Wednesday, June 29, 2016

சிகரங்களும் நம்பிக்கைகளும்

குவஹாத்தி- தில்லி விமான வழி அற்புதமானது. கௌஹாத்தியிலிருந்து போகும்போது ஜன்னல் வழியாக  கர்ச்சீப் போட்டு F சீட்டுகளைத் தேடி  பிடித்துக்கொள்வேன்.


தில்லியிலிருந்து போகும்போது A சீட்டுகள். கூடவே வந்துகொண்டிருக்கும் இமயமலைத்தொடரும், நடுநடுவே அக்கினிப்பிழம்பாக மின்னும் சிகரங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. ஒரு மாதமுன்பு, தில்லி- கொளஹாத்தி காலை விமான பயணம்.


”அதோஓஓ.... தெரியறதுபாரு, சின்ன்.....ன்னதா வெள்ளியாட்டம்.. அட,அது இல்லை..கொஞ்சம் இடது பக்கம்.. ஆங்.. அதுதான் எவரெஸ்ட். “ முன் சீட்டில், புதிதாக மணமான இளைஞன் ஒருவன்,கையெல்லாம் வளையல் அடுக்கிய, மெஹந்தி அழியாத புதுக்கருக்கான  மனைவியிடம் தன் கார்ட்டோகிராஃபி அறிவைக் காட்டி இம்ப்ரெஸ் செய்துகொண்டிருந்தான். இந்த ரூட்டில் இது  வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். உள்ளூற புன்னகைத்துக்கொண்டே கேட்காத மாதிரி இருந்துவிடுவேன். எவரெஸ்ட் எப்பவோ போயாச்சு, பயல் இப்பதான் அவள் தோளிலிருந்து தலைஎடுத்து எழுந்திருக்கிறான். ரைட்டு.


”இன்னும் கொஞ்ச நேரத்துல அன்னபூர்ணா தெரியும். அப்புறம் நந்ததேவி. ஆ! அங்க பாரு, பாரு... தங்கமயமா ஜொலிக்கறது இல்லையா?! அதுதான் கஞ்சன் ஜங்கா. கண்ணை மூடிக்கிட்டு வேண்டிக்கோ. நினைச்சது நடக்கும், கஞ்சன் ஜங்காவைப் பார்த்தா.”


எவரெஸ்ட்லேர்ந்து ரெண்டு எட்டு எடுத்து வைச்சா கஞ்சன் ஜங்காவா? என்னமோ தாம்பரத்துலேர்ந்து சேலையூர் ஷேர் ஆட்டோ பிடிச்சுப் போறமாதிரின்னா சொல்றான்?ன்னு தோணினாலும், அவர்களது அறிவு வளர்க்கும் காதலில் கரடியாக நுழைய விருப்பமில்லை.


ஹலோ என்றார் அருகில் இருந்தவர். அவரும் இந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்திருப்பார் போலும். என்னைப்பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார். நானும் சிரித்தேன்.  எதோ கவெர்மெண்ட் உத்தியோகம். கோப்புகளை விரித்து வைத்திருந்தார் “ Project report on *******, Kohima, Nagaland"என்று ஏதோ இருந்தது

.

“இந்த காதல் காட்சிகள் மட்டும்தான் அரசியல் மதம் கலக்காதது. நான் திருமணமானபோது இந்த ப்ளைட்ல போற வசதி இல்லை. என் மனைவிக்கு  சிகரங்களின் போட்டோக்களைக் காட்டி இம்ப்ரெஸ் பண்ணுவேன். சிக்கிம்ல போய் கஞ்சன் ஜங்கா பாத்தப்புறம்தான் என்னை நம்பவே செய்தாள்”


சிகரங்களைக் காட்டினால் மனைவி இம்ப்ரெஸ்ட் ஆயிருவாங்களா? சே தெரியாமப் போச்சே? குத்தாலம் கூட மங்கையைக் கூட்டிப்போனதில்லை.


“மலைப் பகுதி ,சிகரம் என்பது பரந்த ஞானத்தைத் தரும். நாம எவ்வளவு சிறியவர்கள் என்றூ போதிக்கும். இந்த ப்ரமாண்டத்தோடு எனக்கும் தொடர்புண்டு என்று நினைக்கையில் ஒரு பரவசம்.. அதுதான் ரிஷிகளையும் மலையை நாடச் செய்தது” பேசிக்கொண்டு வந்த  அவர் ஒரு நினைவில் ஆழ்ந்திருந்தார்.


“இந்தியா முழுசும் மலையாயிருந்தா, இந்த மதச்சண்டையெல்லாம் வந்திருக்காது இல்லையா சார்?” என்றார் திடீரென்று.

“அப்ப நீங்க போற நாகலாந்துல சண்டையே இருக்கக்கூடாது. அஸ்ஸாம் கொந்தளிக்கக்கூடாது”


“அது மத்தவங்க இடையூறா வந்ததுனால வந்த வினை. நான் அடிக்கடி இந்த மலைப்பகுதிகளில் செல்வதால் எனக்கும் ஒரு பரந்த எண்ணம் வந்தது. என்ன மதம், சடங்குகள்? ஒன்றுமே வேண்டாம்”


“அட” என்று வியந்து அவர் பேசுவதைக் கேட்கலானேன்.


“இந்த மதத்தில்தான் எத்தனை மூட நம்பிக்கைகள்? சடங்குகள்? சட்டுனு இந்த ஞானம் வந்ததும் கோயில் போறதை நிறுத்திட்டேன். கும்படறதில்ல. கடவுள்னு ஒருத்தன் இருக்கற மாதிரி என்னால நம்ப முடியலை. இருக்கலாம். ஆனா எனக்கு அவசியமில்ல” பேசிக்கொண்டே வந்தவர். பக்கவாட்டில் பார்த்து முகம் சுளித்த்தார். ‘இந்த பக்கம் பாருங்க.” என்று மறைவாகக் கை காட்டினார்.


ஒரு பெண் சற்றே பருமனாக, குண்டாக ஸ்கர்ட் அணிந்திருந்தவள், அருகிலிருந்த குழந்தை வாயிலெடுக்க, கையில் வாங்கி அதனை பேப்பர் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். ஏர்ஹோஸ்டஸ் அவசரமாக இன்னும் பேப்பர் பைகளையும் டிஷ்யூ பேப்பரையும் கொண்டு வர சற்றே அமளி..


“கண்டதையும் தின்னுட்டு ப்ளேன்ல ஏற வேண்டியது. நாற வைக்கவேண்டியது. இந்த வடகிழக்குல எக்கச்சக்கத்துக்கு சலுகைகள்.”


திகைப்பாக இருந்தது. கடவுள் இருக்கலாம், இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு மனித நேயமில்லையே? குழந்தை வாயிலெடுத்தால் அதன் ஜாதியைப் பார்க்கும் மனிதன் என்ன படிச்சு என்னவாயிருந்தால் என்ன?


“எனக்கு நம்பிக்கை உண்டு” என்றேன் திடமாக “ எந்த நம்பிக்கை என்பது முக்கியமில்லை. . மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்பவனையும், ஊர்க்காவல் தெய்வத்துக்கு பலீயிட்டு வணங்குபவனையும், ஐந்து வேளை தொழும் இஸ்லாமியனையும், ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்குப் போகும் கிறித்துவனையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மதிக்க முடிகிறது. ஆனால், தனது மரபு தந்த பண்பை தொலைத்து, வெற்றுப்படிப்பில் தருக்கித்து, ஒன்றுமே செய்யாமல்  ‘எனக்கு எல்லாம் சம்மதம்” என்றூ வெறுமே பேசித்திரிபவனை என்னால் மன்னிக்க முடிவதில்லை”


அதன்பின்னும் பலதும் பேசினோம். அனைத்தும் வெறுமையானவை என்றே பட்டது.


மீண்டும் ஜன்னல் வழியே பார்க்கத் தொடங்கினேன் . சிகரங்கள் அழகானவை, தூரத்தில் இருப்பவை. நல்லது செய்யும் என்ற நம்பிக்கை தருபவை.


முகத்தைத் திருப்பிக்கொண்டு சிகரங்களைப் பார்க்கலானேன். தூரத்தில் கஞ்சன் ஜங்கா ஜொலித்தது.. கஞ்சன் ஜங்காதானா? வேறா?

அது முக்கியமில்லை. சிகரம், நம்பிக்கை.

இந்த முறை நானும் கண்மூடி கஞ்சன் ஜங்காவிடம் வேண்டினேன்.