Saturday, March 04, 2006

மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)

மும்பை சேரிகள் (இறுதிப் பாகம்)
சாமானிய மும்பை எப்படி சேரிகளை சமாளிக்கிறது? சில தன்னார்வலக் குழுக்கள் இம்மக்கள் வாழ்வு முன்னேற உழைக்கிறார்கள். சில அரசியல்வாதத் தூண்டுதல்களாலும், வீணர்களாலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. நாராயணன் சொன்னமாதிரி கோத்ரெஜ் ஜல்லியடிக்கவில்லை. கோத்ரெஜ் குடும்பத்தினரால்தான் இன்னும் மும்பையில் மாங்குரோவ் காடுகள் விக்ரோலி பகுதியில் உருப்படியாக இருக்கின்றன. இல்லாவிட்டால் சேரிகள் வந்து,பின்னர் அவை தகர்க்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். கோத்ரெஜ் குடும்பம் மும்பைக்குச் செய்திருக்கும் பங்கு மகத்தானது. ( கோத்ரெஜ் இதற்காக எனக்கு something தந்துவிடவில்லை!). சேரிமக்களுக்காகவும் அக்குடும்பம் பல சேவைகளைச் செய்திருக்கிறது.

சேரிகள் வெறுக்கப்படுகின்றன. சில இடங்களில் சேரிமக்களையும் வெறுக்கிறார்கள். காரணம் இருக்கிறது.கழிப்பிடங்களை பிடிவாதமாக உபயோகிக்காமல் சாலைகளின் ஓரங்களிலும், தண்டவாளங்களின் ஓரங்களிலும் விக்கட் கீப்பர் போல அமர்ந்திருப்பது மிகவும் வெறுப்பேற்றியிருக்கிறது. இதனால்தான், ரயில்வே பயணிகள் /சேரிமக்கள் கலவரங்கள் ஏற்பட்டு, சேரிமக்கள் ரயில்கள் மேல் கல்லெறிந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கண் போயிற்று. இன்னும் இது தொடர்கிறது ( போரிவல்லி -விரார் ரயில்களில் பயணித்த அனுபவம்).

ஒரு சேரி உருவானபின் எப்படி தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது? இரு முறைகள் . ஒன்று மதம். ஒரு சிறு கோவில்/புத்த விகாரம்/மசூதி என அவசரமாக ஒன்று முளைத்துவிடும். அதன் திறப்பு விழா/ வருட விழா என ஒன்றிற்கு ஒரு அரசியல்வாதி வந்துவிடுவார். இரண்டாவது ஒரு சங்கம் உருவாகும் - அது எதாவது ஜாதி/மத அடிப்படையில் அமைந்திருக்கும். இதன் ஒரே பங்கு " நாங்கள் ஒரே ஓட்டு வங்கி" என்பதை பறை சாற்றுவதுதான். மெதுவாக சாலைகள் ஆக்ரமிக்கப் படும். போலீஸ்காரர்களுக்கு மாமூல் கொடுத்து அடக்கிவிடுவர்.

பின்னர் எதாவது ஒருநாள் மழை வெள்ளம், உலகவங்கி கட்டளைகள் என ஒன்று வந்து சேரிகள் பிரிக்கப்படும். அன்று இருக்கிறது போராட்டம்.. இப்படித்தான் போரிவல்லி-தஹிசர் இடையே தண்டவாளங்களின் அருகே அமைந்திருக்கும் சேரி அப்புறப்படுத்தப் படாதபாடு படுகிறார்கள். நாலு டிராக் தண்டவாளங்கள் அமைக்க இது தேவையானது. உலகமயமாக்கலின் அழுத்தம் அல்ல. தினசரி வாழ்வின் அழுத்தம். போரிவல்லி -விரார் வண்டியில் போய்ப்பாருங்கள் தெரியும்.. இது எத்தனை அவசியம் என. எத்தனை அப்பாவி மக்கள் ரயில் நெரிசலில் தினமும் விழுந்து சாகிறார்கள் என்பது அப்பட்டமான புள்ளிவிவரம்.

சேரிகள் தேவையில்லை. சேரிமக்களுக்கு வாழ்வு தேவை. மும்பை இன்னும் விரிவாக முடியாது- டெல்லி/சென்னை போ. மூன்று புறமும் கடல். எனவே செங்குத்தான வளர்ச்சி என்பது மும்பயின் விதி. இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பது ஒரு சவால். இதில் சேரிகள் 60% என்றால் எப்படி இதனை ஒரு காஸ்மோபோலிடன் நகராக வளர்க்கமுடியும்? உலகமயமாக்கலின் அழுத்தம் இல்லை. வளர்ச்சியென்பது மும்பைக்கு வேண்டுமென்றால், சீர்த்திருத்தம் அவசியம்.
பண்டைய மும்பையில் சால் (chawl) என்னும் அமைப்பு இருந்தது. நம்ம ஊர்களில் store என குடியமப்புகள் இருக்குமே அதுபோல. பெரும்பாலும் நூலாலைகளில் பணியாற்றியவர்களின் இருப்பிடமாக இருந்தது. அவை எளிமையாக ,சுத்தமாக இருக்கும். " நகரில் ஏழைகள் சுத்தமாக வாழமுடியாது" எனச் சேரிகளுக்கு பரிந்துவருபவர்கள் இச் சால்களைப் போய்ப் பார்க்கவேண்டும்.
70களில் வந்த migrant population இந்த வகையைச் சேர்ந்தவர்களில்லை. உ.பி, பிஹார் , பெங்கால் ,தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த சால் சமூகத்தில் வாழவில்லை. சேரிகள் இங்குதான் உருவாகின. வளர்த்த அரசியல்கட்சிகள் இவர்களைப் பற்றி கவலைப்படவும் இல்லை.
பாந்திரா ரயில்வே நிலையம் அமைக்க முடிவெடுத்தபோது, அங்கிருக்கும் சேரியை அப்புறப்படுத்தக்கூடாது என சுனில்தத் எதிர்த்தார். விளைவு ரயில்நிலையம் 10வருடங்களின் பின் மிகுந்த பொருட்செலவுடன் ஏற்பட்டது. அதுவும் ஒரு அணுகுமுறை வசதியும் இன்றி.
மும்பை விமானநிலையத்தில் தரை இறங்குமுன் ஒருமுறை நோக்குங்கள். "எவனாவது இந்த ஊரில் வாழ்வானா ?" எனத் தோன்றும். மீண்டும் சொல்கிறேன்... உலகமயமாக்கல் மாயை இல்லை இது. சுகாதாரமாக வாழ நினைப்பதே தவறா? எத்தனை முறை முயன்றும் பிடிவாதமாக அசுத்தப்படுத்துவதும், அதனை அரசியல்கட்சிகள் "ஏழை வயிற்றிலடிக்க்காதே" எனப் போலிக்கூச்சல் போட்டு, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதும் எத்தனை வருடங்களுக்கு செல்லும்?

மணியன் எழுதியிருந்தார்.. சேரிமக்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தால் அதனை விற்றுவிட்டு மீண்டும் வேறு இடத்தில் சேரிகட்டச் செல்கிறார்கள் என.. விற்பதற்க்கு சட்டம் , அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது? அனைவருக்கும் இதில் ஒரு கட் செல்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
மும்பை ஒரு நகரமாக ,சுத்தமாக வேண்டுமானால், இச்சேரிமக்கள் வாழ்க்கைத்தரம் வளரவேண்டும்.. அரசியல் வணிக இடையூறின்றி.. இம்மக்கள் முன்னேறினால் சேரிகள் மறையும். மறையவேண்டும். சேரிகள் ஒரு நாட்டின் விகார அரசியலின், சமச்சீரில்லாத வளர்ச்சியின் வெளிப்பாடு. இவை தொலையவேண்டும்.

2 comments:

 1. கண்டிப்பாக நான் ஆதி கோத்ரேஜின் பங்களிப்பினை மறுக்கவில்லை. அந்த விவாதத்தில் அவர் சொன்னதெயொட்டிதான் ஜல்லியடித்தார் என்கிற வார்த்தையினை உபயோகித்திருந்தேன். கோத்ரேஜ் குடும்பத்தினர் மும்பைக்கு செய்திருப்பதுப் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. விளக்கத்திற்கு நன்றி நாராயணன். நான்தான் தவறாக எண்ணிவிட்டேன் போலும். மன்னிக்கவும்.
  அடுத்த முறை நீங்கள் மும்பை வரும்போது Eastern express highway அருகில் செல்வோம். கோத்ரெஜ்-ன் முயற்சியால் இன்னும் உயிரோடு இருக்கும் மாங்குரோவ் மற்றும் உப்பளப் பகுதிகளைக் காணலாம்.
  அன்புடன்
  க.சுதாகர்.

  ReplyDelete