Saturday, August 31, 2013

பேரு சொல்லக் கூடாது

திடீரென நண்பரிடமிருந்து காலையில் போன். “ வே , நீரு இன்னும் வண்டிய எடுக்கலேல்லா?. அந்தப்பக்கமாத்தான் வர்ரேன். ஆபீஸ்ல கொண்டு விட்டுடுதேன். என்னா?” மழையில் ஊர்ந்து கொண்டிருக்கும் நெரிசலில் க்ளட்ச்சுக்கும், ஆக்ஸிலரேட்டருக்குமாக அல்லாடும் கால்கள் நம்முடையதல்ல இன்றைக்கு என்னும் குஷியில் ‘ மெயின்ரோட்டுல நிக்கேன். அஞ்சே நிமிசம்” என்றேன். நண்பர் ரேடியோவில் பாடும் பாட்டோடு சேர்ந்து தானும் கர்ணகடூரமாக , இன்றாவது பாடாமல் இருக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு காத்திருந்தேன். “ஆடியோ ரிப்பேராயிட்டுல்லா. நாளைக்குத்தான் புதுசு மாட்டணும்” என்ற நற்செய்தியோடு மனிதர் கிளப்பினார். ஆண்டவரே,நன்றி. இன்று எனது நாள். 

”அந்தக் கோட்டிப்பய ராபின் வந்திருந்தான்லா போனவாரம்? என்னன்னு கேளும் கதய” என்றார். ராபின் அவரது இம்மீடியட் பாஸ் - மான்செஸ்டரில் இருக்கிறான். வருஷா வருஷம் “மும்பையில் மாதம் மும்மாரி பெய்கிறதா? கஸ்டமரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா?” என்ற சடங்குமயமான வருகை ஒன்று அவனுக்கு உண்டு. “ம்” என்றேன். நெரிசல் அதிகமாகவே இருந்தது. 

” லண்டன் ஒலிம்பிக்ஸ்ல நாங்க ஒரு பெரிய ஆர்டர் வாங்கியிருந்தோம் பாத்துக்கோரும். நம்மூர்ல, பெருசா ரெபரன்ஸ் சொன்னாத்தான கஸ்டமர் நம்புவான்? எல்லா எடத்துலயும் சொல்லிட்டேன். இவன் போன வாரம் வாரான். கேக்கீராவே?”

“ஆங்.கேட்டுகிட்டுத்தான் இருக்கேன். நீரு பாடறத விட நல்லாத்தான் இருக்கு. சொல்லும்”

“அங். ஒரு கஸ்டமர் விசிட் கொண்டுபோயிருந்தேன். அவரு புட்டு புட்டு வைக்காரு. ’ஒலிம்பிக்ஸ்ல பெரிய ஆர்டரு வாங்கினீயளாம். இந்த மாரி பெரிய இடத்துல வித்தீயன்னு சொன்னா , நமக்கும் ஒரு நம்பிக்க வருதுல்லா. சரி. என்ன டிஸ்கவுண்ட்டு ?’ன்னு நேரா அடிமடியில கை வச்சுட்டாரு. குஜராத்தியில்லா. முதல்ல டிஸ்கவுண்ட். அப்புறம்ந்தான் என்ன விசயமா வந்தீ?யன்னுவாரு. இவன் மூஞ்சி அப்படியே சிறுத்துட்டு. வெளிய வந்து எங்கிட்ட கறாராச் சொல்லுதான். இந்தா நமக்கும் ஓலிம்பிக்ஸ் கமிட்டிக்கும் ஒரு லீகல் உடன்படிக்கை இருக்கு. அவங்க பெயரை எந்த இடத்துலயும் இழுக்கக்கூடாது.இந்த மாதிரிச் சொல்லிட்டுத் திரிஞ்சீருன்னு அவனுக்குத் தெரிஞ்சிச்சீ, நாம காலி”ங்கான். “
“என்ன புதுக்கதயா இருக்கு? இங்கனக்குள்ள, வாங்கலைன்னாலும், டாட்டா, பிர்லா, ரிலயன்ஸுன்னு எல்லாப்பொரையும் போட்டுத்தான நாம பேசுவம்?”
“அந்தக் கூ**யானுக்கு விளங்கலவே! வேணும்னா “இங்கிலாந்துல ஒரு பெரிய விளையாட்டு நிகழ்ச்சியில போதைப்பொருள் டெஸ்ட் பண்ண எங்க கருவியும் பயன்படுத்தினார்கள்”ன்னு வெளக்கெண்ண கணக்காச் சொல்லுங்கான். பேரைச்சொன்னா அது சட்டப்படி உடன்படிக்கையை மீறுதாம். சவத்தெளவு”

“வுடும். உமக்கு எப்படியும் ஆர்டர் கிடைச்சுருமுல்லா?”

”அது போவட்டு. அவனுக்கு கடைசிநாளு, ஒரு ஓட்டல்ல எங்குடும்பத்தோட போயி விருந்து கொடுத்தேன். என்ன ஆச்சு.. ஓட்டல்ல எம்மவன் நிக்க மாட்டேக்கான். ஒரே முரண்டு. அங்க ஓடுதான்...இங்க ஓடுதான். அம்மா , இவளபபாத்து “ அவனப் பிடிடி”ன்னு அடிக்கடிச் சொல்லிக்கிட்டிருந்தாங்க. இவன் கடைசில ஒண்ணு கேட்டான் பாத்துகிடுங்க”

பாலம் கடந்தும் நெரிசல். சிக்னல் தாண்டும்வரை இப்படித்தான் என்னிக்கும்.

“ நாம் அப்பலேர்ந்து பாக்கேன். உங்கம்மா ஏன் அவனப் வேற பேர் சொல்லில்லா கூப்பிடறாங்க?". நாஞ்சொன்னேன் “ அவனுக்கு எங்கப்பா பேருல்லா விட்டிருக்கு. அதான் அவங்க கூப்பிடறது வேறபேரு.” “அதென்னா?”ன்னான். “ புருஷன் பேரு சொல்லிக் கூப்பிடமாட்டாங்கடே. லே சதாசிவம், வாரியா இல்லயா. சாத்திருவேன்” -ன்னு அவங்க சொல்ல முடியுமா ?”ன்னேன். கக்கேபிக்கே-ன்னு சிரிச்சான்”

சிக்னல் அருகே வந்துவிட்டோம். 

“நாஞ்சொன்னேன் “ முகமேயில்லாத, ஒரு ஒலிம்பிக்ஸ் கமிட்டி, அது சொன்னதுக்கு இவ்வளோ பம்மி, பேரச் சொல்லக்கூடாதுன்னு சொல்லிதியே? இத்தன வருசம் கூடவே இருந்த மனுசன், குடும்பத்தைக் காப்பாத்தின ஒரு ஆளுக்கு மரியாதை எவ்வளோ இருக்கணும்? அவர் பேரைச் சொல்லக்கூடாதுன்னு ஒருத்தங்க தனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக்கிட்டா, அது சிரிப்பா இருக்காடே?” -ன்னேன்”. 
பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

நான் கொஞ்சம் அசந்துதான் போனேன். சிக்னலைத் தாண்டியிருந்தோம். கார் வேகமெடுத்தது.

“ சரிவே. நல்லாத்தான் சொன்னீரு. ரோட்டைப் பாத்து ஓட்டும்வே. வல்லாத்த, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது”

“ நாம ஒழுங்காத்தான் ஒட்டிக்கிட்டிருக்கோம். வெளங்கா?. நடுவுல எவனாச்சும் கொழுப்பெடுத்து வந்து விழுந்தா, அது அவன் விதி. மடியில கனமில்லவே. வழியில எதுக்கு பயம்ங்கேன்?”

