மொளனத்தின் நாவுகள் -2
-------------------------
காமம் ..
வள்ளுவர், வாத்ஸ்யாயனர் முதல் வைரமுத்து வரை அனைத்து கவிஞர்களும் போற்றிய ஓர் அடிப்படை உணர்வு. பட்டினத்தார் போன்ற சித்தர்களும், துறந்த முனிவர்களும் "வேண்டாம்" என ஒதுக்கிப் பாடினாலும், அந்த ஒதுக்கல்களிலும் காமத்தின் வேகத்திற்கு ஓர் மரியாதை தென்பட்டது. காமம் மனிதனின் உணர்வுகளில் ஆழப்பதிந்து பிற உணர்வுகளைத் தாக்குமாதலால், முனிவர்களூம் அஞ்சி ஒதுக்கிய ஓருணர்வு.
அபி காமத்தை எப்படி அழைக்கிறார் எனப் பார்ப்போம்
" போ போ ராப்பிச்சைக்காரனே"
இதை விட வெறுப்பின் உச்சியில் நின்று காமத்தை விரட்டிய கவிதை படித்ததில்லை.
" எத்துணை இடினும்
நிரம்பாத
உன் ஓட்டைப் பாத்திர
நாற்றத்தில்
என் சுவாசங்கள் கூசுகின்றன"
சுவாசங்கள் கூசுமளவிற்கு ராப்பிச்சைக்காரனின் பேராசைக் கலசத்தின் நாற்றம் கவிஞரின் நாசியில்!..
"சிலரே தாங்கள் படைத்ததில்
உனக்குப் பங்களிக்கிறார்கள்.
பலரும் உனக்குப் பங்களிக்கவே
படைக்கின்றனர்"
உண்மையான வார்த்தைகள்.
காமத்தின் மேலுள்ள வெறுப்பு சித்தர் போலவுள்ள போதனையால் வந்ததல்ல. காமத்திற்கு கொடுக்க வேண்டிய இடம் கூடுதலாகவே கொடுக்கப்படுகிறது என்பதை சுட்டுகிறார். அபியின் நடுநிலைமை, உணர்வுகளையும் கூட்டிப் ப்ரதிபலிப்பதை இக்கவிதையில் காணலாம்.
No comments:
Post a Comment