Sunday, December 18, 2005

ஒரு கடிதம்..- A short story

ஒரு கடிதம்..

'அம்மா...
நீ நல்லாயிருக்கியா?
எதிர்வீட்டு முத்துராசு நேற்றுதான் இங்கே வந்தான். அவங்க அப்பா அவனைக் கொண்டுவந்து விடும்போது
உன்னைப்பத்திச் சொன்னாரு. இராத்திரி தூக்கம்வராம விசும்பிக்கொண்டிருந்தவன் "அம்மா ஞாபகம் வந்துச்சு"ன்னு
விக்கிக்கொண்டே சொன்னான். சின்னப்பய. 'நானும் முதல்ல அப்படித்தான் இருந்தேன். போகப்போக சரியாயிடும்'-னு
சொல்லி சமாதானப்படுத்தி வைச்சேன். அவங்க அம்மா கொடுத்த புளி,உப்பு முளகாய் முட்டாயை சூப்பிக்கொண்டே
தூங்கிப்போனான்.
எனக்கு இப்போ பெரிய சுத்தியல் கொடுத்திருக்காங்க. முதல்ல கல் உடைக்க சின்ன சுத்தியல்தான். வெயில்ல உக்கார்ந்து, கொஞ்சம் பெரிய கல்லாப் பாத்து பொறுக்கி எடுத்து உடைக்கணும். வெயில் சுள்ளுன்னு உரைக்கும். போனவாட்டி எழுதினேம்லா..
இப்போ பெரிய சுத்தியல்.. பெரியவங்க கணக்கா தூக்கி அடிக்கணும். விலாப்பக்கம் முதநாள் வீங்கி வலிச்சுச்சு.
வெள்ளையம்மா, சாராயத்தை விலாவில தடவினா.. 'வலி குறையும்'-னு சொன்னா. இப்போ பரவாயில்லை.
வெள்ளையம்மா நல்லவம்மா. ராத்திரி தூங்கும்போது பக்கத்துல படுத்துக்குவா. 'வலிக்கா ராசா?'ன்னு உன்னமாதிரியே
கேட்டுட்டு, தலைய தடவி விடுவா. ரொம்ப வலிச்சா 'சேசுவே, கிருபையாயிரும்'னு' வேண்டிக்கச் சொன்னா. 'அவரும்
நம்மமாதிரியே கல்லு உடைச்சாரா?'ன்னு கேட்டேன். கிட்டத்தட்ட அது மாதிரித்தான் கஷ்டப்பட்டாருன்னு சொன்னா.
அவரும் பாவம்மா.
வெள்ளையம்மா ஒண்ணும் வெள்ளையாயிருக்கமாட்டாம்ம்மா! சும்மா பேருதான் அப்படி. ..அத மாதிரித்தான். அவள சில ராத்திரி மேஸ்திரி எங்கனயோ கூட்டிட்டுப்
போறாரு. அதுதான் கோவமா வருது.
நீ போனதடவ என் கடுதாசியப் பாத்துட்டு,மேல்வீட்டம்மா கிட்ட சொல்லி அழுதியாம்மா? சின்னராசு அம்மாகிட்ட
அவங்க பால் வாங்கும்போது சொன்னாங்களாம். அழாதம்மா. நான் நல்லா சம்பாரிப்பேன். பெரிய பெரிய கல்லெல்லாம்
உடைச்சு ஒரு நாளைக்கு பத்து ரூவா வரை சம்பாதிப்பேன் பாரு. அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல.
இங்கேயிருந்து வடக்காம கூட்டிட்டுப் போவப்போறாங்களாம். ஆந்திராக் காரங்க இருக்காங்க. கோவில்பட்டி தெலுங்கு
மாதிரியில்ல இவங்க பேசற தெலுங்கு. கொஞ்சம் கொஞ்சம் வெளங்குது.

நேத்திக்கு பெரியய்யா வந்து சம்பளம் கொடுத்தாரு. அஞ்சு ரூவா. 'நீ இதுவர வேலைசெஞ்சதுக்கு'-ன்னு சிரிச்சுகிட்டே
சொன்னாரு. 'நான் வந்து ஒரு வருசம் ஆயிருச்சுய்யா'ன்னேன். 'அதுதான் தினமும் சோறு திங்கேல்லா?'ன்னு கேட்டாரு.
'போனவாரம்கூட மீன் வருவல் போட்டேம்ல்லால? வக்கணயாத் .தின்னுட்டு இன்னும் காசுகேக்கிய..மூதி'ன்னு திட்டினாரு. 'அம்மாவுக்கு பணம் அனுப்பணும்'னேன். 'அப்புறம் அனுப்பலாம்'-னுட்டாரு. போவட்டும் அவரு கிடக்காரும்மா. உனக்கு பணம் அனுப்புதேன். சரியா?


அய்யப்பன் தெரியும்லாம்மா? போன மாசம் ,நாசிக் பக்கத்துல, மலை ரோடு போடற வேலைல போனான். நாலுநாளு
முந்தி, பாறை உடைக்க வெடி வைச்சப்போ, கல்லு தெறிச்சு, மண்டை பொளந்து செத்துப்போயிட்டானாம்.
வெள்ளையம்மா சொல்லி அழுதுச்சு. அவன அங்கேயே எரிச்சுட்டாங்களாம். அவங்கம்மாகிட்ட இப்ப சொல்லாத.
முதலாளி என்ன வெளிய அனுப்பிருவாரு. அவங்க வீட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுக்கப்போறதா, மேஸ்திரி
வெள்ளையம்மா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாரு. 'ரயில்ல போகும்போது தண்டவாளத்துல விழுந்து செத்துட்டதாப் பின்ன
சொல்லிக்கலாம். எதாச்சும் அழுகின அனாதப்பொணத்தைக் காட்டி இதான் அய்யப்பன்-ன்னு சொல்லி அமுக்கிரலாம்'ன்னு மேஸ்திரி பெரியய்யாகிட்ட சொன்னாரு. நான் காணாமப் போனா இப்படித்தான் உனக்கும் ஆயிரம் ரூவா கொடுப்பாங்க.பொணம் எதனாச்சும் காட்டுவாங்க. அதான் நான்னு நம்பிராத என்ன? ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?

மணிக்குட்டி இப்போ பெரிசாயிருக்கும்லா? 'அது சொறிநாய்"ன்னு கதிரேசன் சொன்னதுக்கு, அவன் கன்னத்துல
அறைஞ்ச்சேன்னு மணிக்குட்டிகிட்ட சொல்லிரு.என்ன?

வடக்காம போயிட்டு பொறவு எழுதுதேன். இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
எதோ இஸ்கோல்ல படிக்காம்.
இப்படிக்கு
ராசுக்குட்டி.

பி.கு
ஆறு வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்த சிறுவர்களிடம் நாசிக் அருகே பேசியபோது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு.

3 comments:

 1. மனதை மிகவும் கனமாக்க்கிய கடிதம். முக்கியமாக கீழ்க்கண்ட வரிகளின் தாக்கம் அதிகம்:

  //அடுத்த தரவ உன்ன எப்பப் பாப்பேன்னு தெரியல. //

  //ஆயிரம் ரூவா உனக்கு கிடச்சா நல்லதுதான்.என்னம்மா?//
  //இத எழுதற அக்கா நான் சொல்லச்சொல்ல அழுதுகிட்டே எழுதுது. அது
  எதோ இஸ்கோல்ல படிக்காம்//

  அதே சமயம், சில வரிகள் அந்த அப்பாவித் தனத்துக்குப் பொருந்தவில்லை. எ.கா:

  //நம்ம குருட்டு மச்சானுக்கு
  கண்ணாயிரம்-னு பேருவைச்சாங்கல்லா..அத மாதிரித்தான்.//

  ReplyDelete
 2. நன்று சுதாகரன்.

  நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் கடிதத்தினை. சிறார்களை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வரவேண்டும்.

  இல்லாது விட்டால் இவாறான கடிதங்கள் தொடரும்.

  ReplyDelete
 3. அன்பின் ரூபா மற்றும் நிலா அவர்களே,
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள். சிறுவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்ய அனுப்புவது இன்னும் தொடர்கிறது. குறிப்பாக சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பார்த்திருக்கிறேன். மத்தியப் பிரதேசக் காடுகளில் சாலை அமைப்பது, பாலம் கட்டுவது மற்றும் பாறை உடைப்பது போன்றவற்றில் இவர்கள் உலகத் தொடர்பு அற்று வாழ்வது கண்கூடு.
  என்றேனும் இவர்களூக்கும் வாழ்வு வரவேண்டும்
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete