Tuesday, October 11, 2005

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்
_________________________________________
வின்செண்டு அய்யாத்துரை மும்பையில் வந்து முப்பது வருடங்களாகிறது. காட்கோபர் என்னுமிடத்தில் சுழலும் வாடகை நூலகம் வைத்து நடத்திவருகிறார்.

போனவாரம், யதேச்சையாக அவர் கடையில் தமிழ்புத்தகம் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவிட்டார். ரொம்ப காலம் முன்னே பழக்கம் மாதிரி சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். எனது கார் செப்பனிட்டு முடிக்க இன்னும் நேரமிருந்ததால் நானும் பேசிக்கொண்டிருந்தேன்.
"எழுவத்தொம்பதுல வந்தேன். அப்பெல்லாம் இந்தமாதிரி கூட்டம் கிடையாதுல்லா. இப்ப.. சே.. இந்த ஊரு வெளங்கும்கீயளா?" ( சாத்தான்குள வேதத்து ஆசிப் அண்ணாச்சி மாதிரிப் பேசுகிறாரே எனப் பார்க்கிறீர்களா? இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் திரேஸ்புரம்).

வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் நுழைந்தான். வின்செண்டுக்கு அவனைப் பிடிக்காது போலும். முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனைச் சகித்துக்கொண்டிருந்தார். புத்தகங்களைப் புரட்டியவன், ஏதோ தடியாக ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு , கையெழுத்திட்டு நகர்ந்தான்.
அவன் போனவுடன், வின்செண்டு " இப்ப வந்தாம்லா, பாத்தியளா?" என்றார், சாலையில் எட்டிப்பார்த்து , அவன் கேளாததை உறுதிசெய்துகொண்டே.
" உம் " என்றேன்
" நம்ம ஊரு பயல்தான். வெளங்காத மாடு. அப்பங்காரன் அம்பேர்நாத் வரை போயி ஷிப்ட்டுல வேலை பாத்து படிக்க வைக்கான். இவன் இங்கன சோவாறிட்டு திரிதான். படிக்கற புத்தகத்தைப் பாரு.. " கோபம் கொப்பளித்தது அவர் வார்த்தைகளில்.
" உங்களுக்கு என்ன கோபம் அண்ணாச்சி? அவன் பாட்டுக்கு படிச்சுட்டுப் போறான்.உம்ம கடைல நீரு வைச்சிருக்கற புத்தகம்தான அது? வேற அறிவியல் புத்தகம்னா வைச்சிருக்கீரு? " சீண்டினேன்.
"இதப் பாருவே" என ஒரு இதழைக் காட்டினார். அது செப்டம்பர் மாதத்திய சயண்டிஃபிக் அமெரிக்கன்- இந்திய பதிப்பு.
"இத எடுத்துப்படிக்கலாம்லா? இவன் கெமிஸ்ட்ட்ரிதான் படிக்கான் காலேஜ்ல"
"புதுசா வாங்கி வைச்சிருக்கீறா? போன மாசத்துப் புஸ்தகம்வே அது" என்றேன்.
"புது புக்கு நூறு ரூபா தெரியுமாவே? ஒரு மூதியும் தொடமாட்டேங்கு. அதை வாங்கறதுக்கு பதிலா, ஒரு டெபனேர் இல்லெ ஒரு சவ்வி, வுமன்ஸ் ஈரா-ன்னு வாங்கிறுவேன். பொட்ட புள்ளைக படிக்கும்"
அப்போதுதான் கவனித்தேன். ஒரு மாத இதழ் 100 ரூபாய். கிட்டத்தட்ட 2.5 டாலர். எத்தனை பேர் வாங்குவார்கள்?
" உம்மர மாதிரி நூலகத்துல வாங்கினா, பசங்க படிப்பான்கள். நீரு இப்படி கஞ்சத்தனம் பாத்துப்புட்டு, அப்புறம் அவன்களை நொட்டை நொள்ளைன்னா என்ன அர்த்தம்?" என்றேன்
" எனக்கு ஆசை இல்லன்னா இத ஏன் வாங்கி வைக்கேன். சொல்லுமே பாப்பம் ? என்றார் ஆவேசமாக.
" போனமாச புத்தகம் 10 ரூவாய்க்கு சர்ச் கேட் பக்கம் கிடைக்கும். ஒரு நாய் சீந்தாது. தூக்கிட்டு வந்து, சரி இந்த புள்ளைங்க உருப்படட்டுமேன்னு வைச்சா, சவத்து மூதி ஒண்ணும் தொட்டுக்கூடப் பாக்கலை" அவரது 10 ரூபாய் அப்படியே கிடப்பது அவருக்கு வயிறெரிகிறது.

100 ரூபாய் கொடுத்து சயண்டிஃபிக் அமெரிக்கன் வாங்க எத்தனை கல்லூரி மாணவ மாணவியரால் இயலும்? அல்லது பொது மக்கள்தான் 100 ரூபாய் கொடுத்து வாங்குவார்களா?
இந்திய பதிப்பு, அறிவியல் சிந்தனைகளை இந்திய மக்களிடம் பரப்ப வந்திருக்கிறது என்றெல்லாம் விளம்பரப்படுத்தினரே ? டெல்லி விமானநிலையத்தில் இன்னும் இருப்பதாக நினைவு.
உலகமயமாக்கலில், அறிவியலைக் கூட இறக்குமதி செய்து,அதற்கும் வளர்ந்த நாடுகளைப்போல பணம் கொடுக்கும் நிலையில் இருந்துவரும் சராசரி இந்தியனுக்கு, என்று அவன் வாங்கும் நிலையில் அறிவியல் புத்தகங்கள், பொருட்கள் கிடைக்கும்?

1 comment:

  1. Anonymous1:02 PM

    ஒருவேளை.. தமிழ் வளர்க்க தார்-உடன் திரிந்தவரைக்கேட்கலாம்... அல்லது திரைப்பட பெயரை தமிழில் வைத்தால் தழிழ் வளருமென்றவரை கேட்கலாம்..

    நல்ல பதிவு..

    ReplyDelete