Saturday, November 11, 2017

ஆறுமுகம் அண்ணாச்சி

சுப்பிரமணி என்ற எஸ் எஸ், போன் செய்தபோது இரவு 9 மணி. “ஏ, தூங்கிட்டியா? ஒண்ணு பேசணுமே” என்றான். ந்யூஜெர்ஸியிலிருந்து அழைப்பதால் எதாச்சும் அர்ஜெண்ட் மேட்டர் இருக்குமெனவே நினைத்தேன். ”இல்லடே, சொல்லு”
”வாட்ஸப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன். யார்னு சொல்லு பாப்பம் ”
வாட்ஸப்பை உயிர்ப்பித்தேன். “ லே, மக்கா! இது ஆறுமுவம்லா?!”
அட, ஞாபகம் இருக்காடே?”
ஞாபகம் இருக்காவா? அவரிடமல்லவா நாங்கள் ஆங்கிலம் பேசிக்கற்றோம்? இன்று கற்பனை வளத்தைப் பெருக்கியதற்கு அவரல்லவா காரணம்?
“ஒரு நிமிசம் இருடே” என்றேன் “ குட்டியை லைன்ல எடுக்கேன். அவனும் கேக்கட்டு”
குட்டி என்ற சுந்தரராஜன் உறங்கியிருந்தான். எழுப்பவேண்டாமென நினைத்து பிற பேச்சுக்களைத் தொடர்ந்தோம். ஆனால் நினைவில் குடைந்து கொண்டே இருந்தது “ சே, குட்டியும் பேசியிருந்தா நல்லாயிருந்திருக்குமே?”
தூத்துக்குடி ஹார்பர் குவாட்டர்ஸில் இருந்த காலம் அது. மாணவப் பருவம்.
82ல் குட்டியும் நானும் எங்கள் தெருவில் ( இதே சுப்ரமணியின் வீட்டின் முன்னே) நடந்து கொண்டிருக்கும்போது “தம்பி” என்று குரல் கேட்டது. பரட்டைத் தலையும், ஒல்லியான உருவமுமாய் ஆறுமுகம் பின்னே வந்துகொண்டிருந்தார்.
“ஒரு சந்தேகம் தம்பிகளா, இந்தா இங்கிட்டு அய்யரு வீட்டுல ட்யூப்லைட்டு எரிதுல்லா? அது ஏன் நீலமா எரிது? அங்கிட்டு மேல பாக்கச்சே, மாடி வீட்டுல ( அது சுப்ரமணி வீடு), டீப்லைட்டு வெள்ளையா எரிது. ஏம்டே?”
எங்களுக்கும் வேறு வேலை வெட்டியில்லை. குட்டி என்னைப் பார்க்க...புரிந்துகொண்டேன்.
”அதுவா அண்ணாச்சி?, நீலமா எரிதுல்லா, அதுல அல்ட்ராவயலட் ரேடியேஷன் வருது. அவங்க வீட்டுல அதை வச்சித்தான் ஹால்ல டி.வி போடுதாங்க. அவங்க வீட்டுல ப்ரிட்ஜு இருக்குல்லா, அதுக்கும் அது வேணுமாங்கும். எல்லாம் அந்த நீல லைட்டுலேர்ந்துதான் வருது”
பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள நான் பாடுபட, குட்டி தொடங்கினான் “ மேல் வீடு இருக்கு பாத்தியளாண்ணாச்சி? அவங்க வீட்டுல வெள்ளை லைட்டுலயே டி.வி ஓடிருது. அதுக்கு இன்ஃப்ரா ரெட் லைட்னு பேரு ”
ஆறுமுகம் சந்தேகமாக எங்களைப் பார்த்தார்.
“வேணும்னா அவங்க வீட்டுப் பையனையே கேளுங்க. லே , எஸ் எஸ்ஸைக் கூப்பிடு. அவனே சொல்லட்டு” அவனையும் எங்கள் களவாணிதனத்தில் இழுக்க முயற்சித்தோம்.
அப்பவும் ஆறுமுகத்தின் கண்களில் சந்தேகம் மின்னியது.
”இதெல்லாம் இங்க்லீஷ்லல்லா இருக்கும்? தமிழ்ல சொல்லுதீயளே?”
ஆஹா.. இதுதான் சந்தேகமா?
ஆனால் ப்ரச்சனை எங்களுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியாது. தமிழ்மீடியப் பயல்கள் இருவரும்.
ஆங்கிலத்தில் சொல்லியே ஆகவேண்டும்.
எனக்கு ஆங்கிலப் பாடத்தில் டாகூரின் மனப்பாடக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
“அண்ணாச்சி, இத This is my prayer to Thee My Lord" ன்னுவாங்க”
குட்டி தொடர்ந்தான் “ அந்த வெள்ளை லைட்டுக்கு Strike strike at the root of penury in my heart ' ன்னுவாங்க. விடுறே நம போவோம். அண்ணாச்சி நம்மள நம்பமாட்டிக்காரு”
