Thursday, March 30, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை -V

இவ்வாறு மூலக்கூறுகளை சல்லடையிட்டு சலித்து, "இவைதான் மருந்து மூலக்கூறாக இருக்கலாம்" எனக் கருதப்பட்டு பொறுக்கியெடுக்கப்பட்ட மூலக்கூறுகள் ADME ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நச்சுத்தன்மைக்கான (Toxicology)ஆய்வுகளை வெற்றிகரமாகக் கடந்த பிறகு அம்மூலக்கூறுகள் பட்டியலிடப்படும். இவற்றை புதிய வேதியல் பொருட்கள் (New Chemical Entity - NCE)என அடையாளம் இடுவர்.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட வேதியல் மூலக்கூறிகளில் மருந்தாக ஊகிக்கப்படும் பொருட்களை சோதனைக்கால புதிய மருந்து மூலகங்கள் என்பர் ( Investigative New Drugs -IND)

உயிரினங்களின் மேல் இம்மூலக்கூறுகளின் பண்பு ஆராய்வதை பயோஅனலிசிஸ்(Bioanalysis - in vivo studies) என்பர். இவை முறையே PK PD( Pharmaco Kinetics , Pharmaco Dynamics) என்னும் ஆய்வுகளின் விளைவுகளாக நிறுவப்படும். மேற்கொண்டு இம்மூலக்கூறுகள் சந்தையில் மருந்தாகும் தன்மை உடையதுதானா என்பதை ஆய்வர். இதன் பதில் 'ஆம்' எனில், இம்மூலக்குற்றினை மருந்தாக்குவதற்காக மருந்துகளை தர நிர்ணயிக்கும் அமைப்புகளுக்கு முறையான விண்ணப்பம் செய்வர். இந்த நிலையை New Drug Application-NDA என்பர்.
இந்த உயிரினப் பரிசோதனைகளை இரு விதமாகப் பிரிக்கலாம்.
1. விலங்கினங்களில் செய்யப்படும் சோதனைகள்.
இங்குதான் முயல், எலி, குரங்கு,குதிரை ( யானை கூட உண்டு )முதலியவற்றைப் பயன்படுத்டுவர். எல்லா விலங்குகளையும் பயன்படுத்டமுடியாது. எந்த சோதனைக்கு எந்த விலங்கு, அதன் எந்த பாகம் உபயோகிக்க வேண்டும் என நிர்ணயம் இருக்கிறது. இது உலகளவில் நிர்ணயிக்கப்பட்டது என்பதால், மிகுந்த கெடுபிடியான சோதனைகள் இவை.

ஒவ்வொரு சோதனையும் செயுமுன் திட்டமிடப்பட வேண்டும். அதனை யார் செய்வது, யார் அனுமதிப்பது என்பதிலிருந்து, எந்த விலங்கு, எந்த உயிர்ப்பொருள் ( சாம்பிள் என்பது இரத்தம், சீரம், மலம் , சிறுநீர் என உயிரினப் பொருட்கள்லிருந்து, ஈரல், நிரையீரல், குடல் என உடல்பொருள் துண்டுகள் வரை இருக்கலாம்), எந்த இயந்திரம், எந்த முறை கொண்டு ஆய்வு செய்வது , ஆய்வின் முடிவுகளை எங்கு சேமிப்பது , ஆய்வு முடிந்தபின் , மீதமிருக்கும் சாம்பிள் எங்கு சேமிப்பது என்பது வரை மிகக்கடுமையான ஆவணக் குறிப்புகளுடன் சோதனைகள் நடத்தப்படும். Standard Operating Procedures (SOP)என்பன முதலில் வரையறுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, பின் சோதனைகளில் நிகழ்த்தப்படும். ஒவ்வொரு நிலையிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும். சோதனைகள் தோல்வியடைந்தாலும் அதன் முடிவுகளும், ஏன் தோல்வியுற்றன என்பதும் ஆவணப்படுத்தவேண்டும். தணிக்கைக் குழுக்கள் இவற்றை குடைந்து குடைந்து பார்ப்பார்கள்.
2.மருத்துவ சோதனைகள்(Clinical Trials) மனிதரில் இதன்பின் நடத்தப்படும். மருத்துவச் சோதனையில் நான்கு நிலைகள்(Phases) உள்ளன.
முதன் நிலையில் மருந்தாக வேண்டிய பொருள் ஆரோக்கியமாக இருக்கும் மனிதரில் செலுத்தப்படும். இவ்வாறு சோதனகளுக்கு தானாக வரும் மனிதர்களை சப்ஜெக்டுகள் (subjects)என்பர்.
மருந்து கொடுக்குமுன் உயிரினப் பொருட்களின் சாம்பிள்(Bio samples) எடுக்கப்படும். பின் மருந்து செலுத்தப்பட்ட சில குறிப்பிட்ட நேர இடைவெளியில் சாம்பிள்கள் எடுக்கப்படும். இது ஆய்வின் நோக்கம் கொண்டு நிர்ணயிக்கப்படும். உதராணமாக 0 நிமிடம்,30 நிமிடம், 1 மணிநேரம், 2 மணிநேரம் என இந்நேர இடைவெளிகள் அமைந்திருக்கும். இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரியல்பொருட்கள் மிகக் குறைந்த வெப்பநிலையுள்ள பெட்டிகளில் பாதுகாக்கப்ட்டு (deep freezers)சோதனைச் சாலைக்கு அனுப்பப்படும். இதன் வெப்பநிலை -80 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும்.

Wednesday, March 29, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே....

பாரதி பற்றிய இந்த கட்டுரை திண்ணையில் கிடைத்தது.
அறிவியல் கட்டுரை/ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்கள் முதலிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, பின் அவர்கள் முடிவுக்கு சாதகமாக வரலாற்று/அறிவியல் நிரூபணங்களைத் திரித்து பயன்படுத்துவதென்பது வழக்கமாகிவிட்டது. பாரதியையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை போலும்.
உங்கள் கருத்துகளை திண்ணையிலும் பிற ஊடகங்களிலும் தெரிவியுங்கள். பாரதியைக் குறித்து எவ்வளவோ நல்லது சொல்லுவதற்கு இருக்க, "விருப்பு வெறுப்பின்றி" நடுநிலையாக எழுதுவது போல அமைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வருவது வருத்தற்குரியது. தமிழகம் தந்த ஒரு மானுடம்பாடியின் வாழ்க்கை வலியறியாது அலட்சியப்படுத்துவது இதுவே இறுதியாக இருக்கட்டும்.

Sunday, March 19, 2006

நேதாஜியின் மரணம் - இன்னும் மர்மம்?

நேதாஜியின் மரணம் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதைய முகர்ஜி கமிஷன் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்னும் ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறது.
சில ஆராய்வுகள் அவர் டைப்பியில் ஆகஸ்ட் 18 1945 அன்று விமானவிபத்தில் இறந்ததாகக் கூறுகின்றன. இதனை காங்கிரஸ் அரசுகள் தீவிரமாகப் பரப்பிவந்தன. 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிஷன் தன் முதலறிக்கையைச் சமர்பித்தது. அது நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாகவே அறிவித்தது. பின் வந்த கமிஷனும் அதனையே சொன்னது.
இரண்டிலும் இருந்த ஓட்டைகளை சிலர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர்.
1. ஷா நவாஸ் கமிஷன் , தைவான் போகாமலேயே ( மிக முக்கிய தடையங்கள் கிடைத்திருக்கக் கூடிய இடம்), தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
2. ரஷ்ய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இன்னும் தடையங்கள் கிடைத்திருக்கக் கூடும். நேதாஜி தைவானிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார் என ஒரு கருத்து உண்டு. அங்கு அவர் போர்க்கைதியாக இருந்ததாகவும் அதன் ஆவணங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. பின்னர் அவர் ரஷ்யாவில் கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தி. மற்றொன்று அவர் ஃபைசியாபாத் நகரில் ஒரு துறவியாக 1985 வரை வாழ்ந்ததாகவும், அவரது படையின் முக்கிய அதிகாரிகள் வருடம்தோறும் அவரது பிறந்த நாளன்று அவரை சந்தித்ததாகவும் வதந்தியுண்டு.

