பெண்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி
ஜெயஸ்ரீக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் "இதைப்பத்தி யாரேனும் எழுதினாங்களா?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டுவைத்தார். அவர் வலைப்பதிவு ஒன்றும் தொடங்காததால், நான் எழுதியடித்துவிட்டேன்.
மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறது எனப் பார்ப்போம். " ஆறாம் வகுப்பு முதல் பெண்குழந்தைகளுக்கு இலவசக்கல்வி" என்று மொட்டையாக டைம்ஸ் ஆப் இந்தியா நேற்று இட்டிருந்தது. இது சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா எனக் கேள்வியிருக்கிறது. அப்படியானால் மாநிலப் பாடத்திட்டக் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகள்?
இன்னொன்று, " ஒரு பெண்குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்" மட்டுமே இச்சலுகை பெறலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் வீட்டில் இரு பெண்குழந்தைகள் இருந்தால்? பெரும்பாலும் அவ்வாறு அமைய சாத்தியமிருக்கிறது. குடும்பக்கட்டுப்பாடு சரியாக அமலாக்கப்படவில்லையெனில் அதற்காகக் குழந்தைகளைத் தண்டித்து என்ன பயன்? சீனாவின் முன்னுதாரணத்தை தவறாகப் பயன்படுத்த முனைவதின் விளைவு இது.
வசதியாக இருக்கும் குடும்பங்களில் ஒரு குழந்தை கொண்டவர்கள் எப்படியாவது படிக்கவைக்கிறார்கள் என ( சும்மா ஒரு பேச்சுக்கு) வைத்துக்கொள்வோம். முரண் இதில் இவ்வாறு அமைகிறது. வசதியுள்ளவர்கள் செலவழிக்க வேண்டாம். ...
பல கல்விநுட்ப வல்லுநர்கள் இதில் உள்ள பிழைகளை இன்று சுட்டியுள்ளனர் ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ). "அடிப்படைக் கல்வியே இங்கு தகிடதத்தம் போடுகிறது. அதை முதலில் கட்டாயமாக்குங்கள். ஒரு வருவாய்க்கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் அடிப்படைக்கல்வியை இலவசமாக்குங்கள்." என்கின்றனர் சிலர். இதில் நியாயம் இல்லாமலில்லை. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை என்று அரசு பேசியதாக ஒரு நினைவு. என்ன ஆயிற்று அது?
பெண்குழந்தைகளைக் கல்விபயில வைக்கும் நல்ல திட்டம் என்றளவில் வரவேற்கப்படவேண்டியது. ஆயின் செயல்முறையில் இருக்கும் இடர்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது அரசு? மாநில அரசுகள் தங்கள் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் அமலாக்க, நிதியுதவி கேட்குமெனில், மத்திய அரசு எவ்வாறு அதனை சமாளிக்கும்? இன்னும் ஒரு கல்வி வரி விதிக்கப்படுமா?
படிக்கவைக்க வசதியுள்ளவர்களையும் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லாமல், அந்தத் தொகையை, மற்றொரு ஏழைப்பெண் கல்விகற்க உபயோகிக்கும் முறை குறித்து அரசு இயந்திரம் சிந்திக்கவேண்டும்.
ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஊக்கத்துடன் செய்ய அவர்களுக்கு வழங்கப்படும் வருமானத் தொகை சரியாகப் போய்ச்சேருகிறதா? என தணிக்கை செய்வது மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்.
ஏனெனில், ஏழ்மை கல்வியை கற்கும் மாணவிகளிடமிருந்து மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் பறித்துவிடுகிறது.
No comments:
Post a Comment