Sunday, October 23, 2005

நோபல் - ஒரு இந்தியக் கனவு

நோபல் - ஒரு இந்தியக் கனவு

இயற்பியல் துறையின் நோபல் பரிசு 2005ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதும், ஹிண்டுஸ்தான் டைம்ஸ் " ஒரு இந்தியருக்கு கிடைக்க வேண்டிய பரிசு. ஏமாற்றியிருக்கிறார்கள்" என கொட்டையெழுத்தில் மும்பை பதிப்பில் வெளியிட்டிருந்தது.
இவர்கள் இழுத்திருக்கும் அறிஞர் கலாநிதி E.C.G.சுதர்ஷன் - அமெரிக்காவில் ஆய்வு செய்து வருகிறார். கிளாபர் குவாண்டம் ஒளியியல் பற்றிய கருத்துக்களை ஒரு அறிவியல் பேப்பராக வெளியிட்ட சிலமாதங்களுக்குள்ளாகவே சுதர்ஷனின் பேப்பர் வெளியாயிருந்தது. இருவரின் உழைப்பும் தனித்தனியாக நடந்தவை. கிளாபர் வெளியிட்ட கொள்கைகளில் இருந்த சிக்கல்களையும், தடைகளையும் சுதர்ஷன் பின்னாளில் எடுத்துக்காட்டி, சீர்திருத்தி வெளியிட்டார். அதன்பின் அவர் குவாண்டம் ஒளியியலிருந்து சற்றே விலகி பல ஆய்வுகளில் ஈடுபடத்தொடங்கினார்.
இன்றும் அவரது கொள்கைகள் குவாண்டம் ஒளியியலில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசின் பரிந்துரைக்குழுவின் குவாண்டம் ஒளியியல் பற்றிய அறிக்கையில் சுதர்ஷனின் பங்கு குறித்து வெளியாயிருக்கிறது.

இந்தியாவில் கலாநிதி சுதர்ஷனைப் பற்றி அறிந்தவர்கள் " முன்னரே ஒரு முறை அவருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யப்பட்டது. அப்போதும் தரவில்லை. இப்போது மிக மிக அருகில் வந்தும் , பரிசு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் மட்டுமல்ல ஒரு சோகமும் கூட " என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

சுதர்ஷன் அவர்களோ, இது குறித்து ஒன்றும் கருத்துகூற மறுத்துவிட்டு, தனது அறிவியல் தேடல்களில் ஆழ்ந்துவிட்டார் - தான் ஒரு ஆதர்சன அறிவியல் அறிஞர் என நிரூபித்துவிட்டு.

அத்துறையை விட்டு அவர் விலகியிருப்பதால், விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால் எவரும், நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிடம் விண்ணப்பிக்கப் போவதில்லையாம்.

நோபல் - ஒரு இந்தியக் கனவாகவே இருந்துவிடுமோ?

அன்புடன்
க.சுதாகர்

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

சு.ரா மறைந்தது குறித்து சிலர் எழுதினர். அவரது படைப்புகளை எவ்வளவு தூரம் தமிழக சராசர வாசகன் அறிந்திருக்கக் கூடுமென்பது அனைவருக்கும் தெரிந்த புள்ளியியல் விவரம்.
தமிழகம், இழப்புகளைக் குறித்து அறியவேண்டுமெனில், இருப்பைக் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். நாடக மேதை ஹெக்கோடு சுப்பண்ணா மறைந்தார் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியாது. வருந்தத்தக்க , வெட்கக்கேடான அறியாமை.
மேலும் இது குறித்து நான் எழுதாமல், வெங்கட் சாமிநாதனின் அமுதசுரபியில் வெளியான இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Wednesday, October 12, 2005

மெளனத்தின் நாவுகள் -3

யாரோ அழைத்தான ஞாபகத்தில்..

அபியின் சுயம் தேடலும் , சுயம் சார்ந்த வினாக்களும், தேடல் முயற்சிகளும் பற்றிய கவிதைகள், ஆழமிக்க சொற்கள் கொண்டவை. படிமங்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிற விதம், ப்ரமிக்க வைக்கிறது.

யாரோ அழைத்தான ஞாபகத்தில் - என்ற கவிதை இதைப்பற்றியதுதான் என இறுதியிட்டுக் கூற முடியாது. நான் உணர்ந்த அளவில்,இது மனிதம் என்னும் பண்புகளின் கலவையினை உருவாகக் கொண்ட ஓர் உயிர் -( அது கடவுளின் தூதனாகவும் இருக்கலாம்..) , சமுதாயத்தால் எதிர்க்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டபின்னும் அயராது, எவரோ ஒரிடத்தில் தனது தேவையிருப்பதாக, நம்பிக்கையின் ஊற்றை தன்னில் புதுப்பித்துக்கொண்டு, அதனையே அருந்திக்கொண்டு, புத்துணர்வோடு புறப்படும் ஒரு பயணத்தின் சாராம்சம். அது சந்தித்த சவால்களையும், அதன் முயற்சிகளையும் பற்றிய இக்கவிதையின் சில வரிகளைப் பாருங்கள்.

அதன் தற்சமய நிலை குறித்துச் சொல்லுகையில்
" இறந்த காலத்தின் நிமிஷங்களைக்
கம்பி நீட்டி
எதிர்காலத்தின் ராகங்களை
வாசித்துக்கொண்டே
......
மாரிக்காலத்து ஏதோவொரு இரவில்
யாரோ கிசுகிசுத்து அழைத்தான
ஞாபகத்தில்
என் பயணம் தொடர்கிறது "
என பயணத்தினைக் குறித்துச் சொல்கிறார்.

இதுவரை அனுபவித்த இடர்களோவெனில்..

"எந்தெந்த காற்றையெல்லாமோ
சுவாச ருசி கண்டு
எந்தெந்த மூட்டங்க்களில் எல்லாமோ
மூச்சுத்திணறி

சோகத்தின் சுகக்கருவில்
மறுபடி நுழைந்து வளர்ந்து
மறுபடி வெளியேறி..."

சூரியன் மலைகளிடையே மறைவது என்ற நிகழ்வை,

மேற்குத்தேசத்தின் பொன்மாளிகையில்
வாய்பிளந்து நின்ற
விட்டிலின் வாயில்போய்
விளக்கு விழுந்தபின் "
என்னும் வரிகளில், மானிட வாழ்வில் விளக்குகள்( வழிகாட்டிகள்) விட்டில்களால்( சாமானிய மானிடப்பதர்களால்) அணைக்கப்படுவதை "ரிவர்ஸ் மெட்டஃபர் ( reverse metaphore) கொண்டும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார். எங்கும் படிமம் கலையவில்லை. எங்கும் வார்த்தைகளின் ப்ரயோகத்தால் கவிதையோட்டம், கரு நீர்க்கப்படவில்லை.

தனது வழிகாட்டுதல் யாருக்கோ தேவைபட்டிருப்பதாக "யாரோ அழைத்த ஞாபகத்தில்" நன்னம்பிக்கை கொண்டதினைக் காரணிக்கிறார் இவ்வாறு.

அடித்தளத்து கண்ணீரைப்
ப்ரகாசமிக்க சிரிப்புகளாக
மாற்றிவரும் இந்தத்திரி
யாருக்கோ தேவைப்பட்டிருக்கிறது.

இதுவே அதன் raison de etre.

இதுவரை தனது வழிகாட்டல்களை சரியாகக் கொள்ளாதாரைப் பற்றிச் சொல்கிறார்.
" உழாமல் விதைத்தும்
விதையின்றியே உழுதும்
ஏமாந்தவர் பிரிந்தபின்.."

தன்னைநோக்கி வருகின்ற எவரையோ ஆவலுடன் தான் காத்திருப்பதை
" இந்த வளமான பூமியைத் தேடி
விழிகளில் மேகங்கள் திரட்டி
இதயக்கூடை நிறைய விதைகளோடு
பரிசுத்தமான நோக்கங்கள் வழிகாட்ட
யாரோ வரும் காலடியோசை!"
ஏசுநாதர் பிறந்தபோது நட்சத்திரங்கள் வழிகாட்ட மன்னர்கள் வந்தது போலவே, இந்தக்காட்சி!

தன்னை இதுவரை அடையாளம் கண்டுகொள்ளாதாரைப் பற்றி வெதும்பிச் சொல்லும் வரிகளைப் பாருங்கள். ஏசுநாதரும், கலீல் கிப்ரானும், "நாம் இவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், இவர்கள் அறியாமல் இருக்கிறார்களே " என இப்படி நினைத்திருப்பார்களோ என ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிடுகிறது.

"
சிலர்
சேற்றில் புதைந்த
என் வேர்களை முகர்ந்துவிட்டு
ஏக்கத்தோடு விரிந்த என் மலர்களை
நாடாது நடந்தனர்

என் சுவடுகளை
என் கைவிரல்களால் பதிக்கிறேன்
என்பதை அறியாமல்
என் பாதங்களின் பழுதுகளைப்
பரிகசித்துப் போனார்கள்"

எத்தனை அழுத்தமான வார்த்தைகள்.!

Tuesday, October 11, 2005

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்
_________________________________________
வின்செண்டு அய்யாத்துரை மும்பையில் வந்து முப்பது வருடங்களாகிறது. காட்கோபர் என்னுமிடத்தில் சுழலும் வாடகை நூலகம் வைத்து நடத்திவருகிறார்.

போனவாரம், யதேச்சையாக அவர் கடையில் தமிழ்புத்தகம் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவிட்டார். ரொம்ப காலம் முன்னே பழக்கம் மாதிரி சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். எனது கார் செப்பனிட்டு முடிக்க இன்னும் நேரமிருந்ததால் நானும் பேசிக்கொண்டிருந்தேன்.
"எழுவத்தொம்பதுல வந்தேன். அப்பெல்லாம் இந்தமாதிரி கூட்டம் கிடையாதுல்லா. இப்ப.. சே.. இந்த ஊரு வெளங்கும்கீயளா?" ( சாத்தான்குள வேதத்து ஆசிப் அண்ணாச்சி மாதிரிப் பேசுகிறாரே எனப் பார்க்கிறீர்களா? இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் திரேஸ்புரம்).

வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் நுழைந்தான். வின்செண்டுக்கு அவனைப் பிடிக்காது போலும். முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனைச் சகித்துக்கொண்டிருந்தார். புத்தகங்களைப் புரட்டியவன், ஏதோ தடியாக ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு , கையெழுத்திட்டு நகர்ந்தான்.
அவன் போனவுடன், வின்செண்டு " இப்ப வந்தாம்லா, பாத்தியளா?" என்றார், சாலையில் எட்டிப்பார்த்து , அவன் கேளாததை உறுதிசெய்துகொண்டே.
" உம் " என்றேன்
" நம்ம ஊரு பயல்தான். வெளங்காத மாடு. அப்பங்காரன் அம்பேர்நாத் வரை போயி ஷிப்ட்டுல வேலை பாத்து படிக்க வைக்கான். இவன் இங்கன சோவாறிட்டு திரிதான். படிக்கற புத்தகத்தைப் பாரு.. " கோபம் கொப்பளித்தது அவர் வார்த்தைகளில்.
" உங்களுக்கு என்ன கோபம் அண்ணாச்சி? அவன் பாட்டுக்கு படிச்சுட்டுப் போறான்.உம்ம கடைல நீரு வைச்சிருக்கற புத்தகம்தான அது? வேற அறிவியல் புத்தகம்னா வைச்சிருக்கீரு? " சீண்டினேன்.
"இதப் பாருவே" என ஒரு இதழைக் காட்டினார். அது செப்டம்பர் மாதத்திய சயண்டிஃபிக் அமெரிக்கன்- இந்திய பதிப்பு.
"இத எடுத்துப்படிக்கலாம்லா? இவன் கெமிஸ்ட்ட்ரிதான் படிக்கான் காலேஜ்ல"
"புதுசா வாங்கி வைச்சிருக்கீறா? போன மாசத்துப் புஸ்தகம்வே அது" என்றேன்.
"புது புக்கு நூறு ரூபா தெரியுமாவே? ஒரு மூதியும் தொடமாட்டேங்கு. அதை வாங்கறதுக்கு பதிலா, ஒரு டெபனேர் இல்லெ ஒரு சவ்வி, வுமன்ஸ் ஈரா-ன்னு வாங்கிறுவேன். பொட்ட புள்ளைக படிக்கும்"
அப்போதுதான் கவனித்தேன். ஒரு மாத இதழ் 100 ரூபாய். கிட்டத்தட்ட 2.5 டாலர். எத்தனை பேர் வாங்குவார்கள்?
" உம்மர மாதிரி நூலகத்துல வாங்கினா, பசங்க படிப்பான்கள். நீரு இப்படி கஞ்சத்தனம் பாத்துப்புட்டு, அப்புறம் அவன்களை நொட்டை நொள்ளைன்னா என்ன அர்த்தம்?" என்றேன்
" எனக்கு ஆசை இல்லன்னா இத ஏன் வாங்கி வைக்கேன். சொல்லுமே பாப்பம் ? என்றார் ஆவேசமாக.
" போனமாச புத்தகம் 10 ரூவாய்க்கு சர்ச் கேட் பக்கம் கிடைக்கும். ஒரு நாய் சீந்தாது. தூக்கிட்டு வந்து, சரி இந்த புள்ளைங்க உருப்படட்டுமேன்னு வைச்சா, சவத்து மூதி ஒண்ணும் தொட்டுக்கூடப் பாக்கலை" அவரது 10 ரூபாய் அப்படியே கிடப்பது அவருக்கு வயிறெரிகிறது.

100 ரூபாய் கொடுத்து சயண்டிஃபிக் அமெரிக்கன் வாங்க எத்தனை கல்லூரி மாணவ மாணவியரால் இயலும்? அல்லது பொது மக்கள்தான் 100 ரூபாய் கொடுத்து வாங்குவார்களா?
இந்திய பதிப்பு, அறிவியல் சிந்தனைகளை இந்திய மக்களிடம் பரப்ப வந்திருக்கிறது என்றெல்லாம் விளம்பரப்படுத்தினரே ? டெல்லி விமானநிலையத்தில் இன்னும் இருப்பதாக நினைவு.
உலகமயமாக்கலில், அறிவியலைக் கூட இறக்குமதி செய்து,அதற்கும் வளர்ந்த நாடுகளைப்போல பணம் கொடுக்கும் நிலையில் இருந்துவரும் சராசரி இந்தியனுக்கு, என்று அவன் வாங்கும் நிலையில் அறிவியல் புத்தகங்கள், பொருட்கள் கிடைக்கும்?

Sunday, October 09, 2005

மொளனத்தின் நாவுகள் -2

மொளனத்தின் நாவுகள் -2
-------------------------

காமம் ..
வள்ளுவர், வாத்ஸ்யாயனர் முதல் வைரமுத்து வரை அனைத்து கவிஞர்களும் போற்றிய ஓர் அடிப்படை உணர்வு. பட்டினத்தார் போன்ற சித்தர்களும், துறந்த முனிவர்களும் "வேண்டாம்" என ஒதுக்கிப் பாடினாலும், அந்த ஒதுக்கல்களிலும் காமத்தின் வேகத்திற்கு ஓர் மரியாதை தென்பட்டது. காமம் மனிதனின் உணர்வுகளில் ஆழப்பதிந்து பிற உணர்வுகளைத் தாக்குமாதலால், முனிவர்களூம் அஞ்சி ஒதுக்கிய ஓருணர்வு.
அபி காமத்தை எப்படி அழைக்கிறார் எனப் பார்ப்போம்
" போ போ ராப்பிச்சைக்காரனே"

இதை விட வெறுப்பின் உச்சியில் நின்று காமத்தை விரட்டிய கவிதை படித்ததில்லை.