Monday, August 26, 2013

செங்கால் நாரை - சிறு கதை

இக்கதை தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் "சொளந்தர்ய சுகன்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்தது

செங்கால் நாரை
--------------------------

"ஹை! அது என்ன அங்கிள்? பெரிசா ஒரு க்ரேன்?" வைஷ்ணவி துள்ளிக் குதித்தாள். "ஸ்... கார் ஓட்டும்போது மாமாவைத் தொந்தரவு செய்யாதே"பின்னாலிலி
ருந்து அவள் அம்மா ப்ரேமா அடக்கினாள். சாலையோர மைல்கல்,காருகுறிச்சி இரண்டு கிலோமீட்டர் என்றது. எனது மாருதி அம்பாசமுத்திரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.சிங்கப்பூரிலிரிந்து குடும்பத்தோடு வந்திருந்த நண்பன் சுந்தரம், குலதெய்வத்திற்கு வழி பாடு செய்யவேண்டுமென்று சொன்னதால், எனது காரிலேயே கிளம்பியிருந்தோம்.
"கேட்கட்டும். விடும்மா. குழந்தைகளுக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்"
"அது கொக்கு இல்லேம்மா. நாரை. செங்கால் நாரை."
சாலையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் இருந்த நீர்த்தேக்கத்தில் நாரைகளும் இதர தொலைதூரத்திலிருந்து வந்திருந்த பறவைகளும் சோம்பலாக மீன்பிடித்துக்கொண்டிருந்தன.
"அங்கிள்.கொஞ்சம் பக்கத்துல போய்ப் பார்க்கலாமா?" வைஷ்ணவி கெஞ்சினாள்.
"ரொம்பத்தான் செல்லம் இவளூக்கு... காலாகாலத்துல கோயிலுக்குப் போனோமா,
வந்தாமான்னு இல்லாம.. இதுவரை கொக்கே பாக்காத மாதிரி" பொருமிய பிரேமாவை சுந்தரம் எரிச்சலாகப்பார்த்தான்.
காரிலிருந்து வைஷ்ணவியை இறக்கினேன். ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று முகத்தைத் தாக்கியது.
"ரொம்பத் தள்ளிப் போகாதே, வைஷ்ணவி.. கண்ட கண்ட தண்ணில எல்லாம் கால் வைச்சு, காய்ச்சல் வந்துடப் போகுது"
பறவைகளீன் வினேதமான சப்தங்களும்,ஒரு விதமான துர்நாற்றமுமாகப் பரவியிருந்த,பாசி நீர்ப்பரப்பில் மெதுவாக நடந்தோம்.

வைஷ்ணவியைப் பறவைகளுக்குப் பிடித்துவிட்டது போலும்.. அனாவசியாமாக ஒன்றும் பறந்து சலசலப்பை உண்டாக்கவில்லை.
ஒரு பெரிய நாரை எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தது. வைஷ்ணவி பிரமித்தாள்." இதுவா அங்கிள்,நீங்க சொன்ன நாரை?"
"ம்.. இதுதான் செங்கால் நாரை. அது காலைப்பாரு.. செகப்பாஇருக்குல்ல. அதுனாலதான் அந்தப்பேரு"
பக்கத்தில் வந்த நாரை,கழுத்தை வளைத்து எங்களைப் பார்த்தது. மெதுவாக தண்ணீரில் அலகு ஆழ்த்தி மீன் பிடிப்பது போல் பாசாங்கு செய்தது.
"அதுக்குப் பயமா இருக்காது? நம்ம எதாவது செய்திடுவோம்-னு"? குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..
" இல்லேம்மா. செங்கால் நாரைக்கும் மனுசனுக்கும் ரொம்ப காலமா நெருங்கின சினேகிதம்.அதுக்கு தாராள மனசு. அது கிட்டே எதாவதுஉதவி கேட்டேன்னா, செய்துட்டுதான் கிளம்பிப்போகும்"
வைஷ்ணவி நம்பாமல் என்னைப் பார்த்தாள்" சும்மா சொல்றீங்க. பறவைக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது"
" செங்கால் நாரைக்குத் தெரியும் வைஷ்ணவி. அது கிளி,புறா மாதிரி புத்திசாலிப் பறவையில்ல. ஆனா அதுக்கு ஈரமான இதயம் உண்டு.அதுனாலதான் அந்தக் காலத்துல, ஒரு புலவன் நாரை விடு தூது-ன்னு செங்கால் நாரைகிட்டே தன்னோட கஷ்டம் பத்தி, மனைவிக்குச் சொல்லறதுக்கு கவிதை பாடி அனுப்பினான்"
"நாரை போய் சொல்லிச்சா அங்கிள்?"
"அது தெரியாதும்மா. ஆனா,நெஞ்சு நிறைந்த அன்பாலேயே உயிரை விட்ட நாரையை எனக்குத் தெரியும்"
நினைவுகள் பின்னோக்கி ஓடின.

தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன், யதேச்சையாக, எதிரில் வருபவரைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் நோக்கிக் கத்தினேன்.
"அம்மா, மாமா வந்தாச்சு.ஹைய்யா... மாமா வந்தாச்சு" ஓடிப்போய் அவரது கையைப் பிடித்துத் தொங்கினேன்.தோதாத்திரி மாமா எனது சொந்தத் தாய் மாமா இல்லை. அம்மாவிற்கு, ஒன்று விட்ட தம்பி. ஆயினும், மாமா என்றாலே எங்கள் வீட்டில் நினைவிற்கு வருபவர் தோதாத்திரி மாமாதான்.
குட்டையான் உருவம். பின்னால் வழித்து வாரப்பட்ட தலைமுடி. வாயில் எப்பவும் மணக்கும் வெற்றிலை. . கையில் மடக்கப்பட்ட "கிளி மார்க் டீ வாங்கிடுவீர்". என்னும் மஞ்சள் பை. எப்போதும் சிரித்த முகம்.தீர்க்கமான நெற்றியில் பாதி கலைந்த ஸ்ரீ சூர்ணம்... இவைதான் மாமாவின் அடையாளங்கள். எப்பவும் சிகப்பாகவே இருக்கும் அவர் நாக்கைப் பார்த்து எனக்கும் பெரியவனானதும் அப்படி வரவேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.

"டேய்,,டேய்.. விடுடா..." அட்டகாசமாகச் சிரித்தார் மாமா.
"குரங்கு மாதிரி கையைப் பிடிச்சு தொங்காதே-ன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?" என்னும் மற்றவர்களிடமிருந்து மாமா மிகவும் விலகித் தெரிந்தார்.
உள்ளே வந்தவர், அம்மாவை "அக்கா, செளக்கியமா?" என்றார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தார்.
"நன்னா இருப்பா.. ருக்மிணி வரலையா?"
"இல்லேக்கா. பரீட்சையெல்லாம் நடந்துண்டிருக்கு. யாராவது ஒருத்தர் காருகுறிச்சியிலே இருந்தாகணும்" மாமாவும், மாமியும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்.
"என்ன தோதாத்திரி இந்தப்பக்கம்?" என்றர் அப்பா."ஒண்ணுமில்லே அத்திம்பேர். ஊர்க்காரன் ஒருத்தனுக்கு கிணறு வெட்ட கடன் பத்திரம் எழுதணும்னான். நம்ம சரவணன் தான் பொறுப்புல இருக்கான். அதான் நேர்ல வந்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு எட்டிப்பார்த்தேன். உம்மோட ப்ரஷர் எப்படியிருக்கு? திருநெல்வேலி போயிட்டு வந்தீராமே..உடம்பு முடியலைன்னு? நாணா சொன்னான். உடம்பைப் பாத்துக்கும்"
தோதாத்திரி மாமாவுக்கு சொந்தமாக ஒரு வேலைன்னு வரவேமாட்டாரோன்னு தோன்றும்.
"மாமா, எனக்கு லீவு விட்டாச்சு. உங்ககூட காருகுறிச்சி வரட்டா?"ஆர்வமாகக் கேட்ட என்னை,அண்ணன் முறைத்துப் பார்த்தான்."யாரும் வீட்டுக்கு வந்துடக்கூடாதே.. நான் வரட்டா-னு முந்திரிக்கொட்டையா கேட்டுறவேண்டியது. மூதேவி" அவன் கடுகடுப்பது தெரிந்தது.மனதுக்குள் அலட்சியமாக" போடா" என்றேன்.
" வாயேன். அக்கா.. இவனைக் கூட்டிண்டு போறேன். கொஞ்ச நாள் மாறுதலாக இருக்கட்டுமே"
"அவன் ராத்திரி அழுவான் தோதாத்திரி. போனதடவை இப்படிதான் தூத்துக்குடி கூட்டிண்டு போயிட்டு,வரதன் அடுத்த நாளே கூட்டிண்டு வந்துட்டான். ராத்திரி பூரா ஒரே அழுகை"
"நான் ஒண்ணும் அழ மாட்டேன்" என்றேன் வீராப்பாக."சரி அக்கா. இங்க இருக்கிற காருகுறிச்சிதானே. எதாவது ஏக்கமாயிருந்தான்னா ஒரு மணி நேரத்துல கொண்டு வந்துடலாம். என்னடா அழுவியா ?
"மாட்டேன் மாமா" என்றேன் உறுதியாக.

