Sunday, April 24, 2016

பேஸ்புக்-கில் நட்பெனும் அபாயங்கள்.

நேற்று எனது நண்பர் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது பெண் போனவருடம் 12ம்வகுப்பை முடித்து காலேஜில் சேர்ந்தாள். புத்திசாலி, துறுதுறுவென்று இருப்பாள். அதோடு டேபிள் டென்னிஸ், பெண்களுக்கான மராத்தான் என்று பலவற்றிலும் முழுதுமாக ஈடுபட்டவள்.
போன செமஸ்டர் பரீட்சையின்போது ஏதோ டல்லாக இருந்தாள் எனவும், மதிப்பெண்கள் எதிர்பார்த்த அளவு வரவில்லை எனவும் நண்பர் கவனித்தார். போகிறது, கல்லூரி சூழலுக்கு இன்னும் அட்ஜஸ்ட் செய்யவில்லை போலிருக்கு என விட்டுவிட்டார். இந்த முறையும், செமஸ்டர் லீவு நேரத்தில் அதே இறுகிய முகம், தளர்ந்த , வெறித்த பார்வை.
ஏதோ சரியில்லை எனப் புரிந்து கொண்ட பெற்றோர்கள், பெண்ணோடு பேசிப்பார்த்தனர். அம்மாவிடம், அவள் அழுதுகொண்டே தனது பேஸ்புக் பதிவுகள், சாட்செய்திகளைக் காட்டினாள். எதோ ஒரு பெண்ணின் பெயர்... முதலில் அன்பான வார்த்தைகள். அதன்பின் திடீரென திட்டுகள். சரமரியாக அவளது கேரக்டரைக் குறி வைத்த ஏச்சு மொழிகள். அதோடு நீ ஒரு முட்டாள் , உன்னால இந்த எக்ஸாம் எழுத முடியாது. பெயிலாகப்போவாய்,என அடிக்கடி வசனங்கள்.
“யாருடி இது?”
“தெரியலேம்மா. யாரோட ப்ரெண்டோ என்கூட இருக்கா. போனதடவ எக்ஸாம் எழுதும்போது மட்டும்தான் இப்படி வந்தது. அதுக்கப்புறம் எழுதலை. இப்ப எக்ஸாம் நேரத்துல ..”
நண்பர் சைபர் க்ரைம் போலீஸை நாடினார். அவர்கள் இந்த ஐ.டி, சமீபத்தில் அந்தேரியில் இருந்து பயன்படுத்தப்பட்டது என்று அறிந்தனர். நூல் போட்டுப் பிடித்ததில் பயல் சிக்கினான்.
அவன் , தனது சகோதரியின் தூண்டுதலில் எழுதியதாகச் சொன்னான். அந்தப்பெண், இவளது தோழி. பள்ளிக்காலத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தவள்.
’விசாரித்ததில்’ , இவளது படிப்பில் பொறாமை கொண்டு, கல்லூரியிலாவது இவளுக்கு அதிகம் மார்க் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு மிகக்கடுமையான அதிர்ச்சி. இவளா இப்படி? என்று இன்று வரை இரு குடும்பத்திலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள்.
தெரியாதவர்கள்தான் பேஸ்புக்கில் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்பதில்லை. தெரிந்தவர்களுக்கும் உள்ளிருக்கும் பிசாசு வெளிவர முகமற்ற, போலிமுகம் சாத்தியமான சமூக ஊடகங்கள் ஒரு தளத்தைக் கொடுக்கின்றன.
ஊடகங்களில் பேச்சு ஒரு மாதிரியாகப் போனால், தயவு தாட்சணியம் பார்க்காது கத்தரித்து விடுங்கள். நிஜமான பத்து நல்ல நண்பர்கள் போதும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குரங்கோடு குதித்துக்கொண்டிருக்க உங்களுக்கு நேரம் இருக்காது. வாழ்வு பேஸ்புக்கில் வாதம் செய்வதற்கு இல்லை

பாசுரமும் குழந்தை வளர்ப்பும்

”இந்த பாசுரங்களைப் படிப்பதில் என்ன ப்ரயோசனம்? ” என்றார் புருஷோத்தமன். அவர் எனது கஸ்டமர் என்பதால் எனது  பேச்சுக்கு  ஒரு வரையறை உண்டு. மவுனமாகக் கேட்டிருந்தேன்.

”ஊர்ல , எங்கப்பா டெய்லி மூணுமணி நேரம் பூஜைன்னு உக்காருவாரு. ஒரு குழந்தை கிருஷ்ணர் விக்ரகம் உண்டு. அதைக் குளிப்பாட்டி, பூவைச்சு, என்னமோ பண்ணுவாரு. அம்மா அவ்வளவு அடுப்படி அவசரத்துலயும் சந்தனம் அரைச்சு வைக்கணும், பால் ஒரு கிண்ணில எடுத்து வைக்கணும். எவ்வளவு மெனக்கெட்ட உழைப்பு?”

“அது அவங்க விருப்பப்பட்டு செய்யற விஷயம் புருஷோத்தமன். உங்களுக்கு கஷ்டமாத் தெரியறது, அவங்களுக்கு சுகமான சுமையாக்த் தெரியலாம். உங்கம்மா எப்பவாச்சும் இது முடியலைன்னு சொல்லியிருக்காங்களா?”

“அப்பா மேல இருக்கிற பயம்னு நினைக்கறேன்” என்றார் அவர்,சிந்தித்தபடி.  தெலுங்கும் தமிழும் வளர்ந்து விளையாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

“அப்பா தமிழ் பாசுரம் பத்தி நிறைய சொல்லுவார். . நமக்குத்தான் ஒன்னுன் ஏறலை. ஆனா வருத்தமில்ல, சுதாகர். என்ன பெரிசாத் தெரிஞ்சுகிடப் போறோம். ?”

“என்ன அப்படி சொல்லீட்டீங்க?” என்றேன் சற்றே திகைத்து.

“பின்னே? குழந்தைக்கு மை கொண்டு வா, பால் ஊட்டு, குளிப்பாட்டு-ன்னு பாடறதுல அன்னியோன்னியம் இருக்கும். உணர்வு பூர்வமான பக்தி இருக்கும். அது புரியுது. ஆனா, சடங்கா மாறும்போது, தடையாகுதோன்னு சந்தேகம் வருது. ஏன் , இந்த சடங்கு இல்லாம, பாசுரத்தை ரசிக்க முடியாதா, இல்ல பக்திதான் வராதா?”

“பாசுரத்தை உள்வாங்குவதற்கு சடங்கு துணையாக இருக்கக் கூடும்.  நமது ஈடுபாடு, பாடலின் பரியச்சம், விளங்கிக்கொள்ளும் தன்மை நாளுக்கு நாள் அனுபவத்தில் மாறலாம்” என்றேன்.

“அது ஒரு சாத்தியம் என்று மட்டும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். இந்த பாசுரங்களால் குழந்தை வளர்ப்பு பலப்படுமா, இல்லை என் பக்திதான் பலப்படுமா? ஒன்றுமில்லை. நான் அவரது உணர்வை மதிக்கிறேன். ஆனா அதிகமாப் போகுதோ என்றும் நினைக்கிறேன். அவ்வளவுதான்”
அதன்பின் நாங்கள் அதைப்பற்றிப் பேசவில்லை.

ஒருவாரம் முன்பு அவருடன் மதிய உணவு.

“பொண்டாட்டி,  பிள்ளைகளோட ரெண்டு வாரம்  ஊருக்குப் போயிருக்கா. பிசாசுகளுக்கு லீவு விட்டாச்சு பாருங்க.” என்று தொடங்கினார்.

“ பெரியவ ஏழாம் வகுப்பு. ஒரு புத்தகத்தைக் கொடுத்துட்டா, ஒரு ஓரமா உக்காந்திரும். பசி ,தாகம் கிடையாது. சின்னது ரொம்ப வாலு. எங்கப்பா. பூசைக்கு வச்சிருக்கிற பழத்தை கடிச்சு வச்சிரும். பாலைக் கொட்டிரும். ஏய்னு அதட்டினா, ஒரு மாதிரி முழிச்சு பாக்கும் பாருங்க.. பொண்டாட்டி போன்ல சொல்றா , அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறாங்க. ரொம்ப செல்லம். ”

“எப்படி சொல்லுவாரு?” என்றேன் “ அதுக்குத்தானே பூசையே பண்றாரு. ”எண்ணெய்க் குடத்தை உருட்டி , இளம்பிள்ளை கிள்ளிஎழுப்பி, கண்ணை உருட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே”ன்னுதானே தினமும் கூப்பிடறாரு முன்னால வந்து நிக்கறப்போ கோவம் எப்படி வரும்? “
“இது சரியில்லன்னேன். அவ செய்யற சேட்டை, பெரியவ கணக்குல கொஞ்சம் மந்தமா இருக்கறதுன்னு என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டிருந்திருக்கா. அப்பா கோவப்பட்டு ‘இதெல்லாம் பேசாதே”ன்னுட்டாரு. குழந்தைகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு அம்மாக்காரி சொல்லக்கூடாதுன்னா.. ஓவர் இல்ல?”

“இல்ல” என்றேன் “ மத்தவங்க முன்னாடி ,குழந்தைகள் காதுபட அவங்க தவறுகளைச் சொல்லாதீங்க. அது திருத்தறதுக்குப் பதிலா, ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைக்கும்னு” நினைச்சிருப்பாரு”
“ஆங்” என்றார் வியந்து “ அப்படித்தான் சொன்னாரு. அந்த குழந்தைக்கு என்ன புரியும்? இதெல்லாம் அதுங்க மனசுக்குள்ள  போகாதுங்க. சும்மா பயப்படறாரு”
“உளவியல் வல்லுநர்களும் இப்படித்தான் சொல்றாங்க. நம்மைப் பற்றிய வார்த்தைகள்தாம் சிறுவயதில் நம்மை செதுக்குகின்றன. அவை நல்வார்த்தைகளாக  இருப்பின், நற்பண்புகள் சாத்தியம். திட்டுகள், தளர்ச்சியை, சுய ஐயத்தைக் கொடுக்கும்.” பாசுரம் தந்த பாடம் இது”

“இதுக்கும்  பாசுரத்துக்கும் என்ன தொடர்பு? சும்மா... எல்லாத்துக்கும் ஆகா ஓகோன்னுட வேண்டியது”

“கண்ணன் பால் தயிர் வெண்ணெய்ன்னு எல்லாத்தையும் திருடுவதை அறிந்தும் யசோதை சொல்கிறாள் “ சிறந்த நற்றயலார்கள் தூற்றும் என்பதாலே பிறர் முன்னே மறந்தும் உரையாடமாட்டேன்; மஞ்சனமாட நீ வாராய்” அவனது தவறுகளை அறிந்த அன்னை அதனை தனியாகத் திருத்த முற்படவேண்டுமே தவிர, பிறரிடம் குழந்தைகள் கேட்க, குறைபட்டுக்கொள்ளக் கூடாது. “ இதுங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை” என்ற சொல், குழந்தைகளுக்கு  ஒரு அன்னையிடம் எப்படி அவள் சொற்படிக் கேட்கவேண்டும் என்ற படிப்பினையைத் தரும்? அதான் யசோதையே கண்ணனைப் பற்றி பிறரிடம் பேசமாட்டேன் என்கிறாள்.  கற்கப்  பலவும் கிட்டும்.  கற்கும் எண்ணம் இருந்தால்.  “

அவர் பேசவில்லை. தலைமட்டும் இல்லை என்பது போல் ஆடினாலும், உள்ளே ஒரு சிந்தனை முளைத்திருப்பது உணர முடிந்தது.

Friday, April 08, 2016

அன்னமும் அடையாளமும்தவிர்த்திருக்கலாம்..

யாரோ, எப்படியோ அடித்துக்கொண்டு சாகட்டும் என விட்டுவிட்டு பேசாம போயிருக்கலாம். 

இரண்டுபேர் அடித்துக்கொள்ள, நடுவே மூக்கை நுழைத்து மத்தியஸ்தம் செய்யப்போக “ நீ யார்றா?” என்று கேட்கப்படுவது யதார்த்தம். அதில் எனக்கு வருத்தமில்லை.  ஆனால் “நீ இந்த ஊர்க்காரன். இந்த ஜாதியன். அதனால்தான் அவனுக்கு சாதகமாப் பேசறே” என்ற வார்த்தைகள் கொஞ்சம் நெஞ்சில் அடித்துவிட்டன. அடித்துக்கொண்ட இருவரும் சமாதானமாகப் போய்விட்டார்கள். ‘கோவத்துல என்னமோ பேசிட்டேன். சாரி” என்று சொல்லிவிட்டு திட்டியவனும் போய்விட்டான். அடையாளம் சொல்லி அடிப்பதென்பது நமது மக்களூக்கு கை வந்த கலை. 

ஒரு குறுகுறுப்போடுதான் டெராடூனுக்கு அலுவலக வேலையாகப் போய்வந்தேன். அங்கிருந்து போண்ட்டா ஸாஹிப். 45 கிமீ தூரம். இமாசலபிரதேச எல்லையில். உத்தரகாண்ட்- இமாசல எல்லையாக யமுனா நதி ஓடுகிறது. யமுனை தீரத்தில் போண்ட்டா ஸாஹிப் குருத்வாரா- சீக்கியர் கோவில். கோவிலும், புனித நூலும் ஸாஹிப் என்றே மரியாதையுடன் அழைக்கப்படும்.

இரண்டு நாள் போண்ட்டாஸாஹிப்-ல் ஒரு கம்பெனியில் வேலை. முதல் நாள் மாலையில், காலாற நடந்து போண்ட்டாஸாஹிப் கோயிலை அடைந்தேன். மனம் கனத்துக் கிடந்தது. அடையாளம்.. ’நீ ப்ராஜெக்ட் மேனேஜர். நீதான் இந்த கேடுகெட்ட வேலையை சுத்தம் செய்து எடுக்கவேண்டும். நீ ஸீனியர். .. எனவே வாடிக்கையாளர் சொல்லும் ஒவ்வொரு சுடுசொல்லையும் நீதான் கேட்கவேண்டும். நீ இந்த மதத்தவன். பிற மதத்தவர் என்ன சொன்னாலும் பொறுமையாகக் கேட்டுப் போ. நீ இந்த ஜாதி… உனக்கு இங்கு வேலை கிடையாது. வேணும்னா இந்த வேலையைச் செய்.’

நான் யாருமல்ல என்ற நிலையில் என்னை மனிதனாக எவன் மதிப்பான்? மதிப்பார்களா? அடையாளங்களற்ற நிலையில், அஜ்நபியாக, அயலானாக ஒருவன் நின்றால், அவனுக்கு என்ன அடையாளம்… அயலான் என்றா? 

”ஸர்ஜீ, தலையில் கர்ச்சீஃப் கட்டுங்கள்” 
 
ஒரு சிறு பெண் தனது கடைக்கு அழைத்தாள். கைக்குட்டைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சிகப்பு, வெள்ளை.. சீக்கியச் சின்னம் பொறித்தது, கர்ச்சீப் வாங்கிக்கொண்டு, கட்ட முடியாமல் திணறுவதைப்பார்த்து, சிரித்தபடி ஒருவர் தானே வாங்கிக் கட்டிவிட்டார். “ நீங்கள் மதராஸியா? பாத்தாலே தெரியுது. ஸாஹிப் மிகப் புனிதமானது. நீங்கள் அதிருஷ்டசாலி” 

போண்ட்டாஸாஹிப் சீக்கியர்களூக்கு மிக முக்கியமான தலங்களில் ஒன்று. காஞ்சி, சிதம்பரம் , மதுரை என்பது போல..பொற்கோயில் ஹர்மந்திர் ஸாஹிப், அனந்தபூர் ஸாஹிப் (இங்குதான் கலிஸ்தானிய Anantapur Sahib resolution நிறைவேற்றப்பட்டது). அதன்பின் வருவது புகழ்பெற்ற போண்ட்டாஸாஹிப் .  இங்கு குரு கோவிந்த் சிங் பல வருடங்கள் தங்கியிருந்து சங்கீத், உபன்யாசம் போன்றவற்றைச் செய்தீருக்கிறார். போண்ட்டா ஸாஹிப்பை சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டவுடன், பெரிய கோட்டை போன்ற அமைப்பை எழுப்பி, அங்கு இந்த கோயிலை நிறுவி அவர் தங்கியிருந்திருக்கிறார். அவரது சொந்த ஆயுதங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன. (சில திருடப்பட்டுவிட்டன என்கிறது கோயில் பதிவேடு.).

உள்ளே நுழையும்போது கவனித்தேன். ஷு, செருப்பு வாங்கி வைப்பதில் இருந்து பல வேலைகளையும் தன்னார்வலர்களே செய்கிறார்கள். எங்கும் “ ஸ்பெஷல் தர்ஷன்.. ரூ 500 ஆவும்” என்று எவரும் வந்து கிசுகிசுக்கவில்லை. சிறுபள்ளத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் கால் நனைத்து உதறி உள்ளே சென்று,  மவுனமாக ஒரு மூலையில் அமர்ந்தேன். நெய் வழிய வழிய , ’மூடநெய் பெய்து முழங்கை வழிவார’ சூடான கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது. என்னைத் தவிர அனைவரும் , வெளியே இருந்து அதே கேசரியை ஒரு இலைக்குப்பியில் வாங்கி வ்ந்து பெரிய அண்டாவில் நிறைத்தார்கள். அதைத்தான் பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கிறார்கள். ”கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என்று , பகிர்ந்து உண்டு மகிழுமாறு, இதைத்தான் ஆண்டாள் சொன்னாள். 

சே, இப்படி வெறும் கையோடு வந்துவிட்டோமே? என்ற குற்ற உணர்வில் திரும்பிப் பார்த்தேன். யாரும் வந்தவழியில் திரும்பிச் செல்லவில்லை. சரி, சுற்றி வரவேண்டும் போலிருக்கு என்று பிரதட்சணமாக வந்த போது, திடீரென அனைவரும் எழுந்து அப்படியே நிற்க, சில பாடல்களைப் பாடியபடி ‘வாஹே குரு, வாஹே குரு, வாஹே குரு” என்று பெரிய குரு சொல்ல, ஒரு முரசு அதிர்ந்தது. டம், டம் என்ற அதிர்வும், வாஹே குருவும் சேர்ந்து ஒரு ஒத்ததர்வில் ( resonance)ல் உடலெங்கும் ஒரு அதீத உணர்வு பரவ நின்றிருந்தேன்.

அதன்பின் மீண்டும் சுற்றி வந்து வணங்கி அமர்ந்தட போது மற்றொரு சடங்கைக் கவனித்தேன். என் அருகே அமர்ந்திருந்த வறுமை வியாபித்திருந்த இரு கிழவிகள், ஆளுக்கொரு  நாணயத்தை காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.  ஐம்பது பைசாவிலிருந்து , கணக்குத் தெரியாத கற்றைகளாக ரூபாய் நோட்டுகளை பலர் காணிக்கையாக செலுத்திக்கொண்டிருந்தனர். வந்த எவரும் காணிக்கை செலுத்தாது அமரவில்லை. அவரவர் சக்திக்கு ஏற்றார்ப்போல் காணிக்கை. அதன்பின்னரே பிரசாதம். தானமாக, இரவலாக அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை- எதையும். 

வெளியே யமுனையின் சில்லிப்புடன் காற்று உடலைத்தழுவ சிறிது நேரம் நின்றிருந்தேன். ஒரு வறட்சி உள்ளே ஓட, மெல்ல நடந்தபோது பெரிய வாணலி ஒன்று தெரிந்தது. மிகப்பழமையானது. இரு ஆள் அகலமும், ஒரு ஆள் உயரமுமான துருப்பிடித்த, இரும்பு வாணலி. அருகே இருந்த பலகையைப் படித்தேன். குருவின் கிச்சன். Guru ki Langar. 

இலவசமாக உணவளிக்கும் இடம். மெல்ல நடந்தேன். சங்கிலிகளால் கட்டி வரிசையை ஏற்படுத்தியிருந்தனர். கூட்டம் அதிகமற்ற நேரம். வரிசையாக பெண்களும் ஆண்களூமாக தட்டுகளைக் கழுவி வைக்க, சிலர், கை கழுவும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஒரு தட்டும், டபராவும் எடுத்துக்கொண்டு வரிசையில் தரையில் சப்பணமாக அமர்ந்தேன். என் அருகில் இருந்தவர் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனர். இடதுபுறம் கட்டிடத் தொழிலாளி ( இது அவர்களது பேச்சில் தெரிந்து கொண்டது). 

"ரொட்டி, ரொட்டி “ என்று கொண்டு வந்தவரிடம், அருகில் இருந்த ரிக்‌ஷா ஓட்டுனர், கைகளைத் தூக்கி யாசிப்பது போலக் காட்டினார். இரு ரொட்டிகளை அவரிடம் தந்துவிட்டு என்னிடம் இரு ரொட்டிகளை நீட்டினார். நான் கைகளை மாற்றி வைத்து வாங்கிக்கொண்டேன். மற்ற அனைவரும், யாசிப்பது போலவே கைகளை மரியாதையாக நீட்ட, கொடுப்பவரும் பயபக்தியுடன் கொடுத்தார். 

கட்டிடத் தொழிலாளி என்னைத் தாண்டி மற்றவரிடம் சொன்னார் “ இது குருவின் சமையலறையில் இருந்து வரும் பிரசாதம். இதனைக் கை காட்டி, யாசித்தே பெறவேண்டும். அன்புடன் வழங்கப்படும் அன்னம் இது”

மற்றவர் ஆமோதித்தார். நான் யார்? என்ன ஜாதி, என்ன மதம், என்ன வேலை செய்கிறேன்? ஒரு கேள்வி இல்லை. குருவை நம்பி உள்ளே வந்திருக்கிறாயா? உனக்கும் உண்டு அன்னம். 

எதிரே இளம் தம்பதியர் இருவர் வந்து அமர்ந்தனர். அவர்கள் பணம் படைத்தவர்களாக இருக்கவேண்டும். யார் அருகே இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை. பயபக்தியுடன் ரொட்டியை கை நீட்டிப் பெற்றார்கள். 

இது யாசிப்பல்ல.. என விளங்க சில நிமிடங்களாயிற்று. கோயிலினுள்ளே பிரசாதத்தையே , நன்கொடை அளித்தபின்னே ஏற்றுக்கொள்பவர்கள்.. தெருவில் பிச்சை எடுப்பதை அனுமதியாதவர்கள் எப்படி ,ரொட்டி யாசிக்க முடியும்> இது குருவின் பிரசாதம். அதற்கான மரியாதை, தங்குதடையின்றிப் பரவிய அன்பிற்கு, மனித நேயத்திற்கு கொடுக்கப்பட்ட மரியாதை. நான், என்ற சுய கர்வம், அடையாளம் கரைந்த நிலைக்கு ஆயத்தம். 

என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை உயர்த்தி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய்,  பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது? 

எழுந்திருக்கும்போது,கால்வலியில் தடுமாறினேன். ஒரு மாதமாக கால் முட்டு வீங்கி படுத்தி எடுக்கிறது. தள்ளாடி நடக்கையில், ஒரு இளைஞன் ஓடி வந்தான். “ஸர்ஜீ, தட்டை என்னிடம் கொடுங்க”

‘வேணாம்ப்பா” மறுத்தேன். “நானே கழுவுகிறேன்”

“ஸர் ஜீ. நாங்க செய்கிறோம். பரவாயில்லை.” தட்டை வாங்கிக்கொண்டு கைபிடித்து , கைகழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். “வழுக்கும், பார்த்து” 

அங்கு ஒரு சர்தார்ஜி இளைஞர் வாரியலால், மற்றொருமுறை சுத்தம் செய்து “இங்க கை அலம்பலாம்” என்பது போல் கைகாட்டினார். 

“எச்சித்தட்டெல்லாம் நான் அலம்ப மாட்டேன். இட் ஈஸ் வெரி டர்ட்டி.உவ்வே” என்ற பிள்ளையிடம், “பரவாயில்லம்மா. தட்டை டேபிள்ளயே வைச்சுட்டு போ. நான் எடுத்துக்கறேன்” என்ற அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது.

வெளிவரும்போது காணிக்கை கவுண்ட்டரில் ஆள் இல்லை. ”நான் எதாவது காணிக்கை கொடுக்கவேண்டும்.ஆள் வரட்டும்” என்றேன்.  ஒருவர் உள்ளே சொல்ல, அங்கிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜி “ காணிக்கையை உண்டியல்ல போட்டுட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். நான் காணிக்கை செலுத்தினேனா, எவ்வளவு ? என்றெல்லாம் பார்க்கவில்லை. 

பேண்ட் பாக்கெட்டில் எவ்வளவு பைசா இருந்ததோ அத்தனையையும் உண்டியலில் கவிழ்த்தேன். அது காணிக்கையல்ல. சாப்பாட்டுக்கு விலையல்ல. யமுனையின் குளிர்ச்சியை முகந்துகொண்டு வருடித் தழுவிய காற்றாக  ஓடிவந்த அன்பிற்கு மாற்றுச் சீர். 

வெளியே வரும்போது மனம் லேசாகியிருந்தது. அடையாளமற்று கரைவதிலும் சில நேரம் சுகம் உண்டு. அனைத்துக்கரைப்பான் நீர் என்று கெமிஸ்ட்ரியில் படித்திருக்கிறோம். அனைத்துக் கரைப்பான் வேறு ஒன்று உண்டு. அது எல்லையற்ற இம்மரபு வழி பொங்கிப் பெருகும் அன்பு.

Thursday, April 07, 2016

அல்ஸைமரும், மூளைப்பயிற்சிகளும்மனக்கணக்கு, சுடோக்கு, குறுக்குப் புதிர்கள் போன்றவை நினைவு அழிதலான அல்ஸைமர் நோயைத் தடுக்குமா?


சிவனே-ன்னு போயிட்டிருந்த என்னைசூன்னு சொல்ல வைச்ச பாவம் Kala Venkat மற்றும் Geetha M Sudharsanam அவர்களையே சாரும். நான் பண்ணலை ( காமோ கார்ஷீத், மன்யுப கார்ஷீத், நமோ நமஹ என்பார்களே அதுப்போல காமம் செய்தது, மனசு செய்தது.. நான் செய்யலை” )


கணக்கில் புலியாக இருந்த மூதாட்டி, மிக முதிர்வயதில், எப்படி நினைவு தவறினார் என்பதை கலா கூறினார். கீதா அவர்கள் , அவரது அன்னையாருக்கு, சுடோக்கு எப்படி நினைவு குவியத்தைத் தந்தது என்பதாகச் சொன்னார்.


இந்த இரு நிகழ்வுகளும் எல்லைகளாக எடுத்துக்கொண்டால், யதார்த்தம் நடுவே எங்கோ நிற்கிறது. அறிவியல் ஆய்வுகளும் தெளிவாக ஒன்றும் சொல்லிவிடுவதில்லை. கூகிளில் பார்த்தீர்களென்றால், குழப்போ குழப்பு என்று குழப்பியிருப்பது தெரியும்.

சரி, நமக்குத் தெரிந்த ஒருத்தரைக் கேட்கலாமே என்று பார்த்தால் , அவர் அதற்கும் மேலே “ சில நோயாளிகளுக்கு இது ஒத்து வருது. அது அவர்கள் எந்த அளவு , சுய சிந்தனையோடு, ஒரு முயற்சியோடு போட்டுப் பாக்கறாங்கங்கறதை பொறுத்து. ந்யூரான் பாதைகள் புதிதாக 60 வயசுக்கு மேல உருவாகுதுன்னு சொல்றாங்க. செமினார்ல கேட்டேன்” என்று விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு, ஒரு மெடிக்கல் ரெப் தந்த ஓசிப் பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அல்ஸைமர் பரம்பரை பரம்பரையாகவும் வர சாத்தியம். ஆனால் ஒரே முட்டையிலிருந்து வந்த ரெட்டைக் குழந்தைகள் டி.என்.ஏ ஒரு போலவே இருந்தாலும், அவர்கள் பண்புகள் மாறுவது போல, அவர்களுக்கு அல்ஸைமர் வரும் சாத்தியமும், வந்தால் அதன் தீவிரம், தாக்கும் காலம் என்பனவும் மாறியிருக்கும் என்கிறது ஒரு பேப்பர். அதான் எனக்குத் தெரியுமே? என்று தங்கவேலு ஜோக் நினைவு வந்தாலும், “என்ன ம****த்துக்கு எழுதறான்? ” என்ற கெட்டவார்த்தைக் கேள்வியும் எழாமல் இல்லை.

எனவே… ஆங்? என்ன சொல்லிட்டிருந்தேன்?