Thursday, September 11, 2008

இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியா? - 2

தேசிய மொழிக்கும் அலுவலகத் தொடர்பு மொழிக்கும் உள்ள வேறுபாடு புரிபடுவது கடினமல்ல எனினும், இதை விளக்க மெனக்கெட வேண்டும். மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறை, மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் இந்தி பிரசார அமைப்புகள் செய்த LOBBY ( தமிழில் என்ன பதம் இதற்கு?) 50களில் தொடங்கி 90கள் வரை நீடித்ததும் இதற்கு ஒரு காரணமே.

நளன் சொன்னதுபோல வரலாற்றுத்துறையின் தவறு என்றாலும், அதற்கான முதலீடும் ஆதரவும் டெல்லியிலிருந்து கிடைக்கும்போது உண்மைகள் புதைபடுவது ஆச்சரியமல்ல. தமிழ் தமிழ் எனக் கூப்பாடு போடும் திராவிட அமைப்புகள் இதனை பொதுமக்களுக்கு ( தமிழ்நாட்டில் மட்டுமல்ல) கொண்டுசெல்ல,பிற மாநிலங்களின் மொழி வளர்ப்புகழகங்களுடன் தொடர்பு கொண்டு முனைந்திருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு இதெல்லாம் செய்ய எங்கே நேரம்? வெறுமே இந்தி மொழிப் பலகைகளில் தார் இட்டு அழிப்பது புரட்சியாகாது.

தெருவோர அரசியலுக்கும் மொழி ஆர்வத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 60களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பிற மாநிலங்கள் பார்த்த விதம் " தமிழ் வெறி/ இந்தி துவேசம்".

தெளிவாக பிற மாநிலங்களில் நம் நிலையை எடுத்துச் செல்லாதது எவர் குற்றம்? வங்கமும், வடகிழக்கும்கூட இந்தியை எதிர்க்கின்றன. அவர்களுக்கு இந்த அடைமொழி " வெறியர்கள் " இல்லை. நமக்கு மட்டுமே.

இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான அரசியல் நமது நிலையை ஜனநாயகமான மொழிச்சுதந்திரத் தேவை என நிரூபித்திருக்கும். நமக்கு பக்க பலமும் கிடைத்திருக்கும். தவறி விட்டோம்

Wednesday, September 10, 2008

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தனை நாள் கழித்து எழுதவர்றவன் ஒழுங்கா வேற எதாச்சும் எழுதக்கூடாதா? எனக் கோபப்படுபவர்கள் சிறிது பொறுக்கவும்.

ஜெயா பச்சன் குண்டக்க மண்டக்க எதோ பேசப்போக, ராஜ் தாக்கரே வரிந்துகட்டிக்கொண்டு " உ.பி பையாக்களே, அலகாபாத் ரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும்" எனக் கையை காடியது நேற்றுத்தான் என்றாலும்...
"சரிடே, என்னதான் இருந்தாலும், இந்திதானே இந்தியாவின் தேசிய மொழி?" எனப் பலர் நேர்மையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, ஜெயாவுக்கு பரிந்துவரும்போது, தெரியாத்தனமாக எனது நண்பர்கள் குழாத்தில் கேட்டுவிட்டேன்
"யார் சொன்னது இந்தி , இந்தியாவின் தேசியமொழி என்று?" என...
அவனவன் அடிக்காத குறை...
"ஸ்கூலில் படிக்கலையாக்கும்? "
" நீ தமிழ்நாடுக்காரன்.. அதுதான் இந்தி வெறுப்பு.. தேசியமொழி இல்லை எனச் சொல்லும் அளவு வெறி"
என 'நான் இந்தியனே இல்லை, நாட்டுப்பற்றே கிடையாது' என்ற அளவுக்கு பேச்சு..

சான்றுக்கு நான் விக்கிப் பீடியாவை அழைத்தாலும், பல இணையதளங்கள் இன்னும் "இந்தி இந்தியாவின் தேசிய மொழி" என எழுதியிருக்கவே, அங்கும் தகறாறு.

இந்திய அரசியல் கோட்பாடு 343 இந்தி மொழி, தேவனாகரி எழுத்தில், யூனியன் அரசின் அலுவல் மொழி" என மட்டுமே சொல்லியிருக்கிறது.
தேசிய மொழி என எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை என எனக்குப் பண்டு படித்தாக நினைவு.

தெரிந்தவர்கள் கூறவும்... இந்தி தேசிய மொழியா?