Tuesday, February 23, 2016

ஓடுவதென்பது ஒரு அடி மட்டுமே.


ப்ரதீப் குமார் என் ஆபீஸில் அருகாமையில் இருக்கும் நண்பர். ஒரு வருடம் முன்பு 90 கிலோவில் மூச்சுத் திணறுவார். மதியம் சாப்பிட்ட்டுவிட்டு ஒரு சுத்து சுத்திவந்தால் வியர்வையில் தொப்பலாக நனைந்திருப்பார்.



திடீரென அவரிடம் சில மாற்றங்களை எட்டு மாதங்கள் முன்பு கண்டேன். அவரது மூச்சுத் திணறல் சீரானது. சுற்றுகள் அதிகமாக, அவர் அதிகம் களைத்துப்போகவில்லை. பேண்ட், சட்டைகள் மாறின. “லூசாயிருச்சுங்க” என்றார்.  மதியம் நொறுக்குத்தீனியாக சமோசா, ஆனியன் தோசை, பெங்காலி ஸ்வீட்டில் மிஷ்டி தோய் என்பதெல்லாம் போய்விட்டது.

என்னதான் செய்யறார்? என்று கேட்டதற்கு ” ஒண்ணுமில்ல, ஓடறேன்” என்றார்.

“ஓடறீங்களா? நடக்கவே தடுமாறுமே?”

“அதான் ஓடறேன். நடந்தாதானே ப்ரச்சனை?”

சீரியஸாகக் கேட்டபோது, ஓட்டப்பயிற்சி செய்வதாகச் சொன்னார். பத்து அடி ஓடினாராம் முதல்நாள். வியர்வை. நடுங்கிப்போய் நிறுத்திவிட்டார். ரெண்டாவது நாள் சொசயிடியைச் சுத்தி வந்தார். கால் வலி விண்விண் என ரெண்டு நாள் பிடுங்கியது. “உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? பேசாம ஐபாட் வைச்சு, காதுல சொருகிட்டு நடங்க.” என்ற டாக்டர்களை சற்றே இளித்து சமாளித்தார்.

ஒரு மாடி வரை ஏற முயன்று தடுமாறியிருக்கிறார். முட்டு வலி, வீக்கம், பழைய கான்வாஸ் ஷூ காலைப் பிடுங்கி, உட்பாதத்தில் புண்கள்.
நொண்டி நொண்டி ஆபீஸ் வந்தார் இரு வாரம்.

பிற ஆபீஸ்களிலிருந்து வந்தவர்கள் அவரது உடல் மெலிதல் கண்டு வியந்துபோனார்கள். அவர் டூரில் பிறருடன் செல்லும்போது, “ ஆடைகள் கொண்டு வந்திருக்காரோ இல்லையோ, ரன்னிங் ஷூ இருக்கும் பையில” என்ற கிண்டல்களைப் பொருட்படுத்தாமல் , காலையில் லொங்கு லொங்கு என ஓடினார்.

இடையிடையே இண்டெர்நெட்டில், ஓடுபவர்களின் கிளப்பில் எனப் போய் ஓடுவது குறித்த டெக்னிக்குகளைச் சேர்த்துவந்தார். இத்தனைக்கும் ஆபீஸ் பணியில் ஒரு குறைவும் இல்லாமல். அவருக்கு மிகப்பிடித்த டன்கின் டோனட்-டில் டோனட் வாங்கலாம் எனப் போனால்,” விடுங்க. ஓடணும். இது வெயிட் போடும்” என்றதும் தலைசுற்றியது எனக்கு.


இவர் இப்படி ஓடுவதை எனது வாடிக்கையாளர் ஒருவரிடம் சொன்னேன். அந்தப் பெண்மணியும் அரை மராத்தான் ஓடியவர் “ ஓ! அவருக்கு மன உறுதி மிகவும் அதிகம் வரும் பாருங்க. ஒரு லெவலுக்கு அப்புறம் ஓட்டம் என்பது மனத்துடனான விளையாட்டு. உடல் ஒன்றுமில்லை ஒரு தளத்துக்குமேலே” என்றார்.

“அதெப்படி?”என்றேன் ப்ரதீப்பிடம். அவர் விஷமமாகச் சிரித்தார்.

“ஓடணும்னு தொடங்கற வரைக்கும் கட்டுப்பாடு , உற்சாகம் உறுதி எல்லாம் இருக்கும். காலேல எந்திக்கறது முதல் தடை. அப்புறம் ஓடத் தொடங்கறதுக்க்கு முன்னாடி உடம்பு வம்பு பண்ணும். கால் இழுத்திருக்குன்னு தோணும், இன்னிக்கு வேணாம். நாளைக்கு ஒடலாம். முதல்ல ஆபீஸ் வேலையப் பாப்போம்” என்று சரியாக தருக்கமெல்லாம் மனதுக்குத் தோணும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு கிமீ ஓடினதுக்கு அப்புறம் ரொட்டீனாக ஓடுவது போரடிக்கும். மனசு அங்குமிங்கும் அலைபாயும். ரைட்டு திரும்பிறலாம்னு தோணும். அதைத் தாண்டி ரெண்டாவது கிமீ போறது மிகக் கஷ்டம்”

“அப்புறம் எப்படி ஓடறீங்க?” என்றேன்.

“மன ஆளுமைதான். சால்ஜாப்பு சொல்லக்கூடாது. இதோ வந்தாச்சு என்றெல்லாம் ஆசைக்காட்டக் கூடாது. ஓடணும். ஓடணும், அவ்வளவுதான் முடிவு எல்லை பத்தி கனவு காணக்கூடாது. கஷ்டம், பழக்கத்துலதான் வரும்”
“ஓடறது மைண்ட் கேம், சுதாகர்” என்று அப்பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.


இதேதான் எந்த இலக்கிலேயும். முதல்ல முறுக்கேறி நிப்போம். அட, டைரி எழுதறதை எடுத்துக்குங்க, முதநாள் எழுதுவோம், ரெண்டாவது நாள்... நாலாவது நாளிலிருந்து நின்னு போகும். ஒரு குற்ற உணர்வில் அதன்பின் எழுதவே மாட்டோம்.

”இது விஷச் சுழற்றி” என்றார் ப்ரதீப், வெந்நீர் பருகியபடி. “ தோல்வின்னு ஒண்ணு கிடையாது. தடைகள் உண்டு. தாண்டணும்.னு நினைக்க உறுதி வேணும்.”

“இது முட்டைக்குள்ள இருந்து கோழி ,கோழில இருந்து முட்டை சமாச்சாரம்”
“எதுவும் இருந்துட்டுப்போவுது. நாம பாக்கிறது நிஜம். அது முட்டையா கோழியா முதல்லங்கற பேச்சே வரப்படாது”

உண்மைதான். என்.ஸி.ஸீ கேம்ப்பில் 6 கிமீ ஓடச்சொல்லுவார்கள், ஐம்பது அடியில் பெருமளவு மக்கள் நிற்பார்கள். ஓடுபவர்களில் பாதிபேர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு முகம் சுருங்கப் பல் தெரிய, வேதனையுடன் மூன்றாவது கிமீல் நடப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாது கர்மயோகியாய் ஓடியவன் மட்டுமே இறுதியில் வருவான்.

“வெற்றி என்பதை இலக்காகக் கொள்ளணும், என்ன?” என்றேன்.

”வெற்றியா? ஓடுவது ஓடுவதற்காக மட்டுமே சுதாகர்”

இது கீதையை நினைவுபடுத்தியது. அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன். ஜனவரியில் அவருக்கு இஸ்க்கான் கீதை ஒன்றை பரிசளித்தேன். சந்தோசப்பட்டார்.

தாணேயில் ஹீராநந்தானி பாதி மராத்தான் போட்டியில் கலந்துகொண்டார். பையனும், மனைவியும் ஆக்டிவாவில் பின்னால் வர, இவர் இருபத்திரெண்டு கிமீ வாரத்தில் மூன்று நாட்கள் ஓடிப் பயின்றார்.


போனவாரம் போட்டியில் கலந்துகொண்டு 2மணி 18நிமிடத்தில் முடித்து வந்திருக்கிறார். வெற்றி, பரிசெல்லாம் விடுங்கள்.
  • 90 கிலோவிலிருந்து விடுதலை வெற்றி.
  • மூச்சு அடைப்பிலிருந்து வெற்றி
  • களைப்பிலிருந்து வெற்றி
  • மன உறுதி, விடாமுயற்சியில் வெற்றி
  • மன ஆளுமையில் அமைதியடைவது வெற்றி.






எவனுக்கு வேணும் கோப்பைகள்? வாழ்க்கை கிடைத்திருக்கிறதே?


நீரில் தோன்றும் நிலவு



"உலகம் ஒரு மாயை” என்றார் ஹரீஷ் காரின் பின் சீட்டில் சாய்ந்து கால்நீட்டியவாறே. நண்பர்கள் நான்கு பேராக கார் பூல் அமைப்பாக அபூர்வமாக  செல்ல வாய்ப்பதுண்டு. 

”என்னாச்சு இன்னிக்கு? வீட்டுல சண்டையா?” என்றேன். முன்ஸீட்டில் இருந்த நாகராஜன், சீட்டுகளுக்கு இடையே  பின்னால் கையை நீட்டினார். அதில் செல்லமாக அடித்துவிட்டு தொடர்ந்தேன்.

“ஹரீஷ், நீங்கன்னு இல்ல, எப்பவாச்சும் சோதனை வந்தா, தத்துவம் தானா வந்துடறது. பழைய இந்தி, தமிழ்ப் பாடல்கள்ல இது சகஜம்”

இத்தனையில் ”பியா தூ” என்று ஆஷா போஸ்லேயின் பாடல் ஒலிக்க, கர்ண கடூரமாக, நாகராஜன் கீச்சுக்குரலில் உச்சஸ்தாயியில் சேர்ந்து பாடினார்.( பெண் குரலாம்). 

”நாகராஜ், ப்ளீஸ்” என்றார் ஹரீஷ். ”வெளியே குதிக்கவும் முடியாது. குமார், வண்டிய ஓரம்கட்டி ,இந்தாளை வெளியே தள்ளு” 

ஓட்டிக்கொண்டிருந்த குமார் புன்னகைத்தார். எப்பவுமே அந்த புன்னகையோடு நின்றுவிடும். அதிகம் பேசமாட்டார். அற்புதமான மனிதர்.
“குமார், 80கள்ல வந்த பாட்டைப் போடுங்க. பியா தூ பாட்டை ஒரு கற்பழிப்பிலிருந்து காப்பாற்றணும்” 

குமார் ”இந்திப் பாடல்கள்ல பிலாஸபி பாட்டு  80 முடிவுலயும் வந்துது. வெளிப்படையா இருக்காது. தேஜாப் படத்துல “ஸோகயா ஏ ஜஹான்,” பாட்டு கேட்டிருக்கீங்களா?” என்றார்.

அட வியந்தேன். அதுல என்ன பிலாஸபி? சோகப்பாட்டு அம்புட்டுத்தான்.
“இந்த இடம் உறங்கிவிட்டது, வானம் உறங்கிவிட்டது, சேருமிடம் உறங்கிவிட்டது,.. பாதையும் உறங்கிவிட்டது” என்ற வரிகளைப் பாருங்கள். அனைத்தும் அமைதியான அடங்கிய பொழுதில் யார் எங்கு போய்ச் சேர? “
ஹரீஷும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இந்த ஆளா?

குமார் விவாகரத்து ஆனவர் என்பது மட்டும் தெரியும். அவரது 6 வயது மகள் இப்போது மருத்துவமனையில்.. . மனநிலை சரியில்லாத மகளை விட்டுவிட்மனைவி யாருடனோ எங்கோ போய்விட்டாள் என்கிறார்கள் சிலர். அதெப்படி ஒரு தாய் தன் மகளை விட்டுப் போவாள்? என்று ஒரு சிலர் தருக்கித்தனர். இது அவரது சொந்தப் பிரச்சனை என்பதால் அதிகம் நாங்கள் கேட்டுக்கொள்வதில்லை.

இரு நாட்களுக்குப் பின் நானும் குமாரும் மட்டும் அஹமத் நகர் வரை காரில் செல்ல நெர்ந்தது.. “ட்ரைவர் வேணாம். நான் என் வண்டிய எடுக்கறேன்” என்றார் குமார். அதிகாலை கிளம்பி,புனே நெடுஞ்சாலையில் டீ குடிக்க நிறுத்தினோம். இதன்பின் மலை ஏற்றம்.. லோனாவாலா வரை. கொஞ்சம் சுதாரிப்புடன் இருப்பது நல்லது என்பதால் பெரும்பாலும் இந்த நிறுத்தத்தில் டீ பலருக்கும் உண்டு.

குமாரின் முகம் இறுகியே இருந்தது. மீண்டும் கிளப்பியபோது பழைய தமிழ்ப் பாடல்கள்.. அதிகம் கேட்காதவை.  “அட, இத எத்தனையோ வருசம் முந்தி சிலோன் ரேடியோவுல கேட்டிருக்கோமே?” என்று வியக்க வைக்கும் ரகம்.

“பிரபலமான பாடல்களை அனைவருக்கும் தெரியும். இந்த  பாடல்கள்ல இருக்கிற சில அருமையான ட்யூன், சில வரிகள்.. சட்டுனு பிடிபடாது. “ என்றார் குமார். சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

”சில பாடல்கள் நல்லா இருந்தாலும் ஏனோ எடுபடாமலேயே போயிருது. இல்ல? சிலர் வாழ்க்கை மாதிரி” என்றார்.

அவரை ஏறிட்டேன். என்னைப் பார்க்காமல் ரோட்டை பார்த்தபடியே தொடர்ந்தார்.

“என் வாழ்க்கையும் அதே மாதிரிதான் . ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. வேண்டாத சகவாசம் கிடையாது. வீட்டை நேசிக்கிறேன். லஞ்சம் கொடுத்து , மேல் அதிகாரியைப் பிடிச்சு மேல போகணும்னு முயன்றதிலை. அழகான மகள்... ஆனா வாழ்க்கை  சிறக்கலை.”
மவுனமாக இருந்தேன்.

“”அரசல் புரசலாக் கேட்டிருப்பிங்க. என் மகளுக்கு மனச்சிதைவு. என் மாமனார், அப்பா எல்லாருமே பெரிய பதவில இருந்து ரிடயர்ட் ஆனவங்க. காசு ஒரு ப்ரச்சனியே இல்ல எங்களுக்கு. லீலாவதி, ஹிண்டுஜா-ன்னு எல்லா பெரிய ஹாஸ்பிடல்லயும் காட்டியாச்சு. பொண்ணுக்கு பொறுமையா வீட்டுல கவனிக்கணும்னு கவுன்சிலிங்ல சொன்னாங்க. 

என் மனைவி  முதல்ல நல்லத்தான் இருந்தா.. குழந்தை திடீர் திடீர்னு வெறி பிடிச்சு கத்தறது, ஸ்கூலுக்கு மற்ற பிள்ளைங்களோட போக முடியாதது பிறர் , குழந்தையைப் பற்றி இரக்கதோட பேசறது எல்லாம் அவளை ஒரு  அழுத்தத்துல கொண்டு போயிட்டது. எங்கம்மா வயசானவங்க. கத்திகிட்டே ஓடற பேத்தி பின்னாடி அவஙகளால ஓட முடியலை. “

“அன்புங்கறது பல சவால்களைச் சமாளிக்கும் குமார்” என்றேன் பொதுப்படையாக. 

“இருக்கலாம். அன்னிக்கு கார்ல ஹரீஷ் சொன்னாரே, மாயை. அதுதான் நாம பாக்கிற உலக அன்பின் பிம்பம். அன்புங்கறது வெளிப்படற ஊடகம் நாம. நாம அன்பை உருவாக்குவதிலை. எந்த ஒரு பண்பிற்கும் நாம ஒரு வெளிப்படுத்தும் ஊடகம் மட்டுமே. “

”நம்மாலயும் சில பண்புகளை உருவாக்க முடியும் குமார். பல பண்புகளின் நிறக்கலவை நாம.. எந்த அளவு எந்த அடர்வுல எந்த நிறம் சேரணும்கறது நம்ம கைல இருக்கு”

“ரியலி”?” என்றார் புன்னகைத்து.

”தூய அன்பு, அமைதிங்கறது நிறமிலி. அதனை நிறம் சார்ந்த ஒன்று களங்கப்படுத்த மட்டுமே முடியும். ”நான் கோபக்காரன்..ஆனா எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு”ன்னு சொல்வது, வெள்ளையான அன்பைக் கறைப்படுத்தும் சிவப்புடன் கூடிய வெளிப்பாடு. நிறச்சேர்க்கை நாமதான் பண்றோம். 

“அப்போ தாயின் அன்புக்கு என்ன சொல்வீங்க? அரிசினத்தால் ஈன்ற தாய் அடித்திடினும் “ னு ஒரு ஆழ்வார் பாசுரம். அவ அடிக்கறது அபூர்வம், ஏன் அடிக்கறா? மிகுந்த கோபத்தால்.. அந்த “ஆல்”தான் காரணி.  தாய்க்கு கோபம் வரக்கூடாதுன்னு சொல்ல முடியுமா? அவளுக்கு வேற ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாதா?”

“கண்டிப்பா இருக்கும். இதுலதான் அன்பு என்பது  நாம கறைப்படுத்த நினைக்க முடியாத ஒன்றுன்னு சொல்ல வர்றேன். ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடிக்கறா-ன்னு வைச்சுக்குவோம். ’அவளோட ’ அன்பு என்பதுதான் அப்போது கறைபடுதே தவிர, தாயன்பு என்ற பண்பு கறைபடுவதில்லை.  என்றவர் காரில் பாட்டை மாற்றினார்.

70களில் வந்த மற்றொரு மலர்ந்தும் மலராத பாடல் ஒன்று.. “இதுல கேளுங்க..” நீரில் தோன்றும் நிலவு”ன்னு ஒரு வரி””

ஆத்மா ஒன்றுதான். அது பரமாத்மா. பரமாத்மாவின் நீர்ப்பிம்பத் தோற்றம்தான் இந்த ஜீவாத்மாவாக நான் காணும் மாயை. இதுதான் மாய தத்துவம். அத்வைதம் இதை உசத்திப் பிடிக்கும்”

வியந்துபோனேன். ஒரு வார்த்தை பேசாத குமார்,இன்று அத்வைதம் எல்லாம்...

”நீர்ல தோன்றும் நிலவு கறை படுவதில்லை .நாம பார்க்கிற நிலவு கலங்கலா இருந்தா, அது தண்ணீரோட கோளாறு. தெளிவா இருந்த நீர், கலங்கிப்போய் , நிலவையும் கறையாக, கோணலாகக் காட்டுது. தாயன்புங்கற நிலவு என் வீட்டுக்குளத்து நீர்ல தெளிவா ப்ரதிபலிக்கலை சுதாகர். நீர் கலங்கிறுச்சு” என்றார். 

லோனவாலா இறுதி ஏற்றத்தில், கார் எளிதாக ஏறுவது போல் இருந்தது. காற்று அழுத்த மாற்றத்தில் காது அடைத்துக்கொண்டு ஞொய்... என்றது.
“என் மனைவி, குழ்ந்தையை எங்கிட்ட விட்டுட்டு அவளோட பழைய காதலனோட ஓடிப்போயிட்டா” என்றார் குமார். நான் எதோ சொல்ல வாயெடுக்குமுன் அவர் முந்தினார்.

“”தாயன்புங்கறதையோ, பிறர் காட்டும் அனபையோ நான் சந்தேகிக்கலை. அவை நிலவு மாதிரி. தண்ணீர் கலங்கிப்போச்சு. கலங்க விட்டது என் தப்பா?ன்னு தெரியாது. ஆனா... “ சட்டென அவர் குரல் கம்மியது.

“என் பொண்ணு அம்மா எங்கேப்பா?ன்னு தெளிவா சிலநேரம் கேக்கிறப்போ, தோணுது, இதுவும் மாயையா இருந்துறக்கூடாதான்னு? நிதர்சனம் ,யதார்த்தம் கொடுமை ,சார். இந்த நிலவுக்கு எந்த தெளிந்த நீரைக் காட்டமுடியும் நான்?”

“நீங்க மறுமணம் செய்துக்கலாமே? ஒரு நல்ல அம்மா , உங்க பொண்ணுக்கு வாய்க்கலாம். எத்தனையோ குடும்பங்கள்ல இது நடந்திருக்கு குமார்.”

“பயனில்லை. அவளுக்கு இப்ப நான் யாருன்னு கூடத் தெரியலை. முழு அமாவாசை”. பயணம், பயணிக்கும் பாதை, உலகம்,பிரபஞ்சம் பயணி எல்லாருமே உறங்கிப்போன , மலர்ந்தும் மலராத பாடல் வரி அவள்” ”ஸோகயா ஏ ஜஹான்..”

ஏற்றத்தில் கார் எளிதாக ஏறுவதாகப் பட்டாலும்,. மிகப் பிரயாசைப் பட்டிருக்கும். அதன் ஓலம் வெளியே தெரியாதவாறு கார் , பயணிப்பதை என்னால் உணர முடிந்தது.

Sunday, February 21, 2016

தெளிதேனும் சர்க்கரையும்

”தேன் சுத்தமா இருக்கா, கலப்படமா இருக்கான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?”

ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு. இதில் வெட்டியாகப் பேசுவதற்கு ரியல் எஸ்டேட், மோடி, ஜெயலலிதா, ஜோக் என ராகுல் காந்தி, மன்மோஹன் எனப் போய்க்கொண்டிருந்த இடத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்படி ஒன்று.
கொஞ்சம் மவுனமாக இருந்தேன். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதை சொல்லத் தொடங்கினால், மெல்ல ஆட்கள் காபி வைச்சிருக்கிற இடமாகப் பார்த்து நழுவுவார்கள்.


“தண்ணியில சில சொட்டுகளை விட்டுப் பார்க்கணும். கலந்திருச்சுன்னு வைங்க- கலப்படம், அப்படியே இருந்ததுன்னா சுத்தமான தேன். ”

“அட அதெல்லாம் வேணாம். நாய்க்கு வைங்க. சுத்தமா இருந்தா வாயை வைக்காது”

தேனில் சர்க்கரைப் பாகைக் கலப்பதைக் கண்டுபிடிப்பதை ஒரு நாய் நக்கிச் சொல்லிவிடுமென்றால், FSSAI எதுக்கு, விலையுயர்ந்த அறிவியல் கருவிகள் எல்லாம் எதுக்கு?


சர்க்கரை என்பது ஒரு மூலக்கூறு மட்டுமல்ல. அதில் பல வகையுண்டு. ஐஸோமர்கள் உண்டு. சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் ,க்ளூக்கோஸ் என்றெல்லாம் படித்திருப்போம். அவற்றின் மூலக்கூறு எடை ஒன்றாக இருந்தாலும், வடிவம் மாறியிருக்கும். எனவே அதனுள் போகும் ஒளியை ஒன்று இடது புறமாக, மற்றது வலது புறமாகத் திருப்பும் என்றெல்லாம் படித்த நினைவிருக்கலாம்.
தேன் ஒரு கலவை. கொஞ்சம் சிக்கலான சர்க்கரைக் கலவை. இதில் சுக்ரோஸ், க்ளுக்கோஸ் எனச் சேர்த்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
நம்ம ஆட்கள் ஜோராக தேனீக்களையே ஏமாற்றுவார்கள்.

தேனீ,  தான் குடிப்பதற்காக வைத்திருக்கும் தேனையும் பேராசையில் இவர்கள் முதிர்வற்ற தேனாக இருக்கும்போதே எடுத்துவிடுவார்கள். தேனீக்களுக்கு உணவாக, சர்க்கரைப் பாகை தேன் கூட்டின் உட்புறம் ஊசி மூலம் செலுத்துவார்கள். இது மனிதப் பேராசையின் ஒரு விகார முகம்.
இப்படி முதிர்வற்ற தேன் எடுக்கப்பட்டால் அதில் நீர் அதிகம் இருக்கும் ( 25%) . தேன் கூட்டில், தேனீக்கள் இந்த அதிக நீரை தனது சிறகடிப்பால் மட்டுமே உலர வைக்கும். அதன்பின் கிடைக்கும் தேன் நெகிழ்வாக இல்லாமல், நல்ல தரமாக இருக்கும்.


ரைட்டு. சர்க்கரைப்பாகு கலந்த தேனை எப்படி அறிகிறார்கள்? தனிமங்களின் ஐசோடோப்பை வைத்து மட்டுமே ஓரளவு உறுதியாகக் கண்டுபிடிக்க முடியும். இதற்கென ஐசோடோப் ரேஷியோ மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் ( isotope Ratio Mass Spectrometer -IRMS) என்ற விலையுயர்ந்த கருவியை பயன்படுத்துவார்கள்.

கார்பனினின் ஒரு ஐசோடோப் C13. பொதுவாக கார்பன் 12ல்தான் காணப்படு. இந்த இரண்டிற்கும் உள்ள விகிதாசாரம், பொருட்களில் கார்பன் 13 இருக்கும் அளவினால் மாறும். தேனீ, சென்று தேன் எடுக்கும் செடிகளில் பொதுவாக கார்பன் 13/கார்பன்12 விகிதத்தில் மிகக் குறைவாக இருக்கும். நம்ம கரும்பு, பீட்ரூட் என்ற சர்க்கரை தயாரிப்பில் உதவும் தாவரங்களில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும். எனவே சுத்தமான தேனில் கார்பன் 13/கார்பன் 12ன் விகிதம் மிகக் குறைவாக இருக்கவேண்டும்.




இப்ப, சர்க்கரையை சேர்த்திருந்தால் கார்பன் 13/12 விகிதம், டபாயடீஸ் ஆளு,ரெண்டு ப்ளேட் கேசரி சாப்டப்புறம் சுகர் எவ்வளவு இருக்குன்னு பார்க்கறதைப் போல , எக்கச்சக்கமா எகிறியிருக்கும். ( கொஞ்சம் அதிகமாச் சொல்றேன். கலப்படம் செய்யறவங்க மஹா கில்லாடிகள். அவங்ககிட்டயும் இந்த கருவிகள் இருக்கு!).

மிக நுண்ணிய அளவில் இந்த விகிதங்களை அளந்துதான் சர்க்கரை கலப்படம் இருக்கா இல்லையான்னு பார்க்க முடியும். நாயெல்லாம் நக்கிச் சொல்லிட முடியாது”


இதைச் சொன்னேனா? பக்கத்தில் இருந்த மஹேஷ் முகம் மாறிப்போச்சு.
“ஏண்டா?ன்னேன்.


“ஊருக்குப் போறப்பல்லாம் , மாமியார் ”மாப்ள, மலைத்தேனு வாங்கியிருக்கம். நல்லாருக்கான்னு சாட்டுப் பாத்துச் சொல்லுங்க”ன்னுவாங்க. இப்பல்லா தெரியுது?, நான் யாருன்னு நினைச்சிருக்காங்கன்னு”

Saturday, February 13, 2016

கரடிக் காமம்



                               
மாலை ஆறுமணியானது, அந்திக்கருக்கலில் தெரியாமற்போனது. சந்திரசேகர், பதட்டத்துடன் செருப்பை அணிய முயல , அது சறுக்கி விலகி எங்கோ போனது. அவசரமாக அதைத் துரத்தி அணிந்து, சரக் சரக்கென வேகமாய் நடந்தான் சேகர். வேதநாயகம் உரையாடலைத் தொடங்கியிருப்பாரோ?

 “வா, சேகர்” என்றார் வேதநாயகம்,பொய்ப்பல் செட் பளீரெனத் தெரிய, ”லேட்டு போலிருக்கு இன்னிக்கு?”

“சாரி. கல்யாணிகூட ஒரு சின்ன சண்டை. டிஸ்டர்ப் ஆயிட்டேனா, மறந்துபோச்சு” ப்ளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் சிரிப்பதாக நினைத்து, குதிரை போல கனைத்தார். பாலாமணி டீச்சர் இன்னும் வரலை என்பதை, சேகர் உணர்ந்தான்.

“இன்னிக்கு நாம மூணுபேர்தான் இருக்கம். ரசூல்  ஒருவாரம் வரமுடியாதுன்னுட்டான். டூர் போறானாம்.” வேதநாயகம் மூன்று பீங்கான் குவளைகளில் டீயை நிரப்பினார்.

“எந்த கதாநாயகனாவது பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டதா இலக்கியம் சொல்லுதா அய்யா? அப்ப, அது எப்படி காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன்?” ஜேம்ஸ் தொடங்கி வைத்தான்.
“அதென்ன ஜேம்ஸ்? சிலப்பதிகாரத்துல, கானல் வரிப்பாடல் சொல்லுதே?, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும் பிரிவு வந்தது? “

“ஹ..” என்றார் ஜேம்ஸ், முன் நெற்றியைத் தடவியபடி “ அவங்க கணவன் மனைவியாய்யா? சும்மா சேந்து வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா சொல்லணும்?”

“அட, மாதவிகிட்ட சண்டை போட்டுப் போனதுலானதான அவன் கொலையுண்டு போனான்?” என்றான் சேகர்.

“ அப்ப கீப்புகிட்ட கூட சண்டை போடக்கூடாதுங்கீங்க?” ஜேம்ஸ் சீண்டினான். 

சேகர் ஜேம்ஸை ஆழமாகப் பார்த்தான். ஜேம்ஸுக்கு இலக்கியமெல்லாம் பரியச்சமில்லை. சும்மா ஒரு வெட்டிப்பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொள்கிறான். கடும் உழைப்பில், அலைச்சலில் முப்பது வயதிற்கு அவன் நாற்பதாகத் தெரிந்தான். இரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமண மண்டபத்தில்,  எஸ்தர் இவனுக்கு மகள் போலிருந்தாள். வேதநாயகத்தின் அண்டை வீடு என்பதால் , நெருக்கம் அதிகம்.

வேதநாயகம் தில்லியில் ஏதோ செண்ட்ரல் கவர்மெண்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். மதுரையில் சொந்த வீட்டில் குடிவந்த இரு மாதத்திலேயே , அவர் மனைவி இறந்துவிட, தனியராக வசித்துவந்தார். பேஸ்புக்கில் பழக்கமான நண்பர்களை சந்திப்பது, அவர்களோடு இலக்கியம் பேசுவது என்று பொழுதைக்கழிப்பவர். வாராவாரம் அவர் வீட்டில் இலக்கிய உரையாடல் நடக்கும்.

வேதநாயகம் புன்னகைத்தார் “ ஜேம்ஸ், சும்மா மேலோட்டமா இலக்கியம் பேசக்கூடாது. கொஞ்சம் உள்ள போனாத்தான், அதிலுள்ள உளவியலெல்லாம் புரியும். மணிமேகலையில ஆதிரை பிச்சையிட்ட காதைன்னு படிச்சிருக்கியா?”

“இல்ல” என்று தலையசைத்தான் ஜேம்ஸ். சேகர் நெளிந்தான். இதோட ரெண்டு தடவை செல்போனில் கல்யாணி அழைத்துவிட்டாள். ஜேம்ஸுக்கு ப்ரச்சனையேயில்லை. அவன் வீடு அடுத்த வீடுதான் என்பதால் எந்த நேரம் எஸ்தர் அழைத்தாலும் போய்விட முடியும். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு இப்பவே எழுந்து போய்விடலாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கையில் வேதநாயகம் பேசத் தொடங்கினார்.

“மணிமேகலைக்கு கிடைச்ச அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போடறது ஒரு கற்புக்கரசியா இருக்கணும். அப்பத்தான் பாத்திரம் எப்பவும் உணவு கொடுத்துகிட்டே இருக்கும். மணிமேகலா தெய்வம் ஆதிரைன்னு ஒருத்தி கதையச் சொல்லுது. அவ புருசன், சாதுவன் என்கிறவன் அவளை விட்டுப் பிரிஞ்சு பணத்தையெல்லாம் தொலைச்சு, பொருளீட்டுவதற்கு கப்பல்ல போறான். கப்பல் முங்கிருது. இதெல்லாம் , நல்ல மனைவியைப் பிரிஞ்ச பாவத்தின் சம்பளம் இல்லையா?”

“அவ கற்புக்கரசியா இருந்தா, அவன் பிழைச்சிருக்கணும்ல?”

“ஜேம்ஸ். நல்லாயிருக்கே! அவன் பிழைக்கணும்னா அவ கற்போட இருக்கணும். ஆனா அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், என்ன?!” விவாதம் சூடாவதை உணர்ந்த சேகர் இடைமறித்தான்.

“இதப்பத்தி அப்புறம் பேசுவம் சார். சாதுவன் என்னானான்?”

“சாதுவன் நீந்தி, காட்டு மனுசங்க வாழற ஒரு தீவுல ஒதுங்கறான். அவனை அவங்க பிடிச்சு, தலைவன்கிட்ட கொண்டு போறாங்க. அந்த இடம் எப்படி இருந்துச்சின்னா....

”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளை ஒரு குடுகையில நிரப்பி வைச்சிருக்கான். பச்சை இறைச்சியின் நாற்றம் வருது. இறந்த விலங்குகளின் உலர்த்தப்பட்ட வெண்மையான எலும்புகள் போடப்பட்ட இருக்கை - அதுல அந்த தலைவன் அமர்ந்திருக்கான்.”

“அங்.! அவங்க இருக்கற இருப்பை மட்டும் சொல்லிட்டு விட்டா எப்படி? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமுல்ல? அவனுக்குன்னு ஒரு  ஒழுங்கு இருக்கும். அதத்தான் பேசணும்.” என்றான் ஜேம்ஸ்.

“ஹ.ஹ..” சிரித்தார் வேதநாயகம். “. இந்த ஒழுக்கமெல்லாம் அவரவர் பார்வைக்கு ஏத்தபடி மாறும். எனக்கு ஒழுக்கமாத் தெரியறது, உனக்கு ஒழுங்கீனமாத் தெரியும். அந்த தலைவன் இருப்பைச் சொன்னாத்தானே, உனக்கு அவன் கூட்டம் ஒழுங்கீனமா, அருவெறுப்பாத் தெரியும்? அந்த இருக்கையில,   தலைவன் , ஒரு பெண்ணோட இருக்கான். அதுவும் எப்படி... ஆண்கரடி, காமத்துல பெண்கரடியோட கூடி இருப்பதைப்போல’ங்கறாரு.

“எண்குதன் பிணையோ டிருந்தது போல
பெண்ணுடன் இருந்த பெற்றி”

எண்கு-ன்னா ஆண் கரடி. பிணைன்னா பெண் கரடி. ஏன் கரடிக்காமம்? இதுதான் சூச்சுமம்.” வேதநாயகம் டீயை உறிஞ்சினார். சேகர் முன்னே குனிந்து அவரை ஆர்வமாகப் பார்த்தான்.

“அதென்ன கரடிக்காமம்?” என்றான் சேகர்.

“யானைப் புணர்வு, மான் புணர்வுன்னு சொல்லிப் போயிருக்கலாம். கரடி? அது பாடல்கள்ல வர்றது அரிது. அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே?, அது இனப்பெருக்க காலத்துல, பெண்கரடியோடு அடிக்கடி புணரும். சில நேரம் ஒரே நாள்ல இருபது தடவை... அன்றில்,அன்னம் போல காதல்னு சொல்லமுடியாது. தீராக் காமம். அடித்தள உணர்வான, வெக்கமற்ற காட்டுவெறி காமம். அதுமட்டும்தான்.  ’அதுமாதிரியான காமத்துல ஒரு பெண்ணோடு, அனைவரும் காண அவன் இருந்தான்’ங்காரு. இது ஒழுக்கமற்ற நிலைன்னு இல்லாம, கீழான ஒழுக்க நிலை-ன்னு எடுத்துக்கணும்.”

“சாதுவனுக்கு என்னாச்சு?” என்றான் ஜேம்ஸ், கதைகேட்கும் ஆர்வத்தில்.

” அவன் கடல்ல செத்துப்போயிட்டான்னு தப்பி வந்தவங்க சொல்ல, ஆதிரை தீக்குளிக்கப் பாக்கறா. தீ அவளச் சுடாம இருக்கு. சாதுவன் இன்னொரு கப்பல்ல ஊருக்கு வந்து சேர்றான். இப்படி திரும்பி வர்றதுக்கு ஆதிரையோட கற்பு நெறி காரணம்ங்கறாரு புலவர்”

எஸ்தர் அழைக்க, ஜேம்ஸ் எழுந்து போனான். ‘”என்னமோ மெட்ராஸ்ல பிலிம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத் திரியறாம்பா இந்த ஜேம்ஸு. நீயாச்சும் சொல்லிப் பாரு. நாஞ்சொன்னா கேட்கமாட்டான்” என்றார் வேதநாயகம்.

ரசூல் இரு வாரங்கள் கழிந்து வந்தபோது ‘ஜேம்ஸ்,  குடும்பத்தோட மெட்ராஸ் போயிட்டான் ”என்ற செய்தியைச் சொன்னான்.

ஆறு மாதம் கழிந்தபின், ஒரு மாலையில் அலைபேசி சிணுங்கியது. ரசூல் “ சேதி தெரியுமா? ஜேம்ஸ் ஓடிப்போயிட்டானாம்”

”என்ன?” திகைத்தான் சேகர் “மெட்ராஸ்லதான இருந்தான்.?”

”கடன் தொல்லை. எல்லார்கிட்டயும் பத்தாயிரம், ஐம்பதாயிரம்னு வாங்கி ஒரு பிலிம்ல போட்டிருக்கான். படம் முடங்கிப்போச்சு. ஆட்கள் பைசா கேக்கறாங்க. வேலைய எப்பவோ விட்டு நின்னாச்சு அவன். ஸோ..”

”அப்ப அவன் மனைவி? பிள்ளைங்க?”

“பிள்ளைங்க ஏது? எஸ்தர் அங்க ஏதோ ட்ராவல்ஸ் கம்பெனியில வேலை பாக்கறதாச் சொன்னாங்க. தெரியாது”

இருநாட்கள் கழித்து, உரையாடலை முடித்துக் கிளம்பும்போது வேதநாயகம் அவனை நிறுத்தினார்.

“ஜேம்ஸு, எங்கிட்ட இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுப் போயிருக்கான். நீ மெட்ராஸ் போனேன்னா, அவங்கிட்ட அனுப்பிவைக்கச் சொல்லு, அந்தப் பொண்ணுக்குத் தெரியவேண்டாம், என்ன? எஸ்தர்,கண்ணகி மாதிரி. செயினைக் கழட்டிக்கொடுத்தாலும் கொடுத்துறும். மானஸ்தி.”

“சரி”என்று தலையசைத்து வந்தான் சேகர். இவருக்கு ஜேம்ஸ் பத்தின உண்மை தெரியாதோ? சொல்லவேண்டாம்.

ஒரு வாரம் கழித்து அவன் சென்னை போக நேர்ந்ததில், ஜேம்ஸ் நினைவு வந்தது. அவனது பழைய அலைபேசி எண்ணுக்கு எங்க இருக்கப்போறான்? என்ற அவநம்பிக்கையிலேயே அழைத்தான்.

“ஹலோ” என்றது ஒரு பெண்ணின் குரலில். சேகர் தயங்கி “ இது ஜேம்ஸ் நம்பரா? நான் மதுரைலேர்ந்து சந்திரசேகர் பேசறேன்.”

தயங்கியது மறுமுனை “ நான் எஸ்தர். அவர் இல்ல. என்ன வேணும்?”

“இல்லம்மா” அவனும் தயங்கினான்...  எப்படிச் சொல்ல? அவளே கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா?”

.”இல்ல, வேதநாயகம் சார்கிட்ட”

“சார்கிட்டயா?” அவள் திகைத்தது தெரிந்தது.அவன் சொல்லச் சொல்ல அவள் அமைதியாகக்கேட்டாள். “ வீட்டு அட்ரஸை எஸ் எம் எஸ்ல நாளைக்கு காலேல அனுப்பறேன். சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. வேதநாயகம் சார் பைசாவை கொடுத்திடறேன் “

”இன்று இனிமே என்ன செய்யலாம்?”என்று சிந்தித்தபோது, ஹைதராபாத்தில் இருக்கும்போது கூட வேலை பார்த்த பவன் குமார் நினைவுக்கு வர, அலைபேசியில் அழைத்தான்.

“வீட்டுக்கு வந்துரு சேகர். ராத்திரி டின்னர்  எங்கவீட்டுல”

பவன்குமாருடன் கதைகள் பேசி , காலாற நடை செல்லலாமென லிஃப்டில் இறங்கியபோது, யாரோ இடிக்க, தள்ளாடி நிலைகுலைந்தான்.

“ஸாரி” என்ற அந்த மனிதன், தள்ளாடி லிப்டில் நுழைந்தான்..ஒரு பெண்ணை அணைத்தபடி. லிஃப்டின் கதவுமூடும் போது கண நேரம் பார்த்ததில்..இவள் ..இவள் ?

“பேரு தெரியாது. வீட்டு ஓனர் இவன். அவ இங்க தங்கியிருக்கா” கண் சிமிட்டினான் பவன்.

“என்ன வேலை தெரியாது. நேரம் காலம் இல்லாம வருவா, போவா. இவன் மட்டும் இங்க வருவான். ஒண்ணு கீப்பா இருக்கணும். இல்ல அயிட்டம் கேஸ்-ஸா இருக்கும். நமக்கென்ன, இந்த அபார்ட்மெண்ட்ல யார் யார் என்ன செய்ய்யறாங்க?ன்னு பாக்கறதா நம்ம வேலை?”
\
பவன்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது.காவலாளியிடம் துருவிக்கேட்டு, அவள் வீட்டை அறிந்தான். கொசுக்கடியைப் பொறுத்துக்கொண்டு பூங்காவின் பெஞ்ச்சில் காத்திருந்தான்.

பதினோரு மணியளவில் மேலும் பொறுக்கமுடியாமல், வீட்டின் கதவைத் தட்டினான்.

கதவைத் ஒரு பாதி திறந்தவள் முகம் சுருக்கினாள் “யெஸ்? யாருவேணும்?”

“நான் சேகர், எஸ்தர்”

வீட்டின் வரவேற்பறையில் ஐந்து நிமிடம் இருவரும் பேசாது அமர்ந்திருந்தனர்.

“கடன் நெருக்கடி, அதோட வீட்டுல வந்து அவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. என் நகை, அவரு பைக்கு...எல்லாத்தையும் வித்தாரு. அப்படியும் முடியல.வீட்டு வாசல்ல நின்னு கத்த ஆரம்பிச்சாங்க. அவமானம் பொறுக்க முடியாம, ஒருநாள் என்னையே அடமானம் வச்சுட்டேன்... வைக்க வச்சுட்டாங்க”

சேகர் பேசாது அவளை வெறித்துப் பார்த்திருந்தான்.

“வேற வழியில்ல. மானத்தைக் காப்பாத்த மானத்தை விக்கத்தான் வேண்டியிருந்துச்சு. விசயம் தெரிஞ்சு போய் ஜேம்ஸ் சொல்லிக்காம எங்கயோ போயிட்டாரு. அவரை நான் குத்தப்படுத்தல. எனக்கு அவர் நிலமை புரியுது” குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டு பேசியவள், நிமிர்ந்து அவனை நோக்கித் தொடர்ந்தாள்.

“கடன் இன்னும் இருந்துச்சு. பெரிய அமவுண்ட். ஏதோ ஒரு அழுகிய பொணத்தைக் காட்டி, இதுதான் ஜேம்ஸுன்னு என்னைச் சொல்லச்சொன்னாங்க. இன்ஷ்யூரன்ஸ் கொஞ்சம் வந்துச்சு. அதுல கடனை அடைச்சுட்டேன். ஆனா, மேற்கொண்டு வாழ்க்கைக்கு?. “

“ஜேம்ஸ் இன்னும் உயிரோட இருக்கானா?”

“ராஜமுந்திரி பக்கம் பாத்ததா யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரை அவர் செத்திருந்தா நல்லது. எவன் எவனோட காமத்தீக்கெல்லாம் என் உடம்பு இரையாக ஆயாச்சு. இனிமே அவரு வந்தாக்கூட வாடிக்கையாளராத்தான் வரணும்.” எழுந்து “வாங்க” என்றபடி உள்ளே போனாள்.

சேகர் வீட்டின் உட்புறம் புகுந்தான். திறந்திருந்த அறையொன்றில் மங்கலாக ஒளி படர...படுக்கையறை.. குப் என்ற மது நெடி. மெத்தையில் பீங்கான் தட்டுகள் பரந்து கிடக்க,  அதில் இறைச்சி கடித்து எடுக்கப்பட்ட, மீதி எலும்புத்துண்டுகள் நிறைந்து கிடந்தன. மெத்தையில், கரிய உருவமொன்று, தொப்பை மேலெழ மூச்சு விட்டு உறங்கிக்கிடந்தது..கரடி

”.எண்கு தன் பிணவோடு இருந்தது போல..”
”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளும், இறைச்சியும், பெண்ணும் நுகர்வதற்கே என்பதான கரடிக்காமத்தில், கற்புக்கு என்ன அடையாளம்?

  ”நான் சீதையோ, கண்ணகியோ, சார் அடிக்கடி சொல்கிற ஆதிரையோ இல்ல. “ எஸ்தரின் கிசுகிசுத்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவளது நீட்டிய கையில் பருமனான ஒரு  தங்கச்சங்கிலி.

“இத வித்து, நாளைக்கு சாரோட பணத்தைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.”
அவன் கையில் சங்கிலியைத் திணித்தாள். “சார்கிட்ட , நான் நல்லா இருக்கேன்னு சொல்லி வைங்க. அவர் நினைப்புல நான் ஆதிரையாகவே இருந்துட்டுப் போறேன். புருசன் செத்துப்போனான்னுகேட்டு தீயைச் சுட்டா அவ. சாகாத புருசன், செத்துட்டான்னு, காமத்தீயில சுட்டு கருகறேன் நான். ஒற்றுமை ரெண்டுபேருக்கும் ஒண்ணுதான் - புருசன் சரியில்ல”

 “ஜேம்ஸ் வெளிய போயிருந்தான், பணத்த எஸ்தர் கொடுத்தா” என்றான் சேகர் சுருக்கமாக வேதநாயகத்திடம்..

”அட! எஸ்தரைப் பாத்தியா? எப்படியிருக்கா?”என்றார் வேதநாயகம் ஆர்வமுடன்.

”காப்பியங்கள்ல வர்ற தம்பதிகள் மாதிரி “ என்றான் சுருக்கமாக.

“அஹ்! கோவலன் கண்ணகி துன்பமா முடிஞ்சுபோச்சு. அவன் சாதுவன் இல்ல. ஆனா அவ ஆதிரைதான். அவ போட்ட அட்சயபாத்திர பிச்சையா இத எடுத்துக்கறேன்” என்றார் வேதநாயகம், ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்தபடி.

சேகர்,கண்கள் கலங்கத் திரும்பி நின்றுகொண்டான்.. இருபதாயிரத்துக்கு ஒரு மொபைல் வாங்கித் தொலைத்தாக கல்யாணியிடம் சொல்லிக்கொள்ளலாம். சங்கிலி எஸ்தர் வீட்டுப் பூஞ்சாடியில் பத்திரமாக இருக்கும்.

Thursday, February 11, 2016

கர்ம யோகி



யா யா ஸாஹேப்,” வாஙக, வாங்க,”
இது ஏதோ  டை கட்டின , கோட் போட்ட மராட்டிய சேஸ்ல் மேனேஜரோ, லிப்ஸ்டிக் மிளிரும் ரிசப்ஷனிஸ்ட்டோ இல்லை..
கோகுல்தாம் மெடிக்கல் செண்ட்டர் என்ற பகல்வேளை மருத்துவமனையில்,வருபவர்களின் செருப்புகளை கூண்டுகளில் எடுத்து வைத்து, டோக்கன் தருகின்ற சந்திரகாந்த் கோட்டியன் என்கிற மனிதர்.
பலவருடங்களாக நான் வியந்ததுண்டு. இத்தொழிலில் என்ன உற்சாகம் இருப்பதாக இவர் இப்படி புன்னகையுடன் கூடிய முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறார்? அதுவும் வருபவர்கள் முக்காவாசிப் பேர், வலியில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் சொல்வதைக் கேட்காமலேயே, பதிலுக்கு முகமன் கூறாமலேயே செருப்பைக் கழட்டிப் போட்டுவிட்டு படியேறுவார்கள். கோட்டியன், ஒரு வார்த்தை முணுமுணுக்காமல், பொறுமையாக அவற்றை கூண்டுகளில் எடுத்துவைத்து, அவர்களுக்கு டோக்கனை கொடுப்பார்.

முந்தாநாள்தான் , இத்தனை வருடங்கள் கழித்து, அவரிடம் பெயர் கேட்கத் துணிந்தேன். பெயரைச் சொல்லிவிட்டு, சட்டென ஒதுங்கிவிட்டார். பேச விருப்பமில்லாதவரைப் போல. எனக்கு அது புதிராக இருந்தது.. மருத்துவரின் அறைக்கு வெளியே, நீண்ட வரிசை... காத்திருக்கும் வேளையில், மெல்ல வாசலுக்கு வந்து, அவரை , அவர் அறியாமல் கவனித்தேன்.
இந்த உபசரிப்பு செயற்கையாக இருக்குமானால், அவரது முகபாவங்கள் , ஆட்கள் வராத போது மாறவேண்டும். மருத்துவமனையின் பிற தொழிலாளிகளிடமும், சிரித்த முகத்தோடே பேசினார். சிறு குழ்ந்தைகள் வீறிட்டு அலற அலற , விரைந்து கொண்டுவருபவர்களை முதலில் அனுப்பினார். “செருப்பை கீழே போட்டுட்டுப் போங்க.. வர்றப்போ நான் பாத்துக்கறேன்”.
பின்னஃபோர் யூனிஃபார்மில், அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு  அழுதபடி வந்த குண்டு சிறுமியைப் பார்த்து,
“அட்டே, பேட்டியா, எதுக்கு அழறே? நல்ல பிள்ளையில்ல நீ?” என்றவர், அதன் அம்மாவைப்பார்த்து “காய் ஜாலா?( என்ன ஆச்சு?)” என்றார்.
“புக்கார்...( காய்ச்சல்)” என்றபடி அந்தம்மா உள்ளே விரைந்தாள். அடுத்து வந்த ஒரு பணக்காரக் கிழவர், சிடுசிசு முகத்தோடு, செருப்பை உதறி, ஒரு வார்த்தை கேட்காமல் மேலே படியேறினார். சந்திரகாந்த் , புன்னகையுடன் செருப்பை ஒரு கூண்டில் வைத்துவிட்டு “ ஓ சாகேப், 74 டோக்கன். ஞாபகம் வச்சுக்குங்க” என்றார். அவரும் கேட்டதாகத் தெரியவில்லை, இவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்து வந்த இளம் தம்பதியினரின் கையில் சிறு குழந்தை டவலில் புதைந்து வைத்திருந்ததைக் கண்டு,
 செருப்பை விட்டுட்டுப் போங்க. நான் பாத்து எடுத்து வச்சுக்கறேன்”..

என் மகன் பலமுறை வியந்து போய் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். ஸ்கூலில் ‘நான் கண்ட நல்ல மனிதர்‘ என்பதாக அவரைப் பற்றிச் சொன்னதாக ஒரு முறை சொன்னான்.

மருந்துகளை வாங்கி வரும்வழியில் சாலையோரம் இஸ்க்கான் மக்கள் ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா என்று டேப் ஒலித்துக்கொண்டிருக்க, சிறு டேபிளில் பகவத் கீதையை மலிவு விலையில் கொடுத்துக்கொண்டிருந்தனர். மகனுக்கு ‘கீதை ஒரு அறிமுகம்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்தேன். அவன் படித்திருக்கிறான் என்றாலும், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் செறிவை உண்டாக்கும்.
அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவனிடம் ‘கர்ம யோகம், கர்ம யோகி ‘ பற்றி சிறிது விரித்துரைத்தார்.

"வலி, இன்பம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் சமமாக வைத்து, போரினில், போரின் நிமித்தம் மட்டும் கருதிப் போரிடுவாய். இவ்வாறு செய்தால் பாபம் ஏற்படாது”

 நன்றி சொல்லி மீண்டும் நடந்தபோது அவன் கேட்டான் “ கர்ம யோகி-ன்னு நாம யாரைச் சொல்லலாம்பா?”

இருவரின் மனதிலும் இருந்த பெயர் ஒன்றுதான்.