இதற்கெல்லாம் சான்றுகள் இல்லை என இதுவரை அரசாங்கம் சொல்லிவந்தது. முகர்ஜி கமிஷனின் நாட்களை நீட்டிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை ஹிண்டுஸ்தான் டைம்ஸில் பணிபுரிந்த தர் முன்வைத்ததை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் இது அரசால் நீட்டிக்கப்பட்டு, அதன் அறிக்கை நடப்பாண்டில் பாராளுமன்றத்தில் தாக்கம் செய்யப்படும் எனத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ் தனது அரசியல் ஆதாயம் கருதி "அறிக்கையை அடக்கிவாசிக்கும்" என்ற அச்சம் பலருக்கு உண்டு.
மேலும் அறிய இச்சுட்டிகளைக் காணுங்கள்.
http://www.missionnetaji.org
http://in.rediff.com/news/2006/mar/17spec.htm

Tuesday, March 14, 2006

பண்டிகைகளும் பின்விளைவுகளும்.

புகை மண்டி மூச்சுத்திணறிக்கிடக்கிறது மும்பை.
இன்று ஹோலி. நிறங்களின் விழா. இப்போதெல்லாம் ஏண்டா இதெல்லாம் வருது ? எனத் தோன்றிவிடுகிறது. நேற்று இரவே பண்டிகை தொடங்கிவிட்டது. நமது போகிப்பண்டிகை போல , வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை குவியலாக இட்டு எரித்துக் குலவையிடுவார்கள். இப்போதெல்லாம் என்ன எரிக்கப்படுகிறது தெரியுமோ?
பிளாஸ்டிக் பைகள், உடைந்த வாளிகள், டயர், வீடியோ கேசட்டுகள், பிய்ந்த செருப்புகள்... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அனைத்து நச்சுப் பொருட்களும் வாயுமண்டலத்தில்.. கரிகரியாகப் புகை. எரிச்சலூட்டி, மூச்சுத் திணறி ஏற்கெனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் மும்பை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், தன்னார்வலக்குழுக்களும் எத்தனைதான் கத்தினாலும் இக்கூச்சலின் முன் எடுபடாமல் அழுந்திப்போயினர்.

முன்பெல்லாம் இப்பண்டிகைகளுக்கான நிறக்கலவையை வீட்டிலேயே செய்வர். குலால் (Gulal) என்பது மாவுக்கலவையில் செய்யப்பட்டது. இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, கடுமையாக அரிக்கும் ரசாயனக்கலவைகள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்போது சந்தைகளில் விற்கப்படும் நிறக்கலவையில் இருக்கும் நச்சுப்பொருட்களைக் குறித்து எழுதியிருந்தது. (உருப்படியாக தற்காலத்தில் அதில் வந்த ஒரே செய்திக்குறிப்பு இதுதான்).

காலத்தின் தேவைக்கேற்ப குப்பைகளும் மாறிவிட்டன. அவற்றை பழையபடியே எரிப்பது என்னும் சம்ப்ரதாயம் என்பதை முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வரும் கேணத்தனம். வேறுவகையில் இவற்றை அப்புறப்படுத்திக் கொண்டாடுங்களேன். சொல்லப்போனால் வேறுவகையாகப் புரிந்துகொண்டுவிடும் அபாயம்..

கிறிஸ்துமஸ் மரம் வேண்டி பல மரக்கிளைகள் முறிக்கப்படுவதைப்போல , இந்த ஹோலியின் முந்திய நாள் எரிப்பதற்கும் சிலர் சாலையோரம் வளர்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளை ஒடித்துச் செல்வது அதிர்ச்சிக்குரியது. ஏற்கெனவே பச்சையென்பது மும்பையில் குறைவு. இது இன்னும் குறைக்கிறது.

இதுபோல பக்ரீத் பண்டிகையின் போது, சில இடங்களில் கழுத்தறுபட்ட ஆடுகள் அப்படியே சாலையோரம் விடப்பட்டிருந்தன. இரத்தம் வழிந்தபடி கிடக்கும் அவற்றைப் பின் உண்பவர்களிடம் சுகாதாரக்கேடு குறித்து யார் சொல்வது?
எதைச் சொல்லப்போனாலும் நமது ஜாதகம் பார்க்கப்படும். வேற்று மதக்காரன் யார்டா எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்? என்னும் கேள்விகள் எழும். எழுந்திருக்கின்றன.

மதங்கள் உருவாக்கிய பண்டிகைகளின் அர்த்தம் விபரீதமாகப் போவதைத் தடுக்க, தனிமனிதன் மட்டுமல்ல மதங்களின் தலைமைப் பீடங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.
செய்வார்களா?