" மாமா, அங்கே பாருங்க. ஒரு பெரிய கொக்கு" மாமாவின் சைக்கிளில் முன் பாரில் உட்கார்ந்திருந்த எனது கத்தலில், சில பறவைகள் பயந்து பறக்க முயன்றன. மாமா ஒரு கல் மேல் கால்வைத்து, சைக்கிளை நிறுத்தினார்.
" அதோ ஒரு பழுப்பு கலர்ல தெரியறது பாரு... அது செங்கால் நாரை" என்றார் மாமா.
" அது ஏன் மாமா அசிங்கமா இருக்கு?"
"அசிங்கமா இல்லேடா. அது ரொம்ப நல்ல பறவை. மனுசங்க கிட்டே ரொம்ப பிரியமா இருக்கும். பாசமா இருக்கற பறவை அழகா இல்லேன்னா என்ன? "
ஒரு நாரை தாழப் பறந்து,எங்களருகே சாலையோரம் தண்ணீரில் இறங்கியது. தண்ணீரில் அலைமோதும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.மாமா மெதுவாகப் பாடினார்
"நாராய் நாராய். செங்கால் நாராய்.
பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன கூர்வேல்வாய்
செங்கால்நாராய்"
எனக்குப் புரியவில்லை. "என்ன மாமா சொன்னீங்க?"
"இந்த நாரையைத்தான் ஒரு ஏழைப் புலவன் தன் பொண்டாட்டிகிட்டே தூது அனுப்பினான். இந்த நாரையோட அலகு 'பனங்கிழங்கு பிளந்தமாதிரி இருக்கு'-ன்னு சொன்னான். எவ்வளவு அழகான உவமை பாரு.." மாமா தனக்குள் பாடி ரசித்தார்.உற்றுப்பார்த்தேன். அலட்சியமாகப் பார்த்துவிட்டு நாரை எங்கள் அருகே வந்து கழுத்தை உயர்த்தி போஸ் கொடுத்தது.
"இதுக்குக் கொஞ்சம்கூட பயமே கிடையாதா மாமா?"
" மனுசங்க ஒண்ணும் பண்ணமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கைதான். சரி போவமா?"
மீண்டும் அடுத்தநாள் அந்த நாரை குளக்கரையோரம் தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில்
நானும் அதுவும் மிகவும் பழகி விட்டோம். அதன் குச்சி கால்களும், பெரிய சிறகுகளும், சற்றும் பொருந்தாத மிகப்பெரிய அலகும் எனக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஒரு முறை,சிறகு விரித்து அலகு பிளந்து காட்டியது. சிவப்பாகத் தெரிந்தது.. அதுவும் வெற்றிலை போடுமோ?

ஒருவாரத்தில் எல்லாப் பறவைகளும் திரும்பிப் பறக்கத் தொடங்கின. எனது நாரை மட்டும் குளத்திலேயே திரிந்தது. மும்முரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது.
"இது ஏன் மாமா இங்கேயே இருக்கு? எல்லாம் பறந்து போயிட்டிருக்கு?"
"எதோ ஏழைப் புலவன் தூது இன்னும் கொடுக்கலை போலிருக்கு.." மாமா காவிப்பற்கள் தெரியச் சிரித்தார். இந்த முறை நான் நம்பினேன்.

நான் அம்பாசமுத்திரம் போகும்நாள் வந்தது. மாமா சைக்கிளில் முன் பாரில் இருந்து சாலையோரத்தில் பார்த்துக் கொண்டே வந்தேன்.நாரையைக் காணவில்லை.
மாமா சட்டென்று சைக்கிளை நிறுத்தினார். சாலையோரம் அவசரமாகச் சென்று தண்ணீரில் பார்த்தார்.
" அடப்பாவமே"
தண்ணீரில் அரைகுறையாக மூழ்கி மங்கலாக ,பிளந்த அலகுகள் தெரிந்தன. சில இறகுகள் மிதந்துகொண்டிருந்தன. கால்கள் சிவப்பான சாயம் பூசினது போல சிதறிக்கிடந்தன. வேதனையில் வளைந்திருந்தன.
"எவனோ அடிச்சிருக்கான். சே.. பாவம்."
எதிரே வந்த ஒருவன் மாமாவை நெருங்கினான்" என்னாச்சு வாத்தியாரைய்யா?"
"நாரையை எவனோ அடிச்சிருக்காம்பா.. ஒரு வாரமா கரையோரமா நின்னிட்டுருந்தது.. பாவம்"
"கொன்னவன் நம்ம ஊர்க்காரனா இருக்கமாட்டான்யா. எவனோ வெளியூர்க்காரன் வேலை... எப்ப பார்த்தீங்க?""இப்பத்தான். எடுத்து அடக்கம் பண்ணிருவோம். எடு முருகேசா"
முருகேசன் தண்ணீரில் இறங்கி, அலகுகளைப் பற்றி இழுத்தான். தண்ணீர் வழிய சாலையில் போட்டபோது, அதன் ஓரங்களில் ரத்தச்சிவப்பு தெரிந்தது...

இரண்டு நாட்கள் நான் சரியாகத் தூங்கவில்லை. அம்மா,"எதையோ பாத்து பயந்திருக்கான்" என்றாள். விபூதி பூசினார்கள்.கோயில்யானையிடம் தும்பிக்கையில் தண்ணீர் கொடுத்து முகத்தில் பீச்சினார்கள்.எட்டாம் வகுப்பில் தாமஸ் சார் - "இருனூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக-"எனக்குப் பிடித்த விலங்கு அல்லது பறவை"" என்று கட்டுரைப்போட்டி வைத்தபோது எழுதினேன். "எனக்குப் பிடித்த பறவை அழகாகப் பேசும் கிளியோ, ஆடும் மயிலோ அல்ல.எனக்குப் பிடித்தது செங்கால் நாரை. ஏனெனில் அது மனிதர்களை நேசிக்கிறது, நம்புகிறது, உதவுகிறது. நாம்தான் நன்றி மறந்து அதனைக் கொல்கிறோம்" காருகுறிச்சிக்கு அதன்பிறகு நான் போகவில்லை.

கோயிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சுந்தரம் குடும்பம் உள்ளே நின்று கொண்டிருக்க, நான் காரில் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
"யாரு,சீனுவா? எப்படா வந்தே?"- கேட்டவனைப் பார்த்ததும் ஒரு கணம் குழம்பி னேன். இவன் கண்ணன்தானே? தோதாத்திரி மாமாவோட மூத்த பையன். இங்கே எப்படி? "இப்பத்தான் கண்ணா. சினேகிதன் குடும்பத்தோட வந்தேன். எப்படிடா இருக்கே? அம்மா அப்பாவெல்லாம் எப்படியிருக்காங்க?"
கண்ணன் ஒரு கணம் மொளனமனான்." அப்பா ஒரு மாசம் முன்னால இறந்துட்டார். .டெலிகிராம் அடிச்சோம். அப்புறம்தான் தெரிஞ்சது
உனக்கு மாத்தலாயிருச்சுன்னு.." நான் உறைந்தேன் " எப்படா? எப்படியாச்சு?" "நன்னாத்தான் இருந்தார். ரிடையர் ஆனதும், முத மாசப் பென்ஷன் வாங்கிட்டு
வர்றேன்னு போனார்.,இன்னொருத்தருக்கு பிராவிடண்ட் •பண்ட் •பாரம் வாங்கிண்டு வர்றதுக்கு நேரமாயிருச்சு. சாயங்காலம் ரொம்ப இருட்டிண்டு வந்ததுல எதிர்த்தாப்பல வந்த லாரி தெரியலை.அடிச்சுப்போட்டுட்டுப் போயிட்டான். ரோட்டிலேயே ரத்தவெள்ளத்துல கிடந்திருக்கார். ஒருத்தரும் உதவிக்கு வரலை. விஷயம் தெரிஞ்து.நாங்க போறதுக்குள்ள உயிர் போயிருச்சு" கண்ணன் மேலே சொன்னது எதுவும் கேட்கவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

ரோட்டில் ஒரு பெரிய நாரை இறக்கை விரித்துக் கிடந்தது. அதன் அலகுகள் பிளந்து ரத்தச் சிவப்பாக .. வெற்றிலை போட்டு உமிழ்ந்தது
போல்....நாரையின் உடலுக்குப்பதில் மாமா தெரிந்தார். கைகளில் பி.எ•ப் பாரம் சுருண்டிருக்க, சட்டைப்பையில் நூறு ரூபாய் நோட்டுகள்
மடக்கி வைக்கப்பட்டிருந்தன..

காரில் செல்லும்போது வைஷ்ணவி கேட்டாள்."அங்கிள், 'காட்டுல இருக்கிற நல்ல மிருகங்களெல்லாம், மனுசங்களாயிடும்'-ன்னு எங்க பாட்டி
சொன்னாங்க. அப்போ, நல்ல மனுசங்களெல்லாம் என்னவா ஆவாங்க? இப்ப பாத்த சாமி மாதிரி ஆயிடுவாங்களா?"
"நல்ல மனுசங்களெல்லாம் நாரை ஆயிடுவாங்கம்மா. அதுவும் செங்கால் நாரை "
சொன்ன எனது கண்கள் நிறைந்ததில், எதிரே சாலை மங்கலாகத் தெரிந்தது.

வீடு - சிறுகதை

குட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அதனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அது வந்திருக்கும் நேரமெல்ல்லம் என்னைக் கண்டவர்கள் " இவன் என்னல? காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்?" என்றும் "எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க?" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் வேறு மன அலைகளில் இருக்கிறேனென்றும், தனக்குள்ளே பேசுவதென்பது- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.
குட்டி என்னைவிட அறிவாளியில்லை. அது செய்யும் மிக உருப்படியான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். எதில் போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், குட்டியுடன் போவதால் நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்.

குட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜீரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்." வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது. 'வால,... ஒரு விசயம் சொல்லணும்' ' எங்க வரணும்? வெயில் கிடந்து பொரிக்கி.. இங்கனையே பேசுவம்' 'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..' 'எந்த ஆறுமுகம்?' 'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணியோட அண்ணன்.' 'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா?' 'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே? வாரும்வே, விசயமிருக்கு' குட்டி விடாது. கிளம்பினேன். வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.

வீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் .ரொம்பப் பழைய வீடு. ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில் 'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸில் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான். வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது. 'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு?' குட்டி கேட்டது 'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு?' "எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி" "இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்?" "கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்" வாசலில் யாரையும் காணலை. வேப்பமரத்தின் மேலே ஒரு காக்கா சோம்பலாகக் கத்திக்கொண்டிருந்தது. "சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா?" குட்டியிடம் சீறீனேன். "ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க"

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,"யாரு?" நின்றுகொண்டிருந்த இருவரில் இளையவனாக இருந்தவன் முதலில் பேசினான். "நாந்தாம்மா, மணிவண்ணன்" கூடவந்தவர் அடிக்குரலில் சீறினார்."மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு" குரலை உயர்த்தினார்."யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு" வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா? பேரு தெரியலை. அதான். வா தம்பி" செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்."தூங்குறவகளை எழுப்பிட்டமோ?" "இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்" வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர்.

ஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது. "வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப்போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா? இன்னும் வரலையே?" "மத்தியானம் வாரன்னான்" "அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா?" செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்."நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப .." அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,"ரத்னா நல்லாயிருக்காய்யா?" "வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்" "அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்-திருச்சிக்குப் போறேன்னு சொன்னாக-ன்னு"இதானா? நல்லது சாமி. கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன சொல்லிட்டிருந்த ராசா? வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல" செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார் வாசலில் நிழல் தெரிந்தது.

"ஆறுமுகம்தான். வந்துட்டான்" உள்ளே வந்தவன் சிரித்தபடி"வாங்க"என்றான்."கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ?" "சாப்புடுதியா ராசா? நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்" கிழவி பரபரத்தாள். "இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்?" "இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்" "அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட பேச வந்திருக்காங்க" கிழவி மெளனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் "எவ்வளவு கிடைக்கும் சார்?" "ஒரு லட்சம் போவும்" மீண்டும் மெளனம்.. செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்" வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள். "வீட்டை என்ன செய்வீங்க நாடாரே?"

மணிவண்ணன் முந்தினான்,"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்" செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மெளனம் நிலவியது. ஆறுமுகம்,"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்" வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். "அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு."செல்லமுத்து முடிக்கவில்லை; வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள். "அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க"

செல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது. "நான் அப்படியாம்மா சொன்னேன்?" வேலம்மாவின் குரல் உயர்ந்தது "நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே? உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்" செல்லமுத்து ஆடிப்போனார். "யம்மா" ஆறுமுகம் அதட்டினான்."என்ன பேசற/" "நீ சும்மாயிருல" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது. செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். "நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க? பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு" "குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை? கலைச்சுறு-ங்கறீங்க" "அதில்லம்மா" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது. தர்மசங்கடமான மெளனம் மீண்டும்.


"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்" "கை நனைக்காம போறீயளே? ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்" "காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்" வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார். "கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா?" அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் "சே! நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே" "இந்த வீட்டை விக்கச் சொல்லறியா?. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்" "புரியாம பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு" "அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்" "நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்" "பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்" திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள் நான் குட்டியை முறைத்தேன்." இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா? நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்" எழுந்து நடந்தேன். "ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு.."


ராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது. "எந்திரிலா..முக்கியமான விசயம்" "போல.. என்ன தலைபோற வேலை இப்ப? காலைல பாத்துக்கலாம்" "தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்" வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது. "மயங்கிக் கிடக்காளோ?" பரபரத்தேன் " நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி" "அரணை நக்கியிருக்குமோ?" "அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி" "தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல" "குடம் இடிச்சிருச்சோ,இடிச்சாங்களோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்"


என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்."ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது. ' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா?" "வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்"

குட்டியின் வரவை இப்போதெல்லாம் அறவே வெறுக்கிறேன்.