Friday, January 29, 2016

காரோட்டும் பெண்

”பொம்பளைங்க கோயில்ல அபிஷேகம் பண்ணக் கூடாதாம். எந்த காலத்துல இருக்கோம்?” எங்கள் கார் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. ஆரே மேம்பாலத்தில் எதோ லாரி பழுதடைந்து நின்றிருக்கிறது. பாலத்தின் கீழே சிக்னலில் பெரும் நெரிசல்.
“அங்?” என்றார் கண்ணன் ஐயர். ஓட்டுநரின் கவனமென்பது காரில் பேசுபவரின் சொற்களில் இருக்க வேண்டுமென்பதில்லை.
“அதென்ன பொம்பளைங்க கோயிலுக்குள்ள அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு பேச்சு? சிந்தனை முறைகள்ல மாற்றம் வரணும். இல்லன்னா நாம வளரவேயில்லன்ன்னு அர்த்தம்.” ஷரத் சவாண் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை மடித்தார்.
“யாரு சொல்றாங்க?” என்றார் அன்வர்.அவர் எப்பவுமே இடையில் புகுந்து முதல்லேர்ந்து வாங்க-ன்னுவார்.
“யோவ். ஷீர்டி பக்கம் சிங்னாப்பூர் சனீஸ்வரர் கோயில்ல பெண்கள் அபிஷேகம் பண்ண 175 வருஷமா தடைன்னு இருக்கு. இப்ப திடீர்னு சில பெண்கள் பூஜை பண்ணப்போக, ஊர்க்காரங்க தடுத்து, அதுக்கு பரிகாரமா இன்னொரு அபிஷேகம் பண்ணினாங்க. அங்க பிடிச்சது வினை. சில பெண்கள் போராட்டத்துல குதிக்க, பகுத்தறிவுவாதிகள் கூட்டம் நேத்திக்கு, போராடும் பெண்களுக்கு ஆதரவா அறிக்கை விட்டிருக்காங்க. அவங்க வேண்டி வந்தா, ஹெலிகாப்டர் வச்சி சிங்னாகாப்பூர் போய் இறங்கப் போறாங்களாம். ஊர்க்காரங்க எதிர்க்கறாங்க. ”
”ஆங்!” என்றார் அன்வர் வியந்து. “ஹாஜி அலி தர்காவுல பெண்கள் நுழைய அனுமதி வேணும்னு நேத்திக்கு போராட்டம்னு பேப்பர்ல படிச்சேன். என்ன திடீர்னு?”
“எவன் கண்டான்?”என்றார் கண்ணன், மேம்பாலத்தில் மெல்ல கார் ஏறிக்கொண்டிருந்தது. போலீஸ்காரர்கள் வாகனங்களை நின்றுபோயிருந்த லாரியிலிருந்து விலகிச் செல்லக் கைகாட்டிக்கொண்டிருந்தனர்.
“பகுத்தறிவுவாதிகளூக்குத்தான் தெய்வ நம்பிக்கை கிடையாதே? அப்புறம் கோயில்லயும், தர்காவுலயும் இவங்களுக்கு என்ன வேலை?”
”அன்வர்,இவர்கள் கேள்வி பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான். அது கோயிலோ மசூதியோ சர்ச்சோ இல்லை”
“பகுத்தறிவுவாதிகள் ஹாஜிஅலி போராட்டம் பத்திப் பேசவில்லை. ஒன்லி சனீஸ்வரன் கோயில்” என்றார் கண்ணன் சிரித்தவாறே.
“அதெப்படி பேசுவாங்க? இந்து மதம் மட்டும்தானே அவங்களோட இலக்கு?” என்றார் சவாண்.
திடீரென வண்டி குலுங்கியது. ஹார்ன்கள் இங்குமங்குமாக அலறத்தொடங்கின. வலது பக்கமாக , ஒரு ஹோண்டா சிட்டி கார் , பெரிதாக உறுமி, மெல்ல மேலும் வலது புறமாக நகர்ந்தது. அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள், பைக் ஓட்டுபவர்கள் காரை நோக்கி கை காட்டி திட்டிக்கொண்டிருந்தனர்.
ஹோண்டா சிடி மெல்ல உறுமி, மேலும் விலகி, சீராகி பாலத்தில் ஏறியது. கண்ணன் கண்ணாடியை இறக்கிவிட, அனைவரும் கவனித்தோம். நடுத்தர வயதினரான ஒரு பெண்மணி காரை டென்ஷனில் ஓட்டிக்கொண்டிருந்தார். இருபுறமும் வந்த வண்டிகளில் இருந்தவர்கள், அவரை நோக்கி கன்னாபின்னாவெனத் திட்டிக்கொண்டிருந்தனர்.
”அவ மேல தப்பில்ல. சரியாத்தான் ஓட்டியிருக்கா. பாருங்க, முன்னாடி பைக்ல ஒருத்தன் வழுக்கி விழுந்திருக்கான். இவ ப்ரேக்போட்டு, வலதுபக்கமா வண்டிய ஒடிக்கலைன்னா, அவன் காலி”
“அப்ப ஏன் மத்தவங்க கத்தறாங்க?” இந்த கேள்வி அன்வருக்கு மட்டுமே வரும்.
“ஏன்னா, அவ பொம்பள” என்றார் கண்ணன் உரக்க, எரிச்சலில் கிண்டலாக.
அன்வர் தன் கேள்வியைத் தொடர்ந்தார் “அட, பகுத்தறிவுவாதிங்களுக்கு இறை நம்பிக்கைன்னு ஒரு தொடர்பே இல்லைன்னா, சம்பந்தமேயில்லாம ஏன் இப்படி குதிக்கணும்? லாஜிக்காவே இல்லையே?”
“அன்வர், அவங்க ரேஷனலிஸ்ட் மட்டும்தான். லாஜிக் உள்ளவங்கன்னு சொன்னாங்களா?”
காரின் மிக அருகே ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர், ரோட்டில் சிவப்பாக வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்துவிட்டு “ பொம்பளை கார் ஓட்டறா சாப். அதான் இப்படி ஆகுது” என்று ஏளனமாகச் சிரித்து, விரைந்தார்.
“ஒரு பெண் வண்டியோட்டறதை இன்னும் நம்ம ஆட்களால பொறுத்துக்க முடியலை. இதுல மும்பை ஒரு மெட்ரோபொலிட்டன் சிட்டின்னு பேரு வேற” என்றார் கண்ணன் கொதித்து. “என் மனைவி சொல்றா. அப்பப்ப, இப்படி எவனாவது பக்கத்துல வந்து “நீயெல்லாம் ஆக்டிவா ஓட்டணுமா? பாத்துப்போ”ன்னு கத்திட்டுப் போவனாம். ரொம்ப டென்ஷனாயிருவா.”
ஜோகேஷ்வரி சிக்னலில் அந்த ஹோண்டா சிடி அருகில் நின்றிருந்தது. அந்தப்பெண்ணிற்கு நாற்பது வயதிருக்கலாம். இன்னும் படபடப்பில் இருந்தார். சட்டென ஒரு இரக்கம் தோன்றியது. என்ன அவசரமோ, அவருக்கு? சரியாக சாலை விதிகளை மதித்து ஓட்டுவதற்கே , அவர் ஒரு பெண் என்பதால் திட்டுகிற, ஏளனம் செய்கிற இந்த சமூகத்தை என்ன சொல்ல?
அன்வர் சொன்னார் “ மொதல்ல இந்த பகுத்தறிவுவாதிங்க, எல்லாருக்கும் பொதுவான இந்த சமூக இடர்களையெல்லாம் நீக்கறதுக்கு குதிக்கட்டும். அப்புறம் ஹாஜியலிக்கும், சிங்க்னாப்புர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர்ல்ல போயி குதிக்கலாம். வந்துட்டாங்க”
எங்களுக்கு பச்சை விளக்கு ஒளிர, எட்டிப்பார்த்தேன். அந்தப் பெண்ணின் கார் நின்றுகொண்டிந்தது. அவருக்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை.

Tuesday, January 26, 2016

கண்ணன் என்ற ஆசான்

மே 1992. மும்பை
அந்த பெரிய கான்ஃபரென்ஸ் ரூமில் நுழைந்ததுமே எனக்கு நடுக்கம் வ்ந்துவிட்டது. நாற்காலிகள் நிறைந்து ஆட்கள். அனைவரும் அந்த பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் மேலதிகாரிகள். ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 20வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள்.
நான் எனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது. எங்கள் கருவியின் தொழில்நுட்பம் குறித்துப் பேசி, விற்பனையை சாதகமாக்கவேண்டும். போட்டியாளர்கள் சீனியர்களைக் கொண்டு வந்திருந்தார்கள். நான்மட்டும் என் கம்பெனியின் சார்பாகப் போயிருக்கிறேன்.
“ஹலோ” என்றார் ஒரு அதிகாரி “சீனியர் யாரும் வரலையா? எங்க மிஸ்டர் அஞ்சன் டே?”
“அவர்..அவர் வேற இடத்துக்குப்போயிருக்கார். அதான் நான்..” மென்று விழுங்கினேன். இவர்கள் முன்னே எப்படி ஒரு மணி நேரம் பேசப்போறேன்?
முதலில் வந்த இருவர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அடிப்படை அறிவியலில் தொடங்கி, மாதிரிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த அறிக்கைகள் எனத் தூள் கிளப்பிக்கொண்டிருந்தனர். என்னிடம் சில ஸ்லைடுகள் , ட்ரான்ஸ்பேரன்ஸி ஷீட்டுகள் இருந்தன. பவர்பாயிண்ட் எல்லாம் வராத 1990களின் முதன் வருடங்கள்...
”அடுத்தாக ஹிண்டிட்ரான் ஸர்வீஸஸ். சுதாகர்” அறிவிப்பு வந்தது. எழுமுன் டீ வந்துவிட, ஐந்து நிமிடம் அவகாசம் கிடைத்தது. உதடுகள் உலர்ந்து, கால்கள் நடுங்கி நின்றேன். பேசுவது புதிதல்ல. என்னிடம் இருப்பதை பேசிவிடுவேன். கேள்விகள் கேட்டால்? அனுபவமின்மையின் ஆட்டம் தெரிந்துவிடுமே?
சற்றே சலசலப்பு கேட்டது. “மிஸ்டர் கண்ணன்” என யாரோ முணுமுணுத்தார்கள். திரும்பினே. அவரேதான். எனது கம்பெனியின் டெக்னிகல் டைரக்டர். எனது பிரிவின் மேலதிகாரி.
“இவரா?” என்று வியப்புடன் திகைப்பும் எழ, அவரிடம் விரைந்து சென்றேன். தோளில் தட்டினார் “ நீ தனியாக வந்திருப்பதாக அறிந்தேன். அதான் வந்தேன்”
“சார்...இதுக்கெல்லாம் நீங்க வரணுமா?” என்றாலும், என் உற்சாகம் தைரியம் மேலெழுந்தது என்னமோ உண்மைதான்.
“கண்ணன். நீங்க பேசப்போறீங்களா?’ என்றார் நிறுவனத்தின் ஒரு மேலதிகாரி.
“இல்லை” என்றார் கண்ணன். “ My boy would talk. பசங்க பேசட்டும். ”
கண்ணனுக்கு அப்பொழுது ஐம்பது வயதிருக்கும்.பெரிய நெற்றி. அதில் ஒல்லியாக தீர்க்கமாக ஸ்ரீசூர்ணம் எப்போதாவது மின்னும். சிரித்த முகம். கனத்த குரல். அவரது அறையில் குறிப்பிட்ட ஊதுபத்தி ஒன்றின் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டிருக்கும். மேசையில் ஒரு பகவத் கீதை.
என் பிரிவின் பெரும் அதிகாரிகள் அவரது செக்ரட்டரியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நிற்பதைக் கண்டிருக்கிறேன். என் அளவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை. இப்போது ஏன் திடீரென வந்திருக்கிறார்?
ஒரு உத்வேகத்துடன் எழுந்தேன். ஒரு மணி நேரம் பேச்சு. முடிவில் ஏதோ உளறப்போக, போட்டியாளர் ஒருவர் அதைக் கிடுக்கிப்பிடி போட நான் வாதிக்க ஒரு அமளி. கண்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார். அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்திருந்தனர். இறுதி வரை அவர் பேசவில்லை.
நான் அந்த ஒரு பாயிண்ட்டில் மாட்டினேன் என்றாலும், அங்கிருந்த போட்டியாளர்களில் சீனியர்களால் பாராட்டப்பட்டேன். பெரும் ஊக்கமூட்டிய தினமாக அது அமைந்தது.
வெளியே வந்தபோது, கண்ணனின் டிரைவர் அழைத்தார் . “ சார் உன்னையும் வண்டியில வரச்சொன்னாங்க”
கண்ணனின் நீல நிற ஃபியட் காரில் அவருடன் பின் சீட்டில் அமர்ந்து வருவது எனக்குக் கனவு போலிருந்தது. “சார்” என்றேன் மிகத் தயங்கி. “ எப்படிப் பேசினேன்ன்னு சொன்னீங்கன்னா...”
“குட்” என்றார் சுருக்கமாக. பல நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் கரைந்தன.
திடீரென “ நீ அந்தப் பாயிண்ட் சொன்னது சரின்னு உனக்குத் தோணுதா?” என்றார்.
“ஆமா” என்றேன் திடமாக “ இன்னும் தகவல் கிடைச்சிருந்தா எதுத்தாப்புல நின்னு கேட்டவனை ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்.”
“இதப்பார்” என்றார் “ நீ போனது எதுக்கு?”
“டெக்னிகல் பேச்சு, விற்பனை”
“அதை விட்டுட்டு ஒரு பாயிண்டப் பிடிச்சு விவாதம் பண்றது கேலிக்கூத்து இல்ல?
விழித்தேன். அவர் தொடர்ந்தார் “ என்ன கர்மம் செய்ய வந்திருக்கமோ, அதுல குறியா இருக்கணும். துரோணன் ஒர் பிராமண உடலில் இருந்த சத்ரியன். விதுரன் ஒரு சூதன் உடலிலிருந்த பிராமணன். நான் ஜாதியச் சொல்லலை. கர்ம வாசனையைச் சொன்னேன். நீ இங்க வந்தது ஒரு வைஸ்ய தருமத்திற்காக. விவாதம் செய்யும் வேதசிரோன்மணியாக இல்லை.. புரியுதா?”
அவர் இதிகாசப் புராணங்களிலிருந்து உவமைகாட்டி மேலாண்மை நெளிவு சுளிவுகளை விளக்குவார் எனக் கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு முதல் தடவை. அது என்னமோ மனதில் சட்டெனப் பதிந்து போனது. ஆனாலும், அவர் ஏன் வந்தார் என்பது புரியாமலே இருந்தது.
அடுத்தநாள் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். கண்ணன் முன்பு என் மேலதிகாரி அமர்ந்திருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது.
கண்ணன் தொடங்கினார் “ அஞ்சன் டே, இந்த வியாபரம் ஒரு போர். தெரியும்ல?”
தெரியும்” என்றார் அஞ்சன் தீனக்குரலில்.
“ தான் சுகமாக இருந்து கொண்டு, படைவீரர்களை மட்டும் போரில் அனுப்பி ஜெயித்த ஜெனரல்கள் இல்லை அஞ்சன்.. அபிமன்யு சக்ரவ்யூகத்தை உடைக்கறேன் -ன்னு போனது அவனுடைய தைரியம். பாண்டவர்கள் அவனைக் காக்காமல் விட்டது , அவர்களது தவறு. “கண்ணன் நிறுத்தினார்.
“அஞ்சன், இவன் கூட நீயும் போயிருக்கணும். . நான் போனது இவனுக்கு தைரியமூட்ட மட்டுமில்ல, மத்தவங்க”இந்த ஆள் ஏன் வந்தான்?”ன்னு கொஞ்சம் குலைஞ்சு போயிருப்பாங்க. அது முக்கியம்.”
கண்ணன் நிறுத்தினார் “வியாபாரம்ங்கற போருக்குன்னு சில தருமங்கள் இருக்கு. அவங்கவங்க தன் நிலையில தன் கருமம் என்னன்னு தெரிஞ்சு இயங்கணும்.” மேசையில் ஹோல்டரில் தலைகுத்தி நின்றிருந்த ஒரு மையூற்றிப் பேனாவால் , சதுரமான சிறிய காகிதத்தில் எதோ எழுதினார்.
“இந்த புஸ்தகம் வாங்கிப்படி” என்றார் இருவரிடமும்.
"The Art of War"-என்று எழுதியிருந்தது.
போரில் சாரதியாக வந்த கண்ணனுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று உணர்ந்த தருணம் அது. கண்ணன் சார், ஓய்வு பெற்ற பின்னும் எப்போதாவது பார்க்கும்போது அனைவரைப் பற்றியும், அவர்களது குடும்பங்கள் பற்றியும் கேட்பார். எப்போதாவது தொழில் முறையில் குழப்பங்கள் ஏற்படும்போது அவரிடம் ஆலோசனை கேட்பேன். சமீபத்தில் தொடர்பு விட்டுப் போனது.
இன்று கண்ணன் சாரின் திருமண நாள். எத்தனையோ மேலதிகாரிகள் இருந்திருப்பினும், குருவாக அமைபவர்கள் மிகச் சிலரே. இன்று கிடைக்கும் தூற்றுதல்களும், போற்றுதல்களும்.. போகட்டும் கண்ணனுக்கே.
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.

Thursday, January 14, 2016

மற்றையெம் காமங்கள் மாற்று

“ அண்ணே, இவருக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. மனுசன்னா ஒரு அன்பு வேணும். பையன் இப்ப காலேஜ்ல இருக்கான். அப்பா மாரி நான் ஆயிடக்கூடாதும்மா-ங்கறான். பொண்ணு பேசறதுக்கே பயப்படுது.” சேகரின் மனைவி கலங்கிய கண்களோடு எங்களிடம் சொல்வாள் என நானும் நண்பர்களும் எதிர்பார்க்கவில்லை.

சேகர் நல்லாத்தான் எங்ககிட்ட பேசுவார். வேலையில் சுத்தம். ஆனால் அலுவலகத்தில் சில மேலதிகாரிகளிடமும்,அவர் தம்பி, தங்கைகளிடமும், வீட்டிலும் வேறொரு முகம். சமீபத்தில் எங்கள் வட்டத்தில் ஒருவர் பதவி உயர்வு பெற்ற விருந்துக்கு அவர் வரவில்லை. அழைத்ததற்கு தட்டிக்கழித்துவிட்டார். அதே நேரத்தில், வேறொரு நண்பருடன் ஏதோவொரு உடுப்பி ஓட்டலில் இட்லி தின்றார். 

சமீபத்தில் பெங்களூரில் அடுத்த ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். ரூமிலிருந்து வெளியே போய்விட்டிருந்தார். திரும்பிவரும் வழியில், ஜனார்த்தன் ஹோட்டல் வாசலில் அவரைப் பிடித்தேன். ”ரூமுக்கு வரச்சொல்லிட்டு எங்க போனீங்க? செல்லுல அடிச்சடிச்சுப் பாக்கறேன். எடுக்கவேயில்ல?”

“ம்ம்”என்றார் ஒரு தர்மசங்கடத்துடன். அவர் முகத்தில் ஏதோவொரு தட்டிக்கழிப்பு தெரிந்தது.

“சேகர்... என்ன ப்ரச்சனை? உங்க மனைவி கிட்டத்தட்ட அழற நிலையில உங்களைப் பத்திச் சொல்றா. கலியாணமானப்போ நீங்க ரெண்டுபேரும் இருந்த அன்னியோன்னியமென்ன.. இப்ப ..”


‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா எதையோ நினைச்சுகிட்டு சொல்றா. மெனோபாஸ் நேரம்.. அதான்”

இருவரும் , வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் ஓரமாக நடந்தோம். “ஊராய்யா இது? கொஞ்ச வருசமுன்னால, ரோட்ல நடக்க முடிஞ்சது. இப்ப ப்ளாட்பாரத்துலயும் டூ வீலர் நிறுத்திவச்சிருக்கான். இங்க பாரு.” பேச்சை மாற்ற முயல்கிறார் என்பது புரிந்தது.


“என்ன ப்ரச்சனை சேகர்? நல்லா இருந்த வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கிறீங்க? உங்க தம்பி, தங்கையெல்லாம் உங்கமேல உயிரையே வச்சிருக்காங்க”

“ஏறிப்போன எவனும், ஏணிக்கு மரியாத செய்வானா? நான் அப்பிடியேதான இருக்கேன்?” 

திகைத்தேன். “ யார் என்ன சொன்னாங்க இப்ப?”

“ஒண்ணா ரெண்டா?நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர இருந்த பைசாவுல, தம்பியச் சேத்துவிட்டேன். அவன் இப்ப யு.எஸ்ல இருக்கான். தங்கச்சிக்கு, அமுதாவோட ரெண்டு சங்கிலியப் போட்டுத்தான் கலியாணம் செஞ்சு வச்சேன். அவ இப்ப அபுதாபில. எப்பவாச்சும் எங்கிட்ட’யும்’ பேசுவாங்க. நன்றிகெட்ட உலகம் சார் இது. பேசாம, அப்பாகிட்ட ‘நீங்க உங்க பிள்ளகளைப் பாத்துக்கோங்க. என்னை எப்படி கொஞ்சமா படிக்க வைச்சீங்களோ, எப்படி என் ஸ்காலர்ஷிப் பணத்துல தீபாவளிக்கு துணி எடுத்தீங்களோ, அந்தமாதிரி இவங்களையும் நடத்துங்க”ன்னு சொல்லியிருக்கணும். இப்ப நான் கீழ இருக்கேன். அவங்க எல்லாம் மேல போயாச்சி. அண்ணன் எல்லாம் ரெண்டாம் பட்சம்தான்”

“அப்படியெல்லாம் இருக்காது சேகர். வேற உலகம். வேற முக்கியங்கள். ”அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தனது உக்கிரமான சிந்தனைகளில் முழுகியிருந்தார். 

திடீரென “ இஸ்க்கான் கோவில் போலாமா?” என்றார். “இப்பவா?” தயங்கினேன். திரும்பி வர நேரமாயிடுமே? நான் எதுவும் சொல்லுமுன்னே ஒரு பச்சைக்கலர் ஆட்டோவை அழைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் ,ஆட்டோவின் ஒலியை மீறி சத்தமாக தனது ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டு வந்தார். 

“.... இப்படி மச்சினன் சொல்றான். அங்? இவன் படிப்புக்கு எம்புட்டு செலவு பண்ணியிருப்பேன்? அமுதா அழுதான்னு, என் ம்யூச்சுவல் ஃபண்டு பைசாவெல்லாம் எடுத்து மூணே நாள்ல அவனுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன். படிடா-ன்னு. இப்ப ? அவன் கொழுந்தியா கலியாணத்துல “வாங்க”ன்னு சுருக்கமா ஒரு வார்த்தை சொல்லிட்டு என் தம்பி தங்கச்சிகிட்ட பேசப்போறான். ஸ்டேட்டஸ் வேண்டியிருக்கு ஆட்களுக்கு”

“சேகர்” என்றேன் பொறுக்க முடியாமல். “இதுல பலதும் நீங்க சித்தரிச்சுகிட்டதுதான் இருக்கும். அவங்க செஞ்சிருக்கலாம். மறுக்கலை. வெளிப்படையா அவங்ககிட்ட பேசிடறது நல்லது. மனசுல வைச்சு மறுகாதீங்க”

“என்ன மறுக? என் பையன்கிட்டயும் அதான் தள்ளி நிக்கறேன். இவனாச்சும் புத்திசாலித்தனமா பிழைச்சுகிடட்டும்”

“ஆனா, அவன் உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கான். தெரியுமா உங்களுக்கு?” அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒரு விதமான பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும் உங்ககிட்ட வந்திருக்கு. தவறுன்னு சொல்லலை. இயல்புதான். நாம வளத்தது மேல போய், கண்டுக்க மாட்டேங்கறது, அவங்களோட குறைபாடு. உங்களோடது இல்ல.”

“எவன் எவனெல்லோமோ ஜி.எம் ஆறான்...”

“ உங்களுக்கு ஆகணும்னா நீங்க இந்த வெறியை வேலைல காட்டுங்க. வீட்டுல நல்லாயிருங்க. .”

மெல்ல மெல்ல நூற்று எட்டுப் படிகள் ஏறத்தொடங்கினோம். ஒரு பேச்சு பேசாமல் ஏறுவது நல்லது என்பதால் அமைதியாக இருந்தோம்.
ஆரத்தி தொடங்கியிருந்தது. சேகர் இறுகி நின்றிருந்தார். துளசிமணி மாலையை யாரோ கொடுக்க, சப்பளமிட்டு அமர்ந்தோம். 

“அவன் கிட்ட விட்டிறுங்க. பழையசோறு தின்னு காலேஜுக்குப் போன நம்மள இன்னிக்கு சுடுசோறு திங்க வச்சதும் அவந்தான். நடந்து போன நம்மை கார்ல போகவச்சவனும் அவந்தான். நீங்களும், அவனுமான உறவுமட்டுமே நிஜம். “
“அப்ப மற்றெதெல்லாம்?” என்றார் கிண்டலான வறண்ட குரலில்.

“காமங்கள்.. ஆசைகள். எதிர்பார்ப்புகள்..”

“இதை என்ன செய்யணும்ங்கறீங்க? மனுசன்னா எதிர்பார்ப்புகள் இருக்கும். உங்களுக்கும் இருக்கு. “

“ஆமா இருக்கு” என்றேன் திடமாக “எல்லாருக்கும் இருக்கு. இங்க ஒன்றேயொன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள். இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்” வேறெந்த உறவும் உற்றமும் நிஜமல்ல. அதுல வர்ற கஷ்டங்களை ஏன் நினைக்கணும்? “

“இந்த எதிர்ப்பார்ப்புகள் தப்புங்கறீங்களா?”

“இல்ல. ஆனா இவை மாறணும்..அவன் மாற்றுவான்.. மற்றையெம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்”

“போகலையே சுதாகர்? நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்குது. என்ன உறவுன்னு தோணுது. நன்றிகெட்ட ஜென்மங்க:”

“விடுங்க. ” என்றேன். “ இந்த எண்ணங்களையும், இனிமே வர்றதையும் அவன் அழிச்சுப்பான். அதான் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினிற் தூசாகும்” அவங்கிட்ட உங்களுக்கு இருக்கிற பக்தியென்னும் தீ அதையெல்லாம் அழிச்சிறும். “

அவர் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. “ஏன் திடீர்னு இங்க வரணும்னு கேட்டேன்னு தெரியலை. என்னமோ தோணிச்சு. நான் ஒண்ணும் சாமியை வேரோடு புடுங்கற ரகம் இல்லை. அப்படியும்..ஏன்?”

நான் ஏதோ சொல்லுமுன் அவரே தழுதழுத்த குரலில் சொன்னார். 


“இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்” 

சில நிமிடங்கள் கழித்து ஓரக்கண்ணால் பக்கத்தில் பார்த்தேன். அவர் கண்கள் மூடியிருந்தன.

Saturday, January 02, 2016

பாட்டி சொன்ன பிரபந்தம்



"மார்கழின்னா திருப்பாவை, திருவெம்பாவைன்னு எல்லாச் சேனல்கள்லயும் காலேல காட்டறாங்க. கேக்கறப்ப புரியுது , ஆனா அப்புறம் மற்ந்து போவுது”

குருநாதன் என்னை விட சில வருடங்கள் இளையவன். ஆனாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகிய நல்ல தோழன். இப்படி அவன் சொன்னதும் சற்றே வியந்துபோனேன். 

ஏனெனில், குருநாதன் படித்து வளர்ந்தது தமிழகச் சூழலிலல்ல. ஆந்திராவில் , அவனது அப்பா மின்சார உற்பத்தி ப்ராஜெக்டுகளில் பணி செய்தவர். அதன்பின் ஹைதராபாத் வாழ்க்கை. திருப்பாவையெல்லாம் கேட்டிருக்ககூட சாத்தியங்கள் குறைவு. எனவே, மண்ணின் கலாச்சாரம் பற்றிய உரைகளில் மெல்ல நகர்ந்து போய்விடுவான், தவிர்த்துவிடுவான். 

“இன்னிக்கென்ன திடீர்-னு?” என்றேன். 

“இல்ல, சரோஜா சொன்னா.. என்ன இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்க,பிள்ளைங்க நம்மப் பாத்து வளருதுங்க. அதுகளூக்கு வேர்ப்பற்று வரணும்னா நாமதான சொல்லணும்?” சட்டுனு இந்த வார்த்த என்னமோ உள்ள அசைச்சிருச்சு, சுதாகர். நாம மேலோட்டமா, சினிமா, அரசியல், ட்விட்டர், பேஸ்புக்குனு வாழ்ந்து போறோமோ? யோசிச்சுப் பாத்தா, வார விடுமுறை கழிக்கிற பழக்கங்கள்ல ஒரு வெறுமைதான் தெரியுது.”

அவன் தொடர்ந்தான். “நேத்தி ராத்திரி, பொண்ணுகிட்ட  ஏன் வாட்ஸப்புல பழியாக் கிடக்கற?ன்னு குரல் உசத்திக் கேட்டுட்டேன் . நீயும்தான சாட்ல இருக்கே?-ங்கறா. சரோஜா அவள அதட்டப்போக.. அப்படி இப்படி விவாதம்.. அதுல வந்த உணர்வுதான் இது”

“சரி. இதெல்லாம் படிக்க நாளாகும்ப்பா. மெதுவா ஒண்ணொண்ணா ஆரம்பிச்சுப் பாரு. பொறுமை வேணும் ஆனா”

“எனக்குத் தமிழே  படிக்க வராதே?” அவனது இயலாமையின் அடித்தளம் புரிந்தது.

“சரி, நிறைய சொற்பொழிவுகள், சி.டிலயே கிடைக்குது. இல்ல காலேல டி.வில வருது. கேட்டுப்பாரு. பிள்ளைங்களும் ஒரு பழக்கம் வர்றதுல கேட்டுப்பழகும்”

“சி.ஏ இண்ட்டெருக்கு எப்படிப் படிக்கணும், மேத்ஸ் பேப்பருக்கு எப்படி தயார்பண்ணனும்ங்கற லெவல்லதான் நான் நிக்க முடியும். ஆனா, அதை ஒரு கோச்சிங் கிளாஸ்ல என்னை விட நல்லாச் சொல்லிக்கொடுத்துருவாங்க. எனக்கு...” நிறுத்தினான்.

“ஒரு தகப்பனா, என்னால் மட்டும் காட்ட முடிகிற வாழ்க்கை, வேர்ப்பற்று எல்லாம் காட்டத் தவறிட்டேனோ? இனிமே முடியுமா? என்ன மரியாதை இருக்கும் என் பிள்ளைகளுக்கு எங்கிட்ட? ஸ்கூலும், காலேஜும் அவங்களை வாழ்க்கைக்குத்  தயார் பண்ணிடுது. ஆனா எப்படி வாழணும்ங்கறத நாமல்ல எடுத்துக்காட்டா நின்னு காட்டியிருக்கணும்? எனக்கு.. எனக்கு முதியோர் இல்லம்தான் சுதாகர். தெளிவா தெரியுது” 

“இல்லப்பா” என்றேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு விரக்தியின் நீட்டலில் எதையோ சிந்திக்கிறான். நல்லதல்ல. 

“உனக்கு எதாவது பழைய செய்யுள், பாட்டுன்னு தெரியுமா? அறஞ்செய விரும்பு,, ஆறுவது சினம்.. இந்த மாதிரி”

இல்லையெனத் தலையசைத்தான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தான். கை நீட்டி குலுக்கி “சரி பாப்போம்” என்று சொல்ல எத்தனித்தவன் எதையோ நினைத்து நின்றான்/

“எங்க பாட்டி ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. சமயபுரம் பக்கம் எங்க கிராமம். எப்பவாச்சும் பாக்கப் போவோம். பாட்டி உக்கார வைச்சு இந்த பாட்டு பாடுவாங்க..அம்ம்ம்.. “ நினைவு கூர்ந்து, பிறர் கேட்டுவிடாதவாறு வெட்கத்துடன் ஒரு புன்சிரிப்புடன் வரிகளைச் சொன்னான். சொன்னான் அல்ல, இழுத்துப் பாடினான். சொற்கள் அந்த ராகத்தில் மட்டுமே நினைவில் நின்றிருக்கின்றன. 

“கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....ஏஏஏ
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவேஏஏ”

“அப்புறம்.. மறந்துபோச்சே. வரிகள் கிடைச்சா மடமடன்னு ஞாபகம் வந்துரும். இத எங்கபோய்ப் பிடிக்க?” என்றான் அயர்வுடன். எனக்கு அப்பாடல் வரிகள் பிடித்துப் போயின. பின்னாளில் பல சொற்கள் மறந்தும்போயின.இது நடந்து  ஒரு வருடமாகிவிட்டது என்பதே மறந்து போனது.

