Saturday, December 31, 2005

ஒரு புத்தாண்டு பிரார்த்தனை

அன்பான ஆண்டவரே,
உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நானும் தவறாது ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதனை சரியாகச் செய்திட அருளும் எனக் கேட்கிறேன். நீவிர் ஒவ்வொருவருடமும் என்னைக் கைவிட்டுவிடுகிறீர். மனச்சாட்சியாக " நீதான் செய்யத்தவறுகிறாய்' எனச் சொல்லிவிடுகிறீர். போகட்டும்.

இந்தவருடம் சில வேண்டுதல்கள் மட்டும் முன்வைக்கிறேன். அதிகமில்லை. மூன்றே மூன்றுதான்.
1. எங்கள் அரசியல்வாதிகளில் ஒருவரையாவது மனிதனாக்கும்.
2. வருமான வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளும் அறிவைத்தாரும்.
3. செய்தித்தாள்களில் சினிமா நட்சத்திரங்களின் அரைகுறை ஆடை அவலங்கள் மட்டுமன்றி செய்தியையும் வரவையும்.

சில உதிரிகள்.
1. எனது மகன் கார்ட்டூன் சேனல் தவிர மற்றதையும் பார்க்க வையும்.
2. ஒரு தொலைக்காட்சித் தொடரிலாவது கன்னத்தில் அறைவது, அழுவது என்றில்லாமல் ஒருநாள் வர வையும்.
3. போக்குவரத்து நெரிசலின்றி ஒரு நாளாவது நான் அலுவலகம் போக அருளும்.

எங்கே போய்விட்டீர்? ஹலோ? ஹலோ?...

Sunday, December 25, 2005

எதற்கும் இலக்கு- பெண்கள்

சில வருடங்களுக்கு முன் மனநிலை சரியில்லாத சிறுமியை ஓடும் ரயிலில் பலர் பார்த்திருக்கக் கயவனொருவன் வன்புணர்ச்சி செய்திருந்த செய்தி மும்பையை உலுக்கியது. Last train to Borivali என நாடகமொன்றும் இதனை அடிப்படையாகக் கொண்டு வந்த ஞாபகம்...
சமீபத்தில் காவலன் ஒருவன் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய செய்தியும் பின்னர், மற்றொரு காவலாளி விமான நிலையமருகே காவல் நிலையத்தில் சேரிச்சிறுமியொருத்தியை பலவந்தப்படுத்திய செய்தியும் வந்து மக்களிடையே வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.

இப்போது, சில நாட்களுக்கு முன், மும்பையிலிருந்து லக்னோ செல்லும் ரயிலில் ஒரு பெண்ணை, அவள் கணவன் கண்ணெதிரேயே சின்னபின்னப்படுத்திய குண்டர்களின் அட்டூழியம் நடந்திருக்கிறது. இது வரை அவர்கள் பிடிபடவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு செய்தி.. பஞ்சம் வந்ததால் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயியின் மனைவியை வன்புணர்ந்த கொடுமை, மகராஷ்டிராவில் சில தாலுகாக்களில் நடந்ததாக வெளிவந்திருக்கிறது. கடன் கொடுப்பதும், திருப்பித்தருவதும் தொழில் முறை என்பது காலம் காலமாக விவசாயத்தையும், கடன் கொடுத்துதவும் தொழிலையும் செய்துவரும் சமூகத்தினர் நன்கறிந்த ஒன்று. இதுபோன்ற ஒழுங்கீனம் இருந்ததாக இதுவரை கேட்டதில்லை. மிக அடிப்படையான சமூக ஒழுங்கு' தொழில் தருமம் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருவது அதிர்ச்சிக்குரியது.
ஆக, இராணுவம், தீவிரவாத வெறிச்செயல் என்பதெல்லாம் ஒரு வெளிப்பாடே தவிர, சமூகத்தில் உள்ளிருப்பது மிருகம்..மிருகம் மட்டுமே.
பெண்களும், குழந்தைகளும் சீரழிக்கப்படவேண்டும் என்பது எல்லாவற்றிலும் வந்துள்ள புதிய நெறிபோலும்.
என்ன நடக்கிறது இங்கே?

Saturday, December 24, 2005

பின்னூட்டங்களுக்கு யார் பொறுப்பு?

பின்னூட்டங்களின் கருத்துகளுக்கு வலைப்பதிவின் ஆசிரியர் பொறுப்பாகவேண்டும் என இந்திய தகவல் தொடர்புச் சட்டம் இருப்பதாக ( அல்லது வரப்போவதாக?) பத்ரியின் பதிவில் படித்த ஞாபகம். தணிக்கை செய்தபின்னரே பின்னூட்டங்கள் பதிவில் வருவது நல்லது எனவும் நானும் சிந்தித்தேன். இத்தகைய கிறுக்குத்தனங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியமெனவும் பொருமிக்கொண்டிருந்தேன்.
ஜெர்மனியும் விதிவிலக்கல்ல என இப்பதிவு கூறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா குறித்த முதல் பத்தியை விடுங்கள். இரண்டாம் பத்தியிலிருந்து இறுதிவரை படித்தால், கோட்டிக்காரத்தனம் என்பது உலகப் பொதுச் சொத்து எனப் புரிகிறது.
பத்ரி, ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இதுகுறித்து விளக்கம் தந்தால் நல்லது

Friday, December 23, 2005

பாகிஸ்தானுக்கு இந்திய உதவி

பாகிஸ்தானைத் தாக்கிய பூகம்பத்திற்கு நிதியுதவியாக இந்தியா அனுப்பிய அமெரிக்க டாலர் 25 மில்லியன் கொடையினைக் குறித்து அண்மையில் வாசித்த ஒரு ஆங்கில வலைப்பதிவு.
குறிப்பு: இவ்வலைப்பதிவின் ஆசிரியர் திரு.டே பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.

Thursday, December 22, 2005

புதிய வலைப்பதிவு

புதிய வலைப்பதிவு
புதியதாய் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை துவக்கியிருக்கிறேன். http://sudhathoughts.blogspot.com
சில தலைப்புகளை மட்டும் அங்கே உள்ளிடலாம் எனவிருக்கிறேன். நண்பர்களின் ஆதரவையும் பின்னூட்டத்தையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
க.சுதாகர்

Sunday, December 18, 2005

ஒரு கடிதம்..- A short story

ஒரு கடிதம்..

'அம்மா...
நீ நல்லாயிருக்கியா?
எதிர்வீட்டு முத்துராசு நேற்றுதான் இங்கே வந்தான். அவங்க அப்பா அவனைக் கொண்டுவந்து விடும்போது
உன்னைப்பத்திச் சொன்னாரு. இராத்திரி தூக்கம்வராம விசும்பிக்கொண்டிருந்தவன் "அம்மா ஞாபகம் வந்துச்சு"ன்னு
விக்கிக்கொண்டே சொன்னான். சின்னப்பய. 'நானும் முதல்ல அப்படித்தான் இருந்தேன். போகப்போக சரியாயிடும்'-னு
சொல்லி சமாதானப்படுத்தி வைச்சேன். அவங்க அம்மா கொடுத்த புளி,உப்பு முளகாய் முட்டாயை சூப்பிக்கொண்டே
தூங்கிப்போனான்.
எனக்கு இப்போ பெரிய சுத்தியல் கொடுத்திருக்காங்க. முதல்ல கல் உடைக்க சின்ன சுத்தியல்தான். வெயில்ல உக்கார்ந்து, கொஞ்சம் பெரிய கல்லாப் பாத்து பொறுக்கி எடுத்து உடைக்கணும். வெயில் சுள்ளுன்னு உரைக்கும். போனவாட்டி எழுதினேம்லா..
இப்போ பெரிய சுத்தியல்.. பெரியவங்க கணக்கா தூக்கி அடிக்கணும். விலாப்பக்கம் முதநாள் வீங்கி வலிச்சுச்சு.
வெள்ளையம்மா, சாராயத்தை விலாவில தடவினா.. 'வலி குறையும்'-னு சொன்னா. இப்போ பரவாயில்லை.
வெள்ளையம்மா நல்லவம்மா. ராத்திரி தூங்கும்போது பக்கத்துல படுத்துக்குவா. 'வலிக்கா ராசா?'ன்னு உன்னமாதிரியே
கேட்டுட்டு, தலைய தடவி விடுவா. ரொம்ப வலிச்சா 'சேசுவே, கிருபையாயிரும்'னு' வேண்டிக்கச் சொன்னா. 'அவரும்
நம்மமாதிரியே கல்லு உடைச்சாரா?'ன்னு கேட்டேன். கிட்டத்தட்ட அது மாதிரித்தான் கஷ்டப்பட்டாருன்னு சொன்னா.
அவரும் பாவம்மா.
வெள்ளையம்மா ஒண்ணும் வெள்ளையாயிருக்கமாட்டாம்ம்மா! சும்மா பேருதான் அப்படி. ..அத மாதிரித்தான். அவள சில ராத்திரி மேஸ்திரி எங்கனயோ கூட்டிட்டுப்
போறாரு. அதுதான் கோவமா வருது.
நீ போனதடவ என் கடுதாசியப் பாத்துட்டு,மேல்வீட்டம்மா கிட்ட சொல்லி அழுதியாம்மா? சின்னராசு அம்மாகிட்ட
அவங்க பால் வாங்கும்போது சொன்னாங்களாம். அழாதம்மா. நான் நல்லா சம்பாரிப்பேன். பெரிய பெரிய கல்லெல்லாம்
உடைச்சு ஒரு நாளைக்கு பத்து ரூவா வரை சம்பாதிப்பேன் பாரு. அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல.
இங்கேயிருந்து வடக்காம கூட்டிட்டுப் போவப்போறாங்களாம். ஆந்திராக் காரங்க இருக்காங்க. கோவில்பட்டி தெலுங்கு
மாதிரியில்ல இவங்க பேசற தெலுங்கு. கொஞ்சம் கொஞ்சம் வெளங்குது.

நேத்திக்கு பெரியய்யா வந்து சம்பளம் கொடுத்தாரு. அஞ்சு ரூவா. 'நீ இதுவர வேலைசெஞ்சதுக்கு'-ன்னு சிரிச்சுகிட்டே
சொன்னாரு. 'நான் வந்து ஒரு வருசம் ஆயிருச்சுய்யா'ன்னேன். 'அதுதான் தினமும் சோறு திங்கேல்லா?'ன்னு கேட்டாரு.
'போனவாரம்கூட மீன் வருவல் போட்டேம்ல்லால? வக்கணயாத் .தின்னுட்டு இன்னும் காசுகேக்கிய..மூதி'ன்னு திட்டினாரு. 'அம்மாவுக்கு பணம் அனுப்பணும்'னேன். 'அப்புறம் அனுப்பலாம்'-னுட்டாரு. போவட்டும் அவரு கிடக்காரும்மா. உனக்கு பணம் அனுப்புதேன். சரியா?


அய்யப்பன் தெரியும்லாம்மா? போன மாசம் ,நாசிக் பக்கத்துல, மலை ரோடு போடற வேலைல போனான். நாலுநாளு
முந்தி, பாறை உடைக்க வெடி வைச்சப்போ, கல்லு தெறிச்சு, மண்டை பொளந்து செத்துப்போயிட்டானாம்.
வெள்ளையம்மா சொல்லி அழுதுச்சு. அவன அங்கேயே எரிச்சுட்டாங்களாம். அவங்கம்மாகிட்ட இப்ப சொல்லாத.
முதலாளி என்ன வெளிய அனுப்பிருவாரு. அவங்க வீட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுக்கப்போறதா, மேஸ்திரி
வெள்ளையம்மா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. 'ரயில்ல போகும்போது தண்டவாளத்துல விழுந்து செத்துட்டதாப் பின்ன
சொல்லிக்கலாம். எதாச்சும் அழுகின அனாதப்பொணத்தைக் காட்டி இதான் அய்யப்பன்-ன்னு சொல்லி அமுக்கிரலாம்'ன்னு மேஸ்திரி பெரியய்யாகிட்ட சொன்னாரு. நான் காணாமப் போனா இப்படித்தான் உனக்கும் ஆயிரம் ரூவா கொடுப்பாங்க.பொணம் எதனாச்சும் காட்டுவாங்க. அதான் நான்னு நம்பிராத என்ன? ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?

மணிக்குட்டி இப்போ பெரிசாயிருக்கும்லா? 'அது சொறிநாய்"ன்னு கதிரேசன் சொன்னதுக்கு, அவன் கன்னத்துல
அறைஞ்ச்சேன்னு மணிக்குட்டிகிட்ட சொல்லிரு.என்ன?

வடக்காம போயிட்டு பொறவு எழுதுதேன். இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
எதோ இஸ்கோல்ல படிக்காம்.
இப்படிக்கு
ராசுக்குட்டி.

பி.கு
ஆறு வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்த சிறுவர்களிடம் நாசிக் அருகே பேசியபோது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு.