Tuesday, November 29, 2005

மஹாநாயக் -by Vishwas Patil ( contd)

மஹாநாயக் - கதை
______________________

தில்லி செங்கோட்டையில் 1857ல் பகதூர் ஷா, கடைசி முகலாய மன்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதில் தொடங்குகிறது கதை.. அதே செங்கோட்டையில் 1940களில் மூன்று ராணுவ அதிகாரிகளை
அரசுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி முன் நிறுத்துகிற காட்சி விரிகிறது. குற்றம்?
நேதாஜியின் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான். புலாபாய் என்ற பிரபலமான வழக்கறிஞர் அவர்களுக்கு
வாதாடுகிறார்.. ஒரு நாடகத்தனமான தொடக்கம் என்றாலும், விறுவிறுப்பு ஏறுகிறது. கொஞ்சம் "Freedom at midnight" வாசனை அடிக்கிறது.

பின் , சுபாஷ் சந்திரபோஸின் இளமைக்காலம் விவரிக்கப்படுகிறது. அவர் விவேகானந்தரின் அறிவுரைகளில் தூண்டப்பட்டு, ஒரு புரட்சிக்காரனாகவே பள்ளி,கல்லூரிகளில் ஆவதைக் காட்டுவதில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. சுபாஷ், தனது நண்பர்களுடன் பத்ரிநாத் மலைக்கும் அப்பாலிருக்கும் ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு துறவியைத் தேடிப்போகிறார். விவேகானந்தருடன் பழகியிருக்கும் அத்துறவி, சுபாஷிடம் " இக்காட்டில் உன் வலிமையை வீணாக்காதே. மக்களுக்காக , அவர்கள் விடுதலைக்காகப் போராடு" எனச் சொல்வதாகவும், அதன் பின் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா மீளுவதாகவும் கூறப்படும் செய்தி ஆதாரமானதுதானா?எனச் சந்தேகம் வருகிறது. அத்துறவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விஷ்வாஸ் பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வு முயற்சியில் நம்பிக்கை இருப்பினும், சில இடங்களில் உண்மைப் பெயர்களையும் இட்டிருக்கலாம்.. கதை கலந்த வாழ்க்கை வரலாறு என்று இருப்பதால், எது கதை, எது நிஜம் எனச் சில இடங்களில் புரிபடவில்லை.

மெல்ல மெல்ல அவர் காங்கிரஸில் தீவிரப் பிரசாரம் செய்வதும், காங்கிரஸ் ப்ரஸிடென்ண்ட் ஆவதும் காட்டப்படுகிறது. இந்த இடங்கள் வரலாறு பூர்வமாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. திரிபுரி காங்கிரஸ் மாநாடு , போஸ்- காந்தியின் கொள்கையளவிலான மறுதலிப்பு, அரசியல் பின்னணி.. வாசிக்க அருமை..

ஆனால், மசாலா இன்னும் சேர்ந்திருக்கிறது.. தென் மாநில ஆளுநராக இருக்கும் இராஜாஜி , உ.பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவரை அடக்க எத்தனிக்கையில் " நீ சும்மாயிரு, லுங்கிவாலா" என அவர் இராஜாஜியை அவமதித்ததாக எழுதப்பட்டிருக்கும் காட்சி.. உண்மையாயிருக்க சாத்தியமில்லை. என்னதான் ஆவேசப்பட்டிருப்பினும், அந்நாளைய அரசியல்வாதிகள், தொண்டர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய மொழி பேசியிருக்க சாத்தியமில்லை எனவே நினைக்கிறேன்.

எமிலி என்னும் ஆஸ்திரியப்பெண்ணுடனான காதல்.. சுபாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமையவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்வின் தாக்கங்கள் , வளர்சிதை மாற்றங்களெனவே இதனைக் காட்டியிருக்கிறர் விஷ்வாஸ் பாட்டில். அந்த அளவில் கதைக்களம் சிதையாமல், சுபாஷ் என்னும் மனிதனின் ஆசாபாசங்கள், அவரது சிறு தவறுகள் நேர்த்தியாக , யதார்த்தமாகச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

நேருவின் காந்திப் பித்து..ஆச்சார்யா கிருபளானி,கோவிந்த் வல்லப் பந்த் போன்ற மிதவாதிகளின் போஸ் எதிர்ப்பு, இடது சாரிகளின் முரண்,போஸின் தாய்நாட்டுப் பற்று , காந்தியுடனான போஸின் மோதல்கள்.. அலையலையாக வந்து, எவ்வாறு அவரது காங்கிரஸ் உறவை பிரித்தன. பின்னர் கல்கத்தாவிலிருந்து இரகசியமாக ஆப்கானிஸ்தான்/பெஷாவர் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் ஹிட்லருடன் தொடர்புகொள்ளும் இடம்.. அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவத்தினரின் சுபாஷ் குறித்தான வாக்குமூலங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு அறியாத கதை. மணிப்பூர் இயக்கம் என்பது ஜப்பானிய ராணுவ வல்லுநர்கள் முதலில் திட்டமிட்டுப் பின் கைவிடப்பட்ட ஒன்று. சுபாஷ் ( ராணுவ திட்டமிடுதல் பற்றிய பயிற்சி இல்லாமல்) , அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசி, பிரதம மந்திரியை மணிப்பூர் ஆக்கிரமிப்பிற்குச் சம்மதிக்க வைக்கிறார். சுபாஷின் இந்திய விடுதலை வெறி, அவர்களை அசர வைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தினருக்கு , பர்மாவில் கைப்பற்றிய ஒரு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் முதலியன ஜப்பானியரால் கொடுக்கப்படுகின்றன. 'இந்தியாவில் கைப்பற்றும் அனைத்துப் பகுதிகளும் , போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கே அளிக்கப்படும்.' என்னும் உறுதியும் கொடுக்கப்படுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரே காரணம்... சுபாஷ் சந்திர போஸ்.

'வரலாற்றில் எங்கும் இது போல 40 லட்சம் பேர் கொண்ட நட்புப் படைக்கு எவரும் இத்தனை மரியாதை தந்ததாகத் தெரியவில்லை.' என்கிறார் பாட்டில்.

இந்திய தேசிய இராணுவத்தின் ஒவ்வொரு முன்னேற்ற அடியையும் கவனித்து எழுதியிருக்கிறார். கொஹிமா,மணிப்புரி போர்க்களங்கள், பேச்சுக்கள், ஜப்பானின் சரணடைதலில் போஸிற்கு ஏற்பட்ட பின்னடைவு. .படிக்கையில் நெஞ்சு கனப்பது நிஜம். ( இதனை விவரிக்க விரும்பவில்லை. படித்துப் பாருங்கள். ஆசிரியரின் உழைப்பு தெரியும்)

டைபியில் (Teipei) , விமான விபத்தின் பின், அவரது உடலை இந்தியா கொண்டுசெல்ல அனுமதிக்காத தைவான் இராணுவ அதிகாரிகள் , அங்கேயே எரியூட்டியதாக எழுதியிருக்கிறார். இது, போஸின் மறைவு குறித்தான பல மர்மங்களையும், கட்டுக்கதைகளையும் வெளிக்காட்டும்... இதாவது, அம்மாமனிதனின் இறப்பு குறித்தான மர்மங்களை வேரறுத்து, உலகிற்கு அவரது தீவிர நாட்டுப்பற்றை வெளிக்காட்டட்டும். இச்சம்பவம் குறித்தான வரலாற்று உண்மைகளை விஷ்வாஸ் பாட்டில் தனது குறிப்பில் எழுதியிருக்கலாம்.

இப்பேற்பட்ட மகாமனிதரைப்பற்றி அதிகம் நமக்குச் சொல்லாத பாடத்திட்டத்தின் மேலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசியல் கருதி பாரத ரத்னா விருது கொடுக்க நினைத்த நம் அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருவது நியாயம்தான்.

தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்நூல் குறித்தான தகவல் எனக்குத் தெரியவில்லை. பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு indialog பதிப்பில் வெளிவந்துள்ளது.( ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக விஷ்வாஸ் பாட்டிலுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தகவல். அருந்ததி ராய் 3 கோடி வாங்கும்போது இது குறைவுதான் என்கிறார்கள் மராத்தி மொழிவல்லுநர்கள். இந்தக் கணக்கும் அரசியலும் நமக்குப் புரிவதில்லை!) இந்நூல் குறித்து மேலும் அறிய விரும்புவோர் இச்சுட்டியில் non fiction பகுதியில் காணலாம்.

No comments:

Post a Comment