Friday, August 25, 2006

சார் போஸ்ட்..

"உங்களுக்கு யாரோ கடிதம் எழுதியிருக்காங்க" என்ற மனைவியின் குரலில் இருந்த ஆச்சரியம் என்னையும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக கடனட்டை அறிக்கைகள், ரீரடஸ் டைஜஸ்ட் கொட்டையெழுத்துக்களில் அனுப்பும் வருடாந்திர மார்க்கெட்டிங் வீண்செலவுகள் எனவே எனது தபால்கள் வருவதுண்டு. இல்லாவிட்டால் உறையின் ஓரங்களில் மஞ்சள் தடவிய திருமன அழைப்புகள், வெகு தொலைதூரச் சொந்தக்காரரது வீட்டின் பூப்புனித நீராட்டுவிழாக்களின் அழைப்புகள் ( எவன் மும்பையிலிருந்து வேலை மெனக்கெட்டு இதுக்கெல்லாம் போகிறான் என இன்னும் புரியவில்லை) எனவே இருக்கும். பெரும்பாலும், பார்த்த சில நொடிகளில் குப்பைகளில் சேர்ந்துவிடும்.
இந்த கடிதம் சிறிது வேறுபட்டது. பொறுமையாகக் கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டு , ஐந்து ரூபாய் தபால்தலை மிக ஒழுங்கக நேராக ஒட்டப்பட்டு மிகக் கவனமாக அஞ்சல் செய்யப்பட்டது. அதனாலேயே கொஞ்சம் மதிப்புடனேயே உறையைப் பிரித்தேன்.

நான் இதுவரை பரியச்சப்படாத திரு.ச்ரீனிவாசன் என்னும் முதியவரிடம் இருந்து வந்த அஞ்சல். நடுங்கும் கையெழுத்தில் பழையகால நாகரீக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எனது தூரத்துச் சொந்தம் எனினும் , அவர் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பது மட்டுமே எனக்கு இதுவரை தெரியும். புழக்கத்தில் இருந்து, மீண்டும் அச்சடிக்கப்படாது புதைந்து போன ஒரு வைணவ சமயப் புத்தகத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவரது கடிதம் பல பரிமாணங்களையும் தொட்டிருந்தது 1944களில் இருந்த மும்பை, மகாராஷ்டிர சிறுநகர வாழ்வு, அவரது நண்பர்கள் எனப் பலதரப்பட்டவை குமிழ்ந்திருந்தன. இந்த வயதிலும் எழுத முயல்வது மட்டுமல்ல, அந்தக் கடிதம் அனுப்பும் முறை குறித்து அவர் எடுத்திருந்த கவனம் என்னை மிகவும் கவர்ந்தது.
"எவனுக்க்குவே இதுக்கெல்லாம் நேரம் இருக்கு?" என ஒருமுறை பின்கோடு எழுதாது நான் ஒரு அஞ்சல் செய முயன்றபோது தடுத்த எந்தந்தை மீது சீறியது நினைவுக்கு வந்தது. " எவனுக்கு நஷ்டம்? உனக்கு உன் தபால் ஒழுங்காப் போய்சேரணும்னு ஆத்திரம் இருந்தா , ஒழுங்காச் செய்வே" என அவர் இடித்ததும் வெறுப்போடு பின்கோடு தேடி எழுதினேன். "எப்படி போஸ்ட் பண்ணினாலும் பத்துநாளாவும்.. இதுல பின்கோடு ஒண்ணுதான் குறையாக்கும்" என முணுமுணுத்துக்கொண்டே போஸ்ட் செய்தேன். இரண்டே நாளில் கடிதம் சென்னை போனது. கூரியர் ஒருநாள் முந்திப் போயிருக்கும் அவ்வளவுதான்.
மின்னஞ்சல் வந்ததும் கடிதம் எழுதுவது வெகுவாகக் குறைந்து போனது. "அலோ, இன்னிக்கு என்ன குழம்பு?" என எஸ்.டி.டி. போட்டுப் பேசும் தெனாவெட்டும், வசதியும் வந்ததும் சுத்தமாக எழுதுவது நின்றே போய்விட்டது. "பேசற மாதிரி வருமா?" என்னும் சால்ஜாப்பு வேறு.

ஒரு குறுகுறுப்பில் அவருக்கு பதில் எழுத முனைந்தேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.... எப்படி தொடங்குவது என்பதே மறந்து போய் விட்டது. "அன்புள்ள?" " மதிப்பிற்குறிய?" " உபய குசலோபரி?" "அடியேன் தெண்டம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம்?"
பேனாவை மூடி வைத்தேன். கணணி முன் அம்ர்ந்தேன்.
" கையால் எழுதாதற்கு மன்னிக்க்கவும். என் தமிழ்க் கையெழுத்து எனக்கே புரியவில்லை" என ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்பதுடன் தொடங்கினேன். பிரிண்ட் எடுத்து கூரியரில் அனுப்பினேன் - குற்ற உணர்வோடு.

ஒரு வாரம் கழிந்தது. என் நண்பன் முத்துக் குமரன் டெல்லியிலிருந்து போன் செய்தான். " என்னடே, திடீர்னு தபால் எழுதியிருக்க? ஒரே ஆச்சரியம் என்வீட்டுல.. உனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி இல்லையோடே?"
"ஏல, தபால் வந்தா நல்லாயிருக்கா இல்லியா? " இடைவெட்டினேன்
" சந்தோசமாயிருக்குடே. அதுவும் வேலை மெனக்கெட்டு எனக்குன்னு கைப்பட எழுதிருக்க பாரு. அதுவே சந்தோசம். அதான்டே போன் பண்ணினேன்" அவனது உற்சாகம் என் நெஞ்சில் நிறைந்தது.
சிறிது தயங்கினான் " எங்கய்யாவுக்கு இன்னிக்கு லெட்டெர் தமிழ்ல்ல எழுதிப் போட்டிருக்கேன். நம்ப மாட்டடே மக்கா.. எப்படி எழுதணுனே மறந்து போச்சி. என்னமோ கோழி கிண்டினாப்போல கிறுக்கிப்போட்டு.... காலேஜ்ல எழுதினது அதுக்கு அப்புறம் இப்பத்தான்...வெக்கமாயிருக்குல."
ரோஜாக்கள் கொடுக்கும் கையிலும் மணம் வீசும்.. மலர்களின் வாசனை கைகள் மாறுவதில் சிறக்கிறது.
இன்னும் எழுதணும்.. போஸ்ட் ஆபீஸ் உங்க ஏரியால எங்கயிருக்கு?

7 comments:

 1. அதையேன் கேக்கறீங்க. சில மாதங்களுக்கு முந்தி ஒரு நண்பருக்கு கடிதம் எழுத முயன்று மூணு நாலு தரம் கிழிச்சுப்போட்டு - கையெழுத்து எனக்கே புரியல. அதான். அதுக்கப்புறம் வந்தது வரட்டும்னு கிறுக்கி அனுப்பி வைச்சேன். அனுப்பின கடிதத்திலயும் ஏகப்பட்ட குழறுபடின்னு நண்பர் சொன்னதுக்கப்புறந்தான் தெரிஞ்சது. :) :(

  ம்ம்.. நண்பர்களெல்லோருக்கும் இந்த வருஷம் முடிவதற்குள் ஒரு கடிதமாவது எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தேன். இன்னும் செயற்படுத்தவில்லை. உங்களின் இடுகை அதை நினைவுபடுத்தியிருக்கிறது. நன்றி சுதாகர்.

  -மதி

  ReplyDelete
 2. மதி,
  நன்றி. கடிதம் எழுதுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. போஸ்ட் ஆபீஸ்களில் என்னமெல்லாமோ விற்கச்சொல்லியிருப்பதாகக் கேள்வி:) அமெரிக்கா இன்னும் தபால் செயலாக்கத்தை நன்றாகவே கொண்டிருக்கிறது என சமீபத்தில் படித்தேன். கடிதம் எழுத முனைந்தால்தான் தெரிகிறது நம்ம தமிழ் இருக்கும் நிலைமை:)
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete
 3. சுதாகர்,
  அழகான பதிவு, நீங்கள் கூறியபடி, கடிதம் எழுதுவது வழக்கொழிந்து வருகிறது. எல்லாம் மின்மடல் மயம் !!! தமிழில் நான் வலை பதியத் தொடங்கியவுடன் (தேசிக உபயம்:)), எழுத வேண்டியதை பேப்பரில் முதலில் எழுதி பின்னர் பதிகிறேன். ஆனால், பழக்கம் விட்டுப் போனதால் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன் :) ஒரு காலத்தில் நிறைய கடிதங்கள் கைப்பட எழுதியிருக்கிறேன். ஹ¤ம் ......
  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 4. நன்றி பாலா,
  ஒரு காலத்தில் என் நண்பர்களுக்காகக் காதல் கடிதம் த்மிழில் எழுதித்தந்திருக்கிறேன்:)
  "இவ்வளவுதான் மக்கா மேட்டரு.. நீ எப்படி வேணாலும் எழுது. நம்ம ஆளு நாளைக்கு பஸ் ஸ்டாண்ட்ல பாத்தா சிரிக்கணும்.. அவ்வளோதான்" என படு ஈஸியாகச் சொல்லிவிட்டுப் போய்வ்டுவான்கள். நான் மண்டையைப் பிச்சி என்னமோ கிறுக்கித்தருவேன். சிரிப்பு கிடைச்சதா / செருப்பு கிடைத்ததா என்பதையெல்லாம் சொல்லமாட்டான்கள். எழுதுவதோடு என் வேலை முடிந்தது.
  இப்போ நான் தமிழ்ல எழுதினா சலாமியா தேசத்துப் பெண்களுக்குப் புரியுமோ என்னமோ:)
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 5. Nice post
  Now a days even greeting cards are sent thru email...
  And if at all we get any letters..its only bills or statements :(

  ReplyDelete
 6. Thanks Anitha,
  Maybe the pain one goes through to post a letter deters people.
  A visit to the nearest post office takes minimum 10 minutes. If you have a post box near your home/ work, you are fortunate.

  Now a days, in Mumbai, many of the small Post boxes are removed... No one puts mail in them any longer and adding to that is the bomb scare..
  regards
  K.Sudhakar

  ReplyDelete
 7. //சிரிப்பு கிடைச்சதா / செருப்பு கிடைத்ததா என்பதையெல்லாம் சொல்லமாட்டான்கள். எழுதுவதோடு என் வேலை முடிந்தது.
  இப்போ நான் தமிழ்ல எழுதினா சலாமியா தேசத்துப் பெண்களுக்குப் புரியுமோ என்னமோ:)
  //
  Had a Hearty laugh, sudhakar :))

  ReplyDelete