Saturday, January 02, 2016

வேலை போம் வேளை -



சிரீஷ் காமத் தற்கொலை செய்துகொள்வார் என கனவிலும்  நினைத்துப்பார்க்கவில்லை, பத்துவருடம் முன்பு என்னுடன் வேலை செய்தவர் அவர். நாங்கள்  வேலை மாறிச் சென்றபின், பழைய கம்பெனி சில காலம் வரை இருந்து , தற்போது முழுதுமாக மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்த சிலர், முதலாளியிடம் இருந்த விசுவாசம் தங்களைக் காப்பாற்றும் என உறுதியாக நம்பினார்கள். திடீரென்று, ஒரு நாள் கடை மூடப்படும் என்றோ, தங்களுக்கு வேலைபோகும் என்றோ அவர்கள் நினைத்துப்பார்க்கவேயில்லை. அவர்களில் எங்களது மேனேஜர் சிரீஷ்ஷும் அடங்குவார்.
விசாரித்ததில்,  கம்பெனி முதலாளி,  ஆறு மாசமுன்னாடி சிரீஷை கூப்பிட்டுவிட்டு ”இன்னும் ஒரு மாசத்துல நீங்க போலாம். வேலையில்ல”ன்னாராம். அதிர்ந்து போய் சிரீஷ், ’ஒரு மாசத்துல என்ன செய்யமுடியும்?’ என்று கேட்க, ‘ முன்னாடியே யோசிச்சிருக்கணும். வெணும்னா, ரெண்டு கம்ப்யூட்டர் எடுத்துக்கோ” என்று முதலாளி சொன்னதாக அறிகிறேன்.
சிரீஷுக்கு ரெண்டு மகன்கள். மனைவிக்கு வேலையில்லை. 50வயது ஆக சில மாதங்களே இருக்கும்வேளையில், அதே பதவியில், அதைவிட அதிகமாகவோ, அதே அளவோ சம்பளம் கிடைக்க எங்கெங்கோ அலைந்தார் சிரீஷ். வேலை இல்லை என்று தெரிந்ததும், அடிமட்ட விலையில் கம்பெனிகள் அவரை வேலைக்குக் கேட்கத் தொடங்கின. மனம் வெறுத்துப் போனார். நண்பர்களைத் தவிர்த்தார். மெல்ல மெல்ல தன்னுள் குறுகத் தொடங்கினார். நாலு மாதமுன்பு விபரீதமான முடிவுக்கு வந்தார்.
இது பலரும் செய்யும் தவறுதான். ஏதோ கம்பெனி தன்னால் மட்டுமே நடக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றம், சிறு சிறு வெற்றிகளில், மரியாதைகளில் ,புகழாரங்களில் வந்து விடுகிறது. எனக்கும் கம்பெனிக்கும் ஆதிகாலப் பழக்கம் என்ற நினைப்பு , திடீரென ஒருநாள் கம்பெனி விலகிச் செல்கையில் தாங்கமுடியாத திகைப்பு , துயரில் ஆழ்த்துகிறது.
சிறப்பு மன நிலை ஆலோசகர்கள்,  மேற்கத்திய உளவியல் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் ,அரசு மன வளத் துறைகள்,தன்னார்வல நிறுவனங்கள் இதில் கைகொடுக்க முன்னணியில் நிற்கின்றன. ஆட்களை வருவி - விரட்டு என்ற பாலிஸியில் இருக்கும் கம்பெனிகள் நிறைந்த நாடுகளில், இந்த உளவியல் பிரச்சனையை சமாளிக்க அதிக கவனம் தேவைப்படுகிறது. இந்தியா இதில் விதிவிலக்கல்ல. ஆனால் , இதற்கென படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் மிகக்குறைவு.
உணர்வுப் படிகளின் வடிவமைப்பு:
2008ல் அமெரிக்காவில் திடீரென பலர் வேலை இழக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்ட போது , ஆலோசகர்கள் பயன்படுத்திய காணொளிகள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக டெக்ஸாஸில் ஒரு முதிய ஆலோசகர் சொன்ன உணர்வுகளின் படிகள் இவ்வாறாக இருந்தது.
”முதலில் அதிர்ச்சியில் நம்ப முடியாது. ’இது எனக்கு நேர்வதல்ல, இது மாயை’ என்ற எண்ணம் வரும். அதன்பின் திகைப்பு , மூளை மரத்துப் போகச் செய்யும் உடல் உபாதைகளைக் கொண்டு வரும்.தலை சுற்றி விழுதல், தடுமாறுதல், மாரடைப்பு, மூச்சுத்திணறல், ரத்தக்கொதிப்பு , படபடப்பு மிக சாதாரணம்.
அதன்பின் கோபம் யார் யார் மீதெல்லாமோ பொங்கியெழும். ’பெங்களூர்க்காரன் என் வேலையைப் பறிச்சிட்டான்’. என்று எல்லா இந்தியர்களையும் சுட்டுத்தள்ளத் தோன்றும். மேனேஜ்மெண்ட் மீது கேஸ் போடத்தோன்றும். மனித வள அதிகாரியின் சட்டையைப் பிடித்து உலுக்கத் தோன்றும். இதெல்லாம் சிலர் செய்தும்விடுவார்கள்.
இதைத் தாண்டிய நிலை. ஒரு சுய இரக்கம்.. ”என்னால் என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நான் ஒரு தோல்வி” என்ற எண்ணம். கண்ணீர் விட்டு அழ வைக்கும். மோசமாகப் போனால், குடிக்கவும், போதை எடுக்கவும் வைக்கும்.
வீட்டில் எரிச்சல் தோன்றும். அருகிலிருப்பவர்களிடம் கோபமாகப் பேச, தாக்கத்தோன்றும். இநித நிலையும் ஆபத்தானது.
இதைத் தாண்டி “ யார் என்ன சொல்வார்கள்? என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்று குறுகத் தோன்றும் நிலை. இதிலாவது அவர்கள் எங்களைப் போன்ற ஆலோசகர்களிடம் வந்து சேரவேண்டும். இதில் சற்றே பண்பட வைக்க, கேட்க வைக்க, நிதானமாக சிந்திக்க வைக்க எங்களால் முடியும்”
இந்த படிநிலைகள் அனைத்தும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பொதுவானவையாகவே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு , கீழே கொடுத்திருக்கும் சுட்டியில் பாருங்கள். அனைத்தும் , மேலே குறிப்பிட்ட படி நிலைகளை கிட்டத்தட்ட ஒருபோலவே வரிசைப்படுத்தியிருப்பார்கள்.
வேலை குறித்த கருத்துகள்:
ஒரு அபாயம் என வரும்போது, உலகளவில் மனிதர்களின் எதிர்வினை ஏறக்குறைய கணித்துவிடக்கூடியதாக இருக்கிறது. வேலை என்பதை நாம் நமது அடையாளமாக, நமது இருத்தலின் ஆதாரமாக, எதிர்கால அக மற்றும் பொது வாழ்வின் பாதுகாப்பாகக் கருதுகிறோம். நீங்கள் யார்? என்ற கேள்விக்கு பொதுவாக ‘நான் ஒரு மேனேஜர், ப்ரோக்ராமர்” என்று செய்யும் வேலையையே சொல்கிறோம்.
ஒருவிதத்தில் இது வருணாசிரம தத்துவ வெளிப்பாடுதான். செய்யும் வேலையை வைத்தே பிரிவுகள் அமைந்திருந்த காலம் திரிந்து, அதனையே சமூக பிரிவினையாகவும் விகாரமாக்கியது வேறு. பணியின் மூலமே மனிதர்களை சமூகம் அடையாளம் கண்டது போக, மனிதனே, தனது பணியின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். இது வருணாசிரமக் கொள்கை உள்ள/அற்ற அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.
வேலையிழப்பின் தாக்கம்
எனவேதான், பணி நீங்கும்போது அடையாளமிழப்பதான அதிர்ச்சி அனைத்துத்தர மக்களுக்கும் தோன்றுகிறது. சில உளவியல் வல்லுநர்கள் பணி இழப்பை துக்கமாக (grief)  நாம் அனுட்டிப்பதாகச் (mourning) சொல்கிறார்கள். உறவினரின் இழப்பை உள்ளமும் உடலும் துக்கிப்பதின் மூலமே நாளடைவில் சமன்செய்துகொள்கிறது. துக்கம் அனுட்டிக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பல மத சடங்குகள் சொல்கின்றன. துக்கிப்பது சில நாட்கள் முதல் மாதங்கள் வரை நீட்டிக்கலாம். அதன்பின்னும் நீட்டித்தால், தகுந்த மனவியல் ஆலோசகரை அணுகுதல் அவசியம்.
இதேதான் பணி இழப்பிற்கும். சடங்குகள் இங்கு இல்லையே தவிர, இழப்பின் அதிர்ச்சி , மரணத்தின் அதிர்ச்சிக்கு ஒப்பானதுதான் என்பதன் ஆதாரங்களைக் காண்கையில் சற்றே வியப்பாகவும் இருக்கிறது. துக்கிப்பதன் முதல் படியாக, ‘ உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்கள். ”பணி இழப்பில் அதிர்ச்சியும் அதன்பின் வருந்துதலும் இயல்பே. அதனைத் தடுத்து, ஒன்றும் நடக்காததுபோல் இயல்பாக இருக்க முயற்சிக்காதீர்கள். இரண்டாவதாக,  உங்கள் உணர்வுகளைச் சரியான போக்கில் வெளிக்காட்டுங்கள். தகுந்த நண்பர்களிடம் வருந்து அழுவது சரியானது. அவர் ஆலோசனை வழங்கத் தேவையில்லை. நீங்கள் சொல்வதை உள்ளன்போடு, புரிதலோடு அமைதியாகக் கேட்பவராக இருந்தால் போதும். “ என்கிறது ஒரு வலைத்தளம்.
இதற்கு அடுத்த நிலையில் ஆலோசகரிடம் செல்வது நல்லதுதான். ஆனால் நாம் செய்யமாட்டோம். உடனடியாக வேலை தேடுவது, வங்கியில் எத்தனை பணமிருக்கிறது என்பதைப் பார்த்து, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வேண்டாத செலவுகளைக் குறைக்கவும் தோன்றும்., கார் கடனை உடனே அடைத்து, காரை மீட்பது, அல்லது விற்பது, கிடைத்த பணத்தை வட்டிக்கு வங்கியில் இடுவது, அல்லது வேறு கடனை அடைப்பது என்று செய்யத் தோன்றும். இது இயல்பானதே” என்கிறார் ஒரு உளவியலார்.
நிதி நிலை ஆளுமை
இப்படிகளில்தாம் நமது நிதி நிலைகளைக் கவனிப்போம். ஆனால், உணர்ச்சிப் பொங்கலில் இயங்காமல், நிதானமாக நிதிநிலையைப் பார்ப்பது சற்றே கடினம். அதனைச் செவ்வனே செய்ய, சில நிதி ஆலோசனை வல்லுநர்களை நாடலாம். சில நேரங்களில் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போகவும் சாத்தியமிருக்கிறது. அப்படிப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ( கணவர்/மனைவி/ பிள்ளைகள்) இதனை ஏற்றெடுத்துச் செய்யவேண்டும். இதற்கு வளமான ஆரோக்கியமான குடும்பச்சூழல் அவசியம். நிதி நிலையைக் குறித்து வீட்டில் பகிரங்கமாகப் பேசுவதும், ஒருவர் செய்யத் தவறும் பணியினை யார் எடுத்துச் செய்யவேண்டும் என்பதான ஒப்பந்தங்களும் குடும்பத்தில் அவசியம். பொதுவாக இந்தியக் குடும்பங்களில் கணவன் என்ன நிதி ஆளுமை முயற்சிகளை ஏற்றெடுத்திருக்கிறான் என்பது மனைவிக்குக்கூடத் தெரியாது. பெண்கள் பொதுவாக, இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை “ அவரு பாத்துக்குவாரு. இதெலெல்லாம் நான் தலையிடறதில்ல” என்பது ஆரோக்கியமான பதிலல்ல.
உணர்வுப் பொங்குதல்களும் அறிகுறிகளும்
இயலாமையில், எரிச்சலும் கோபமும் வீட்டில் வெடித்தால், ஆலோசகரை உடனடியாக அணுகுவது அவசியம். ஒவ்வொரு நாளும் எங்கு வேலை வேட்டைக்குச் செல்லவேண்டுமென்பது முன்கூட்டியே திட்டமிடப்படவேண்டும். அதில் செய்யவேண்டிய செலவினை வீட்டில் இருப்பவர்கள் துச்சமாகப் பேசுதலோ, உடல் மொழியில் காட்டுவதோ கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும் “ அங்க வரை டாக்ஸில போணுமா? ட்ரெயின் பிடிச்சு இங்க வரை போயி...” என்பது “ எனக்கு வேலையில்லைன்னு குத்திக் காட்டறா” என்பதாகத்தான் பொருள்படும்.
இதனைத் தாண்டி வீட்டில் வன்முறையோ, அல்லது சுய இரக்கத்தில் பேசுவது, அழுவது போன்றவையோ இருப்பின், கட்டாயம் உளவியல் ஆலோசகரை அணுகவேண்டும். இது உயிருக்கே ஆபத்தானது. இதன் அறிகுறிகள் பேச்சிலும், நடத்தையிலும், தெரியும் என்கிறார்கள். உணவை தள்ளுவது, தனியாக இருப்பது, நண்பர்களையும் வீட்டில் உள்ளவர்களையும் தவிர்ப்பது, தற்கொலை முயற்சிகள் பற்றிப் பேசுவது என்பவை கண்கூடான அறிகுறிகள். சிரீஷ்ஷின் வீட்டில் இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளத் தவறிப்போனார்கள். விளைவு இன்று  அவர் இல்லை.
