Sunday, January 13, 2008

சமூக இடைவெளி (4)

சமூக இடைவெளி (4)
அடிப்படையில் கிராம, ரெண்டுங்கெட்டான் நகர வளர்ப்பில் ஒரு பிழை.
அடக்கம் என்பது கோழைத்தனம் இல்லை. கர்வத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்கிறது. நல்ல பையன் என்றாலே நாம் என்ன சொல்லிக் கேட்டிருக்கிறோம்?. "அடக்கமா இருக்கணும். கேட்டால் மட்டுமே பதில் சொல்லணும். கீழ்ப்படியணும்" இது விபரீதமானது.

தைரியத்தைக் குறைத்த மாணவன் நல்ல பையனாகிறான். பள்ளியிலும், வீட்டிலும் அடக்கமானவன், அதிகம் பேசாதவன் - நல்ல பையன். நல்ல மார்க் வாங்குபவன் -புத்திசாலி. சிந்திப்பதை மழுங்க அடிப்பது படிப்பாகிறதா? நல்ல பொம்மைகளை உண்டாக்குவதைத் தவிர இந்த கல்வித்துறையும், சமூக அழுத்தமும் என்ன சாதித்துவிட்டது?

நகர மாணவர்களின் அழுத்தங்கள் வேறு. தன்னுடன் படிக்கும் மாணவர்களை விட முன்னே நின்றுகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவன் பல நுணுக்கங்களை வளர்ந்துக்கொள்கிறான். அவனுக்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறது. கிராமத்து கல்லூரி மாணவர்களுக்கு வெளியுலகம் காண என்.சி.சி தவிர எந்த எக்ஸ்போஷர் இருக்கிறது? நல்ல அழுத்தத்திலும் உள்வெப்பத்திலும் நகரத்து கரிக்கட்டை கூட வைரமாக ஜொலிக்கிறது. கெடுக்கும் அழுத்தத்திலும் வெப்ப்பத்திலும் கிராமத்து கட்டை கிராபைட்டாக மட்டுமே ஆகிறது. இது கட்டையின் குற்றமா? அழுத்தம் கொடுப்பவனின் குற்றமா?
தொடரும்

சமூக இடைவெளி (3)

சமூக இடைவெளி (3)

இண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....

இரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் எங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.
சென்னையிலிருந்து - தெரியாத எண். " உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்" பலான வங்கியின் கால்? எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் தொடருமுன் " எனக்கு கடனட்டை வேண்டாம்" என்றேன் அவச்ரமாக.. அவர் சிரித்தார் " இல்லை சார். இது உங்கல் ப்ளாக்க் குறித்தது".. குழம்பினேன். மீண்டும் விளிப்பதாகக் கூறி வைத்தேன். மறந்தும் போனேன்.

சாயங்காலம் மீண்டும் அழைத்தார். நான் மன்னிப்புக் கேட்டதைப் பொருட்படுதாமல் தொடர்ந்தார்" நீங்கள் சொன்ன இடைவெளியின் வலி நானும் அறிவேன்." என்றார். இளநிலை பொறியியல் மெக்க்கானிகல் படித்துவிட்டு நேர்முகத் தேர்வுகளில் திணறி ஒருவழியாக வேலை கிடைத்தட்ச் சொன்னவர் தொடர்ந்தார்." என்னுடன் படித்த பலரும் இன்னமும் சரியான வேலை இல்லாமல் திணறுகிறார்கள். எப்படி தன்னைக் காட்டிக்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நகரங்களில் படித்த மாணவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டுக்கெட்டான் நகரங்களிலிருந்து வந்த நாங்கள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் திண்டாடுகிறோம்" என்றார்.

இது நான் அறிந்ததுதான். என் மனைவி நக்ர்ப்புறக் கல்லூரிகளில் லெக்சரராக இருந்துவிட்டு இப்போது மும்பையின் ஒரு "ஹை-ப்ரொஃபைல்" கல்லூரியில் வேலைபார்க்கிறார்.நகர்ப்புற மாணவர்கள் நல்ல திறமை இருந்தும், தெளிவாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, கொஞ்சம் தெரிந்தாலே மிக தைரியமாக "விட்டு அடிக்கும்" நகர மாணவர்கள் திறமை குறித்து அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
" நான் பட்டது என் ஜூனியர்ஸ் படக்கூடாது சார்" என்றார் சென்னை அன்பர். " என் கல்லூரியில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் போய் எப்படி நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் செய்யவேண்டும் ,எப்படி உடை அணியவேண்டும், எப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் எனப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இதுபோன்ற பயிற்சி முகாங்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் முக்கிய அம்சங்களையும், எனது அனுபவங்கலையும் சேர்த்து அவர்களிடம் சொல்கிறேன்" என்றார். பாராடப்பட வேண்டிய விஷயம். தனது செல்போன் நம்பரைத் தந்தவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் ( நிறுவனத்திலிருந்து எதேனும் தடை வருமோ?).
தொடரும்

Sunday, January 06, 2008

சமூக இடைவெளி-2

சமூக இடைவெளி-2


1985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.
ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு வினாடி வினா நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்ததால் அவரைக் குறித்து சிறிது அறிந்திருந்தோம்.
ஜீன்ஸும், டீ ஷர்டும்மாய் ஒரு ஞாயிறு மாலை, துறைமுக பள்ளியில் ஒரு வகுப்பில் "எப்படி நேர்முகத்தேர்வுகளை சந்திப்பது?" என்பது குறித்து அவர் பேசினார். எப்படி உடை அணியவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து அவர் சொன்னது எங்களுக்குப் புதியதாக இருந்தது.

இது நடந்து சில நாட்களில் கல்லூரி அளவிலான "சிறந்த மாணவ/மாணவியர்" தேர்வு ஸ்பிக் ரோடராக்ட் நடத்தியது. நானும் போயிருந்தேன். நேர்முகத் தேர்வு ... எனது முறை. எனக்கு முன் சென்ற பெண் சிரித்தபடி வெளியேறினாள். நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து நுழைந்தேன்... தட்டாமலே.. "உள்ளே வரலாமா? என்று கேட்காமலே..

ஷர்மா என்ன்னைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கியது. " வெளியே போய் , கதவைத் தட்டிவிட்டு, "உள்ளே வரலாமா?" எனக்கேட்டு விட்டு, அனுமதித்தால் மட்டும் நுழை.." என்றார். அவமானத்தில் சுண்டிப்போனேன். சுதாரித்தபடி வெளியேறி, மீண்டும் நுழைந்தேன், கதவைத் தட்டி, அனுமதி கேட்டபின்...

என்னை எவரும் இருக்கச் சொல்லுமுன் ஒருவர் எனது கால்களைக் கவனித்தார். " இண்டர்வியூ-ன்னு தெரியுமில்லே? பாத்ரூம் செருப்பு போட்டுட்டு வந்திருக்கே?"
ஷர்மா அவரை உடனே அடக்கினார்." இந்த தேர்வு நடத்துவதின் நோக்கம், இவர்களைக் குற்றம் சொல்வதற்கு இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு . முழுமனிதனாக உருவாக்குவதற்கு" என்று கடிந்தவர், புன்னகையுடன் என்னைப்பர்த்தார். "இண்டர்வியூவில் உன் திறமையை மட்டுமில்ல, நீ உன்னை எப்படி மதிக்கிறாய், எப்படிக் உன்னைக் காட்டிக்கொள்கிறாய் என்பதும் முக்கியம். சும்மா அலட்டச் சொல்லலை. எளிமையாக , அதேசமயம் சுத்தமாக உன்னைக் காட்டவேண்டும். புரியுதா?" என்றார். மேற்கொண்டு கேட்ட பல கேள்விகள் நினைவில்லை. தோல்வியுடன் திரும்பியபின் என் நண்பன் குட்டியிடம் எல்லாம் சொன்னேன். கடற்கறை மணலில் கைகளைத் தலைக்கடியில் வைத்து அண்ணாந்து படுத்திருந்த சிறிது நேர அமைதியின் பின் கேட்டேன் " மக்கா, பாத்ரூமுக்கெல்லாம் செருப்பு போட்டு போவாங்களாடே?"
அவனுக்கும் அக்கேள்வி எழுந்திருக்கும்.
எழுந்து நடக்கையில், கடற்கரை மணல் உள் புக செருப்பு உறுத்தியது.
இன்னும் உறுத்துகிறது.

சமூக இடைவெளி -1

சமூக இடைவெளி-1

ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக.

நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென செல்போன் சிணுங்கியது. நண்பன் ராகேஷ்.
" எப்படி இருக்கிறாய்? நான் அடுத்தவாரம் அமெரிக்கா போகிறேன். இன்று என் ஆபீஸ் வருகிறாயா?பார்த்து நாளாகிறது." அழைப்பைத் தட்டமுடியாமல் அவன் அலுவலகம் விரைந்தேன்.

சிலர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகேஷ் கான்ஃபெரன்ஸ் அறையில் இருந்தான். " இன்னும் அரைமணி நேரம் வேலை. ஒரு நேர்முகத்தேர்வு. நீயும் உட்கார். உனது தனிப்பட்ட அனுமானங்கள் எனக்கு உதவும்." நானும் அமர்ந்தேன். இளம்பொறியாளர்களுக்கான தேர்வு. ஒரு வருடம் , 2 வருடம் அனுபவம் கொண்ட இளைஞர்கள்....
ஒரு நபரின் தேர்வு முடிந்ததும், நானும் ராகேஷும் அவ்விளைஞனைக் குறித்து சிறிது பேசிக்கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு திறத்நது. அடுத்த நபர் நுழைந்தார்... சொல்லாமலே.
ராகேஷ் முகம் கோபத்தில் சிவந்தது. "வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?". அவ்விளைஞன் தடுமாறிப்போனான். "சார்" என்றான் புரியாமல். ராகேஷ் இம்முறை கத்தினான்.."ஐ ஸே, கெட் அவுட்"
அவ்விளைஞன் அவமானத்தில் சிறுத்தான். "சாரி" என்றவாறே வெளியேறினான்.
" யார் இவன்?" ராகேஷ் கோபம் தணியவில்லை. " கதவைத் தட்டிவிட்டு நுழையவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள்..."

நான் அவனது பயோடேட்டாவைக் கவனித்தேன். பெயர் தெரியாத சிற்றூரில் இருக்கும் பொறியியல் கல்லூரி, நாந்தேட் என்னுமிடம் அருகே, (மராத்வாடா பல்கலைக்கழகம்?)
"சரி விடு" என்றேன் ராகேஷிடம். "அவனை அழைத்து தேர்வு நடத்து". " முடியாது" என்றான் ராகேஷ் முறைத்தபடி. "இவனையெல்லாம் வைத்துக்கொண்டு என்னால் குப்பை கொட்ட முடியாது.வேலை பயிற்றிக்கலாம். எதெல்லாம் சொல்லித் தருவதென்று ஒரு அளவு இல்லையா?"
"அவன் அவனது சூழ்நிலையின் கைதி." என்றேன். " இது இம்மாணவர்களுக்கு புது அனுபவம். அவன் வாழும் ஊரில் யார் இதெல்லாம் சொல்லித்தருவர்கள்?"
ராகேஷ் ஒரு கணம் நிதானித்தான்.
"இது நீ படித்து வந்த காலம் இல்லை சுதாகர்" என்றான். அவனுக்கு எனது அனுபவம் தெரியும்..

தொடரும்