அண்மையில் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்களது புத்தக அலமாரியிலிருந்து எடுத்து வந்த அஷ்டப்பிரபந்தம் புத்தகத்தை கவனமாக இருநாள்முன் கையிலெடுத்தேன். 1957-ல் முர்ரே & கம்பெனி, ராஜம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட புத்தகம்.. அங்கங்கே காகிதம் ஒடிந்து போயிருந்தது.
அதில் திருவரங்கக் கலம்பகம் பகுதியிற் புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது.

”கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதோர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த வனந்தொறும் அதிசயம் உளவே”

”குரு” என்றேன் போனில் பதட்டமாக ““வாட்ஸப்ப்ல உனக்கு ஒரு போட்டோ அனுப்பறேன் உங்க பாட்டி சொல்லிக்கொடுத்த வரிகள். அத மட்டும் படிச்சுக்கோ. போதும். ”

“அஹ்?!” என்றான் ஒரு வியப்புடன். ”இது என்ன? திருப்பாவையா?”

“அஷ்டப் பிரபந்தம். எதுவா இருந்தா என்ன? இதப் பிடிச்சு , மெள்ள மெள்ள மேல ஏறிடலாம். “

“ஆமா, என்ன?” என்றான் குரு. அவன் குரலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. 

பாட்டிகள் இறந்தபின்னும், வேரைத் தேடிப்பிடிக்க துணை நிற்கிறார்கள். நாம கொஞ்சம் நினைவுகளை தோண்டி, நடப்பில் புத்தகங்களைப் புரட்டினால் போதும். அதைவிட.. அனுபவத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.



வேலை போம் வேளை -



சிரீஷ் காமத் தற்கொலை செய்துகொள்வார் என கனவிலும்  நினைத்துப்பார்க்கவில்லை, பத்துவருடம் முன்பு என்னுடன் வேலை செய்தவர் அவர். நாங்கள்  வேலை மாறிச் சென்றபின், பழைய கம்பெனி சில காலம் வரை இருந்து , தற்போது முழுதுமாக மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்த சிலர், முதலாளியிடம் இருந்த விசுவாசம் தங்களைக் காப்பாற்றும் என உறுதியாக நம்பினார்கள். திடீரென்று, ஒரு நாள் கடை மூடப்படும் என்றோ, தங்களுக்கு வேலைபோகும் என்றோ அவர்கள் நினைத்துப்பார்க்கவேயில்லை. அவர்களில் எங்களது மேனேஜர் சிரீஷ்ஷும் அடங்குவார்.
விசாரித்ததில்,  கம்பெனி முதலாளி,  ஆறு மாசமுன்னாடி சிரீஷை கூப்பிட்டுவிட்டு ”இன்னும் ஒரு மாசத்துல நீங்க போலாம். வேலையில்ல”ன்னாராம். அதிர்ந்து போய் சிரீஷ், ’ஒரு மாசத்துல என்ன செய்யமுடியும்?’ என்று கேட்க, ‘ முன்னாடியே யோசிச்சிருக்கணும். வெணும்னா, ரெண்டு கம்ப்யூட்டர் எடுத்துக்கோ” என்று முதலாளி சொன்னதாக அறிகிறேன்.
சிரீஷுக்கு ரெண்டு மகன்கள். மனைவிக்கு வேலையில்லை. 50வயது ஆக சில மாதங்களே இருக்கும்வேளையில், அதே பதவியில், அதைவிட அதிகமாகவோ, அதே அளவோ சம்பளம் கிடைக்க எங்கெங்கோ அலைந்தார் சிரீஷ். வேலை இல்லை என்று தெரிந்ததும், அடிமட்ட விலையில் கம்பெனிகள் அவரை வேலைக்குக் கேட்கத் தொடங்கின. மனம் வெறுத்துப் போனார். நண்பர்களைத் தவிர்த்தார். மெல்ல மெல்ல தன்னுள் குறுகத் தொடங்கினார். நாலு மாதமுன்பு விபரீதமான முடிவுக்கு வந்தார்.
இது பலரும் செய்யும் தவறுதான். ஏதோ கம்பெனி தன்னால் மட்டுமே நடக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றம், சிறு சிறு வெற்றிகளில், மரியாதைகளில் ,புகழாரங்களில் வந்து விடுகிறது. எனக்கும் கம்பெனிக்கும் ஆதிகாலப் பழக்கம் என்ற நினைப்பு , திடீரென ஒருநாள் கம்பெனி விலகிச் செல்கையில் தாங்கமுடியாத திகைப்பு , துயரில் ஆழ்த்துகிறது.
சிறப்பு மன நிலை ஆலோசகர்கள்,  மேற்கத்திய உளவியல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் ,அரசு மன வளத் துறைகள்,தன்னார்வல நிறுவனங்கள் இதில் கைகொடுக்க முன்னணியில் நிற்கின்றன. ஆட்களை வருவி - விரட்டு என்ற பாலிஸியில் இருக்கும் கம்பெனிகள் நிறைந்த நாடுகளில், இந்த உளவியல் பிரச்சனையை சமாளிக்க அதிக கவனம் தேவைப்படுகிறது. இந்தியா இதில் விதிவிலக்கல்ல. ஆனால் , இதற்கென படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் மிகக்குறைவு.
உணர்வுப் படிகளின் வடிவமைப்பு:
2008ல் அமெரிக்காவில் திடீரென பலர் வேலை இழக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்ட போது , ஆலோசகர்கள் பயன்படுத்திய காணொளிகள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக டெக்ஸாஸில் ஒரு முதிய ஆலோசகர் சொன்ன உணர்வுகளின் படிகள் இவ்வாறாக இருந்தது.
”முதலில் அதிர்ச்சியில் நம்ப முடியாது. ’இது எனக்கு நேர்வதல்ல, இது மாயை’ என்ற எண்ணம் வரும். அதன்பின் திகைப்பு , மூளை மரத்துப் போகச் செய்யும் உடல் உபாதைகளைக் கொண்டு வரும்.தலை சுற்றி விழுதல், தடுமாறுதல், மாரடைப்பு, மூச்சுத்திணறல், ரத்தக்கொதிப்பு , படபடப்பு மிக சாதாரணம்.
அதன்பின் கோபம் யார் யார் மீதெல்லாமோ பொங்கியெழும். ’பெங்களூர்க்காரன் என் வேலையைப் பறிச்சிட்டான்’. என்று எல்லா இந்தியர்களையும் சுட்டுத்தள்ளத் தோன்றும். மேனேஜ்மெண்ட் மீது கேஸ் போடத்தோன்றும். மனித வள அதிகாரியின் சட்டையைப் பிடித்து உலுக்கத் தோன்றும். இதெல்லாம் சிலர் செய்தும்விடுவார்கள்.
இதைத் தாண்டிய நிலை. ஒரு சுய இரக்கம்.. ”என்னால் என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நான் ஒரு தோல்வி” என்ற எண்ணம். கண்ணீர் விட்டு அழ வைக்கும். மோசமாகப் போனால், குடிக்கவும், போதை எடுக்கவும் வைக்கும்.
வீட்டில் எரிச்சல் தோன்றும். அருகிலிருப்பவர்களிடம் கோபமாகப் பேச, தாக்கத்தோன்றும். இநித நிலையும் ஆபத்தானது.
இதைத் தாண்டி “ யார் என்ன சொல்வார்கள்? என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்று குறுகத் தோன்றும் நிலை. இதிலாவது அவர்கள் எங்களைப் போன்ற ஆலோசகர்களிடம் வந்து சேரவேண்டும். இதில் சற்றே பண்பட வைக்க, கேட்க வைக்க, நிதானமாக சிந்திக்க வைக்க எங்களால் முடியும்”
இந்த படிநிலைகள் அனைத்தும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பொதுவானவையாகவே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு , கீழே கொடுத்திருக்கும் சுட்டியில் பாருங்கள். அனைத்தும் , மேலே குறிப்பிட்ட படி நிலைகளை கிட்டத்தட்ட ஒருபோலவே வரிசைப்படுத்தியிருப்பார்கள்.
வேலை குறித்த கருத்துகள்:
ஒரு அபாயம் என வரும்போது, உலகளவில் மனிதர்களின் எதிர்வினை ஏறக்குறைய கணித்துவிடக்கூடியதாக இருக்கிறது. வேலை என்பதை நாம் நமது அடையாளமாக, நமது இருத்தலின் ஆதாரமாக, எதிர்கால அக மற்றும் பொது வாழ்வின் பாதுகாப்பாகக் கருதுகிறோம். நீங்கள் யார்? என்ற கேள்விக்கு பொதுவாக ‘நான் ஒரு மேனேஜர், ப்ரோக்ராமர்” என்று செய்யும் வேலையையே சொல்கிறோம்.
ஒருவிதத்தில் இது வருணாசிரம தத்துவ வெளிப்பாடுதான். செய்யும் வேலையை வைத்தே பிரிவுகள் அமைந்திருந்த காலம் திரிந்து, அதனையே சமூக பிரிவினையாகவும் விகாரமாக்கியது வேறு. பணியின் மூலமே மனிதர்களை சமூகம் அடையாளம் கண்டது போக, மனிதனே, தனது பணியின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது வருணாசிரமக் கொள்கை உள்ள/அற்ற அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.
வேலையிழப்பின் தாக்கம்
எனவேதான், பணி நீங்கும்போது அடையாளமிழப்பதான அதிர்ச்சி அனைத்துத்தர மக்களுக்கும் தோன்றுகிறது. சில உளவியல் வல்லுநர்கள் பணி இழப்பை துக்கமாக (grief)  நாம் அனுட்டிப்பதாகச் (mourning) சொல்கிறார்கள். உறவினரின் இழப்பை உள்ளமும் உடலும் துக்கிப்பதின் மூலமே நாளடைவில் சமன்செய்துகொள்கிறது. துக்கம் அனுட்டிக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பல மத சடங்குகள் சொல்கின்றன. துக்கிப்பது சில நாட்கள் முதல் மாதங்கள் வரை நீட்டிக்கலாம். அதன்பின்னும் நீட்டித்தால், தகுந்த மனவியல் ஆலோசகரை அணுகுதல் அவசியம்.
இதேதான் பணி இழப்பிற்கும். சடங்குகள் இங்கு இல்லையே தவிர, இழப்பின் அதிர்ச்சி , மரணத்தின் அதிர்ச்சிக்கு ஒப்பானதுதான் என்பதன் ஆதாரங்களைக் காண்கையில் சற்றே வியப்பாகவும் இருக்கிறது. துக்கிப்பதன் முதல் படியாக, ‘ உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்கள். ”பணி இழப்பில் அதிர்ச்சியும் அதன்பின் வருந்துதலும் இயல்பே. அதனைத் தடுத்து, ஒன்றும் நடக்காததுபோல் இயல்பாக இருக்க முயற்சிக்காதீர்கள். இரண்டாவதாக,  உங்கள் உணர்வுகளைச் சரியான போக்கில் வெளிக்காட்டுங்கள். தகுந்த நண்பர்களிடம் வருந்து அழுவது சரியானது. அவர் ஆலோசனை வழங்கத் தேவையில்லை. நீங்கள் சொல்வதை உள்ளன்போடு, புரிதலோடு அமைதியாகக் கேட்பவராக இருந்தால் போதும். “ என்கிறது ஒரு வலைத்தளம்.
இதற்கு அடுத்த நிலையில் ஆலோசகரிடம் செல்வது நல்லதுதான். ஆனால் நாம் செய்யமாட்டோம். உடனடியாக வேலை தேடுவது, வங்கியில் எத்தனை பணமிருக்கிறது என்பதைப் பார்த்து, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வேண்டாத செலவுகளைக் குறைக்கவும் தோன்றும்., கார் கடனை உடனே அடைத்து, காரை மீட்பது, அல்லது விற்பது, கிடைத்த பணத்தை வட்டிக்கு வங்கியில் இடுவது, அல்லது வேறு கடனை அடைப்பது என்று செய்யத் தோன்றும். இது இயல்பானதே” என்கிறார் ஒரு உளவியலார்.
நிதி நிலை ஆளுமை
இப்படிகளில்தாம் நமது நிதி நிலைகளைக் கவனிப்போம். ஆனால், உணர்ச்சிப் பொங்கலில் இயங்காமல், நிதானமாக நிதிநிலையைப் பார்ப்பது சற்றே கடினம். அதனைச் செவ்வனே செய்ய, சில நிதி ஆலோசனை வல்லுநர்களை நாடலாம். சில நேரங்களில் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போகவும் சாத்தியமிருக்கிறது. அப்படிப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ( கணவர்/மனைவி/ பிள்ளைகள்) இதனை ஏற்றெடுத்துச் செய்யவேண்டும். இதற்கு வளமான ஆரோக்கியமான குடும்பச்சூழல் அவசியம். நிதி நிலையைக் குறித்து வீட்டில் பகிரங்கமாகப் பேசுவதும், ஒருவர் செய்யத் தவறும் பணியினை யார் எடுத்துச் செய்யவேண்டும் என்பதான ஒப்பந்தங்களும் குடும்பத்தில் அவசியம். பொதுவாக இந்தியக் குடும்பங்களில் கணவன் என்ன நிதி ஆளுமை முயற்சிகளை ஏற்றெடுத்திருக்கிறான் என்பது மனைவிக்குக்கூடத் தெரியாது. பெண்கள் பொதுவாக, இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை “ அவரு பாத்துக்குவாரு. இதெலெல்லாம் நான் தலையிடறதில்ல” என்பது ஆரோக்கியமான பதிலல்ல.
உணர்வுப் பொங்குதல்களும் அறிகுறிகளும்
இயலாமையில், எரிச்சலும் கோபமும் வீட்டில் வெடித்தால், ஆலோசகரை உடனடியாக அணுகுவது அவசியம். ஒவ்வொரு நாளும் எங்கு வேலை வேட்டைக்குச் செல்லவேண்டுமென்பது முன்கூட்டியே திட்டமிடப்படவேண்டும். அதில் செய்யவேண்டிய செலவினை வீட்டில் இருப்பவர்கள் துச்சமாகப் பேசுதலோ, உடல் மொழியில் காட்டுவதோ கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும் “ அங்க வரை டாக்ஸில போணுமா? ட்ரெயின் பிடிச்சு இங்க வரை போயி...” என்பது “ எனக்கு வேலையில்லைன்னு குத்திக் காட்டறா” என்பதாகத்தான் பொருள்படும்.
இதனைத் தாண்டி வீட்டில் வன்முறையோ, அல்லது சுய இரக்கத்தில் பேசுவது, அழுவது போன்றவையோ இருப்பின், கட்டாயம் உளவியல் ஆலோசகரை அணுகவேண்டும். இது உயிருக்கே ஆபத்தானது. இதன் அறிகுறிகள் பேச்சிலும், நடத்தையிலும், தெரியும் என்கிறார்கள். உணவை தள்ளுவது, தனியாக இருப்பது, நண்பர்களையும் வீட்டில் உள்ளவர்களையும் தவிர்ப்பது, தற்கொலை முயற்சிகள் பற்றிப் பேசுவது என்பவை கண்கூடான அறிகுறிகள். சிரீஷ்ஷின் வீட்டில் இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளத் தவறிப்போனார்கள். விளைவு இன்று  அவர் இல்லை.
இது தாண்டிய நிலையில் சுய இரக்கத்தில் பேசுவதிலாவது, வேலை மற்றும் உளவியல் வல்லுநர்களை சந்தித்தால், அவர்கள் உதவமுடியும். ’தனிமையைத் தவிருங்கள். கொடை இயக்கங்களில், தன்னார்வலராக சற்றேனும் உடல் இயங்கப் பணி செய்யுங்கள். நண்பர்களை அதிகம்  சந்தியுங்கள். Linked In, facebook, twitter போன்ற சமூக வலைத்தடங்களில் நண்பர்களைப் பெருக்கி அவர்கள் மூலம் , தயக்கமின்றி உதவி கேளுங்கள்’  என்கிறார்கள் பல வல்லுநர்கள்.
எதிர்மறை என்ணங்களின் கண்ணி வலை
”வேலையினின்று நீக்கிய கம்பெனி மீதோ, அதில் இருந்த ஆட்கள் மீதோ வன்மம் வைப்பதை தவிருங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல” என்ற அறிவுரையை, மும்பையில்  உளவியல் வல்லுநர் ஒருமுறை சொல்லக் கேட்டேன்.  இதனை அவரது வாட்ஸப் குழுவிலும் அடிக்கடி சொல்லி வருகிறார்- இன்றும். ”மிகப்பெரிய வெறுப்பினை மனதில் சுமந்து கொண்டு , இயல்பாக வாழ முடியாது. இது அல்ஸரை விட மோசம். வயிறு எரிந்துகொண்டே இருக்கும்”. இந்த எண்ணங்கள் ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு மனிதனைக் குறித்தான எதிர்மறை எண்ணங்கள், ஒரு அமைப்பினைக்குறித்து வளரலாம். ஒரு அமைப்பினைக் குறித்த எண்ணங்கள், தனிமனித வன்மமாக உருவெடுக்கலாம். இவற்றின் தொடர்பைத்துண்டிப்பது, அவற்றை முளையிலெயே களைவது , உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும் தேவையானது.
புதிய பாதைகள்?
கணனித்துறையிலும், ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட்டிலும் மட்டுமே பணி செய்திருந்த மும்பையைச் சேர்ந்த வெங்கட் ஐயர் ,  விவசாயம் பற்றி ஒன்றும் அறியாதவர் .அவரது ஆர்வம்  வழிகாட்ட, உந்துதலில், வேலையை விடுத்து,  ஒரு வருடம் போராடி, இரண்டாம் வருடம் முதல் நல்ல லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார். “ எனது ஆர்வம் எதில் இருக்கிறதோ அதில் பணி செய்திருக்கவேண்டும். இப்போது முழுமையடைந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார் கிருஷ்ணன், லிவ் மிண்ட் பத்திரிகை பேட்டி ஒன்றில்.  ஆர்வம் எதில் இருக்கிறது, எனது வாழ்வு எப்படி இனி செல்லவேண்டும் என்பதைக் கண்டறியவும், வேறு பாதையில் பயணிக்க திட்டமிடவும், இந்த அதிர்ச்சி ஒய்வு, புதிய நம்மைக் கண்டுபிடிக்க உதவக்கூடும்.
பணி என்பது இன்றைய காலத்தில் நிரந்தரமனதல்ல, நமது அடையாளமுமல்ல. இதனைப் புரிந்துகொண்டு, செய்யும் பணியில் மட்டும் மனதைக் கொட்டிப் பணிசெய்து, வேறு பணி கிடைக்குமானால் அதில் முழுமனத்தையும் செலவிடத் தயங்காது இருக்க, பழகிக் கொள்ளவேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு இந்த உளவியல் உத்திகள் சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.  இது காலத்தின் மாற்றம் மட்டுமல்ல, கட்டாயமும் கூட.
உசாத்துணைகள்
http://www.imaginehopecounseling.com/fullarticles.php?ID=30
http://www.counselling-directory.org.uk/counsellor-articles/depression-in-the-recession
www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Retrenchment_or_financial_loss_health_issues?open
http://www.helpguide.org/articles/grief-loss/coping-with-grief-and-loss.htm
http://www.helpguide.org/articles/stress/job-loss-and-unemployment-stress.htm
http://www.livemint.com/Leisure/2cwZKF7HV8MH2dhdlUxuwK/Way-out-of-town.html

-  உயிர்மை December 15இதழில் வெளிவந்தது.