Tuesday, February 23, 2016

நீரில் தோன்றும் நிலவு



"உலகம் ஒரு மாயை” என்றார் ஹரீஷ் காரின் பின் சீட்டில் சாய்ந்து கால்நீட்டியவாறே. நண்பர்கள் நான்கு பேராக கார் பூல் அமைப்பாக அபூர்வமாக  செல்ல வாய்ப்பதுண்டு. 

”என்னாச்சு இன்னிக்கு? வீட்டுல சண்டையா?” என்றேன். முன்ஸீட்டில் இருந்த நாகராஜன், சீட்டுகளுக்கு இடையே  பின்னால் கையை நீட்டினார். அதில் செல்லமாக அடித்துவிட்டு தொடர்ந்தேன்.

“ஹரீஷ், நீங்கன்னு இல்ல, எப்பவாச்சும் சோதனை வந்தா, தத்துவம் தானா வந்துடறது. பழைய இந்தி, தமிழ்ப் பாடல்கள்ல இது சகஜம்”

இத்தனையில் ”பியா தூ” என்று ஆஷா போஸ்லேயின் பாடல் ஒலிக்க, கர்ண கடூரமாக, நாகராஜன் கீச்சுக்குரலில் உச்சஸ்தாயியில் சேர்ந்து பாடினார்.( பெண் குரலாம்). 

”நாகராஜ், ப்ளீஸ்” என்றார் ஹரீஷ். ”வெளியே குதிக்கவும் முடியாது. குமார், வண்டிய ஓரம்கட்டி ,இந்தாளை வெளியே தள்ளு” 

ஓட்டிக்கொண்டிருந்த குமார் புன்னகைத்தார். எப்பவுமே அந்த புன்னகையோடு நின்றுவிடும். அதிகம் பேசமாட்டார். அற்புதமான மனிதர்.
“குமார், 80கள்ல வந்த பாட்டைப் போடுங்க. பியா தூ பாட்டை ஒரு கற்பழிப்பிலிருந்து காப்பாற்றணும்” 

குமார் ”இந்திப் பாடல்கள்ல பிலாஸபி பாட்டு  80 முடிவுலயும் வந்துது. வெளிப்படையா இருக்காது. தேஜாப் படத்துல “ஸோகயா ஏ ஜஹான்,” பாட்டு கேட்டிருக்கீங்களா?” என்றார்.

அட வியந்தேன். அதுல என்ன பிலாஸபி? சோகப்பாட்டு அம்புட்டுத்தான்.
“இந்த இடம் உறங்கிவிட்டது, வானம் உறங்கிவிட்டது, சேருமிடம் உறங்கிவிட்டது,.. பாதையும் உறங்கிவிட்டது” என்ற வரிகளைப் பாருங்கள். அனைத்தும் அமைதியான அடங்கிய பொழுதில் யார் எங்கு போய்ச் சேர? “
ஹரீஷும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இந்த ஆளா?

குமார் விவாகரத்து ஆனவர் என்பது மட்டும் தெரியும். அவரது 6 வயது மகள் இப்போது மருத்துவமனையில்.. . மனநிலை சரியில்லாத மகளை விட்டுவிட்மனைவி யாருடனோ எங்கோ போய்விட்டாள் என்கிறார்கள் சிலர். அதெப்படி ஒரு தாய் தன் மகளை விட்டுப் போவாள்? என்று ஒரு சிலர் தருக்கித்தனர். இது அவரது சொந்தப் பிரச்சனை என்பதால் அதிகம் நாங்கள் கேட்டுக்கொள்வதில்லை.

இரு நாட்களுக்குப் பின் நானும் குமாரும் மட்டும் அஹமத் நகர் வரை காரில் செல்ல நெர்ந்தது.. “ட்ரைவர் வேணாம். நான் என் வண்டிய எடுக்கறேன்” என்றார் குமார். அதிகாலை கிளம்பி,புனே நெடுஞ்சாலையில் டீ குடிக்க நிறுத்தினோம். இதன்பின் மலை ஏற்றம்.. லோனாவாலா வரை. கொஞ்சம் சுதாரிப்புடன் இருப்பது நல்லது என்பதால் பெரும்பாலும் இந்த நிறுத்தத்தில் டீ பலருக்கும் உண்டு.

குமாரின் முகம் இறுகியே இருந்தது. மீண்டும் கிளப்பியபோது பழைய தமிழ்ப் பாடல்கள்.. அதிகம் கேட்காதவை.  “அட, இத எத்தனையோ வருசம் முந்தி சிலோன் ரேடியோவுல கேட்டிருக்கோமே?” என்று வியக்க வைக்கும் ரகம்.

“பிரபலமான பாடல்களை அனைவருக்கும் தெரியும். இந்த  பாடல்கள்ல இருக்கிற சில அருமையான ட்யூன், சில வரிகள்.. சட்டுனு பிடிபடாது. “ என்றார் குமார். சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

”சில பாடல்கள் நல்லா இருந்தாலும் ஏனோ எடுபடாமலேயே போயிருது. இல்ல? சிலர் வாழ்க்கை மாதிரி” என்றார்.

அவரை ஏறிட்டேன். என்னைப் பார்க்காமல் ரோட்டை பார்த்தபடியே தொடர்ந்தார்.

“என் வாழ்க்கையும் அதே மாதிரிதான் . ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. வேண்டாத சகவாசம் கிடையாது. வீட்டை நேசிக்கிறேன். லஞ்சம் கொடுத்து , மேல் அதிகாரியைப் பிடிச்சு மேல போகணும்னு முயன்றதிலை. அழகான மகள்... ஆனா வாழ்க்கை  சிறக்கலை.”
மவுனமாக இருந்தேன்.

“”அரசல் புரசலாக் கேட்டிருப்பிங்க. என் மகளுக்கு மனச்சிதைவு. என் மாமனார், அப்பா எல்லாருமே பெரிய பதவில இருந்து ரிடயர்ட் ஆனவங்க. காசு ஒரு ப்ரச்சனியே இல்ல எங்களுக்கு. லீலாவதி, ஹிண்டுஜா-ன்னு எல்லா பெரிய ஹாஸ்பிடல்லயும் காட்டியாச்சு. பொண்ணுக்கு பொறுமையா வீட்டுல கவனிக்கணும்னு கவுன்சிலிங்ல சொன்னாங்க. 

என் மனைவி  முதல்ல நல்லத்தான் இருந்தா.. குழந்தை திடீர் திடீர்னு வெறி பிடிச்சு கத்தறது, ஸ்கூலுக்கு மற்ற பிள்ளைங்களோட போக முடியாதது பிறர் , குழந்தையைப் பற்றி இரக்கதோட பேசறது எல்லாம் அவளை ஒரு  அழுத்தத்துல கொண்டு போயிட்டது. எங்கம்மா வயசானவங்க. கத்திகிட்டே ஓடற பேத்தி பின்னாடி அவஙகளால ஓட முடியலை. “

“அன்புங்கறது பல சவால்களைச் சமாளிக்கும் குமார்” என்றேன் பொதுப்படையாக. 

“இருக்கலாம். அன்னிக்கு கார்ல ஹரீஷ் சொன்னாரே, மாயை. அதுதான் நாம பாக்கிற உலக அன்பின் பிம்பம். அன்புங்கறது வெளிப்படற ஊடகம் நாம. நாம அன்பை உருவாக்குவதிலை. எந்த ஒரு பண்பிற்கும் நாம ஒரு வெளிப்படுத்தும் ஊடகம் மட்டுமே. “

”நம்மாலயும் சில பண்புகளை உருவாக்க முடியும் குமார். பல பண்புகளின் நிறக்கலவை நாம.. எந்த அளவு எந்த அடர்வுல எந்த நிறம் சேரணும்கறது நம்ம கைல இருக்கு”

“ரியலி”?” என்றார் புன்னகைத்து.

”தூய அன்பு, அமைதிங்கறது நிறமிலி. அதனை நிறம் சார்ந்த ஒன்று களங்கப்படுத்த மட்டுமே முடியும். ”நான் கோபக்காரன்..ஆனா எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு”ன்னு சொல்வது, வெள்ளையான அன்பைக் கறைப்படுத்தும் சிவப்புடன் கூடிய வெளிப்பாடு. நிறச்சேர்க்கை நாமதான் பண்றோம். 

“அப்போ தாயின் அன்புக்கு என்ன சொல்வீங்க? அரிசினத்தால் ஈன்ற தாய் அடித்திடினும் “ னு ஒரு ஆழ்வார் பாசுரம். அவ அடிக்கறது அபூர்வம், ஏன் அடிக்கறா? மிகுந்த கோபத்தால்.. அந்த “ஆல்”தான் காரணி.  தாய்க்கு கோபம் வரக்கூடாதுன்னு சொல்ல முடியுமா? அவளுக்கு வேற ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாதா?”

“கண்டிப்பா இருக்கும். இதுலதான் அன்பு என்பது  நாம கறைப்படுத்த நினைக்க முடியாத ஒன்றுன்னு சொல்ல வர்றேன். ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடிக்கறா-ன்னு வைச்சுக்குவோம். ’அவளோட ’ அன்பு என்பதுதான் அப்போது கறைபடுதே தவிர, தாயன்பு என்ற பண்பு கறைபடுவதில்லை.  என்றவர் காரில் பாட்டை மாற்றினார்.

70களில் வந்த மற்றொரு மலர்ந்தும் மலராத பாடல் ஒன்று.. “இதுல கேளுங்க..” நீரில் தோன்றும் நிலவு”ன்னு ஒரு வரி””

ஆத்மா ஒன்றுதான். அது பரமாத்மா. பரமாத்மாவின் நீர்ப்பிம்பத் தோற்றம்தான் இந்த ஜீவாத்மாவாக நான் காணும் மாயை. இதுதான் மாய தத்துவம். அத்வைதம் இதை உசத்திப் பிடிக்கும்”

வியந்துபோனேன். ஒரு வார்த்தை பேசாத குமார்,இன்று அத்வைதம் எல்லாம்...

”நீர்ல தோன்றும் நிலவு கறை படுவதில்லை .நாம பார்க்கிற நிலவு கலங்கலா இருந்தா, அது தண்ணீரோட கோளாறு. தெளிவா இருந்த நீர், கலங்கிப்போய் , நிலவையும் கறையாக, கோணலாகக் காட்டுது. தாயன்புங்கற நிலவு என் வீட்டுக்குளத்து நீர்ல தெளிவா ப்ரதிபலிக்கலை சுதாகர். நீர் கலங்கிறுச்சு” என்றார். 

லோனவாலா இறுதி ஏற்றத்தில், கார் எளிதாக ஏறுவது போல் இருந்தது. காற்று அழுத்த மாற்றத்தில் காது அடைத்துக்கொண்டு ஞொய்... என்றது.
“என் மனைவி, குழ்ந்தையை எங்கிட்ட விட்டுட்டு அவளோட பழைய காதலனோட ஓடிப்போயிட்டா” என்றார் குமார். நான் எதோ சொல்ல வாயெடுக்குமுன் அவர் முந்தினார்.

“”தாயன்புங்கறதையோ, பிறர் காட்டும் அனபையோ நான் சந்தேகிக்கலை. அவை நிலவு மாதிரி. தண்ணீர் கலங்கிப்போச்சு. கலங்க விட்டது என் தப்பா?ன்னு தெரியாது. ஆனா... “ சட்டென அவர் குரல் கம்மியது.

“என் பொண்ணு அம்மா எங்கேப்பா?ன்னு தெளிவா சிலநேரம் கேக்கிறப்போ, தோணுது, இதுவும் மாயையா இருந்துறக்கூடாதான்னு? நிதர்சனம் ,யதார்த்தம் கொடுமை ,சார். இந்த நிலவுக்கு எந்த தெளிந்த நீரைக் காட்டமுடியும் நான்?”

“நீங்க மறுமணம் செய்துக்கலாமே? ஒரு நல்ல அம்மா , உங்க பொண்ணுக்கு வாய்க்கலாம். எத்தனையோ குடும்பங்கள்ல இது நடந்திருக்கு குமார்.”

“பயனில்லை. அவளுக்கு இப்ப நான் யாருன்னு கூடத் தெரியலை. முழு அமாவாசை”. பயணம், பயணிக்கும் பாதை, உலகம்,பிரபஞ்சம் பயணி எல்லாருமே உறங்கிப்போன , மலர்ந்தும் மலராத பாடல் வரி அவள்” ”ஸோகயா ஏ ஜஹான்..”

ஏற்றத்தில் கார் எளிதாக ஏறுவதாகப் பட்டாலும்,. மிகப் பிரயாசைப் பட்டிருக்கும். அதன் ஓலம் வெளியே தெரியாதவாறு கார் , பயணிப்பதை என்னால் உணர முடிந்தது.

1 comment:

  1. சில பாடல்கள் நமக்குள் இறங்கி விடுவது சொந்த சோகங்கள் அல்லது அனுபவங்களோடு அவை ஒன்றிப் போவதாலா? எப்போதும் அப்படி இல்லை என்று(ம்) நினைக்கிறேன்! சோகம் குறைக்குமா அவை?

    ReplyDelete