Monday, November 30, 2015

கம்பனை ரசித்தல் -3

  "ஒரு ஆபத்து வர்றதுன்னு வைச்சுக்கோ, மனுசன் உலகத்துல எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதான் எதிர்வினை செய்வான்.” ஞாயிறு காலை இப்படி உதயமானால், காமர்ஸ் படிக்கும் இளைஞர்கள் “குவாண்டம் மெக்கானிக்ஸ் எக்ஸ்ட்ரா லெக்சர் இருக்கு” என்று எதாவது சொல்லி ஓடிப்போவார்கள். அபிஜீத்க்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் போறாது.

“ஏம்ப்பா? கல்ச்சர் மாறுகிறப்போ, நம்ம ரியாக்‌ஷன் மாறாது?” என்றான்.

“மாறும். ஆனா அந்தப் படிநிலைகள் மாறாதிருக்கு”
“அதெப்படி? ஒரு வீட்டுல யாரோ செத்துட்டாங்கன்னு வைங்க, நம்ம ஊர்ல ஆ ஊன்னு அழறோம். வலிக்க வலிக்க ஒப்பாரி பாட்டெல்லாம் கூட இருக்கு. . நார்த் இந்தியாவுல வெள்ளை வெள்ளையா ஜிப்பா, பைஜாமா போட்டுக்கறாங்க. வெளி நாட்டுல ஒருத்தன் அழறது கிடையாது. கறுப்பு கோட்டு... நிறையவே வித்தியாசம் இருக்கே?”

“நீ சொல்றது சடங்குகளின், சமூக விதியின் வகையில். நான் சொல்றது உணர்வுகள் ,அவை கொண்டுவரும் எதிர்மறை செயல்பாடுகள்...அது எல்லா இடத்துலயும் ஒண்ணாத்தான் இருக்கு” என்றவன் தொடர்ந்தேன்.

“ திடீர்னு ஒருத்தருக்கு வேலை போச்சுன்னா அவருடைய ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்.
முதலில் திகைப்பு. அதிர்ச்சி. எனக்கா இது நடந்தது?ன்னு ஒரு கேள்வி. மெல்ல உடல் மற்றும் மன நடுக்கத்தோடு அதனை எதிர்கொள்ளுதல்.
இரண்டாவது - உடல் மன கோளாறுகளின் தொடக்கம். தலைசுற்றி வருதல், குழறுதல், ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், மன அழுத்தம். தலைமுடி நரைத்துப் போவதும் நடந்திருக்கிறது. அதிர்ச்சி செய்தியை உள்வாங்க நடக்கும் முயற்சியாக அரற்றுதல், ஒப்பாரி வைத்தல். புலம்பிப் பேசுதல், அதீதமான இறுக்கத்துடன் இருத்தல்”

“ரைட்டு இதான் நிறைய சிவாஜி கணேசன் படத்துல பாத்தாச்சே?”
“ஏய். சிவாஜியச் சொன்னே.. இருக்கு ராஸ்கல். இத்ற்கு அப்புறம் ஒரு விதமான அதீதப் பொறுப்புடன் குடும்பப் பாரத்தை கவனிக்கத் தோணும். அதீத ஒழுக்கம் வரும். இது நல்லதுதான். ஆனா ஒரு உணர்வு கொந்தளிப்பு வரும்.”

“எல்லாருக்குமே இதுதான் முடிவா?” என்றான் பயந்துபோய்.

“இல்ல. சிலர் மாறிப்போய் எல்லாம் தெய்வம்னு ஒரு விதமா சடங்குகள் சார்ந்த மதம் அல்லது ஒரு நபர் சார்ந்த குழுமம்னு போவாங்க. சிலர் தத்துவார்த்தமா சிந்தித்து தாடி வளர்த்து போகலாம். சிலர் உத்வேகத்துடன் வேற பயிற்சிகளை எடுத்துகிட்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு வேறு பாதையில் உற்சாகமாக முழுமூச்சோடு இறங்கலாம். இந்த மூன்றும் சாத்தியம்”

“ஓ. அப்ப எல்லாரும் நடந்துக்கறதை ஒரு மாதிரியாத்தான் guess பண்ணலாமங்கறீங்க,?”

“ம்.. கஷ்டம். மனசு ஒரு குரங்கு. ஆனா ஒரு குரங்கோட மனசு எப்படி தெளிவா இருந்திருக்கு தெரியுமோ, மனுசனை விட அதிக ஆளுமையோட?”

அவன் பேசவில்லை. நான் தூண்டப்பட்டுவிட்டேன் இனி அவன் கேட்காமலேயே சொல்லிவிடுவேன் என்பது அவனுக்குத் தெரியும்.

“வாலி மேல பட்ட அம்பு ராமனோடது என்று தெரிந்தது, அதிர்ந்து போறான்.”

”மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை... ராம என்னும் நாமந்தனை கண்களில் தெரியக் கண்டான்’- இது கம்பன் பாடல்.

அதென்ன கண்களில் தெரிய? இல்லூஷன்-காட்சிப்பிழை இல்லைங்கறான் கம்பன். அதோட வாலிக்கு ஒரு டெலூஷனும்(கருத்துப்பிழை) இல்லை. இதைச்சொல்ல ஒரு காரணம் இருக்கு. அவன் போருக்கு புறப்படறதுக்கு முன்னாடி தாரை சொல்றா ‘ சுக்ரீவனுக்குத் துணையா அந்த ராமன் வந்திருக்கான். அவன் அம்பு விட்டுறப்போறான், பாத்து” . வாலி சொல்றான் “ போடி, அவன் எம்புட்டு பெரிய ஆளு.. இப்படி எங்க சண்டைலலெல்லாம் வரமாட்டான். சும்மா அழுத, கொன்னுறுவேன்”. இப்படி, பேச்சு நடந்தப்புறம், ஒரு அம்பு அவனைத் துளைச்சா, இது ராமனா இருக்குமோன்னு சந்தேகக் கண் வந்திருக்கும்பாரு, அது டெலூஷன். இது இல்லாம நிஜமாவே, கண்களில் தெரியக் கண்டான்கறான்.”

“இந்த கம்பன் நிஜமாவே இப்படி சைக்காலஜி எழுதியிருப்பாரா, நீங்க சும்மா ஊத்தறீங்களா?”

“ரெண்டும்தாண்டா. சைக்காலஜி என்னமோ சிக்மண்ட் ப்ராய்டு வந்தப்புறம்தான் வந்ததுன்னு நினைக்காதே. அதுக்கு முன்னாடி மனுசனுக்கு மனசு இருக்கு, அது கேணத்தனமானதுன்னு அம்புட்டு நாகரிகமும் சொல்லியிருக்கு. என்ன, ஒரு ஆராய்ச்சின்னு பண்ணி, டாக்குமெண்ட் பண்ணலை. நடு நடுவே சளபுளன்னு பேசாதே, கதை வேணுமா , வேண்டாமா?”

“ஆங்... வேணும். சொல்லுப்பா”

“ம்.. வாலி முதல்ல நம்பலை. அதுக்கப்புறம் கோபத்துல என்னையா அடிச்சே?ன்னு கத்தறான் ராமன்கிட்ட. இது நியாயமில்ல, தர்மமில்லை, நீ ஒரு அரசனா?ன்னு நாக்கப்புடுங்கற மாதிரி கேக்கறான். ரெண்டு நிலை வந்துடுத்து பாரு”

“ஆ..ஆம்ம்மா! கரெக்ட்டுப்பா! அப்புறம்?”

“அவன் கேக்க,ராமன் பதில் சொல்றான். ராமனே கவுன்சிலிங்க் பண்ணியிருக்கான் பாரு. இப்படி கடவுளே முன்னாடி வந்து, நான் உன்ன ஏன் கொன்னேன்னா... ந்ன்னு பெருசா விளக்கம் கொடுக்கறது கம்பராமாயணத்துலதான் பாக்கமுடியும். வால்மீகி சொல்றார். ஆனா பட்டுன்னு முடிஞ்சுடும். கம்பன்ல இது பெரிசா விரிவாப் போகும்.

“அப்புறம்?” என்றான் ஆவலுடன்.

“நான் உன்னைக் கோவத்துல சொல்லிட்டேன்ல? பொறுத்தி-ங்கறான் வாலி. ‘எந்தம்பி ஒரு கொரங்குப்பய. மதுவருந்தி, எதாச்சும் தப்பு பண்ணினான்னா, எம்மேல விட்ட பார்,அந்த பாணத்தை அவன் மேல விட்டுராத”ங்கறான்”

அபிஜீத்தின் தொண்டை ஏறி இறங்கியது. ”சே, such a nice fellow"

“என் தம்பியப் பத்தி உன் தம்பியெல்லாம் ‘அண்ணனைக் கொன்னுட்டு பதவியில வந்தாம்பாரு”ன்னு கேலி செஞ்சா, தடுக்கணும்ங்கறான். என்ன பரந்தமனசு பாரு இவனுக்கு?

மெய்நிலை கண்டவனா,தன்னைக் கொன்னதுக்கு நன்றின்னு ராமனைப் புகழ்றான்” ஆவிபோம் வேலைவாய்ந்துருள் செய்தருளினாய், மூவர்நீ, முதல்வநீ, முற்றுநீமற்றுநீ, பாவநீ, தருமநீ,பகையுநீ உறவுநீ”-ங்கறான்.

அப்புறம் , நல்ல அண்ணனா, எப்படி அரசு நடத்தணும்னு சுக்ரீவனுக்குச் சொல்றான். இப்படி திடீர்னு நல்லவனா மனசு போகும்னு சொன்னேனா?”

“அங்!எக்ஸாக்ட்லி! அப்புறம்?”

“பையனைக் கூப்பிடறான். ‘அங்கதா, சின்னப் புள்ள மாதிரி அடம்பிடிக்காம, நான் சொல்றதக் கேளு”
‘நீங்க அட்வைஸ் பண்ற மாதிரி போர் அடிச்சானா?”
“ஏய். கிண்டலா? சொல்றான் கேளு “ என்சொல் பற்றுதையாயின், தன் மேற்பொருளுமொன்றில்லா மெய்ப்பொருள் வில்லும்தாங்கி கால் தரை தோய நின்று, கட்புலனுக்குற்றதம்மா” - இவன் அந்த பெரும்கடவுள். வணங்குடா’ங்கறான்”
நல்ல தந்தையா, பையனுக்கு அட்வைஸ் பண்ணி, தகப்பன் நிலையைத் தாண்டி, ஒரு யோக நிலைக்குப் போறான். அப்படியே போயிடறான்”

” ச்ச்ச். so sad... வருத்தமா இருக்குப்பா”

“நாம சொன்ன எல்லா நிலையும் அவனுக்கு வந்துருத்து பாரு. இதான் characterizationங்கறது. கம்பன் பிச்சு வாங்கியிருக்கான்”

”எங்கப்பா படிச்சீங்க இதை?”என்றான் வியப்புடன்.
”கம்ப ராமாயணம் விரிவுரை, அப்புறம் அற்புதமா இதைப்பத்தி “ சிறியன சிந்தியாதான்’ன்ன்னு ஒரு புக், அந்தக்காலப் பெரும் அறிஞர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கார்.”

“அந்த நீலக்கலர் குட்டி புக்கு, அதுவா?”

“அதுதான். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் கிடைச்சது சிறியன சிந்தியாதான் -ன்னு வாலியை கம்பன் சொல்றான். சின்ன அல்பமான விசயமெல்லாம் அவனுக்கு சிந்தனைல வரவே வராதாம். பரந்த அறிவு, மனசு வாலிக்கு, ஆனா, அவனுக்கே , ஒரு அதிர்ச்சின்னா, வருகிற எதிர்வினைப்படிகள் நமக்கு வர்ற மாதிரிதான்.”

அவன் அந்த புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தான். இன்னும் முழுதுமாக ஒரு தமிழ்ப்புத்தகத்தைப் படிக்கும் நிலை அவனுக்கு வரவில்லை. பெரிய யானையொன்றை , விலங்குகள் காட்சிச்சாலையில் கண்டு மிரண்டு மகிழும் குழந்தையைப் போல அவன் பார்ப்பது இருந்தது.

சில வருடங்களில் பெரும் விலங்குகள் நட்புகளாகிவிடும்.

Saturday, November 28, 2015

கம்பனை ரசித்தல் -2

கோவிந்த ராஜூவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை அவனைக்குறித்து எழுதவில்லை. ராஜபாளையக்காரர் என்று சொல்லிக்கொண்டாலும், அவன் பேசுவது ஜெரால்டு, சூசை பர்னாந்து போலவே தூத்துக்குடி பாஷையிலிருக்கும்.

இசக்கியப்பன் மும்பைக்கு வருகிறார் என்று சொன்னதே அவந்தான். “டே, அந்தக் கஞ்சப்பிசினாரி, 3ஏஸி டிக்கட் போட்டு வருது. கேட்டியா?. மழை சும்மாயில்ல மெட்ராசுல கொட்டுது இப்படி”
“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, னஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

“ஐயாங்... வேணும்லா. ரெண்டு வருசமா அஞ்சாயிரம் ரூவா , இப்ப தர்றேன், அப்பத் தர்றேன்னு இழுத்தடிக்காம்ல.”

“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, ஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

இனிமே ஒழுங்கா இருப்பான் என்ற நம்பிக்கையில் , இசக்கியை அவரது லாட்ஜ் அறையில் காணச் சென்றேன். பத்து நிமிசத்தில் ஹோண்டா ஸ்பெலெண்டர் பைக்கில் இருவரும் வந்து இறங்கினர். “ஏ, வாடே” என்றார் இசக்கி முகமலர்ந்து. அனுதாபத்துடன் “எளச்சிட்டியேய்யா? ” என்றார்.

“சுகர் இருக்குல்லா?”என்றேன் சிரித்தபடி.

“எனக்குந்தான் இருக்கு. ஊசி போட்டுக்கிடுதேன். அப்படியே போயி சாந்தி ஸ்வீட்டுல காக்கிலோ அல்வா. எளவு எத்தன நாளு கிடக்கோமோ? சட்டுபுட்டுன்னு போயிட்டா நல்லது என்னடே?”
என்றார் கோயிந்துவைப் பார்த்து.

அறையில் லுங்கியில் மாறியவர், தனது சூட்கேஸிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து வைத்தார். “அடிக்கியாடே? நல்ல சரக்கு பாத்துக்க. கஸ்டம்ஸ்ல நம்ம பய இருக்கான் , அவன் கொடுத்தான்”

”வேணாம் அண்ணாச்சி” என்றேன். கோயிந்து ஆவலுடன் பார்ப்பது தெரிந்து ”நீ வேணா அடி. ஆனா, வண்டிய இங்கிட்டுப் போட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போ, வெளங்கா?” என்றேன்.

“சரி”என்பதாகத் தலையாட்டி “ அண்ணாச்சி, ஒரு கிளாஸ் குடுங்க. எப்படி இருக்குன்னு பாப்பம்” என்றான்.

“ஆமா, நீ சொல்லித்தான் ஷிவாஸ் ரீகல் கம்பனிக்காரன் , சரக்கு சரிபண்ணப்போறாம்பாரு. அண்ணாச்சி, ஒரு லார்ஜு அடிக்கணுமுன்னு தோணிச்சி. ஊத்துங்கன்னு கேப்பியா, அத விட்டுட்டு...”

இருவருக்கும் சரியாக ஊற்றி, கீழே பெல் அடித்து சோடா வாங்கிவரச்சொல்லி, ஐஸ்கட்டிகளும் போட்டுக்கொண்டார்.
இரண்டு ரவுண்டுகள் வரை ஏதோதோ ஊர்க்கதை பேசினார்கள்.

திடீரென அவர் குரல் உயர்ந்தது. “லே, தே*** மவனே, கோயிந்து.. பைசா வேணும்னா எங்கிட்ட மட்டுந்தான் கேக்கணும் வெளங்கா?அதென்ன வீட்டுல பேச்சு?”

கோயிந்துவைப் பார்த்தேன்.  அவன் ஒருமுறை உறிஞ்சிவிட்டு ”
 நீங்க கிளம்பி நாரோயில் போயிட்டீய. அண்ணிதான் வீட்டுல இருந்தாக. அதான் அவங்ககிட்ட சொன்னேன்.அய்யாயிரம் எனக்குப் பெரிய அமவுண்ட்டு அண்ணாச்சி” என்றான்.

“இருக்கட்டும்ல. எங்கிட்டல்லா கேக்கணும். அதென்ன பொம்ப்ளேள்ட்ட கேக்கறது? அவ , நான் வீட்டுக்கு வந்ததும் ஒரு ஆட்டம் ஆடுதா. ஏற்கெனவே சகிக்காது. இதுல அழுவாச்சி வேற”

“அண்ணாச்சி” என்றான் கோயிந்து “ நீரு அவிய சொன்னதும் பைசா அனுப்புவீருன்னு தெரியாமப் போச்சி. அண்ணி கால்ல விழுந்து நன்னி சொல்லுறதா நெனச்சிக்கோரும்”

“நான் அனுப்பினேனா?” என்றார் அதிர்ந்து “எப்பலே?”

“பொறவு? ஒங்க அக்கவுண்ட்லேர்ந்துதான் வந்திருக்கும். முந்தானாத்தி வந்துச்சின்னு பேங்க்லேர்ந்து எஸ் எம் எஸ் வந்திச்சே? அதான் அண்ணிட்டே என் அக்கவுண்ட் நம்பரு, பேங்க் NEFT நம்பரு எல்லாம் கொடுத்தேம்லா?”

“செருக்கியுள்ள, அவ அனுப்பிச்சிருக்கா” என்றார் உதட்டைக் கடித்தபடி “ இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா பாரு. இருந்தாலும் பொம்பளேள்கிட்ட நீ கேட்டிருக்கக்கூடாதுல, சொல்லிட்டேன்”

கோயிந்துவீன் சிறிய விழிகள் ரத்தச்சிவப்பாயிருந்தன. “வே ,அண்ணாச்சி” குழறினான். ” ஒமக்கு என்ன மயிரு தெரியும்? அங்? பொம்பளேள்தான் நியாயமா இருப்பாவ. ஒம்மரை மாதிரி ஏமாத்திட்டுத் திரியமாட்டாவ, வெளங்கிக்கிடும் “

“குடிச்சுட்டு உளறுது நாயி”என்றார் இசக்கி சிரித்தபடி. கோயிந்து ஆவேசமானன்.

“இல்லவே, அனுமாரு தெரியும்லா? ராமருக்கு ரொம்ப நட்பு பாத்துகிடும்.. அவரு..”

“இவன் இப்ப ராமாயணஞ்சொல்லுதான். கேட்டுக்கடே” என்றார் என்னைப்பார்த்து. நான் நெளிந்தேன்.குடிக்கும், ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?

“கேளுவே. அனுமாரு லங்கைல போயி சீதையத் தேடி கண்டுபிடிக்காரு. அவ ஒரு மோதிரங்கணக்கா என்னமோ ஒன்னு, பேர் வரமாட்டேக்கி, சூடாமணியா? அதக் கொடுத்து விடுதா. இங்கிட்டு வந்தவன் ராமருகிட்ட போறான். இனிமேத்தான் கதயே இருக்கு”

“லே, தூக்கம் வருது. இங்கனயே கிட,என்னா? வாந்தி வச்சிறாதே. தா**ளி, அப்புறம் நீதான் அள்ளிப்போட்டு கழுவிவிடணும், சொல்லிட்டேன்” என்றார் இசக்கி, கட்டிலில் காலை நீட்டியபடி அமர்ந்து.

அவன் என்னைப்பார்த்தான். குழறியபடியே தொடர்ந்தான்.
“ராமருகிட்ட வந்துட்டு அனுமாரு, அவர் கால்லல்ல நேரால்லா விழணும்? அங்கன விழலையாம். திரும்பி நின்னு , இலங்கை இருக்கற பக்கமா விழுந்து விழுந்து எளுந்திரிக்கான் பாத்துக்க. மத்தவங்க எல்லாம் அதிர்ந்து போயிட்டாவ. இவன் என்னா, ராமனை விட்டுட்டு எங்கனயோ விழுதானே?ன்னு. ராமனுக்குப் புரிஞ்சுபோச்சி. சிரிக்காரு. ’லே, இவன் கரெக்ட்டா சீதையப் பாத்துட்டு வந்திருக்கான்’ங்காரு. ”