" எத்துணை இடினும்
நிரம்பாத
உன் ஓட்டைப் பாத்திர
நாற்றத்தில்
என் சுவாசங்கள் கூசுகின்றன"
சுவாசங்கள் கூசுமளவிற்கு ராப்பிச்சைக்காரனின் பேராசைக் கலசத்தின் நாற்றம் கவிஞரின் நாசியில்!..

"சிலரே தாங்கள் படைத்ததில்
உனக்குப் பங்களிக்கிறார்கள்.
பலரும் உனக்குப் பங்களிக்கவே
படைக்கின்றனர்"

உண்மையான வார்த்தைகள்.

காமத்தின் மேலுள்ள வெறுப்பு சித்தர் போலவுள்ள போதனையால் வந்ததல்ல. காமத்திற்கு கொடுக்க வேண்டிய இடம் கூடுதலாகவே கொடுக்கப்படுகிறது என்பதை சுட்டுகிறார். அபியின் நடுநிலைமை, உணர்வுகளையும் கூட்டிப் ப்ரதிபலிப்பதை இக்கவிதையில் காணலாம்.

Friday, October 07, 2005

நெளியும் நண்பர்கள்- மண்புழு வளர்ப்பு
-------------------------------------

மும்பை போன்ற நகரங்களின் மிகப்பெரிய தலைவலி- திடக் கழிவு நிர்வாகம். மும்பையில் மட்டும் ஒரு நாளுக்கு 6000 மெட்ரிக் டன் கழிவு உற்பத்தியாகிறது. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மிகத் திறமையாகச் செயல்பட்டால் 5500 மெட்ரிக் டன் கழிவை அப்புறப்படுத்த முடியும். மிச்சம் 500 டன் கழிவுகள்? ஆதாரம் www.ceeraindia.org/documents/bmc.htm
எடுத்த கழிவுகளை புதைக்க landfil இடங்கள் தேடுவது மற்றொரு தலைவலி. 25 வருடங்களில் ஒரு இடம் நிறைந்து போகும். பின்னர் மற்றதைத் தேடவேண்டும். கழிவு நிறைந்த இடத்தை மீண்டும் புதுப்பிப்பது என்பது மற்றொரு தலைவலி. அவ்வளவு எளிதல்ல.
பல ஆலோசகக் குழுக்கள் பலதரப்பட்ட யோசனைகளை வழங்கியிருக்கின்றன. குப்பையை உருவாக்கும் இடத்திலேயே பிரித்தல் ( seggregation at source) என்பதைக்குறித்து அதிர்ச்சியூட்டும் விதமாக முனிசிபல் கார்ப்பரேஷன்கள் இன்னும் ஆலோசித்துமட்டுமே வருகின்றன. மக்களை படிப்பிக்கும் விதம் குறித்து கவலை கொள்கின்றனவாம்.. இது முதலில் கட்டாயமாக்கவேண்டும்.
மண்புழு வளர்ப்பு மூலம் கரிம கழிவுகளுக்கு ஒரு தீர்வு காணலாம் என்பதை அறியும்போது கொஞ்சம் வியப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. மண்புழு வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு பயன்படும் என்றும், அது நல்ல கரிம உரம் தயாரிக்கும் குடிசைத்தொழில் என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். பெரிய அளவில் கரிம உரம் தயாரிக்கவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் இது உதவும் என்பதை இச்சுட்டியில் அறிந்தேன்.
http://www.morarkango.com/waste_management/index.html
மொரார்கா தன்னார்வலக்குழுவின் மண்புழு வளர்ப்பு பற்றிய செய்திகள் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருப்பவர்களுக்கு வேலை,மற்றும் பீடித் தொழிலாளர்களௌக்கு அவ்வேலையை நிறுத்தி,மாற்று வேலை கொடுக்கும் திட்டம் போன்றவற்றிற்கு உதவுவதாகவும் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இக்குழு செய்திருக்கும் பணி குறித்து அறியும்போது , மாநகரங்களில் கழிவு நிர்வாகம் மேம்படச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வீடுகளில் கழிவு நிர்வாகம் குறித்துக் கூறுகையில், வெறும் ரூ.2500.00 கொண்டு எப்படி கழிவுகளை அகற்றலாம் என்பதையும், கரிம உரம் தயாரிக்கலாம் என்பதையும் சொல்கிறார்கள். IFFCO நிறுவனம், இவ்வுரத்தை நல்ல விலையில் வாங்கிக்கொள்ளவும் தயாராக இருப்பதால், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கூட்டுறவு நிறுவனங்கள் இதனை ஒரு தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்.
பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கென பெரிய அளவில் கழிவு நிர்வாகம் செய்து தரவும் இந்நிறுவனம் தயாராக இருக்கிறது. ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள் இதனால் பயன்பெறும் என்பதோடு, முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கழிவுநிர்வாகத்தில் பளு பெருமளவில் குறையும்.
முன்னுதாரணமாக மும்பையில் சேரிச் சிறுவர்களைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டில் சிறுவர்கள் பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு இதனைத் தொழிலாக ஏற்று நடத்த முன்வந்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை ஒருவருடம் முன்பு வாசித்த ஞாபகம் வருகிறது.

இதனை பெரியளவில் வர சில சக்திகள் தடுப்பதாகவும், அரசியல் ஆதாயம் கருத்தில் கொண்டு புழு வளர்ப்பு தடைப்படுவதாகவும் கேள்வி. கழிவிலுமா கமிஷன் அடிக்கணும்? பாவிகளா...

பிடித்த புத்தக அலசல்-மெளனத்தின் நாவுகள்

நண்பர்களே,
படித்த கவிதைகளை அலசுவதென்பது ஒரு அலாதியான இன்பம்..படித்த கவிதைகளில் தாக்கிய வரிகளைப் பற்றி எழுதுகிறேன். ( நானே சொந்தமாய் எழுதி அறுப்பதைவிட இது பரவாயில்லை).
மெளனத்தின் நாவுகள் - கவிதைத்தொகுப்பு .
இயற்றியவர் : அபி.
------------------------------------------------------------

"ஏதோ ஒரு விடையை
என்னுள் வாங்கியதால்
எத்தனையோ
வினாக்களுக்குத் தாயானேன்.
அவ்வினாக்களின் மூலம் தேடிப்போகிறேன்"
என்று தன் அலசல்களை அறிவித்தவர் அபி. "கடவுளின் சோதனைச்சாலை விடுத்து தன் சொந்தச் சோதனைச்சாலைக்கு செல்லும்" காரணமாக இதைச் சொன்னார்.
கவிஞர் மீராவுடன் இணைந்து பணியாற்றியவர். 70'ச் களில் தமிழ் கவிதையில் புதுக்கவிதைஎ
ன்ற பரிமாணத்தில் அவருக்கென தனிப்பாணியை வகுத்துக்கொண்டார். 60களில் தமிழ் இன உணர்வு கொந்தளித்தபின், எழுபதுகளில் சிறிது அடங்கி, பரீட்சார்த்த முறைகளை கவிஞர்கள் கையாளத்தொடங்கினர். கிப்ரானிய மொழி வீச்சும், எளிய வார்த்தைகளில் உணர்வுகளை செறிவாக்கிக் கொட்டும் வித்தைகளும் தமிழ்க்கவிதைகளில் இடம்பெறத்தொடங்கின. கண்ணீர்ப்பூக்கள், கறுப்பு மலர்கள் என மு.மேத்தா, காமராசன் போன்றோர் தொடங்கியவை, சாதாரணமாகக் கவிதை படிக்கத் தயங்கும் மக்களுக்கு புதுக்கவிதை படிக்க ஆர்வம் பிறப்பித்தாலும், ஒரு படி மேலே போய் உன்னதமான கவிதைஉத்திகளை சிறப்பாகக் கையாண்டதில் சிலருக்கே அபி போன்ற பெரும்பங்கு உண்டு. "மொளனத்தின் நாவுகள்" - அதன் சாட்சி.
படிமங்கள் கையாள்வதில் அவரது சிறப்பு. மீரா அவர்களும் , அப்துல்ரகுமான் அவர்களும்
அபியின் கவிதைத்தொகுப்பினை பிற பதிப்பகத்தார் வெளியிட தயக்கம் காட்டிய போது, கொ
தித்தெழுந்து , சொந்தமாகவே "அன்னம்"என்ற பதிப்பகத்தை சிவகங்கையில் தொடங்கினர் -எ
ன்பது வரலாறு. "பாலையும் நீரையும் பகுத்தறியாப் பாமரர்களே, அன்னம் பாலைப் பகுத்துக் காட்டுகிறது" என்ற உதாரணமோ- அன்னம் என்ற குறியீட்டுப் பெய்ர்?
புதுக்கவிதையின் புதுப் பரிமாணங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் , தமிழ் புதுக்கவிதை
யின் உண்மையான முன்னோடிகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், அபியை அவசியம்
அறிந்துகொள்ளவேண்டும். இக்கவிதைத்தொகுப்பின் முன்னுரையை கவிக்கோ அப்துல்ரகுமான்
அவர்களும், முடிவுரையை கவிஞர் மீரா அவர்களும் வழங்கியிருக்கின்றனர்.

அபியைப் படிக்குமுன், அவ்வுரைகளைப்படிப்பது நல்லது. ஏனெனில். அபியின் வார்த்தைகளின்
எல்லைகளை வரையறுப்பது கடினம். சுழன்று சுழன்று ஆழம்காண இயலாத பரிமாண எல்லைக
ளுக்கு இட்டுச்செல்லும் சக்திவாய்ந்த வரிகள் அவை.

கலீல் கிப்ரானின் வலிகள் குறித்து வருந்திய கவிஞர் "அம்மானுடம்பாடியைத் துன்புறுத்தியபோது இருந்திருந்தால் நான் இப்படித்தான் பாடியிருப்பேன் " எனக் குறிக்கிறார்.

மதவாதிகளால் லெபனாலின் துன்புறுத்தப்பட்ட கலீல்கிப்ரான், அமெரிக்காவில்
சரண்புகுந்தபின்னும் லெபனானின் பஞ்சம் ஏற்பட்டபோது "டெஅட் அரெ ம்ய் பெஒப்லெ" என்று இரங்கல்
பாடினார். இதனை வியந்து
"உன் வேர்களை அருவெருக்கும்
நிலங்களை நோக்கி ஏன் உன் விழுதுகளை
அனுப்புகிறாய்?" என்றார் அபி.
வார்த்தைகளின் வீச்சைக் கவனியுங்கள்! எவ்வளவு உன்னத உதாரணம்!


அத்தோடு விடவில்லை அபி...
லெபனான், கிப்ரானின் கவிதைகளை தடை செய்தும், அவர் லெபனான் குறித்து கவலைப்பட்டதை,
"நீ பாசமுள்ள பறவையாய் இருந்தால்
உன் முட்டைகளை புற்றிலா இடுவாய்?"
என்கிறார்.

கிப்ரானுக்குக் கிட்டிய வதைகளை விவரிக்கிறார்...
"நீ நிற்கும்
சிலுவையின் நிழலில்கூட
ஆணிகள்..."
என்ன ஒரு ஆழம்...! இயேசுநாதரை சிலுவையில் அறையும் போது உலகில் விழுந்த வலிகள்
உறைந்த சொற்களாய்...

லெபனானைச் சபிக்கிறார் இவ்வாறு- அறம்பாடலாய்...
"லெபனானின் பள்ளத்தாக்குகள்
அழகின் கம்பீரமான உச்சரிப்புகளை
இழந்து போகட்டும்"
அதனால்தானோ, அதன்பின் இன்னும் ஒரு கிப்ரானை லெபனான் கர்ப்பம் தரிக்கவில்லை?


இன்னும் வரும்.
அன்புடன்
க.சுதாகர்