Thursday, December 31, 2015

கம்பனை ரசித்தல் - 4

“சார், கம்பராமாயணம் படிக்காம, புரியாம அதனோட சாரத்தை உள்வாங்கி, மனம் மயங்கின நேரத்துல சொல்ல முடியுமா? இது சாத்தியமா?” நான் கேட்ட மனிதர் ,ஓய்வு பெற்ற எஞ்சினியர். தமிழில் ஆழ்ந்தவர்.

“என்ன விசயம்?”

“கோவீந்த ராஜு-ன்னு ஒரு நண்பன்..” கோவிந்துவின் கம்பராமாயண நிகழ்வை நினைவு கூர்ந்தேன். பேஸ்புக்கில் எழுதியதையும் அவரிடம் சொன்னேன். (அவர் பேஸ்புக்கில் இல்லை.)

ஒரு முறை இருமினார் “ இங்கிட்டு குளிர் ரெண்டு நாளாப் பிடிச்சு ஆட்டுதுல்லா? தடுமம் பிடிச்சிருச்சு. ஆங், என்ன கேட்டிய? கம்பராமாயணம் குடிவெறில வருதா? இல்லயே? அவஞ்சொன்னது உண்மையான உணர்ச்சி வெளிப்பாடுல்லா?”

“இல்ல சார். அவன் என்னிக்கோ சீவில்லிபுத்தூர்ல ரோட்டுல நின்னு கேட்ட ஒரு சொற்பொழிவை, குடி வெறில சொல்லுதானே? இது கம்பனோட வெற்றின்னுதான சொல்லணும்? சுத்தமான கம்பராமாயண நாடக நிகழ்வுல்லா, அது? அனுமன் ராமனை வணங்காம, லங்கா நோக்கி வணங்கினான்னு சொல்லறது கம்பன்லா?”

“டே” என்றார் மீண்டும் இருமியபடி “ இதான் நீ வெளங்கிக்கிடலைங்கறது. அவனுக்கு கம்பனை விட ஆழமாப் பதிஞ்சு போனது, தாயாரை முதல்ல வணங்கணும்னுதான். அவனுக்கு் கம்பன் ஒரு ஊடகம்தான் கேட்டியா? உனக்கு அங்கிட்டு கம்பன் தெரியறான். அவனுக்கு தாயார் தெரியறா. இதுல யார் உணர்வு பெரிசு, சிறிசு? கம்பன் அவனுக்கு புரிஞ்சா என்ன புரியாமப் போனா என்ன, அவஞ் சொல்ல வந்தது மனசுல நின்னுபோச்சுல்லா?, அவன் ரூம்ல உளர்றச்சே, அங்கிட்டு கம்பன் கை தட்டி நின்னிருப்பான், அவன் நிக்கறது, ஒங்கண்ணுக்கு, புத்திக்குத் தெரியாதுடே”

சற்றே சிறுமைப்பட்டாற்போல் உணர்ந்தேன். அப்போ என் அனுபவம் சிறியதுதானா? கம்பனை விட, கம்ப ராமாயணத்தை விட, அதன் பொருள் அனுபவிப்பது எப்படியிருப்பினும் பெரிதுதானோ?

கேட்டும்விட்டேன். இதற்கிடையில் ‘பிப் பிப் ‘ எனப் பல மிஸ்டு கால்கள் வந்து போன ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

“நிச்சயமா. ஒரு அழகான பெட்டி இருக்கு. அதுக்குள்ள ஒரு முத்து. நீ பெட்டியப் பாத்து மலைச்சுப் போற. அவன் அதுக்குள்ள இருக்கிற முத்தைப் பாத்து அசந்து போறான். உனக்கும் முத்து பெரிசுதான். ஆன உன் மலைப்பு பெட்டியோட நின்னிறக்கூடாதுங்கேன். பெட்டிய பாராட்டாதவன் எப்படி முத்தப் பாப்பான்னு நீ நெனக்கறது தப்புங்கேன். வெளங்கா?”

என் மவுனம் அவரை சற்றே அசைத்திருக்க வேண்டும்.

”டே, ராமாயணம், ஒரு பாகவதன் உயிரைக்கொடுத்து பன்னிப்பன்னி நல்லாச் சொல்லட்டும், ஒரு குழந்தை மழலையில, தப்பு தப்பாச் சொல்லட்டும். ரெண்டு இடத்துலயும் கண்ணீர் பெருகியபடி, கைகூப்பியபடி அனுமான் நிக்காந்ன்னு சொல்லுவாக. இது ஒரு சம்ஸ்க்ருத சுலோகம் பாத்துக்க. அனுமான் என்ன, பாகவதன் சொன்னாத்தான் ராமாயணம்னு நிக்கானா? அவனுக்கு ராமாயணம்தான் முக்கியம். “

‘இருந்தாலும்...”

“சரி, தமிழ்ல வாரேன். இந்த பாசுரம் கேட்டிருக்கியா?

”தவம்புரிந்த சேதனரை சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை -உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே”


அஷ்டப் பிரபந்தம்னு ஒண்ணு. ஃபர்ஸ்ட் கிளாஸ் பாத்துக்க. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்னு 12ம் நூற்றாண்டுல ஒருபெரியவர் எழுதினது. கிட்டத்தட்ட ராமானுஜர் காலம்தான்.
என்ன சொல்லுதாரு பாரு. பக்தர்களை சந்தோசமா தேவர்களா பெருமாள் ஆக்குதாராம்.. யாரால? ”தன்மார்பு இருப்பாள் தகவு உரையாலே”. அவ சொல்லித்தான் அவன் செய்தான். இதப் படிக்க நீ வைணவனா இருக்கேண்டாம். தாயார் எப்பவும் தகுந்த மொழிகளைத்தான் தன் பிள்ளைகளுக்காகப் பேசுவா. அவன் சந்தோசமாக் கேப்பான்.. இது புரியும்லா எல்லோருக்கும்? அது போதும்லாடே? “

இந்த வருடத்தை ,  தாயாரின் தகவு உரையால், அவன் உவந்து அனைவருக்கும் அளிக்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, November 30, 2015

கம்பனை ரசித்தல் -3

  "ஒரு ஆபத்து வர்றதுன்னு வைச்சுக்கோ, மனுசன் உலகத்துல எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதான் எதிர்வினை செய்வான்.” ஞாயிறு காலை இப்படி உதயமானால், காமர்ஸ் படிக்கும் இளைஞர்கள் “குவாண்டம் மெக்கானிக்ஸ் எக்ஸ்ட்ரா லெக்சர் இருக்கு” என்று எதாவது சொல்லி ஓடிப்போவார்கள். அபிஜீத்க்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் போறாது.

“ஏம்ப்பா? கல்ச்சர் மாறுகிறப்போ, நம்ம ரியாக்‌ஷன் மாறாது?” என்றான்.

“மாறும். ஆனா அந்தப் படிநிலைகள் மாறாதிருக்கு”
“அதெப்படி? ஒரு வீட்டுல யாரோ செத்துட்டாங்கன்னு வைங்க, நம்ம ஊர்ல ஆ ஊன்னு அழறோம். வலிக்க வலிக்க ஒப்பாரி பாட்டெல்லாம் கூட இருக்கு. . நார்த் இந்தியாவுல வெள்ளை வெள்ளையா ஜிப்பா, பைஜாமா போட்டுக்கறாங்க. வெளி நாட்டுல ஒருத்தன் அழறது கிடையாது. கறுப்பு கோட்டு... நிறையவே வித்தியாசம் இருக்கே?”

“நீ சொல்றது சடங்குகளின், சமூக விதியின் வகையில். நான் சொல்றது உணர்வுகள் ,அவை கொண்டுவரும் எதிர்மறை செயல்பாடுகள்...அது எல்லா இடத்துலயும் ஒண்ணாத்தான் இருக்கு” என்றவன் தொடர்ந்தேன்.

“ திடீர்னு ஒருத்தருக்கு வேலை போச்சுன்னா அவருடைய ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்.
முதலில் திகைப்பு. அதிர்ச்சி. எனக்கா இது நடந்தது?ன்னு ஒரு கேள்வி. மெல்ல உடல் மற்றும் மன நடுக்கத்தோடு அதனை எதிர்கொள்ளுதல்.
இரண்டாவது - உடல் மன கோளாறுகளின் தொடக்கம். தலைசுற்றி வருதல், குழறுதல், ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், மன அழுத்தம். தலைமுடி நரைத்துப் போவதும் நடந்திருக்கிறது. அதிர்ச்சி செய்தியை உள்வாங்க நடக்கும் முயற்சியாக அரற்றுதல், ஒப்பாரி வைத்தல். புலம்பிப் பேசுதல், அதீதமான இறுக்கத்துடன் இருத்தல்”

“ரைட்டு இதான் நிறைய சிவாஜி கணேசன் படத்துல பாத்தாச்சே?”
“ஏய். சிவாஜியச் சொன்னே.. இருக்கு ராஸ்கல். இத்ற்கு அப்புறம் ஒரு விதமான அதீதப் பொறுப்புடன் குடும்பப் பாரத்தை கவனிக்கத் தோணும். அதீத ஒழுக்கம் வரும். இது நல்லதுதான். ஆனா ஒரு உணர்வு கொந்தளிப்பு வரும்.”

“எல்லாருக்குமே இதுதான் முடிவா?” என்றான் பயந்துபோய்.

“இல்ல. சிலர் மாறிப்போய் எல்லாம் தெய்வம்னு ஒரு விதமா சடங்குகள் சார்ந்த மதம் அல்லது ஒரு நபர் சார்ந்த குழுமம்னு போவாங்க. சிலர் தத்துவார்த்தமா சிந்தித்து தாடி வளர்த்து போகலாம். சிலர் உத்வேகத்துடன் வேற பயிற்சிகளை எடுத்துகிட்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு வேறு பாதையில் உற்சாகமாக முழுமூச்சோடு இறங்கலாம். இந்த மூன்றும் சாத்தியம்”

“ஓ. அப்ப எல்லாரும் நடந்துக்கறதை ஒரு மாதிரியாத்தான் guess பண்ணலாமங்கறீங்க,?”

“ம்.. கஷ்டம். மனசு ஒரு குரங்கு. ஆனா ஒரு குரங்கோட மனசு எப்படி தெளிவா இருந்திருக்கு தெரியுமோ, மனுசனை விட அதிக ஆளுமையோட?”

அவன் பேசவில்லை. நான் தூண்டப்பட்டுவிட்டேன் இனி அவன் கேட்காமலேயே சொல்லிவிடுவேன் என்பது அவனுக்குத் தெரியும்.

“வாலி மேல பட்ட அம்பு ராமனோடது என்று தெரிந்தது, அதிர்ந்து போறான்.”

”மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை... ராம என்னும் நாமந்தனை கண்களில் தெரியக் கண்டான்’- இது கம்பன் பாடல்.

அதென்ன கண்களில் தெரிய? இல்லூஷன்-காட்சிப்பிழை இல்லைங்கறான் கம்பன். அதோட வாலிக்கு ஒரு டெலூஷனும்(கருத்துப்பிழை) இல்லை. இதைச்சொல்ல ஒரு காரணம் இருக்கு. அவன் போருக்கு புறப்படறதுக்கு முன்னாடி தாரை சொல்றா ‘ சுக்ரீவனுக்குத் துணையா அந்த ராமன் வந்திருக்கான். அவன் அம்பு விட்டுறப்போறான், பாத்து” . வாலி சொல்றான் “ போடி, அவன் எம்புட்டு பெரிய ஆளு.. இப்படி எங்க சண்டைலலெல்லாம் வரமாட்டான். சும்மா அழுத, கொன்னுறுவேன்”. இப்படி, பேச்சு நடந்தப்புறம், ஒரு அம்பு அவனைத் துளைச்சா, இது ராமனா இருக்குமோன்னு சந்தேகக் கண் வந்திருக்கும்பாரு, அது டெலூஷன். இது இல்லாம நிஜமாவே, கண்களில் தெரியக் கண்டான்கறான்.”

“இந்த கம்பன் நிஜமாவே இப்படி சைக்காலஜி எழுதியிருப்பாரா, நீங்க சும்மா ஊத்தறீங்களா?”

“ரெண்டும்தாண்டா. சைக்காலஜி என்னமோ சிக்மண்ட் ப்ராய்டு வந்தப்புறம்தான் வந்ததுன்னு நினைக்காதே. அதுக்கு முன்னாடி மனுசனுக்கு மனசு இருக்கு, அது கேணத்தனமானதுன்னு அம்புட்டு நாகரிகமும் சொல்லியிருக்கு. என்ன, ஒரு ஆராய்ச்சின்னு பண்ணி, டாக்குமெண்ட் பண்ணலை. நடு நடுவே சளபுளன்னு பேசாதே, கதை வேணுமா , வேண்டாமா?”

“ஆங்... வேணும். சொல்லுப்பா”

“ம்.. வாலி முதல்ல நம்பலை. அதுக்கப்புறம் கோபத்துல என்னையா அடிச்சே?ன்னு கத்தறான் ராமன்கிட்ட. இது நியாயமில்ல, தர்மமில்லை, நீ ஒரு அரசனா?ன்னு நாக்கப்புடுங்கற மாதிரி கேக்கறான். ரெண்டு நிலை வந்துடுத்து பாரு”

“ஆ..ஆம்ம்மா! கரெக்ட்டுப்பா! அப்புறம்?”

“அவன் கேக்க,ராமன் பதில் சொல்றான். ராமனே கவுன்சிலிங்க் பண்ணியிருக்கான் பாரு. இப்படி கடவுளே முன்னாடி வந்து, நான் உன்ன ஏன் கொன்னேன்னா... ந்ன்னு பெருசா விளக்கம் கொடுக்கறது கம்பராமாயணத்துலதான் பாக்கமுடியும். வால்மீகி சொல்றார். ஆனா பட்டுன்னு முடிஞ்சுடும். கம்பன்ல இது பெரிசா விரிவாப் போகும்.

“அப்புறம்?” என்றான் ஆவலுடன்.

“நான் உன்னைக் கோவத்துல சொல்லிட்டேன்ல? பொறுத்தி-ங்கறான் வாலி. ‘எந்தம்பி ஒரு கொரங்குப்பய. மதுவருந்தி, எதாச்சும் தப்பு பண்ணினான்னா, எம்மேல விட்ட பார்,அந்த பாணத்தை அவன் மேல விட்டுராத”ங்கறான்”

அபிஜீத்தின் தொண்டை ஏறி இறங்கியது. ”சே, such a nice fellow"

“என் தம்பியப் பத்தி உன் தம்பியெல்லாம் ‘அண்ணனைக் கொன்னுட்டு பதவியில வந்தாம்பாரு”ன்னு கேலி செஞ்சா, தடுக்கணும்ங்கறான். என்ன பரந்தமனசு பாரு இவனுக்கு?

மெய்நிலை கண்டவனா,தன்னைக் கொன்னதுக்கு நன்றின்னு ராமனைப் புகழ்றான்” ஆவிபோம் வேலைவாய்ந்துருள் செய்தருளினாய், மூவர்நீ, முதல்வநீ, முற்றுநீமற்றுநீ, பாவநீ, தருமநீ,பகையுநீ உறவுநீ”-ங்கறான்.

அப்புறம் , நல்ல அண்ணனா, எப்படி அரசு நடத்தணும்னு சுக்ரீவனுக்குச் சொல்றான். இப்படி திடீர்னு நல்லவனா மனசு போகும்னு சொன்னேனா?”

“அங்!எக்ஸாக்ட்லி! அப்புறம்?”

“பையனைக் கூப்பிடறான். ‘அங்கதா, சின்னப் புள்ள மாதிரி அடம்பிடிக்காம, நான் சொல்றதக் கேளு”
‘நீங்க அட்வைஸ் பண்ற மாதிரி போர் அடிச்சானா?”
“ஏய். கிண்டலா? சொல்றான் கேளு “ என்சொல் பற்றுதையாயின், தன் மேற்பொருளுமொன்றில்லா மெய்ப்பொருள் வில்லும்தாங்கி கால் தரை தோய நின்று, கட்புலனுக்குற்றதம்மா” - இவன் அந்த பெரும்கடவுள். வணங்குடா’ங்கறான்”
நல்ல தந்தையா, பையனுக்கு அட்வைஸ் பண்ணி, தகப்பன் நிலையைத் தாண்டி, ஒரு யோக நிலைக்குப் போறான். அப்படியே போயிடறான்”

” ச்ச்ச். so sad... வருத்தமா இருக்குப்பா”

“நாம சொன்ன எல்லா நிலையும் அவனுக்கு வந்துருத்து பாரு. இதான் characterizationங்கறது. கம்பன் பிச்சு வாங்கியிருக்கான்”

”எங்கப்பா படிச்சீங்க இதை?”என்றான் வியப்புடன்.
”கம்ப ராமாயணம் விரிவுரை, அப்புறம் அற்புதமா இதைப்பத்தி “ சிறியன சிந்தியாதான்’ன்ன்னு ஒரு புக், அந்தக்காலப் பெரும் அறிஞர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கார்.”

“அந்த நீலக்கலர் குட்டி புக்கு, அதுவா?”

“அதுதான். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் கிடைச்சது சிறியன சிந்தியாதான் -ன்னு வாலியை கம்பன் சொல்றான். சின்ன அல்பமான விசயமெல்லாம் அவனுக்கு சிந்தனைல வரவே வராதாம். பரந்த அறிவு, மனசு வாலிக்கு, ஆனா, அவனுக்கே , ஒரு அதிர்ச்சின்னா, வருகிற எதிர்வினைப்படிகள் நமக்கு வர்ற மாதிரிதான்.”

அவன் அந்த புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தான். இன்னும் முழுதுமாக ஒரு தமிழ்ப்புத்தகத்தைப் படிக்கும் நிலை அவனுக்கு வரவில்லை. பெரிய யானையொன்றை , விலங்குகள் காட்சிச்சாலையில் கண்டு மிரண்டு மகிழும் குழந்தையைப் போல அவன் பார்ப்பது இருந்தது.

சில வருடங்களில் பெரும் விலங்குகள் நட்புகளாகிவிடும்.

Saturday, November 28, 2015

கம்பனை ரசித்தல் -2

கோவிந்த ராஜூவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை அவனைக்குறித்து எழுதவில்லை. ராஜபாளையக்காரர் என்று சொல்லிக்கொண்டாலும், அவன் பேசுவது ஜெரால்டு, சூசை பர்னாந்து போலவே தூத்துக்குடி பாஷையிலிருக்கும்.

இசக்கியப்பன் மும்பைக்கு வருகிறார் என்று சொன்னதே அவந்தான். “டே, அந்தக் கஞ்சப்பிசினாரி, 3ஏஸி டிக்கட் போட்டு வருது. கேட்டியா?. மழை சும்மாயில்ல மெட்ராசுல கொட்டுது இப்படி”
“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, னஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

“ஐயாங்... வேணும்லா. ரெண்டு வருசமா அஞ்சாயிரம் ரூவா , இப்ப தர்றேன், அப்பத் தர்றேன்னு இழுத்தடிக்காம்ல.”

“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, ஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

இனிமே ஒழுங்கா இருப்பான் என்ற நம்பிக்கையில் , இசக்கியை அவரது லாட்ஜ் அறையில் காணச் சென்றேன். பத்து நிமிசத்தில் ஹோண்டா ஸ்பெலெண்டர் பைக்கில் இருவரும் வந்து இறங்கினர். “ஏ, வாடே” என்றார் இசக்கி முகமலர்ந்து. அனுதாபத்துடன் “எளச்சிட்டியேய்யா? ” என்றார்.

“சுகர் இருக்குல்லா?”என்றேன் சிரித்தபடி.

“எனக்குந்தான் இருக்கு. ஊசி போட்டுக்கிடுதேன். அப்படியே போயி சாந்தி ஸ்வீட்டுல காக்கிலோ அல்வா. எளவு எத்தன நாளு கிடக்கோமோ? சட்டுபுட்டுன்னு போயிட்டா நல்லது என்னடே?”
என்றார் கோயிந்துவைப் பார்த்து.

அறையில் லுங்கியில் மாறியவர், தனது சூட்கேஸிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து வைத்தார். “அடிக்கியாடே? நல்ல சரக்கு பாத்துக்க. கஸ்டம்ஸ்ல நம்ம பய இருக்கான் , அவன் கொடுத்தான்”

”வேணாம் அண்ணாச்சி” என்றேன். கோயிந்து ஆவலுடன் பார்ப்பது தெரிந்து ”நீ வேணா அடி. ஆனா, வண்டிய இங்கிட்டுப் போட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போ, வெளங்கா?” என்றேன்.

“சரி”என்பதாகத் தலையாட்டி “ அண்ணாச்சி, ஒரு கிளாஸ் குடுங்க. எப்படி இருக்குன்னு பாப்பம்” என்றான்.

“ஆமா, நீ சொல்லித்தான் ஷிவாஸ் ரீகல் கம்பனிக்காரன் , சரக்கு சரிபண்ணப்போறாம்பாரு. அண்ணாச்சி, ஒரு லார்ஜு அடிக்கணுமுன்னு தோணிச்சி. ஊத்துங்கன்னு கேப்பியா, அத விட்டுட்டு...”

இருவருக்கும் சரியாக ஊற்றி, கீழே பெல் அடித்து சோடா வாங்கிவரச்சொல்லி, ஐஸ்கட்டிகளும் போட்டுக்கொண்டார்.
இரண்டு ரவுண்டுகள் வரை ஏதோதோ ஊர்க்கதை பேசினார்கள்.

திடீரென அவர் குரல் உயர்ந்தது. “லே, தே*** மவனே, கோயிந்து.. பைசா வேணும்னா எங்கிட்ட மட்டுந்தான் கேக்கணும் வெளங்கா?அதென்ன வீட்டுல பேச்சு?”

கோயிந்துவைப் பார்த்தேன்.  அவன் ஒருமுறை உறிஞ்சிவிட்டு ”
 நீங்க கிளம்பி நாரோயில் போயிட்டீய. அண்ணிதான் வீட்டுல இருந்தாக. அதான் அவங்ககிட்ட சொன்னேன்.அய்யாயிரம் எனக்குப் பெரிய அமவுண்ட்டு அண்ணாச்சி” என்றான்.

“இருக்கட்டும்ல. எங்கிட்டல்லா கேக்கணும். அதென்ன பொம்ப்ளேள்ட்ட கேக்கறது? அவ , நான் வீட்டுக்கு வந்ததும் ஒரு ஆட்டம் ஆடுதா. ஏற்கெனவே சகிக்காது. இதுல அழுவாச்சி வேற”

“அண்ணாச்சி” என்றான் கோயிந்து “ நீரு அவிய சொன்னதும் பைசா அனுப்புவீருன்னு தெரியாமப் போச்சி. அண்ணி கால்ல விழுந்து நன்னி சொல்லுறதா நெனச்சிக்கோரும்”

“நான் அனுப்பினேனா?” என்றார் அதிர்ந்து “எப்பலே?”

“பொறவு? ஒங்க அக்கவுண்ட்லேர்ந்துதான் வந்திருக்கும். முந்தானாத்தி வந்துச்சின்னு பேங்க்லேர்ந்து எஸ் எம் எஸ் வந்திச்சே? அதான் அண்ணிட்டே என் அக்கவுண்ட் நம்பரு, பேங்க் NEFT நம்பரு எல்லாம் கொடுத்தேம்லா?”

“செருக்கியுள்ள, அவ அனுப்பிச்சிருக்கா” என்றார் உதட்டைக் கடித்தபடி “ இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா பாரு. இருந்தாலும் பொம்பளேள்கிட்ட நீ கேட்டிருக்கக்கூடாதுல, சொல்லிட்டேன்”

கோயிந்துவீன் சிறிய விழிகள் ரத்தச்சிவப்பாயிருந்தன. “வே ,அண்ணாச்சி” குழறினான். ” ஒமக்கு என்ன மயிரு தெரியும்? அங்? பொம்பளேள்தான் நியாயமா இருப்பாவ. ஒம்மரை மாதிரி ஏமாத்திட்டுத் திரியமாட்டாவ, வெளங்கிக்கிடும் “

“குடிச்சுட்டு உளறுது நாயி”என்றார் இசக்கி சிரித்தபடி. கோயிந்து ஆவேசமானன்.

“இல்லவே, அனுமாரு தெரியும்லா? ராமருக்கு ரொம்ப நட்பு பாத்துகிடும்.. அவரு..”

“இவன் இப்ப ராமாயணஞ்சொல்லுதான். கேட்டுக்கடே” என்றார் என்னைப்பார்த்து. நான் நெளிந்தேன்.குடிக்கும், ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?

“கேளுவே. அனுமாரு லங்கைல போயி சீதையத் தேடி கண்டுபிடிக்காரு. அவ ஒரு மோதிரங்கணக்கா என்னமோ ஒன்னு, பேர் வரமாட்டேக்கி, சூடாமணியா? அதக் கொடுத்து விடுதா. இங்கிட்டு வந்தவன் ராமருகிட்ட போறான். இனிமேத்தான் கதயே இருக்கு”

“லே, தூக்கம் வருது. இங்கனயே கிட,என்னா? வாந்தி வச்சிறாதே. தா**ளி, அப்புறம் நீதான் அள்ளிப்போட்டு கழுவிவிடணும், சொல்லிட்டேன்” என்றார் இசக்கி, கட்டிலில் காலை நீட்டியபடி அமர்ந்து.

அவன் என்னைப்பார்த்தான். குழறியபடியே தொடர்ந்தான்.
“ராமருகிட்ட வந்துட்டு அனுமாரு, அவர் கால்லல்ல நேரால்லா விழணும்? அங்கன விழலையாம். திரும்பி நின்னு , இலங்கை இருக்கற பக்கமா விழுந்து விழுந்து எளுந்திரிக்கான் பாத்துக்க. மத்தவங்க எல்லாம் அதிர்ந்து போயிட்டாவ. இவன் என்னா, ராமனை விட்டுட்டு எங்கனயோ விழுதானே?ன்னு. ராமனுக்குப் புரிஞ்சுபோச்சி. சிரிக்காரு. ’லே, இவன் கரெக்ட்டா சீதையப் பாத்துட்டு வந்திருக்கான்’ங்காரு. ”

“அதெப்படி?”என்றார் இசக்கி கதை கேட்கும் ஆர்வத்தில்.
“அதாக்கும் சீக்ரெட்டு. முதல்ல நாம கும்புடவேண்டியது தாயாரைத்தான். அதான் சீவில்லிபுத்தூர்ல ஆண்டாள்தான் முக்கியம். கேட்டியளா? அவ , நம்மளப்பத்தி பெருமாள்கிட்ட “இந்தாரும், இந்தப்பய மோசம்தான். ஆனா திருந்தி வந்திட்டான். சும்மா சொணங்காதயும், அனுப்பி வைக்கேன். ஏத்துகிடும், என்னா?”ன்னு சொல்லி வப்பாளாம். நாம, பம்மி பயந்து பெருமாளே, யப்பான்னு போகறச்சே அவரு “ சே..ரி.. வால”ன்னு அன்பா ஏத்துகிடுவாராம்.”

“ஒனக்கு இது யார்ல சொன்னது?”

“அதாம் சொன்ன்னேம்லா? இது ஒரு கம்பன் பாட்டுன்னு சீவில்லிபுத்தூர்ல ஒரு சாமி சொல்லிட்டிருந்தாப்ப்ல. நான் தெருவுல நின்னிட்டிருந்தேன். அங்கன காதுல விழுந்துச்சி. இப்ப ஒம்ம கதையவே பாரும். அண்ணி பாத்து பைசா அனுப்பலேன்னா, இன்னும் அஞ்சு வருசத்துக்கு தாரன், தாரன்ன்னு சொல்லிட்டிருப்பீரு”

“தா**ளி , இந்த கம்பன் பெரிய ஆளுதான் என்னா?” என்றார் இசக்கி, கால்களை நீட்டி, ஆட்டியபடி. 

எனது நினைவுகள் அந்தப்பாடலைத் தேடின.

“எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுதிலன்.முளரி நீக்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகந் தழீஇநெடி திறைஞ்சி வைகினான்”  - சுந்தரகாண்டம்

“சரி, எத்தன மணிக்கு நாளைக்கு வரணும்?” என்றேன் பொதுவில்.
இசக்கியிடமிருந்து குறட்டைதான் வந்தது. கோவிந்த ராஜு, கட்டிலின் மறுபுறம் நீட்டிப்படுத்தான். அவன் ஏதோ முணுமுணுத்தது கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் நான் இல்லை.

அவர்கள் இருவருக்கும் ஒரு போதை, எனக்குள் மற்றொரு போதை .

வெளியே வந்தேன். மேகங்கள் விலகி நட்சத்திரங்கள் மெல்ல மினுக்கின. எத்தனை முறை இப்பாடலைக் கேட்டிருப்பேன்? இப்படியொரு யதார்த்தப் பார்வையில் பார்த்ததில்லை.

சிறிதாகத் தெரிகின்ற நட்சத்திரங்கள் , அருகிலிருக்கும் நிலவை விடப் பெரியன.

#கம்பனும்நானும்

Saturday, November 14, 2015

இரு நகரங்களும் , இரு கதைகளும்


நகர வாழ்வை எலும்புக் கூடாக வைத்து உருவாக்கப்பட்ட இரு உயிருள்ள கதைகள் 18வது அட்சக்கோடு மற்றும் பள்ளி கொண்ட புரம். இவை தமிழ் புதின இலக்கியத்தைத் தாக்கிய அளவு வேறு நகரங்கள் மையமாகக் கொண்ட கதைகள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தனிமனித உணர்வு, நகர வாழ்வில் தாக்கப்பட்டு, வேறு உருக்கொண்டு, வாழ்வை நகர்த்துவதில் சூழலுக்கு முக்கிய பங்குண்டு. “சமூக சிந்தனை மாறினால் தனிமனித சிந்தனை மாறும்” என்றார் கார்ல் மார்க்ஸ். சமூகத்தின் தாக்கம் தனிமனித உணர்வில் , அதனுள் இயங்கும் தளத்தில் உருவாக்கும் மாற்றம் ஒரு கதைப்பாங்காகிறது. அசோக மித்திரனின் 18வது அட்சக் கோடு புதினத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
தனிமனிதனின் வாழ்வு, பிற மனிதர்களின் செய்கையால், சிந்தனையால்,தாக்கபட்டு, அவன் வாழும் நகரம் நெருடலின்றி ஒரு போர்வையாக ,அதன் மேல் கவிந்து , அவ்வுணர்வுகள் தம்மில் தம்மில் தாக்கியவாறே மேற்க்கொண்டு செல்லுதலை நிகழ்த்தும் களமாக விளங்குவது மற்றொரு கதைப்பாங்கு. நீல. பத்மநாபனின் ‘ பள்ளி கொண்டபுரம்” புதினத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இரண்டிலும் நகரங்கள், தனிமனிதர்கள். நகரத்துக்கும் மனிதனுக்கும் நடக்கும் இடைவினைகள் மறைவாயிருந்து கதை நகர்த்துகின்றன. எவ்வாறு இருகதைகளும், நகர-மனித இடைவினைகளைக் கையாளுகின்றன? என்பதிலேதான் அவற்றின் வெற்றியும் தனித்தன்மையும் இருக்கின்றன.

சந்திரசேகரனும் ( 18வது அட்சக்கோடு), அனந்தன் நாயரும்( பள்ளி கொண்ட புரம்) , நகரத் தெருக்களில் பயணித்தபடியே வாழ்வினை உருமாற்றிக் கொள்கிறார்கள். தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும் மாறிவிடுகிறார்கள். முக்கியமாக அதில் பயணிக்கும் கதாபாத்திரங்களில் மாற்றம் ஒரு மலர் விரிவதைப்போல மிக மெதுவாக , பகிரங்க ரகசியமாக இயங்குகிறது. இந்த மாற்றங்களுக்கு திருவனந்தபுரமும், இரட்டை நகரங்களான ஐதராபாத்- செகந்திராபாத்-உம், தான் வினையில் ஈடுபடாது, வினையை நிகழ்த்தும் கிரியா ஊக்கிகளைப் போலச் செயல்படுகின்றன.

18வது அட்சக்கோடு கதை, இரட்டை நகரங்களின் குழப்பமான தெருக்களில் தொலைந்து போகவில்லை. மாறாக ஒவ்வொரு பயணத்திலும் சந்திரசேகரன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். அவனது மாற்றமே ஐதராபாத்தின் அன்றைய மாற்ற நிலையென நம்மால் ஊகிக்க முடிகிறது. நகரத்தின் வாழ்வுநிலை மாறும்போது, அவனது சிந்தனையும் செயலும் மாறுகிறது.

பள்ளி கொண்ட புரத்தில் , திருவனந்தபுரத்தின் நகர வாழ்வு நிலை மாற்றம் பெருமளவில் அனந்தன் நாயரின் வாழ்வை மாற்றவில்லை. மன்னரின் ஆட்சி நலிந்ததால், வேலை இழக்கிறார், மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதி உறுகிறார்கள், உற்பத்திப் பற்றாக்க்குறையால் அத்தியாவசியப் பொருட்கள் கோட்டா முறையில் வினியோகம், கோயில்களிலும் சமூக பொருளாதார மாறுதல் ( ஊட்டப் புரை சோறு கிடைப்பது நின்று போதல்) என்பது போன்றவற்றைத் தவிர நகர வாழ்வு அவர் வாழ்வை மாற்றி யமைக்கவில்லை.
சமூக மாற்றங்கள், நாயர் -ஈழவ திருமணம், நக்ஸல்பாரி அபிமானிகளைப் போலீஸ் துரத்துவது, இளைஞர்களின் வேதாந்தத் தேடல்கள் போன்றவை அனந்தன் நாயரின் வாழ்வை, நகரப் பொருளாதார, அரசியல் மாற்றங்களை விட அதிகமாகப் பாதிக்கின்றன. கணவனை விட்டு வேறு சம்பந்தம் கொள்வதில் தரவாட்டு நாயர் மகளிர் கொண்டிருந்த சுதந்திரம், கார்த்தியாயினி , அனந்தன் நாயரையும், பிள்ளைகளையும் விட்டுப் போவதையும், குஞ்ஞம்மாவி அம்மாவனை விட்டு மற்றவனோடு பகிரங்கமாகச் செல்வதையும் தெளிவாகப் படம் பிடிக்கிறது. மருமக்கத் தாயம் என்ற முறை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் புதியதாக, ஒரு சமூக அதிர்ச்சியாக தோன்றியிருக்கக் கூடும். இன்றும் தோன்றக் கூடும்.

பொருளாதார வேறுபாடுகள், சமூகத்தில் மனிதனை வேறு தட்டுகளில் வைப்பது எவ்வாறு ஒரு பெண்ணின் மனதைக் கறைபடுத்தி அவளை குடும்பத்திலிருந்து ஓடிப் போகச் செய்கிறது என்ற குரூர யதார்த்த்த்தை பள்ளிகொண்ட புரம் முன் வைக்கிறது. இதுபோன்ற ஒரு அவலத்தை 18வது அட்சக்கோடு எடுத்துக் கொள்ளவில்லை. பணக்காரப் பெண்கள் பதட்ட காலத்திலும் ஐஸ்க்ரீம் சுவைத்த நிலை இருப்பதை நினைக்கும் சந்திரசேகரன், அத்தோடு அகதிகளாக செகந்திராபாத் ரயில் நிலையமருகே டெண்ட் அடித்துத் தங்கியிருக்கும் மனிதர்களையும் நினைக்கிறான். மென்மையாக மட்டுமே இந்த பொருளாதார வேறுபாடுகள் கதையைத் தாக்குகின்றன. களம் 1947-48களில் நிஜாம் அரசின் தெளிவற்ற நிலை, அங்கு வாழ்ந்த மக்களின் பதட்டம், ரஜாக்கர்கள் லம்பாடிகளுக்கு இழைத்த கொடூரங்கள் என்பதோடு , மத இனக் கலவரம் என்று மாறுகிறது. ஆனால், பள்ளி கொண்ட புரம், சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்களின் அவலங்களைச் சுட்டிக் காட்டி ,பொருளாதார வேற்றுமை, சமூக அவலங்கள் எப்படி தனிமனித , குடும்ப வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதைக் காட்டுவதில் தீவிரமாக நிற்கிறது.

ஒற்றுமைகள் எனப் பார்த்தால், இரு நகரங்களும் தத்ரூப வரைபட துல்லியத்தோடு காட்டப்படுகின்றன. அத்தோடு அதன் மக்கள் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு உரையாடுவதில், இடைவினை நிகழ்த்துவதில், கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது.

முடிவு வரும்போது, இரு கதைகளும் ஒரு திடுக்கிடலை வாசகன் முன் வைக்கின்றன. இனவெறியின் கொடூர முகத்தைப் பார்க்க இயலாமல் சந்திரசேகரன் ஓடிக்கொண்டேயிருக்க, தன் மகளிடமும், மகனிடமும், அவர்களது அன்னையைப் பற்றிய ஒர் உண்மையைக் கூறி மேல் நோக்கிப் பயண ஆயத்தமாகிறார் அனந்தன் நாயர். இரு கதைகளும் நகரத்தினுள் நடக்கும் நிகழ்வுகளை கதாபத்திரங்களின் பயணம் என்ற இயக்கத்தின் மேலேற்றிக் கொடுக்கின்றன. இரு கதைகளிலும் பயணங்கள் முக்கியமானவை. நிகழ்வுகள், பயணத்திற்கெனவே காத்திருப்பது போன்று நிகழ்கின்றன. அவற்றில் அடியோடும் வேர்களைப் பற்றியபடி கதை முன் நகர்கிறது.

இன்றும் திருவனந்தபுரம், ஐதராபாத் செல்லும்போது கையில் பள்ளி கொண்ட புரம், 18வது அட்சக் கோடு இருந்தால் ஒரு ஜி.பி.எஸ் போல பயன்படுத்தி இடத்தைச் சரிபார்ப்போம். காலத்தின், சமூகத்தின், அதன் சவால்களின் வரைபடங்களை இப்புதினங்கள் மனதில் பதிக்கின்றன. கதையில் நாமே சந்திரசேகரனும், அனந்தன் நாயருமாக ஆகிவிடுகிறோம். அவர்களின் பயணத்தில் நாமும் சிக்கி, உருமாறி, இறுதியில் மீண்டும் பயணிக்கிறோம். இந்த முழு உரு மாற்றலே (Metamorphosis) இப்புதினங்களின் , இந்நகர அனுபவங்களின் வெற்றி.

Thursday, October 15, 2015

திருவேங்கடம் அம்மாள்அவள் பெயர் திருவேங்கடம் அம்மாள். குட்டையாக உருண்டு இருப்பதால் செண்டு என்று யாரோ பெயர் வைக்கப்போக, அதுவே நிலைத்துவிட்டது. செண்டு அம்மாள் மிகவும் ஆசாரம்.
"கடங்காரா, எத்தனை தடவை சொல்றது? குளிக்காம திருப்பள்ளிக்குள்ள வராதேன்னு?” செண்டு அம்மாவின் திட்டுகளை காலங்காத்தாலேயே வாங்கிக்கொண்டு, அசட்டுச் சிரிப்புடன் சமையலறையிலிருந்து வெளிவராத ஆண்கள் அந்தவீட்டில் இல்லை.
அவள் சமையலறையில் இருக்கிறாள் என்றால் குளிக்காமல் உள்ளே போகக்கூடாது. காபியைக் கொண்டு அவள் வெளியே வருவாள்.. மரியாதையாக , அவள் மேல் படாமல் வாங்கிக் கொள்ளவேண்டும்.. எப்போதும் மடிசாரில்தான் இருப்பாள். அவளது புடவையை மேலே ஒரு கொடியில் உலர்த்தியிருப்பாள். குள்ளமாக இருப்பவளால் அதை எடுக்க முடியாது என்பதால் நீண்ட ஒரு மூங்கில் கழியை மூலையில் சார்த்தி வைத்திருப்பாள். அதைக்கொண்டு, கழுத்தை வளைத்து அண்ணாந்து பார்த்து, புடவையை கீழே எடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடும். அதுவும் நாங்கள் எடுத்துத் தரக்கூடாது. கீழே விழும்போதும் எங்கள் மீது பட்டுவிடக்கூடாது.
”சனியனே, தெரியறதோல்லியோ? நான் புடவையை எடுத்துண்டிருக்கேன்னு. அதுக்குள்ள எதுக்கு இங்க வந்து புடவைல  படறே? குளிக்காம கொள்ளாம...தெருநாய்க்குக்கூட தீட்டு தெரிஞ்சுருக்கும்...தடிமாடு மாரி இருக்கற உனக்குத் தெரியலை இன்னும்”
வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் சமைத்துத் தருவாள். ஆனால் சாப்பிடமாட்டாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபின்பு, என்ன அவளுக்கு மிச்சம் இருக்கும் எனத் தெரியாது. குறுகலான சமையலறையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு, உதட்டில் படாமல் சோற்றை வாய்க்குள் போட்டுக்கொள்வாள். “ உதட்டுல பட்டா எச்சில்டா.”
ஆனால் இந்த ஆசாரக் கெடுபிடியெல்லாம் வளர்ந்தவர்களிடம் மட்டும்தான். பேரன் பேத்திகள், மேலே தவழ்ந்து சேட்டை செய்யும்போது, அவள் புடவையை நனைக்கும்போது  “ போட்டும் விடு. எறும்புக்குத் தெரியுமோ எச்சிலும், பத்தும்?”
” எதிர்வீட்டுல டாக்டருக்கு வலி எடுத்தாச்சாம். ஆஸ்பிட்டல் போப்போறாங்க” அவசரமா யோரோ  சொன்னபோது, செண்டுமாமி கீதை படித்துக் கொண்டிருந்தாள்.
“அதுக்குள்ளயா? இன்னும் நாளிருக்கே? ” என்றாள் காலண்டரைப் பார்த்தபடி.
எதிர்வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. மேல்வீடு, கீழ்வீடு என்று அக்கம்பக்கத்திலீருந்து பெண்கள் அவ்வீட்டின் வாசலில் நின்றிருந்தனர்.
எதிர்வீட்டு டாக்டர் எங்கள் குடும்பத்தில் சட்டென பழக்கமானவர். மிகத் திறமைசாலி, கை ராசியானவர். கர்ப்பம் தரித்ததுமுதல் அவருக்கு பல சிக்கல்கள். முக்கியமாக வீட்டில் பல இடர்கள். அம்மாவீட்டிலும், மாமியார் வீட்டிலும் உறவுகள் சுமுகமாக இல்லை. இத்தனை  முதிர்ந்த கர்ப்ப நிலையில்கூட அவர் அம்மாவீட்டிலிருந்து யாரும் உதவிக்கு வரவில்லை.
“காம்ப்ளிகேஷன் ரொம்பவே இருக்கு. நம்ம ஆஸ்பத்ரியில பாத்துக்க முடியாது. டவுணுக்கு கொண்டு போயிடுங்க” குடியிருப்பு வளாகத்தின் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆம்புலன்ஸ் அருகிலிருந்தே சொன்னார்.
யார் கூடப் போவது?
”அமெரிக்கன் ஆஸ்பத்திரி கொண்டு போறீங்கன்னா, நான் போன்ல சொல்லிடறேன். கேஸ் ஷீட் ஒரு காப்பி வைச்சுக்குங்க. துணைக்கு யார் போறாங்க? “ கேஸ் ஷீட் பைலை வைத்துக்கொண்டு அவர் கேட்க, சூழ்நிலை அப்போதுதான் அனைவருக்கும் உறைத்தது.
யாருமில்லை. அவர் கணவரும் ஒரு டாக்டர். “ நான் இருக்கேம்மா..ஆனா..” அவர் குரல் தேய்ந்தது.  தான்  என்னதான் மருத்துவம் படித்திருந்தாலும், இது முழுக்க முழுக்க பெண்களின் சமாச்சாரம். உணர்வுகள் பொங்கி, உயிருடன் பனிக்குடம் உடைந்து வரும் நேரம். அதை புரிந்துகொண்டவர்கள் வேண்டும்..
வாசலில் நின்றிருந்த பெண்களிடம் தயக்கம் தெளிவாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட 15 கி.மீட்டர் தூரம் பயணம் போவது கடற்கரை சாலையில். ஒரு புறம் கடல், மறுபுறம் உப்பளம்.. வழி நடுவே பிரசவம் ஆனால், ஒரு உதவியும் கிடையாது... அதோடு சிக்கலான கேஸ் வேறு.. யார் பதில் சொல்வது?
அதைவிட, அதைவிட ஒரு தயக்கம் இருளில் மறைந்து தேங்கி நின்றது.. அந்த மருத்துவரின் ஜாதி...
“இப்பவே கிளம்பினாத்தான் பதினோரு மணிக்காச்சும் அங்க போய்ச்சேர முடியும். அவங்களுக்கும் சொல்லணும்ல.. எமர்ஜென்ஸி..” தலைமை மருத்துவ அதிகாரி இருட்டில், கண்களை இடுக்கி, சாலைவிளக்கொளியில் மணிக்கட்டில் நேரம் பார்த்தார்.
. ”அவங்க அம்மா இல்ல, இந்த நேரத்தில இருக்கணும்?” கூட்டம் முணுமுணுத்து தன் நியாயங்களை சொல்லிக்கொண்டது.
“யார் வர்றீங்க?” அந்த கணவரின் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டுவாசலில் நின்றிருந்த செண்டுமாமி முன்னே நடந்து வந்தாள். “ நான் வர்றேன். தலைச்சன் பாருங்கோ, படுத்தும்.”
“ஆங். மாமிதான் சரி. அவங்களுக்கு அனுபவம் இருக்கு” தன்மீது வராது பொறுப்பு நீங்கியதில் கூட்டத்தில் ஒரு நிம்மதி.
“ சீக்கிரம் கிளம்புங்கோ. டீ. என் செருப்பை எடுத்துப் போடு”
மஞ்சளாக ஹெட்லைட் மங்கி எரிய, அந்த மட்டடோர் வேன் கிளம்பியது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு  வழக்கமான வசவு இல்லாத வீடு வெறிச்சோடியிருக்க,  வாசலில் சென்றபோது, செண்டுமாமி வந்துகொண்டிருந்தாள்.
“ஐ. என்னம்மா ஆச்சு?”
“மேல படாதே. நாம்போய் குளிக்கணும். சுகப் ப்ரசவம்தான். பொண்ணு. முடி அடர்த்தியா இருக்கு தெரியுமோ?”
வாசலிலிருந்தே ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, வீட்டைச் சுற்றி நடந்துபோய் பின் பக்கக் கதவு வழியே வந்தாள்.
“டீ, இவளே,  இன்னிக்கு கோலம் போடவேண்டாம்.” என்றாள் உள்ளே வந்தவாறே.
“ஏம்மா?”
“ பொண்ணுக்கு ப்ரசவம் ஆனாலும் சீதகம் உண்டு.”
“உம் பொண்ணா அவள்?” அவள் கணவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
செண்டுமாமி ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் “ ஆஸ்பத்திரியிலே கேட்டா. ஆமான்னு சொன்னேன். என்ன இப்போ? நாலு பொண்ணோட சேத்து அவளும் அஞ்சாவது பொண்ணு நேக்கு. உமக்கென்ன வந்தது.?.போம்”
இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் கணவர் முகமெங்கும் சிரிப்புடன் இனிப்பு பெட்டியுடன் வந்தார்.
“அம்மா” என்றார் நெகிழ்வுடன். “ உங்க உதவி... என் பொண்டாட்டியும்  பொண்ணும் பிழைச்சாங்க” கையெடுத்துக் கும்பிட்டார். கண்களில் நீர் வழிய. செண்டு அம்மாள் பதிலே பேசாமல், உள்ளிருந்து காபி டம்ளரை நீட்டினாள் “ டேய்  அவருக்கு இந்த டம்ளரைக் கொடு. பாவம் மனுசன் அலையா அலைஞ்சிருக்கார்”
காபியை அருந்தியபடி மெல்ல விவரித்தார் அவர்.
அமெரிக்கன் ஆஸ்பத்திரி என்று நாங்கள் சொன்னாலும் அதற்கும் அமெரிக்காவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றோ சுவிஸ் நாட்டு பாதிரிகள் தொடங்கிய ஆஸ்பத்திரி அது. வெள்ளைக்காரர்கள் எல்லாரூம் அமெரிக்கர்கள் என்ற தூத்துக்குடி அறிவில் அது அமெரிக்கன் ஆஸ்பத்திரியானது.
இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது மணி பன்னிரெண்டு. குழந்தை கொடி சுற்றிக்கொண்டுவிட, ரத்த அழுத்தம் தாய்க்கு அதிகரிக்க, பெரிய கேஸாகிப் போனது.
பிரசவ அறையின் வாசலில் ஒரு பெஞ்சில் அம்மா அமர்ந்திருந்தாள். “நீங்க  படுத்துக்குங்கம்மா.  வேணும்னா கூப்பிடறோம்” என்ற செவிலியருக்கு “பரவாயில்ல,ஒக்காந்திருக்கேன்” என்றாள் அவள்..
இரண்டு மணியளவில் செவிலியரில் ஒருவர் வெளிவந்தார். “பெண் குழந்தை. சி.செக்‌ஷன் தான். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. கவலைப்படாதீங்க. அம்மா, நீங்க தூங்கலாம்” என்றார்.
செண்டுமாமி  கைகுவித்தாள் “எல்லாம் சீவரமங்கைத் தாயார் அனுக்ரஹம்.”
செவிலி தயங்கி நின்றார் “ குழந்தைய யார் வாங்க வர்றாங்க? குளிப்பாட்டக் கொண்டு போயிருக்காங்க. அவங்க அம்மா எங்க? டாக்டர்?”
”எஸ்?” என்றார் டாக்டர் கணவர் எக்கச்சக்கமாய் உணர்வில் அழுந்தி..
“உங்கம்மா, அல்லது அவங்க அம்மா. யாரு ரிலேட்டிவ்? குழந்தைய வாங்கணும்ல?” 
டாக்டர் கணவரைத்தவிர அவர் குடும்பத்தில் யாருமில்லை.
” நான் வாங்கறேன்.”
செவிலி சந்தேகமாக செண்டு அம்மாவைப் பார்த்தார் “ நீங்க.. நீங்க யாரு அவங்களுக்கு?”
“அவ என் பொண்ணு”
செவிலி மேலும் சந்தேகமாகப் பார்த்தார் “ அவங்க வீட்டுக்காரங்க இருந்தா வரச்சொல்லுங்க,சீக்கிரமா. குழந்தைய  நாங்க வராம குடுத்திட்டீங்கன்னு நாளைக்கு எங்க கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க”
“ அவ என் பொண்ணு” என்றாள் அம்மா மீண்டும் திடமாக. உள்ளே போய் துவாலையில் பொதிந்து கொண்டுவரப்பட்ட சிசுவை, தன் முந்தானையில் வைத்து வாங்கினாள்.
சொல்லும்போது டாக்டர் அழுதுவிட்டார். “எம்பொண்ணு இந்த உலகத்துல வந்து காத்திகிட்டிருக்கா. யாருமே அவளை ஏந்தறதுக்கு இல்லை சார். இவங்க, தெய்வமா, பாட்டியா நின்னு வாங்கினாங்க”
செண்டு அம்மா வெளியே வந்தாள் “ இதோ பாருங்கோ. ஒரு உயிர் உலகத்துக்கு வர்றது பெரிய விஷயம். அதை வா-ன்னு வாங்கறது, அன்பைக்காட்டறதுதான் மனுஷத்தனம். இதுதான் சாஸ்த்ரம்.. அந்தகாலத்துல  உபன்யாசம் தொடங்கறப்போ சொல்லுவாளாம்.. ”இதைக் கேக்கறதுக்கு வந்திருக்கும்  பெண்ணின் கர்ப்பத்திலே இருக்கும் சிசுவுக்கும் எனது வணக்கங்கள்’ன்னு. சிசுவுக்கு அத்தனை மரியாதை உண்டு. எனக்குத் தெரிஞ்சதை நான் செஞ்சேன். அவ்வளவுதான். மத்ததெல்லாம் பெருமாள் தாயார் விட்ட வழி. சந்தோஷமா இருங்கோ”
வாசலில் துணி காயப்போட போனபோது, ஒரு பெண் கேட்டார் “ஏன் மாமி.. இத்தனை ஆசாரம் பாப்பீங்க. அவங்க சாதி தெரிஞ்சும் எப்படி போனீங்க?”
அம்மா துணியை உலர்த்தியபடியே சொன்னாள் “ ஆசாரம்னா எனக்குத் தெரிஞ்சு சுத்தம், சுகாதாரம். சாஸ்த்ரம் இப்படித்தான் சொல்றது. தாய்ப்பாலுக்கும், சிசுவுக்கும், தண்ணிக்கும் ஜாதி கிடையாது. இதைப்புரிஞ்சுக்கோங்கோ. ஒரு உயிர் அல்லாடறப்போ ஜாதியோ ஆசாரமோ தடுக்கணும்னு எந்த சாஸ்த்ரமும் சொல்லலை.”
“ அப்ப வந்த உடனே சீதகம்னு ஆரம்பிச்சியே?” என்றேன் பிற்பாடு.
“ஆமாடா, அவள் என் பொண்ணுன்னு சொல்லிட்டேனே? அப்புறம் எல்லா ஆசாரமும் நியமப்படி நடக்கணுமே?”
அந்த டாக்டர் குடும்பம் அதன்பின் கோயமுத்தூர் சென்றுவிட்டனர். 1989ல் செண்டு அம்மாள் பெங்களூரில் திடீரென இறந்து போனாள்.

2004ல் அண்ணன் வீட்டிற்கு அந்த டாக்டர் , ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வரவேற்பறையில் மாட்டியிருந்த அம்மாவின் போட்டோவைக் காட்டி “ சொன்னேன்ல? இதுதான் உன் பாட்டி” என்றார். அந்தப் பெண் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அனைவரும் பழைய கதைகள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண், விடைபெற்றுக் கிளம்பும்போது, படத்திற்குக் கீழே விழுந்து நமஸ்கரித்தாள்.
பின் அண்ணியிடம் “ பாட்டியோட போட்டோ ஒண்ணு எனக்குக் கிடைக்குமா?” என்றாள்.
செண்டு மாமி என்ற திருவேங்கடம் அம்மாளான எனது அம்மாவின்  சிரார்த்த தினம் இன்று.  

Thursday, October 08, 2015

ஹோத்தா ஹை சார்...

காலையில் கிளம்பும் போதே நேரமாகிவிட்டது. சாலை நெருக்கடியில் அவனவன் தான் எப்படிப் போவது என்பது பற்றி மட்டும் யோசிக்கிறானே தவிர மற்றவரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. என்ன ஊர் இது? என்று கொதித்தபடி சிக்னலில் நின்றிருந்தேன்.
'அங்கிள், ஹெல்மெட் போட்டிருக்கறதுக்கு நன்றி. ப்ளீஸ் இதை வச்சுக்குங்க' என்றது ஒரு கீச்சுக்க்குரல். திரும்புவதற்குள் சீருடை அணிந்திருந்த அந்த குண்டு பையன், என் கையில் ஒரு அட்டையைத் திணித்தான். கேட்பதற்குள் அருகிலிருந்த காரில் சீட் பெல்ட் அணிந்திருந்தவரிடம் ஒரு அட்டையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.


கிட்டத்தட்ட பத்து மாணவ மாணவியர்கள், சிக்னலில் ஹார்ன் அடிக்காது நிற்பவர்கள், ஹெல்மட் போட்டிருப்பவர்கள் என்று சாலை விதிகளை மதிப்பவரகளுக்கு அட்டைகளையும் ஒரு சாக்லேட்டையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருக்கும் கோகுல்தாம் பள்ளி மாணவர்கள் என அறிந்தேன்.
இதைப் பெருமையுடன் குத்திக்கொள்ள வேண்டுமென நினைத்தி அடுத்த சிக்னலைக் கடந்திருப்பேன்...
திடீரெனத் திரும்பிய அக்ஸெண்ட் காரினால் நிலைகுலைந்து வண்டியோடு விழுந்தேன். கீச் கீச் என அடுத்தடுத்து. வண்டிகள் நின்றதன் ஒலிகள். சிறு சிராய்ப்புகளின் எரிச்சலோடு சற்றெ உடல் நடுக்கம். இருவர் அவசரமாக பைக்களை ஒரம் கட்டி என்னை நோக்கி விரைந்து வந்தனர். வண்டியை ஒருவர் எடுக்க , மற்றொருவர் மெல்ல கை பிடித்து தூக்கிவிட்டார். சாலை ஓரமாக நிறுத்தி " ஒண்ணுமில்ல. நிதானமா மூச்சை இழுத்து விடுங்க. தண்ணி இருக்கா? குடிங்க' என்றனர்.
எனக்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும், லாப்டாப் பையை முன்னால் வைத்துவிட்டு,' ஹோத்தா ஹை..நடக்கும் .இது சகஜம் ' என்பதாகச் சொல்லிப் போனார்கள்.

ஹோத்தா ஹை...இது சகஜம் , வாழ்வில் வரும் சிறு இடர்களை 'என்னமோ எனக்குத்தான் வந்திருக்கு பாரு' என்பதாக நினைக்கக்கூடாது, போய்க்கொண்டே இருக்கணும். நல்ல சிந்தனை என்று நினைத்துக் கொண்டு வண்டியைச் செலுத்தினேன். ஓவர்டேக் செய்த பைக் ஒன்றில் இருந்தவர் 'முன் விளக்கு எரிகிறது' என்பதாக சைகை காட்டினார். அடுத்த சிக்னலில் அவருக்கு நன்றி என்பதாக கை தூக்கினேன். அவரும் , பேஸ்புக் லைக் போல கை காட்டி விரைந்தார்.

இதே சிக்னலில், காரில் அடிபட்டு ரத்தம் வழிய ஒருவர் தடுமாறி எழுந்து செல்போனில் பேசியபடியே அடுத்த டாக்ஸியைப் பிடித்து வேலைக்குப் போனதையும், அவருடன் காயம்பட்ட டிரைவரை அம்போவென விட்டுப் போனதையும் நண்பர்கள் வி கே எஸ், ஆர் வி எஸ் ஸிடம் சொல்லியிருக்கிறேன். முமபையில் மனிதாபிமானம் மறைந்துவிட்டது என்று புலம்பியிருக்கிறேன்.

ஆரே காலனியில் செல்லும்போதுதான் கவனித்தேன். வெட்டப்பட்டுக் கிடந்த பெரிய மரத்தண்டின்மீது, புதிதாகக் கிளைகள் மெல்லிதாக முளைத்திருந்தன.

ஹோத்தா ஹை..

Sunday, October 04, 2015

பார்க்கில் ஒரு நடை


”உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

 யாரையோ சொல்கிறார் போலும் என முன்னே நடந்தேன். “உங்களைத்தான்.” என்றபோது சற்றே வியப்படைந்தேன். ’எங்கிட்டயா? இன்று காலைச் சொற்பொழிவில் எதாவது விளக்கம் கேட்கிறாரோ?’
 எனது பயத்தில் நியாயம் இருக்கிறது.

டாக்டர்.ரஜத் குப்தா  நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உணவு தயாரிப்பு, சத்து மேம்படுத்துதல், செறிவடையச் செய்தலில் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவது என்பதில் பெரும்புகழ் வாய்ந்தவர். ஆறு வருடங்களாக அவரோடு பழக்கம். பல கான்ஃபரன்ஸ்களில் சந்தித்திருக்கிறோம்.

பிரபலமான தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமுக்கு கம்பெனி என்னை அனுப்பியிருந்தது. தொழிற்சாலைகள், கல்லூரிகள், ஆய்வகங்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். அன்று இரண்டாம் நாள் முடிந்ததால் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“வாங்க , மெயின் கேட் வரை நடந்துட்டு திரும்பி வரலாம்” என்றவரை மறுக்க முடியாமல், “ நீங்க போங்க. நான் கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்” என்று கூடவே வந்தவர்களை ரூமுக்கு அனுப்பிவிட்டு அவரோடு நடந்தேன்.

’மழை பெஞ்சிருக்குல்ல? கொஞ்சம் வழுக்கும், பாத்து” என்றார் . மெயின் ரோடு மழையில் கொஞ்சம் மோசமாயிருந்தது. ”வாங்க, பேசாம பூங்காவுக்குள்ள நடக்கலாம். அட்லீஸ்ட் அங்க இருட்டா இல்லாம இருக்கு”

இரு நிமிட மவுனத்தின் பின் ரஜத் ” கொஞ்சம் பெர்சனலான விசயம். உங்ககிட்ட பேசி ஆராயலாம்னு நினைச்சேன்” என்றார். நான் மவுனமாக நடந்தேன்.

“ஏன், இதை ஒரு கேஸ் ஸ்டடியாகக் கூட வச்சுக்கலாம். பேரு மட்டும் மாத்திரலாம். எட்டு மாசம் முன்னாடி, நீரஜாவை டெல்லியில சந்திச்சேன். ஒரு ஜாயிண்ட் ப்ராஜெக்ட் எடுத்திருக்கோம்”

“நீர்ஜா? டாக்டர் நீர்ஜா ,  **** லிமிடெட்-லேர்ந்து வந்திருக்காங்களே, அவங்களா?”

“யெஸ்” என்றவர் அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார்.
“அவளுக்கு வீடு சரியில்ல. புருஷன் எப்பவும் பிஸினஸ்னு அலையறான். இவகூட அன்பா நடந்துக்கறதில்ல. ஆபீஸ்ல மன அழுத்தம், அரசியல்...எதாவது ப்ராஜெக்ட்ல புது ஃபார்முலா வெற்றியடைஞ்சா வேலை இருக்கும். இல்லன்னா,அவ பாடு கஷ்டம்தான்”

“அவங்க கம்பெனி வைஸ் ப்ரெஸிடெண்ட் என்னோட நண்பர். நான் ஒரு வார்த்தை சொன்னால், இவ வேலைக்குப் பாதுகாப்பு. அதோட , இந்த ப்ராஜெக்ட்ல என்னோட ஒரு சோதனை முடிவு வெற்றிகரமா வந்திருக்கு., அதை நான் பகிர்ந்துகிட்டா, நல்ல பேப்பரா, பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்கள்ல வரும். ஏன், அது  அவளுக்கு ப்ரோமஷனுக்கே சாதகமா அமையும்”


அவர் சற்றே நிதானமாக நடந்தார். நானும் வேகத்தைக் குறைத்தேன். பார்க்கின் ட்யூப்லைட் வெளிச்சத்தில் அவர் முகத்தில் ஒரு புன்னகை கீற்று.

“ இங்கதான் நான் சொன்ன கேஸ் ஸ்டடி வருது  இந்த எட்டு மாச கூட்டு வேலையில, அவகிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகிட்டேன். அவளுக்கும் கொஞ்சம் சாய்வு இருக்கு. அதோட, அந்த சோதனை முடிவுகள் வெளியிடப்படுவதற்கு எனது அனுமதி தேவை. என்னோட ஒத்துப்போறது, அவளுக்கு நல்லதும்கூட”

திகைத்தேன். “இத ஏன் எங்கிட்ட சொல்றீங்க, ரஜத்ஜி? உங்க சொந்த விசயம்”

என்  தோளை லேசாகத் தட்டிச் சிரித்தார் “ எங்க பெயர் , அடையாளம் என்பது இரண்டாவது விசயம். அதை உதாசீனப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன். என்ன சவால்னு கேட்டீங்கன்னா. சமூக நெறிகள், மதம் கோட்பாடுகள்னு சிக்கிற ஆளு நான் இல்ல. ஓரளவுக்கு சமூக விதிகளைப் பின்பற்றணும்னு சொல்றவந்தான் நான். ஆனா, ,பொறுப்பான இரு பெரியவர்கள் பரஸ்பரம் ஆசையுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வினை மாற்றிக்கொள்வதில் என்ன தவறு? அவள் தயங்குகிறாள். ஏன்?”

சற்றே சிந்தனை வயப்பட்டேன். இது விஷப்பரீட்சை. ஏதாவது சொல்லப்போனால் ஏடகூடமாக எங்கள் உறவில் விரிசல் வருமோ என்ற தயக்கம், அதோடு, வெகு குறைவாகவே பரியச்சப்பட்ட ஒரு பெண்ணைக்குறித்துப் பேசுவது எனக்கு ஒப்புதலில்லை.

“விடுங்க. வேற பேசுவோம்”என்றேன். “ஹா ஹா. நழுவுகிறீர்கள். மூன்றாம் மனிதராக இருந்து இதன் சிக்கலை யோசியுங்கள். நான் சற்றே முயற்சி எடுத்தால், மணவாழ்விலிருந்து மாறுபட்ட ஒரு தொடர்பு கிடைக்கலாம். கிடைக்கும். போரடிக்கும் வழக்கமான தனிவாழ்வில் ஒரு மாற்றம். நன்றாகவும் இருக்கும். அவள் மறுக்க வாய்ப்பில்லை” என்றவர் குறுகுறுவெனப் பார்த்தார்

“என்னை வில்லன் என நினைக்கிறீர்களோ?”

“இது உங்கள் சொந்த விஷயம். நான் என்ன்ன சொல்வதற்கு இருக்கிறது?”

“சரி, நானே தொடங்குகிறேன். படித்த , அனுபவமிக்க பெரியவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதன்பின் எடுக்கும் முடிவு இது. ஆனால்,  மூகத்தில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்று மதியம் கருத்தரங்கில், “ சமூக விதிகள், மத சாத்திரங்கள் என்பதெல்லாம் கேள்விக்குட்பட்டவை. மரபணுக்கள் தாங்கள் வளர்வதைத் தீர்மானிக்கின்றன” என்றபோது சற்றே சிரித்தவர்களில் நீங்களும் ஒருவர். இப்படி மனம் ஒத்த இருவர் தங்கள் வழிகளை, தங்கள் நலனுக்காக இணைத்துக்கொள்வதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது?”

“மரபணுக்கள் இங்கு எங்கிருந்து வந்தன? “ என்றேன் வியந்து.

“ மரபணுக்கள் கூட இல்லை, அவற்றின் மூலக்கூறுகளான அமினோ அமிலங்கள், புரதங்கள், வேதியற்பொருட்கள். இவை தமக்குத் தேவையான , தாங்கள் இருக்க சாதகமான புறச்சூழலைக் காணுகையில் , அவற்றிற்கு சாதகமாக இருந்துகொள்கின்றன. பரிமாண வளர்ச்சியில் இதுவும் ஒரு அங்கம். எனவே, வரும் நாட்களில், தனக்குப் பிடித்த ஒருவருடன் மற்றொருவர் , சமூகவிதிகளை மீறி நடப்பது இயல்பாகிப்போகும். தனக்கு ஒவ்வாத ஒருவரிடமிருந்து விலகுவதும் எளிதாக இருக்கும். இல்லையா? எனவே சமூக விதிகள், நெறிகள் இவற்றிற்கு கடவுள் நிலை அளிப்பது கேலிக்கூத்து”.

மவுனமானேன் “ என்ன , நின்றுவிட்டீர்கள்? நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. டாக்கின்ஸ் எழுதிய Selfish Genes என்ற  புத்தகத்தின் தருக்க நீட்டல்தான் இந்த சிந்தனைக் கோணம். மூன்று வருடமுன்பு, நாம் டாக்கின்ஸ் பற்றி ஹைதராபாத் ஓட்டலில் பேசினோம். நினைவிருக்கிறதா?”

‘ஆஹா’ , மனுசன் இங்கேர்ந்து வர்றாரா? ”ரஜத்ஜி” என்றேன் முன்னே பார்த்தவாறே. பார்க்க்கின் நடைபாதை, நான்கு நிறத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. இரண்டு டைல்ஸ்கள் போகும் பாதையையும், மற்ற இரண்டு நிறங்கள் , வரும் பாதையையும் ,  அம்புக்குறியிட்டப்பட்டு காட்டியிருந்தன. ட்யூப்லைட் வெளிச்சத்தில் அனைத்து நிறங்களும் ஏதோ அதீத கருப்பாகத் தெரிய, க்றுப்பு நிறம் மட்டும் தன் நிறத்தில் அடர்வாகத் தெரிந்தது.

“இந்த நடைபாதையில் நீங்கள் கறுப்பு டைல்ஸ் பாதையிலும், நான் காவிநிறப் பாதையிலும் நடப்போமா? நேராக நடக்கவேண்டும். வேறு டைல்ஸ்களில் கால் வைத்துவிடக்கூடாது.”
“ரைட்” என்றார் .”வேறு டைல்ஸில் கால் மாற்றிவைத்தால் தோல்வி, அப்படியா?”
“வெற்றி தோல்வி பற்றி அப்புறம் சொல்கிறேன். நடங்கள்” . இருவரும் நேரா நடந்தோம். சுவர்க்கோழிகளின் சத்தமும், மழையால், சில தவளைகளின் சப்தமும் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில், எங்கள் பாதணிகள் தரையில் உரசும் ஒலி மட்டும் கேட்டது.

“இப்போது, கண்களை மூடிக்கொண்டு முன்னால் நடங்க” என்றேன். அவர் கண்களை அழுத்தி மூடிக்கொண்டதிலும், விளையாட்டின் சிரிப்பிலும், பற்கள் வெளியே தெரிய நடந்தார். இரு அடிகள் எடுத்து வைத்திருப்பார், இடது கால் என் பாதையில் வந்தது.

“பாத்து, பாத்து, உங்க பாதையில் நடங்க”
“அங்?” என்றவர் லேசாக கண் திறந்து பார்த்து, நேராக நடந்தார். “ ம். இன்னும் கண் மூடி நடங்க”.  நான்கு அடிகளில் மறுபுறம் அவரது வலது கால் நீண்டது.

“ஹலோ. அந்தப்பக்கம்...” அவர் மீண்டும் கண் திறந்து நேராக சரிப்படுத்தினார். “ என்ன விளையாட்டு இது? சுதாகர்?”

“நாப்பது வருசமாக நீங்களும் நடக்கறீங்க. நடை நன்றாகவே தெரிந்தாலும், கண் மூடினால் ஓரிரு அடிகளில் கோணம் தவறிவிடுகிறது. கால் எப்போதும்போல முன்னால்தான் நடக்கிறது என்று நம்புகிறோம். உண்மையில் கண்கள் மற்றும் பிற புலன்களால் ஒவ்வொரு மைக்ரோ வினாடிகளிலும், நம் மூளை நமது நடையைச் சரிப்படுத்துகிறது. இது உள்மறையாக நடக்கும் இயல்பான திருத்தம். இல்லையா?”

“வெல், வாட்ஸ் தி பாயிண்ட்?” என்றார், சற்றே எரிச்சலடைந்து.

“பாயிண்ட் இஸ்... சமூக நெறிகள் நம்முள் உள்வாங்கப்பட்டு, நாம் வாழ்க்கையில் நடப்பதை, ஒவ்வொரு நொடியிலும் சரிப்படுத்துகிறது. கன்னாபின்னாவென நாம் நடந்தால் எப்படியிருக்கும்? அத்தனை பேரும் இடித்துக்கொண்டு, கீழே விழுந்து, முன்னே போகவே மாட்டோம். சற்றே சீர்ப்படுத்தப்பட்ட, ஒழுங்கான நடை , அனைவருக்கும் நன்மை தரும், ஒரு பார்க்கில் நடக்கிறதுக்கே இப்படி இருக்கிறதென்றால், வாழ்க்கையில் நடக்க, மூளை எத்தனை ஒழுங்கு நெறிகளை வைத்துக்கொண்டு நம்மை திருத்தவேண்டும்? நீங்கள் ஒரு மூலையில் தாறுமாறாக ஓடுவது, நடைபாதை விதிகளை மீறுவது, பிறரை முதலில் பாதிக்காது இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நடக்க வருபவர்கள் உங்களை ‘கோட்டி பிடிச்சவன் போல” என்றுதான் நினைப்பார்கள். உங்களை விலக்கத்தான் நினைப்பார்கள்”

“ஹா, இது ஒரு உவமையா? இது யதார்த்த விதி மட்டும் தழுவிய பேச்சு, நான் அடிப்படையை கேள்விகேட்கிறேன். பார்க்கில் நடக்க அல்ல, பெரும் நிலத்தில், கோடிடப்படாத பெரு வெளியில் தன் வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடச் சொல்கிறேன். குறுகியதாகச் சிந்திக்காதீர்கள்”

“ஓடுகளத்தில் விதிகள் வேறு, நடக்கும் பாதையில் விதிகள் வேறு. காட்டில் செல்ல விதிகள் வேறு. அனைத்தும் பாதுகாப்பு என்பதை முதலில் வரையறுக்கின்றன. டாக்கின்ஸுக்கு வர்றேன். நீங்கள் சொன்ன மரபணு கெமிக்கல்கள் பல்வழியில் தம்மில் கலந்து புதுப்புது பரிணாம படிவங்களை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் மேற்குக்கரையில், அட்லாண்டிக் கடலில்கூட சிங்கத்தின் பண்பைக்கொண்ட உயிரினத்தை உருவாக்க கெமிக்கல்கள் என்றோ இணைந்திருக்கக்கூடும். ஆனால் அது வெற்றிபெறாது அவ்வுருவம் பிறக்குமுன்னே மடிந்திருக்கும். கெமிக்கல்கல்களின் கலவை உருவாக்கிய மீன் உருவங்கள் வெற்றி பெற்றன. அந்த மரபணுக்கள் அடிப்படையில் மீன் உருவை உருவாக்கி அதன்மீது மாறுபட்ட பண்புடைய உருவங்களை படைத்தன. அதிலும் பல தோற்றிருக்கும், இதேபோல் மண்ணில் மீன் உருவம் தோன்ற, இணைந்த கெமிக்கல் கலவை தோற்றிருக்கும். ஒரு உயிரினம் வளர மட்டுமல்ல, வாழ்வதற்கு அதன் சூழ்நிலை அமையவேண்டும். தமிழ்ல் சொல்லவேண்டுமானால் ‘நொந்தது சாகும்’ “

“நொந்தது சாகும்’ .. நல்லாயிருக்கே? “ என்றார் ரஜத் வியந்து.

“சொன்னது ஒரு கவிஞன். ரெண்டு வார்த்தையில் பரிணாம வளர்ச்சியை சொல்லிப் போய்விட்டான், அந்தக் கிறுக்குப் பார்ப்பான். அதை விடுங்க, சமூகம் தரும் சூழ்நிலையில் தவறும்  சிந்தனைச் சேர்க்கைகைகள், புதியதோர் உலகம் செய்யாது. தருக்கமற்ற சேர்க்கையான விபரீத விளைவுகளைத்தான் கொடுக்கும், எதிர்வினைகளைச் சமாளிக்க முடியாமல் , அது மடிந்து போகும். நீங்கள் கடலில் பலவீனமாக உருவான சிங்கமாக இருக்கவிரும்புகிறீர்களா, சரியான சிறு மீனாக இருக்கவிரும்புகிறீர்களா, என்பதை உங்கள் எண்ண மரபணுக்கள் தீர்மானிக்கட்டும்.”

ரஜத் சிரித்தார். “ நீங்கள் , சமூக,மத நெறிகளுக்குக் கொடி பிடிக்கிறீர்கள். டாக்கின்ஸை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர் நாத்திகத்தை முன்னிறுத்தினார். விதிகள் நாம் செய்வது. பல்லாண் சேர்க்கை என்பது பல குழுக்களில் உள்ள பழக்கம், ஓராண் சேர்க்கை என்பது பிற்பாடு , ஆண் தனக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு நெறி. நீங்கள் சொல்லும் நெறிகள் காலம்காலமாக பிறழ்ந்து, மாறி வந்திருக்கின்றன.”

“உண்மைதான்” என்றேன் “ அவை மாறுவது அதன் பரிணாம வளர்ச்சி. சூழ்நிலைகள் மாறும்போது, தன் சமூகம் வாழவும், வளரவும் வகையில் சமூக நெறிகளை மனிதன் அமைக்கிறான். நெறிகள் பிறழ்ந்து, சமூகக் கட்டு உடையும்போது, புதிய நெறிகளை, புது சமுதாயத்தை அவன் உருவாக்குகிறான்.”

“அப்படி வாருங்கள் வழிக்கு! இதெல்லாம் ஐம்பது ஆண்டுகால சமூக விடுதலை உணர்வில் வந்த வார்த்தைகள். பழைய நெறிகள் இப்படிச் சொல்லியிருக்காது”

சிரித்தேன் “ பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினனானே’ - இதனை எனது முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்தில் கணியன் பூங்குன்றனார் சொல்லிப்போயிருக்கிறான். வளர் சிதை மாற்றத்தை அவர்கள் என்றோ அறிந்திருக்கிறார்கள்.  டாக்கின்ஸ் சொல்லும் மரபணு மாற்றங்கள் நிகழ சூழ்நிலைகள் சாதகமாக அமைகின்றன. அவர், கடவுள் உன்னை உருவாக்கவில்லை; சூழ்நிலை சாதகமாக அமையும்போது, மரபணுக்கள் தோற்றுவித்த உரு நீ’ என்கிறார். இது சரியான தருக்கமாக ஏற்றுக்கொள்ள நான் தயங்கவில்லை”

“சரி, எங்கள் கதைக்கு வாருங்கள். என்ன சொல்கிறீர்கள்?”

“ ரஜத் ஜி. இதில் நான் சொல்ல ஒன்றுமில்லை. நேராக நடக்க உங்களூக்கும் தெரியும். கண் மூடி நடந்தால் பாதை மாறினால், கீழே விழுந்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.”

மழை வலுத்தது.

இருவரும் தடுமாறாது  நடந்தோம் - நான் காவி டைல்ஸ் மேலும், அவர் கறுப்பு டைல்ஸ் மேலும்,

Sunday, September 27, 2015

அனிச்சை இயக்கமும் ஆழ்வார் பாசுரமும்.

”கூரியர், ஸாப்” கூரியர் பையனோடு , எங்கள் அடுக்குமாடிக் கட்டிடக் காவலாளியும் வந்திருந்தான். கூரியர் என்று சொல்லிக்கொண்டு டிக்‌ஷனரி, என்ஸைக்ளோபீடியா விற்க சில யுவதிகள் நுழைந்துவிடுகிறார்கள். ஜன்னல் பத்திரிகையில் கடைசி அத்தியாயம் வந்திருந்த இதழ். Kasthuri என்று வழக்கம்போல பெயரில் th வந்திருந்தது.

உள்ளே மீண்டும் சென்று பத்துநிமிடத்தில் இறைவணக்கத்தை முடித்துவிட்டு வரவும் மகன் தயாராகக் காத்திருந்தான். “அப்பா, ஒன்னு கேட்கட்டுமா? கோபப் படக்கூடாது”

“சொல்லு”

“இல்ல, வாசல்ல கூரியர் வாங்க நீங்க எந்திச்சு வரணுமா? திருப்பாவை சொல்லிகிட்டிருந்தா, அதை முடிக்கவேண்டியதுதானே? தப்பு வந்ததுன்னா?  கான்ஸண்ட்ரேஷன் இருக்காதுல்ல?”
“திருப்பாவை தானா வந்துகொண்டிருக்கும். பழகிப்போச்சு பாரு. பெருக்கல் வாய்ப்பாடு மாதிரி. தூக்கத்துல கேட்டாலும் சொல்லணும்”

“அதுல என்ன கான்ஸ்டண்ட்ரேஷன் இருக்கும்? சும்மா சொல்லணும்னு சொல்றீங்க”
”இல்லடா” கொஞ்சம் யோசித்தேன். எங்கிருந்து தொடங்குவது?

“மூளை இருக்கு பாரு, முதல்ல ஒரு வேலையைச் செய்யறச்சே, பழகற வரை, படுத்தும். அதுவும் உடல் இயக்கமும் சேர்ந்து வரணும்னா, ரொம்பவே திமிறும். பொறுமையா ஒரு பழக்கத்துக்குக் கொண்டுவந்ததும், அது படு புத்திசாலித்தனமா, நினைவையும், உடல் இயக்க ஆணைகளையும் காங்கில்லியான்னு ஒரு பகுதிக்கு அனுப்பிடும். இது ,தானியங்கியா, நாம உணர்வோட முழிச்சிகிட்டிருக்கறச்சேயும், அந்த வேலைகளை சரியா செய்ய வைக்கும்.”

அவன் முழித்ததில், மேலும் விளக்கினேன். “ கார் ஓட்டக் கத்துக்கிறப்போ, கை கால், சிந்தனை எல்லாம் கார் ஓட்டறதுலயே இருக்கும். பழகினதுக்கு அப்புறம், மொபைல் எடுத்து பேசற அளவுக்கு, தானியங்கி வேலையா அது மாறிடறது இல்லையா? இது காங்கிலியாவோட வேலை ஆயிடுத்து. மூளையின் பிற பகுதிகள் மற்ற வேலையைச் செய்யப் போயிரும். இதே மாதிரிதான், பாசுரங்கள் படிக்கறப்போ முதல்ல கஷ்டமாயிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்துகிட்டா, காங்கிலியாவுக்கு அந்த இயக்கங்கள் போயிரும். நாம மத்த வேலையையும் பாக்கலாம்”

“ஆனா, அதுல என்ன பயன் இருக்குப்பா? கவனம் இல்லாம சொல்றது வீண்-ன்னு நீங்கதான் சொன்னீங்க”

“கரெக்ட். இது்ல என்ன ஆச்சரியம்னா, காங்கிலியா அந்த வேலையைச் செஞ்சாலும், மூளையின் பிற பகுதிகள் அதே பாசுரத்தை அனுபவிக்கவும்,உணரவைக்கவும் இயங்கும். வயலுக்கு தண்னீர் இறைக்கிற ஏற்றப்பாட்டுக்கும், தாலாட்டுக்கும்,  பெருமாளை வீதிக்குப் புறப்பாடு பண்ணறப்போ  மந்திரங்களும், பாசுரங்களும் சொல்றதுக்கும் இதே நிலைதான்.
 ஆனா, “ ஏனமாய் நிலங்கீண்ட என் அப்பனே கண்ணா!” ந்ன்னு வானமாமலைப் பதிகம் சொல்றப்போ, ஆதிமூலமேன்னு அந்த யானை கத்தினமாதிரி நாம கத்தறதா மனசு நினைக்கறது பாரு, கண்ல கண்ணீர் துளீர்க்கறது பாரு, இதெல்லாம், உணர்வோடு மூளை அனுபவிக்கறதைக் காட்டறது. ஆனா, பாசுரம்? அது காங்கிலியாலேர்ந்து வர்ற ஆணையில வருது. நீ எப்படி உன் மூளையை வைச்சிருக்கே-ங்கறது முக்கியம். தானியங்கியா சொல்வதோ, புத்தகம் பாத்துச் சொல்வதோ முக்கியம் இல்ல. உணர்வு, அனுபவம்.. அது முக்கியம்”

“ஏன்ப்பா எனக்கு இதெல்லாம் வரமாட்டேங்குது? ஸம்திங் ராங் வித் மி?” பையனின் உளைச்சல் புரிந்தது எனக்கு.

அவன் தோளைத் தட்டினேன் “இந்த கேள்வி இருக்கு பாரு.இப்போதைக்கு அது போதும். என்னிக்கோ ஒரு நாள் திடீர்னு உன் மூளை உணர்தலில் முதிர்ச்சியைக் காட்டும். அதுவரை , பாசுரம் என்பது, நிலத்துல விழுந்த விதை மாதிரிதான். சிலது, உடனே முளைக்கும். சிலது நாளாகும், சிலது முளைக்காது. இதெல்லாம் உன் கையில் இல்ல.”

”அப்ப என்னதான் நாம செய்யணும்ப்பா?”

“ விதையை விதைக்கறது மட்டும்தான் உழவனோட வேலை. வளர்றது விதையோட வேலை.  அது முளைக்கலைன்னா, மீண்டும் விதைக்கணும். நிலத்தைப் பக்குவப்படுத்தணும். உழவன் மறுபடி மறுபடி வியர்வை சிந்த உழணும்.  எது உன் கையில் இல்லையோ, அதுக்குக் கவலைப்படாதே.”
அவன் எழுந்து போய்விட்டான்.

ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தேன். பின்னர் மெல்ல திருவாய் மொழி புத்தகத்தை எடுத்தேன் “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆயினும் உனை விட்டகன்றி ஆற்றகிற்கொன்றிலேன் , அரவிணனை அம்மானே” வானமாமலைப் பதிகம்.

எனக்கு நோன்புகள் , சடங்குகள் கொண்ட கர்மயோக வழி தெரியாது. அறிவு மயமான ஞான வழியும் தெரியாது. ஆயினும் உன்னை விட்டு ஒன்றும் செய்ய இயலாது. “  சரணாகதி பாசுரங்களின் தொடக்கம்.  எதுவும் தனக்கு இல்லை என்ற ஆழ்வார், தன் முயற்சியை மட்டும்  விடவில்லை. அவனின்று அதுவும் செய்ய முடியவில்லை என்பதையே சொல்கிறார். முயற்சி என்பது செரபரல் கார்ட்டெக்ஸுக்கும், காங்கிலியாவுக்கும் வினைகளை ஒழுங்குபடுத்துகிறது.

 முயற்சி மட்டும் மீண்டும் மீண்டும். என்றாவது திருவாய்மொழி எனக்கும் புரியும். அதுவரை காங்கிலியாவும், கார்ட்டெக்ஸும் தம்மில் அடித்துக்கொள்ளட்டும்.

Friday, September 18, 2015

கம்பனும் கத்திரிக்காயும்

“ கத்திரிக்காயா?” அபி முகம் சுருங்கி முணுமுணுத்தான்.  இரவு உணவு மேடையில் நாங்கள் அனைவரும் ஒருசேர அமர்வதென்பது அபூர்வம். அதில் இன்று அபூர்வமாக அவனுக்குப் பிடிக்காத கத்திரிக்காய்.
“அன்னம் , லக்‌ஷ்மி தெரியுமா? முகத்தச் சுருக்காம சாப்பிட்டுப் போ” மங்கை சொல்வது எனக்கும் சேர்த்துத்தான். கத்திரிக்காய் பிடிக்காதது என்பதல்ல, அது இல்லாம இருந்திருந்தா நல்லா இருக்குமே? என்று கமல் ரேஞ்சுக்கு வசனம் பேச உணவு மேடை இடமல்ல.

அப்பா, நேத்திக்கு சிந்திப்பது பத்தி சொல்லிட்டிருந்தீங்களே?” . பிடிக்காததைத் தவிர்க்கும் உத்திகளில் ஒன்று அதனினின்று குவியத்தை , உணர்வை மாற்றுவது.
“என்ன சொன்னேன்?”
“ ஒரு நிகழ்வு , அதை நம் அறிவால், முன் அனுபவத்தால் தன்போக்கில்  அறிவது - பெர்ஸப்ஷன், அதுக்கு அப்புறம் அந்த நிகழ்வை ஆழ்மனத்துல வைச்சுக்கறது, அதுல இருந்து நினைவை, சுய உணர்வோடு, வடிகட்டிகளால் திருத்தி, எதிர்வினையாக வெளிப்படுத்துவது, ஃப்ராய்டு கொண்டுவந்த மாடல்-ன்னு சொன்னீங்க”
“ஆங்! கரெக்ட்” நினைவு வந்தது. அது Interpretation of Dreamsல இருந்து சொன்னதில்லையோ?
“இதை கொஞ்சம் மாத்தி, பெர்ஸப்ஷனுக்கு முன்னாடியே சுய உணர்வு ,தருக்கம் வந்தா, உள்வாங்கற உணர்வு முதல்லிலேயே வடிகட்டப்பட்டு, மனசைப் பாதிக்காமலேயே ஆழ்மனசுல இருக்கும்னீங்க”
“கரெக்ட். அது ஒருவகையிலநிகழ்வுகளால் பாதிப்பதைத் தடுக்கும் உத்தி. சிலரால இடர் வரும் காலத்துலயும் பதறாம எப்படி தெளிவா முடிவெடுக்க முடியுது-ங்கறதுக்கு ஒருகோணத்து விளக்கம்னு வைச்சுக்கலாம்”
“இந்த மாதிரி அதிர்ந்து போறது ஒரு பலவீனமாப்பா?”
“நிதானித்தேன். ஆமா என்றால் உணர்ச்சி வெளிப்படுத்துதலை அவ மதிப்பதாகும். இல்லையென்றால் தருக்க முடிவுகளை அவமதிப்பதாகும்.
“ரெண்டுமே சரிதான். ஆட்களையும், இடத்தையும் பொறுத்தது அது. கம்பராமாயணத்துல ரெண்டு இடம். இரண்டு பெண் கேரக்டர்கள். ரெண்டு பேருக்கும் சூழ்நிலை ஒண்ணுதான். கணவன் செத்துக் கிடக்கறான். அதிர்ச்சில அவங்க புலம்பறாங்க”  
“ம். சொல்லுங்க” ஆர்வத்துடன் முன்னே குனிந்தான். நேரம் சரியாக அமைந்த திருப்தியில் அவன் தட்டில் கத்திரிக்காய் பொறியலை வைத்தாள் என் மனைவி. கதை கேக்கிற ஆர்வத்துல என்ன திங்கறோம் என்ற நினைவே இன்றி முழுங்கிவிடுவான்.
“வாலி செத்துக்கிடக்கறான். தாரை ஓடி வர்றா. இராமன் உன்னைக் கொன்னுடுவான்ன்னு சொன்னேனே? கேக்காம போனியே? ‘என்று புலம்பறா. அதுக்கப்புறமும் அதிர்ச்சியில மீளாம சொல்றா,
“நீறாம் மேருவும் நீ நெருக்கினால். மேறோர் வாளியுன் மார்பையீவதோ?
தேறேன் யானினி, தேவர் மாயமோ? வேறோர் வாலிகொலோ விளிந்துளான்”
நீ நெருக்கிப் பிடிச்சா, மேருமலையே பொடிப்பொடியாகிவிடுமே? அப்படிப்பட்ட உன் மார்பை ஒருத்தன் அம்பு கிழிப்பதோ? என்னால நம்ப முடியலை. தேவர்கள் செய்த மாயம்தானோ? நீ சாகலை, வேறொரு வாலி செத்துப் போயிருக்கான்”
அவளால உணர்ச்சியின் அதிர்ச்சியைத் தாங்க முடியலை. அவன் இறந்ததை நம்ப மறுக்கிறா. இதை disbelief ரியாக்‌ஷன்னு ஹோரோவிட்ஸ்-ன்னு ஒரு சைக்கியாட்ரி சயண்டிஸ்ட் சொல்றார்”
”சரி, இன்னொரு இடம்? “ அவன் கதை கேட்பதில் குறியாயிருந்தான்.
“இராவணன் செத்துக்கிடக்கறான். மண்டோதரி ஓடி வர்றா. அவ புலம்பறப்போ,
“வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடலெங்கும் தடவியதோ ஒருவன்வாளி?”
வெள்ளெருக்கம் பூச் சூடிய சிவனது மலையைத் தூக்கிய வலிமையுடைய உனது உடலில் அம்புகள் துளைத்திருக்கிறதே? இது அந்த சீதையின் மீது வைத்த தவறான காதல் உடல் எங்கேயோ இருக்கிறதோ? என்று தேடியிருக்கிறதோ அந்த ராமபாணம்?”
நல்லா கேட்டுக்கோ அபி, மண்டோதரி, ராவணனோட வீரத்தைச் சொல்கிற அதே இடத்துல, அவனது இறப்புக்குக் காரணம் ஒரு தவறான காதல் என்கிற தருக்கத்தை , ஒரு காரணத்தை முன்னாடி வைக்கிறா, பாரு. இதுலதான் , உணர்ச்சிகளுக்கு முன்னாடி சுய அறிவை, தருக்கத்தை முன்னாடி வைக்கிற உத்தி. இது சாதாரண விஷயமில்லை”

அபி மவுனமாக இருந்தான். கதை அசைத்திருக்க வேண்டும்.
“என்னடா, எமோஷனலான சீன் அழுத்தமா இருக்கோ?”
“இல்லப்பா, என்னமா  இந்த கம்பர் ஒரு சைக்காலஜியை எழுதிவைச்சிருக்காரு, இல்ல? ஸ்டன்னிங்”
“சரி, அம்மா கத்திரிக்காய்தான் போட்டிருக்கேன். உணர்ச்சிப் படாம, இது நல்லதுக்குத்தான்ன்னு லாஜிக்கா நினைச்சுட்டு சாப்பிடு.ஹலோ, நீங்களும்தான். ஏன் கத்திரிக்காய்னா மூஞ்சி சுருங்கறது?”
நினைப்பதையும், அதை மாற்றும் வேலையையும் எப்படி பெண்கள் புரிந்துகொள்கிறார்கள்? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

Saturday, August 15, 2015

கவனத்தைக் கட்டும் கயிறு -’ ஃபோகஸ் ‘ புத்தகத்தை வாசிக்கும் விதம்.இக்கட்டுரை டேனியல் கோல்மெனின் ஃபோகஸ் புத்தகத்தை அணுகும் விதமும், அது எனக்குத் தந்த சிந்தனைத் தொடரின் பதிவும் பற்றியது. எந்த வகையிலும் இது உளவியல் உத்திகள் பற்றியோ, அதன் நுட்பங்களை விவரிக்கும் அறிவியல் கட்டுரையோ அல்ல. இது,  ஒரு வகை சார்ந்த  புத்தகங்களை வாசிக்கும் விதமும், அப்படியான ஒரு வாசிப்பின் பாதிப்பும் பற்றியது மட்டுமே.

1994ல் ஒரு அறிவியலாளரைச் சந்திக்க  மும்பையின் கொலாபா பகுதிக்கு நானும் மேனேஜரும் சென்றிருந்தபோது, மதிய உணவில் அவரது ஏழு வயது மகளும் சேர்ந்துகொண்டாள். உணவின் இடையே தண்ணி வேணும்என்றாள். அவள் தாய் ஒரு புதிய தண்ணீர் புட்டியை [B1] எடுத்து அவள் முன்னேயே திறந்து தந்தார். உணவு மேடையில் பல டம்ளர்களில் நீர் இருந்த நிலையில் எதற்கு புதியதாய் ஒரு புட்டி? என்ற  ஒரு கேள்விக்குறியுடன் மீண்டும் உணவருந்தத்  தொடங்கியபோது, அச்சிறுமி திடீரென மூச்சடைக்கிறது’ என்றாள். பதறாமல், அவள் பெற்றோர் மெல்ல அவளை  அங்கேயே தரையில் கிடத்தினர். ”மூச்சை மெல்ல  இழுத்து விடு”, என்று திரும்பத் திரும்ப அமைதியாகச் சொன்னபடியே, ஒரு கரடி பொம்மையை அவள் கையில் கொடுத்தனர். கரடி பொம்மை, அவளது சிறு நெஞ்சில் ஏறித் தணிந்தது. ஒரு பதைபதைப்புடன் பார்த்திருந்த எனக்கு, ஏன் அவசரமாக மருத்துவமனையை அவர்கள் நாடவில்லை என்பது புதிராக இருந்தது. ஐந்து நிமிடங்களில் அவள் தூங்கிவிட்டாள்

தொடர் குண்டு வெடிப்புல, ஒரு குண்டு இவ பள்ளிக்கூடத்துப் பக்கமா வெடிச்சது. பிள்ளைங்க வரிசையா வெளிய வந்தபோது, முன்னாடி போன ஒரு பையனோட வாடடர் பாட்டில் தரையில விழ, அதுல தரையிலே இருந்த ரத்தக்கறை ஒட்டிறுச்சு. அதை எவ்வளவு நேரம் பார்த்தாளோ? தெரியாது, அன்னிலேர்ந்து, வாட்டர் பாட்டில், டம்ளர்ல தண்ணி குடிக்க மாட்டேன்னுட்டா. வாட்டர் பாட்டிலை நீட்டினாலே அவளுக்கு வாந்தி வரும். புது பாட்டில்ல மட்டும்தான் தண்ணி சுத்தமா இருக்கும்னு ஒத்துக்கறா. தண்ணி பத்தி அவளுக்கு நினைவு போனாலே, இந்த மூச்சடைப்பு வந்திரும். ” என்றார் அவள் தந்தை.
கவுன்ஸிலர்கள் ஏதாவது மருத்துவ சிகிக்சைன்னு போகலியா?”  கேள்வி எனக்கே முட்டாள்தனமாகப் பட்டது. செல்வந்தர்கள், நிறையப் படித்தவர்கள்.அவர்கள் அறியாததா?

போனோம். அதைவிட, என் மாமனார் சொன்ன முறைதான் பயன்படுகிறது. அவள் சிந்தனை தண்ணீரை  நோக்கிக் குவியும்போது, அதனை கலைத்து, வேறு ஒரு ரிதமான இயக்கத்தில் கவனத்தைச் செலுத்தப் பயிற்சி கொடுத்திருக்கோம். அவளது மூச்சையே  கவனிப்பது என்பது எளிது, எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். அதோட, அரவணைப்பும், அன்பும் காட்ட அவளது கரடிப்பொம்மையும் அவளோடு சேர்ந்து மூச்சு விடுகிறது என்று நம்ப வைத்திருக்கிறோம். அவள் மீது கிடந்து பொம்மையின் உடல் ஏறி இறங்குவது, அவளது படபடப்படைந்த மூளையை அமைதிப்படுத்துகிறது. மொத்தத்தில் சிந்தனைக் குவியத்தைக் கலைத்து, வேறிடத்தில் குவிய வைப்பதுதான் இந்த உத்தி. என்றார் அவர்.

டேனியல் கோல்மனின்ஃபோகஸ்என்ற புத்தகத்தை பதினைந்து வருடங்கள் கழிந்தபின் படித்தபோது, அதில் Breathing Buddies என்ற அத்தியாயம் இந்நிகழ்வை நினைவுபடுத்தியது.  Breathing buddies , மூச்சுவிடும் நண்பர்கள் என்ற உத்தியைக் கையாண்டு, மிக பதட்டமான, அபாயமான சூழல்களில் வளரும் குழந்தைகளின் மனப் பதட்டத்தை அடக்கவும், மன ஆளுமைத்திறனை அதிகரிக்கவும்[B2] ,  கல்வியியல்வல்லுநர்கள் [B3] சிலர் அமெரிக்காவிலும், பதட்டம் நிறைந்த சூழல் கொண்ட நாடுகளிலும் முயன்றிருக்கின்றனர். உலகமெங்கும், அனுபவமிக்க மனிதர்கள், மனத்தின் குவியம், கலைதல், மன ஆளுமை கொண்டு, கவர்வனவற்றைத் தவிர்த்தல் [B4] என்பதன் முக்கியத்துவத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உணர்ந்திருக்கின்றனர். மரபணு வழியாக  மன ஆளுமை வருமென்றால் அது மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார் கோல்மன்.  ஆனால், அது அவ்வாறு வருவதில்லை என்பதே உண்மை

கோல்மனின் சிந்தனைகள் பெரும்பாலும் நாம் அறிந்தவைதாம். சிந்தனை என்பதன் பல அங்கங்களாக, அனுபவத்தின் உணர்வு, பகுத்து அறிதல், திட்டமிடுதல், பண்டைய அனுபவத்துடனான ஒப்பீடு, எதிர்கால நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்று அனுபவத்தைக் கொண்டு நீட்டித்து கற்பனையில் உணர்தல் என்பனவற்றைச் சொல்லலாம். இதில் உணர்வு , இறந்தகால அனுபவ அறிவு, எதிர்கால நீட்சிக்கற்பித்தல் என்பனவற்றை தற்பொழுது  தவிர்த்துவிடுவோம். அவற்றை தருக்க வழியாக,அறிய முடியும்.  , உணர்வுகளின் காரணிகளை மாறாக அறிதல், அவை தூண்டும் உணர்வுகளை தவறாக செயலாக்குதல், காரணிகள் இன்றியே, பழைய அனுபவங்களின் போலி நிகழ்வுகளை மனதுள் நிகழ்த்தி, சிந்தனைகளை வளர்த்தல் என்பன, குவியம் குலைந்த சிந்தனைச் சிதறல்கள். இவற்றை தருக்க ரீதியாக மட்டும் அறிவது கடினம். வெகு சுலபமாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடலாம் “அடுப்பில் பால் வைத்ததும் நினைவிருக்கிறது. அது பொங்க இரு நிமிடங்கள் ஆகும் என்பதும் நினைவிருக்கிறது. டி.வியை இயக்கும்போதும் அடுப்பில் பால் இருப்பது நினைவிருக்கிறது. ஐந்து நிமிடம் கழித்து பால் தீய்ந்த வாடை வரும்போது மட்டுமே நினைவு வருகிறது. இரு நிமிடங்களில் எப்படி நினவு தப்புகிறது? “   மனம் குவிதல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஏன்? என்ற கேள்விக்கு பதில் எளிதில் சொல்லிவிட முடியாது. காரணிகளும், காரணங்களும் பலவாக இருப்பது மட்டுமல்ல. பல வேளைகளில் , சிந்தனை சிதற ஒரே ஒரு காரணி போதுமானது. 

டேனியல் கோல்மன் ஃபோகஸ் என்ற புத்தகத்தில் இதற்கு பல கோணங்களைக் காட்டுகிறார். சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள் , ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது. இவரது பல புத்தகங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.
கற்கால மனிதனின் சிந்தனை என்பது நிகழ்காலச் சிந்தனையாகவே பெருமளவு இருந்திருக்கிறது. உணவு தேடிய புலன் உணர்வு, அபாயத்தில் இருந்து தப்பும் உணர்வு, இனப்பெருக்கத்திற்கான உணர்வு என்று உந்துதல் உணர்வுடனே அன்று மிருகங்கள் போலச் செயல்பட்டிருக்கிறான். அந்த உணர்வுகள் தந்த அனுபவம் மூளையில் நிரந்தரமான நரம்பு இணைவுகளாக பொறிக்கப்பட்டு, நாளடைவில், நிகழ்வுகளூக்கான பதில் இயக்கம், ஆக்க நிலை அனிச்சைச் செயலாக நடைபெற்று வந்தது. அபாயங்கள் குறைய, உணவு தேடித்திரியும் நிலை குறைய, இனப்பெருக்கத்தின் தேவை குறைய, அவன் மூளை, வேறு தூண்டுதல்கள் இன்றி, தன்னிலேயே பழைய நினைவுகளை அசைபோடவும், சமூக அளவில்  அதனைப் பகிரவும் நிகழ்காலம் சாதகமாக ஆனது. இக்காலக் கட்டத்தில்தான் , கற்பனை என்பதும், தன் அனுபவம் என்பதும் மீண்டும் மீண்டும் அவன் மூளையை ஆக்ரமிக்கத் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் இந்த நிலை தற்காலிகமானது. அவன் சுயக் கழிவிரக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் ஒரு சிங்கம் பாய்ந்து வந்தால், காங்கிலியா மனத்தையும், மூளையையும்மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இந்த கற்பனை ஆக்ரமித்த நிலை சில கணங்களினுள்ளே கலைந்து போய், மூளையில் நிரந்தர இணைவுகள் தரும் உடனடி ஆணையில் அவன் உடல் துள்ளி எழுந்து, ஓடுகிறது. நாளமில்லாச் சுரப்பிகள் அட்ரினலின், கார்ட்டிஸோல், போன்றவற்றை மிகுதியாகச் சுரந்து அவனது உடல் மிக வேகமான இயக்கத்தைக் கொள்ளக் காரணமாக அமைகின்றன.

இருபது வருடங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவில், ஓநாய்கள் துரத்த ஓடிய ஒரு மனிதன் ஒரு மரத்தில் துள்ளி ஏறித் தப்பித்தான். அவனுக்கு உதவி செய்ய வந்தவர்கள் கவனித்தபோதுதான் தெரிந்தது, அவன் கிட்டத்தட்ட 12 அடி மேல்நோக்கிப் பாய்ந்திருக்கிறான் என்பது. மனித உடல் அமைப்பில் இவ்வளவு உயரம் துள்ளுதல் அசாத்தியம். அவனது பாய்ச்சலின் பின்னே ஹார்மோன்கள் மட்டுமல்ல, காங்கிலியாவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய அவனது மூளையின் நிரந்தர இணைப்புகள் உரிய நேரத்தில், உடலுக்குத் தந்த கட்டளைகள், அவற்றை சரிவர இயக்கிய உடல் உறுப்புகள்,  பயத்தினால் ஹார்மோன்களைச் சுரக்க வைத்த அமைக்டிலா, இவையும் காரணம். சில நொடிப்பொழுதே நடைபெற்ற இந்த, உடல்= மனக்குவியலின் ஆக்க சக்தி, மனிதனால் சாதாரணமாகச் செய்ய முடியாததைச் செய்ய வைத்திருக்கிறது. 

சாதாரண பொழுதுகளில் குவியம் இந்த அளவு சாதனைகளைச் செய்வதில்லை. ஆனால் கட்டுப்பாடான , பெருமளவு பயன் தரக்கூடிய செயல்களை , மூளையின் பல பகுதிகளை இயங்க வைத்தும், சிலவற்றை இயங்காது வைத்துமாக, குவியத்திற்கான உழைப்பு பயன் தரலாம். தருகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவு.

மனத்தின் குவியம் என்பது  கவனத்தினின்று வேறுபட்டது ( Focus is different from attention). குவியம் என்பது, ’பல தூண்டுதல் காரணிகள் இருக்கையில், ஒருவர் தானாக, ஒரு செயலைச் செய்வதால் வரப்போகும்  பயனின்   உணர்தலோடு அச்செயலின்  தூண்டுதல் காரணியின்மேல் அல்லது காரணியின் இயக்கத்தின் மேல் மட்டும் தன் உணர்தலைச் செலுத்துதல்’ [B5] என்று ஒரு வகையில் வரையறுக்கப்படுகிறது. செயலைச் செய்யத் தொடங்கி, திசைதிருப்பும் ஒரு காரணியின் வசப்பட்டு,கற்பனையிலோ, பல எண்ணங்களின் தொடர்விலோ, தொடங்கிய செயலின் உணர்வற்று, கனவில் நிற்பதை உணர்ந்து, மீண்டும் செயலில் மனம் செலுத்துவது பெரும் சவாலாக பலருக்கும் உள்ளது[B6] . இவ்வாறு   மனம் திருப்பிக் குவிப்பது’  என்பதும் குவியத்தின் ஒரு நிலை. தடுமாற்றம் ஏற்படுத்தும் காரணிகளை முதலிலேயே அடையாளம் கண்டுகொண்டு, மனத்தை அவற்றிலிருந்து விடுபடவைக்கும் உத்திகளை, இயக்கப் பணிகளாக, ஒரு சடங்கின் நீட்சியாக (மூச்சை இழுத்து விடுதல், நிதானமாக சில சொற்களை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்) செய்தல், குவியத்துடன் பணி செய்தால் வரும் பயனை முன்கூட்டியே நினைவில் நிறுத்திக் கற்பனை செய்து அதனை நோக்கி மனதை முடுக்குதல் என்பனவும், பல மதங்களில் (ஆசார, நிராசார) காணக்கிடைக்கின்ற ஒன்றுதாம். இம்மதங்கள் குறிப்பாக இந்தியாவில் ( இந்து, பவுத்த, சமண மதங்கள், தாந்த்ரீகம் போன்ற மறைக்கட்டு சடங்குகள்) வளர்ந்தவை. கோல்மன் இந்தியாவின் ஆன்மீக உணர்வில் தாக்குண்டவர். எனவே அவரது சிந்தனைகளிலும், புத்தக அடுக்குமுறையிலும் இந்திய தாக்கம் விரவி வருவதைக் காணமுடிகிறது. அழிநிலை உணர்ச்சிகள் Destructive Emotions என்ற புத்தகத்தில் அவர் தலாய் லாமாவுடனான உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, புத்த, இந்து மத சிந்தனைகள் குறித்த மேற்கோள்கள் ஃபோகஸ் புத்தகத்தில் சில இடங்களில் வருகின்றன.


இதெல்லாம் நாம் அறியாததா என நாம் சந்தேகிக்கலாம். இதனைச் சொல்ல ஒரு புத்தகம் எதற்கு?
கோல்மனின் வெற்றி, இப்படி முறைகளைச் சொல்லுவதில் இல்லை. அதனை மருத்துவ, மனோதத்துவ, மூளை-மருத்துவ, ஆய்வு நிலைகளின் வளர்ச்சித் தகவல்களுடன் சேர்த்துச் சொல்லுவதில் இருக்கிறது. உதாரணமாக, கோபம், பயம் போன்ற உணர்வுகளின் கருவூலமான அமைக்டலா எவ்வாறு சிந்தனைகளில் தாக்கமடைகிறது என்பதையும், அவ்வுணர்வுகள் தூண்டப்பட்டால், செயல்நிலை எவ்வாறு தடுமாற்றமடைகிறது என்ப்தையும் அறிவியல் நுணுக்கத்தோடு விளக்குகிறார் கோல்மன். இப்படி தடுமாற்றமடையச் செய்யும் அமைக்டலாவை அமைதிப்படுத்துவதுதான் சரியான வழியென தருக்க வாதத்தில் நமக்கு தெளிவித்துவிட்டு, அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் விளக்குகிறார். மூளையின் முன்பகுதியான pre-frontal cortexல் அமைதிப்படுத்தும் கட்டளைகளை நரம்புகள் மூலம் செலுத்துவதன் மூலம் (தாக்கம் தரும் உணர்வுகளைத் தூண்டும் காரணிகளைத் தவிர்த்தல், புலன்களை அடக்கி, ஒரு சீரான, மீண்டும் மீண்டும் அடுத்து வருகின்ற செயல்களில் புலன்களைச் செலுத்துதல், தருக்க ரீதியாக, நாம் பாதிப்படையவில்லை என்று மூளையின் அமைக்டலாக்களுக்கு Pre frontal cortex மூலம் அறிவித்தல்) அமைக்டிலாவை அடக்கலாம் என்று நிறுவுகிறார்.  இவ்வாறு  புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அறிவியல் சான்றுகளும், அவற்றைத் தொடர்ந்து தருக்க ரீதியான இயக்க ஆலோசனைகளும் செயல்முறைப் படிகளாகக் கிடைக்கின்றன.

இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தில், தான் அறிந்த படிகளை எவ்வாறு கைக்கொள்வது? என்பது வாசிப்பவரின் சிந்தனை மற்றும் செயலாற்றப் பங்களிப்பில் இருக்கிறது. கோல்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் , ஒவ்வொரு விதமான பாதிப்பை வாசகரிடம் ஏற்படுத்துகின்றன, வெற்றியளவை நிர்ணயிக்கின்றன.