“அதெப்படி?”என்றார் இசக்கி கதை கேட்கும் ஆர்வத்தில்.
“அதாக்கும் சீக்ரெட்டு. முதல்ல நாம கும்புடவேண்டியது தாயாரைத்தான். அதான் சீவில்லிபுத்தூர்ல ஆண்டாள்தான் முக்கியம். கேட்டியளா? அவ , நம்மளப்பத்தி பெருமாள்கிட்ட “இந்தாரும், இந்தப்பய மோசம்தான். ஆனா திருந்தி வந்திட்டான். சும்மா சொணங்காதயும், அனுப்பி வைக்கேன். ஏத்துகிடும், என்னா?”ன்னு சொல்லி வப்பாளாம். நாம, பம்மி பயந்து பெருமாளே, யப்பான்னு போகறச்சே அவரு “ சே..ரி.. வால”ன்னு அன்பா ஏத்துகிடுவாராம்.”

“ஒனக்கு இது யார்ல சொன்னது?”

“அதாம் சொன்ன்னேம்லா? இது ஒரு கம்பன் பாட்டுன்னு சீவில்லிபுத்தூர்ல ஒரு சாமி சொல்லிட்டிருந்தாப்ப்ல. நான் தெருவுல நின்னிட்டிருந்தேன். அங்கன காதுல விழுந்துச்சி. இப்ப ஒம்ம கதையவே பாரும். அண்ணி பாத்து பைசா அனுப்பலேன்னா, இன்னும் அஞ்சு வருசத்துக்கு தாரன், தாரன்ன்னு சொல்லிட்டிருப்பீரு”

“தா**ளி , இந்த கம்பன் பெரிய ஆளுதான் என்னா?” என்றார் இசக்கி, கால்களை நீட்டி, ஆட்டியபடி. 

எனது நினைவுகள் அந்தப்பாடலைத் தேடின.

“எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுதிலன்.முளரி நீக்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகந் தழீஇநெடி திறைஞ்சி வைகினான்”  - சுந்தரகாண்டம்

“சரி, எத்தன மணிக்கு நாளைக்கு வரணும்?” என்றேன் பொதுவில்.
இசக்கியிடமிருந்து குறட்டைதான் வந்தது. கோவிந்த ராஜு, கட்டிலின் மறுபுறம் நீட்டிப்படுத்தான். அவன் ஏதோ முணுமுணுத்தது கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் நான் இல்லை.

அவர்கள் இருவருக்கும் ஒரு போதை, எனக்குள் மற்றொரு போதை .

வெளியே வந்தேன். மேகங்கள் விலகி நட்சத்திரங்கள் மெல்ல மினுக்கின. எத்தனை முறை இப்பாடலைக் கேட்டிருப்பேன்? இப்படியொரு யதார்த்தப் பார்வையில் பார்த்ததில்லை.

சிறிதாகத் தெரிகின்ற நட்சத்திரங்கள் , அருகிலிருக்கும் நிலவை விடப் பெரியன.

#கம்பனும்நானும்

Saturday, November 14, 2015

இரு நகரங்களும் , இரு கதைகளும்


நகர வாழ்வை எலும்புக் கூடாக வைத்து உருவாக்கப்பட்ட இரு உயிருள்ள கதைகள் 18வது அட்சக்கோடு மற்றும் பள்ளி கொண்ட புரம். இவை தமிழ் புதின இலக்கியத்தைத் தாக்கிய அளவு வேறு நகரங்கள் மையமாகக் கொண்ட கதைகள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தனிமனித உணர்வு, நகர வாழ்வில் தாக்கப்பட்டு, வேறு உருக்கொண்டு, வாழ்வை நகர்த்துவதில் சூழலுக்கு முக்கிய பங்குண்டு. “சமூக சிந்தனை மாறினால் தனிமனித சிந்தனை மாறும்” என்றார் கார்ல் மார்க்ஸ். சமூகத்தின் தாக்கம் தனிமனித உணர்வில் , அதனுள் இயங்கும் தளத்தில் உருவாக்கும் மாற்றம் ஒரு கதைப்பாங்காகிறது. அசோக மித்திரனின் 18வது அட்சக் கோடு புதினத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
தனிமனிதனின் வாழ்வு, பிற மனிதர்களின் செய்கையால், சிந்தனையால்,தாக்கபட்டு, அவன் வாழும் நகரம் நெருடலின்றி ஒரு போர்வையாக ,அதன் மேல் கவிந்து , அவ்வுணர்வுகள் தம்மில் தம்மில் தாக்கியவாறே மேற்க்கொண்டு செல்லுதலை நிகழ்த்தும் களமாக விளங்குவது மற்றொரு கதைப்பாங்கு. நீல. பத்மநாபனின் ‘ பள்ளி கொண்டபுரம்” புதினத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இரண்டிலும் நகரங்கள், தனிமனிதர்கள். நகரத்துக்கும் மனிதனுக்கும் நடக்கும் இடைவினைகள் மறைவாயிருந்து கதை நகர்த்துகின்றன. எவ்வாறு இருகதைகளும், நகர-மனித இடைவினைகளைக் கையாளுகின்றன? என்பதிலேதான் அவற்றின் வெற்றியும் தனித்தன்மையும் இருக்கின்றன.

சந்திரசேகரனும் ( 18வது அட்சக்கோடு), அனந்தன் நாயரும்( பள்ளி கொண்ட புரம்) , நகரத் தெருக்களில் பயணித்தபடியே வாழ்வினை உருமாற்றிக் கொள்கிறார்கள். தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும் மாறிவிடுகிறார்கள். முக்கியமாக அதில் பயணிக்கும் கதாபாத்திரங்களில் மாற்றம் ஒரு மலர் விரிவதைப்போல மிக மெதுவாக , பகிரங்க ரகசியமாக இயங்குகிறது. இந்த மாற்றங்களுக்கு திருவனந்தபுரமும், இரட்டை நகரங்களான ஐதராபாத்- செகந்திராபாத்-உம், தான் வினையில் ஈடுபடாது, வினையை நிகழ்த்தும் கிரியா ஊக்கிகளைப் போலச் செயல்படுகின்றன.

18வது அட்சக்கோடு கதை, இரட்டை நகரங்களின் குழப்பமான தெருக்களில் தொலைந்து போகவில்லை. மாறாக ஒவ்வொரு பயணத்திலும் சந்திரசேகரன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். அவனது மாற்றமே ஐதராபாத்தின் அன்றைய மாற்ற நிலையென நம்மால் ஊகிக்க முடிகிறது. நகரத்தின் வாழ்வுநிலை மாறும்போது, அவனது சிந்தனையும் செயலும் மாறுகிறது.

பள்ளி கொண்ட புரத்தில் , திருவனந்தபுரத்தின் நகர வாழ்வு நிலை மாற்றம் பெருமளவில் அனந்தன் நாயரின் வாழ்வை மாற்றவில்லை. மன்னரின் ஆட்சி நலிந்ததால், வேலை இழக்கிறார், மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதி உறுகிறார்கள், உற்பத்திப் பற்றாக்க்குறையால் அத்தியாவசியப் பொருட்கள் கோட்டா முறையில் வினியோகம், கோயில்களிலும் சமூக பொருளாதார மாறுதல் ( ஊட்டப் புரை சோறு கிடைப்பது நின்று போதல்) என்பது போன்றவற்றைத் தவிர நகர வாழ்வு அவர் வாழ்வை மாற்றி யமைக்கவில்லை.
சமூக மாற்றங்கள், நாயர் -ஈழவ திருமணம், நக்ஸல்பாரி அபிமானிகளைப் போலீஸ் துரத்துவது, இளைஞர்களின் வேதாந்தத் தேடல்கள் போன்றவை அனந்தன் நாயரின் வாழ்வை, நகரப் பொருளாதார, அரசியல் மாற்றங்களை விட அதிகமாகப் பாதிக்கின்றன. கணவனை விட்டு வேறு சம்பந்தம் கொள்வதில் தரவாட்டு நாயர் மகளிர் கொண்டிருந்த சுதந்திரம், கார்த்தியாயினி , அனந்தன் நாயரையும், பிள்ளைகளையும் விட்டுப் போவதையும், குஞ்ஞம்மாவி அம்மாவனை விட்டு மற்றவனோடு பகிரங்கமாகச் செல்வதையும் தெளிவாகப் படம் பிடிக்கிறது. மருமக்கத் தாயம் என்ற முறை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் புதியதாக, ஒரு சமூக அதிர்ச்சியாக தோன்றியிருக்கக் கூடும். இன்றும் தோன்றக் கூடும்.

பொருளாதார வேறுபாடுகள், சமூகத்தில் மனிதனை வேறு தட்டுகளில் வைப்பது எவ்வாறு ஒரு பெண்ணின் மனதைக் கறைபடுத்தி அவளை குடும்பத்திலிருந்து ஓடிப் போகச் செய்கிறது என்ற குரூர யதார்த்த்த்தை பள்ளிகொண்ட புரம் முன் வைக்கிறது. இதுபோன்ற ஒரு அவலத்தை 18வது அட்சக்கோடு எடுத்துக் கொள்ளவில்லை. பணக்காரப் பெண்கள் பதட்ட காலத்திலும் ஐஸ்க்ரீம் சுவைத்த நிலை இருப்பதை நினைக்கும் சந்திரசேகரன், அத்தோடு அகதிகளாக செகந்திராபாத் ரயில் நிலையமருகே டெண்ட் அடித்துத் தங்கியிருக்கும் மனிதர்களையும் நினைக்கிறான். மென்மையாக மட்டுமே இந்த பொருளாதார வேறுபாடுகள் கதையைத் தாக்குகின்றன. களம் 1947-48களில் நிஜாம் அரசின் தெளிவற்ற நிலை, அங்கு வாழ்ந்த மக்களின் பதட்டம், ரஜாக்கர்கள் லம்பாடிகளுக்கு இழைத்த கொடூரங்கள் என்பதோடு , மத இனக் கலவரம் என்று மாறுகிறது. ஆனால், பள்ளி கொண்ட புரம், சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்களின் அவலங்களைச் சுட்டிக் காட்டி ,பொருளாதார வேற்றுமை, சமூக அவலங்கள் எப்படி தனிமனித , குடும்ப வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதைக் காட்டுவதில் தீவிரமாக நிற்கிறது.

ஒற்றுமைகள் எனப் பார்த்தால், இரு நகரங்களும் தத்ரூப வரைபட துல்லியத்தோடு காட்டப்படுகின்றன. அத்தோடு அதன் மக்கள் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு உரையாடுவதில், இடைவினை நிகழ்த்துவதில், கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது.

முடிவு வரும்போது, இரு கதைகளும் ஒரு திடுக்கிடலை வாசகன் முன் வைக்கின்றன. இனவெறியின் கொடூர முகத்தைப் பார்க்க இயலாமல் சந்திரசேகரன் ஓடிக்கொண்டேயிருக்க, தன் மகளிடமும், மகனிடமும், அவர்களது அன்னையைப் பற்றிய ஒர் உண்மையைக் கூறி மேல் நோக்கிப் பயண ஆயத்தமாகிறார் அனந்தன் நாயர். இரு கதைகளும் நகரத்தினுள் நடக்கும் நிகழ்வுகளை கதாபத்திரங்களின் பயணம் என்ற இயக்கத்தின் மேலேற்றிக் கொடுக்கின்றன. இரு கதைகளிலும் பயணங்கள் முக்கியமானவை. நிகழ்வுகள், பயணத்திற்கெனவே காத்திருப்பது போன்று நிகழ்கின்றன. அவற்றில் அடியோடும் வேர்களைப் பற்றியபடி கதை முன் நகர்கிறது.

இன்றும் திருவனந்தபுரம், ஐதராபாத் செல்லும்போது கையில் பள்ளி கொண்ட புரம், 18வது அட்சக் கோடு இருந்தால் ஒரு ஜி.பி.எஸ் போல பயன்படுத்தி இடத்தைச் சரிபார்ப்போம். காலத்தின், சமூகத்தின், அதன் சவால்களின் வரைபடங்களை இப்புதினங்கள் மனதில் பதிக்கின்றன. கதையில் நாமே சந்திரசேகரனும், அனந்தன் நாயருமாக ஆகிவிடுகிறோம். அவர்களின் பயணத்தில் நாமும் சிக்கி, உருமாறி, இறுதியில் மீண்டும் பயணிக்கிறோம். இந்த முழு உரு மாற்றலே (Metamorphosis) இப்புதினங்களின் , இந்நகர அனுபவங்களின் வெற்றி.