' சுபாஷ் ரோஜா மலரின் காம்பை சிறிது ஒடித்து, ஜவஹரின் கோட்டுப் பொத்தான் துளையில் பொருத்தினார்.
"சுபாஷ்! இரு. ரத்தம்!"
பதறிய ஜவஹர்லால், சுபாஷின் விரலில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினார்.
"பரவாயில்லை , ஜவஹர்" , கையை விலக்கிக்கொண்ட சுபாஷ் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்," உனக்கு ரோஜா மலரையும், எனக்கு முட்களையும் கடவுள் விதித்திருக்கிறார்".
இதுபோன்ற வாசகங்களைக் கொண்ட புத்தகங்களை மிகக்கவனமாகவே நான் படிப்பது வழக்கம். மசாலா அதிகமாகவும், சரக்கு குறைவாகவும் கொண்ட வரலாறு அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்கள் இத்தகைய வாசகங்கள் கொண்டும், பளபளப்பான அட்டைகள், கறுப்பு வெள்ளை மங்கலான புகைப்படங்கள் கொண்டும், சந்தையாக்கலில் ஜல்லி செய்து வந்துவிடுகின்றன. 'வாங்கிவிட்டு "சே" என இன்னுமொருமுறை ஏமாற நான் முட்டாளில்லை.'என நினைத்து, புத்தகத்தைத் திரும்ப வைக்க எத்தனிக்கையில் ஆசிரியரின் பெயர் கொஞ்சம் தயங்க வைத்தது. திரு. விஷ்வாஸ் பாட்டில்...
மராத்திய எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவரான விஷ்வாஸ் பாட்டில் ,சாகித்திய அகாடெமி விருது 1992-ல் வாங்கியவர். அவரது ஜாதசதாதி(Jahadazadati)என்னும் மராத்தி நாவல் புகழுடன்,சாகித்ய அகாடெமி விருதும் வாங்கித்தந்தது. நடப்புகளை , மாற்றாமல் பதிவு செய்து, நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் , நிகழ்வுகளைக் கோர்த்து, கற்பனைவளம் சேர்த்து அவர் எழுதும் நாவல்கள் மராத்தியில் ப்ரசித்தி பெற்றவை.
சுபாஷ் சந்திர போஸ் என்னும் தியாகியை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் பார்ப்பதென்பது எளிதல்ல. நமக்குத் போஸ் குறித்து மிக மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தபின் உணரமுடிகிறது.
தன் வழக்கம்போலவே, போஸ் குறித்து எழுதுமுன் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பாட்டில், தனது முன்னுரையில் , தான் சந்தித்த இடர்களை சிறிது குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திரபோஸ்-ஸின் வாழ்க்கையும் அவரது மரணம் போலவே புதிராக இருக்கிறது. அவரது ஜெர்மன், ஜப்பான் உறவுகள் குறித்த கோப்புகள் ஜெர்மன், ஜப்பானிய, பாலி மற்றும் பெங்காலி மொழிகளில் இருப்பதாலும், பெரும்பாலானவை உலகப்போர் குறித்தான ரகசியத் தகவல்கள் அடங்கிய பெட்டிகளுக்குள் கிடப்பதாலும், மிகக் குறைவான வரலாற்று உண்மைகளே நமக்குத் தெரிகின்றன. அவற்றைத் திரட்டி, படித்துப் புரிந்து... கோர்வையாக ஒரு புத்தகத்தில் கொண்டுவர மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அயராது உழைத்திருக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
சில நண்பர்களின் ஆதரவால், ஜப்பான் சென்று, உலகப்போரில் சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து போரிட்ட வீரர்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறார். நண்பர்களின் துணையுடன் ஜப்பானின் நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள், அதன் பாராளூமன்ற கூட்டத்தொடர் கோப்புகள் போன்றவற்றையும் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார். இதனூடே, பர்மாவில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்க வீரர்கள் பர்மாவிற்கு உலகப்போரின் 51ம் ஆண்டு நிறைவுக்கு வர, இவரும் அங்கே சென்று, அவர்களிடம் தகவல் சேர்த்திருக்கிறார்.
பர்மா தாய்லாந்து எல்லையில் சுமார் 1800 கிமீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் இந்திய சுதந்திர ராணுவம் முன்பு போரிட்ட இடங்களில் சென்று பார்த்திருக்கிறார்- தடயங்கள் மற்றும் இடங்களின் ஆதாரம் தேடியபடி. கொஹிமா, மணிப்பூர் அஸ்ஸாம் எல்லையில் போஸின் படைகள் போரிட்ட இடங்களில் தகவல் சேர்த்திருக்கிறார். மிக மிக அயராத, பொருள் மட்டும் காலச் செலவு வாய்ந்த ஆய்வுப்பணி.
இத்தனை ஆய்வுகளுக்கும் முயற்சிகளுக்கும் பின் இப்படியொரு கதை வந்திருப்பதை அறிந்த பின்.. வார்த்தைகளின் ப்ரயோகத்திற்காக மட்டும் அதனை விட்டுவைக்க மனம் வரவில்லை.
கதைக்குப் போவோம்
No comments:
Post a Comment