பேராசிரியர் இராமானுஜம் சமீபத்தில் தஞ்சைக்கு அருகே ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரிய/ஆசிரியைகளுடன் பேசியதின் சாராம்சம் இது.
" குழந்தைகளுக்கான நாடக அனுபவத்தில், குழந்தைகளுடனான உரையாடல்கள் எனக்குப் பல பரிமாணங்களைத் தந்திருக்கின்றன. அவர்கள் உலகம் தனியானது. அலாதியான, வெளிப்படையான பேச்சுகள் பல சமயங்களில் தீவிரமாக என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன. குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் கட்டாயமாக அறிவுறுத்தப்படுவதை வெறுக்கின்றனர். Children love to learn; they hate to be educated.
இதன் மூலம் என்ன? பள்ளிகள்,குழந்தைகளை தங்களிடம் ஈர்க்கும் முயற்சியில் தோற்றுவிட்டன. அவர்களது சுதந்திரம், கல்வியென நாம் நினைத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் dataவிற்கு பண்டமாற்று செய்யப்படுவதை எதிர்த்து தங்களுக்கே உரித்தான பாணியில் சிறு கோபங்கள், விளையாட்டுகள் மூலம் வெளிக்காட்டுகின்றனர். இதனைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் ' குழந்தைகள் எப்போதும் ஒழுங்கு முயற்சிகளுக்கு எதிராகவே சிந்திக்கும் 'எனவும் 'அவர்களுக்கு ஒழுங்கு என்பது கட்டாயமாகப் புகட்டப்படவேண்டும்- கசப்பாக இருக்குமெனினும்' எனவும் தங்களது கட்டாயக்கல்வி முயற்சிகளுக்கு சமாதானம் சொல்கின்றனர். உண்மையில் , குழந்தைகள் லாஜிக்காக நிறையவே யோசிக்கின்றன. கல்வி குறித்தான அவர்கள் சிந்தனை வியப்பானது.
உதாரணம் ஒன்றுசொல்கிறேன். எனது பேரன், ஒரு நாள் "தாத்தா, நான் அம்மா, அப்பா வாங்கித்தர்ற புத்தகமெல்லாம் ஒழுங்கா படிக்கத்தானே செய்யறேன்? " என்றான். ஆமாமென்றேன். எதாவது அறிவியல்/பொது அறிவு புத்தகமோ ,விளையாட்டுப் பொருட்களோ வாங்கிக்கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக்கொள்வதென்பது இயல்பு. "நாந்தான் படிக்கிறேனே? அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்குப்போகணும்?" என்றான். என்னால்தான் வீட்டிலேயே அல்லது பிற ஊடகங்கள் மூலமாகவே அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமே? அப்படியானால் பள்ளிக்கூடம் என்றொரு கட்டிடம் எதற்கு? என்பது இதன் சாராம்சம்.
"பள்ளிக்கூடத்தில் நீ மத்த பையன்களோட விளையாடலாம். டீச்சரோட பேசி பலதும் புதுசாப் புரிஞ்சுக்கலாம். புஸ்தகத்துல இதெல்லாம் கிடைக்காது" என்றேன். ஒரு சமூக இணைவுத் தொடர்பு (social interaction)என்பது முக்கியம் என்பது மறைமுகமாக அவனுக்குப் புரியப்படுத்தும் முயற்சி இது. அதற்கு வந்த பதில்தான் என்னை சிந்திக்க வைத்தது.
" பள்ளிக்கூடத்துல யார் பேச விடறாங்க? எப்பப் பாத்தாலும் பேசாதே பேசாதே-ன்னு தானே டீச்சர் சொல்றாங்க?" சிரிக்காதீர்கள். மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
புத்தகங்களும் ஊடகங்களும் கொடுக்கமுடியாத சமூகத் தொடர்பை உருவாக்க வேண்டிய பள்ளிகளே அதனைச் சிதைத்தால்? ஆசிரியர்கள் பாடம் முடித்தபின்போ அல்லது பாடம் நடத்தும்போதோ புத்தகங்களின் வரிகளிலிருந்து சற்றே வெளிவந்து புதிய பரிமாணங்களை இக்குழந்தைகளுக்குக் கொடுக்கும்நிலையில் பள்ளிகளோ, பாடத்திட்டங்களோ இருக்கின்றனவா? புத்தகத்திலிருப்பதையே ஒரு முதிர்ந்த குரலில் சொல்வதுதான் ஆசிரியப் பண்பா?
பின்னும் சொன்னான் " எல்லாத்துக்கும் ஒரு வகுப்பு இருக்கு. டிராயிங், விளையாட்டுக்குக் கூட வகுப்பு இருக்கு. பேசறதுக்கு ஒரு வகுப்பு இருக்கா எங்களுக்கு? பேசவிட்டா என்ன?"
ஆசிரியர்களே, இது யோசிக்கவேண்டிய ஒன்று. விளையாட்டு வகுப்பிலும் ஒரு மிலிடரி ஒழுங்குமுறை. ஒன்றன்பின் ஒன்றாக குழந்தைகள் வந்து ஓடி, குதிக்கவேண்டும். அதனை அளவெடுக்க ஒரு ஆசிரியர். இதற்கும் கைதிகளின் உடல்நல அளவெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பேச்சு என்பது குழந்தைகளின் அபூர்வச் சொத்து. தான் நினைப்பதையும் , சிந்திப்பதையும் குழந்தைகள் தங்களால் இயன்றமுறையில் வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். சிலகுழந்தைகள் திடீரென கத்தி கூப்பாடு போடும். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வரும் வெளிப்பாடு அது. பேசாதே பேசாதே என அடக்கி அடக்கி வைத்து வெளிப்படுத்தும் திறனொற்றை மழுங்க அடிக்கிறோம். விளைவு? சரியாக சிந்திக்கத் தெரியாத, தனது சிந்தனைகளை வெளிப்படுத்தத் தெரியாத , ஒழுங்காக சொன்னபடி நடக்கும் சிறந்த குமாஸ்தாக்களை வளர்க்கும் ஆங்கிலேய பள்ளிமுறையில் இன்னும் சுதந்திர அடிமைகளை வளர்த்துவருகிறோம்.
குழந்தைகளை உங்கள் வகுப்பில் ஒரு சிறு இடைவேளை நேரத்தில் பேசும் வகுப்பு என அறிவித்து விட்டு அவர்கள் போக்கில் பேச விட்டுவிட்டு கவனியுங்கள். நாளடைவில் புதுப்புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு குழந்தையும் மிளிர்வதைக் காண்பீர்கள்.
மந்தமான குழந்தை என ஒன்று உலகில் எங்கும் கிடையாது. நாம்தான் மந்தமாக அவற்றைக் காண்கிறோம்."
I was born intelligent. Made fool by education என எதோவொரு டீ ஷர்ட்டில் பார்த்த ஞாபகம்.
பேசிய பையன் -என் மகன்.
மிகவும் அவசியமான கட்டுரை. அருமையாக சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஇதைப் பற்றி பெற்றோரும் அரசாங்கமும் சிந்திக்க வேண்டும்.
நூற்றாண்டு காலமாக ஒரே மாதிரியான கல்விமுறை, காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும்.
இன்றைய குழந்தைகள் ஏன் தான் பூமியில் பிறந்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பல்வேறு சங்கிலிகளால் பிணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இத்தனை கல்விமுறைகள் இருந்தும் குழந்தையின் பொது அறிவுக்கு என்ன செய்தார்கள், சில தொலைக்காட்சிகளில் கேட்கப்படும் வெகு சாதாரண கேள்விகளுக்கும் பதில் தெரியாத பெற்றோர், குழந்தைகள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இத்தகைய கல்விமுறையை மாற்ற இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.
அன்பின் பரஞ்சோதி,
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி. கல்வி முறை மட்டுமல்ல, பெற்றோரின் இப்போட்டி மனப்பான்மையும் மாறவேண்டும். படிப்பது என்பது கற்பது என்பதைவிட வேறானது என்பதை உணரும் வரை இக்கொடுமைகள் சிறுவர்களுக்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
நன்றி
க.சுதாகர்.