இது தாண்டிய நிலையில் சுய இரக்கத்தில் பேசுவதிலாவது, வேலை மற்றும் உளவியல் வல்லுநர்களை சந்தித்தால், அவர்கள் உதவமுடியும். ’தனிமையைத் தவிருங்கள். கொடை இயக்கங்களில், தன்னார்வலராக சற்றேனும் உடல் இயங்கப் பணி செய்யுங்கள். நண்பர்களை அதிகம்  சந்தியுங்கள். Linked In, facebook, twitter போன்ற சமூக வலைத்தடங்களில் நண்பர்களைப் பெருக்கி அவர்கள் மூலம் , தயக்கமின்றி உதவி கேளுங்கள்’  என்கிறார்கள் பல வல்லுநர்கள்.
எதிர்மறை என்ணங்களின் கண்ணி வலை
”வேலையினின்று நீக்கிய கம்பெனி மீதோ, அதில் இருந்த ஆட்கள் மீதோ வன்மம் வைப்பதை தவிருங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல” என்ற அறிவுரையை, மும்பையில்  உளவியல் வல்லுநர் ஒருமுறை சொல்லக் கேட்டேன்.  இதனை அவரது வாட்ஸப் குழுவிலும் அடிக்கடி சொல்லி வருகிறார்- இன்றும். ”மிகப்பெரிய வெறுப்பினை மனதில் சுமந்து கொண்டு , இயல்பாக வாழ முடியாது. இது அல்ஸரை விட மோசம். வயிறு எரிந்துகொண்டே இருக்கும்”. இந்த எண்ணங்கள் ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு மனிதனைக் குறித்தான எதிர்மறை எண்ணங்கள், ஒரு அமைப்பினைக்குறித்து வளரலாம். ஒரு அமைப்பினைக் குறித்த எண்ணங்கள், தனிமனித வன்மமாக உருவெடுக்கலாம். இவற்றின் தொடர்பைத்துண்டிப்பது, அவற்றை முளையிலெயே களைவது , உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும் தேவையானது.
புதிய பாதைகள்?
கணனித்துறையிலும், ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட்டிலும் மட்டுமே பணி செய்திருந்த மும்பையைச் சேர்ந்த வெங்கட் ஐயர் ,  விவசாயம் பற்றி ஒன்றும் அறியாதவர் .அவரது ஆர்வம்  வழிகாட்ட, உந்துதலில், வேலையை விடுத்து,  ஒரு வருடம் போராடி, இரண்டாம் வருடம் முதல் நல்ல லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார். “ எனது ஆர்வம் எதில் இருக்கிறதோ அதில் பணி செய்திருக்கவேண்டும். இப்போது முழுமையடைந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார் கிருஷ்ணன், லிவ் மிண்ட் பத்திரிகை பேட்டி ஒன்றில்.  ஆர்வம் எதில் இருக்கிறது, எனது வாழ்வு எப்படி இனி செல்லவேண்டும் என்பதைக் கண்டறியவும், வேறு பாதையில் பயணிக்க திட்டமிடவும், இந்த அதிர்ச்சி ஒய்வு, புதிய நம்மைக் கண்டுபிடிக்க உதவக்கூடும்.
பணி என்பது இன்றைய காலத்தில் நிரந்தரமனதல்ல, நமது அடையாளமுமல்ல. இதனைப் புரிந்துகொண்டு, செய்யும் பணியில் மட்டும் மனதைக் கொட்டிப் பணிசெய்து, வேறு பணி கிடைக்குமானால் அதில் முழுமனத்தையும் செலவிடத் தயங்காது இருக்க, பழகிக் கொள்ளவேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு இந்த உளவியல் உத்திகள் சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.  இது காலத்தின் மாற்றம் மட்டுமல்ல, கட்டாயமும் கூட.
உசாத்துணைகள்
http://www.imaginehopecounseling.com/fullarticles.php?ID=30
http://www.counselling-directory.org.uk/counsellor-articles/depression-in-the-recession
www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Retrenchment_or_financial_loss_health_issues?open
http://www.helpguide.org/articles/grief-loss/coping-with-grief-and-loss.htm
http://www.helpguide.org/articles/stress/job-loss-and-unemployment-stress.htm
http://www.livemint.com/Leisure/2cwZKF7HV8MH2dhdlUxuwK/Way-out-of-town.html

-  உயிர்மை December 15இதழில் வெளிவந்தது.

No comments:

Post a Comment