Monday, March 13, 2006

குழந்தைகளும் கல்விமுறையும்

பேராசிரியர் இராமானுஜம் சமீபத்தில் தஞ்சைக்கு அருகே ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரிய/ஆசிரியைகளுடன் பேசியதின் சாராம்சம் இது.
" குழந்தைகளுக்கான நாடக அனுபவத்தில், குழந்தைகளுடனான உரையாடல்கள் எனக்குப் பல பரிமாணங்களைத் தந்திருக்கின்றன. அவர்கள் உலகம் தனியானது. அலாதியான, வெளிப்படையான பேச்சுகள் பல சமயங்களில் தீவிரமாக என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதை வெறுக்கின்றனர். Children love to learn; they hate to be educated.
இதன் மூலம் என்ன? பள்ளிகள்,குழந்தைகளை தங்களிடம் ஈர்க்கும் முயற்சியில் தோற்றுவிட்டன. அவர்களது சுதந்திரம், கல்வியென நாம் நினைத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் dataவிற்கு பண்டமாற்று செய்யப்படுவதை எதிர்த்து தங்களுக்கே உரித்தான பாணியில் சிறு கோபங்கள், விளையாட்டுகள் மூலம் வெளிக்காட்டுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் ' குழந்தைகள் எப்போதும் ஒழுங்கு முயற்சிகளுக்கு எதிராகவே சிந்திக்கும் 'எனவும் 'அவர்களுக்கு ஒழுங்கு என்பது கட்டாயமாகப் புகட்டப்படவேண்டும்- கசப்பாக இருக்குமெனினும்' எனவும் தங்களது கட்டாயக்கல்வி முயற்சிகளுக்கு சமாதானம் சொல்கின்றனர். உண்மையில் , குழந்தைகள் லாஜிக்காக நிறையவே யோசிக்கின்றன. கல்வி குறித்தான அவர்கள் சிந்தனை வியப்பானது.
உதாரணம் ஒன்றுசொல்கிறேன். எனது பேரன், ஒரு நாள் "தாத்தா, நான் அம்மா, அப்பா வாங்கித்தர்ற புத்தகமெல்லாம் ஒழுங்கா படிக்கத்தானே செய்யறேன்? " என்றான். ஆமாமென்றேன். எதாவது அறிவியல்/பொது அறிவு புத்தகமோ ,விளையாட்டுப் பொருட்களோ வாங்கிக்கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதென்பது இயல்பு. "நாந்தான் படிக்கிறேனே? அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்குப்போகணும்?" என்றான். என்னால்தான் வீட்டிலேயே அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவே அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமே? அப்படியானால் பள்ளிக்கூடம் என்றொரு கட்டிடம் எதற்கு? என்பது இதன் சாராம்சம்.
"பள்ளிக்கூடத்தில் நீ மத்த பையன்களோட விளையாடலாம். டீச்சரோட பேசி பலதும் புதுசாப் புரிஞ்சுக்கலாம். புஸ்தகத்துல இதெல்லாம் கிடைக்காது" என்றேன். ஒரு சமூக இணைவுத் தொடர்பு (social interaction)என்பது முக்கியம் என்பது மறைமுகமாக அவனுக்குப் புரியப்படுத்தும் முயற்சி இது. அதற்கு வந்த பதில்தான் என்னை சிந்திக்க வைத்தது.
" பள்ளிக்கூடத்துல யார் பேச விடறாங்க? எப்பப் பாத்தாலும் பேசாதே பேசாதே-ன்னு தானே டீச்சர் சொல்றாங்க?" சிரிக்காதீர்கள். மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
புத்தகங்களும் ஊடகங்களும் கொடுக்கமுடியாத சமூகத் தொடர்பை உருவாக்க வேண்டிய பள்ளிகளே அதனைச் சிதைத்தால்? ஆசிரியர்கள் பாடம் முடித்தபின்போ அல்லது பாடம் நடத்தும்போதோ புத்தகங்களின் வரிகளிலிருந்து சற்றே வெளிவந்து புதிய பரிமாணங்களை இக்குழந்தைகளுக்குக் கொடுக்கும்நிலையில் பள்ளிகளோ, பாடத்திட்டங்களோ இருக்கின்றனவா? புத்தகத்திலிருப்பதையே ஒரு முதிர்ந்த குரலில் சொல்வதுதான் ஆசிரியப் பண்பா?
பின்னும் சொன்னான் " எல்லாத்துக்கும் ஒரு வகுப்பு இருக்கு. டிராயிங், விளையாட்டுக்குக் கூட வகுப்பு இருக்கு. பேசறதுக்கு ஒரு வகுப்பு இருக்கா எங்களுக்கு? பேசவிட்டா என்ன?"
ஆசிரியர்களே, இது யோசிக்கவேண்டிய ஒன்று. விளையாட்டு வகுப்பிலும் ஒரு மிலிடரி ஒழுங்குமுறை. ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து ஓடி, குதிக்கவேண்டும். அதனை அளவெடுக்க ஒரு ஆசிரியர். இதற்கும் கைதிகளின் உடல்நல அளவெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேச்சு என்பது குழந்தைகளின் அபூர்வச் சொத்து. தான் நினைப்பதையும் , சிந்திப்பதையும் குழந்தைகள் தங்களால் இயன்றமுறையில் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். சிலகுழந்தைகள் திடீரென கத்தி கூப்பாடு போடும். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வெளிப்பாடு அது. பேசாதே பேசாதே என அடக்கி அடக்கி வைத்து வெளிப்படுத்தும் திறனொற்றை மழுங்க அடிக்கிறோம். விளைவு? சரியாக சிந்திக்கத் தெரியாத, தனது சிந்தனைகளை வெளிப்படுத்தத் தெரியாத , ஒழுங்காக சொன்னபடி நடக்கும் சிறந்த குமாஸ்தாக்களை வளர்க்கும் ஆங்கிலேய பள்ளிமுறையில் இன்னும் சுதந்திர அடிமைகளை வளர்த்துவருகிறோம்.

குழந்தைகளை உங்கள் வகுப்பில் ஒரு சிறு இடைவேளை நேரத்தில் பேசும் வகுப்பு என அறிவித்து விட்டு அவர்கள் போக்கில் பேச விட்டுவிட்டு கவனியுங்கள். நாளடைவில் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு குழந்தையும் மிளிர்வதைக் காண்பீர்கள்.
மந்தமான குழந்தை என ஒன்று உலகில் எங்கும் கிடையாது. நாம்தான் மந்தமாக அவற்றைக் காண்கிறோம்."
I was born intelligent. Made fool by education என எதோவொரு டீ ஷர்ட்டில் பார்த்த ஞாபகம்.

பேசிய பையன் -என் மகன்.

Saturday, March 11, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை IV

வாயின்வழி உட்கொள்ளும் மருந்துமூலக்கூறுகள், பித்தநீருடன் சேர்ந்து புரதக் கலவை ( protein complex) உருவாக்கும். இந்த புரதக்கலவை எந்த அளவில் குடல் திசுக்களால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலந்து, நோய் கொண்ட திசுக்களிடம் செல்கிறது என்பதையும், எத்தகைய வேதிவினை நிகழ்வுகள் நடக்கின்றன, அதன்மூலம் எத்தகைய, எத்தனைய புதிய மூலக்கூறுகள் உண்டாகின்றன என்பதையும் காண ADM உதவும். பின்னர் எவ்வாறு இம்மூலக்கூறுகள் வெளியேறுகின்றன எனபதை excretion analysis கண்டறியும். இத்தோடு முடிவதில்லை.
இந்த புரதங்கள் பிற மூலக்கூறுகளுடன் வேகமாக வினைபுரிந்து, தன்னிலை இழந்து செயலற்றுப்போவதை தற்கொலை என்பர் . இதனை இம்மூலக்கூறு தடுக்கும் சக்தி கொண்டுள்ளதா? ஆம் எனில் எத்தகைய சக்தி என்பதைக் காண்பது protein suicidal inhibition studies என்னும் ஆய்வுகள். இவை ADMEன் ஒரு பகுதி எனலாம்.

சரி, இவ்வாறு மருந்தாக வந்த மூலக்கூறுகள் பிற வேதிவினைகளால் புதிய வினைப்பொருட்களை உண்டாக்கி அதன்மூலம் உடலின் நல்ல பகுதிகள் தாக்கப்படுமானால்? இந்த பக்க விளைவுகளையும், இம்மூலக்கூறுகளின் நச்சுத்தன்மையை ஆய்வதும் toxicology ஆய்வுகள்.

மருந்தாக ஒரு வேதிப்பொருள் உடலில் நுழைந்தால் , உடல் அதனை எவ்வாறு வரவேற்கிறது/ எதிர்க்கிறது என்பதை உடல் இம்மூலக்கூறுகளை என்ன செய்கிறது என்பதன் மூலம் அறியலாம். இதனை Pharamaco Kinetics(PK) ஆய்வுகள் உறுதிசெய்யும்.

மாறாக, உடலில் நுழைந்த வேதிப்பொருள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைக் காண்பது PharmacoDynamics (PD)ஆய்வுகள் உறுதிசெய்யும். இந்த PK/PD ஆய்வுகள் drug discovery நிலை மட்டுமல்லாது, உயிராய்வுகள் நிலையிலும் (Bio analysis)மேற்கொள்ளப்படுகின்றன.

Friday, March 10, 2006

லே மக்கா! Thanks to Google

கூகிள் எனக்குச் செய்த பெரிய உதவியென இதைத்தான் கருதுகிறேன். 19 வருடம் முன்பு பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த ந்ண்பர்கள் பெயரை இணையத்தில் சும்மா பொழுது போகாமல் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பேன். எப்பவாவது அதிர்ஷடம் அடிக்கும்.

இப்படித்தான் போன கிறிஸ்துமஸ் அன்று, பழைய நாள் ஞாபகத்தில் நண்பன் felcitas பெயரை கூகிளில் தேடினேன்.

