Friday, March 10, 2006

லே மக்கா! Thanks to Google

கூகிள் எனக்குச் செய்த பெரிய உதவியென இதைத்தான் கருதுகிறேன். 19 வருடம் முன்பு பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த ந்ண்பர்கள் பெயரை இணையத்தில் சும்மா பொழுது போகாமல் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பேன். எப்பவாவது அதிர்ஷடம் அடிக்கும்.

இப்படித்தான் போன கிறிஸ்துமஸ் அன்று, பழைய நாள் ஞாபகத்தில் நண்பன் felcitas பெயரை கூகிளில் தேடினேன்.

மக்கா கிடைச்சுட்டான்..! கனடாவில் குடும்பத்தோடு நம்ம மக்கா சந்தோஷமா இருக்கிற போட்டா பார்த்தப்போது கண்ணு கொஞ்சம் கசிஞ்சிட்டுல்லா. ஒருகாலத்துல நானும் ஒல்லிப்பாச்சானா அவனை மாதிரித்தான் இருந்தேன்.. ( இப்ப? ஹூம்...). இவன் மட்டும் அப்படியே இருக்கான்..

உடனே ஒரு மின்னஞ்சல் தட்டினேன். 19 வருசம் கழிச்சு ஒரு கேணையன் இப்படி எழுதுவான் என அவன் நினைச்சுப்பாத்திருக்கமாட்டான். திடீர்னு ஒரு நாள் ராத்திரி தொலைபேசி அழைப்பு. " லே மக்கா!".. அவன் தான்..

குரலும் அங்கனயே இருக்கு. உணர்ச்சி பொங்கப்பொங்க, வார்த்தைகள் தடுமாறி சிரிச்சு, அழுது என்னமோ போங்க..என்னத்தப் பேசினேன்ன்னு எனக்கு ஞாபகமில்ல. பேசினோம் என்பதுதான் முக்கியம்.

அதுவும் தூத்துக்குடித் தமிழ் (இது திருநெல்வேலித் தமிழ்ல இருந்து கொஞ்சம் மாறும்)-ல வேகமாப் பேசினோம்னா கூட இருக்கிறவ்ங்களுக்கு சத்தியமா ஒண்ணும் புரியாது.
" நீங்க தமிழ்லயா பேசினீங்க?" என்றாள் என் மனைவி. விடுங்க. தஞ்சாவூர், தூத்துக்குடியைப் புரிஞ்சுக்க நாளாகும்!

கொஞ்சம் முன்னாடியே இந்த கூகிள் நடந்திருந்தா, அவனைப் பாத்துட்டே வந்திருக்கலாம்.

இதே மாதிரி நம்ம சுப்பிரமணியன் நியூஜெர்ஸியிலே இருந்து பேசினப்போவும், தூத்துக்குடித்தமிழ் பிரவாகம். என் மகன் பேந்தப் பேந்த முழிச்சான்."இவன் இப்பவரை நல்லத்தானே புரியர மாதிரிப் பேசிகிட்டிருந்தான்?" என அவன் முழி சொல்லிச்சு. இந்ததமிழெல்லாம் சொல்லிக்கொடுத்தா வரப்போவுது?

எங்கனகூடி போனாலும், நம்ம மொழி மறக்காம அப்படியே இருக்கான்கள்லா? அதுக்குப் பாராட்டியே தீரணும்.

லே மக்கா! நல்லா இருங்கடே!

2 comments:

  1. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் வலைப்பக்கத்துக்கு வருகிறேன்.. பதிவு இயல்பாக, அருமையாக உள்ளது...

    // லே மக்கா! நல்லா இருங்கடே! //
    கலக்கல் பிரயோகம்......

    பாராட்டுக்கள் !!!

    ReplyDelete
  2. நன்றி சோ.பை!
    இந்த லே மக்கா, நல்லா இருங்கடே -யெல்லாம் நம்ம ஆசீப் அண்ணாச்சியின் brand வார்த்தைகள். தூத்துக்குடிக்காரர்கள் copy right இல்லாம உபயோகிக்க முடியும் என்கிற தைரியந்தான் எனக்கு!
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete