Sunday, February 12, 2012

செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.