Tuesday, March 14, 2006

பண்டிகைகளும் பின்விளைவுகளும்.

புகை மண்டி மூச்சுத்திணறிக்கிடக்கிறது மும்பை.
இன்று ஹோலி. நிறங்களின் விழா. இப்போதெல்லாம் ஏண்டா இதெல்லாம் வருது ? எனத் தோன்றிவிடுகிறது. நேற்று இரவே பண்டிகை தொடங்கிவிட்டது. நமது போகிப்பண்டிகை போல , வீட்டில் இருக்கும் வேண்டாத பொருட்களை குவியலாக இட்டு எரித்துக் குலவையிடுவார்கள். இப்போதெல்லாம் என்ன எரிக்கப்படுகிறது தெரியுமோ?
பிளாஸ்டிக் பைகள், உடைந்த வாளிகள், டயர், வீடியோ கேசட்டுகள், பிய்ந்த செருப்புகள்... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அனைத்து நச்சுப் பொருட்களும் வாயுமண்டலத்தில்.. கரிகரியாகப் புகை. எரிச்சலூட்டி, மூச்சுத் திணறி ஏற்கெனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் மும்பை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவர்களும், தன்னார்வலக்குழுக்களும் எத்தனைதான் கத்தினாலும் இக்கூச்சலின் முன் எடுபடாமல் அழுந்திப்போயினர்.

முன்பெல்லாம் இப்பண்டிகைகளுக்கான நிறக்கலவையை வீட்டிலேயே செய்வர். குலால் (Gulal) என்பது மாவுக்கலவையில் செய்யப்பட்டது. இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, கடுமையாக அரிக்கும் ரசாயனக்கலவைகள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்போது சந்தைகளில் விற்கப்படும் நிறக்கலவையில் இருக்கும் நச்சுப்பொருட்களைக் குறித்து எழுதியிருந்தது. (உருப்படியாக தற்காலத்தில் அதில் வந்த ஒரே செய்திக்குறிப்பு இதுதான்).

காலத்தின் தேவைக்கேற்ப குப்பைகளும் மாறிவிட்டன. அவற்றை பழையபடியே எரிப்பது என்னும் சம்ப்ரதாயம் என்பதை முட்டாள்தனமாகப் புரிந்துகொண்டு பின்பற்றி வரும் கேணத்தனம். வேறுவகையில் இவற்றை அப்புறப்படுத்திக் கொண்டாடுங்களேன். சொல்லப்போனால் வேறுவகையாகப் புரிந்துகொண்டுவிடும் அபாயம்..

கிறிஸ்துமஸ் மரம் வேண்டி பல மரக்கிளைகள் முறிக்கப்படுவதைப்போல , இந்த ஹோலியின் முந்திய நாள் எரிப்பதற்கும் சிலர் சாலையோரம் வளர்ந்திருந்த வேப்ப மரக் கிளைகளை ஒடித்துச் செல்வது அதிர்ச்சிக்குரியது. ஏற்கெனவே பச்சையென்பது மும்பையில் குறைவு. இது இன்னும் குறைக்கிறது.

இதுபோல பக்ரீத் பண்டிகையின் போது, சில இடங்களில் கழுத்தறுபட்ட ஆடுகள் அப்படியே சாலையோரம் விடப்பட்டிருந்தன. இரத்தம் வழிந்தபடி கிடக்கும் அவற்றைப் பின் உண்பவர்களிடம் சுகாதாரக்கேடு குறித்து யார் சொல்வது?
எதைச் சொல்லப்போனாலும் நமது ஜாதகம் பார்க்கப்படும். வேற்று மதக்காரன் யார்டா எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்? என்னும் கேள்விகள் எழும். எழுந்திருக்கின்றன.

மதங்கள் உருவாக்கிய பண்டிகைகளின் அர்த்தம் விபரீதமாகப் போவதைத் தடுக்க, தனிமனிதன் மட்டுமல்ல மதங்களின் தலைமைப் பீடங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.
செய்வார்களா?

5 comments:

  1. ஆமாங்க சுதாகர். பண்டிகைகாலம்ன்ற மகிழ்ச்சியே போயிருதுங்க.
    நம்ம ஜனங்க எப்பங்க இதையெல்லாம் புரிஞ்சுக்கப்போறாங்க?(-:

    ReplyDelete
  2. நமது போகிப்பண்டிகையின் போதும் இதே நிலைமை தானே தமிழ்நாட்டில்? டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்களுக்கு அபராதமும் தண்டனை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது போல, மும்பையில் அறிவிக்கவில்லையா?

    ReplyDelete
  3. நன்றி துளசியக்கா,
    "திருடனாப் பாத்து திருந்தறவரைக்கும் திருட்டைத் தடுக்க முடியாது" என்று எம்.ஜி.யார் பாடல் ஒன்று வரும். அதுதான் நினைவுக்கு வருகிறது!
    நன்றி துபாய்வாசி,
    மும்பையிலும் மாசுக்கட்டுப்பாட்டு சட்டமிருக்கிறது. அமல்படுத்துவதில்தான் சிக்கல். எவ்வளவு இடத்திற்குத்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்று கண்காணிக்க முடியும்? படித்தவன்/ படிக்காதவன், பணக்காரன்/ஏழையெனப் பாகுபாடே இல்லாமல் இக்கூத்து நடத்துகின்றனர். தட்டிக்கேட்க முடியாத அளவிற்குப் பின்னணிபலம் ( அரசியல்/மதம்).

    ReplyDelete
  4. It is very difficult to stop this nonsense.In this manner people used to throw POOAHANIKAI in Amavasai for Dhrushti kazhikka.The two and four wheelers find it difficult to go in the road.But it is the duty of the Government to punish the people by introducing strict law against these things.And it is important for the Govt. to punish any people of any religion.But who is going to knot the bell into the cat's neck. Nobody will.

    ReplyDelete
  5. Anonymous7:19 AM

    Dear Sudhakar, what you had expressed is 100 o/o true. In Tamil, Pandikai means in olden days 'things to exchange' viz, farmers will exchange paddy for their cultivation utility equipments; like washermen will get a part of paddy cultivated for his dhobby works done for the agri-culturist family. Now every labour has been valued by currency. In northern sector of our country wheat is harvested during Sept,& Oct, farmers will give wheat for annual clothes and so for annual provisions for houses. Now this pandikai had infiltrated all over India. People in all walks of life are celebrating 'Diwali' even by getting loan. Is it necessary? Now-a-days youths enjoy and celebrate 'New Year'[1 Jan] and people also used to go to temple to celebrate New Year by worshipping God! Is it a necessary one? We are importing poisonous cultures which are left away by the western country people like discotheque,dating. Vazhga Valamudan-thangam.

    ReplyDelete