Friday, March 10, 2006

இவனுக எல்லாம் என்னத்தைப் படிச்சு....

இங்கு கல்லூரிகளில், "கட்டாயக் கல்விச் சுற்றுலா"வென ஒரு வருடாவருடம் ஒரு கூத்து நடக்கும். ஏட்டுச்சுரைக்காய் எப்படி கூட்டிற்கு உதவும் எனப்புரிந்துகொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை மாணவ/மாணவியர் தங்களது கனவுகளை நனவாக்கும் பொன்னான தருணமாக ஆக்கிக்கொள்வார்கள். இந்த வருடம் நடந்ததாக நான் கேட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நடந்தது இதுதான். சில வகுப்புமாணவ/மாணவியர் ஒரு தொழிற்பேட்டைக்கு ஆசிரியர்களுடன் இந்தச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். விடுதியில் , இரவில், ஆசிரியர்கள் கண்காணிப்பாக அறைகளில் சென்று பார்த்தபோது, ஒரு மாணவன் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு படு கவலைக்கிடமாக, நாடி அடங்கி, கண்கள் சொருகிய நிலையில் கிடந்திருக்கிறான். ஆசிரியர்கள் எதாவது சொல்வார்களோ எனப் பயந்து,கூட இருந்த பயல்கள் சத்தமே போடாமல் அவனைக் கிடத்தியிருக்கின்றனர். கண்டு பிடித்து அவனை சுய நினைவுக்குக் கொண்டுவருவதற்குள் படாத பாடு பட்டுப்போனார்களாம்.உயிர் போய்விடும் என அஞ்சும் அளவிற்கு அவனது நிலை இருந்திருக்கிறது. இரவு நேரம் மருத்துவர் எவரும் வர முடியாத அந்த தொலைதூர விடுதியில் அவனை சில ஆசிரியர்கள் கவனித்துக்கொண்டிருக்க, பிற மாணவர்கள் அறைகளில் சோதனை நடத்தியபோது, குடித்துவிட்டு அலங்கோலமாக இப்பயல்கள் கிடந்தகாட்சி... படுகேவலமாக இருந்திருக்கக்கூடும்.

இத்தோடு தொலைந்ததா? விடுதியில் தங்கியிருந்த சிலர் வந்து ,ஆசிரியர்களிடம் சில மாணவ மாணவியர் டிஸ்கொதேயில் "ஆடிக்கொண்டிருப்பது" குறித்துப் புகார் செய்ய, அங்கு விரைந்து சென்று பார்த்தால், அது வேறொரு நிலை. தரதரவென்று இழுத்துவந்து அவரவர் அறைகளில் சேர்த்திருக்கிறார்கள். இம்மாணவ மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்? நானும் 80களில் இந்த மாதிரி சுற்றுலா போயிருக்கிறேன். கொஞ்சம் சீண்டுதல் இருக்கும்... காதல்ஜோடிகள் இருக்கும்...மிஞ்சிப்போனால் சிகரெட்.. அதுவும் ஆசிரியர்களுக்குத் தெரியாமல்... தண்ணியெல்லாம் அடித்து நாறிக்கிடப்பதும், அலங்கோலமாக டிஸ்கொதேயில் ஆபாசமாக ஆடுவதும்...என்ன நாகரீகம்?
இவர்களை மட்டும் குற்றம் சொல்லுவதில் அர்த்தமில்லை. விடுதியில் மாணவர்களுக்கு மது வழங்கிய பணியாளர்கள், மது கிடைக்கும்படி செய்த விடுதி நிர்வாகம், பெற்றோரிடமிருந்து அபரிமிதமாகக் கிடைக்கும் பணம்..பார்க்கும் படங்கள், கேட்கும் இசை.. இவற்றையும்தான் சொல்லவேண்டும். 24 மணிநேரமும் காமம் பொங்கிவழியும் பாடல்களும், காட்சிகளும் திரையினூடே கசிந்து, கண்ணுள்ளூம் காதுள்ளும் புகுந்தால் புத்தி மழுங்கத்தான் செய்யும். நடை தடுமாறத்தான் செய்யும்.

ஒரு தனிக் கட்டுப்பாட்டு காவல்படை (moral police) வேண்டுமெனச் சொல்லவில்லை. அண்மையில் மீரட் நகரில் காவல்படை பூங்காக்களில் ஜோடிகளை அடித்து வெளியேற்றியதை பலரும் கண்டித்தனர். ஆனால் இது போன்றவற்றைக் குறித்து யாரும் பேசுவதில்லை. தனிமனித சுதந்திரம் எப்போது பரிந்து பேசப்படவேண்டும்... யாருக்காகப் பரிந்து பேசப்படவேண்டுமென விதியில்லாததால் இந்த அத்துமீறல்கள்.. இரு தரப்பிலும்.

சுயக்கட்டுப்பாடு குறித்து எத்தனைதூரம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அறிவுறுத்தப்படுகின்றது எனத் தெரியவில்லை. இந்த விஷங்கள் காற்றில் பரவிவருவதைத் தடுக்க எதாவது முயற்சி எடுக்கிறார்களா? பண்பலை வானொலிகளில் கல்லூரி மாணவர்களுக்கென நிகழ்ச்சி.... கல்லூரி மாணவர்களுக்கென இவர்கள் பேசும் மொழியும், தரமும், ஒலி பரப்பும் பாடல்களும்..கேட்டால் நொந்து போவீர்கள். தமிழ்நாட்டில் எப்படியெனத் தெரியவில்லை.

என்னமோ உருப்பட்டாச் சரி.

No comments:

Post a Comment