சிந்திக்க ஒரு நொடி
-------------------
நாராயண் மாத்ரே-ஐ கொஞ்ச நாளாய்த்தான் எனக்குப் பழக்கம். பெரிய உரத்தொழிற்சாலையில் பணியாற்றும் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பிடித்துவிட்டது. வழுக்கைத்தலையும், சிறிய மூக்குக்கண்ணாடியுமாய், முதிர்ந்த உயர் நடுத்தரமட்டத்து தலைமுறையின் ஒரு உதாரணம் அவர்.
போனவாரம் எனது அலுவலக மின்னஞ்சல் தொடர்பு சிறிது பாதிக்கப்பட்டிருந்ததை அவருக்கு ஒரு மின்னஞ்சலில் விளக்கியிருந்தேன். நேற்று சந்தித்தபோது சட்டெனக் கேட்டார் "நீங்கள் கான்வெண்ட்டில் படித்தவரில்லை சரியா?"
ஆம் என்றேன்.
"உங்கள் தாய்மொழியில் பள்ளியில் படித்திருப்பீர்கள்" என்றார்
"ஆம்" என்றேன் சற்றே வியப்புடன்.எதாவது தவறாக எழுதிவிட்டேனோ?
கேட்டுவிட்டேன்.
சிரித்தார் " இல்லை. தவறு இல்லாமல் இலக்கண சுத்தமாக இப்போது இளைஞர்கள் எழுதுவதில்லை. அதுவும் மின்னஞ்சல் என்றால் கேட்கவே வேண்டாம்."
"நீங்கள் சொல்வது சற்றே மிகைப்பட்டதாகத் தோன்றுகிறது" என்றேன். " உங்கள் மற்றும் எனது தலைமுறையினருக்கு ஆங்கில மீடிய கான்வெண்ட் படிப்பு என்றால் ஒரு நிறப்பிரிகையுள்ள கண்ணாடி மூலமே பார்க்கிறோம். சிலருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை மறைப்பதற்கு அனாவசியமாக எல்லாவற்றிலும் மட்டம்தட்டி குற்றம் காண்கிறோம். அனைவரும் இப்படி எழுதுவதில்லை. சிலருக்கு பொறுமை இல்லாமை, நேரப்பற்றாக்குறை, அவசரம் ... அதனால் பிழைகள் வரலாம். பொருட்படுத்தாதீர்கள்" என்ற என் பேச்சைக் கேட்டவாறே அவரது கணனியின் திரையைக் காட்டினார்.
"இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்" என்றார். அது ஒரு தனியார் நிதிக்கம்பெனியிலிருந்து வந்திருந்தது. பெரும் பேரும் புகழும் உலகளவில் பெற்றிருக்கும் நிதிக்கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபரின் மின்னஞ்சல். நம்பமுடியாத அளவிற்கு பிழைகள்.
"பிழைகளை விடுங்கள். வார்த்தைகளில் ஒரு மதிப்போ, மரியாதையோ கூடத் தென்படவில்லை.சுதாகர் " என்றார் மாத்ரே. "நான் ஒரு வாடிக்கையாளன் என்ற அளவில் ஒரு மரியாதை எதிர்ப்பார்ப்பது தவறா? சொல்லுங்கள்" என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
Slangs சரளமாக உபயோகித்துப் பழகியிருக்கக் கூடும் அந்த இளைஞன்... வார்த்தைகளி, சொற்றொடர்களில் ஒரு இணைப்பு இல்லை. நேராக விசயத்திற்கு வந்திருந்தான். இரண்டே வார்த்தைகளில் தனது கம்பெனி ஏன் நிதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறான். மிக மிக நாசூக்காகச் சொல்ல வேண்டியது. யார் படித்தாலும் கோபம் மூளும்.
"நமது இளைஞர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டுமென்பதும், சிந்திப்பதை எப்படி வார்த்தைகளில் கொணரவேண்டுமென்பதும் கற்பிக்கப் படவில்லை. நான் படிக்கும்போது லாஜிக் என்றொரு வகுப்பு உண்டு. சிந்திக்கும் முறை, வழி பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள் " என்றார் மாத்ரே, மூக்குக்கண்ணாடியைத் துடைத்தபடியே.
"இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஒரு மனிதனின் தவறை அவன் தலைமுறை முழுதும் ஏற்றுவது சரியல்ல. எத்தனை எம்.பி.ஏ பட்டதாரிகள் இப்போது வருகிறார்கள்? எல்லோருமா இப்படி தவறு செய்கிறார்கள்?" என வாதாடினேன்.
" நான் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே காட்டினேன். என்னுடன் வருகிறீர்களா? மும்பையின் பிரபலமான கல்லூரிகளுக்குச் செல்வோம். எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும், அதனை வெளிப்படச் சொல்லும் திறமை இருக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் மாத்ரே.
"நான் படித்தது கிராமத்தில். மராத்தி மீடியம்தான். அதில் வருத்தமோ வேதனையோ இல்லை. மாறாக இப்போது எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்கிறேன். Wren &Martin இலக்கணமும், மனப்பாடச் செய்யுள்களும், கணித வாய்ப்பாடுகளும் இப்போதும் எனக்குக் கைகொடுக்கிறது. நாலு இலக்க எண்களைக் கூட்டவும், வட்டி, கழிவுத்தொகை கணக்குகளுக்கும் எனக்கு எக்ஸெல் தேவையில்லை. இவர்களுக்கு லாப்டாப் இல்லாமல் முடியாது." மாத்ரேயின் சொற்களில் உண்மையிருக்கிறது.
புதிய பாடத்திட்டங்களை ஒழுங்காக உருவாக்குவதிலும், அதனைச் செயல்படுத்தவும் தோல்வியடைந்த நாம், பழைய பாடத்திட்ட முறையிலிருந்த நல்ல விசயங்களையும் கைவிட்டுவிட்டோ ம். தெளிவாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைக் கோர்வையாகச் சொல்லவும், எழுதவும் நமது இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோ ம்.
இந்தியாவின் இப்போதைய முன்னேற்றத்திற்கு இந்த தெளிவான சிந்தனையும், திறம்படச் செயல்படும் திறனும் முக்கியகாரணம் என்பதை வளர்ந்து வரும் தலைமுறைக்கு உணர்த்தவேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் பேச்சுப்போட்டியும், எழுத்துப்போட்டியும், போட்டியளவில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிட்டும் என்பது இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்பப் பயிற்சியளிக்கவேண்டும். கணிதம் என்றாலே "எங்கே எக்ஸெல்?" என்னும் அளவிற்கு மூளைச் சோம்பேறிகளை உருவாக்குவதில் பெரும் அபாயம் இருக்கிறது. கணனித்துறைக்கு வெறும் coderகள் மட்டும் வேண்டுவதில்லை. ஆராய்ந்து அறிந்து, செயல்படுத்தும் திறமையும் முக்கியம் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணருவதில்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் PTA போன்ற அமைப்புகள் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இல்லையெனில், பெயர் சொல்லவே திக்கித்திணறும் இந்தியாவை இன்னும் பத்துவருடங்களில் காணலாம்.
This is a excellent blog. Keep it going. This may be of interest to you; how to buy & sell downloads music on interest free credit; pay whenever you want.
ReplyDelete