மக்கா கிடைச்சுட்டான்..! கனடாவில் குடும்பத்தோடு நம்ம மக்கா சந்தோஷமா இருக்கிற போட்டா பார்த்தப்போது கண்ணு கொஞ்சம் கசிஞ்சிட்டுல்லா. ஒருகாலத்துல நானும் ஒல்லிப்பாச்சானா அவனை மாதிரித்தான் இருந்தேன்.. ( இப்ப? ஹூம்...). இவன் மட்டும் அப்படியே இருக்கான்..

உடனே ஒரு மின்னஞ்சல் தட்டினேன். 19 வருசம் கழிச்சு ஒரு கேணையன் இப்படி எழுதுவான் என அவன் நினைச்சுப்பாத்திருக்கமாட்டான். திடீர்னு ஒரு நாள் ராத்திரி தொலைபேசி அழைப்பு. " லே மக்கா!".. அவன் தான்..

குரலும் அங்கனயே இருக்கு. உணர்ச்சி பொங்கப்பொங்க, வார்த்தைகள் தடுமாறி சிரிச்சு, அழுது என்னமோ போங்க..என்னத்தப் பேசினேன்ன்னு எனக்கு ஞாபகமில்ல. பேசினோம் என்பதுதான் முக்கியம்.

அதுவும் தூத்துக்குடித் தமிழ் (இது திருநெல்வேலித் தமிழ்ல இருந்து கொஞ்சம் மாறும்)-ல வேகமாப் பேசினோம்னா கூட இருக்கிறவ்ங்களுக்கு சத்தியமா ஒண்ணும் புரியாது.
" நீங்க தமிழ்லயா பேசினீங்க?" என்றாள் என் மனைவி. விடுங்க. தஞ்சாவூர், தூத்துக்குடியைப் புரிஞ்சுக்க நாளாகும்!

கொஞ்சம் முன்னாடியே இந்த கூகிள் நடந்திருந்தா, அவனைப் பாத்துட்டே வந்திருக்கலாம்.

இதே மாதிரி நம்ம சுப்பிரமணியன் நியூஜெர்ஸியிலே இருந்து பேசினப்போவும், தூத்துக்குடித்தமிழ் பிரவாகம். என் மகன் பேந்தப் பேந்த முழிச்சான்."இவன் இப்பவரை நல்லத்தானே புரியர மாதிரிப் பேசிகிட்டிருந்தான்?" என அவன் முழி சொல்லிச்சு. இந்ததமிழெல்லாம் சொல்லிக்கொடுத்தா வரப்போவுது?

எங்கனகூடி போனாலும், நம்ம மொழி மறக்காம அப்படியே இருக்கான்கள்லா? அதுக்குப் பாராட்டியே தீரணும்.

லே மக்கா! நல்லா இருங்கடே!

இவனுக எல்லாம் என்னத்தைப் படிச்சு....

இங்கு கல்லூரிகளில், "கட்டாயக் கல்விச் சுற்றுலா"வென ஒரு வருடாவருடம் ஒரு கூத்து நடக்கும். ஏட்டுச்சுரைக்காய் எப்படி கூட்டிற்கு உதவும் எனப்புரிந்துகொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை மாணவ/மாணவியர் தங்களது கனவுகளை நனவாக்கும் பொன்னான தருணமாக ஆக்கிக்கொள்வார்கள். இந்த வருடம் நடந்ததாக நான் கேட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நடந்தது இதுதான். சில வகுப்புமாணவ/மாணவியர் ஒரு தொழிற்பேட்டைக்கு ஆசிரியர்களுடன் இந்தச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். விடுதியில் , இரவில், ஆசிரியர்கள் கண்காணிப்பாக அறைகளில் சென்று பார்த்தபோது, ஒரு மாணவன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு படு கவலைக்கிடமாக, நாடி அடங்கி, கண்கள் சொருகிய நிலையில் கிடந்திருக்கிறான். ஆசிரியர்கள் எதாவது சொல்வார்களோ எனப் பயந்து,கூட இருந்த பயல்கள் சத்தமே போடாமல் அவனைக் கிடத்தியிருக்கின்றனர். கண்டு பிடித்து அவனை சுய நினைவுக்குக் கொண்டுவருவதற்குள் படாத பாடு பட்டுப்போனார்களாம்.உயிர் போய்விடும் என அஞ்சும் அளவிற்கு அவனது நிலை இருந்திருக்கிறது. இரவு நேரம் மருத்துவர் எவரும் வர முடியாத அந்த தொலைதூர விடுதியில் அவனை சில ஆசிரியர்கள் கவனித்துக்கொண்டிருக்க, பிற மாணவர்கள் அறைகளில் சோதனை நடத்தியபோது, குடித்துவிட்டு அலங்கோலமாக இப்பயல்கள் கிடந்தகாட்சி... படுகேவலமாக இருந்திருக்கக்கூடும்.

இத்தோடு தொலைந்ததா? விடுதியில் தங்கியிருந்த சிலர் வந்து ,ஆசிரியர்களிடம் சில மாணவ மாணவியர் டிஸ்கொதேயில் "ஆடிக்கொண்டிருப்பது" குறித்துப் புகார் செய்ய, அங்கு விரைந்து சென்று பார்த்தால், அது வேறொரு நிலை. தரதரவென்று இழுத்துவந்து அவரவர் அறைகளில் சேர்த்திருக்கிறார்கள். இம்மாணவ மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்? நானும் 80களில் இந்த மாதிரி சுற்றுலா போயிருக்கிறேன். கொஞ்சம் சீண்டுதல் இருக்கும்... காதல்ஜோடிகள் இருக்கும்...மிஞ்சிப்போனால் சிகரெட்.. அதுவும் ஆசிரியர்களுக்குத் தெரியாமல்... தண்ணியெல்லாம் அடித்து நாறிக்கிடப்பதும், அலங்கோலமாக டிஸ்கொதேயில் ஆபாசமாக ஆடுவதும்...என்ன நாகரீகம்?
இவர்களை மட்டும் குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை. விடுதியில் மாணவர்களுக்கு மது வழங்கிய பணியாளர்கள், மது கிடைக்கும்படி செய்த விடுதி நிர்வாகம், பெற்றோரிடமிருந்து அபரிமிதமாகக் கிடைக்கும் பணம்..பார்க்கும் படங்கள், கேட்கும் இசை.. இவற்றையும்தான் சொல்லவேண்டும். 24 மணிநேரமும் காமம் பொங்கிவழியும் பாடல்களும், காட்சிகளும் திரையினூடே கசிந்து, கண்ணுள்ளூம் காதுள்ளும் புகுந்தால் புத்தி மழுங்கத்தான் செய்யும். நடை தடுமாறத்தான் செய்யும்.

ஒரு தனிக் கட்டுப்பாட்டு காவல்படை (moral police) வேண்டுமெனச் சொல்லவில்லை. அண்மையில் மீரட் நகரில் காவல்படை பூங்காக்களில் ஜோடிகளை அடித்து வெளியேற்றியதை பலரும் கண்டித்தனர். ஆனால் இது போன்றவற்றைக் குறித்து யாரும் பேசுவதில்லை. தனிமனித சுதந்திரம் எப்போது பரிந்து பேசப்படவேண்டும்... யாருக்காகப் பரிந்து பேசப்படவேண்டுமென விதியில்லாததால் இந்த அத்துமீறல்கள்.. இரு தரப்பிலும்.

சுயக்கட்டுப்பாடு குறித்து எத்தனைதூரம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அறிவுறுத்தப்படுகின்றது எனத் தெரியவில்லை. இந்த விஷங்கள் காற்றில் பரவிவருவதைத் தடுக்க எதாவது முயற்சி எடுக்கிறார்களா? பண்பலை வானொலிகளில் கல்லூரி மாணவர்களுக்கென நிகழ்ச்சி.... கல்லூரி மாணவர்களுக்கென இவர்கள் பேசும் மொழியும், தரமும், ஒலி பரப்பும் பாடல்களும்..கேட்டால் நொந்து போவீர்கள். தமிழ்நாட்டில் எப்படியெனத் தெரியவில்லை.

என்னமோ உருப்பட்டாச் சரி.

மூலக்கூறிலிருந்து மருந்து வரை III

மூலக்கூறிலிருந்து மருந்து வரை III
ஒரு மூலக்கூறை மருந்தாகத் தேர்வு செய்ய மருந்து ஆராய்வுக் குழு ஆய்வு செய்யும் ( Drug discovery department). லட்சக்கணக்கான மூலக்கூறுகளிலிருந்து பல்லாயிரம் மூலக்கூறுகள் முதலில் சல்லடை செய்யப்படும். பின்னர் அவை மேலும் சலிக்கப்பட்டு சில ஆயிரங்கள் பட்டியலிடப்படும். இந்த சல்லடை என்பது பல ஆய்வுகளுக்குப் பின்னர் கிடைத்த சில அனுபவங்கள். உதாரணமாக ஒரு மூலக்கூறு மிக எளிதில் உயிரியல் திரவங்களில் வேதிவினை புரிந்து வேறு மூலக்கூறாக மாறிவிடலாம்.அவ்வாறு மாறுகையில் அதன் மருத்துவ சக்தி போய்விடக்கூடும். இந்த செய்தி கிடைக்கையில் அம்மூலக்கூறு கைவிடப்படும். மற்றொன்று வினை புரியாது நின்றாலும், தயாரிக்கப் படாத பாடு பட வேண்டிவரும். எனவே கைவிடப்படலாம். இவ்வாறு சில மூலக்கூறுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட எத்தனை காலம் ஆகலாம்? மூச்சை அடக்கிக்கொள்ளுங்கள்.
சுமார் 8 வருடம் முதல் 15 வருடம் வரை ..
இத்தனை வருடங்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறு சல்லடையில் சலித்தெடுத்த மூலக்கூறுகளை நமது திசுக்கள் போலவே செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அரைசவ்வூடு பரவும் சவ்வுகளில் ( semi permebale membrane) ஒரு பகுதியில் வைத்து, மறுபுறம் சவ்வூடு பரவிவரும் அம்மூலக்கூறைக் கணிப்பார்கள். உயிரற்ற நிலையில் இவ்வாய்வுகள் மேற்கொள்வதை invitro studies என்பர். இந்த செயற்கையாÉ சவ்வுகள் மட்டுமல்ல, நமது உடலிலிலுள்ள திசுக்களின் படுகை caco-2 cells , எலிகளின் வயிற்றிலுள்ள திசுக்களின் படுகை (வட்டமாக வெட்டப்பட்டு) முதலானவும் உபயோகிக்கப்படுகிறது. இன்னும், மயக்கமூட்டப்பட்ட எலிகளின் வயிற்றைத் திறந்து அதில் இருக்கும் குடல் திசுக்களில் செலுத்தப்பட்டு ஒரே முறையோ அல்லது திரும்பத்திரும்பச் செலுத்தியோ அம்மூலக்கூற்றின் பரவலைக் கணிக்கலாம். இது அதிக நேரம்/பணம் செலவாகுமெனினும் மனிதனில் பயன்படுத்துவதைப்போலவே ஆய்வுமுடிவுகள் கிட்டத்தட்ட வருவதால் இன்னும் சில இடங்களில் பிரபலமாக இருக்கிறது.
இம்மூலக்கூறுகளின் நான்குவித பண்புகளை ஆய்வின் மூலம் அறிகின்றனர்.
1.இம்மூலக்கூறு நமது உடலில் சென்றதும், நம்து திசுக்களுக்குள் எத்தனை தூரம் பரவ முடியும் என்பதை கணிக்கத்தான் இச்சோதனை. இது ஒரு மருந்தின் "உறிஞ்சப்படும் பண்பு" ( Absorption) குறித்து அறிவது.
2.இவ்வாறு உறிஞ்சப்பட்ட மூலக்கூறு பரவும் பண்பு கொண்டுள்ளதா ( Distribution) என்பதை அறிவது.
3.இந்த மூலக்கூறுகள் உயிர்த்திரவங்களுடன் ( ஈரல் சுரக்கும் பித்தநீர் போல) வினைசெய்து விளைக்கும் பண்புகள் ( metabolism) எந்த அளவில் உருவாகின்றன என்பதைக் கண்டறிவது.
4.இம்மூலக்கூறுகள் எவ்வாறு உடலைவிட்டு வெளியேறுகிறது (Excretion) என்னும் ஆய்வு

ADME என்று இச்சோதனைகளைச் சொல்வர். இவை மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் மட்டுமல்ல , பின்னாளில் அம்மருந்து மூலக்கூறு எவ்வாறு உயிருள்ள உடலில் வேலைசெய்கிறது என்பதைக் காண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை invivo studies என்பர். உயிராய்வுகள் (பயோ அனலிசிஸ் -bio analysis) invivo studies வகையைச் சேர்ந்தவை

Sunday, March 05, 2006

மூலக்கூறிலிருந்து மருந்து வரை II

மூலக்கூறிலிருந்து மருந்து வரை
சந்தையில் கிடைக்கும் மருந்துகளில் இரு முக்கியமான மூலக்கூறுகள் இருக்கும்.
1. மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகளை API ( Active Pharmaceutical Ingredients) எனவும்,
2.«வை வேதியல் வினை புரியாமல் கலந்து நின்று, மனிதன் உட்கொள்ளூம் வகையில் மருந்தாக மாற, அவற்றுடன் கலக்கப்படும் மூலக்கூறுகளை excipients எனவும் அழைக்கிறோம்.

ஒரு மருந்து பாட்டிலையோ, அல்லது மாத்திரை பொதிந்து இருக்கும் ஷீட்டினையோ உற்றுப்பார்த்தால் அம்மருந்தின் கலவைபற்றிய பட்டியல் தெரியும். அதில் API ,excipients பட்டியலிடப்பட்டிருக்கும். அதன் கலவை விகிதமும் இடப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் biomass , நோயின் தீவிரம் அனுசரித்து, எவ்வளவு மருந்து உட்கொள்ளவேண்டுமென்பதை மருத்துவர் தீர்மானிப்பர்.
இவற்றை சந்தைக்கு அனுமதிக்க பல அரசாங்கக் குழுக்கள் இருக்கின்றன. eg.USFDA, இவையெல்லாம் தனது விதிகளைமட்டுமே பயன்படுத்துவதால், பன்னாட்டு சந்தையில் வரும் குழப்பங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பன்னாட்டு ICH என அமைக்கப்பட்டது. இதன் விதிமுறைகள் ICH guidelines என வழங்கப்படுகின்றன. எனவே ஒரு அமெரிக்க மருந்துக்கம்பெனி அமெரிக்காவில் மருந்தை விற்பதற்கு USFDA அனுமதியும், பிறநாட்டில் விற்பதற்கு அந்நாட்டு விதிமுறைகள் கொண்ட குழுமத்தின் அனுமதியும் பெற்றிறுக்கவேண்டும். ICH guidelines படி செய்யப்படும் மருந்துகள் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட அனுமதி கிட்டும்.

இம்மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
மருத்துவக் கம்பெனிகளில் இருவிதமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
1. ஏற்கெனவே சந்தைக்கு வந்து, நோய்களைத் தீர்க்கும் மருந்துகளின் மூலக்கூறுகள் போலவே வேலைசெய்யும் மூலக்கூறுகள், அல்லது அதே சக்திவாய்ந்த மூலக்கூறுகள் பிற மூலக்கூறுகளுடன் உண்டான புதிய கலவை. இவற்றை generics எனலாம்.
2. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூலக்கூறுகள் , மருந்தாவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கப்பட்டு, வெளிவந்த புது மருந்துகள். இவற்றை NDA ( New Drug Application ) எனலாம்.

எல்லா மருந்துகளும் சந்தைக்கு வருமுன் பல சோதனைக்கட்டங்களைத் தாண்டித்தான் வருகின்றன.
இந்த நிலைகள்
Drug Discovery
Preclinical
Clinical (Trials Phase 1 - IV)
Production and Marketing
என வகைப்படுத்தலாம். இந்த நிலைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

மூலக்கூறிலிருந்து மருந்து வரை

மூலக்கூறிலிருந்து மருந்து வரை
மூன்று மாதங்கள் முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
மருத்துவமனையில் அன்று கூட்டம் அதிகம் இல்லை. காலைத்தூக்கிவைத்துக்கொண்டு எனது ஊன்றுகோலை ஒரு மூலையில் சாய்த்துவைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்தேன். கால் ஒடிந்ததின் பின் இரண்டாவது பரிசோதனைக்காக வரச்சொல்லியிருந்த தேதி இன்றுதானே எனச் சரிபார்த்துக்கொண்டேன். மருத்துவர் வ்ர இன்னும் நேரம் பத்து நிமிடங்கள் பாக்கியிருந்தன.
அருகே இருந்தவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரோடு வந்திருந்த பெண்மணி , தள்ளு நாற்காலியிலிருந்து பெஞ்சில் மாறுவதற்கு கைத்தாங்கலாக பணிப்பெண் இல்லாது திணறினார். கொஞ்சம் இடம் கொடுத்து ஒதுங்கி, தள்ளுநாற்காலியை முன்னே செல்லாவண்ணம் பிடித்துக்கொண்டேன்.
நன்றி எனப் புன்னகைத்த பெண்மணி, " உங்களூக்கு என்ன?" என்றார். ரயிலிலிருந்து விழுந்த கதையைச் சொன்னேன். "நான் பாத்ரூமில் விழுந்துவிட்டேன். லோ பி.பி" என்றார்.
"என்ன மருந்து கொடுக்கிறான்கள்? கால்வலி குறையறதுக்கு கொடுத்த மாத்திரையிலே வயித்துவலி வந்துடுச்சு. ஒரு வாரமா ஒண்ணுமே சாப்பிட முடியலை. வெறும் தயிர்சாதம்தான். மாட்டுப்பொண் வேலைக்குப் போறா. அவசரத்துல எனக்குன்னும், அவளுக்குன்ன்னும் தனித்தனியா சாதம் பண்ணமுடியுமா? " எனப் புலம்பினார்.
"இவளுக்குக் கொடுத்த மாத்திரைல வந்த பக்க விளைவுதான் இந்த வயித்துவலி. அதுக்குமுன்னாடி வயித்துவலியெல்லாம் வந்ததே இல்லை இவளுக்கு" கோபத்தில் அவரது கணவரின் வார்த்தைகள் தடுமாறின.
"டாக்டர் கொடுத்த மாத்திரை இதுவரை நான் கேட்டதேயில்லை. கடைல, இது புதுசு சார்-ங்கிறான். இவங்க சோதனை பண்ண இவள்தான் கிடைச்சாளா?"
"ஒரு மாத்திரை என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என சோதனைகள் செய்யப்பட்டபின்னரே சந்தைக்கு வருகிறது. எதுக்கும் டாக்டர்கிட்ட சொல்லுங்க" என்றேன்.
அவர் சமாதானமானதாய்த் தெரியலை." மாத்திரை எப்படிப் பண்ணறாங்கன்னு நமக்கு என்ன தெரியும்? இவள் மாதிரி எத்தனை பேர் மேல சோதனை பண்ணறாங்களோ? என்ன எழவுன்னு சொல்லித்தொலைக்கலாம்ல?" என்று முணுமுணுத்தார்.
அவரது கேள்வி புதியதில்லை.
நம்மில் பலருக்கும் வரும் கேள்விதான் இது. எப்படி ஒரு கெமிக்கல் ஒரு மருந்தாகிறது? எப்படி அதன் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் அனுமானிக்கிறார்கள்? என்னமோ எலி,குரங்கு,குதிரை,மனிதன் என சோதிப்பார்களாமே? அதற்குப்பிறகும் எப்படி சில மருந்துகள் விஷமாகின்றன? போனவாரம் பார்வை மங்கலாய் இருந்ததே - நாம் தலைவலிக்கு எடுத்துக்கொள்ளூம் மருந்துதான் காரணமோ? எனப் பலப்பல சந்தேகங்கள்..

அலோபதி மருந்துகள் தயாரிக்கப்படும் நிலைகள் பற்றி கொஞ்சம் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.
ஒரு disclaimer : எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இது முழுதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கட்டுரையில்லை.
தெரிந்தவர்கள் திருத்தவும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். நானும் புரிந்துகொள்கிறேன்.

Saturday, March 04, 2006

மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)

மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)
சாமானிய மும்பை எப்படி சேரிகளை சமாளிக்கிறது? சில தன்னார்வலக் குழுக்கள் இம்மக்கள் வாழ்வு முன்னேற உழைக்கிறார்கள். சில அரசியல்வாதத் தூண்டுதல்களாலும், வீணர்களாலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. நாராயணன் சொன்னமாதிரி கோத்ரெஜ் ஜல்லியடிக்கவில்லை. கோத்ரெஜ் குடும்பத்தினரால்தான் இன்னும் மும்பையில் மாங்குரோவ் காடுகள் விக்ரோலி பகுதியில் உருப்படியாக இருக்கின்றன. இல்லாவிட்டால் சேரிகள் வந்து,பின்னர் அவை தகர்க்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். கோத்ரெஜ் குடும்பம் மும்பைக்குச் செய்திருக்கும் பங்கு மகத்தானது. ( கோத்ரெஜ் இதற்காக எனக்கு something தந்துவிடவில்லை!). சேரிமக்களுக்காகவும் அக்குடும்பம் பல சேவைகளைச் செய்திருக்கிறது.

சேரிகள் வெறுக்கப்படுகின்றன. சில இடங்களில் சேரிமக்களையும் வெறுக்கிறார்கள். காரணம் இருக்கிறது.கழிப்பிடங்களை பிடிவாதமாக உபயோகிக்காமல் சாலைகளின் ஓரங்களிலும், தண்டவாளங்களின் ஓரங்களிலும் விக்கட் கீப்பர் போல அமர்ந்திருப்பது மிகவும் வெறுப்பேற்றியிருக்கிறது. இதனால்தான், ரயில்வே பயணிகள் /சேரிமக்கள் கலவரங்கள் ஏற்பட்டு, சேரிமக்கள் ரயில்கள் மேல் கல்லெறிந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கண் போயிற்று. இன்னும் இது தொடர்கிறது ( போரிவல்லி -விரார் ரயில்களில் பயணித்த அனுபவம்).

ஒரு சேரி உருவானபின் எப்படி தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது? இரு முறைகள் . ஒன்று மதம். ஒரு சிறு கோவில்/புத்த விகாரம்/மசூதி என அவசரமாக ஒன்று முளைத்துவிடும். அதன் திறப்பு விழா/ வருட விழா என ஒன்றிற்கு ஒரு அரசியல்வாதி வந்துவிடுவார். இரண்டாவது ஒரு சங்கம் உருவாகும் - அது எதாவது ஜாதி/மத அடிப்படையில் அமைந்திருக்கும். இதன் ஒரே பங்கு " நாங்கள் ஒரே ஓட்டு வங்கி" என்பதை பறை சாற்றுவதுதான். மெதுவாக சாலைகள் ஆக்ரமிக்கப் படும். போலீஸ்காரர்களுக்கு மாமூல் கொடுத்து அடக்கிவிடுவர்.

பின்னர் எதாவது ஒருநாள் மழை வெள்ளம், உலகவங்கி கட்டளைகள் என ஒன்று வந்து சேரிகள் பிரிக்கப்படும். அன்று இருக்கிறது போராட்டம்.. இப்படித்தான் போரிவல்லி-தஹிசர் இடையே தண்டவாளங்களின் அருகே அமைந்திருக்கும் சேரி அப்புறப்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். நாலு டிராக் தண்டவாளங்கள் அமைக்க இது தேவையானது. உலகமயமாக்கலின் அழுத்தம் அல்ல. தினசரி வாழ்வின் அழுத்தம். போரிவல்லி -விரார் வண்டியில் போய்ப்பாருங்கள் தெரியும்.. இது எத்தனை அவசியம் என. எத்தனை அப்பாவி மக்கள் ரயில் நெரிசலில் தினமும் விழுந்து சாகிறார்கள் என்பது அப்பட்டமான புள்ளிவிவரம்.

சேரிகள் தேவையில்லை. சேரிமக்களுக்கு வாழ்வு தேவை. மும்பை இன்னும் விரிவாக முடியாது- டெல்லி/சென்னை போ. மூன்று புறமும் கடல். எனவே செங்குத்தான வளர்ச்சி என்பது மும்பயின் விதி. இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பது ஒரு சவால். இதில் சேரிகள் 60% என்றால் எப்படி இதனை ஒரு காஸ்மோபோலிடன் நகராக வளர்க்கமுடியும்? உலகமயமாக்கலின் அழுத்தம் இல்லை. வளர்ச்சியென்பது மும்பைக்கு வேண்டுமென்றால், சீர்த்திருத்தம் அவசியம்.
பண்டைய மும்பையில் சால் (chawl) என்னும் அமைப்பு இருந்தது. நம்ம ஊர்களில் store என குடியமப்புகள் இருக்குமே அதுபோல. பெரும்பாலும் நூலாலைகளில் பணியாற்றியவர்களின் இருப்பிடமாக இருந்தது. அவை எளிமையாக ,சுத்தமாக இருக்கும். " நகரில் ஏழைகள் சுத்தமாக வாழமுடியாது" எனச் சேரிகளுக்கு பரிந்துவருபவர்கள் இச் சால்களைப் போய்ப் பார்க்கவேண்டும்.
70களில் வந்த migrant population இந்த வகையைச் சேர்ந்தவர்களில்லை. உ.பி, பிஹார் , பெங்கால் ,தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த சால் சமூகத்தில் வாழவில்லை. சேரிகள் இங்குதான் உருவாகின. வளர்த்த அரசியல்கட்சிகள் இவர்களைப் பற்றி கவலைப்படவும் இல்லை.
பாந்திரா ரயில்வே நிலையம் அமைக்க முடிவெடுத்தபோது, அங்கிருக்கும் சேரியை அப்புறப்படுத்தக்கூடாது என சுனில்தத் எதிர்த்தார். விளைவு ரயில்நிலையம் 10வருடங்களின் பின் மிகுந்த பொருட்செலவுடன் ஏற்பட்டது. அதுவும் ஒரு அணுகுமுறை வசதியும் இன்றி.
மும்பை விமானநிலையத்தில் தரை இறங்குமுன் ஒருமுறை நோக்குங்கள். "எவனாவது இந்த ஊரில் வாழ்வானா ?" எனத் தோன்றும். மீண்டும் சொல்கிறேன்... உலகமயமாக்கல் மாயை இல்லை இது. சுகாதாரமாக வாழ நினைப்பதே தவறா? எத்தனை முறை முயன்றும் பிடிவாதமாக அசுத்தப்படுத்துவதும், அதனை அரசியல்கட்சிகள் "ஏழை வயிற்றிலடிக்க்காதே" எனப் போலிக்கூச்சல் போட்டு, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதும் எத்தனை வருடங்களுக்கு செல்லும்?

மணியன் எழுதியிருந்தார்.. சேரிமக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தால் அதனை விற்றுவிட்டு மீண்டும் வேறு இடத்தில் சேரிகட்டச் செல்கிறார்கள் என.. விற்பதற்க்கு சட்டம் , அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது? அனைவருக்கும் இதில் ஒரு கட் செல்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
மும்பை ஒரு நகரமாக ,சுத்தமாக வேண்டுமானால், இச்சேரிமக்கள் வாழ்க்கைத்தரம் வளரவேண்டும்.. அரசியல் வணிக இடையூறின்றி.. இம்மக்கள் முன்னேறினால் சேரிகள் மறையும். மறையவேண்டும். சேரிகள் ஒரு நாட்டின் விகார அரசியலின், சமச்சீரில்லாத வளர்ச்சியின் வெளிப்பாடு. இவை தொலையவேண்டும்.

Friday, March 03, 2006

மும்பை சேரிகள் -II

மும்பை சேரிகள் -II
ஷெர்வின் ஸை - தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவத்துறை மென்பொருள் வல்லுநர். அவரது பெற்றோர் பிலிப்பைன்ஸிலிருந்து கனடாவில் குடியேறிய சீனர்கள். சீனா குறித்தான ஆவலில் ,செர்வின் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் சில தகவல்கள் கிடைத்தன.

பனிக்காற்று பேயாக வெளியில் அடித்துக்கொண்டிருக்க, அவரது அறையில் சூடாக காபி குடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.
" சீனாவைக் குறித்து அமெரிக்கா பயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி, மிலிடரி சக்தி மட்டுமல்ல, மற்றொரு விசயமும் இருக்கிறது" என்றார் செர்வின் காபியை உறிஞ்சியபடியே.
"சீனா, தனது ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை டாலர் பாண்ட் (Bonds) களில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. மற்றொரு தொகையை தனது உள்நாட்டு வளர்ச்சிக்கு செலவிடுகிறது (infrastructure). சிறிது தொகையே , வேலைசெய்யும் மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. குறைந்த வருமானத்தை பல ஆண்டுகளாகத் தந்துகொண்டிருப்பதாலும், பொருட்களின் விலையைக் குறைத்தே வைத்திருப்பதாலும், தனது நாணயத்தினை இன்னும் குறைவான மதிப்பீட்டில் வைத்திருப்பதாலும், சீனர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடிகிறது. எனவே, பெரும்பாலான சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்கள் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இந்த competitive advantage பலவருடங்களுக்கு நீடிக்கும்.
திடீரென, சீனா US bondகளை சந்தையில் விற்கிறது என வைத்துக்கொள்வோம். டாலர் தடாலென வீழும். அமெரிக்க வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். short term தாக்கங்கள் மிக அதிகமாக இருப்பதோடு, உலகளவில் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கும். எனவே நிக்கி, சிங்கப்பூர் பங்குச்சந்தை, ஹான்செங்,NYSE, LSE, NASDAQ என பல பங்குச்சந்தைகளின் சிம்ம சொப்பனம்.. இந்தக் காட்சி." என்றார்.
" எந்த அளவில் இது சாத்தியம்?" என்றேன்.
" ஒரு அணுகுண்டு தாக்குதலுக்கு சமம் இது. மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஆனால் நடக்குமா என்றால் சந்தேகம்தான்."
" பின் ஏன் பயப்படவேண்டும்? சீனாவும்தான் இதில் அடிபடும்" என்றேன் கேணத்தனமாய்.
" சுதாகர். மரணத்தைவிட மரணபயம் கொடியது" என்றார் செர்வின் சிரித்தபடி.

கொஞ்சம் புரிந்தது. ஏழ்மை என்பது வளர்ச்சிக்கு மூலதனம். அது இருக்கும்வரை competitive advantage இருக்கும். எவனிடம் வியாபார பலம் இருக்கிறதோ அவன் உலகாள்வான். இது கம்யூனிசம் தழைக்கும் சீனாவானாலும், தன்னோக்கு அரசியல் தழைக்கும் சனநாயக இந்தியாவானாலும் ஒன்றுதான். ஏழை ஏழையாகவே இருக்கும்வரை, அவன் அதிகம் கேட்காமல், அடிப்படைத் தேவைகள் தீர்வதில் சந்தோஷம் அடைவதில், எனது B.M.W கார் செல்லமுடியும். அவன் கேட்கத் தொடங்குகையில், போட்டிக்கு ஆட்கள் வந்துவிட்டால், அவனது தேவைகளைக் குறைத்துக்கொள்வான். எனவே, நகரமயமாக்குதலும், எளிய மக்கள் அங்கு புலம்பெயர்தலும் தலைவலியாக இருந்தாலும் வியாபார நோக்கில் அது தேவைதான்.
சீனா, உள்நாட்டுக் கட்டுமாணப்பணிகள் செய்து, சேரிகளை ஒழிக்கிறது - ஷாங்காய், பீஜிங், குவாங்ஷோ போன்ற சில நகரங்களில் மட்டுமே. வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமானால் வறுமை தெரியக்கூடாது என்ற "நல்லெண்ணத்தில்".

நமது அரசியல்வாதிகள் இன்னும் மோசம். எவன் எக்கேடு கெட்டால் என்ன? சேரிகள் விமானநிலையமருகே இருந்தாலென்ன இல்லாட்டி போனாலென்ன என் வேலை நடக்கிறது - என்னும் மெத்தெனப் போக்கு.
இரண்டிலும் சேரி வாழ் மக்கள் அதே நிலைதான். சேரிகள் மாறியிருக்கின்றன சீனாவில் சில இடங்களில். இங்கு அதுவும் இல்லை.

.ஏன் மும்பையில் இத்தனை சேரிகள், ஏழ்மை என இப்போது கொஞ்சம் புரிகிறது எனக்கும்.

மும்பை சேரிகள்

மும்பை சேரிகள்
___________________

உருப்படாதது நாராயணன் மும்பை சேரிகள் குறித்து எழுதியிருந்தார்.மணியனின் பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. சேரியில் வாழ்ந்திராவிட்டாலும், எனது மும்பை வாழ்வின் ஆரம்பக்காலங்களில் சேரிகளின் மிக மிக அருகில் வாழ்ந்ததாலும், அங்கு வாழும் மக்களின் சிலரின் நட்பு கிடைத்ததாலும் இச்சேரி வாழ்வு குறித்து ஓரளவு எனக்குத் தெரியும். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் பொதுவாகச் சேரிகள் எனவே இக்கட்டுரையில் அழைத்திருக்கிறேன். முகமூடியின் பதிவுகளில் அவர் சுட்டியிருக்கும் பாதுகாப்பு நோக்கம்தான் இதற்கும்!
சேரிவாழ்வு குறித்து எழுதுமுன் சில விளக்கங்கள் அவசியம். மும்பை slum என்பதை சேரியென நான் இங்கு விளித்திருக்கிறேன். மும்பையில் சேரி என்பது குடில்/குடிசை என்றல்ல. வறுமை என்பதற்கும் எளிமைக்கும் உள்ள வித்தியாசம். சேரியின் வீடுகள் தகரடப்பாக்கள், திருடிக்கொண்டுவந்த செங்கல்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு கன்னாபின்னாவென ஏதோ அமைக்கப்பட்ட ஒரு குடியமைப்பு. இவை ஒரு சீராகவும் அமைந்திருக்காது. ஏதோ ஒரிடத்தில் இருக்கவேண்டுமென்பதால் அமைக்கப்பட்டவை. ஒரு வீட்டின் கழிவுநீர் மற்றவீட்டினுள்வழி புகுந்து செல்வது சாதாரணம். "எப்பவேணுமானாலும் கலைக்கச் சொல்லலாம்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான சேரிகள் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதிக்கப்படாத இடங்களில் அமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் ஒரு மதம் /மொழி/இனம் சார்ந்தவர்கள் கூட்டாக அமைத்தவை. இவற்றிற்கும் கிராமங்களில் இருக்கும் குடிசைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் சேரிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் வாழும் இடமல்ல. இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். பெரும்பாலான சேரிக்குடியிருப்புகள் அங்கு வாழ்பவர்களுக்குச் சொந்தமில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த லோக்கல் தாதாக்களின் கையில் இவை இருக்கின்றன. பலரும் அங்கு வாடகை கொடுத்து விலங்குகளுக்கும் கீழான நிலையில் கொத்தடிமைகள் போல வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம். இக்குடியிருப்புகளில் வாடகை முன்னமே தரவேண்டும் ( ஒரு வருடத்திற்கு இவ்வளவு என விவரம் இருக்கின்றது). சில இடங்களில் மாத வாடகை. தராவிட்டால் தாதாக்களின் தொல்லை.
பெரும்பாலான சேரிவாசிகள் புலம் பெயர்ந்தவர்கள். உ.பி, பீஹார், பங்களாதேஷ், தமிழ்நாடு இவைதான் சேரிகளின் அடையாளங்கள். இன அடிப்படையில் சில இடங்களில் சேரிகள் வளர்ந்தன. 1993 கலவரங்களுக்குப் பின் இவை கொஞ்சம் நீர்த்துப்போனாலும், மும்ரா, கோரேகாவ் , கோவண்டி போன்ற இடங்கள் இன்னும் இன/மத அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கின்றன.
இங்கு காலம்காலமாக வாழும் மக்கள் சேரிகளிலிருந்து வளர்ச்சி பெறமுடியாது. மிக மிகக் கடினம். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்? இந்த விகாரமான தன்னோக்கு அரசியல் மட்டுமே மும்பையின் அவல நிலைக்கும், இச்சேரிகளின் வளர்ச்சிக்கும் காரணம். இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் தங்கள் கூட்டணியரசு பலம்பெற்றிருக்கையில், மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் முன்பு வாழ்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு, சேரிகளை அவர்கள் அடியாட்கள் அமைக்க உதவினர். குடிநீர், மின்சார இணைப்புகள் அக்குடியிருப்ப்புகளுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டன. பின்னர் ஓவ்வொரு கட்சியின் ஆட்சிக்காலத்திலும், " இந்தக் குறிப்பிட்ட வருடத்திற்கு முன் வந்தவர்கள் சேரிகளில் இருக்க அனுமதிக்கப்படுவர்" என cut off வருடங்கள் வரையறுக்கப்பட்டன. 1970- 1990,95,2000 என வருடங்களின் வரையறுப்பு எல்லைகள் நீண்டுகொண்டே போயின. அனைத்தும் வோட்டுகளுக்காகவும், அடிமட்ட விலையில் அக்கட்சிகளுக்கு இம்மக்கள் வேலை செய்வதற்காகவும் மட்டும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொழிற்பேட்டைகளும், அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாக்களுமே இம்மக்களுக்கு வேலைக்கான வழி. மீறமுடியாது... வேலைக்கான போட்டியும் அப்படி.

பொருளாதாரத்தில் இச்சேரிகள் கட்சிகளுக்கும் வணிகர்களுக்கும் எப்படி உதவுகின்றன எனப்பார்ப்போம்.