Friday, March 28, 2014

பொறுப்பு - உணர்வு

Daniel Goleman ன் Focus   படித்துக் கொண்டிருந்தேன். சிந்தனையை நிறுத்திப் பிடித்தது ஒரு வரி
“The brain's right hemisphere recognizes the feeling depicted , while the left understands the name and what it means"

சுருக்கமாக - மூளையின் வலது பகுதி, வெளியுலகிலிருந்து கிடைக்கும் தூண்டல்களிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. இடது பகுதி அது எந்த உணர்வு என்பதை வார்த்தைகள் மூலம்,முன்பு புரிந்து கொண்டதை தனது தகவல் கிடங்கில் கிடக்கும் சொற்களோடு இணைத்து முழுமையாகப் புரிந்து கொள்கிறது.

 கவனிக்கவும் முழுமையாக மட்டுமே - 'சரி'-யாக இல்லை.

ஏன் 'சரி'-யாக என்று சொல்லவில்லை? என்றால், எனது இந்தப் புரிதல் ஒரு அனுபவத்தில் நிகழ்ந்தது.

இரு வருடங்கள் முன்பு , டெல்லி விமான நிலையத்தில் மும்பை செல்ல அழைப்பிற்காகக் காத்திருந்தேன். அருகே ஒரு வயதான பெண்மணி. சற்றே தளர்ந்த விழிகள், முன்புறம் நரைத்த முடி. 60- 65 வயது மதிக்கத் தக்கவர். இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு மறுபுறம், ஒரு நவ நாகரிக யுவதி. படு ஸ்லிம்மாக, உடலை ஒட்டிய பேண்ட், சிறிய டீ ஷர்ட். இடுப்புப் பகுதியில் டீ ஷர்ட்டை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள் . இப்படி குட்டையாக போடுவானேன்? இழுத்து விடுவானேன்?

விடுங்கள் அது முக்கியமில்லை. ஏனெனில்  அவளது சிறு குழந்தை அங்குமிங்கும் தத்தக்கா பித்தக்கா என ஓடிக்கொண்டிருந்தது. அதை சற்றே உயர்ந்த குரலில் அதட்டுவதும், அதனை ஓடவிட்டுப் பின் ஓடிப்போய்ப் பிடித்து எடுத்து வருவதுமாக அப்பெண் அலட்டிக் கொண்டிருந்தாள். டிபிகல் டெல்லி கலாச்சாரம். உரத்த குரலில் கொஞ்சுதல், பின் திட்டுதல் என நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

குழந்தை எதையோ கொட்டி விட்டது என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்தப் பெண் இடுப்பில் கை வைத்தவாறு “ look at me. what have you done? haan?" என்று அனைவரும் பார்க்க, அதட்டினாள். குழந்தை அவளை ஏறிட்டு சில நொடிகள் உற்றுப் பார்த்து , சர்வ சாதாரணமாக மீண்டும் ஓடத் தொடங்கியது. அவள் , அருகிலிருந்த பெண்மணியைப் பார்த்து போலி அலுப்புடன் சொன்னாள் “ Not at all having fear. He does not know fear. I am sooo tired , you know".

அந்தப் பெண்மணி ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தார். அந்தப் பெண் , குழந்தையுடன் விமான அழைப்பு வர எழுந்து சென்றதும் என்னை நோக்கி சரிந்தார். மிக மெல்லிய குரலில்
“She is blessed with motherhood. But she is not a mother yet" என்றார்.

வியப்புடன் அவரை ஏறிட்டேன். பின் பேசியதில் அவர் டெல்லியில் ஒருகல்லுரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் இந்தூர் செல்கிறார் என்றும் தெரிந்தது. எனது விமானத்தில் , அதுவும் எனது அருகிலிருந்த இருக்கையில்தான் வருகிறார் என்றும் தெரிந்ததும் இருக்கையில் அமர்ந்த பின்னும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ புரிதல் என்பது இரண்டின் சேர்க்கை. தூண்டுதல்களின் மூலம் கிடைக்கும் உணர்வுகள் மற்றும் அதனைப் பற்றிய முன் அனுப்வங்கள், தகவல்கள். உணர்வுகளுக்கும், முன்னறியும் தகவல்களுக்கும் ஒரு தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். குழந்தைப் பருவத்தில் இத் தொடர்பு தவறாக ஏற்பட்டு விட  வாய்ப்பு அதிகம். அந்தப் பெண்ணின் குழந்தைக்கு, கோபம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வார்த்தைத் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கோபம் என்பது இன்ன வகையான முக பாவம், குரல் ஏற்றத் தாழ்வு என்று தெரியாமல் போயிருக்கலாம். இதனைச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் கடமை. இவள் அதையெல்லாம் செய்யாமல், ஒரு தாயாக செய்ய வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு, தனது தாய்மையை மட்டும் கொண்டாடுகிறாள். இது பொறுப்பற்ற சுயநலம்”

அசந்து போனேன்.

“ நீயெல்லாம் சிறுவனாக இருக்கும்போது ராமாயணம், மஹாபாரதம் கேட்டிருப்பாய். காமிக்ஸ் புத்தகம் படித்திருப்பாய். அதுல கோபம்னா, கடுங்கோபம், வெகுளி, ஆத்திரம், சினம் -னு நிறைய வார்த்தை வரும். அதோட, கதை சொல்றவங்க முகத்தில, குரல் மாடுலேஷன்ல ஒரு உணர்வு தெறிக்கும். உன்னை அறியாம, இந்த வார்த்தைக்கு இன்ன உணர்வு, இன்ன குரல் மாடுலேஷன்னு உன் மூளை பொருத்திக்கும். இப்ப? கார்ட்டூன் விட்டா குழந்தைகள் எதிலிருந்து கத்துக்கும்? ஒரு 2 D சித்திரம், கார்ட்டூன் என்ன உணர்வைப் பெரிசாக் கத்துக் கொடுத்து விடும்.? ”சின்சென்...” என்று அலறும் ஒரு விகார ஜப்பானிய முகம்.. அதுவா ரொளத்திரம், கோபம்? இதுக்குத்தான் கதை கேக்கணும், நல்லா கதை சொல்ற்வங்க வீட்டுல வேணும்-ங்கறது. "

" கூட்டுக் குடும்பம் அவசியம்னு சொல்றீங்க?”

“ அப்படி இல்ல. கூட்டுக் குடும்பமா இருந்துட்டா மட்டும் போதாது. ஆட்களுக்கு கதை சொல்லத் தெரியணும். கூட்டுல இருந்துட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. பெற்றோர் கதை சொல்லணும். அதுல ஆர்வம் இருக்கணும்.குழந்தை வளர்ப்பு , ஒரு தார்மீகப் பொறுப்பு, ஒவ்வொரு அப்பனுக்கும், அம்மாவுக்கும்.”

அவர் இந்தூரில் இறங்கிப் போனபின்பும் நான் இதனை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று மீண்டும் என் நினைவுகளில். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை?

Tuesday, March 18, 2014

7.83 ஹெர்ட்ஸ், புதிய நாவல் மின்னூலாக வெளியீடு

எனது இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ் சமீபத்தில் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் அச்சு வடிவம் இன்னும் இரு மாதங்களில் வம்சிபுக்ஸ் வெளியீடாக வெளிவரும். 

இதுவும 6174 போல அறிவியல் சார்ந்த புதினம். ஆனால், கணிதப் புதிர் ,புதிர்ப் பாடல்கள் என்றெல்லாம் இல்லாமல், அறிவியல், மரபணுவியல் சார்ந்த ஒன்றாக அமைத்திருக்கிறேன். 

மின்னூல் ஏன்?  கடல் கடந்து வசிக்கும் நண்பர்கள், மேலும் இந்தியாவிலேயே பல பகுதிகளில் கூரியர் டெலிவரி சரியாக இல்லாத இடங்களில் இருக்கும் நண்பர்கள், அச்சு வடிவ பிரதிகள் கிடைப்பதில் இருக்கும் சிரமத்தைத் தெரிவித்தனர். 6174 நாவலுக்குக் கிடைத்த பின்னூட்டங்களில் எனக்குக் கிட்டிய ஒரு தகவல் இது. 

மின்னூலாக இருக்குமானால், எளிதில் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் முடியும். தற்போது அமேசான்.காம் தளத்தில் மட்டுமே கிடைக்குமாறு செய்திருக்கிறேன். இது எனது கன்னி முயற்சி; எனவே போதிய கட்டுப்பாடுகளுடன் , எச்சரிக்கையாக ஒரேயொரு தளத்தில் மட்டுமே பரிசோதித்து பார்த்திருக்கிறேன். சில மாதங்களில் பிற ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐபுக் தளங்களிலும் கிடைக்கும். 

https://www.amazon.com/dp/B00IP00X72 என்ற நிரலியைச் சொடுக்குவதன் மூலம் இப்புத்தகத்தின் பக்கத்தை , அமேசான்.காம் -ல் நீங்கள் அடையலாம். 

படித்துவிட்டு உங்களது மதிப்பீட்டைத் தரவும் என்ற வேண்டுதல்களுடன்
க.சுதாகர்.  

Tuesday, March 04, 2014

சீறுவோர்ச் சீறு - சிறுகதை

"விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமாகும். Technical Snag" என்ற ground staff விமானப் பணிப்பெண் நட்புடன் சிரித்தாள். இந்த சிரிப்பு இரண்டு மணி நேரம் அவள் என்போல் காத்திருந்தால் நட்புடனோடு இருக்குமா? என்ற சந்தேகத்தோடே மீண்டும் வந்து அமர்ந்தேன்.
சாரிஎன்று காலைத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்ட மனிதர் அடுத்த இருக்கையில் அமர்ந்தார். நானும் அவரை லேசாகத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். கால் இடறிய மனிதர் புன்னகைத்துஇன்னும் ஒரு மணி நேரம்என்றார். “ குறைந்த பட்சம்என்றேன்.
மயூர் சோலங்க்கி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். விலை அதிகமான வேதியல்பொருட்களையும் அவற்றின் பண்புகளை அளவிடும் கருவிகளையும் தயாரிக்கும் சொந்தக் கம்பெனி வைத்திருந்து, அதனை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, இப்போது உற்பத்தித் துறையில் கன்ஸல்ட்டிங்க் செய்து கொண்டிருக்கிறாராம். ன்னை விட இரு வருடங்கள் இளையவர். உயரமாக , வாட்ட சாட்டமாக கம்பீரமாக இருந்தவரின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் இழையோடியதாகப் பட்டது. சிறிது பேசிக்கொண்டிருந்த பின் , பீன்ஸ் & லீவ்ஸ் -ல் அவருக்கும் சேர்த்து  காப்பி வாங்கி வந்தேன்.
எனது புதிய நாவலில் பிழைகள் திருத்துவதில் மூழ்கியிருந்தேன். மெல்ல என் புறங்கையைத் தொட்டார்.’ படா பாய் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். ஏனோ சொல்லணும்னு தோணுது.தவறா இருந்தா மன்னிக்கணும்என்று தொடங்கினார். லாப்டாப்பை மூடி வைத்தேன்.  
இஞ்சினீயரிங்கில் கூடப் படித்த நண்பர்கள் சமீபத்தில் 20-ம் வருட get together நடத்தினார்கள். பல வருடங்களாகப் பார்க்கா பலரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. போன் நம்பர்கள் , மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் பரிமாறி, ஒரு கூகுள் குழுவும் அமைத்தோம். நாந்தான் அதை முன்னின்று முனைப்புடம் செய்யவும் செய்தேன்.” ஒரு கணம் நிறுத்தினார்.
அதில் ஒரு பெண். எல்லாரோடும் மிக சகஜமாகப் பழகுவாள். இப்போதும் அப்படியே கலகலவென இருந்தாள். மின்னஞ்சல் குழுவில், அவளைக் குறித்து, கிண்டலாகத்தான் கணவர் பெயரைப் பின்னால் போட்டிருக்கிறாயே? பாவம் அவர்’  என்று எழுதியிருந்தேன். அதற்கு அவள்நீ பெண்கள் பின்னால் அலைகிறாய். நீ மண வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவன்என்று அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்குமாறு எழுதிவிட்டாள். “ மனிதரின் முகம் நினைவில் மேலும் கனத்தது.
சட்டென குளமான கண்களோடு என்னை ஏறிட்டார். உதடுகள் துடிக்கநான் அப்படிப் பட்டவனில்லை அப்படி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்களே என்ற உற்சாகத்தில், கல்லூரியில் இருந்தது போலவே அதே இளமை மனத்துடன் இருந்துவிட்டேன். அதுதான் தவறோ?”
உங்கள் கருவியில் லேசர் உபயோகிப்பீர்கள் இல்லையா?” என்றேன்
ஆமாம்.”
அதில் ஒரு லேசர் கற்றை இரண்டாய்ப் பிரிக்கப்படும். அதுவரை இரண்டுக்கும் ஒரே அகடு, முகடுகள். ஒரே அலை நீளம், அதிர்வெண். இரண்டும் வேறு வேறு ஊடகங்களில் பயணித்து மறுபுறம் வந்து சேரும்போது ஒன்றாக இருப்பதில்லை. ஒன்றின் அலை நீளம் ஊடகத்தால் மாறியிருக்கும். ஒன்றாக சேராது. இதுதானே நீங்கள் பயன்படுத்தும் கருவியின் அடிப்படை தத்துவம்?”
ஆம்என்றார்எந்த அளவு அதன் நீளம் மாறுகிறதோ அதை வைத்து அந்த ஊடகத்தின் மூலக்கூறுகளை , அடர்வை அறியமுடியும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் கல்லூரியில் ஒரே அலைவரிசை கொண்டிருந்தீர்கள். அதன்பின் கிடைத்த, சமூக அனுபவங்கள் வேறுவேறு. இப்போது சேரும்போது எப்படி அதே ஒத்துப்போகும் அலைவரிசையை எதிர்பார்க்கமுடியும்?”
அது புரிகிறது அண்ணா. ஆனால் ஏன் அப்படி ஒரு வெறுப்பை உமிழ வேண்டும்? அந்த அளவுக்கு நான் ஒன்றும் மோசமாக நடந்து கொண்டு விட வில்லையே? ”
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். அதிகமான உரிமையோடு பேசினாலோ, பழகினாலோ அந்த எச்சரிக்கை மணி ஒலித்துவிடும். சில தவறான அபாய ஒலியாகவும் இருக்கலாம். விடுங்கள். மேற்கொண்டு, நிஜமாகவே உங்களை, உங்கள் நட்பை மதிப்பவர்களிடம் பேசுங்கள். முப்பது நண்பர்களில் ஓரிருவர் இப்படி நடந்து கொண்டால் இருவத்தி எட்டு பேரும் மோசமானவர்களல்ல. நீங்கள் என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றேன்.
ஒன்றும் செய்யவில்லை. விட்டுவிட்டேன். நாம ஏன் அந்த அளவுக்கு தரக்குறைவாப் போகணும்?-னு நினைக்கறேன்
அப்ப விடுங்க.”
அதான முடியலை? என்றார் பரிதாபமாக. அவரை உற்றுப் பார்த்தேன். அவருக்கு ஏதோ சொல்லவேண்டும்போல இருக்கிறது. ஆனால் சமூக விதிகளை அனுசரித்து , ஒரு கனவானாக நடிக்க முயல்கிறார். அனுகணமும் தோற்கிறார்.
 “இது மாதிரி உங்களிடம் பேசுவது போல் பகிர்ந்து கொண்டால் ஆறிவிடாதா. அவள் அப்படியே நினைத்துப் போகட்டும். என் நண்பர்களுக்கு நான் யார் என்று தெரியும்:”
பகிர்தல் என்பது மூடிய குக்கரிலிருந்து சீட்டி ஒரு முறை இருமுறை மேல் தூக்கி, அதிகப்படியான அழுத்த்த்தை இறக்குவது. ஆனால், அடுப்பிலிருந்து சூடு கிடைக்கும்வரை, குக்கர் கொதிக்கத்தான் செய்யும்”
என்ன செய்யணும் படா பாய்?” அவர் முகத்தைத்தில் கைக்குட்டை பரப்பி வியர்வையில் இயலாமையைத் துடைக்க முயன்றார்
நீங்கள் ஒரு எதிர்மொழி கொடுக்கவேண்டும். அது காட்டமாக அவள் சொன்னது போலத்தான் இருக்கவேணுமென்பதில்லை. உங்கள் மனத்தின் இயல்புக்கு ஏற்றமாதிரி,மென்மையாகவோ, பூடகமாகவோ, சிரிப்பினூடே உள்குத்துடனோ, அல்லது சுடு சொற்களாலோ எப்படியோ .. தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த அழுத்தத்தில், உஷ்ணத்தில் நீங்கள்தான் வெந்து போவீர்கள்
அது நமது பண்பாடு இல்லை. அப்படி பெண்களிடம் கோபமாகப் பேசும்படி நான் வளர்க்கப்படவில்லை
பண்பாடு என்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதால் வரும் சிக்கல் இது. அந்தப் பெண்களை மட்டும் உங்களிடம் இழிவாகப் பேசும்படி வளர்த்திருக்கிறார்களா? இல்லையே? அவர் தவறும்போது அதனை இடித்துரைக்க வேண்டியது உங்கள் பண்பாடு
அவர் சமாதானமாகவில்லைஇல்லை படா பாய். இது கல்ச்சருக்கு ஒத்து வராத ஒன்று. என்னால் முடியாது
கொஞ்ச நேரம் முன்பு என் காலைத் தவறுதலாக எத்தியவுடன் என்ன செய்தீர்கள்?”
வணங்கினேன். உடல் ஒரு கோயில் அண்ணா
உடல் கூட ஒரு கோயில் என்றால் அதிலிருக்கும் மனம் அதிலும் உயர்ந்தது இல்லையா? அதனை அவமதிப்பது பாவம் என்பதையும், அதன் மரியாதையைக் காக்க வேண்டியதும் பண்பாடு இல்லையா?” மீறினால் தட்டிக் கேட்கவேண்டியது நமது கடமை. அதைச் செய்ததாக நினைத்துப் போங்களேன்
அவர் எழுந்தார் . “ரொம்ப நன்றி. படாபாய். யோசிக்கிறேன்

விமான அழைப்பு வர, நானும் எழுந்தேன்முன்னிருந்த பளபளத்த பித்தளைப் பலகையில் என் முகம் தெரிந்தது. சில கணங்கள் உற்றுப் பார்த்தேன். மயூர் சோலங்கி தெரிந்தார்