’அடடே ’ என்றார் ஆறுமுகம் நெகிழ்ந்து போய் “ என்னமா இங்க்லீசு பேசுதுக, நம்ம ஹார்பர் பிள்ளேள்? நீங்க கெட்டிக்காரப் பயலுவடே.”
ஆறுமுகம் ஒரு நடமாடும் பல்வினை வித்தகர். முக்கியமாக நடமாடும் முடிதிருத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் போய், தோட்டத்தில் நாற்காலி போட்டு, முடி திருத்துவார். சிறியதாகக் குழிபறித்து, முடியை அதில் போட்டு மூடிவிடுவோம். ஹார்பர் குவாட்டர்ஸ்ஸில் 80களின் இறுதி வரை இது இருந்தது.
எங்கிருந்து வந்தார், அவருக்கு யார் சொந்தம்? யாருக்கும் தெரியாது. எங்கே தங்கியிருப்பார் என்பதும் தெரியாது. ஹார்பர் குவாட்டர்ஸில் அங்குமிங்கும் நடமாடுவார். ஏதோ சில்லறைப் பணிகள் செய்துபோவார் என்பதுதான் பலருக்கும் அவர் குறித்துத் தெரிந்த செய்திகள்.
டவுணுக்குச் சென்றோ,அல்லது கடைகள் வளாகத்திலோ முடிவெட்டுவதை விட ஆறுமுகத்தை அழைத்து வெட்டிக்கொள்வதை நாங்கள் விரும்பினோம்.
”ஏம்டே லேட்டு? ” என்பார், முடியை நீரில் நனைத்து விட்டவாறே. “அதா? ஒரு சுறாமீன் நம்ம வீட்டுல புல்லு திங்க வந்திச்சில்லா?, வெரட்டி விட நேரமாயிட்டு..”
“அப்டியா?! கழுத்த நேர வையி தம்பி. தலையாட்டாத. ஆங் அப்படித்தான். பொறவு?”
“பொறவென்னா? நானும் குட்டியும்தான் கொண்டுபோய் கடல்ல விட்டுட்டு வந்தம். அண்ணாச்சி சொறா மீன் பாத்திருக்கீயளா?”
“இல்லயடே? அண்ணாச்சிய ஒரு கொரலு கூப்டிருக்கலாம்லாடே? ரெண்டுபேரும் என்னை மறந்துட்டீய. ஆ.. கொஞ்சம் தலைய குனிஞ்சிக்க. அங் அங்கனயே வச்சிரி. கவனம் தம்பி. கத்தி வெட்டிரும். இந்தா ஒரே நிமிசம்..ஆங்.ஆயிட்டு. அப்புறம்?”
இப்படியெல்லாம் பேச்சு, ஸ்டெப் கட்டிங் புகழ் சலூன்களில் சாத்தியமில்லை.
அவருக்கு நாங்கள் விடும் புருடாக்கள், கட்டுக்கதைகள் என நன்றாகவே தெரிந்திருந்தும், வெள்ளந்தியாகவே நடித்தார்.
“ இந்த கேணப்பயலுவோ சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடுதீயளே அண்ணாச்சி? “ என்று அண்ணன் கேட்டபோது “ சின்னப் புள்ளேள். நம்மள வச்சி சிரிக்குது. சிரிச்சிட்டுப் போட்டு.என்ன இப்ப?” என்பார் கண்சிமிட்டிச் சிரித்து.
சில இளைஞர்களிடம் கிளுகிளுப்பான கதைகள் சொல்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களிடம் அதே அறியா வெகுளி நடிப்பு மட்டும். 86ன்பின் அவரை நான் பார்க்கவில்லை.
எஸ் எஸ், “இந்த போட்டோவை நம்ம ஆனந்து Joseph Sugananth 5 வருசம் முன்னாடி எடுத்திருக்கான். அது இப்ப வாட்ஸப்ல எங்கிட்ட வந்திச்சி” என்றான். இப்போது ஆறுமுகம் இருக்கிறாரா ? தெரியாது.
எம்.பி.ஏ வகுப்பில் ஒரு முறை Transactional analysis ல் Eric Berneன் Games People Play பற்றிப் பேசுகையில் ஆறுமுகத்தின் நடிப்பு பற்றிச் சொன்னேன். Transactional Analysis expert ஒருவர் “அது விளையாட்டு என்பதாக வராது’ என்றார். ஆனாலும், 'இது மிக சுவாரஸ்யமான பரிமாற்றம்”' என்றார்.
பல முகங்கள் நமக்கு. ஆறுமுகத்துக்கு எங்களிடம் ஒரே முகம். அது ஏமாற்றுவதும் ஏமாறுவதாக நடிப்பதிலும் பொய்யில்லாத முகம்.
பி.கு : குட்டி நேற்று அழைத்திருந்தான் “ அதென்னடே மனப்பாடப் பாட்டு? ..This is my prayer. ஆறுமுகத்துகிட்ட பாடிப் பாடி, படிச்சதுல இப்ப அது ஒண்ணுதான் ஞாபகத்துல இருக்கு”
தாகூர் , ஆறுமுகத்திற்கு நன்றி சொல்லியிருப்பார்.

2 comments: