Tuesday, November 15, 2005

கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை - நூல் கருத்து

திரு. எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை -பாகம் 1( பதிப்பகம் யுனைட்டட் ரைட்டர்ஸ்) படிக்கக் கிடைத்தது. இது வந்தது 2003ம் வருடம். எப்போதுமே நான் சோம்பேறி என்பதால், என்னை இப்போதும் மன்னிக்கவும்!

நூலின் முன்னுரைக்கு முன் எழுதிய ஒரு குறியீட்டுக்காட்சி
தமிழரின் இப்போதைய தலைமுறை (புதுக்குடி)அதன் மொழி, பண்பாட்டை அறியாது எங்கோ விரைகின்றது. இதனைக் கண்டு வேதனைப்படும் கிழவனாக ஒரு குறியீடு அமைத்திருக்கிறார். தான் கண்ட கவிதைச் செல்வத்தைப் புதிய தலைமுறைக்குக் கொடுக்க நினைக்கிறான் அக்கிழவன். அது ஏற்கப்படுமா என்ற தயக்கம் அவனுக்கு இழையோடுகிறது...

உணர்வு பூர்வமான இக்குறியீடு தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், தெளிவாக அவரது குறிக்கோளாக உள்ளே முன்னுரையில் சொல்கிறார்
" ...என் ஆர்வ்த்தையே அடிபடையாக வைத்துச் செய்திருக்கிறேன். மரபில் ஆர்வம் இல்லாத புதிய தலைமுறையினருக்கு இத்தொகுப்பு ஆர்வத்தை ஏற்படுத்துமானால் அதையே எனக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்"

'எடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு சுவைக்கான மாதிரிதான். இதனினும் உங்களுக்குப்பிடித்த பாடல்கள் இந்நூல்களில் இருக்கக் கூடும் ..'.
இது போல பல rider clause வைத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் பாடல்களின் தொகுப்பு அவரது தேர்வின் திறனைக் காட்டுவதாக ஒவ்வொரு பாடல் தேர்விலும் மிளிர்கிறது.

அகம், புறம் என திணைகளில் திணறாது இரண்டிலும் நேர்த்தியாக பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

முதலில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் எனப் போகிறது பாடல்களின் தேர்வு.

இரு சுவைகளை அதிகம் காட்டியிருப்பதாகப் படுகிறது.
ஒன்று :அவலச் சுவை

உதாரணமாக
பாரிமகளிர் பாடல் "அற்றைத்திங்கள் ",
கபிலர் பாடியது "தீநீர்ப் பொருங்குண்டு சுனைப்பூத்த குவளை.." ( பாரி இறந்ததும், பாரிமகளிரின் அறியாப் பருவம் கண்டு இரங்கிப்பாடியது)
சீவகசிந்தாமணி "வெவ்வாய்ஓரி முழவாக...." சீவகன் சுடுகாட்டில் பிறந்த போது விசயை பாடியபாடல்
அரிச்சந்திர புராணம் "பனியால் நனைந்தும்.."சந்திரமதி மகன் இறந்ததும் பாடிய பாடல்..

இந்த ரீதியில் போனால், பெரியபுராணத்தில் "மணமகனே பிணமகனாய்" என்னும் பாடலை எதிர் பார்த்தேன். நல்லவேளை அது வரவில்லை!

மற்றொன்று: காமச் சுவை
நீலகேசி --- துபடு துவரிதழ் துடிக்கும்.. ( நீலிப் பேய்மகளின் அழகிய உருவம்)
சீவக சிந்தாமணி, -'மீன்சேர் குழாமனைய மேகலையும்..(காந்தருவதத்தையின் அழகு)
நளவெண்பா, 'கொங்கைமுகங் குழையக் கூந்தல் ( நளன் தமயந்தி காதல் வர்ணனை)
கந்த புராணம்--- 'அன்னதொருகாலை'( முருகனை வள்ளி தழுவுதல்)
இன்னும் பல சொல்லலாம்.

இவை இலக்கிய நயத்திற்காக இடப்பட்டிருக்கின்றன என்றாலும், இலக்கியரசனை வளர பல சுவைகளையும் ஆசிரியர் எடுத்துத் தந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
கம்பராமாயணத்தில் குகன் பரதனைக் கண்டதும் கொள்ளும் கோபம், யுத்தகாண்ட தோற்றங்கள், வில்லிபாரத்தில் வரும் போர் வருணனைகள் , திருமங்கையாழ்வாரின் காதலால் இரங்கும் பெண்ணின் நிலை எனப் பலசுவைகளைக் காட்டியிருக்கலாம்.

சில பாடல்கள் எப்படியும் நம்மக்கள் எங்கேயாவது கேட்டிருப்பர் . "அற்றைத்திங்கள் ", "வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் '(சிலப்பதிகாரம்),'வெவ்வாய் ஓரி முழவாக '( சீவக சிந்தாமணி) , 'ஆயிரம் இராமன்நின் கேழ் ஆவரோ?' ( கம்பராமாயணம்) போன்றவை.. ஆனால் பாடல் முழுதும் தெரிந்திருக்காது. இந்த வகையில் அப்பாடல்களை எடுத்திட்டு, அதனை சிறிது விளக்கியும் இருப்பது ,படிப்பவருக்கு "அட நாம முந்தியே படிச்சதுதானே" என்னும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது. பின் அப்பாடல் முழுதும் படித்து முடிக்கும்வரை கீழே வைப்பது கடினம்.. இது என் அனுபவம்.


ஒரே நூலிலிருந்து ( எ.கா சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம்)ஆசிரியர் , பலப் பல திறனுடைய பாடல்களைக் காட்டியிருப்பது அவரது ஆழ்ந்த அனுபவத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

பாகம் 2 இன்னும் பார்க்கவில்லை. தேம்பாவணி, இரட்சணிய யாத்ரீகம் போன்றவை முதல் பாகத்திலில்லாததால் இரண்டாம் பாகத்தில் இருக்குமென நினைக்கிறேன்.
மொத்தத்தில் மரபு இலக்கியத்தில் அவ்வளவாகப் பரியச்சமில்லாதோர் துவங்குவதற்கு ஒரு நல்ல படி.

திரு.எஸ்.சிவகுமார் அவர்களின் அயராத உழைப்பிற்கும், நல்ல ஆக்கத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
அன்புடன்
க.சுதாகர்

4 comments:

  1. NALLA IRUKKU..WE ARE WAITING FOR YOUR REVIEW FOR 2ND PART ALSO

    ReplyDelete
  2. வாங்க வேண்டிய புத்தகத்தில் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  3. thanks Mutthu and Bala,
    The book should be available in many book stores in TN. I am yet to get the 2nd volume. Will write on that later.
    anpudan
    K.Sudhakar

    ReplyDelete
  4. சற்றே திசை திருப்பலுக்கு மன்னிக்கவும்.

    உங்கள் பதிவின் தலைப்பு எனக்கு இப்பாடலை நினைவுக்கு கொண்டு வந்தது.

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே.

    இப்பாடல் பற்றி பற்றி நான் போட்ட பதிவு இதோ:

    http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete