தி விடவும், மூளை பயங்கர வேகத்தில் “ஓடு” என்பதாகக் கட்டளை இடுகிறது.  அதற்கு உடல் , சர்க்கரையை ரத்தத்தில் அதிகரித்து, சக்தியைத் தந்திருந்தது.

இப்போதும் அதிக வித்தியாசமில்லை. சுரப்பிகள் தங்கள் வேலையைச் செய்கின்றன.  உடல் படபடக்கிறது. நின்று நிதானிக்கும் ஆற்றலைத் தற்காலிகமாக நாம் இழக்கிறோம். உடல் உறுப்புகளின் கட்டுப்பாடு நம் பெருமூளையிலிருந்து சில நிமிடங்கள் அகன்று விடுகிறது. கண்கள் குவியத்தை இழக்கின்றன.
யாரிடம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே அறியாத ஒரு நிலை. உடல் கட்டுப்பாடு , மூளையின் தருக்கப் பகுதியிலிருந்து அற்றுப்போய், பீதி, பயம், காப்பற்ற நிலை போன்ற உணர்ச்சிகளின் கருவூலமான அமிக்டெலாவின் ஆணையின் கீழ் வருவதில் உள்ள தடுமாற்றமே நாம் சங்கரியிடம் கண்டது.
தமிழ்த் திரைப்படங்களில்  “அப்பா, நான் அவரைக் காதலிக்கிறேன்” என்று மகள் சொன்னதும் , அப்பா தடுமாறி நெஞ்சைப் பிடிப்பதும் இந்த அமிக்டெலா நாடகத்தின் ஒரு அபத்த நிலைதான்.
அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம்.
“எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள்.
இந்த  உணர்வுக் கொந்தளிப்பு நிலை  20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும். அடங்காதவர்களை, அமைதியாக அமர வைக்கப்பட்டு, நீர் அருந்த வைத்து, மூச்சை இழுத்திப் பிடித்து விட வைத்தால் , சில நிமிடங்களில் அமிக்டெலாவின் ஆதிக்கம் சற்றே அடங்கும்.
இந்த அதிர்ச்சியில் , இல்லாத புகழ்ச்சியும், தூற்றலும் தூக்கலாகவே வரும்.
“நான் வர்ற வரை உயிரோட இருப்பேன்னியேம்மா? எழுந்திரு… எந்திரிங்கறேன்ல, எந்திரி”
“அய்யோ, அவ என்னிக்குமே எங்கிட்ட பேசாம தூங்கமாட்டா.” என்னிக்குமே என்பது நிஜமாக இருக்கலாம், இல்லாமில் இருக்கவும் வாய்ப்பு பெருமளவு இருக்கிறது. இந்த உயர்வு நவிற்சி, சாத்தியமற்றவை கூறுதல் என்பன, பயத்தால் , இரக்கத்தால் வந்தவை அல்ல. தனக்குப் பிடித்த ஒன்றின் இழப்பு, மிகப்பெரிது என்பதை அமிக்டெலா உலகிற்குக் காட்டும் முயற்சி . இதுவே ஒப்பாரிப் பாடல்களில் வரும் உயர்வு நீட்சி வரிகள்.
“அஞ்சாறு புலிசிங்கம் அறைஞ்சே கொன்னவனே” என்று ஒருவேலையும் செய்யாது, சோம்பேறியாகக் கிடந்து இறந்தவனைப்பற்றிப் பாடுவதில் பொருள்  பார்க்க்கூடாது. அமிக்டெலாவின் வேலையெனத் தள்ளி நின்று ரசிக்கவேண்டும்.
இதையெல்லாம் நாலே வரியில் கம்பன் ரசிக்க வைக்கிறான்.
இராமாயணத்தில் , வாலி இறந்த சேதிகேட்டு தாரை புலம்புகிறாள்:
நீறாம் மேருவும் நீ நெருக்கினால் மாறோர் வாளி உன் மார்பை ஈர்வதோ?
தேறேன் யானிது, தேவர் மாயமோ?
வேறோர் வாலி கொளாம் விளிந்துளான்?
நீ நெருக்கினால் மேருமலையும் பொடியாகும். என்பது ஒரு உயர்வு நீட்சி. அவளால் நம்ப முடியாத அதிர்ச்சி தரும் செய்தி, “வேறோருவன் அம்பு , உனது மார்பைப் பிளப்பதோ?”
“நான் நம்ப மாட்டேன். இது தேவர்களின் மாயஜாலமோ“   என்பதில் பெருமூளை சற்றே வந்து மீண்டும் மறைகிறது. “தேறேன் யானிது” ஒரு கையறு நிலையைச் சற்றே காட்டுகிறது.
அடுத்த வரியில் கம்பன் அமிக்டெலாவின் பணியை அற்புதமாகச் சொல்கிறான்.   “வேறோர் வாலிகொளாம் விளிந்துளான்?”  – வேறொரு வாலி செத்திருக்கிறான் போலும்.
மூளை ஒரு தூண்டுதலைப் பதிவு செய்யும் விதத்தை இரு வகையாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒன்று, தூண்டுதலை தாலமஸ் என்ற உறுப்பு பதிவு செய்து,  அத்தூண்டுதலை மூளையின் பிற பகுதிகள் கிரகிக்கும் மின் குறிகளாக மாற்றுகிறது. தூண்டுதல், பார்க்க்க்கூடிய குறிபடைத்ததாக இருப்பின், அது மூளையின் பின்பகுதியில் இருக்கும் விஷூவல் கார்ட்டெக்ஸ் பகுதிக்குச் செலுத்தப்படுகிறது. விஷூவல் கார்ட்டெக்ஸ், இதனைப் பெருமூளையின் முன்பகுதிக்கும், அமிக்டெலாவுக்கும் அனுப்புகிறது. பார்க்கப்படுவது உணர்வைத் தூண்டுவதாக இருக்குமானால், அமிக்டெலா தூண்டப்படுகிறது. பார்க்க்ப்படுவது தர்க்கத்தையோ, சிந்தையையோ தூண்டுவதாக இருக்குமானால் பெருமூளை தூண்டப்படுகிறது.
இரண்டாவது வகையில், இப்படி தாலமஸ் – விஷூவல் கார்ட்டெக்ஸ் என மட்டும் நேர்க்கோட்டில் மூளை செலுத்துவதில்லை. தாலமஸிலிருந்து மின்குறிகள் அமிக்டெலாவுக்கும் சென்றுவிடுகிறது, என்கிறார்கள். இதன் பின்புலம், நாம் பார்க்கும் பொருள் பார்க்கப்படாமலேயே, உணர்வு பூர்வமான இயக்கஙக்ள் தூண்டப்பட்டுவிடுகின்றன என்ற நிதர்சனமான ஆய்வு முடிவுகள். பாம்பு போல ஒன்று சரியாகப் பார்க்கப்படுவதன் முன்னரேயே, தாலமஸ்ஸின் தவறான (சரியான?) தூண்டுதலால், அமிக்டெலா தூண்டப்பட்டு, ஒன்றுமில்லாமலேயே நாம் பதறிவிடுகிறோம். இதில் பெருமூளையும் தவறுதலாகத் தூண்டப்படுவதால், கேள்விகளாகவோ, அல்லது தீர்மானமான பதிலாகவோ உளறுகிறோம்.
‘அய்யோ அங்க பாம்பு, பாம்பு!’  என்று அலறும் ஒருவரின் கை நீளும் இடத்தில் ஒரு கயிறு கூட இருந்திருக்காது. பெருமூளை சரியாக வேலை செய்யும் வேறொருவர், பரிசோதித்து, ‘இங்க ஒண்ணுமே இல்லையே?’ எனும்போது , பதறியவர் சற்றே அமிக்டெலா அடங்கி, ‘சே, ப்ரமைதான் போல’ என்பார். பதறியவர், தருக்கப் பிழையாகப் பேசுவது, அவரது அமிக்டெலாவின் ஆதிக்கமும், தவறிய பெருமூளையும் நிகழ்த்திய விபரீதக் களேபரம்.
“மூக்குல எதுக்கு பஞ்சு? நாகராஜா எடுடா, எடுடா அதை…ஃபேனைப் போடுங்க, அம்மாவுக்கு வியர்க்கும்,” என்ற சங்கரியின் உளறலும் இதுபோன்ற பார்வைத் தூண்டுதலில், தாலமஸ் அமிக்டெலாவை முதலில் தூண்ட, பெருமூளை பரிதவிக்கும், விபரீத உணர்ச்சிவெளிப்பாட்டு வகைதான்.
“வேறோர் வாலிகொளாம் விளிந்துளான்?” இதுபோன்ற ஒன்றேதான்.
இந்தப் பாடலை விட, அமிக்டெலா மற்றும், பெருமூளையின் முற்பகுதியின் பெரும்போரைக் கண்முன்னே காட்டிய பாடலை நான் இது வரை கண்டதில்லை.

Sunday, July 02, 2017

காதலால் மோட்சம்

”யாரையெல்லாம் கூப்பிடப் போறீங்க?” என் கேள்வியின் பின் நின்ற கவலை சுந்தரத்திற்குப் புரிந்திருந்திருந்தது. “ஈஸ்வரன் சாரைக் கூப்பிடல; ஆனா, அவரே வந்துடறேன்னு சொல்றாரு. என்ன சொல்ல முடியும்?” தயங்கினார் சுந்தரம். அனிச்சையாக என்னுள் ஒரு பெருமூச்செழுந்தது. மாதம் ஒரு நாள் ஒருவர் வீட்டில் நாங்கள் நாலைந்துபேர் கூடுவோம். என்னதான் பேச்சு என்றில்லை. ஆனால், இலக்கியம் , வாழ்வு சார்ந்ததாக இருக்கவேண்டும். வெட்டிப்பேச்சு இருக்கக்கூடாது. என்று சில நிபந்தனைகளுடன் சிறு ரசிகர் வட்டம். சில நேரம் மதியச் சாப்பாடு, பல வேளை எதாவது உடுப்பி ஓட்டலில் காபி என்று இரு மணி நேரத்தில் முடிந்துவிடும் கூட்டம். தவறாகச் சேர்க்கப்பட்டவர் ஈஸ்வரன். எங்களில் பெரியவர் , கொஞ்சம் இங்கிதம் தெரியாதவர். எப்போது எப்படிப் பேசவேண்டுமெனத் தெரியாது. அதிரப் பேசுவார். திருவாசகம், கம்பன், பாரதி எனப் பேசினாலும், ஆழமற்ற பேச்சாகவே இருக்கும். போன முறை அவர் பேசியது ஒரு கசப்பையே ஏற்படுத்தியிருந்தது. எனவே தவிர்த்துவிடத் தீர்மானித்திருந்தோம். சிலர் அவர் வரட்டும் என்றார்கள். நானும் சிலரும் வேண்டாமென்றோம். இப்போ தானகவே வந்து நிற்கப் போகிறார். “எங்க வீட்டுலதான் மீட்டிங். நாளைக்கு மதியம் மூன்றரைக்கு வந்திருங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காபிக்கு வெளியே போயிருவோம்” சுந்தரம் ஏன் இப்போது தன் வீட்டில் அழைக்கிறான்?என்று தோன்றாமலில்லை. சுந்தரத்தின் தந்தை, வெங்கடேசன், ரயில்வேயில் பெரிய பதவியிலிருந்தார். மனைவி நாகம்மாளைத் திடீரெனத் தள்ளிவைத்துவிட்டு கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அது நிலைக்கவில்லை. நாகம்மாளிடம் இருந்த தன் பெண்ணையும் பையன் சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு மும்பை வந்துவிட்டார். நாகம்மாள் ஊரில் தன் சகோதரன் வீட்டில் வாழ்ந்து சில வருடங்கள் முன்பு இறந்து போனார். “அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்றேன் வீட்டில் நுழைந்தபடியே . “இருக்காரு.. நாம பேசினாக் கேக்குது புரியுது. பதில் பேச முடியலை. படுக்கையிலேயேதான் எல்லாமும். என் பொண்டாட்டி “ ஒரு நர்ஸ் வைங்க. என்னால எல்லாம் செய்ய முடியாது’ன்னுட்டா. இப்ப ஒருமாசமா ஒரு நர்ஸ் வந்துட்டுப் போறாங்க.” ” பக்கவாதம் சரியாயிருச்சுன்னாரே டாக்டர்?” என்றேன். அறையின் ஒரு கோடியில் வெங்கடேசன் படுத்திருப்பது தெரிந்தது. மிக மெலிந்து, எலும்புக்கூடாக உடல். பஞ்சடைந்த கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க, கழுத்து ஒரு ஓரமாக வளைந்திருந்திருக்க, வாயின் ஓரமாக கோழை வழிந்திருந்தது. ஒரு துர்நாற்றம் அறையில் மெல்ல பரவி, நாசியில் துளைத்தது. ”அப்பாவுக்குத் தொந்திரவாக இருக்காதோ?” என்றேன். “இல்ல, நாம பேசறதக் கேப்பாரு. இப்ப தூக்கம் வராது. வந்தாலும் தூங்கமாட்டார். என்ன கொஞ்சம் அதிரப் பேசக்கூடாது” சுந்தரம் , ஈஸ்வரன் வரவின் ஆபத்தைப் புரிந்துகொள்ளவில்லை அடுத்த நிமிடம் வாசல் கதவு டமால் என அதிர, திடுக்கிட்டுத் திரும்பினேன். “ஸாரி” என்றார் ஈஸ்வரன். ‘கொஞ்சம் வேகமா அடைச்சுட்டேன்.” “ஈஸ்வரன், வெங்கடேசன் சார் படுத்திருக்கார்” என்றேன் சற்றே கோபமாக . “ அதான் ஸாரின்னுட்டேனே?” இது என்ன பதில்? வீட்டினுள்ளே இருந்தவர்கள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து பார்த்து எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர். “அப்பா என்னமோ நினைச்சிகிட்டிருக்கார் போல. ரெண்டு நாளாவே சரியா சாப்பிடல, தூங்கலை. என்னமோ உளர்றாரு. என்னன்னு எங்கள்ல யாருக்கும் புரியலை” சுந்தரம் ஏதோ சொல்லி இறுக்கத்தைத் தளர்த்த முயற்சித்தான். பேச்சு எங்கெங்கோ சென்று இறப்பு, மோட்சமெனத் திரும்பியது. “ இறப்பு நம் கருமத்தால் வருவது” என்றார் நமச்சிவாயம். ”அதுக்கப்புறம் சொர்க்கம் நரகம், பிறப்பு எல்லாம் நம் கருமந்தான் தீர்மானிக்கிறது. பட்டினத்தார் சொல்றாரு “ பற்றித்தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே” ஈஸ்வரன் “ I beg to differ" என்றார் ஆங்கிலத்தில். நான் கவலையடைந்தேன். இந்தாள் எதையெதையோ பேசுவாரே? இன்னும் பத்து நிமிசம் நரகவேதனையாகத்தான் இருக்கும். “இறக்கும்வரைதான் நம் கருமங்களின் பலம். அதன்பின் எங்கே யார் போகவேண்டுமென்பதை அவன் தீர்மானிக்கிறான், அதுவும் கருமங்களின் வழியாக. அது நம் கருமமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை” “அப்போ, என் தாத்தா பல நல்ல காரியங்களாகச் செய்து, நான் ரவுடியாகத் திரிந்தாலும், இறுதியில் எனக்கு மோட்சம் என்கிறீர்கள் “ எனது நையாண்டியை அவர் பொருட்படுத்தவில்லை. சுந்தரம் , ஏதோ சிறிய சிந்தனையின் பின் தொடர்ந்தான் “இறைவன், நம்மை எப்படியும் தன்னிடம் வரச்செய்யவேண்டுமெனத்தான் பார்க்கிறான். ராமனை எடுத்துக்குங்க. ராவணனோட தீய செயலுக்குத்தான் அத்தனை அழிவையும் கொண்டுவந்தான். விபீடணன் இராமனிடம் சொல்கிறான், ”மொய்ம்மைத் தாயனெத் தொழத்தக்காள் மேல் தங்கிய காதலும், நின் சினமுமல்லால்- இராவணனை யாரூம் வென்றிருக்க முடியாது”. கருமத்திற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்.” “கரெக்ட்” என்றார் சுரேஷ் “ யாருக்காக, எதற்காக ராமன் போர்செய்தான்? “மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா(க) இலங்கை வேந்தன் முடிஒருபதும்,தோள் இருபதும் போயுதிர “ போர் செய்தான். இதே போல் “ பாரதப்போரில் யாருக்காக வந்தான்? பாண்டவர்களுக்கா ? இல்லை. “ பந்தார் விரலி பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்து ... சங்கம் வாய் வைத்தான்” , சுந்தரம் நம்ம கருமம் ஒழுங்கா இருந்தா ,வினைப்பயன் ஒழுங்கா வரும். இல்லேன்னா, இறைவன் மூலமாகவே கூட, நமக்குத் தீவினை வந்து நிற்கும்.” “அஹ்ஹ்ஹ்” குரல் கேட்டுத் திரும்பினோன். வெங்கடேசன் தீனமாக ஏதோ குழறினார் . “என்னமோ அவர் நினைப்புல ஓடுது. ஏதோ டென்ஷன்ல இருக்கார்போல” என்றார் சுரேஷ். “தெரியல. ஒருவேளை எங்கம்மா நினைப்பா இருக்கும்” என்றார் சுந்தரம் “ என்ன பாடுபடுத்தியிருப்பாரு அவங்கள? அம்மா ரொம்பப் பொறுமைசாலி. இவர் அடியெல்லாம் வாங்கிகிட்டு எங்களை அணைச்சுகிட்டுப் படுத்திருப்பாங்க. தூங்கும்போது அவங்க கன்னத்துல கை வைச்ச்ப்பேன். சிலநேரம் சூடா, கண்ணீர் விரலை நனைக்கும். இவர் கருமம், இப்படி படுக்க வைச்சிருச்சு. அது எங்கம்மா கண்ணீர்தான்.” என்றவர் எங்களை ஒருமுறை பார்த்தார் “ சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்க. கருமமும் அதன் பயனும் இப்படித்தான் இருக்கும். எங்க அப்பாவாகவே இருந்தாலும், எனக்கு இப்ப ரொம்ப பாசமெல்லாம் ஒண்ணுமில்ல. இவருக்குச் செய்யவேண்டியது என் கடமை. செய்யறேன். அவ்வளவுதான். இவரெல்லாம் நரகத்துக்குத்தான் போவாரு” “அஹ்ஹ்ஹ்ஹ்” குரல் வளையில் ஏதோ அடைக்கக் குழறினார் வெங்கடேசன். மூச்சு விட முடியாமல் திணற, சுந்தரம் அவர் தலையைத் தூக்கிப் பிடித்தார். சளி , குரல்வளையிலிருந்து இறங்க, அவர் மூச்சு சீரானது. ஈஸ்வரன் “ நீங்க நினைக்கறது மாதிரி இல்ல” என்றார் தீர்மானமாக “ கொல்லும் வரையில்தான் இறைவனே கருமம், அதன் பலம் பார்க்கிறான். அதன்பின் தன்னிடம் அந்த ஆத்மா வந்து சேர எதாவது நற்காரியம் இருக்குமா?என்று பார்க்கிறான். பெரியாழ்வார் சப்பாணி பாடலில் சொல்கிறார் “ இரணியன் உளம் தொட்டு, ஒண்மார்கவலம் பிளந்திட்ட கைகளால் “ , உளம் தொட்டு என்றால் என்ன? அவனது உள்ளத்தில் தேடிப்பார்க்கிறாராம். தன்னைக்குறித்த ஏதாவது நல்ல எண்ணம் இருக்குமோ? என்று. இருந்திருந்தால் அவனுக்கு மோட்சம். அப்படி ஒன்றும் இல்லாதததால், அவன் மார்பைப் பிளந்து வதை செய்கிறார்” என்று ஒரு வியாக்கியானம் உண்டு. “ “அய்யா” என்றேன் பொறுமையாக “ நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, இதெல்லாம் வைச்சு, இறைவன் தண்டனை தருவான் அல்லது மாட்டான் என்று சொல்லிவிட முடியாது. ‘பாரமான பழவினை பற்றறுத்து”தான் எதையும் செய்வான். நாம் செய்வதன் பலனை அடைந்தே ஆகவேண்டும்” “அஹ்ஹ்ஹ்ஹ்” இந்த முறை சற்று அதிகமாவே வெங்கடேசனின் திணறல் இருந்தது. கவலையோடு பார்த்தேன். சுந்தரம் ஒரு உணர்ச்சியும் இல்லாதிருந்தான். இது சகஜம் போலும். ஈஸ்வரனின் குரல் உயர்ந்தது “ புரியாம பேசாதீங்க. இராவணனை ராமன் கொல்கிற வரையில்தான் சினத்தோடு இருந்தான். “சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற” .. சினம் அதுவரையில்தான். அதோட ராமவதாரத்தின் முக்கிய பணி முடிந்தாச்சு. இப்ப இறைவனின் பணி தொடங்குது. ராமன் யோசிக்கிறான் இந்த ராவணனோட ஆத்மாவை எப்படி வானுலகு அனுப்புவது? எல்லாமே மோசமான வினைகள் செய்திருக்கிறான். அப்போது மண்டோதரி தென்படுகிறாள். மண்டோதரி கற்புக்கரசி. அவளது காதல் மிகத் தூய்மையானது. அவளது காதலுக்கு ஏற்றவனாக இருப்பதே இராவணனின் ஒரு தகுதிதான். ஒரு கற்புக்கரசியின் கணவன் எப்படி நரகம் போக முடியும். மண்டோதரியின் காதலன் என்ற ஒரு காரணம் கொண்டே , இராவணனை வானுலகு அனுப்பிவிடுகிறான்” அடுத்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் எரிச்சலில் ப்ச் என்ற ஒலிகள் கேட்டன. “ மெதுவா, மெதுவா” என்று ஈஸ்வரனுக்கு சைகை காட்டினேன். கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார். “இதை கம்பராமாயணம் சொல்லலை. திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் “ வம்புலாங் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்புதன்னால் முனிந்த அழகன்” பெரிய திருமொழியில் நாலாம் திருமொழியில் ஐந்தாவது பாசுரம். நீங்களே பாத்துக்குங்க, அங்” என்றவர் மேலும் குரல் உயர்த்தினார் “ ஒரு பத்தினிப் பெண்ணின் காதலுக்கு அவ்வளவு மதிப்பு. நாம செஞ்ச நல்வினையால்தான் அப்படி பெண்களை மனைவியாகப் பெறுகிறோம். அவர்களது நல்வினை நம்மை நிச்சயம் மோட்சத்துக்குத்தான் அனுப்பும். ராவணன் போலாம்னா, நாம போகமுடியாதா?” சுந்தரத்தின் மனைவி சிவந்த கண்களுடன் எழுந்து வந்தாள் “ ப்ளீஸ், மெதுவாப் பேசுங்க, ராத்திரி பூரா இவர் தொல்லையால தூங்க முடியலை. இப்பத்தான் கொஞ்சம் கண்ணசர்ந்தேன்.தலை வலிக்குது” ”ஓ, சாரி சாரி’ என்றவாறே ஈஸ்வரன் எழுந்தார்.அனைவரும் வெளீயே சென்று உடுப்பி ஓட்டலில் காபி அருந்திக் கிளம்பினோம். “இனிமே யார் யாரைக் கூப்பிடறதுன்னு ஓட்டுப் போட்டு எடுக்க வேண்டியதுதான். யாரையும் குத்தம் சொல்லலை. ஆனா, மத்தவங்களுக்கு வீண் சிரமம் கொடுக்கக்கூடாது” என்றார் சுரேஷ். ஆம் எனத் தலையசைத்தேன். இரு நாட்களில் வெங்கடேசன் இறந்துபோனார் எனச் செய்தி வந்தது. சுந்தரத்தைப் பார்க்கச் சென்றோம். “ கடைசி இரண்டு நாளா அவர் முகத்துல ஒரு அமைதி. அதிகம் குழறலை. ஏதோ சொல்லுவார். அது நாகம்மா ந்னு எனக்குக் கேட்டது. அது ஒரு பிரமையாக இரூக்கலாம். அவர் கஷ்டப்பட்டாலும், இறப்பு அமைதியாக இருந்தது” உடுப்பி ஓட்டலில் ஒரு மேசையில் சுரேஷும் ஈஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள். “அன்னிக்கு சத்தமாப் பேசினது எல்லாருக்கும் எரிச்சலா இருந்திருக்கும். தெரியும். தெரிஞ்சேதான் அப்படிப் பேசினேன்” என்றார் ஈஸ்வரன் . நான் சுவாரசியமானேன். “ நாம பேசறதுல , வெங்கடேசனுக்கு மேலும் மன உளைச்சல் வந்திருக்கும். பாவம் சொல்ல முடியலை. கடைசி நேரத்துல அல்லாடறார். அவர் மனைவிக்கு செஞ்ச கொடுமை, தனது தீயசெயலாலே எங்கே நரகமா அனுபவிப்போமோன்னு ஒரு பயம்.. மரணத்தை விட மரண பயம் கொடியது தெரியுமோ சுரேஷ்? அதான் , ஏதோ நம்மாலானதுன்னு ஒரு பாசுரத்தை விளக்கினேன். அதுல என்ன அமைதி கிடைச்சிருக்குமோ தெரியாது.” “இருந்தாலும், இப்படி திரிச்சுச் சொல்லலாமா சார்?” “ஒரு உயிர் அமைதியாப் போறதுக்கு, நம்ம அரைகுறை அறிவால ஒரு பயன் கிடைக்கிறதுன்னா, என்ன தப்பு? என்ன, என் தவறுக்கு எப்ப்படி தண்டனை வருமோ? வரட்டும் பாத்துக்கலாம். பாசுரம் பாடினதுக்கு ஒரு பலன்ன்னு ஒன்று இருக்கும். “ அடுத்த மாத மீட்ட்ங்க்கிற்கு ஓட்டு கேட்டு வந்தார் சுரேஷ். எனது வாக்கை பதித்தேன்.