Tuesday, November 28, 2006

கைசிகி நாடகம் -டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி

கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச் செறிவும், சமுதாயப் பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.
1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து , அனிதா ரத்னம், பேராசிரியர். செ.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று ,கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகலில் கிடைத்த பாடல்களைக் கொண்டு,பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டு வந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. "கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம் "என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.
கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ் -இல் இருக்கும்.


"எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே"
என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை ,கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

Sunday, September 17, 2006

ஹீரோ பேனா

ஹீரோ பேனா

" ஏல, ஜான்சன் சட்டைப்பையில பாத்தியால?" கிசு கிசுத்தான் சரவணன். ஒன்பதாம் வகுப்பில் சரவணன் மிக நெருங்கிய தோழன். ரெண்டாம் பெஞ்சில் பெருமிதமாக ஜான்சன் அமர்ந்திருந்தான். அவன் சட்டையை உற்றுப்பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"என்னலா பாக்கச்சொல்லுத?" என்றேன் சரவணனிடம்.
'சட்' என புடதியில் ஒன்று போட்டான்." மூதி. கண்ணாடி போட்டும் கண்ணு தெரியாது உனக்கு. பளபளன்னு மின்னுது பாரு ஒரு பேனா -அவன் சட்டைப்பையிலெ"
அப்போதுதான் கவனித்தேன். ஜான்சனின் வெள்ளைச் சீருடை சட்டைப்பையில் தங்கமென மின்னியது ஒரு பேனாவின் கிளிப்.
"அது ஹீரோ பேனா- டே. நம்ம ஜஸ்டின் சார், ஹெட்மாஸ்டர் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஜான்சன் அப்பா கப்பல்ல வேலைபாக்கார்லா? அதான் வாங்கிவந்திருக்காரு அவனுக்கு" சரவணனின் குரலில் அந்தப் பேனாவின் மதிப்பும், அது நம்மிடமெல்லாம் இருக்காது என்னும் தாழ்வு மனப்பான்மையும் வழிந்தன.

ஹீரோ பேனாவை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். ஜான்சன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு எல்லாரையும் தொட்டுப்பார்க்க அனுமதித்தான். நானும் தொட்டுப்பார்த்தேன்.
"என்னலா இதனோட நிப்பு உள்ளேயே இருக்கு? நம்ம பேனா மாதிரி வெளிய இருந்தாத்தானே எடுத்து கழுவிப்போட முடியும்? என்ற கணேசனை ஜான்சன் ஏளனமாகப் பார்த்தான்.
"மூதி. இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு உள்ளதுல. நிப்பு, நாக்கட்டை எல்லாம் கழுவ தனி ஆட்களே இருப்பாங்க"
நம்பினோம்.
ஜான்சன் பெரிய ஆளாக அன்று கருதப்பட்டான். மரியதாஸ் சார் கூட " எங்கடே வாங்கின?" என்று எடுத்துப் பார்த்ததும், நான் சத்தியமாக ஜான்சன் பெரிய ஆள்தான் என முடிவே கட்டிவிட்டேன்.

அதன் தங்க நிற மூடியை சட்டையில் தேய்க்கத் தேய்க்க பளபளப்பு ஏறிக்கொண்டே போனது கண்டு ப்ரமித்தேன். அதில் ஜான்சனின் முகம் விகாரமாக வளைந்து தெரிந்தது. " கண்ணாடி கணக்கால்லா தெரியுது?' என்றேன் வாயைப் பொளந்த படி.
"போதும்ல. கொடு" என்றான் ஜான்சன் அலுத்தபடி. பேனாவை என் கண்ணிலிருந்து மறைத்தான் -சட்டைப்பையின் உள்ளே இட்டவாறே.

ஒரு உத்வேகம் எழுந்தது.
வாழ்க்கையில் எப்படியும் ஒருநாள் இந்த ஹீரோ பேனா கொண்டு எழுதவேண்டும்.

பேனா மேலும் எழுதும்.

Saturday, September 16, 2006

எனக்கும் ஒண்ணு வேணும்

வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது ஒன்பது வயது மகனை
ஈர்த்திருக்கிறது. தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்
உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
http:\\abhijeetthoughts.blogspot.com

சிறுபிள்ளைகள் தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவு
நல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இது அவனது வலைத்தளம்.
தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..

Friday, September 15, 2006

எண்ணித் துணியும் கருமம்...(கல்விக்கூடத்தில் லினக்ஸ்)

அண்மையில் ஒரு மின்மடல் காணும் வாய்ப்புக்கிடைத்தது ( எனக்கு வந்ததில்லை). திறந்த மூல மென்பொருட்களைக் கல்லூரிகளில் பயன்படுத்துவது குறித்த ஒரு புள்ளியியல் ஆய்விக்கான அழைப்பு அது. மாஸ்ட்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சி.டாக் (C.DAC) அமைப்பு (இப்போது வேறு பெயர்... நினைவில் இல்லை) நடத்தும் இயக்கத்திற்கான முன் ஏற்பாடுகள் குறித்தானது. மென்பொருள் தயாரிக்கும், பயன்படுத்தும் நிறுவனங்களின் முதுநிலை அதிகாரிகள், முதுநிலைக் கல்லூரி (கணனி, செய்தி தொழில்நுட்பம்)ஆசிரிய/ஆசிரியைகள் என கணனித்துறையில் பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களை விளித்து விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வுக்கேள்விப்பட்டியல் அது.
சில கேள்விகள் ஆய்வில் கலந்துகொள்பவர்களின் இயங்குநிலை, அவர்களது பணி குறித்துக் கேட்கப்பட்டிருந்தன. தொழில்நுட்பரீதியில் அமைந்திருந்த கேள்விகள்
1. தற்போது உபயோகிக்கும் மென்பொருட்கள்
2. அவற்றினைக்குறீத்தான மதிப்பீடு
3. வாய்ப்புக் கிடைத்தால், திறந்த நிலை மென்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்த மதிப்பீடு.
4. திறந்த மூல மென்பொருட்கள் குறித்தான மதிப்பீடு/ கருத்து
5. மென்பொருட்கள் வாங்குவது குறித்தான முடிவெடுக்கும் தகுதி, சிபாரிசு செய்யும் வலிமை
6. எந்த அளவில் திறந்த மூல மென்பொருள் மற்றும் Proprietary மென்பொருட்கள் பயன்படுத்த திட்டமிடுதல், எந்த விகிதத்தில் இரண்டும் கலந்திருக்க வேண்டும் என்பது குறித்த எண்ணம்

என நீண்டுசென்றது. கவனிக்கவேண்டும். இது வெறும் கருத்துக் கணிப்பல்ல. திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்த தற்போதைய இடர்கள், தடைகள் முதலியனவும் சில கேள்விகளில் வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்கள்.
இச்சுட்டியில் மேலும் விவரங்கள் காணலாம்.
http://www.cdac.in/HTmL/press/3q05/prs_rl170.asp

சர்வதேச அமைப்பான flossworld மற்றும் சி.டாக் இன் பணி குறித்து இச்சுட்டிகளில் காணலாம்.
http://www.hoise.com/primeur/05/articles/monthly/AE-PR-09-05-55.html
http://www.flossworld.org/

இதன் பலன் சிறிது வருடங்களில் தெரியலாம். தற்போது திறந்த மூல மென்பொருள் பயன்பாடு வளர்ந்து வருகிறது என்பது உண்மை.. ஆயின் மிகத் திறம்பட வந்திருக்கிறதா என்றால் இல்லை. H.P, IBM சில சர்வர்களை லினக்ஸிற்காக சந்தையில் விற்பது அவர்களது brand image, வளர்ந்து வரும் சந்தையிலும் வலுப்படலாம் என்னும் எண்ணம்தானே தவிர, லினக்ஸை வளர்க்கும் நல்லெண்ணம் எல்லாம் இல்லை. இதில் தவறும் இல்லை.

இந்த ஆய்வின் பின் சில சுவையான தகவல்கள் வெளிப்படலாம். எந்த அளவில் கல்லூரிகளும், தொழிற்பேட்டைகளும் திறந்த மூல மென்பொருட்களுக்காகத் தயாராக இருக்கின்றன என்றும், எத்தனை வருடங்களில் அவை லாபகரமான தொழிலிற்குத் தயாராகும் என்பதும் சிறிது விளங்கும். இதன் மூலம் பாடத்திட்டங்கள் அமைக்கமுடியும். இந்த முயற்சி திருவினையாகும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் - இதில் அரசியல் இல்லை.

கேரள அரசு எடுத்திருக்கும் முடிவிற்கும், இந்த முயற்சிக்கும் உள்ள வித்தியாசம் .....

Sunday, September 03, 2006

மற்றொரு மாநிலம்- மற்றொரு கல்விக்கூட மென்பொருள் அரசியல்

கேரளா கல்வித்துறை மென்பொருளில் கை வைத்தால், காங்கிரஸ் அரசு சும்மாயிருக்குமா? மஹாராஷ்டிரா இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் இச்சுட்டியில் (http://epaper.hindustantimes.com/default.aspx) மும்பை பதிப்பில் மூன்றாம் பக்கம் (metro) பார்க்கவும்.

கல்வித்துறையில் கணனி மயமாக்குவதற்கும், இணையம் மூலம் கல்விக்கும் உள்ள திட்டங்களை செயல்படுத்த, மென்பொருள் வல்லுமையும் , ஆளுமையும் கொண்ட TCS நிறுவனத்தை வெளியேறச் சொல்லிவிட்டு, ஊழலும் ஆளுமைக்குறைவும் கொண்ட ஒரு அரசு சார்ந்த நிறுவனத்திடம் மஹாராஷ்டிர அரசு கொடுத்திருக்கிறது.
இத்தனைக்கும் மஹாராஷ்ட்டிராவின் கணனித் தொழில் மேம்பாட்டிற்காக இத்துறை வல்லுநர்களும்,உயர்நிலை ஆசிரியர்களும் பலமுறை அரசுக்குத் தங்கள் சேவையைத்தர முன்வந்திருக்கின்றனர். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பல கணனித்துறை வல்லுநர்களும் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் அறிவித்த ஒன்று.

எனக்கு TCS மீது என்ற சார்பும் இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும் "நாங்கள் சீரழித்தே தீருவோம்" என கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் கட்சிகள் பகிரங்கமாக செயல்படுவதை , இக்கட்சிகளின் தலைமை பீடம் கண்டுகொள்ளுமா? கணனித்துறையில் செல்வாக்குப் பெற்ற அதிபர்களூம், வல்லுநர்களும் பேசவேண்டிய நேரம் இது. வாய் மூடி நிற்பது ஒரு தலைமுறையையே சீரழிக்கும்.

Saturday, September 02, 2006

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ் - செய்திச் சுட்டிகள்

கேரள அரசும் லினக்ஸும் குறித்தான அரசியல் பின்னணி இந்த சுட்டியில் காணவும். Open Source Code குருவான ஸ்டால்மன் கேரள அரசின் ஆலோசகர் என்னுமளவிற்கு சொன்னது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது தூண்டுதல் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது என்பது தெளிவு. இந்த அளவில் ஒரு பெரும் வல்லுநரை ஆலோசித்தது முறையானதே. ஆனால் , தொழிற்நிறுவனங்கள் , பிற கணனி தொழில்நுட்ப வல்லுநர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
http://in.rediff.com/money/2006/sep/02microsoft.htm

கணனி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏன் கேரள அரசின் இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதற்கு சுவையான காரணம் இச்சுட்டியின் இறுதிப்பத்தியில் காண்க! லினக்ஸ் இலவசம் என்பதால் ஒவ்வொரு கணனி விற்பனையிலும் இவர்களின் லாப சதவீதம் கூடுகிறது. இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் ஈட்டிக்காரன் மாதிரி தன் பங்கைக் கேட்டு நிற்கும். திருட்டுத்தனமாக pirated மென்பொருள் இட்டுத்தந்தால், சட்டம் சும்மாயிருக்காது...
கேரள அரசின் முடிவில் இந்த ஹார்ட்வேர் விற்பனையாளர்களின் லாபி இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!
"எலி ஏண்டா அம்மணமா ஓடுது-ன்னு இப்பல்லா புரியுது?" http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=138464

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்(contd)

( போன பதிவில் மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கம். மிக நீண்டதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.)
எனது வாதம் லினக்ஸுக்கு எதிர் அல்ல. லினக்ஸ் பயன்படுத்துவதைப் வரவேற்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த கேரளா எடுத்திருக்கும் அரசியல் போக்குதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளியில்"லினக்ஸ் பயன்படுத்துவோம்" என்பதன் பின்புலம் மைக்ரோஸாஃப்ட் மென்பொருளை பயன்படுத்துவது குறித்தான எதிர்ப்பு என்பதுதான். மாநில அளவில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமுன் சரியான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். எந்த pilot project ம் கேரளா நடத்தி அதன் புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
நான் லினக்ஸ் ஆதரவாளன். ஆனால் பள்ளிகளில் கொண்டு வருமுன் அதனை சரிவர நடைமுறைப்படுத்த சில கேள்விகளுக்கு பதில் தேவையாயிருக்கிறது. லினக்ஸுக்கு தற்போது கேரளாவில் பயிற்சி infrastructure இருக்கிறதா?, அரசு இயந்திரம் இதனை சரிவர புழக்கத்தில் கொண்டுவர பயிற்சி அளிக்க எத்தனை வல்லுநர்கள் தேவைப்படுவர்? எத்தனை காலம் ஆகும்? இது குறித்த அச்சுதானந்தன் அரசின் விளக்கம் என்ன?
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவதோடு, பிரபலமான மென்பொருள்கள் குறித்தான exposure பள்ளிகளில் கொடுக்கவேண்டும். மைக்ரோசாஃப்ட் நாம் வெறுத்தாலும் விருப்பப்பட்டலும் சரி, உலகளவில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதனைப் படிப்பிக்க மறுப்பது வர்த்தக ரீதியில் ஒரு competitive disadvantage நிலையை கேரளாவில் ஏற்படுத்தும்.
லாபி என்பது மைக்ரோசாஃப்ட்டுக்கு மட்டுமல்ல, லினக்ஸூக்கும் உண்டு! லினக்ஸ் ஆதரளவாளர்கள் பாராட்டியதில் நான் ஆச்சரியப்படவில்லை.

IT Parks & பள்ளிக்கல்வி:
IT Parkகள் அந்தந்த பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கின்றன. ஆனால், IT Park கள் வியாபார ரீதியில் செயல்படவேண்டியவை. இதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமல்ல. வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் தங்களுக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட்க்ளின் தேவைகளை ஆராய்ந்து வல்லுநர்களை எடுப்பர். இதில் எத்தனை ப்ரோஜெக்ட்கள் பிரபலமான மென்பொருட்களை ( மைக்ரோசாஃப்ட்/ ஆராகிள்/ ஐ.பி.எம்) சார்ந்து இருக்கின்றன ? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அச்சுதானந்தன் அரசு கணித்துள்ளதா? எந்த அளவில் இது வருங்கால லினக்ஸ் மட்டும் கற்ற கேரள மாணவ /மாணவியருக்கு வேலை வாய்ப்பிற்கு அனுகூலமாக இருக்கும் - என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றனவா? முக்கியமாக , அங்கு முதலீடு செய்ய முன்வரும் தொழில் வல்லுநர்கள், கம்பெனிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா?

கொச்சி இன்னும் பெங்களூர்/ஹைதராபாத்/ சென்னை போல hot location இல்லை. அதன் வியாபார uniqueness இப்போது என்ன? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் அதிகம் வந்திருக்குமானால், பெங்களூர், ஹைதராபாத் எப்பவோ அதில் குதித்திருக்கும்.

லினக்ஸ் பயன்படுத்துவது வளர்ந்துவருகிறது. மறுக்கவில்லை. மேலே குறித்த கேள்விகளுக்கு பதில் அது வளரும் வேகமென்ன, எந்த அளவில் வல்லுநர்களின் தேவை இருக்கும் என்னும் ஆய்வில் இருக்கிறது. இந்த ஆய்வுகள் நடத்தினார்களா/ என்ன முடிவு என்பது வெளிவராத நிலையில் , கேரள அரசின் போக்கினை ஒரு அரசியல் சார்ந்த முடிவாகவே எண்ண வாய்ப்பு இருக்கிறது.
பெப்ஸி/ கோக் பூச்சிக்கொல்லி விவகாரம் அமெரிக்க முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை நானும் ஒத்துக்கொள்ளவில்லை! ஆனால் இங்கு நிலை வேறு. எனது வாடிக்கையாளர்களுக்கு லினக்ஸ் வேண்டுமானால் நான் அதில் மகிழ்ச்சியாகச் செய்யலாம். அவருக்கு மைக்ரோசாஃப்டின் மென்பொருள் அடிப்படையில் வேண்டுமானால் நான் செய்ய முடியாவிட்டால் வேறொருவன் செய்துபோவான். எது தேவையென நான் முடிவு செய்யவேண்டும். அரசு என் கையைக் கட்டிப்போட உரிமையில்லை.

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரள மார்க்சிஸ அரசு, பள்ளிகளில் மைக்ரோஸாஃப்ட் மென்பொருள்களை அகற்றி இலவச லினக்ஸ் மென்பொருளை உபயோகிக்கும் படி ஆணையிட்டிருக்கிறது.

ஓப்பன் சோர்ஸ்கோட் ( open sourcecode software) லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது வரவேற்கப்படவேண்டியதுதான்.. ஆனால் இதன் அரசியல் பின்னணிதான் உதைக்கிறது.

மைக்ரோசாஃப் மென்பொருள்களை அரசு உபயோகிப்பதை தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடுமையாக எதிர்த்தவர் அச்சுதானந்தன். இப்போது லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது மைக்ரோசாஃப்டை துரத்தத்தானே என்பது "கடைஞ்செடுத்த அரசியல். என்னல கேணத்தனமா கேக்க?" என ஐந்து வயது பயல் கூடக் கேட்டுவிடுவான். எதில்தான் அரசியல் கொண்டு விளையாடுவது என்பது இல்லை. ஏற்கெனவே கேரளா மென்பொருள் உற்பத்தியில் அப்படியொன்றும் பேர் எடுத்துவிடவில்லை. இப்போதுதான் கொஞ்சமாக கொச்சியில் காக்கநாடு பகுதியில் I.T Park வர ஆரம்பித்திருக்கிறது.

முதலில் கோக், பெப்சி, இப்போது மைக்ரோசாஃப்ட் . சும்மாவே வெத்து வாயை மெல்லும் கேரள இடது சாரி அரசுக்கு பொரி கிடைச்சது போல... "இந்தியாவின் லினக்ஸ் மென்பொருள் திறம் கொண்ட மையமாக கேரளாவை உருவாக்குவதே என் லட்சியம்" என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது..:)

லினக்ஸ் வளர்ந்து வருவது உண்மை. ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு அரசு IT park வரும்படி பற்றி சற்று யோசிக்கவேண்டும். இந்த டெக்னாலாஜி சண்டையெல்லாம் வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அரசியல் வாதிகள் திறப்பு விழாவில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி, மாலை வாங்கிக்கொண்டு அம்பாசிடர் காரில் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. டெக்னாலஜி பத்தி அரசியல்வாதிகள் அதிகம் பேசுவது ஆபத்து..


சேட்டம்மாரே.. ஜமாயுங்கள்.

Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம்(concluded)

விற்பனைப்பகுதியில் பணிசெய்வதால் , "போடா" எனக் கஸ்(ஷ்)டமர்கள் கழுத்தைப்பிடித்துத் தள்ளினாலும், உறுதி குலையாமல் இருக்கும் பக்குவம் எனக்கு வந்திருந்தது. எனவே இதில் நான் பின்னடையவில்லை.
பத்து நிமிடம் கழிந்து மீண்டும் தொடர்புகொண்டேன்.
" உன்னோடு ஒரு நிமிடம் நான் பேசலாமா? " என்றேன்.
மவுனம். " இதோ பார். எனக்கும் தலைக்கு மேல் வேலையிருக்கிறது. வேலையத்துப் போய் உனக்கு போன் செய்யவில்லை. உன்னோடு பேசும் நேரத்தில் எனது வாடிக்கையாளர்களிடம் பேசினால் பணம் குவியும். இருந்தும் ஏன் உனக்குப் போன் செய்கிறேன் தெரியுமா?" எனது குரலில் இருந்த அழுத்தம் அவனைச் சிறிது அயர்த்தியிருக்கவேண்டும்.
" உன்னைப் பற்றி உன் காதலி கவலைப்படுகிறாள். உன் நண்பன் கவலைப்படுகிறான். முன்னேப்பின்னே காணாத பலரும் உன் பேரில் இன்று காலையிலிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிர்ஷ்டக்காரன் டா நீ"
" என்ன அதிர்ஷ்டம் எனக்கு? எல்லாம் போயாச்சு"
" என்ன போச்சு உனக்கு? "
" உனக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி. கெட் லாஸ்ட்" கத்தினான்.
" என்ன தெரியணும்? காலேஜ் படிக்கிற பையன் என்ன போச்சுன்னு இப்படி கத்துகிறாய் எனப் புரியலை" என்றவன் தொடர்ந்தேன்.." உனக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். இது நானாக தேர்ந்து எடுத்துக்கொண்ட விருப்பம். புரிகிறதா?. "
அவன் சட்டென விசிப்பது கேட்டது. " நான் ஒரு தோல்வி. எல்லாம் நஷ்டப்பட்டுவிட்டேன். வாழ்க்கையில் இனி ஒன்றுமில்லை"
" நீ படு புத்திசாலி என உன் நண்பன் சொன்னான். மராத்தி கவிதைகள் எழுதுவியாமே? எனக்கு கவிதைகள் என்றால் பிடிக்கும்" என்றேன்.
" கவிதைகளை உடைப்பில் போடு. என்ன ப்ரயோஜனம். வேலை கிடைக்குமா?"
" கவிதை எழுதினால் வேலை கிடைக்கும் என யாராவது சொன்னார்களா? நீ கவிதை எழுதுவது உனது விருப்பம். உனது தேர்வு இல்லையா?
"ஆம் . அது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
பலதும் பேசினோம். என்ன பேசினாலும் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கையின்மை, சோர்வு இருப்பதை உணர முடிந்தது. சிறுவயதில் கிட்டிய சிறு சிறு ஏமாற்றங்கள், தவறான அனுமானங்கள் அழுத்திக்கிடப்பதை உணர்ந்தேன்.
" பெற்றோர் உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள்" என்றபோது சிரித்தான்.
" அவர்கள் வேண்டாமென்றுதானே , சோலாப்பூர் விட்டு மும்பைக் காலேஜில் படிக்கிறேன். அங்கேயே கிடைச்சது. இவங்க சங்காத்தமே வேணாம்"
அடிப்படையான காரணம் புரிந்தது. பெற்றோர் அடித்தது தன்னை தண்டிக்க அல்ல, திருத்தவே என்பது புரியாத வயதில் வாங்கிய ரணங்கள் இறுகி இன்று வெடிக்கிறது.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தேன் . அவன் தன் எண்ணச் சுழற்றலிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பணி கூடவே, மதியம் பேசுவதாக இருவரும் உடன்பட்ட பின், போனை வைத்தேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் அன்பளிப்பாக அனுப்பியிருந்த ஒரு சிறு புத்தகம் என் அலுவலகப் பையில் தட்டுப்பட்டது. வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மதியம் இவனுக்கு என்ன சொல்லுவது?
மதியம் சொன்னபடியே மீண்டும் தொடர்பு கொண்டேன். நிறையப் படித்திருந்தான்.
வாழ்வு இன்றுமட்டும் வாழ்ந்து பார்க்கலாம் என டேல் கார்னீஜ் சொன்னதைப் படித்ததாகவும் சொன்னான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என அடித்து வாதிட்டான்.
லியோ பஸ்காலியா (Leo Buscaglia) எழுதிய Personhood புத்தகம் பற்றி அவன் சொன்னதும், சட்டென எனக்கு ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.. காலையில் புரட்டிக்கொண்டிருந்த personal excellence என்னும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அனுப்பிய இலவசப் புத்தகத்தில் அவரது வார்த்தைகள்...
" நீ கவிதை ரசிப்பாயல்லவா? ஒரு நல்ல சொற்றொடர் சொல்கிறேன். எப்படியிருக்கிறது எனச் சொல்"என்றவாறே அப்புத்தகத்தில் இருந்து வாசித்தேன்.
" வாழ்வு என்பதும் , அதைச் சோதனை செய்துநோக்க வாழ்வு நேரம் என்பதும் நம்மிடம் இருக்கையில், நமக்கு வெற்றி கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகம்"
"Armed with life on our side and a lifetime to experiment, the odds are in our favor"
" Good one" என்றான்.
" வாழ்க்கை வாழ நேரம் இருக்கையில் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு ஓடுவது கவிதையா?" என்றேன்.
மீண்டும் சில நிமிடங்கள் பேசியதும், " என் பெற்றோர் வந்து பேசும்வரை எதுவும் விபரீதமாகச் செய்யமாட்டேன்" என அவனிடம் உறுதிவாங்கியபின் போனை வைத்தேன்.
பெங்களூர் , பின் மும்பையென அலுவலக அழுத்தத்தில் இதனை மறந்தே போனேன்.
சில நாட்கள் முன்பு எனது மொபைல் போனில் தெரியாத நம்பர் மீண்டும்.
" நான் தான்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். " இப்போது சோலாப்பூரில் இருக்கிறேன். பெற்றோரோடு. மகிழ்ச்சியாக என்றெல்லாம் சொல்லமாட்டேன். " வறட்டு கவுரவம்.. தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.
" அப்பாவுடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். படிப்பை அடுத்தவருடம் தொடரலாம் என இருக்கிறேன்.." எனப் பலதும் சொல்லிவந்தவன் தயங்கினான்.
" சார்.." என்றான் மரியாதையோடு " இப்போது வாழ்வும், அதற்கான நேரமும் என்னிடம் இருக்கின்றன. அனைவருக்கும் என் நன்றி" சட்டென போனை வைத்துவிட்டான்.
புன்னகையுடன் நான் மொபைலைப் பார்த்தேன். அவன் நம்பர் பதிவாயிருந்தது. வேண்டாம் . இதைத் தொடர்ந்து பழசெல்லாம் நினைவு படுத்தவேண்டாம். அவனுக்கு அவனது வாழ்வும் , அதனை அனுபவிக்கும் நேரமும் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அவன் ஜெயிக்கட்டும்.

இன்றைக்கு மட்டும் வாழ்வோம் 1

அன்று மும்பையில் வெயில் கடுமையாக இருந்தது. அலுவலகத்தை அடைந்ததும் உள்ளேயும் வெப்பம் கடுமையாக...
"நாளைக்கே பெங்களூர் வர்றேன்"என வாடிக்கையாளர் ஒருவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது. தெரியாத எண்..
மீண்டும் பத்து நிமிடத்தில் அதே நம்பர். பதட்டத்துடன் அழைத்தவரை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு நிமிடம் ஆனது. ஒருமுறை ரயிலில் பிறருக்கு உதவுவது குறித்துப் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அறிமுகமானவர். பல தொழில்முறை வல்லுநர்களின் , முறைசாராக் குழுமம் ஒன்றின் உறுப்பினர். மும்பையில் வைர வியாபரத்தில் ஈடுபட்டிருக்கும் பரம்பரை வியாபரக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்.
"இன்று ஒரு கல்லூரி மாணவனுக்கு உதவி தேவையெனத் தகவல் வந்தது. பண உதவியில்லை. ஊக்கப்படுத்தி, தெளிவாகச் சிந்திக்க வைக்கக் கோரி அவனது நண்பன் அழைத்திருந்தான்.கொஞ்சம் உதவ முடியுமா?"
நான் திகைத்தேன் " நான் என்ன செய்யமுடியும்? இதற்கென்றே படித்த மனவியல் வல்லுநர்கள் யாரையாவது அணுகுவோம். அதுதான் நல்லது"
தயங்கினார். "அதற்கு நேரமில்லை. நாம் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவன் எதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான்".
"நான் எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். கூடிய விரைவில் மனநல வல்லுநர்கள் யாராவது கிடைத்தால் அவர்களை ஈடுபடுத்துவோம். அதுவரை கொஞ்சம் தாக்குப்பிடியுங்கள்" என்றார்.
" சரி . அவன் நம்பர் கொடுங்கள்.பேசிப்பார்க்கிறேன்" நாளை பெங்களூர் போகவேண்டும் என்ற கவலை வேறு.
கொடுத்தார். "நேரில் சந்திக்க முயலவேண்டாம். பையன் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறான். யாரையும் பார்க்கத் தயாராயில்லை. அவனது நண்பனின் வீட்டில் இருக்கிறான்.பெற்றோருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். சோலாப்பூரிலிருந்து அவர்கள் நாளை வந்துவிடுவார்கள்"
தான் அவனிடம் பேசியதையும் , எதற்கும் அவன் உடன்பட மறுப்பதையும் சொன்னார்.
" போன தேர்வு முடிவுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். மனமுடைந்து போய்விட்டான். தன் காதலியிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பயமுறுத்தியிருக்கிறான்.அப்பெண் பயந்துபோய் அவனது நண்பனிடம் சொல்ல, அமுக்கமாக நண்பன் வீட்டில் கொண்டுவந்துவிட்டனர். அங்குதான் நேற்று இரவிலிருந்து இருக்கிறான்." இத்தனையும் போனிலேயே சுருக்கமாகச் சொல்லி விட்டு, நண்பர் பிற நண்பர்களுக்கு போன் போட முனைந்துவிட்டார்.

எனக்கு இது புதிது. என்னமோ எனது வாழ்க்கையில் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்ததைச் சொல்லப்போக, மனிதர் நான் அவ்வாறு இருக்கலாம் என தவறாக முடிவுக்கு வந்துவிட்டாரோ?
தயக்கத்துடனே போன் செய்தேன். அவனது நண்பன் எடுத்தான் ( அவர்களது பெயர், முகவரி இடமெல்லாம் மறைத்திருக்கிறேன்) . எனது போன் என்றதும் அவனிடம் கொடுத்தான்.
" ஹலோ, நான் உனது நண்பன்" என்றேன்.
" எனக்கு இப்படி யாரும் நண்பன் கிடையாது" பட்டென வந்தது பதில். அத்தோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் வரும்.

Saturday, August 26, 2006

மொழியும் நகரவாழ்வும்

பெங்களூர்(ரு?) ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மாறியிருக்கிறது. பாலங்கள் கட்டும்போது சாலை நெரிசல் என்றார்கள் முதலில். இப்போது பாலங்களடியில் சாலை நெரிசல். மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும்போது ,பிசினஸ் தவிர்த்து வேறெதாவது பேசுவமே என அருகிலிருந்த நண்பனிடம் பேச்சுக்கொடுத்தேன்.
"கன்னடியர்களுக்கு ஏன் தமிழர்களென்றால் இப்படி எரிச்சல்?" அவனைக் கிளப்பிவிடுவதற்காகக் கேட்ட கேள்வி இது.
"தமிழர்களை விடுங்கள். இந்திக்காரர்கள் மேல்தான் இப்போ கோபமெல்லாம்" என்றார் நண்பர். 100% கன்னடியர். பெங்களூர் வாசி - பிறந்ததுமுதல்.
எனக்குப் புரியவில்லை. அவர்களும் திருவள்ளுவர் சிலை மாதிரி வால்மீகி , வியாசர் என விதான்சௌதா முன்னே சிலை வைக்க வந்தார்களோ?
"கன்னடமொழியினை அவர்கள் கிண்டல் செய்து அவமதிப்பது பெரும் கோபத்தைக் கிளறுகிறது. ஒருத்தன் கூட கன்னட மொழி பேச முயற்சிப்பது கூடக் கிடையாது. தமிழர்கள் சரளமாகக் கன்னடம் பேசுவதும், நாங்கள் தமிழ் பேசுவதும் இங்கு சகஜம்"
ஆக, மொழிக்கு மரியாதைதான் இங்கே பிரச்சனை.. கேட்டேன்.
" அவர்களுக்கு கன்னடத்தின் அருமை புரிவதில்லை. எட்டு ஞானபீட விருதுகள் பெற்ற இலக்கியம் எங்களது. கன்னட இலக்கியம் புராண கால, நவீன கால இலக்கியம் இரண்டிலும் சிறந்தது". ஞானபீடம் என்றால் அரசியல் உண்டு இல்லையோ? அதுக்கும் இந்திக்கார வெறுப்புக்கும் என்ன தொடர்பு?
"யக்ஷகானம் புரிவதில்லை என்பது வேறு, 'அது என்னடா, தலைல இம்மாம்பெரிய கொண்டை வைச்சு ராத்திரி பூரா ஆடறான்?' என கிண்டலடிப்பது வேறு இல்லையா?" என்றான் நண்பன். கொதித்துப் போயிருந்தான்.
"பெங்களூரில் யக்ஷகானம் எங்க நடக்கிறது? எனக்குப் பார்க்கணும் என்று ரொம்பநாளா ஆசை" உண்மையைச் சொன்னேன். மும்பையில் கர்நாடக சபாவின் ஆதரவில் எப்பவாவது நடக்கும். எங்கே, எப்போ எனத் தெரிவதற்குள் முடிந்தும் போஇவிடும்.
நண்பன் தடுமாறினான். "நல்ல யக்ஷ கானம் பார்க்கணும் என்றால் மங்களூர் போகணும். அங்குதான் எல்லாம் காக்கப்படுகிறது. பெங்களூர் ஒரு பம்மாத்து. பிட்ஸாவும், பீரும், மினிஸ்கர்ட்டும் தான் இங்கே"
"இந்த விஷயத்தில் சென்னை பரவாயிலை" தொடர்ந்தான்.
"இசைக்கட்சேரி சீசன் என ஒன்று இருக்கு. இந்த அளவுக்கு பெங்களூர் மாதிரி தறிகெட்டுப் போகலை"
"அது உன் அனுமானம் " என்றேன்.
"தமிழ் கலாச்சாரம் என்மமோ பூம்புகார் கடையிலும், போத்தி பட்டுச் சேலையிலும் என இப்போதெல்லாம் வெள்ளைக்காரன் கூட நினைப்பதில்லை"
"தமிழ் இலக்கியம் குறித்து சராசரி கன்னடியருக்கு என்ன தெரியும் ? " என்றேன்.
"ம்... திருவள்ளுவர், பாரதி அப்புறம்..." யோசித்தான்.
" தமிழ் நாடகம் பற்றி ஏதாவது இங்கு பேச்சு உண்டா?"
" இருக்கலாம். தெரியாது" என ஒப்புக்கொண்டான்.
" கே.வி சுப்பண்ணா தெரிந்த தமிழர்களும் இருக்கிறார்கள். " என நான் சொன்னபோது வியந்து போனான்.
" சுப்பண்ணா மரணம் குறித்து எத்தனை கன்னட வலைப்பூக்கள் எழுதின தெரியுமா? இருபது கூடத் தேறாது" என்றேன். சிறிது மௌனம்..
"இப்போதைய கன்னடிய குடும்பங்கள் , குறிப்பாக பெங்களூரில் இருப்பவர்கள் குழந்தைகளுக்குக் கன்னடம் சொல்லிக்கொடுப்பதில்லை. பெங்களூரில், பெரும்பாலான கன்னட குழந்தைகளுக்கு கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது."என்றான்
"கன்னடியர்களே இன்னும் மரியாதை கொடுக்கவில்லை என நீங்கள் சொல்லுகிறீர்கள். இந்திக்காரன் கன்னடம் குறித்துத் தெரிந்திருக்கவேண்டும் என நினைப்பது விடுத்து, கன்னடத்தை கன்னடியர்கள் அறிந்திருக்கச் செய்வது முதல் வேலை இல்லையா? என்றேன்.
சிறிது யோசித்தபின் கேட்டான்" தமிழின் நிலை எப்படி?"
நான் பதில் சொல்லாமல் வெளியே வெறித்தேன்.
பெங்களூர் மீண்டும் ஒரு மாலை மழைக்குத் தயாராகி இருந்தது.
முழுதும் இருட்டுமுன் போய்ச்சேரவேண்டும்.

Friday, August 25, 2006

"பயங்கர"ப் பயணங்கள்

ஆம்ஸ்டர்டாம் விமானநிலயத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த "பயங்கரவாதிகள்"ஐ அப்பாவிப் பயணிகள் தான் என நெதர்லாந்து அடையாளம் காண இரண்டு நாட்களாயிருக்கிறது.. என்னத்தைச் சொல்ல?
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"என தாடி வைத்து, ஆசிய நிறத்தில், நீள அங்கி அணிந்திருக்கும் எவருமே தீவிரவாதி என நினைக்கும் மேலை நாடுகள் கொஞ்சம் புத்தி தெளியவேண்டும். யாராச்சும் அவர்களுக்கு வேப்பிலை அடித்தால் நல்லது. இது சமூக அளவில் வெறுப்பையே ஏற்படுத்தும் என்பதை "பாதுகாப்பு கருதி" யாவது மேல்நாடுகள் உணர்வது அவசியம்.

சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமிலும் பாரீஸ் விமானதளத்திலும் ஆசியர்களை "ஒரு மாதிரியாக"ப் பார்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். துருக்கிக்கு மேல் பறந்துகொண்டிருந்த எங்களது ஏர்பிரான்ஸ் விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக பாரீஸ் திரும்பியது தொடர்ந்து மறுநாள் மீண்டும் மும்பை வந்து இறங்கியது வரை விமானத்தில் இருந்தவர்கள் பட்ட இடர்கள் .... ஒரு பதிவாகவே போடலாம் என இருக்கிக்றேன். இதே விமானம் நியூ யார்க் அல்லது சிகாகோ செல்வதாக இருந்திருந்தால் நிலையே வேறு.

இந்த சந்தேகப் போக்கு கண்டிக்கப்படவேண்டியதுதான் என்றாலும் சில குறைகளை நாமும் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே அயல்நாட்டுப் பயணத்தில் கண்டிருக்கிறேன்.. இந்தியர்கள் ஒழுங்கு கடைப் பிடிப்பதில்லை.
"இருக்கைப் பட்டை அணியுங்கள்" என்றால் "தெரியும்வே" என்னும் அலட்சியம். "நான் அடிக்கடிப் பறப்பவனாக்கும். எனக்கு இதெல்லாம் சாதாரணம்" என்பதுபோல் காட்டிக்கொள்ளும் அல்பத்தனம்.
"விமானம் நிற்குமுன் மொபைல் போன் உபயோகிக்காதே" என்றால் அப்போதுதான் " அலோ" எனக் கத்தி டெல்லி மாமா, சண்டிகார் சாச்சா-வெல்லாரையும் அழைப்பார்கள். அதுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கப் போகிறோமே, அதுக்குள்ள என்ன ஆயிரம் போன்கால் ? ஒரு மர மண்டைக்கும் இது புரியாது.

ஏற்கெனவே ஆயிரம் பாதுகாப்பு கெடுபிடிகள். அது மீறி இப்ப்படி நடந்துகொள்வது எந்த முறையில் நியாயப்படுத்த முடியும்?
அயல்நாடு போகும் விமானங்களில் "குடி மகன்"களின் தொல்லை இன்னும் மோசம். "ஓசியில கிடைச்சா ஆசிட் கூடக் குடிப்பான்" என மலையாளத்தில் சொல்வார்கள். அதுமாதிரி, ஓசில குடிக்கக் கிடைச்சதும், நம்ம ஆளுங்க வர்ற வரத்து... குடிச்சு வாந்தி வைச்சு, அலம்பு பண்ணி... " சே"ன்னு போயிரும்.
இதெல்லாம் இருப்பதால் ஆம்ஸ்டர்டாம் நிகழ்ச்சியை நான் நியாயப்படுத்தவில்லை. இந்த ஒழுங்கீனம், அலட்சியம் இருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. இதுதான் ஆம்ஸ்டெர்டாமிலும் நடந்திருக்கிறது.
இனியாச்சும் நம்மவர்கள் ஒழுங்கு என்பதைக் கடைப்பிடிப்பார்களா?

சார் போஸ்ட்..

"உங்களுக்கு யாரோ கடிதம் எழுதியிருக்காங்க" என்ற மனைவியின் குரலில் இருந்த ஆச்சரியம் என்னையும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக கடனட்டை அறிக்கைகள், ரீரடஸ் டைஜஸ்ட் கொட்டையெழுத்துக்களில் அனுப்பும் வருடாந்திர மார்க்கெட்டிங் வீண்செலவுகள் எனவே எனது தபால்கள் வருவதுண்டு. இல்லாவிட்டால் உறையின் ஓரங்களில் மஞ்சள் தடவிய திருமன அழைப்புகள், வெகு தொலைதூரச் சொந்தக்காரரது வீட்டின் பூப்புனித நீராட்டுவிழாக்களின் அழைப்புகள் ( எவன் மும்பையிலிருந்து வேலை மெனக்கெட்டு இதுக்கெல்லாம் போகிறான் என இன்னும் புரியவில்லை) எனவே இருக்கும். பெரும்பாலும், பார்த்த சில நொடிகளில் குப்பைகளில் சேர்ந்துவிடும்.
இந்த கடிதம் சிறிது வேறுபட்டது. பொறுமையாகக் கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டு , ஐந்து ரூபாய் தபால்தலை மிக ஒழுங்கக நேராக ஒட்டப்பட்டு மிகக் கவனமாக அஞ்சல் செய்யப்பட்டது. அதனாலேயே கொஞ்சம் மதிப்புடனேயே உறையைப் பிரித்தேன்.

நான் இதுவரை பரியச்சப்படாத திரு.ச்ரீனிவாசன் என்னும் முதியவரிடம் இருந்து வந்த அஞ்சல். நடுங்கும் கையெழுத்தில் பழையகால நாகரீக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எனது தூரத்துச் சொந்தம் எனினும் , அவர் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பது மட்டுமே எனக்கு இதுவரை தெரியும். புழக்கத்தில் இருந்து, மீண்டும் அச்சடிக்கப்படாது புதைந்து போன ஒரு வைணவ சமயப் புத்தகத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவரது கடிதம் பல பரிமாணங்களையும் தொட்டிருந்தது 1944களில் இருந்த மும்பை, மகாராஷ்டிர சிறுநகர வாழ்வு, அவரது நண்பர்கள் எனப் பலதரப்பட்டவை குமிழ்ந்திருந்தன. இந்த வயதிலும் எழுத முயல்வது மட்டுமல்ல, அந்தக் கடிதம் அனுப்பும் முறை குறித்து அவர் எடுத்திருந்த கவனம் என்னை மிகவும் கவர்ந்தது.
"எவனுக்க்குவே இதுக்கெல்லாம் நேரம் இருக்கு?" என ஒருமுறை பின்கோடு எழுதாது நான் ஒரு அஞ்சல் செய முயன்றபோது தடுத்த எந்தந்தை மீது சீறியது நினைவுக்கு வந்தது. " எவனுக்கு நஷ்டம்? உனக்கு உன் தபால் ஒழுங்காப் போய்சேரணும்னு ஆத்திரம் இருந்தா , ஒழுங்காச் செய்வே" என அவர் இடித்ததும் வெறுப்போடு பின்கோடு தேடி எழுதினேன். "எப்படி போஸ்ட் பண்ணினாலும் பத்துநாளாவும்.. இதுல பின்கோடு ஒண்ணுதான் குறையாக்கும்" என முணுமுணுத்துக்கொண்டே போஸ்ட் செய்தேன். இரண்டே நாளில் கடிதம் சென்னை போனது. கூரியர் ஒருநாள் முந்திப் போயிருக்கும் அவ்வளவுதான்.
மின்னஞ்சல் வந்ததும் கடிதம் எழுதுவது வெகுவாகக் குறைந்து போனது. "அலோ, இன்னிக்கு என்ன குழம்பு?" என எஸ்.டி.டி. போட்டுப் பேசும் தெனாவெட்டும், வசதியும் வந்ததும் சுத்தமாக எழுதுவது நின்றே போய்விட்டது. "பேசற மாதிரி வருமா?" என்னும் சால்ஜாப்பு வேறு.

ஒரு குறுகுறுப்பில் அவருக்கு பதில் எழுத முனைந்தேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.... எப்படி தொடங்குவது என்பதே மறந்து போய் விட்டது. "அன்புள்ள?" " மதிப்பிற்குறிய?" " உபய குசலோபரி?" "அடியேன் தெண்டம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம்?"
பேனாவை மூடி வைத்தேன். கணணி முன் அம்ர்ந்தேன்.
" கையால் எழுதாதற்கு மன்னிக்க்கவும். என் தமிழ்க் கையெழுத்து எனக்கே புரியவில்லை" என ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்பதுடன் தொடங்கினேன். பிரிண்ட் எடுத்து கூரியரில் அனுப்பினேன் - குற்ற உணர்வோடு.

ஒரு வாரம் கழிந்தது. என் நண்பன் முத்துக் குமரன் டெல்லியிலிருந்து போன் செய்தான். " என்னடே, திடீர்னு தபால் எழுதியிருக்க? ஒரே ஆச்சரியம் என்வீட்டுல.. உனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி இல்லையோடே?"
"ஏல, தபால் வந்தா நல்லாயிருக்கா இல்லியா? " இடைவெட்டினேன்
" சந்தோசமாயிருக்குடே. அதுவும் வேலை மெனக்கெட்டு எனக்குன்னு கைப்பட எழுதிருக்க பாரு. அதுவே சந்தோசம். அதான்டே போன் பண்ணினேன்" அவனது உற்சாகம் என் நெஞ்சில் நிறைந்தது.
சிறிது தயங்கினான் " எங்கய்யாவுக்கு இன்னிக்கு லெட்டெர் தமிழ்ல்ல எழுதிப் போட்டிருக்கேன். நம்ப மாட்டடே மக்கா.. எப்படி எழுதணுனே மறந்து போச்சி. என்னமோ கோழி கிண்டினாப்போல கிறுக்கிப்போட்டு.... காலேஜ்ல எழுதினது அதுக்கு அப்புறம் இப்பத்தான்...வெக்கமாயிருக்குல."
ரோஜாக்கள் கொடுக்கும் கையிலும் மணம் வீசும்.. மலர்களின் வாசனை கைகள் மாறுவதில் சிறக்கிறது.
இன்னும் எழுதணும்.. போஸ்ட் ஆபீஸ் உங்க ஏரியால எங்கயிருக்கு?

Monday, May 29, 2006

எங்கவே தொலைஞ்சீரு?

இப்படி உரிமையாகக் கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி. கொஞ்சம் வேலைப்பளுவின் பின், தஞ்சாவூர் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். இலக்கியம், நாடகம் பற்றிய அறிவுபெறுதல், உணர்தல் என்று உருப்படியாகக் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு வந்தேன். அதென்னமோ நமக்கும் சென்னை செல்வதற்கும் என்னமோ தடங்கிகிட்டே வருது. சென்னை நண்பர்கள் அதிர்ஷ்டம் - பிழைத்துப் போனார்கள்.
ஊருக்குப் போனதில் உருப்படியாகப் படித்தது- திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களின் நாடகம் பற்றிய விமரிசனங்களின் தொகுப்பு நூல்.
சிறிய அவகாசம் பின் எழுதுகிறேன்.
அன்புடன்
க.சுதாகர்.

Sunday, May 14, 2006

சீருடையில் களங்கம்

மும்பை காவல்துறை, தனது சுய ரூபத்தை மீண்டும் வெளிக்காட்டிவிட்டது. இம்முறை , கூலிப்படைகள் போல மிருகத்தனமாக அவர்கள் மருத்துவத்துறை மாணவர்கள் மீது பாய்ந்தது மிகவும் வெறுப்பையும் கோபத்தையும் மக்கள் மனத்தில் விதைத்துவிட்டது.
நேற்று, மும்பையின் புகழ்பெற்ற ஆஸாத் மைதானத்தில் மருத்துவத் துறை மாணவ மாணவியர் ,உச்ச நிலை கல்வித் துறையில் ரிசர்வேஷன் கொண்டுவரும் திட்டத்திற், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், சாலை மறியலில் ஈடுபட்டதாகக் காரணம் காட்டி, காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக அடித்துத் துரத்தப்பட்டனர்.
மாணவர்களுக்கு காவல்துறையினரிடமிருந்து வந்த இந்த வன்முறைத் தாக்குதல் எதிர்ப்பாராதது. எந்த ஆயுதங்களும் இல்லாத அம்மாணவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து இக்காவல்துறை சார்ந்த மிருகங்கள் கழிகளால் தாக்கியது அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பப்பட்டு, மக்களை திடுக்கிட வைத்தது.
எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்களில் மாணவிகளும் சகிதமாக இருந்தனர். அவர்களைப் பெண் காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். மாறாக, அப்பெண்களை தரதர வென இழுத்து அடித்தவர்கள் ஆண் காவல் துறையினர். பெண் காவல்துறையினர் ஒருவர் கூட இல்லை. எந்த வகையில் இதனைத் தகுந்த கண்காணிப்புடன் நடத்தப்பட்ட காவல்துறை தடுப்பு எனச் சொல்ல முடியும்?

ஒரு கூட்டம் நடந்தால் அதில் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள் எனக் காவல் துறையினருக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இவ்வாறு ஒரு பெண்காவலாளி கூட பாதுகாப்பிற்கு இன்றி அனுப்பப்பட்ட படை என்றால், அப்படை அனுப்ப்பட்ட உட்காரணம் யாது? "சகட்டு மேனிக்கு அடித்துக் கொல்லுங்கடா" என்பது தானே? இதைச் செய்ய திறமையாக, ஒழுங்கு கூடிய காவல்துறை எதற்கு? கூலிப்படை போதுமே? காவல்படையோ சீருடைக்கு உள்ளில் வெறும் அரசியல் கூலிப்படையாகவே இருக்கிறதோ?

தொலைக்காட்சியில் காட்டிய அடி நொறுக்குதலில், சீருடை அணியாத பலரும் மாணவ மாணவியரை கழிகளால் அடித்து நொறுக்கியதைக் காணலாம். யார் இவர்கள்? சீருடை அணியாத, காவல்துறை சேர்ந்தவர்களா? இவர்கள் வந்து அடிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? அரசியல் தாக்கமோ?

இவ்வளவு நடந்த பின்னும், மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு கொதித்தபின்னும் , காவல்துறை உயர் அதிகாரி ஏ,என்.ராய் " அடிதடி நடக்கவே இல்லை" எனச் சாதிக்கிறார். இந்திய மருத்துவ அசோயியேஷன் (IMA)வைச் சேர்ந்தவர்கள் இதில்தான் மேலும் கொதித்துப்போனார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார் ' இப்படி ஒரு உயர் போலிஸ் அதிகாரி சொல்லுகிறார் என்றால், ஒன்று - அவர் குருடர். இல்லையென்றால் மிகப்பெரிய புளுகர். இவர்களுக்கெல்லாம் திறன் படச் செயல்படுகின்றனர் என்னும் ISO சான்றிதழ் எதற்கு?" சாட்டியடி. ஏ.என் ராய் இந்த கேள்விக்கே நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.

மாண்பு மிகு முதலமைச்சர் எங்கோ மறைந்துவிட்டார். பேசவே இல்லை. அவர் காங்கிரஸ் கட்சி என்பதால் , இந்த கோட்டா விஷயம் அவரது கட்சியின் ஒட்டு வாங்கும் துருப்புச்சீட்டு என்பதால் மெளனம் சாதிக்கிறாரோ? ஆளுநர் எங்கே?
இருபத்திநான்கு மணிநேரம் கெடு ஆட்சியாளர்களுக்கு IMA கொடுத்திருக்கிறது. அவர்கள் நிபந்தனை முக்கியமாக
1. வன்முறையில் ஈடுபட்ட போலிஸ் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
2. வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஏ.என்.ராய் உட்பட - பதவி விலகவேண்டும்

பல மாணவர்களை அடித்து ரவுண்டு கட்டி , ஜெயிலில் வைத்திருந்து நாலரை மணிநேரம் கழித்து விட்டு விட்டனர். போலிஸ் ஸ்டேஷன் எங்கோ, ஆசாத் மைதானம் எங்கோ. இப்பெண்கள் எப்படி வீடு போய்ச் சேருவர்? என்ன பாதுகாப்பு இவர்களுக்கு? யாராவது பதில் சொல்ல முடியுமா? இதில் ஒரு பெண்ணின் கை உடைந்திருக்கிறது. மற்றொரு பெண்ணிற்கு காலில் பலத்த காயம்..ரத்தம் சொட்டச்சொட்ட அவர் விந்தி விந்தி நடக்கிறார். மற்றொரு பெண்ணுக்கு கண் அருகே காயம்.. இது நான் தொலைக்காட்சியில் பார்த்தது. பார்க்காதது எத்தனையோ? பெண்களைத் தாக்கும் மிருகங்களின் கூட்டத்தை போலிஸ் என்றா இன்னும் அழைப்பது? இவர்கள் வீட்டுப்பெண்கள் இருந்தால் இப்படித்தான் அடிப்பார்களா?

காவல் நிலையத்திலேயே, நிராதரவான பெண்களை மிரட்டி மானபங்கம் செய்யும் பேயர் வட்டத்தில் இன்னும் நியாயத்தை எதிர்பார்ப்பது என் தவறுதானோ?

ரிசர்வேஷன் குறித்து ஆதரவாய் பேச என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை அதை எதிர்த்துப் பேசவும் இருக்கிறது-சனநாயகத்தில். "எனக்கு ஓட்டு வேண்டும். அதற்காக எதுவும் செய்வேன். நீ யார் கேட்க?" என்னும் அராஜகம், இப் பசுத்தோல் போர்த்திய அரசியல் புலிகளை அடையாளம் காட்டிவிட்டது. மக்கள் இதற்கு எதிர்த்து பலத்த குரல் எழுப்பவேண்டும்.

பெண்கள் உரிமைக் கழகங்கள், இம்மாணவியர் மீதான தாக்குதல்களை எதிர்த்துக் கேட்கவேண்டும். ஏன் பெண் காவல் துறையினர் அவ்விடத்தில் இல்லை?, என்ன பாதுகாப்பு பெண்களுக்கு? என்னும் கேள்விகளை எழுப்பவேண்டும். இல்லாவிட்டால் இவர்களும் இதில் கூட்டு என்பது உறுதியாகிவிடும்.

இன்று இம்மாணவர்கள். நாளை? யார் கண்டது? இப்படி வலைப்பூவில் எழுதியதால் என்னையும் போட்டு மொத்தலாம்.

வாயிருந்தும் ஊமைகளாய், சனநாயகம் செருப்புகளில் கிழிபடுவதைப் பார்த்திருந்ததும், சமூகத்தின் நாகரீக இழைகள் இற்றுப்போவதைப் பார்த்திருந்ததும் போதும். இங்கு இன்னும் வாழ்வது வெட்கக்கேடு.

மூவர் கொண்ட குடும்பம் ஒன்று மும்பையிலிருந்து புலம் பெயர முயற்சிக்கிறது- அகதிகளாக , நாகரீகம்,மனிதநேயம் உள்ள ஒரு நாட்டில் வருவதற்கு என்னவெல்லாம் தேவை? தெரிந்தவர் எனக்குச் சொல்லலாம்.

Monday, May 08, 2006

எந்தூரு உங்களுக்கு?!

என்னமோ எனக்கு ஒரு ESP இருக்கு என்பதில் என்னைவிட என் மனைவி மிக உறுதியாக நம்புகிறார். யாராவது தமிழ்க்காரர் போலத் தெரிந்தால் அவர் திருநெல்வேலி மாவட்டக்காரரா இல்லையா என்பதை அந்த மனிதர் பேசாமலேயே ஊகித்துவிடுகிறேன் என்பதில் அவருக்கு ஆச்சரியம். திருநெல்வேலிக்காரர்கள் பேசவே வேண்டாம். நான் பேசுவதைப் புரிந்துகொண்டாலே அவர் அந்த ஊர்க்காரர்தான் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். பேந்தப் பேந்த முழித்து " என்ன சொன்னீர்கள்?" எனக் கேட்டால் தாமிரபரணித்தண்ணீர் குடித்தவரில்லை என்பது தெளிவு. இதுதான் ரகசியம்.

இரண்டு மாதம் முன்பு எங்கள் அபார்ட்மெண்ட் முன்னால் புதிய இட்லிக் கடை முளைத்திருந்தது. சக்கர வண்டியில் இட்டிலி, தோசை எனச் சுடச்சுடக் கிடைப்பதை ஜன்னலின் வழியே சமயம் கிடைக்கும்போது வேடிக்கை பார்த்திருப்பேன். உ.பி,பிஹார்க்காரர்களுக்கும் என்னமோ இப்பவெல்லாம் இட்லி ஒரு தினசரி உணவாகிவிட்டது போலும். அவர்கள்தான் நிறையப்பேர் வாங்கிச்செல்கின்றனர். வண்டியில் கிடைக்கும் சாப்பாடு என்றாலும் சுத்தமாக இருக்கும்.

