Monday, September 26, 2005

பெண்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

ஜெயஸ்ரீக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் "இதைப்பத்தி யாரேனும் எழுதினாங்களா?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டுவைத்தார். அவர் வலைப்பதிவு ஒன்றும் தொடங்காததால், நான் எழுதியடித்துவிட்டேன்.

மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறது எனப் பார்ப்போம். " ஆறாம் வகுப்பு முதல் பெண்குழந்தைகளுக்கு இலவசக்கல்வி" என்று மொட்டையாக டைம்ஸ் ஆப் இந்தியா நேற்று இட்டிருந்தது. இது சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா எனக் கேள்வியிருக்கிறது. அப்படியானால் மாநிலப் பாடத்திட்டக் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகள்?
இன்னொன்று, " ஒரு பெண்குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்" மட்டுமே இச்சலுகை பெறலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் வீட்டில் இரு பெண்குழந்தைகள் இருந்தால்? பெரும்பாலும் அவ்வாறு அமைய சாத்தியமிருக்கிறது. குடும்பக்கட்டுப்பாடு சரியாக அமலாக்கப்படவில்லையெனில் அதற்காகக் குழந்தைகளைத் தண்டித்து என்ன பயன்? சீனாவின் முன்னுதாரணத்தை தவறாகப் பயன்படுத்த முனைவதின் விளைவு இது.
வசதியாக இருக்கும் குடும்பங்களில் ஒரு குழந்தை கொண்டவர்கள் எப்படியாவது படிக்கவைக்கிறார்கள் என ( சும்மா ஒரு பேச்சுக்கு) வைத்துக்கொள்வோம். முரண் இதில் இவ்வாறு அமைகிறது. வசதியுள்ளவர்கள் செலவழிக்க வேண்டாம். ...
பல கல்விநுட்ப வல்லுநர்கள் இதில் உள்ள பிழைகளை இன்று சுட்டியுள்ளனர் ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ). "அடிப்படைக் கல்வியே இங்கு தகிடதத்தம் போடுகிறது. அதை முதலில் கட்டாயமாக்குங்கள். ஒரு வருவாய்க்கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் அடிப்படைக்கல்வியை இலவசமாக்குங்கள்." என்கின்றனர் சிலர். இதில் நியாயம் இல்லாமலில்லை. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை என்று அரசு பேசியதாக ஒரு நினைவு. என்ன ஆயிற்று அது?
பெண்குழந்தைகளைக் கல்விபயில வைக்கும் நல்ல திட்டம் என்றளவில் வரவேற்கப்படவேண்டியது. ஆயின் செயல்முறையில் இருக்கும் இடர்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது அரசு? மாநில அரசுகள் தங்கள் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் அமலாக்க, நிதியுதவி கேட்குமெனில், மத்திய அரசு எவ்வாறு அதனை சமாளிக்கும்? இன்னும் ஒரு கல்வி வரி விதிக்கப்படுமா?
படிக்கவைக்க வசதியுள்ளவர்களையும் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லாமல், அந்தத் தொகையை, மற்றொரு ஏழைப்பெண் கல்விகற்க உபயோகிக்கும் முறை குறித்து அரசு இயந்திரம் சிந்திக்கவேண்டும்.
ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஊக்கத்துடன் செய்ய அவர்களுக்கு வழங்கப்படும் வருமானத் தொகை சரியாகப் போய்ச்சேருகிறதா? என தணிக்கை செய்வது மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்.
ஏனெனில், ஏழ்மை கல்வியை கற்கும் மாணவிகளிடமிருந்து மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் பறித்துவிடுகிறது.

Sunday, September 25, 2005

மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்

மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்
இந்தியில் கார்டூன் நிகழ்சிகள் என்றதும்,"சரி , இனிமே நம்ம பயல் தொலைக்காட்சி பக்கம் போறதை கொஞ்சம் நிறுத்துவான்" என மகிழ்ந்திருந்தேன். நினைப்பில் மண்ணை வாரிப்போட்டது டிஸ்னி சானல். ஒரு சிரமமும் இல்லாமல் அதே அளவு நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன் பையன் இருக்கிறான். பார்த்த நிகழ்சிகளைக் குழந்தைகள் தங்களுக்குள் பேசி நடித்து விளையாடுவது உலக வழக்கு. நேற்று அவன் விளையாடுவதை சிறுது கவனித்தேன்.
அட்சர சுத்தமாக இந்தி வாக்குகள் சுளுவாக குழந்தைகளுக்கு வருகின்றன. " நீ சொன்னது உனக்குப் புரியுதா?" என்றால் அதன் அர்த்தமும் குழந்தைகள் சொல்கின்றனர். கார்ட்டூன் இந்தியில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் .slang போன்றவை கலக்காமல் பேசப்படுகிறது. விளைவு? நல்ல மொழிப் பயிற்சி அதிகம் முயற்சிக்காமலே வருகிறது. பாராட்டவேண்டும் இந்தியில் மொழிப்பெயற்ச்சி செய்கிறவர்களை.
தமிழிலிலும் கார்ட்டூன் பார்த்தேன். இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ச்ரளமாக slang கலந்து சொற்றொடர்கள் வருகின்றன. இதனால் தமிழ் வளராது போவது மட்டுமல்ல, "தமிழ் இப்படித்தான் பேசவேண்டும் " எனக் கருத்தும் இளைய தலைமுறையிடம் வந்துவிடும்.
மொழிப்பெயர்சி செய்பவர்கள் இவ்வாறு ஒரு கண்ணில் வெண்ணெய் , மற்றொன்றில் சுண்ணாம்பு என இல்லாமல் இருந்தால் தமிழுக்கு நல்லது.
காக்கைச் சிறகினிலே.

முதலில் ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம் வந்துவிட்டது என்ற நற்செய்தியை அறிவித்துவிடுகிறேன். இரு வாரங்களுக்கு முன் இது குறித்து குறிப்பாக எழுதியிருந்தேன். நண்பர் தெரிவித்த மார்கெட் ரகசியம் என்பதால் சிறிது அடக்கி வாசிக்க நேர்ந்தது.
"இது ஒரு புதிய மார்கெட் திறக்கும்" என சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். சில கருத்துக் கணிப்புகள் , ஆண்களில் பலர் சிகப்பழகு அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தருவதாக எண்ணுவதாக குறித்திருந்தன. உலகமயமாக்கலில், எந்த சமுதாயம் சிலரது தோல் நிறம் கொண்டு தங்கள் முதலீடுகளைத் தீர்மானிக்கிறது எனப் புரியவில்லை.
எந்த சமுதாயத்தில் இவ்வாறு ஆண்கள் சிகப்பழகை விரும்புகிறார்கள் எனபது இனி வரும் விளம்பரத்தில் காணலாம் - மிகத் தவறான கருத்த்து மதிப்பீடுகளின் வெளிப்பாடாக.
அண்ணாசாலையில் "நீங்க ஃபேர் ஆக வேணாடமா? எங்க க்ரீம் யூஸ் பண்ணிப் பாருங்க" என த்ரிஷா, கிரண் ஆகியோரது அறிவுறுத்தல் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
இது உருப்படற வழியாத் தெரியலை.

Saturday, September 17, 2005

நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்

.
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்.
------------------------------------------------------------------------

நீங்கள் நினைத்த அந்த நாலெழுத்து வார்த்தையினும் கெட்டது இது. RAPE என்பதற்கு, தமிழில் கற்பழிப்பு என்பதைவிட மிக வல்லிய வாக்கு இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. அதன் நிகழ்வைவிடக் கொடியது அதனைக்குறித்தான அவதானிப்புகளும், எண்ணங்களும். ஒரு சமுதாயம் எப்படி தன் பெண்களை குறித்து சிந்திக்கிறது என்பது அதன் அரசியல் வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.
பாக்கிஸ்தானில் பஞ்சாயத்தால் பல மிருகங்களால் கற்பழிக்கப்படவேண்டும் என தண்டனை விதிக்கப்பட்ட பெண் அமெரிக்கா சென்று "பாக்கிஸ்தானில் நீதி கிடைக்காது" என வெதும்பிச் சொன்னதைக் குறித்து ,முஷரப் பேசியது மிகத் தரக்குறைவு.
ஒரு நாட்டின் பிரதான பொறுப்பில் உள்ளவர் பேசும் பேச்சல்ல இது.

"பாக்கிஸ்தானியப் பெண்கள் வெளிநாடு சென்று ( அமெரிக்கா, கனடா எனக் குறிப்பிட்டு)குடியேற்றமும், டாலர்களும் கிடைப்பதற்காக, வேண்டுமென்றே கற்பழிப்பில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றனர்" என்று அவர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாக்கிஸ்தானில் பெண்கள் இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளது நியாயமான கோபங்களின் வெளிப்பாடு. ஆயின் இது போதாது.
ஆணாதிக்க உணர்வும், பெண்களை மிகக்கேவலமாக கருதும் எண்ணமும் கொண்ட ஒரு நாட்டுத்தலைவரிடம் என்ன பெரிதாக எதிர்பார்த்துவிடமுடியும்?

வேலியே பயிரை மேய்ந்த அவமானம் ஒருபுறமிருக்க,அதனைக் குறித்தான சிந்தனையும் பேச்சும் அதனைவிட அருவெறுப்பாக இருக்கிறது. முஷரஃப் காஷ்மீர் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு கராச்சியிலும், லாகூரிலும் தனது ஆட்சியின் தரம் குறித்து கவலைப்படட்டும்.
முதலில் மனிதனாக அவர் வாழ முயலவேண்டும். பாக்கிஸ்தானியாக வாழ்வதை பற்றி அவர் பிறகு யோசிக்கலாம்.

காக்கைச் சிறகினிலே -2

காக்கைச் சிறகினிலே -2

நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பச்சி கர்க்காரியாவின் கட்டுரை

சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் கலந்துகொண்டதைக் கண்டித்து அமைந்திருந்த அக்கட்டுரையின் நியாயமான கோபங்கள் சம்பந்தப்பட்டவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்கும்.

கறுப்பாக இருப்பது ஏதோ குறைபாடு என்பது போலவும், அவ்வாறு இருப்பவர்கள் சிவப்பாக்கும் க்ரீம்கள் உபயோகிப்பதன் மூலம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது போலவும் அமைந்து வரும் விஷமத்தனமான விளம்பரங்களின் சொந்தக்காரர்கள் நடத்தும் விழாக்களில் அதுவும் சிகப்பு மட்டுமே அழகு எனக்காட்டும் அழகுப்போட்டிகளில் பெண்ணியவாதிகள் கலந்துகொண்டு கைதட்டுவது எந்தவிதத்தில் அவர்களின் தார்மீகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது?

'உழைத்துப்படித்து முன்னேறுவது என்பதைவிட சிகப்பாக இருந்தால் போதும்; அழகாக இருந்தால் போதும்; பேரும் புகழும் தானாகவே தேடிவரும்; சினிமாவில் வாய்ப்பு கிட்டும்' என்பது போல அமைந்து வரும் விளம்பரங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. (இது குறித்தான எனது வாதங்களை அண்மையில் எழுதினேன்). இதில் சினிமாக்காரர்களும் ( ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இது வேணுமா?)அடக்கம்.

பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளின் மனதைத் திசைதிருப்பும்படி அமையும் இவ்விளம்பரங்கள் ஒரு புறமென்றால், மற்றொரு சோப்பு விளம்பரம் ஒரு படி மேலே செல்கிறது. பெண்ணை சோப்பு வாங்க அனுப்பும் அம்மா, அய்யோ இவள் வேறெதாவது சோப்பு வாங்கிவந்துவிட்டால், சருமத்துக்கு கேடாகும்.. அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது ( எப்படி இருக்கிறது கதை? பெண்ணுக்கு வயது ஏழு இல்லை எட்டு இருக்கும்) என அல்லாடுவதாக அமைந்திருந்தது. யார் சொன்னார்களோ "கல்யாணமே நடக்காது" என்னும் வரிகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன செய்தாலும் விஷம் விஷம்தானே.

இது போன்ற விளம்பரங்களும் அவை விற்கும் விஷங்களும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றும் கொடிய சக்திகள் இவை.

Saturday, September 10, 2005


பாரதி ஸாங்க்ஸ் லிஸன் பண்ணினீங்களா?

பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா இன்று வந்தது. வழக்கம் போல விஜய் ஆதிராஜ் தமிங்கிலத்தில் தொடங்கினார். அதில் பேசிய சொற்றொடர்களைக் கேளுங்கள்.
"பாரதி எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லையா?
அவர் ஆயிரக்கணக்கான பாடல் எழுதியிருக்கார். அவரோட நிறைய ஸாங்க்ஸ் படங்கள்ல கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க.
இந்த எபிஸோட் அவரை ரிமெம்பெர் பண்ற மாதிரி அமைச்சிருக்கோம்
அவரோட திரைப்பட(?) டூயட் ஸாங்க்ஸ் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல பாடுவாங்க.
நீங்க எந்த ஸாங்க் பாடப்போறீங்க?
வெரிகுட்.
ஒரு சின்ன ப்ரேக்."

பிற நிகழ்சிகளில் ஆங்கிலம் கலப்பதை விடுங்கள். இன்றாவது, பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம். இசைக்கு மொழி கிடையாது என்று ஒரு சாக்கு சொல்லிவிடலாம். ஆனால், பாடலுக்கும், கவிதைக்கும் மொழியின் ஆழம் அடர்வு உண்டு. அந்த அளவிற்காவது பாரதியின் பாடல் என ஒரு மரியாதை இருந்திருக்க வேண்டும்.
இதைச் சொல்லப்போனால் " இது ஜனரஞ்சகமான, பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் நிகழ்ச்சி. இதிலெல்லாம் ரொம்பவும் மொழித் தரம் என்றெல்லாம் பார்க்க முடியாது " எனப் பதில் வரும். அதற்காக இப்படியா?
தேவுடா!

மெல்லத் தமிழினி.....

போன வாரம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமாய் ஒரு அவசரப் பயணம். சென்னைஎக்ஸ்பிரஸ் சென்ட்Tரலில் வந்து சேர்ந்த்ததுமே ஒரு புதிய உற்சாகம். குப்பையாக மும்பை சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு சென்னை என்றாலே கொஞ்சம் நிம்மதிதான்.
மவுன்ட் ரோட்டில் ஒரு பெரிய விளம்பரப்பலகை. "செல்ஃபோன் எதுக்கு. டாக் பண்ண்றதுக்கு" என ஒரு நடிகை சொல்லியவாறு ... தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு அதனை வாசித்துக்க் கட்டுவதில் சிரமமே இருக்கவில்லை. " அப்பா, இது இங்க்லீஷ்ல இருக்கு. நீ தமிழ்ல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு" என்றான். ஒரு வருடம் முன்னால் புனே நகரில் தேசிய வேதியியல் ஆராய்வுச் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
எனது நண்பர் டாக்டர் தேஷ்பான்டேயின் மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை செல்ல நேர்ந்தது. " அவனுக்கு தமிழ் தெரியாதே" என்றார் கவலையாய். " ஒன்றும் பயமில்லை சார். ஒரு மாதத்தில் தேறிவிடுவான். மேலும் அலுவலகத்தில் ஆங்கிலம் இருக்கும். கவலையை விடுங்கள் " என்று சொல்லியிருந்தேன். இரு வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் அவர் பையனைச் சந்தித்தபோது " மொழிப் பிரச்சனை இருக்கா?" என்றேன். இல்லை என்றான் சிரித்தபடி. " அவங்க தமிழ்-ல பேசினாலும் எனக்குப் புரியும். பாதிக்கு மேல தமிழ்ல இங்லீஷ்தானே இருக்கு ? "
தமிழ் இலக்கணம், இலக்கியம் தெரியாது எனக் கவலைப்படுவதை விட இது மிகத் தீவிரமாக கவனிக்கப் பட வேண்டிய விசயம். சராசரி மனிதன் பேசும் தமிழில் தமிழ் எத்தனை சதவீதம் இருக்கிறது? ஆங்கிலம் கலக்காது பேசுவது "செந்தமிழில் பேசுவது" என்று அர்த்தமில்லை.
எளிய தமிழில் கடு கட்டியான செந்தமிழ் வாக்குகள் இல்லாமலே சரளமாக பேசலாம். இந்த மொழிப்பூனைகளுக்கு மணிகட்டுவது நம்மால் மட்டுமே முடியும்.
அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யமாட்டர்கள். அவர்கள் அளவில் மொழிப்பற்று என்பது நெடுஞ்சாலையிலும், ரயில்வண்டி நிலயங்களிலும் இந்தி மொழிப் பெயர்களை தார் போட்டு அழிப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது.
நாம் ஒழுங்கான தமிழில் வீட்டிலும் வெளியிலும் பேசவில்லையெனில் 'மெல்லத் தமிழினி..."

பி.கு அதே தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மும்பையில் எப்படி தெரியுமா? சரியான இந்திச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள்.!

Friday, September 09, 2005

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி
-------------------

நாராயண் மாத்ரே-ஐ கொஞ்ச நாளாய்த்தான் எனக்குப் பழக்கம். பெரிய உரத்தொழிற்சாலையில் பணியாற்றும் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பிடித்துவிட்டது. வழுக்கைத்தலையும், சிறிய மூக்குக்கண்ணாடியுமாய், முதிர்ந்த உயர் நடுத்தரமட்டத்து தலைமுறையின் ஒரு உதாரணம் அவர்.
போனவாரம் எனது அலுவலக மின்னஞ்சல் தொடர்பு சிறிது பாதிக்கப்பட்டிருந்ததை அவருக்கு ஒரு மின்னஞ்சலில் விளக்கியிருந்தேன். நேற்று சந்தித்தபோது சட்டெனக் கேட்டார் "நீங்கள் கான்வெண்ட்டில் படித்தவரில்லை சரியா?"
ஆம் என்றேன்.
"உங்கள் தாய்மொழியில் பள்ளியில் படித்திருப்பீர்கள்" என்றார்
"ஆம்" என்றேன் சற்றே வியப்புடன்.எதாவது தவறாக எழுதிவிட்டேனோ?
கேட்டுவிட்டேன்.
சிரித்தார் " இல்லை. தவறு இல்லாமல் இலக்கண சுத்தமாக இப்போது இளைஞர்கள் எழுதுவதில்லை. அதுவும் மின்னஞ்சல் என்றால் கேட்கவே வேண்டாம்."
"நீங்கள் சொல்வது சற்றே மிகைப்பட்டதாகத் தோன்றுகிறது" என்றேன். " உங்கள் மற்றும் எனது தலைமுறையினருக்கு ஆங்கில மீடிய கான்வெண்ட் படிப்பு என்றால் ஒரு நிறப்பிரிகையுள்ள கண்ணாடி மூலமே பார்க்கிறோம். சிலருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை மறைப்பதற்கு அனாவசியமாக எல்லாவற்றிலும் மட்டம்தட்டி குற்றம் காண்கிறோம். அனைவரும் இப்படி எழுதுவதில்லை. சிலருக்கு பொறுமை இல்லாமை, நேரப்பற்றாக்குறை, அவசரம் ... அதனால் பிழைகள் வரலாம். பொருட்படுத்தாதீர்கள்" என்ற என் பேச்சைக் கேட்டவாறே அவரது கணனியின் திரையைக் காட்டினார்.
"இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்" என்றார். அது ஒரு தனியார் நிதிக்கம்பெனியிலிருந்து வந்திருந்தது. பெரும் பேரும் புகழும் உலகளவில் பெற்றிருக்கும் நிதிக்கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபரின் மின்னஞ்சல். நம்பமுடியாத அளவிற்கு பிழைகள்.
"பிழைகளை விடுங்கள். வார்த்தைகளில் ஒரு மதிப்போ, மரியாதையோ கூடத் தென்படவில்லை.சுதாகர் " என்றார் மாத்ரே. "நான் ஒரு வாடிக்கையாளன் என்ற அளவில் ஒரு மரியாதை எதிர்ப்பார்ப்பது தவறா? சொல்லுங்கள்" என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
Slangs சரளமாக உபயோகித்துப் பழகியிருக்கக் கூடும் அந்த இளைஞன்... வார்த்தைகளி, சொற்றொடர்களில் ஒரு இணைப்பு இல்லை. நேராக விசயத்திற்கு வந்திருந்தான். இரண்டே வார்த்தைகளில் தனது கம்பெனி ஏன் நிதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறான். மிக மிக நாசூக்காகச் சொல்ல வேண்டியது. யார் படித்தாலும் கோபம் மூளும்.

"நமது இளைஞர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டுமென்பதும், சிந்திப்பதை எப்படி வார்த்தைகளில் கொணரவேண்டுமென்பதும் கற்பிக்கப் படவில்லை. நான் படிக்கும்போது லாஜிக் என்றொரு வகுப்பு உண்டு. சிந்திக்கும் முறை, வழி பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள் " என்றார் மாத்ரே, மூக்குக்கண்ணாடியைத் துடைத்தபடியே.

"இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஒரு மனிதனின் தவறை அவன் தலைமுறை முழுதும் ஏற்றுவது சரியல்ல. எத்தனை எம்.பி.ஏ பட்டதாரிகள் இப்போது வருகிறார்கள்? எல்லோருமா இப்படி தவறு செய்கிறார்கள்?" என வாதாடினேன்.

" நான் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே காட்டினேன். என்னுடன் வருகிறீர்களா? மும்பையின் பிரபலமான கல்லூரிகளுக்குச் செல்வோம். எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும், அதனை வெளிப்படச் சொல்லும் திறமை இருக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் மாத்ரே.

"நான் படித்தது கிராமத்தில். மராத்தி மீடியம்தான். அதில் வருத்தமோ வேதனையோ இல்லை. மாறாக இப்போது எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்கிறேன். Wren &Martin இலக்கணமும், மனப்பாடச் செய்யுள்களும், கணித வாய்ப்பாடுகளும் இப்போதும் எனக்குக் கைகொடுக்கிறது. நாலு இலக்க எண்களைக் கூட்டவும், வட்டி, கழிவுத்தொகை கணக்குகளுக்கும் எனக்கு எக்ஸெல் தேவையில்லை. இவர்களுக்கு லாப்டாப் இல்லாமல் முடியாது." மாத்ரேயின் சொற்களில் உண்மையிருக்கிறது.

புதிய பாடத்திட்டங்களை ஒழுங்காக உருவாக்குவதிலும், அதனைச் செயல்படுத்தவும் தோல்வியடைந்த நாம், பழைய பாடத்திட்ட முறையிலிருந்த நல்ல விசயங்களையும் கைவிட்டுவிட்டோ ம். தெளிவாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைக் கோர்வையாகச் சொல்லவும், எழுதவும் நமது இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோ ம்.
இந்தியாவின் இப்போதைய முன்னேற்றத்திற்கு இந்த தெளிவான சிந்தனையும், திறம்படச் செயல்படும் திறனும் முக்கியகாரணம் என்பதை வளர்ந்து வரும் தலைமுறைக்கு உணர்த்தவேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் பேச்சுப்போட்டியும், எழுத்துப்போட்டியும், போட்டியளவில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிட்டும் என்பது இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்பப் பயிற்சியளிக்கவேண்டும். கணிதம் என்றாலே "எங்கே எக்ஸெல்?" என்னும் அளவிற்கு மூளைச் சோம்பேறிகளை உருவாக்குவதில் பெரும் அபாயம் இருக்கிறது. கணனித்துறைக்கு வெறும் coderகள் மட்டும் வேண்டுவதில்லை. ஆராய்ந்து அறிந்து, செயல்படுத்தும் திறமையும் முக்கியம் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணருவதில்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் PTA போன்ற அமைப்புகள் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில், பெயர் சொல்லவே திக்கித்திணறும் இந்தியாவை இன்னும் பத்துவருடங்களில் காணலாம்.