போனவாரம், அக்கடையைத் தாண்டிச் செல்லவேண்டியதாயிற்று. "சரி ,இட்லி எப்படித்தான் இருக்கிறது எனப் பார்ப்போமே" என நினைத்து அருகில் சென்றபோது, அவர்கள் தமிழில் பேசிக்கொண்டது காதில்விழுந்தது. "ரெண்டு இட்லி கொடுங்க" என்றேன். தட்டு கழுவிக்கொண்டிருந்த சிறுவன் சட்டென நிமிர்ந்தான். "சரி.வேலையாவட்டும். சோவாறாதல" என்ற கடைக்காரர், சட்டென சுதாரித்துக்கொண்டு, "ரெண்டு நிமிசம் ஆகும் சார். சட்னி வருது" என்றார் அடையாளம் காட்டாத தமிழில். எனக்குப் புரிந்தது -தன் ஊர் தெரியாமல் இருக்க நினைக்கிறார் என்பது. ஏன் எனப்புரியவில்லை.
ச்ட்டென்று " உங்களுக்கு எந்தூரு?" என்றேன்.
"திருநவேலி" என்றார் இயல்பாக. மீண்டும் சுதாரிக்க எத்தனித்தார். சிரித்தேன்.
" நம்மூர்க்காரக பேச்சுதான் தெளிவா தெரிஞ்சிரும்லா? எதுக்கு இப்படி மாத்துதீரு?" என்றேன்.
மனிதருக்கு முகம் மகிழ்ச்சியும் பயமும் கலந்ததாக விகசித்தது.
"இல்லேண்ணாச்சி.. அது இங்க ஆளுகளுக்குத் தெரியவேண்டாம்னு முதலாளி சொன்னாருல்லா அதான்" என்றார் தயக்கமாக.
" என்ன பயம்? 'திருநவேலிக்காரன்னா யாராச்சும் சீவிருவம் வே-'ன்னாகளா?" நான் சுவாரசியாமானேன். இட்லி கிடக்குது. பிறவு பாப்பம்.
" இதுக்கு முன்னால கடை போட்டிருந்தான்லா.. களக்காட்டுக்காரன்... எக்கச்சக்கம் கடன் வாங்கிட்டு ஓடிட்டான். எங்க தொலைஞ்சான்-னு தெரியல. அதுலேந்து நம்மூர்க்காரன்-னு தெரிஞ்சா வியாபாரம் முடங்குது. ரெண்டு ஏடு இட்டிலி போவலைன்னு வைங்க.. நேரே அது வயித்துல அடிக்கி. அதான்"
"என்னவே.. சளம்புதீரு? பீஹார்க் காரனுக்கு திருநவேலின்னா தெரியுமா, திருவனந்தபுரம்னா தெரியுமா? அவனுக்கு மதறாசி-ன்னு மட்டும்தான் சொல்லத்தெரியும். சும்மா சொல்லாதீரும்" எனச் சீண்டினேன்.
"இல்லேண்ணே. இங்கன நம்ம ஊர்க்காரங்க இருக்காகல்லா... சேலம், தருமபுரிப்பக்கம் ஆளுங்க. எவனோ **யான் ஏமாத்திட்டு ஓடிட்டான் -னு சொன்னா அதுக்கு நானா கிடைச்சேன்? எவங்கிட்ட சொல்லமுடியும்? அதான் வேண்டாம்னு"
நியாயமாகப்பட்டது எனக்கு. இருந்தாலும் மண் வாடையடிக்காமல் ஒரு திருநெல்வேலிக்காரன் பேச்சா? ஆறவில்லை.
" விடுமய்யா. நான் வரும்போது நம்ம பாசைல பேசணும் நீரு. என்னா? " என்றேன்.
"சரி: என்றார் வெட்கத்துடன். " எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றார் வெகுளியாய்.
" எந்தூரு?ன்னு கேட்டேம்லா? நீரு என்ன சொன்னீரு?" என்றேன்.
"திருநெவேலி-ன்னேன்" என்றார்.
" இந்த கேள்வி புரிஞ்சுதுன்னு வைச்சுக்கோரும்.. நீரு நம்மூரு ஆளாத்தான் இருக்கணும். எவனும் 'எந்தூரு?'-ங்க மாட்டான். 'எந்த ஊரு?' ன்னுதான் கேப்பான். நம்மூரு ஆளைத்தவிர" என்றேன்.
"ஆமா" என்றார் சிந்தனையில் ஆழ்ந்தபடி. எவன் எவனெல்லாம் இப்படி பிடிக்கப்போகிறானோ? என்ற கவலையாயிருக்கலாம்.
சரி.. நிசமாச் சொல்லும்..திருநவேலிக்கு பக்கத்துல எந்தூரு ?" என்றேன் விடப்பிடியாய்.
"வள்ளியூர்"
"வள்ளியூர் பக்கம் எந்தூரு?' என்றேன்.
மனிதர் நெளிந்தார். 'திருக்குறுங்குடி - ன்னு கேட்டிருக்கீயளா?' என்றார் தயங்கியபடி.. கிராமம் பேர் கேட்கிறானே என்ற வெட்கம் போலும்.
" வே.. என்ன அப்படி கேட்டுட்டீரு? நம்பி கோயில் இருக்குல்லா அதானே? கைசிக ஏகாதசி நடக்குமே? அதானவே?" என்றேன்.
மனிதருக்கு ஆச்சரியம் " தெரியுமா? நாங்க அந்தூர்க்காரங்கதான். அது எங்க கோயில்லா" என்றார் பெருமிதம் பொங்க.
"நல்லாவே தெரியும். மலை நம்பி கோயில் போயிருக்கிறீரா?" என்றேன்.
" எத்தன வாட்டி போயிருக்கம்? அடேங்கப்பா. என்ன அப்படி கேட்டுட்டீய? அரிசி, புளியெல்லாம் எடுத்துகிட்டு மேல ஏறுவம். காட்டாத்துல முங்கிட்டு, கூட்டாஞ்சோறு போட்டுத் திம்பம்லா?" மனிதர் அக்கால நினைவுகளூக்கு ஒரு நிமிடம் போய்விட்டார்.
சட்னி ஒரு தூக்குச் சட்டியில் வந்து விடவே, எங்கள் உரையாடல் கலைந்தது. சூடான இட்லியும், காரமான பூண்டு சற்றே அதிகமான சட்னியும்.. நெல்லை மேம்பாலத்து அடியில் ஒரு இட்லிக்கடை உண்டு அப்பவெல்லாம். பார்வதி தியேட்டரில் நைட் ஷோ படம் பார்த்துவிட்டு நடந்து வந்து , சூடான அந்த இட்லியை ஒரு கை பார்க்கும் அனுபவத்தின் வேண்டாத நினைப்பும் வந்துதொலைத்தது.
" இன்னும் சட்னி வேணும்னா கேளுங்க தயங்காம. . கேட்டியளா?" என்றார் உரிமையுடன்.
" சரிண்ணே. உங்க பாசைலேயே இனிமே பேசுங்க. பயப்படாதீங்க. என்னா?" என்றேன். சிரிப்புடன் தலையாட்டினார்.
"ராத்திரி பத்து மணி வர கடை திறந்திருப்பம். சொல்லிட்டீய-ன்னா பய வூட்டுல வந்து கொடுத்திருவான்." என்றவர் "லே, சாருக்கு சாம்பார் ஊத்தலயா இன்னும்? வெறிச்சிகிட்டிருக்கான் எங்கனெயோ.. முட்டா****தி. நீயெல்லாம் செவுடு பிஞ்சாத்தான் சரி வருவலே" என்றார் மனிதர் பயப்படாமல் தெள்ளத்தெளிவாகத் திருநெல்வேலித்தமிழில்..
சட்னி நாக்கில் மட்டுமே சுள்ளென உரைத்தது..இட்லியுடன் சுவையாக நெஞ்சுக்கருகில் இறங்கியபடி..
அந்தத் தமிழ்போலவே.

Sunday, May 07, 2006

இரு மனிதர்கள்

எனக்கு ராகுகாலம் ராத்திரியில் வந்தது என்பதை கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். கொடுமை மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ஆரம்பித்தது என்றால் போகும் வழியிலெல்லாம் தொடர்ந்தது.

ஏதோ மும்பையில் ஏறினோம்அடுத்ததாக நியூயார்க்கில் இறங்கினோம் என்றில்லாமல், இந்தமுறை " கோயில்பட்டிலே கொடை-ல்லா.. அதுனால மதுர வண்டி குறுக்குச்சாலை சுத்தி வுட்டுருக்கான். " என்பது போல, கோட்டிக்காரத்தனமாக ஒரு ரூட்டில் எனக்கு டிக்கட் கிடைத்தது. தத்தி தத்தி, நொந்து நூலாக அமெரிக்கா சென்ற கொடுமை சில மாதம் முன்பு.

மிலான் (மால்பென்ஸா) விமான நிலையத்தில் காத்திருப்பது என்பது மும்பையில் இருப்பதை விட மோசம். டாய்லெட்டுகள் முதற்கொண்டு அப்படியேவா அசுத்தமாக இருக்கவேண்டும்? வெறுத்துப்போய் விமானத்தின் போர்டிங் பாஸ் கிடைக்குமிடத்தின் அருகே சென்று பார்வையிட்டேன். அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி வழிந்திருந்தனர். சிலர் இரண்டு இருக்கைகளில் சாய்ந்து வாய் பிளந்து உறங்கியிருக்க, சில ஆந்தைகள் லாப்டாப்களில் படு சீரியஸாக மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஒரு தூணின் அடியில் சிறிது இடமிருக்கவே, தொப்பென அங்கே அமர்ந்து கண்மூடினேன். தூக்கம் அழுத்தியதென்றாலும், உறங்க முடியவில்லை. அலுப்பும் , வலியும் எரிச்சலும் மிகுந்திருந்தன. இனிமே விமானத்தில் ஆசிய சைவ உணவென்று கொடுத்தாலும் பக்கிரிமாதிரி திங்கக்கூடாது...

தேவுடா என இருந்தவன் எதிரே இருந்த தூணின் அடியில் கால் விரித்து அக்கடாவென அமர்ந்திருந்த ஒரு மனிதர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கவே, "ஹலோ" என்றேன். தூக்கம் வராம இருக்க மற்றவர்களை அறுப்பதைவிட வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அந்த மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். இரு நாட்களாக சவரம் செய்யாத தாடி -சீராகவும் முளைக்காமல், கன்னாபின்னாவென இருந்தது இன்னும் அழுக்காகக் காட்டியது.

"ஹலோ" என்றவரது கண்கள் சிவந்திருந்தன. தமிழ்க்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டபின் புன்னகையில் ஒரு அன்னியோன்னியம் இருந்தது." நான் ஆரோக்கியராஜ்" என்றார். "டோ ரெண்டோ வில் இருக்கேன். நியூயார்க் போய்விட்டு பத்து நாள் கழிஞ்சு கனடா போவேன்" என்றார்.
"சீனாவில் கொஞ்சம் வேலை. ஆர்டர் கொடுத்துவிட்டு, சியோல் வழியாகப் போகவேண்டியவன்... ஊருல சொந்தக்காரர் ஒருத்தர் சீரியஸ்..., இந்தியா போயிட்டு டிக்கட் கிடைக்காம இப்படி...." நொந்து நூலான கதை எல்லாருக்கும் பொதுதான் போலும்.
"சீனா எப்படி இருந்தது?"
எனது கேள்வியின் உட்காரணம் கடிகாரத்தில் இன்னும் இரண்டுமணிநேரம் கடத்துவதற்காக மட்டுமே. தூக்கம் இன்னும் சொக்கியது.
"இருக்குங்க ..எல்லாம் நம்ம ஊரு மாதிரிதான்"
ஆச்சரியமானேன். நம்மவூர் மாதிரி என்று கேட்டது புதியதாக இருந்தது.
"நம்மூர் மாதிரின்னா?"
"ம்.. எங்கப்பா சொல்லுவாரு." சொந்த ஊர் தாண்டிட்டா எல்லா ஊரும் பரதேசந்தான்."-ன்னு அதுல சீனாவென்ன, கனடாவென்ன.. எங்க போனாலும் ஊருன்னா நம்ம ஊருதான். என்ன நான் சொல்லறது?.." "
" சீனாவும் கனடாவும் ஒண்ணாயிருமா? ஒங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காங்க-ன்னு வைச்சுக்குவம். சீனாவா , கனடாவான்னு... ரெண்டும் ஒண்ணுதான்னு சீனா போயிருவீங்களா?" சீண்டிப்பார்த்தேன்.
சிரித்தார். " எனக்கு நீங்க திருநெல்வேலியா, டொரொண்டோ வா-ன்னு கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவன். எங்க சோறுகிடைக்குதோ அதுதான்.." எத்திசைச் சோறு"ன்னு என்னமோ சொல்லுவாங்கள்லா... அதுதான் நம்ம பாலிசி" என்றவர், 'நியூயார்க்கில் என்ன வேலை சார்?' என்றார். சொன்னேன்.
" அடப்பாவமே.. இதுக்கு நீங்க நேரா பிலடெல்பியா போயிருக்கலாமே? நியூயார்க், அட்லாண்டா.. பிலடெல்பியா.. இதென்ன சுத்திவளைச்சு மூக்கைத் தொடற கதையாயிருக்கு?"
"வயித்தெரிச்சல் சார் " என்றவாறே பேச்சைத் திருப்ப முயற்சித்தேன்.
எதிரில் பேசிக்கொண்டே மெல்ல நடந்து வந்துகொண்டிருந்த மூவர் இந்தியர்கள் போல இருந்தனர்- அவர்களில் பாதிரியார் போல அங்கியணிந்திருந்த இருவர் சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருக்க, அருகில் நடந்து வந்துகொண்டிருந்தவர் அப்பேச்சில் ஈடுபடாமல் விட்டேத்தியாகப் பார்த்துக்கொண்டு வந்தார். எங்களைப்பார்த்துப் புன்னகைத்தார். :ஹலோ" என்றேன்.
" ஹலோ " எனப் புன்னகைத்தவர் குனிந்து கையை நீட்டினார். அமர்ந்திருந்தபடியே கை குலுக்குவது அவமரியாதை என நினைத்தாரோ என்னவோ, ஆரோக்கியராஜ் எழுந்து கை குலுக்கினார். அக்கடா வென இருந்த நானும் எழுந்தேன் வேறுவழியில்லாமல்.
"நான் டேனியல். ஹைதராபாத்-திலிருந்து வருகிறேன்." ( அப்படித்தான் பெயர் சொன்னார் என நினைக்கிறேன்.. சரியாக நினைவில்லை.)என்று ஆங்கிலத்தில் சொன்னவர் கொஞ்சம் தெலுங்கில் மாட்லாடிப்பார்த்தார். தமிழ் நாங்கள் என்று தெரிந்ததும் ஆங்கிலத்திற்கு மாறினார்.
ஆரோக்கியராஜ் கிறித்துவர் எனத் தெரிந்ததும் மகிழ்ந்து போனார் மனிதர். மற்ற இரு பாதிரியார்களில் கண்ணாடி அணிந்த ஒருவரைக் காட்டினார் " அவரும் நானும் ஒரு கான்பெரன்ஸூக்கு வந்திருக்கிறோம்" என்றார். ஆரோக்கியராஜ் அழைத்ததில், மூவரும் ஒரு காபி ஷாப்பை நோக்கி நடந்தோம்.
ஆரோக்கியராஜ் காபியை குடிக்க முற்படுமுன் டானியல் " ஒரு நிமிஷம்" என்றார். கண்களை மூடி ஜபித்தார். நாங்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டோ ம்.
" ஆண்டவனுக்கு முதலில் நன்றி சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் " என்றார் டானியல் ஆங்கிலத்தில்.
ஆரோக்கியராஜ் புன்னகைத்தார். " நான் ஒர் விசுவாசி. எனது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.." என்றவர் மேற்கொண்டு சொல்லத் தயங்கினார்.
" ஒரு கிறித்துவராக இருந்து கொண்டு நீங்கள் ஆனந்தமாக ஜெபிக்கவேண்டாமா? முஸ்லிம்கள் தொழுகை நேரத்தில் எங்கு இருந்தாலும் தொழத் தவறுவதில்லை. நீங்கள் என்னடாவென்றால் பிரார்த்தனை செய்யத் தயங்குகிறீர்கள். கேலியாகப் பார்ப்பார்களே என்று வெட்கம்... என்ன சார்?" என்றார் டானியல் சற்று சூடாக.
ஆரோக்கியராஜ் சிரித்தார் . " கொஞ்சம் இருங்கள். நான் இப்போ வந்துவிடுகிறேன்" என்றவாரே தனது போர்டிங் பாஸ் , பாஸ்போர்ட் இத்யாதிகளை அடுக்கிக்கொண்டு தனது விமானத்தின் நேரத்தைச் சரிபார்க்கப் போனார்.

டானியல் என்னைப் பார்த்தார். "உங்கள் பெயரென்ன சொன்னீர்கள்?" முதற்பெயரைச் சொன்னேன்.
பெயரில் எனது மதம் தெரியவில்லை போலும். " நீங்களாவது ஜெபித்திருக்கலாம்" என்றார்.
"மன்னிக்கவும். எனக்கு பிரார்த்தனை செய்யத் தோன்றும்போது செய்வேன். காபிக்கெல்லாம் ஆண்டவன் கோபித்துக்கொள்ளமாட்டான் என நினைக்கிறேன்" என்றேன். இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது.
" நீங்கள் விசுவாசிஇல்லை அல்லவா?" என்றார்
" எந்த விசுவாசத்தைச் சொல்கிறீர்கள்?" என்றேன்.காபி உதட்டைச் சுட்டது.
" பைபிளில் வருகிறது.. " கர்த்தரை நம்பாதவனுக்கு அந்தோ.."
"சார்" என்றேன் பொறுமையிழந்து. " எனக்கு பைபிள் நன்றாகவே தெரியும். ஆனால் நான் கிறித்துவனில்லை. அதனால் விசுவாசியில்லை என்று அர்த்தமில்லை. எப்படி விசுவசிக்கவேண்டுமென்றும் , கீழ்ப்படிதல் வேண்டுமென்றும் எனக்கு நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். காபியைக் குடியுங்கள்".
அவர் எழுந்துவிட்டார். எவரும் எங்களைக் கவனிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
" உட்காருங்கள்." என அமைதிப்படுத்தினேன்." என்ன நடந்து எனக் கோபப்படுகிறீர்கள்? நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே?"

"நீங்கள் கிறித்துவர் இல்லை என்றால் ஏன் பைபிள் பற்றிப் பேசுகிறீர்கள்?" என்றார். வாழ்க்கையில் முதன்முதலாக இப்படிக்கேட்கிறேன்.
" வெட்டி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை. பிரார்த்தனை செய்வதும், செய்யாதிருப்பதும் அவரவரது கடவுள் குறித்தான அறிதலும், சுதந்திரமும்.அந்த மனிதரை முதலில் கேட்டீர்கள். இப்போது நான்.. " முடிக்கவில்லை நான். மனிதர் தோளில் பையை மாட்டிக்கொண்டார். என் முகத்தருகே குனிந்தார்.
" உங்களைப்போன்ற ஆட்களுக்கு நாங்கள் சொல்லிப்பார்த்தும் பயனில்லை. நியாயத் தீர்ப்பு நாள் வரும். அன்று புரியும்." சொல்லிவிட்டு விடு விடுவென நடந்தார்.
எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.. காபியை மெல்லப் பருகினேன்.
ஆரோக்கியராஜ் மீண்டும் வந்தார். முகமெங்கும் சிரிப்பாக. " என்ன மாட்டினீர்களா?" என்றார்
"கிண்டலா?" என்றேன்." மனிதர் என்னைச் சபிக்கவில்லை அவ்வளவுதான். நியாயத்தீர்ப்பு நாளுக்கு காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்."
நடந்ததைச் சொன்னேன்.
ஆரோக்கியராஜ் சற்று மெளனமானர்.
" இவர்கள் போல சிலரால் எது தெய்வ பாதையெனவே தெரியாமல் போகிறது. நான் ஜெபிக்கிறேன். ஆனால் எல்லா ஞாயிறு தோறும் சர்ச் போவதில்லை. என் வேலை அப்படி. நான் மனிதனா என்னும் கேள்விக்கு விடை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பைபிளில் அதற்கு கிடைக்கும் அறிவுரைகள் படி நடக்கிறேன்." என்றார்
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
" எனக்குத் தெரிந்து ஏதோ எனக்குத் தோன்றியதைச் செய்கிறேன். இரு குழந்தைகளுக்கு படிக்க வசதி செய்திருக்கிறேன். அவர்களை கிறித்துவராக ஆகும்படி சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டேன். சொல்லப்போனால் நான் யாரென்றே அவர்களுக்குத் தெரியாது." தொடர்ந்தார்.
" ஆண்டவன் நமது நன்றியையல்ல , அன்பையே எதிர்பார்க்கிறான்" என்றேன்.
" எக்ஸாட்லி. கிறிஸ்து சுகமாக்கிய முடவர்களும், குருடர்களும், நோயாளிகளும் அவரிடம் நன்றி சொன்னதாக பைபிளில் இல்லை எனப் படித்திருக்கிறேன். அவர் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. நமது அன்பை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு,முரட்டுத்தனமாக மற்றவர்களை கடிவது கிறித்துவமல்ல." என்றார்.
"இதைச் சொல்லுவதால் நீயெல்லாம் கிறித்துவனா? என யாராவது கேட்டால் நான் கவலைப்படுவதில்லை." என்றவாறே காபியை அருந்தினார். அவர் முகம் இறுகியிருந்தது. இரு நிமிடம் நாங்கள் இருவரும் பேசவில்லை.

"நேரமாகிறது" என்றவாறே எழுந்தார். கைகுலுக்கியபடி பிரிந்தவரது கழுத்தில் இருந்த மெல்லிய ஜபமாலையில் வெள்ளி சிலுவை லேசாக மினுமினுத்தது.

Friday, May 05, 2006

குஜராத் வன்முறைகள்- பின்னணி

குஜராத்தில் கொதிப்பு இன்று நேற்றல்ல 1947க்கு முன்பிருந்தே இருக்கிறது. என்ன , கொஞ்சம் புகையடித்துக் கிடக்கும் சில வருடங்களுக்கு.. பின் மீண்டும் எரிமலைகள் சீறும் - இருபுறமிருந்தும்... இதில் போதாக்குறைக்கு பாகிஸ்தான் வேறு கட்ச் எல்லைப்ப் பகுதியில் ஊடுருவி ஆயுதங்களை அனுப்பி வைக்கும்.

குஜராத்தின் அமைப்பும் இக்கொந்தளிப்புக்குக் காரணம். கட்ச் பகுதியில் எல்லைப் பகுதி porous border. எத்தனைதான் கண்காணித்தாலும் ஊடுருவி வருவது எளிது. பஞ்சாப்ப் பகுதியிலோ காஷ்மீரத்த்திலோ இது போல் வெட்டைவெளி கிடையாது. ராஜஸ்தான் ,குஜராத் எல்லை பாதுகாப்பு மிக கடினம். பலூச்சிகளும், சிந்திகளும் மட்டுமல்ல; சில நாடோடி 'ரப்பாரிகளின்' காரவன்களும் (கட்ச் பகுதியில் இருந்து ராஜஸ்தான்வரை திரியும் சுதந்திரக் குடிமக்கள்) எல்லைகளில் தான்டித் திரிவர். யாரை யெனக் கண்காணிப்பது?
1400 களில் அகமதாபாத் ஒரு நகராக உருவானபின் நிகழ்ந்த அடக்குமுறைகள் , மராத்தா படையெடுப்பு, இந்து முஸ்லிம் குட்டி சமஸ்தானங்களின் அடிதடி, ஜூனகாத் மன்னர் பாகிஸ்தான் போக நினைத்தது எனப் பல வெளிப்பாடுகல் ,மிக முக்கியமாக சோமநாதபுரப் படையெடுப்புகள் மக்களை பல ஆண்டுகாலமாகவே சமய அடிப்படையில் பிரித்து வைத்திருக்கின்றன.
குஜராத் வன்முறைலளுக்கு வரலாற்றுப் பின்னணி இருப்பினும், பெருவாரியான கலவரங்கள் அண்மையில் அரசியல் சார்ந்ததாகவே நிகழ்ந்தன. பாகிஸ்தானிய ஊடுருவல்கள் அப்பட்டமாகத் தெரிந்திருப்பினும், காங்கிரஸ் அரசுகள் வாக்கு வங்கி அரசியல்லில் கண்மூடி இருந்தது. பெருமளவில் வளர்ந்த ஆயுதக் கிடங்குகள் நம்மமுடியாத இடங்களில் கண்டறியப்பட்டன. இது அகமதாபாத் 2002-இல் கொந்தளித்தபோது வெளியானது. அப்பாவி மக்கள் பலரும் ஒட்டுமொத்தமாக "பாகிஸ்தானிய உளவாளிகள்" எனக் குறிக்கப்ப்ட்டு கொல்லப்பட்டனர். நரோடா என்னும் பகுதியில் நடந்த கொடூரம் இன்னும் அகமதாபாத் நகரில் அச்சத்துடன் பேசப்படுகிறது. பெஸ்ட் பேக்கரி-க்கு சமமாக இதைச் சொல்லலாம்.

பழைய நகர்ப் பகுதிகள் புராதனக் கட்டிடங்கள், நெரிசலான சாலைகள் எனக்கொண்டு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருப்பது கண்கூடு. 'கடைகள் வீடுகள் ஒரே கட்டிடத்தில் கீழும் மேலுமக அமைந்திருப்பதும், நெரிசலான கட்டிடங்களில் மக்கள் கூட்டாக வாழ்வதும் தடுப்புக்காப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.'என்றார் எனது நண்பர். இது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் இப்படித்தான் தன் கூட்டமாகவே வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

புது நகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக்கட்டிடங்கள் வந்தபின்னும், கட்டிடங்களில் சொசைட்டிகள் தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமே வீடுகளை விற்கவும் வாங்கவும் உரிமை அளிக்கின்றன. பழைய நம்பிக்கையற்ற மனப்பாங்கு இன்னும் தொடர்கிறது. இவ்வளவு ஏன்.. இக்கட்டிடங்கள் அமைந்த தெருக்களில் இருக்கும் பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் தங்கள் சமூக மாணவர்களுக்கே முன்னுரிமை. சிறுபான்மையினர் சலுகைகள் கொண்டு அமைக்கிறார்கள் என்றால், பெரும்பான்மையினர் தங்கள் சமாஜம் டிரஸ்டு என்பதின் மூலம் கல்விச்சாலைகள் அமைக்கின்றனர். பெருமளவில் மாணவர்களிடம் வேறுபாடு காட்டப்படுவது இல்லை எனினும் இந்தப் போக்கு கவலை தருவதாகவே உள்ளது.

இவர்களது பரஸ்பர நன்பிக்கையற்ற மனபாங்கு தெரியவேண்டுமானால், ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் இந்துவாக இருந்தால் " அவங்களை நம்பவே கூடாது" என்பார். அவர் முஸ்லிமாக இருந்தால் " இவ்னக்களை நம்பவே கூடாது" என்பார். இருபாலருக்கும் எங்காவது ஒரு உள்காயம் இருக்கும் நிச்சயமாக. எவராவது அவர் குடும்பத்தில் வன்முறையில் மரித்திருப்பார். உதவ வருபவர்கள் அவரது சமூகம் சார்ந்தவராகவே பெரும்பாலும் இருக்க, பழி உணர்ச்சி தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது.

சமானிய மனிதர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதால், கூட்ட உணர்வு பெரிதாக மதிக்கப்படுகிறது. ஒரு கூட்டமாக இருந்து அடித்துப் பழிவாங்க ஒவ்வொரு மனிதனும் துடிக்க பண்டிகைகளை நோக்கிக் காத்திருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் இலக்காகின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேடும் முதலைகள் வேறு. வெறியாட்டத்திற்குக் கேட்கவேன்டுமா?

வன்முறையில் ஈடுபடுபவர்களின் சமூக , பொருளாதார்ச் சூழல் ஆராயப்படுவதில்லை. இது பல அரிய உண்மைகள வெளிக்கொணரலாம். ஒட்டுமொத்தமாக " இந்துக்கள் கொல்கிறார்கள்" என்றோ "முஸ்லிம்கள் நாட்டுத் துரோகிகள்" என்றோ சொல்வது அரசியல் ஆதாயம் தேடும் சமூக விரோதிகளே.சேரிகளில் இக்கலவரம் நிகழ்வது சேரிகள் ஆக்கிரமித்க்த நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் பேராசைக்கார பில்டர்களின் தூண்டுதல்களே பெரும்பாலும்.
கல்லெறிபவனும், அடிபடுபவனும் கொண்டுள்ள உள்தாக்கம் கவனமாக ஆராயப்படுமானால் இவற்றின் தீவிரம் குறையும்.
குறையவேண்டும் ...

Thursday, May 04, 2006

குஜராத் அனுபவம்

"பரோடா மீண்டும் எரிகிறது. ஒரு மனிதனை உயிருடன் வைத்து எரித்திருக்கிறார்கள்" செய்தி வரிகள் தொலைக்காட்சியில் சீராக ஓடிக்கொண்டிருக்க, "சே என்ன மனிதர்கள்.? நாமெல்லாம் அங்கே இருந்தப்போ இப்படியில்லையே?" என் மனைவி கேட்டாள். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு சன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். அன்றும் இப்படித்தான் இருந்தது.. மிக மெல்லிய நட்சத்திரப் படுகை.. ஆனால் அன்று கொஞ்சம் காற்று குளிராக இருந்தது மட்டும் வித்தியாசம்.

1993 ஜனவரி
பாவ்நகர் விட்டு நான் கிளம்பும்போது மணி ஐந்தாகிவிட்டிருந்தது. இன்னும் நாலு மணி நேரம் பயணம் ... அகமதாபாத் வரை. லாரிகள் போக்குவரத்து இரவு ஏழுமணிக்கு மேல் அதிகரித்து விடுமாதலால், பேருந்துகள் மெதுவாகவே செல்ல முடியும். சாலைகள் அப்போதெல்லாம் இத்தனை அகலமில்லை குஜராத்தில்.

கிடைத்த தனியார் பேருந்தில் அடித்து பிடித்து முன்னால் கிடைத்த பக்க இருக்கையில் அமர்ந்தேன். வீடியோ கோச் என்பதால் சரியாக தலைக்கு மேலே மாதுரி தீக்ஷித் "ஏக்தோ தீன்" என தேசாப் படத்தில் ஆடிக்கொண்டிருக்க நான் "விதியே" என முழித்துக்கொண்டு அக்காட்டுக் கூச்சலில் அமிழ்ந்து வந்துகொண்டிருந்தேன்.
நடு வழியில் பத்து நிமிடம் டிரைவருக்கு இலவசமாக சாப்பாடு கிடைக்கும் விடுதியில் நிறுத்தினார்கள். " தஸ் மினிட் ருக்கேகா." என எவருக்கோ வந்த வாழ்வாகச் சொல்லிவிட்டு குதித்து இறங்கிப் போனார். பீடி வெளிச்சம் மட்டும் சிவப்புப் புள்ளிகளாக அங்காங்கே தெரிந்தது.
அருகில் இருந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் " மணிநகர் பக்கம் ஒரு கோயில இடிச்சுட்டாங்களாம். அகமதாபாத்துல ஊரடங்கு உத்தரவுன்னு சொல்றாங்க." அப்பெண்மணி தலையில் கைவைத்து சீட்டின் முன் சரிந்தார். "ஹே ராம். எப்படி வீட்டுக்குப் போவோம்?"
எனக்கு பயம் வயிற்றைக் கவ்வியது. பாப்ரி மசூதி இடிப்பின்போது சூரத்தில் இருந்து மும்பைக்கு deluxe ரயிலில் பயணப்பட்டிருந்தேன். தாதர் ரயில் நிலையத்திலிருந்து கிங் சர்க்கிள் வருவதற்குள் உயிர் போய்த் திரும்பி வந்திருந்தது. இப்போது அகமதாபாத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறேன்... எங்கே போவது?
நான் தங்கியிருந்த விடுதி காலுப்பூர் ரயில் நிலையத்தின் அருகே. போகவே முடியாது.
புதிய நகரில் இருக்கும் சாட்டிலைட் பகுதியில் இருக்கும் எனது கிளை அலுவலகத்தில் தங்கலாம் என முடிவு செய்தேன். அகமதாபாத் நகர் எல்லையில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடவேண்டும்...

இறங்கியபின் தான் எனது முட்டாள்தனம் தெரிந்தது. ஒரு ஈ, காக்கா இல்லை ரோட்டில். இறங்கிய இடம் எதுஎனத் தெரிந்ததும் இன்னும் பயம் கூடியது. ஜுவாப் புரா என்னும் பகுதி. முஸ்லிம்கள் பெருவாரியான பகுதி. அதன் எல்லையில் வேஜல்பூர் என்னும் இந்துக்கள் பெருவாரியான பகுதி. இரண்டுக்கும் எல்லையில் அடிதடி பயங்கரமாக இருக்கும். அந்த ஜுவாப்புரா பகுதியில் தனியனாக நான்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.. கையில் ஒரு ப்ரீஃப்கேஸ்.. நெஞ்சில் பயம்...
"ருக்கோ. கோண்?" மெல்லியதாகக் கேட்ட அக்குரலுக்கே வியர்த்தேன். பேசவில்லை
அருகில் வந்த உருவம் தெருவிளக்கொளியில் என்னைக் கூர்மையாகப் பார்த்தது. மெலிந்த உருவம். அழுக்கு ஜிப்பா. தலையில் தொப்பி..
" எங்கே போகிறாய்?"
உடைந்த குஜராத்தியில் " வேஜல்பூர்" என்றேன். அரை நிமிடம் மெளனமாக நின்றவன் "முட்டாள்தனமாக வந்திருக்கிறாய். ஜுவாப்புரா தாண்டுவாயா? அறிவு வேணும்" என்றபடி இருமித் துப்பினான்.
"எனக்கு மும்பை போகணும் நாளைக்கு. எப்படியாவது சாட்டிலைட் போனாப்போதும் இப்போ." உளறிக்கொட்டினேன். சிறிய மொளனத்தின் பின் என்னைத்தாண்டிச் சென்றான்.
"என்னோட வா" என்றபடி முன்னால் நடந்தான்.
ஏன் அவனுடன் நடந்தேன் எப்படி அவனை நம்பினேன் என்றெல்லாம் எனக்கு இன்றும் தெரியாது. பலியாடாகவே பின் தொடர்ந்தேன்.
ஜுவாப்புராவுக்கும் வேஜல் பூருக்கும் இணைப்பாக ஒரு தார் ரோடு உண்டு. நூறு அடி வரை இருபுறமும் ஒரு புல்பூண்டு இருக்காது. திடீரென இரு பகுதிகளிலும் நெரிசலாக வீடுகள் அடர்ந்திருக்கும். அந்த வெறுமையான இடைவெளியில் எவர் நடந்தாலும் இருபுறமும் தெரியும்.. அடிக்கத் தோதாக.
"எனது கடை இது" என மூடப்பட்டிருந்த ஒரு கடையைக் காட்டினான். அருகில் நெருங்க நெருங்க நிழல்கள் தெரிந்தன. இருளில் கத்தினான் " மாரு மித்ர சே" ( எனது நண்பன் இவன்)
தயங்கிய நிழல்கள் சுவரில் தொத்திநிற்க, திரும்பி என்னைப் பார்த்தான்.
" முன்னால் போ. திரும்பிப் பார்க்காதே. அந்தப்பக்கம் யாராவது கேட்டால் பதறாமல் உன் பெயரைச் சொல். அவசரப்பட்டு ஓடாதே." சொன்னவன் ஒரு சுவருக்குப் பின் மறைய, நான் தனியாக அப்பாதையில் தொடர்ந்தேன். சுவர்க்கோழிகளின் சப்தம் மட்டும் கேட்க, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நூறு மீட்டர் தூரம் மட்டும்..

நல்லவேளை எவரும் என்னைத் தடுக்கவில்லை. வேஜல்பூரில் ஆட்டோ கிடைக்காமல், மீண்டும் நாலு கி.மீட்டர் நடந்து சாட்டிலைட் பகுதிக்குச் சென்றேன். நிறையப் பேர் என்னைப்போலவே ஆட்டோ இல்லாமல் நடந்தனர் என்பதால் பயமின்றிச் சென்றேன்.

வெகுநாட்கள் கழித்து மீண்டும் அகமதாபாத் சென்றபோது அந்தப்பகுதி வெகுவாக மாறியிருந்தது. பெரும் கட்டிடங்கள் இருபுறமும். அகலவெறுமை குறுகியிருக்கிறது.. ஆனாலும் இருக்கிறது இன்னும்..

Monday, April 17, 2006

அமிழ்து அமிழ்து ... தமிழ்.

தூத்துக்குடி தெய்வங்கள் பதிவில் விட்டுப்போன தெய்வங்கள் பலருண்டு. வாழ்க்கையை சீர்படுத்திய தெய்வங்களைப் பற்றி மட்டுமே அங்கு பதிந்திருந்தேன். வாழ்வின் பன் முகப்பு குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்திய சிலர் குறித்து எழுதலாமென இருக்கிறேன்.

பள்ளிச்சிறுவனாயிருந்தபோது தமிழ் இலக்கியமென்றாலே அப்படியொரு வெறுப்பு இருந்தது எனக்கு . திக்குவாய் ஒரு காரணம். இரண்டாவது , செய்யுள்கள் படித்தால் எளிதில் புரியாது. இந்த லட்சணத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் இரண்டு வினாத்தாள்கள்...
ஒன்பதாம் வகுப்பு, ரீசஸ் பீரியடில் சில நண்பர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தேன். 'இந்த தமிழ் அறுக்குதுல. இதப் படிச்சு என்ன சாதிக்கப்போறம்..சொல்லு பாப்பம்." நான் சொல்லிக்கொண்டிருந்ததை பின்னால் நின்றிருந்த தமிழைய்யா சலைஸ் சார் கேட்டுவிட்டார்.
சலைஸ் சார் என்றால் வெள்ளைக் கதர்/பருத்தி அரைக்கால்சட்டை, தும்பைப்பூ போல் வெளுத்த வேட்டி, வெற்றிலை போட்டு சிவந்த வாய் , கோபத்தில் சிவக்கும் கண்கள் என கலர்கலராய் நினைவு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் இரட்டைக்கோடு நோட்டில் தமிழ் எழுதிப் பழகச் சொன்னார். "தமிழ் எழுத்து சதுர வடிவத்துல இருக்கணும். தெரியுதா? வளைஞ்சி வளைஞ்சி இருந்தா அது மலையாளம்..முட்டாப்பயலுவளா'

"செத்தேன்" எனப் பயந்து கொண்டிருந்தபோது, " தமிழ் பிடிக்கலையா தம்பி?" என்ற மிருதுவான வார்த்தைகள் வினோதமாகமும், என்ன பெரிய அடி இருக்குதோ என்ற பயம் உண்டாக்குவதாகவும் இருந்தன.
"ஐயா, செய்யுள் வார்த்தையெல்லாம் கஷ்டமாயிருக்கு. இதுக்கு கத படிச்சுட்டுப் போயிரலாம்லா? இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்யுள் படிக்கணும்?" என்றேன்.
"நீ எந்த கிளாசு?"
"பத்து H " என்றேன்
" நாளைக்கு கோலியாத்து, தாவீது போர் பத்தி உன் வகுப்புல பாப்போம். அதுக்கப்புறம் ஏன் செய்யுள் படிக்கணும்னு சொல்லுதேன். என்னா? போ"
மதிய இடைவேளையில் டிபன்பாக்ஸ் கழுவிக்கொண்டிருக்கும்போது எனது சீனியர் (11ம் வகுப்பு) சண்முகத்திடம் காலையில் நடந்ததைச் சொன்னேன்.
" ஏல, அவருகிட்டயா இப்படிப் பேசின? கோவம் வந்தா பிச்சுருவாரு தெரியும்லா? அடிச்சாருன்னா டிராயர்லயே மோண்டுருவ. பாத்துல.." என அன்பாய் எச்சரித்தான்.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்பில் தயாராக அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரையும் எழுப்பி ஒரு செய்யுள் படிக்கச் சொன்னார். விளக்கமும் கொடுத்து வந்தார்.
எனக்கு அடுத்திருந்த ஜேம்ஸ்-இன் முறை வந்தது. எழுந்தான்.
"கோலியாத்தின் கோப மொழி" என்று தலைப்பில் தொடங்கினான். அவர் கண்களை மூடினார் " ம்.. மேல படி"
"நீயடா எதிர்நிற்பதோ? மதம்பொழி கரிமேல்
நாயடா வினைநடத்..." அவன் முடிக்கவில்லை..
பளீர் என ஜேம்ஸ் முதுகில் அடி விழுந்தது. "எய்யா." என அலறினான்.
"கோபமொழியால படிக்கே? செத்தவன் கூட உரக்கச் சொல்லுவான். கோப மொழின்னா கோபமாயிருக்கவேணாம்?மூதி" கோபத்தில் அவர் மூச்சு ஏறித்தாழ்ந்தது. வகுப்பு உறைந்தது. நான் முன்னயே சண்முகத்தால் எச்சரிக்கப்பட்டதால் ஆவென வாயைப் பொளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
"எல்லாவனும் புத்தகத்தை மூடுங்க. முன்னால என்னப் பாரு"
அத்தனை புத்தகங்களும் மூடும் சப்தம் மட்டும் கேட்டது. மயான அமைதி.
"நல்லா கவனிக்கணும். கோலியாத்து யாரு?பெரீய்ய்ய அரக்கன். பிலித்தியர்களோட பெரும் வீரன். அவன் கூட பெரிய பெரிய சேனைகள் கூடத் தோத்துப்போயிருச்சு. அவ்வளவு பெரிய்ய அரக்கன் முன்னால எலிக்குஞ்சு கணக்கா யாரு போய் நிக்கா?"
"தாவீது' உற்சாகக் குரல்கள் வகுப்பு முழுதும்
"இந்த எலிக்குஞ்சி போய் "சண்டைக்கு வரியால?"ன்னு கேட்டு நிக்கி. கோலியாத்துக்கு அவமானமுல்லா?"
"ஆமா சார்" கோரஸ்
"கோலியாத்துக்கு கோவமும், ஆத்திரமும் பொங்கிப் பொங்கி வருது. அவன் எப்படிப் பேசியிருப்பான்? "நீயடா எதிர் நிற்பதோ?" என்ன ஆவேசமா வந்திருக்கணும் வார்த்தை? என்னடே?"
"ஆமா சார்" மீண்டும் கோரஸ்
"இந்தப்பய செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி புஸ்தகத்த எடுத்துகிட்டு எந்திச்சி நிக்கான். அப்பவே நினைச்சேன். பிறவு, நம்ம பெரியகோயில் சர்ச்சுல சங்கீதம் பாடறமாதிரி மெல்லமா இனிமையா நீட்டிப் பாடுதான்.. "நீயடா எதிர்நிற்பதோ?"ன்னு"....
"உக்காரு" என்றார் ஜேம்ஸை.
"தாவீது கோலியாத்து கதை உங்க எல்லாருக்கும் தெரியும். ஏன் செய்யுள்ல படிக்கணும்? ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்வு, உயிர் இருக்கும். அது உணரணும்னா, முங்கி முங்கி முத்தெடுக்கற மாதிரிப் படிக்கணும். தமிழ் இலக்கியம் ஒரு கடல் மாதிரி. முத்து எடுக்கணும்னா மூச்சுத்திணறி முங்கினாத்தான் முடியும்.வெளங்குதா?
நான் திறந்த வாய் மூடவில்லை.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்புத் தாழ்வாரத்தில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். " என்னடே? செய்யுள் ஏன் படிக்கணும்னு வெளங்குதா?"
பீதியுடன் தலையாட்டினேன்.
"என்னமோ நான் சொல்லறது ஞாபகமிருந்தா சரி" வேட்டியின் ஒரு மூலையைக் கையால் சிறிது தூக்கிப்பிடித்தபடி அவர் சென்றுவிட்டார்.
கோலியாத்தின் கோப மொழியும், ஒரு தெய்வ மொழியும் என் மனதில் இன்றும் இருக்கின்றன.

Sunday, April 16, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் ( முடிவு)

திடீரென ஒருநாள் பிரதாப் சிங் சார் "என்.ஸி.ஸி தினத்திற்கு நாடகத்துல நடிக்கிறியா?" என்று கேட்டார். அதன் முன் நடித்திராத தயக்கம் இருந்தாலும், சரி என்றேன். '84ல் தூத்துக்குடியில் கல்லுரி அளவில் எதோவொரு அமைப்பின் சார்பில் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திக்கொடுத்தனர்.அதிலும் நாடகத்தில் பங்கேற்க பேர் கொடுக்கப்போனேன்.
என் நண்பர்கள் எச்சரித்தனர். " வேணாம்ல. எதாச்சும் ஒரு ஃபீல்ட்ல இரு. நாடகம் எல்லாம் உனக்கு ஒத்துவராது. திக்குவாய் வந்துச்சி.. ... மவனே , மக்கள் உன்னை ஸ்டேஜ்-ல கல்லெறிஞ்சே கொன்னுருவாங்க"
பயப்பட்ட , பயப்படுத்திய விஷயங்களை தைரியமாக செய்யத் தூண்டிய பிரதாப் சிங் சார் அவர்களை நினைத்துக்கொண்டே என் பெயரைச் சேர்த்துவிட்டு வந்தேன்.
நண்பன் கிருஷ்ணன் கேட்டான் " நீ நடிக்கியா?வெளங்கினமாதிரித்தான்.. ஒழுங்கா தமிழ் வருமால உனக்கு?"
சைக்கிளை மிதித்தவாறே சொன்னேன் " தமிழ் நாடகம் இல்லடே. இது ஆங்கில ஓரங்க நாடகம்."

அவன் உறைந்து போனான். 'தமிழே உருப்படியா வராது.. இதுல இங்கிலீஷ்ல வேற..' போட்டி நடந்த நாளில் அவன் வரவேயில்லை. அழுகிய முட்டைகளும், கூவல்களும் கொண்டு கல்லூரியின் மானத்தை இவன் புடுங்கப்போகிறான் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு. அதில் பரிசு பெறாவிட்டாலும் பாராட்டுகள் கிடைத்தன. ஒரு மாதத்தில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி நடத்திய FEMER (84 அல்லது 85 ..சரியாக நினைவில்லை) விழாவில் ஓரங்க நாடகத்திற்கான முதல்பரிசு அந்த நாடகத்திற்குக் கிடைத்தது.

முன்பு எங்கோ படித்திருந்த ஒரு கதையை( Spaniard and Red Indian) ஒரங்க நாடகமாக்கியிருந்தேன் மற்ற ஒரு நாடகம் ஆப்பிரிக்க விடுதலைக் கவி பெஞ்சமின் மொலா குறித்தது. இந்த நாடகப் பயிற்சியின் விளைவாக எனது உச்சரிப்பு சரியானது. பிழைகள் குறைந்தன. பின்னாளில் கொச்சி பல்கலைக்கழகத்திலும் இந்நாடகம் முதல்பரிசு வாங்கித்தந்தது. இதன் காரணமாகவே தன்னம்பிக்கை பலமடங்காக உயர்ந்தது.

எனது நிழல் எதிரிகளை அடையாளம் காணவும் அவற்றோடு போராடவும் கற்றுத் தந்த இத்தெய்வங்கள் இல்லாதிருந்தால் இன்னும் தாழ்வு மனப்பான்மையில் அழுந்தி எங்காவது கிடந்திருப்பேன். ஆண்டவன் இத்தெய்வங்களுக்கு நலமும் நீண்ட ஆயுளும் அளிக்கட்டும். மாணவர்களுக்கு வருங்காலத்திலும் இதுபோன்ற தெய்வங்கள் அமையட்டும் என்ற வேண்டுதல்களுடன்.
க.சுதாகர்.

தூத்துக்குடி தெய்வங்கள் 3 (1)

அடுத்தநாள் ஆங்கிலத் துறையில் திரு.சங்கரன் சார் அவர்களிடம் சென்று பொதுஅறிவுப்போட்டிக் குழுவில் எனது பெயரையும் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தேன். அடுத்ததாக தமிழ்த்துறையில் ஜெகதீசன் அய்யாவிடம் கவிதைப்போட்டிக்குப் பெயர் கொடுத்தேன். தமிழ் பேச்சுப்போட்டி, ஆங்கிலப் பேச்சுப்போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டி , ஆங்கிலக் கட்டுரைப்போட்டியென சகட்டுமேனிக்கு பெயர்கொடுத்துவிட்டு ஒரு வெறியில் வெளிவந்தேன்.

ஆங்கிலப் புத்தகங்களில்தான் தடுமாறினேன். சில பெயர்கள் தவிர எனக்கு ஆங்கில அறிஞர்கள் பெயர்கூடத் தெரியாது. சங்கரன் சார் அவர்களை அணுகினேன்.

ஆங்கில இலக்கியம் .... அதுவரை பாடம் மட்டும்தான். சங்கரன் சார் அறிவுரைப்படி ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முனைந்தேன். மீண்டும் குட்டியும் நானும் ஜோடி சேர்ந்தோம்.

ஹார்பர் பொது நூலகத்தில் எங்களுக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. பள்ளியின், நீண்ட விடுமுறைகளில் காலையிலேயே போய் , அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளில் வரும் ஜோக்குகளுக்கு கெக்கே பிக்கேவென நூலகத்தில் சிரித்து "ஷ்..சத்தம்போடாதீங்கடா.. சவத்து மூதிகளா"என பேப்பர் படிக்க வரும் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருந்தோம். பின்னும் எதாவது ஜோக் படித்து சிரித்து " ஏலா, சும்மா இருக்க முடியாது? வந்தேன்னா பின்னிருவேன். தெரியும்லா?" என உள்ளிருந்து நூலகரிடமும் வசவு வாங்கிய பின்னரே அங்கிருந்து போவோம்.

எனவே, நாங்கள் போய் ஆங்கிலப் புத்தகங்களைப் எடுக்கப்போனபோது அவர் நம்பவில்லை.

"இங்கிலீஷ் புத்தகம் படிக்கற மூஞ்சிகளப் பாரு" என்ற வாசகத்தை அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தார். King Arthur and Knights, Don Quixote போன்ற அடிப்படைநிலைக் கதைகள் இருந்தன. அது தாண்டினால் Early churches of Erstwhile Travancore Province' என சுத்தமாகப் புரியாத ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருந்தன.

சங்கரன் சார் சிபாரிசு செய்த புத்தகங்கள் ஸ்பிக் நகர் ஜிம்கானா லைப்ரரில இருக்கும் என்றான் குட்டி.
எங்கள் குவார்டர்ஸிலிருந்து ஸ்பிக் நகர் குடியிருப்பு 7 கிமீ இருக்கும். கடற்கரை எதிர்காற்றில் சைக்கிள் மிதித்துப் போய் ஒரு புத்தகம் எடுத்து வருவோம். புத்தகங்களைத் தேடும்போது,கையில் கிடைத்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் விவகாரமாக இருக்கவே, அதனை குட்டி என்னிடம் மறைமுகமாகக் காட்டினான்.

"பாத்தியால? சரோஜாதேவி புக் எல்லாம் வைச்சிருக்காங்க"

அது James Hadley Chase என்பது பின்னரே விளங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஆங்கிலப் புத்தக உலகு அறிமுகப்பட்டது. ஒரு பெரும் உலகின் வாயிற்கதவுகள் எனக்குத் திறந்ததென உணர்ந்தேன்.

ஒரு வெறியுடன் படித்துவந்ததில், சுவாரசியமும் கூடவே, ஆசிரியர்களிடம் தைரியமாக ஆலோசனை கேட்கும் பக்குவமும், புத்தகங்களை விவாதிக்கும் மனதிடமும் வந்தது. ஆசிரியர்கள் 'இதைப்படித்துப் பாரு' என அறிவுறுத்த, பல புத்தகங்கள் அறிமுகமாயின. பல பொதுஅறிவு, கவிதை,பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் தலைகுப்புற வீழ்ந்தாலும், பலவற்றில் வெற்றியும் கிடைத்தது. ( இதைக்கொண்டாட ஸ்ட்ரைக் செய்யவில்லை என்ற வருத்தம் இல்லாமலில்லை!)

Saturday, April 15, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 3

அக்காலத்தில் எல்லா மாணவர்களைப்போலவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒரே குறிக்கோள் எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதுதான். மிகவும் முயன்றேன். எனது முயற்சிகள் பலமாகத் தெரிந்த அளவு முடிவுகள் வரவில்லை. 84% மட்டுமே MPC -இல் எடுத்திருந்தேன். நம்பமுடியாத அதிர்ச்சியில் மிகவும் சோர்ந்து போன நாட்கள் அவை.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரிக்குப் போகவே மனமில்லாமல் போய்வந்தேன். எதிர்காலமே இல்லை இனி என முடிவானது. "டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட்,வங்கிப் பரீட்சை எழுது." என அறிவுறுத்தல்களுக்கு சோர்வோடு உடன்பட்டேன்.
வ.உ.சி கல்லூரி நான் சேர்ந்த காலத்தில் அதன் பேர் கெட்டிருந்தது. ஸ்ட்ரைக், கல்வீச்சு, காலவரையற்ற மூடுதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கல்லூரியின் பழம்புகழ், ஆசிரியர்களது சிறப்பு கொண்டு மட்டுமே அங்கு அட்மிஷன் வந்தது.

எனக்குப் பேச்சு தெளிவுற்றிருந்தது, ஆங்கிலம் ஓரளவு பேசவும் தெரிந்தது என்றாலும் எஞ்சினீயரிங் கிடைக்கததால் தளர்ந்திருந்ததாலும், பயம் காரணமாகவும் ஆரம்பத்தில் தனித்தே இருந்தேன். 'என்னமோ படிச்சோம், வெளியே போனோம் என்றிருப்போம்' என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

முதல்நாள் தமிழ் வகுப்பிற்கு டாக்டர்.பிரதாப் சிங் வந்தார். அவர் வந்த இருபது நிமிடங்களில் ஒரு மாணவர் கூட்டம் வகுப்பில் வந்து " காண்டீன்ல வடை இல்லையென்கிறார்கள். கேட்டால் அலட்சியமாகப் பதில்வருது. இதைக்கண்டித்து இன்று ஸ்ட்ட்ரைக்" என அறிவித்துப் போனது. 'பத்து நிமிடத்தில் வகுப்பு கலையவேண்டும்' என்ற எச்சரிக்கையுடன்..

டாக்டர். பிரதாப் சிங் எதைத்தான் படிக்கவில்லை எனத்தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம் , பொருளாதாரம், வரலாறு இவற்றில் முதுகலை, ஹோமியோபதி , தமிழில் முனைவர் பட்டம் இத்தோடு என்.சி.சி யில் கடற்படை பிரிவின் தலைவர் (naval wing I). அவரது பட்டங்களின் எண்ணிக்கையில் கவரப்பட்டு அவருடன் வகுப்பு கலைந்தபின்னும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது என்.சி.சியில் சேரவேண்டுவோர் பேர் கொடுக்கும்படி அறிவிப்பை பியூன் கொண்டுவந்தார். அது பிரதாப் சிங் அவர்களின் யூனிட்-காகவே இருந்தது. பூரி செட்டு தின்னக்கிடைக்கும் என்ற அல்ப ஆசையில் நானும் பெயர் கொடுத்தேன். பி.எஸ்.சி இயற்பியல், கணிதம் படித்தவர்களுக்கு என்.சி.சி C சான்றிதழ் கிடைத்தால் இராணுவத்தில் சேர எளிது என்று கேள்விப்பட்டதால், அங்கயாவது வேலை கிடைக்குமே என்ற நம்பிக்கை வேறு.

முதல்நாள் சீரணிவகுப்பில் பிரதாப்சிங் உரையாற்றினார். நான்குவருடம் முன்பு அவர் பூனாவில் ஒரு மலையேறும் குழுவில் இருந்ததைச் சொன்னார். அசந்துபோனேன். இந்த வயதில் மலையேறுவதா? நானாகவே அவரிடம் சீரணிவகுப்பு முடிந்ததும் சென்று பேச்சுக்கொடுத்தேன்.
"என்ன செய்யலாம் சார்? ஒண்ணுமே பிடிக்கலை. தோத்துட்டேன்-னு தோணுது" நான் கேட்க நினைத்தது வேலை கிடைக்க என்ன படிக்கலாம் என்ன செய்யலாம் என்றுதான். அவர் சொன்னது ஏமாற்றமாக இருந்தது.
" நீ எந்தப் போர்-ல ஈடுபட்டதா நினைச்சு ' தோத்துட்டேன்'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுத? "
எனக்கு கோபம் வந்தது. நான் முயற்சிக்கலை என்றா சொல்கிறார்?
" இல்லடே. எல்லாருக்கும் உழைக்கும் விதம் ஒண்ணுகிடையாது. உனக்கு இன்னும் மேலே முயற்சி தேவைப்பட்டிருக்கு. ஏன் இப்படி ஓரே இஞ்சினீயரிங்ல முட்டி மோதுத? உன்னோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்க. அதுல வளத்துக்க"
"பலம் என்னன்னு தெரிஞ்சாத்தானே சார் வளத்துக்க முடியும்?"
"உன் பலவீனம் தெரியணும்டே அதுக்கு"
நான் பொறுமையிழந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீ பயப்படுற விஷயம் என்ன?"
பயப்படுற விஷயம்னா? சற்று யோசித்தேன் " மேடைல பேசப் பயம் உண்டு சார்"
"சரி. ஒழுங்கா கட்டுரை மாதிரி எழுதத்தெரியுமா?"
தயக்கத்தோடு "இல்லை" என்றேன்.
"நீ எதச் செய்யப் பயப்படுறயோ, அதை முதல்ல கண்டுபிடி. அதை தைரியமா செய்யப் பாரு. உன் பயமெல்லாம் தேவையில்லாததுன்னு தெரியும்"
"தோத்துட்டேன்னா?"
"தோத்துப்போனா என்ன? நீ பயந்ததுதானே? அதுனாலதான் தோத்தேன்னு நினைச்சுக்க. விழுந்தா திரும்பி திரும்பி எழுந்திக்கணும். மத்தவங்களுக்காகப் பயப்படாதே.அவனா உன் வாழ்க்கைய வாழப்போறான்?"
"நானும் போராடித்தான் பாக்கிறேன் சார். ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது"
"போராடுறேன்னு ரொம்ப ஈஸியாச் சொல்லறே. போராடறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? தடுப்பு முயற்சிகள் போர் ஆகாது. எப்ப போராடறதுன்னு முடிவு பண்ணிட்டியோ, அதுக்கப்புறம் அது பத்தி மறு பரிசீலனைன்னு நினைக்கவே கூடாது. உன்னோட போரை நீ தான் தீர்மானிக்கணும். நீதான் போராடணும். வெளங்குதா?"
எழுந்து போகுமுன் அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.
" இந்த மூணு வார்த்தைகளை எப்பவும் ஞாபகம் வச்சுக்க. கடற்படையில் சொல்லுவாங்க. HIT FIRST. HIT HARD. KEEP HITTING TILL HE ( enemy) FALLS-ன்னு. எது கூட போரிடப்போற?-ன்னு தெளிவாக முடிவெடு. அதுக்கப்புறம் நீ தாக்குதல்தான் நடத்தணும். போர் என்பது வந்துவிட்டால் Defensiveஆகப் போகக்கூடாது.போர்க்களத்துல புண்களை நக்குறதற்கும்,அழறதுக்கும் நேரம் கிடையாது."
எழுந்தேன். என்னமோ இந்த வார்த்தைகள் ஆழப்பதிந்தன.
வீட்டுக்கு நேரே வராமல் கடற்கரைக்குப் போனேன். ஈர மணலில் நான் என்ன செய்யப் பயப்படுகிறேன் என்பதை எழுதினேன். அலைகளில் அக்கோடுகள் ஈரமணலால் நிரம்பி அழிவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

தொடரும்

தூத்துக்குடி தெய்வங்கள்-2 (2)

சைக்கிள் மிதித்ததால் மூச்சு இழைக்க,குட்டியின் ஏமாற்றம் எரிச்சலாக வெளிப்பட்டது.

'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா?" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்

ஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.
அதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....

அந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.

' ஆமால" என்றான் கொஞ்சம் சிந்தித்து.

"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய?" என்றான் கவலையோடு.

கடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.

"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்"
உடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.

பேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.

முதல் கேள்வி 'என்ன பேசுவது?'

இரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது?' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது!

'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.

குட்டிதான் முதலில் ." நான் ஆரம்பிக்கேன்" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.
"என்னலே?" என்றேன்
" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா." என்றான் அழமாட்டாக்குறையாய்.
எதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.
'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா?" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.
'This is my prayer to thee my Lord" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.

"Strike strike at the root of penury in my heart" என்றான் குட்டி.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது?' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.

Friday, April 14, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)

தூத்துக்குடி போன்ற சிறுநகரங்களின் பெரிய சாபக்கேடு 'போலித்தனம்" எனலாம். படித்தவர்கள் என ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்குள்ளேயே பேச்சுக்கள்,புத்தகப் பரிமாற்றங்கள்,கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கிராமங்களிலிருந்து வந்தவர்கள் அதனோடு இணைய முடியாமல், புரிந்துகொள்ள இயலாமல் திணறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இத்திணறல்கள், குமுறல்கள், எதிர்குரலாக எந்த வளர்முயற்சிக்கும் எதிர்ப்ப்பாக, கிண்டலாகவும் மட்டம்தட்டும் வேலைகளாகவும் வெளிப்படும்.
பள்ளிகள் 'சிறிய உலகம்' என்பதால் இத்தகைய இடையூறுகள் சகஜம்.

'சார் படிக்கச் சொன்னாரே' என ஒரு மூலையில் உட்கார்ந்து அக்கறையாகப்படிக்கத் தொடங்கும் பையனை,சக மாணவர்கள், " பாருலே மக்கா, இவன் படிக்கத் துவங்கிட்டான். ஸ்டேட் பர்ஸ்ட்தான்..இல்லடே?" என கிண்டலடித்துத் தொடங்கி, அவன் வரும்போதெல்லாம் " எய்யா.. படிப்பாளி வர்ரான்டே, இடம் விட்டு நில்லுங்கலே" எனத் தொடர்ந்து, அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால்.'என்னடே, புஸ்தகத்துலேயே முங்கிக்கிடந்த?மார்க்கெல்லாம் சாரு தொலைச்சுட்டாராங்கும்?" என புண்ணாக அடித்து அவன் வெறுத்து விடும்வரை நீளும். இது விளையாட்டுகளுக்கும், பாடம் சேரா போட்டிகளுக்கும் பொருந்தும். தானும் வளராமல், அடுத்தவனையும் வளரவிடாமல் இருக்கும் 'பரந்த மனப்பான்மை' சிறுநகரங்களின் பெரும் சாபக்கேடு. இதற்கு தூத்துக்குடி விதிவிலக்கல்ல.

இந்த லட்சணத்தில் ஆங்கிலத்தில் பேசப்போனால், கல்லெறியே விழும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஒரு நண்பன், ரஷ்ய -தமிழாக்கப் புத்தகங்களைப் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ன் மலிவு விலைப்புத்தகங்கள் தங்குதடையின்றி கிடைத்த நேரம் அது) படித்துவிட்டு, கம்யூனிசம் பற்றி தான் அறிந்ததை ஒரு படபடப்பில் என் நண்பர் குழுவில் சொல்லிவிட, அவனை " யோல, நீ பெரிய கம்யூனிஸ்ட்டுல்லா?" எனக் கிண்டலடித்து அவன் பேரையே ரஷ்யத்தனமாக அய்யாகுட்டியோவ் ( எதனோடும் யோவ், இஸ்கி சேர்த்தால் ரஷ்யப்பெயர்!) என மாற்றி வைத்து, அவனைக்கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கியது எனக்கு நல்ல நினைவிருந்தது. 'பட்ட அறிவினால்', பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்தேன்.

சிகாமணி சாரிடம் மீண்டும் சென்றேன் " ·பாதர் , ஒருத்தனும் இங்கிலீஷ்ல பேசமாட்டேங்கான் "
புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவர், புன்னகைத்தார் " உன்னை மாதிரி நிறையப் பேர் மனசுக்குள்ளேயே பயந்துகொண்டிருக்கிறான். உன் நெருங்கிய நண்பன் ஒருத்தன்கிட்ட தனியே பேசிப்பாரு, தெரியும்" விடமாட்டார் எனப் புரிந்தது. மீண்டும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.

'யாரிடம் கேட்கலாம்?' என யோசித்துக்கொண்டிருக்கையில்,குட்டி நினைவுக்கு வந்தான். குட்டி என்பது அவன் பட்டப்பெயர். பேருக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆஜானுபாகுவாக அப்பவே 5 அடி இருப்பான். இயற்பெயர் சுந்தரராஜனான அவன் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரன். . கால்டுவெல் பள்ளியில் படித்துவந்த,மிக நெருங்கிய தோழன்.( இவன் பெயரையே எனது கதைகளிலும் வைத்து குட்டியென்ற கற்பனைப்பாத்திரம் படைத்தேன். என் மனத்தின் உள்ளொலியாக)

"லே, குட்டி, ஒண்டியா உங்கிட்ட பேசணும்டே" என்றேன்
அவன் 'என்னமோ ரகசியம் போலிருக்கு' என்ற ஆவலோடு கடற்கரைக்கு வந்தான்.
விஷயத்தைச் சொன்னேன்.
'போல..மூதி. வேற வேலையில்ல உனக்கு. இதுக்குத்தான் வரச்சொன்னியாங்கும்? உன்னை வைச்சு சைக்கிள்ள மிதிச்சு வந்தேன் பாரு..அதுவும் எதிர்காத்து"

தொடரும்..

Thursday, April 13, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் -2

தெய்வம் -2 ஆங்கிலத்தில் பேசு

பத்தாவது வகுப்பு வரை நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஆங்கில மீடியம் என்றால் பணம் கட்டவேண்டும்
ஆங்கிலம் ஒரு பாடமாகவே இருந்ததே தவிர, தொடர்புகொள்ளும் ஊடகம் என நான் கருதவில்லை. படித்தால் புரி
யும். சரளமாகப் பேச, எழுதத் தெரியாது. இது ஒரு பெரிய குறையாக அன்று நான் நினைக்கவில்லை.
பதினோராம் வகுப்பில் சேர்ந்தது ஆங்கில மீடியத்தில். புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை. படித்ததைச் சொல்லத்தான் தெரியவில்லை.
ஒரு நாள் இயற்பியல் வகுப்பில் " what is the phenomenon of surface tension?" ஆசிரியர் கேட்டதற்கு விழித்தேன்.
surface tension தெரியும்... phenomenon என்றால் யார்? என்ற கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தேன்.
ஆசிரியர் பொறுமையிழந்தார் , " Don't you understand ?"
"ஆமாம்" என தலையாட்டினேன்
"என்ன ஆமா? இங்கிலீஷ்லதான கேக்கிறேன்? இது கூடப் புரியலைன்னா என்ன படிச்சே இத்தனை வருசமா?"
எனது வகுப்பில் ஆங்கில மீடியத்திலேயே படித்து வந்த பையன்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு இது புதிது போலும்.. வியப்பாக என்னைப் பார்த்தார்கள்.
எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. பேசாம தமிழ் மீடியத்திலேயே போய்ச் சேர்ந்துரலாம் என முடிவு செய்தேன்.
"Get out of the class" ஆசிரியர் அன்பாகப் பணித்தார். எங்கள் பள்ளி வழக்கப்படி வகுப்பை விட்டு வெளியேறினாலும், கதவு பக்கமே நிற்கவேண்டும் ஒரு ஓரமாக.

முதல்முறையாக வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன். கதவருகில் நின்றுகொண்டேன்.
"Outstanding student" என்றார் ஆசிரியர். அர்த்தம் புரிந்த பையன்கள் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை.
எதோ என்னைக்குறித்தான கேலி என்பது மட்டும் தெரிந்தது. உள்ளுக்குள் கொதித்தாலும் சொல்ல முடியாத நிலை.
பியூன் வந்து அழைத்தார்.
" அசிஸ்டெண்ட் ஃபாதர் கூப்புடறாரு. போ"
தந்தை சிகாமணி ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். எங்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.
"என்ன வகுப்புக்கு வெளியே நிக்கிற?"
சொன்னேன்.
" ஃபாதர், நான் தமிழ் மீடியத்துக்கு போயிடறேன். இது கஷ்டமாயிருக்கு. புரியமாட்டேங்குது"
அவர் என்னை நேராக கண்ணில் ஊடுருவிப் பார்த்தார்.
" சரி. எதாவது கஷ்டமாயிருந்தா அதைவிட்டு ஓடிடணும்.அப்படித்தானே?"
மெளனமாய் நின்றேன்.
"நான் தமிழ்மீடியம் சார். எனக்கு இங்கிலீஷ் தெரியாது"
"எல்லாரும் பிறக்கும்போதே இங்கிலீஷ் தெரிஞ்சேவா வர்றோம்? நீ அத ஒரு பாடமா மட்டுமே பார்க்கிற. பேசற மொழியா நினைச்சு பயிற்சி பண்ணு.வந்துடும்."

"ஃபாதர். யார் கிட்ட பேசுவேன்?இங்கிலீஷ்ல பேசினா பசங்க சிரிப்பாங்க."

"அம்மணமா அலையறவங்க ஊர்ல , கோவணம் கட்டினவன் கோட்டிக்காரன்தான்" அவர் குரல் உயர்ந்தது.
" நீ அம்மணமா அலையணுமா, கோவணம் கட்டிகிட்டு வேட்டி கட்ட முயற்சிக்கணுமாங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்." .

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். அவரது மேசையின் மூலையில்
கைவிரல்களால் தன்னிச்சையாகக்கோடு போட்டவாறே.

"நானும் உனக்கு ஆங்கிலம் எடுத்திருக்கேன். எடுக்கிறேன். நீ இப்படி
கோழைத்தனமா விலகி ஓடினேன்னா, நான் உன்னை சரியா படிப்பிக்கலைன்னு
அர்த்தம்.வெளங்குதா?"என்றதோடு "நீ போகலாம்" என்று தலையசைத்தார்.

வெளியே வந்தேன். உச்சி வெயில் சுட்டெரித்தது.

இன்னும் வரும்

Tuesday, April 11, 2006

தூத்துக்குடி தெய்வங்கள்-1

தூத்துக்குடி தெய்வங்கள்-1

கடவுள்/மதம் குறித்தான பதிவு என நினைத்துவிடவேண்டாம். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது பழமொ
ழி. இறைவன் ஒவ்வொரு ஆண்டும் புது அவதாரமெடுத்து எனக்கு அருளியிருக்கிறான். எனக்கு பலமுறை வாழ்வைப்
புதிதாக உண்டாக்கித்தந்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவுத் தொடர் இது. பலர் இருப்பினும், மிக மிக முக்கியமான
திருப்பங்களை என் வாழ்வில் உருவாக்கிய சிலரைப் பற்றி மட்டும் இங்கே பதிகிறேன்.

தெய்வம் -1 தி..தி..திக்கு வ்..வ்வா..ய்ய்
___________________________________________

மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது.

சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.

தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார்
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர்
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).

Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார்.
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.

" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.

பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்"

மீண்டும் மயான அமைதி.

எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு...

வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.

" ஏல, கண்ணாடி.. எந்திரு."

எழுந்தேன். " நீ சொல்லு"

வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..

"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ
ய்ல் நின்றது

அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது.

கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'

சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக..

"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன்
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.

சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை
அவருடன் நடந்தேன்.

"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"

அவரது வார்த்தைகளில் விம்மினேன்.

"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."

" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.

"எங்கேந்துடே வார?"

"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"

" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க."

என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"

கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்

" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"

மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?

யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம்
கத்திப் பேசத் தொடங்கினேன்.

நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.

பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.

இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
஡க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.

இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.

இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.

"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.

தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”

Saturday, April 08, 2006

தவறிய உடைகளும் மனங்களும்

இரு நாட்களுக்கு முன் என் பையன் அவன் நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது , துரத்திய ஒரு சிறுவனின் டிராயர் நழுவிவிட்டது. ஒரு கையால் பிடித்துக்கொண்டே துரத்திய அவனைப் பார்த்து என் பையன் சொன்னான்."ஹே. உனக்கு வார்டுரோப் மால்ஃபங்க்ஷன்(wardrobe malfunction)." கூடியிருந்த பெரியவர்கள் சிரித்து விட்டு அவரவர் குழுவில் கதையடிக்கத் தொடங்கினர்.
எனக்கு ஒரு குறுகுறுப்பு... இந்தப் பதத்தை என்னவென இந்தச் சிறுவர்/சிறுமியர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என அறியும் ஆவல். காதைத் தீட்டிக்கொண்டு சிறுவர்கள் கூட்டமாக இருந்து பேசுவதைக் கவனிக்கலானேன்.
ஒரு சிறுமி சொல்கிறாள் " அன்னிக்கு நியூஸ்-ல காமிச்சாங்க. ஸ்டேஜ்ல ஒரு ஆண்ட்டிக்கு கவுண் பிஞ்சுபோச்சாம்... "
கெக்கே பிக்கேவென சிரிப்பலைகள்.
"ஷேம் ஷேம்.."
"சீய்ய்..." யோடு ஒரு குரல் கேட்டது
"அந்த ஆண்ட்டி ஏன் ஜட்டி போடாம போனாங்க? வேணும்.. எங்க டீச்சர் இருந்தா அடிச்சிருப்பாங்க"

குழந்தைகள் பேச்சை விடுங்கள். ஒரு விஷயம் சரியெனவே படுகிறது எனக்கும். அண்மையில் நடந்த ஃபாஷன் நிகழ்ச்சிகளில் மேடையில் திடீரென உடைகள் அவிழ்ந்து விழுவதும், கிழிந்து போவதுமாக நடந்த அசம்பாவிதங்களை FTV காட்டியிருந்தால் சரியென்று சொல்லலாம். Breaking News என்னுமளவில் முன்னிலை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பரபரப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் பார்க்கச் செய்ததை எப்படி பத்திரிகை ஒழுங்கு என்பது? இது ஒரு முக்கியச் செய்தியா? அது குறித்து விவாதங்கள் அலசல்கள்... போதும் போதுமென சலிப்படையச் செய்துவிட்டார்கள்.
இந்த செய்திச் சேனல்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் சேனல்கள் என்பதால் பெரும்பாலோர்க்கு அதிர்ச்சியாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. ஒன்பது வயதுப்பையன் wardrobe malfunction என்னும் வார்த்தை கற்று பயன்படுத்துகிறான் என்றால் எத்தனை முறை இந்த விஷ அலைகள் அவனைத் தாக்கியிருக்கக் கூடும்?
குழந்தைகள் வெளிப்படையாகக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சில ஆடைகளுக்கு உள்ளாடை அணியமுடியாது. தொலைகிறது. கவுண் போன்றவற்றிற்குமா? உள்ளாடைகள் அணிந்து வரக்கூடாது எனச் சட்டமிருக்கிறதா என்ன? இதனைப்பார்க்கும்போது இந்நிகழ்ச்சிகளின் அடியோடும் குறிக்கோள் என்ன என்பதிலேயே சந்தேகம் வருகிறது.

ஒழுங்கு என்பதும் நாகரீகம் என்பதும் நவீனம்/புரட்சி என்னும் வார்த்தைகளால் கேவலப்படுத்தப்படுவது சரியல்ல என நினைக்கிறேன். எது அழகுணர்வு எது அழகு எனக் காட்டப்படுகின்ற வக்கிரம் என்ற எல்லைக்கோட்டினை இவர்கள் கடந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. எங்கு பாலுணர்வு இருபால் தன்மைகளை கூசச்செய்து வெளிக்காட்டப்படுகிறதோ , அங்கு உரத்த குரலில் எதிர்ப்புகள் சொல்லப்படவேண்டும். மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமல்ல பார்வையாளர்கள்... தொலைக்காட்சிகளால் , அனைத்து தர மக்களின் வீட்டிலும் வழிகிறது இவ்விரசம்... அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அழகுணர்வு என்னும் கோணத்தில் பார்க்க முடியும் என நினைப்பது சாத்தியமில்லை.

இம்மாடல் பெண்கள் மட்டுமல்ல அவமானப்பட்டது... பெண்ணினமே ஒரு வக்கிரமான ஆணாதிக்க பாலுணர்வு மிகுந்த கும்பலால் காட்சிப்பொருளாக சிதைபட்டது என்பது நிதர்சனம். இதற்கு இந்நிகழ்ச்சி நடத்துபவர்களும்,அவற்றிற்கு அதிகமான விளம்பரம் அளித்த ஊடகங்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

மேடையில் தவறாகச் செயல்பட்டது உடைகளல்ல... உடல் காட்டி வியாபாரம் செய்ய நினைக்கும் மனங்கள்...
என்று தணியும் இச்"சுதந்திர" தாகம்?

Monday, April 03, 2006

வலையில் வக்கிரங்கள்.

சில நாட்களாக எனது மின்மடலில் வெறுப்பு உமிழும் மடல்கள் வருவது அதிகரித்திருக்கிறது. காரணம் பாரதி குறித்த பதிவு. என்ன எழுதுவது என்றெல்லாம் வரம்பு இல்லை போலும். டோ ண்டு அவர்களுக்கு 60ம் திருமண வாழ்த்துச் சொல்வது குற்றம் என ஒன்று... தேவுடா..

எப்படி ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டோ அதனைப் போலவே அதன் மாற்றுக் கருத்துக்கும் உரிமையுண்டு என்னும் சனநாயகப் போக்கு புதைக்கப்பட்டு தனிமனித வெறுப்புமடல்கள் நிரம்பி வழிவதைப்பார்க்கையில் நிஜமாகவே சந்தேகம்வருகிறது. " நாம் சமூக முதிர்வு பெற்றிருக்கிறோமா? குறைந்த பட்சம் அதனை நோக்கி வளரவாவது செய்கிறோமா?"

வலைப்பதிவுகளில் வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் அக்கருத்துகளைச் சார்ந்து இருப்பது பண்பு என்பது தவிர்க்கப்பட்டு வேண்டுமென்றே கருத்துகளுக்குப்பதிலாக காழ்ப்புணர்வு பரப்பபடுகிறது. பல வகையான பின்னூட்டங்கள் இதற்கு ஆதாரம். இது ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றத்தை அடியோடு ஒழிப்பதோடு நில்லாமல், மேலும் பிளவுகள் ஏற்படவும், தன் அடிமட்ட சிந்தனை சார்ந்த ஒரு கும்பலை வளர்வதையும் துரிதப்படுத்துகிறது.

வலைப்பதிவுகளை பின்னாளில் பார்த்துவளரும் ஒரு சமுதாயம் இந்த சீர்கேடலில் முழுகித் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனைக்கருதியாவது நம் நண்பர்கள் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.

இந்த வெறுப்பு மடல்கள் spamல் இடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு எனக்கு பிரச்சினையில்லை. பின்னாளில் மற்றொரு மடல் முகவரி/மற்றொரு தொடர் வெறுப்பு மடல்கள்...காலம் இப்படியே வலைக்குள் நகரும் போலும்.

Thursday, March 30, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை -V

இவ்வாறு மூலக்கூறுகளை சல்லடையிட்டு சலித்து, "இவைதான் மருந்து மூலக்கூறாக இருக்கலாம்" எனக் கருதப்பட்டு பொறுக்கியெடுக்கப்பட்ட மூலக்கூறுகள் ADME ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நச்சுத்தன்மைக்கான (Toxicology)ஆய்வுகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகு அம்மூலக்கூறுகள் பட்டியலிடப்படும். இவற்றை புதிய வேதியல் பொருட்கள் (New Chemical Entity - NCE)என அடையாளம் இடுவர்.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட வேதியல் மூலக்கூறிகளில் மருந்தாக ஊகிக்கப்படும் பொருட்களை சோதனைக்கால புதிய மருந்து மூலகங்கள் என்பர் ( Investigative New Drugs -IND)

உயிரினங்களின் மேல் இம்மூலக்கூறுகளின் பண்பு ஆராய்வதை பயோஅனலிசிஸ்(Bioanalysis - in vivo studies) என்பர். இவை முறையே PK PD( Pharmaco Kinetics , Pharmaco Dynamics) என்னும் ஆய்வுகளின் விளைவுகளாக நிறுவப்படும். மேற்கொண்டு இம்மூலக்கூறுகள் சந்தையில் மருந்தாகும் தன்மை உடையதுதானா என்பதை ஆய்வர். இதன் பதில் 'ஆம்' எனில், இம்மூலக்குற்றினை மருந்தாக்குவதற்காக மருந்துகளை தர நிர்ணயிக்கும் அமைப்புகளுக்கு முறையான விண்ணப்பம் செய்வர். இந்த நிலையை New Drug Application-NDA என்பர்.
இந்த உயிரினப் பரிசோதனைகளை இரு விதமாகப் பிரிக்கலாம்.
1. விலங்கினங்களில் செய்யப்படும் சோதனைகள்.
இங்குதான் முயல், எலி, குரங்கு,குதிரை ( யானை கூட உண்டு )முதலியவற்றைப் பயன்படுத்டுவர். எல்லா விலங்குகளையும் பயன்படுத்டமுடியாது. எந்த சோதனைக்கு எந்த விலங்கு, அதன் எந்த பாகம் உபயோகிக்க வேண்டும் என நிர்ணயம் இருக்கிறது. இது உலகளவில் நிர்ணயிக்கப்பட்டது என்பதால், மிகுந்த கெடுபிடியான சோதனைகள் இவை.

ஒவ்வொரு சோதனையும் செயுமுன் திட்டமிடப்பட வேண்டும். அதனை யார் செய்வது, யார் அனுமதிப்பது என்பதிலிருந்து, எந்த விலங்கு, எந்த உயிர்ப்பொருள் ( சாம்பிள் என்பது இரத்தம், சீரம், மலம் , சிறுநீர் என உயிரினப் பொருட்கள்லிருந்து, ஈரல், நிரையீரல், குடல் என உடல்பொருள் துண்டுகள் வரை இருக்கலாம்), எந்த இயந்திரம், எந்த முறை கொண்டு ஆய்வு செய்வது , ஆய்வின் முடிவுகளை எங்கு சேமிப்பது , ஆய்வு முடிந்தபின் , மீதமிருக்கும் சாம்பிள் எங்கு சேமிப்பது என்பது வரை மிகக்கடுமையான ஆவணக் குறிப்புகளுடன் சோதனைகள் நடத்தப்படும். Standard Operating Procedures (SOP)என்பன முதலில் வரையறுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, பின் சோதனைகளில் நிகழ்த்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும். சோதனைகள் தோல்வியடைந்தாலும் அதன் முடிவுகளும், ஏன் தோல்வியுற்றன என்பதும் ஆவணப்படுத்தவேண்டும். தணிக்கைக் குழுக்கள் இவற்றை குடைந்து குடைந்து பார்ப்பார்கள்.
2.மருத்துவ சோதனைகள்(Clinical Trials) மனிதரில் இதன்பின் நடத்தப்படும். மருத்துவச் சோதனையில் நான்கு நிலைகள்(Phases) உள்ளன.
முதன் நிலையில் மருந்தாக வேண்டிய பொருள் ஆரோக்கியமாக இருக்கும் மனிதரில் செலுத்தப்படும். இவ்வாறு சோதனகளுக்கு தானாக வரும் மனிதர்களை சப்ஜெக்டுகள் (subjects)என்பர்.
மருந்து கொடுக்குமுன் உயிரினப் பொருட்களின் சாம்பிள்(Bio samples) எடுக்கப்படும். பின் மருந்து செலுத்தப்பட்ட சில குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாம்பிள்கள் எடுக்கப்படும். இது ஆய்வின் நோக்கம் கொண்டு நிர்ணயிக்கப்படும். உதராணமாக 0 நிமிடம்,30 நிமிடம், 1 மணிநேரம், 2 மணிநேரம் என இந்நேர இடைவெளிகள் அமைந்திருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரியல்பொருட்கள் மிகக் குறைந்த வெப்பநிலையுள்ள பெட்டிகளில் பாதுகாக்கப்ட்டு (deep freezers)சோதனைச் சாலைக்கு அனுப்பப்படும். இதன் வெப்பநிலை -80 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும்.

Wednesday, March 29, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே....

பாரதி பற்றிய இந்த கட்டுரை திண்ணையில் கிடைத்தது.
அறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, "விருப்பு வெறுப்பின்றி" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.

Sunday, March 19, 2006

நேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்?

நேதாஜியின் மரணம் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதைய முகர்ஜி கமிஷன் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்னும் ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறது.
சில ஆராய்வுகள் அவர் டைப்பியில் ஆகஸ்ட் 18 1945 அன்று விமானவிபத்தில் இறந்ததாகக் கூறுகின்றன. இதனை காங்கிரஸ் அரசுகள் தீவிரமாகப் பரப்பிவந்தன. 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிஷன் தன் முதலறிக்கையைச் சமர்பித்தது. அது நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாகவே அறிவித்தது. பின் வந்த கமிஷனும் அதனையே சொன்னது.
இரண்டிலும் இருந்த ஓட்டைகளை சிலர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர்.
1. ஷா நவாஸ் கமிஷன் , தைவான் போகாமலேயே ( மிக முக்கிய தடையங்கள் கிடைத்திருக்கக் கூடிய இடம்), தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2. ரஷ்ய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இன்னும் தடையங்கள் கிடைத்திருக்கக் கூடும். நேதாஜி தைவானிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார் என ஒரு கருத்து உண்டு. அங்கு அவர் போர்க்கைதியாக இருந்ததாகவும் அதன் ஆவணங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. பின்னர் அவர் ரஷ்யாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தி. மற்றொன்று அவர் ஃபைசியாபாத் நகரில் ஒரு துறவியாக 1985 வரை வாழ்ந்ததாகவும், அவரது படையின் முக்கிய அதிகாரிகள் வருடம்தோறும் அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்ததாகவும் வதந்தியுண்டு.

இதற்கெல்லாம் சான்றுகள் இல்லை என இதுவரை அரசாங்கம் சொல்லிவந்தது. முகர்ஜி கமிஷனின் நாட்களை நீட்டிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை ஹிண்டுஸ்தான் டைம்ஸில் பணிபுரிந்த தர் முன்வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் இது அரசால் நீட்டிக்கப்பட்டு, அதன் அறிக்கை நடப்பாண்டில் பாராளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் எனத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயம் கருதி "அறிக்கையை அடக்கிவாசிக்கும்" என்ற அச்சம் பலருக்கு உண்டு.
மேலும் அறிய இச்சுட்டிகளைக் காணுங்கள்.
http://www.missionnetaji.org
http://in.rediff.com/news/2006/mar/17spec.htm

Tuesday, March 14, 2006

பண்டிகைகளும் பின்விளைவுகளும்.

புகை மண்டி மூச்சுத்திணறிக்கிடக்கிறது மும்பை.
இன்று ஹோலி. நிறங்களின் விழா. இப்போதெல்லாம் ஏண்டா இதெல்லாம் வருது ? எனத் தோன்றிவிடுகிறது. நேற்று இரவே பண்டிகை தொடங்கிவிட்டது. நமது போகிப்பண்டிகை போல , வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை குவியலாக இட்டு எரித்துக் குலவையிடுவார்கள். இப்போதெல்லாம் என்ன எரிக்கப்படுகிறது தெரியுமோ?
பிளாஸ்டிக் பைகள், உடைந்த வாளிகள், டயர், வீடியோ கேசட்டுகள், பிய்ந்த செருப்புகள்... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அனைத்து நச்சுப் பொருட்களும் வாயுமண்டலத்தில்.. கரிகரியாகப் புகை. எரிச்சலூட்டி, மூச்சுத் திணறி ஏற்கெனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் மும்பை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், தன்னார்வலக்குழுக்களும் எத்தனைதான் கத்தினாலும் இக்கூச்சலின் முன் எடுபடாமல் அழுந்திப்போயினர்.

முன்பெல்லாம் இப்பண்டிகைகளுக்கான நிறக்கலவையை வீட்டிலேயே செய்வர். குலால் (Gulal) என்பது மாவுக்கலவையில் செய்யப்பட்டது. இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, கடுமையாக அரிக்கும் ரசாயனக்கலவைகள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்போது சந்தைகளில் விற்கப்படும் நிறக்கலவையில் இருக்கும் நச்சுப்பொருட்களைக் குறித்து எழுதியிருந்தது. (உருப்படியாக தற்காலத்தில் அதில் வந்த ஒரே செய்திக்குறிப்பு இதுதான்).

காலத்தின் தேவைக்கேற்ப குப்பைகளும் மாறிவிட்டன. அவற்றை பழையபடியே எரிப்பது என்னும் சம்ப்ரதாயம் என்பதை முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வரும் கேணத்தனம். வேறுவகையில் இவற்றை அப்புறப்படுத்திக் கொண்டாடுங்களேன். சொல்லப்போனால் வேறுவகையாகப் புரிந்துகொண்டுவிடும் அபாயம்..

கிறிஸ்துமஸ் மரம் வேண்டி பல மரக்கிளைகள் முறிக்கப்படுவதைப்போல , இந்த ஹோலியின் முந்திய நாள் எரிப்பதற்கும் சிலர் சாலையோரம் வளர்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளை ஒடித்துச் செல்வது அதிர்ச்சிக்குரியது. ஏற்கெனவே பச்சையென்பது மும்பையில் குறைவு. இது இன்னும் குறைக்கிறது.

இதுபோல பக்ரீத் பண்டிகையின் போது, சில இடங்களில் கழுத்தறுபட்ட ஆடுகள் அப்படியே சாலையோரம் விடப்பட்டிருந்தன. இரத்தம் வழிந்தபடி கிடக்கும் அவற்றைப் பின் உண்பவர்களிடம் சுகாதாரக்கேடு குறித்து யார் சொல்வது?
எதைச் சொல்லப்போனாலும் நமது ஜாதகம் பார்க்கப்படும். வேற்று மதக்காரன் யார்டா எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்? என்னும் கேள்விகள் எழும். எழுந்திருக்கின்றன.

மதங்கள் உருவாக்கிய பண்டிகைகளின் அர்த்தம் விபரீதமாகப் போவதைத் தடுக்க, தனிமனிதன் மட்டுமல்ல மதங்களின் தலைமைப் பீடங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.
செய்வார்களா?

Monday, March 13, 2006

குழந்தைகளும் கல்விமுறையும்

பேராசிரியர் இராமானுஜம் சமீபத்தில் தஞ்சைக்கு அருகே ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரிய/ஆசிரியைகளுடன் பேசியதின் சாராம்சம் இது.
" குழந்தைகளுக்கான நாடக அனுபவத்தில், குழந்தைகளுடனான உரையாடல்கள் எனக்குப் பல பரிமாணங்களைத் தந்திருக்கின்றன. அவர்கள் உலகம் தனியானது. அலாதியான, வெளிப்படையான பேச்சுகள் பல சமயங்களில் தீவிரமாக என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதை வெறுக்கின்றனர். Children love to learn; they hate to be educated.
இதன் மூலம் என்ன? பள்ளிகள்,குழந்தைகளை தங்களிடம் ஈர்க்கும் முயற்சியில் தோற்றுவிட்டன. அவர்களது சுதந்திரம், கல்வியென நாம் நினைத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் dataவிற்கு பண்டமாற்று செய்யப்படுவதை எதிர்த்து தங்களுக்கே உரித்தான பாணியில் சிறு கோபங்கள், விளையாட்டுகள் மூலம் வெளிக்காட்டுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் ' குழந்தைகள் எப்போதும் ஒழுங்கு முயற்சிகளுக்கு எதிராகவே சிந்திக்கும் 'எனவும் 'அவர்களுக்கு ஒழுங்கு என்பது கட்டாயமாகப் புகட்டப்படவேண்டும்- கசப்பாக இருக்குமெனினும்' எனவும் தங்களது கட்டாயக்கல்வி முயற்சிகளுக்கு சமாதானம் சொல்கின்றனர். உண்மையில் , குழந்தைகள் லாஜிக்காக நிறையவே யோசிக்கின்றன. கல்வி குறித்தான அவர்கள் சிந்தனை வியப்பானது.
உதாரணம் ஒன்றுசொல்கிறேன். எனது பேரன், ஒரு நாள் "தாத்தா, நான் அம்மா, அப்பா வாங்கித்தர்ற புத்தகமெல்லாம் ஒழுங்கா படிக்கத்தானே செய்யறேன்? " என்றான். ஆமாமென்றேன். எதாவது அறிவியல்/பொது அறிவு புத்தகமோ ,விளையாட்டுப் பொருட்களோ வாங்கிக்கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதென்பது இயல்பு. "நாந்தான் படிக்கிறேனே? அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்குப்போகணும்?" என்றான். என்னால்தான் வீட்டிலேயே அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவே அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமே? அப்படியானால் பள்ளிக்கூடம் என்றொரு கட்டிடம் எதற்கு? என்பது இதன் சாராம்சம்.
"பள்ளிக்கூடத்தில் நீ மத்த பையன்களோட விளையாடலாம். டீச்சரோட பேசி பலதும் புதுசாப் புரிஞ்சுக்கலாம். புஸ்தகத்துல இதெல்லாம் கிடைக்காது" என்றேன். ஒரு சமூக இணைவுத் தொடர்பு (social interaction)என்பது முக்கியம் என்பது மறைமுகமாக அவனுக்குப் புரியப்படுத்தும் முயற்சி இது. அதற்கு வந்த பதில்தான் என்னை சிந்திக்க வைத்தது.
" பள்ளிக்கூடத்துல யார் பேச விடறாங்க? எப்பப் பாத்தாலும் பேசாதே பேசாதே-ன்னு தானே டீச்சர் சொல்றாங்க?" சிரிக்காதீர்கள். மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
புத்தகங்களும் ஊடகங்களும் கொடுக்கமுடியாத சமூகத் தொடர்பை உருவாக்க வேண்டிய பள்ளிகளே அதனைச் சிதைத்தால்? ஆசிரியர்கள் பாடம் முடித்தபின்போ அல்லது பாடம் நடத்தும்போதோ புத்தகங்களின் வரிகளிலிருந்து சற்றே வெளிவந்து புதிய பரிமாணங்களை இக்குழந்தைகளுக்குக் கொடுக்கும்நிலையில் பள்ளிகளோ, பாடத்திட்டங்களோ இருக்கின்றனவா? புத்தகத்திலிருப்பதையே ஒரு முதிர்ந்த குரலில் சொல்வதுதான் ஆசிரியப் பண்பா?
பின்னும் சொன்னான் " எல்லாத்துக்கும் ஒரு வகுப்பு இருக்கு. டிராயிங், விளையாட்டுக்குக் கூட வகுப்பு இருக்கு. பேசறதுக்கு ஒரு வகுப்பு இருக்கா எங்களுக்கு? பேசவிட்டா என்ன?"
ஆசிரியர்களே, இது யோசிக்கவேண்டிய ஒன்று. விளையாட்டு வகுப்பிலும் ஒரு மிலிடரி ஒழுங்குமுறை. ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து ஓடி, குதிக்கவேண்டும். அதனை அளவெடுக்க ஒரு ஆசிரியர். இதற்கும் கைதிகளின் உடல்நல அளவெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேச்சு என்பது குழந்தைகளின் அபூர்வச் சொத்து. தான் நினைப்பதையும் , சிந்திப்பதையும் குழந்தைகள் தங்களால் இயன்றமுறையில் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். சிலகுழந்தைகள் திடீரென கத்தி கூப்பாடு போடும். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வெளிப்பாடு அது. பேசாதே பேசாதே என அடக்கி அடக்கி வைத்து வெளிப்படுத்தும் திறனொற்றை மழுங்க அடிக்கிறோம். விளைவு? சரியாக சிந்திக்கத் தெரியாத, தனது சிந்தனைகளை வெளிப்படுத்தத் தெரியாத , ஒழுங்காக சொன்னபடி நடக்கும் சிறந்த குமாஸ்தாக்களை வளர்க்கும் ஆங்கிலேய பள்ளிமுறையில் இன்னும் சுதந்திர அடிமைகளை வளர்த்துவருகிறோம்.

குழந்தைகளை உங்கள் வகுப்பில் ஒரு சிறு இடைவேளை நேரத்தில் பேசும் வகுப்பு என அறிவித்து விட்டு அவர்கள் போக்கில் பேச விட்டுவிட்டு கவனியுங்கள். நாளடைவில் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு குழந்தையும் மிளிர்வதைக் காண்பீர்கள்.
மந்தமான குழந்தை என ஒன்று உலகில் எங்கும் கிடையாது. நாம்தான் மந்தமாக அவற்றைக் காண்கிறோம்."
I was born intelligent. Made fool by education என எதோவொரு டீ ஷர்ட்டில் பார்த்த ஞாபகம்.

பேசிய பையன் -என் மகன்.