நகர வாழ்வை எலும்புக் கூடாக வைத்து உருவாக்கப்பட்ட இரு உயிருள்ள கதைகள் 18வது அட்சக்கோடு மற்றும் பள்ளி கொண்ட புரம். இவை தமிழ் புதின இலக்கியத்தைத் தாக்கிய அளவு வேறு நகரங்கள் மையமாகக் கொண்ட கதைகள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தனிமனித உணர்வு, நகர வாழ்வில் தாக்கப்பட்டு, வேறு உருக்கொண்டு, வாழ்வை நகர்த்துவதில் சூழலுக்கு முக்கிய பங்குண்டு. “சமூக சிந்தனை மாறினால் தனிமனித சிந்தனை மாறும்” என்றார் கார்ல் மார்க்ஸ். சமூகத்தின் தாக்கம் தனிமனித உணர்வில் , அதனுள் இயங்கும் தளத்தில் உருவாக்கும் மாற்றம் ஒரு கதைப்பாங்காகிறது. அசோக மித்திரனின் 18வது அட்சக் கோடு புதினத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
தனிமனிதனின் வாழ்வு, பிற மனிதர்களின் செய்கையால், சிந்தனையால்,தாக்கபட்டு, அவன் வாழும் நகரம் நெருடலின்றி ஒரு போர்வையாக ,அதன் மேல் கவிந்து , அவ்வுணர்வுகள் தம்மில் தம்மில் தாக்கியவாறே மேற்க்கொண்டு செல்லுதலை நிகழ்த்தும் களமாக விளங்குவது மற்றொரு கதைப்பாங்கு. நீல. பத்மநாபனின் ‘ பள்ளி கொண்டபுரம்” புதினத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இரண்டிலும் நகரங்கள், தனிமனிதர்கள். நகரத்துக்கும் மனிதனுக்கும் நடக்கும் இடைவினைகள் மறைவாயிருந்து கதை நகர்த்துகின்றன. எவ்வாறு இருகதைகளும், நகர-மனித இடைவினைகளைக் கையாளுகின்றன? என்பதிலேதான் அவற்றின் வெற்றியும் தனித்தன்மையும் இருக்கின்றன.
சந்திரசேகரனும் ( 18வது அட்சக்கோடு), அனந்தன் நாயரும்( பள்ளி கொண்ட புரம்) , நகரத் தெருக்களில் பயணித்தபடியே வாழ்வினை உருமாற்றிக் கொள்கிறார்கள். தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும் மாறிவிடுகிறார்கள். முக்கியமாக அதில் பயணிக்கும் கதாபாத்திரங்களில் மாற்றம் ஒரு மலர் விரிவதைப்போல மிக மெதுவாக , பகிரங்க ரகசியமாக இயங்குகிறது. இந்த மாற்றங்களுக்கு திருவனந்தபுரமும், இரட்டை நகரங்களான ஐதராபாத்- செகந்திராபாத்-உம், தான் வினையில் ஈடுபடாது, வினையை நிகழ்த்தும் கிரியா ஊக்கிகளைப் போலச் செயல்படுகின்றன.
18வது அட்சக்கோடு கதை, இரட்டை நகரங்களின் குழப்பமான தெருக்களில் தொலைந்து போகவில்லை. மாறாக ஒவ்வொரு பயணத்திலும் சந்திரசேகரன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். அவனது மாற்றமே ஐதராபாத்தின் அன்றைய மாற்ற நிலையென நம்மால் ஊகிக்க முடிகிறது. நகரத்தின் வாழ்வுநிலை மாறும்போது, அவனது சிந்தனையும் செயலும் மாறுகிறது.
பள்ளி கொண்ட புரத்தில் , திருவனந்தபுரத்தின் நகர வாழ்வு நிலை மாற்றம் பெருமளவில் அனந்தன் நாயரின் வாழ்வை மாற்றவில்லை. மன்னரின் ஆட்சி நலிந்ததால், வேலை இழக்கிறார், மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதி உறுகிறார்கள், உற்பத்திப் பற்றாக்க்குறையால் அத்தியாவசியப் பொருட்கள் கோட்டா முறையில் வினியோகம், கோயில்களிலும் சமூக பொருளாதார மாறுதல் ( ஊட்டப் புரை சோறு கிடைப்பது நின்று போதல்) என்பது போன்றவற்றைத் தவிர நகர வாழ்வு அவர் வாழ்வை மாற்றி யமைக்கவில்லை.
சமூக மாற்றங்கள், நாயர் -ஈழவ திருமணம், நக்ஸல்பாரி அபிமானிகளைப் போலீஸ் துரத்துவது, இளைஞர்களின் வேதாந்தத் தேடல்கள் போன்றவை அனந்தன் நாயரின் வாழ்வை, நகரப் பொருளாதார, அரசியல் மாற்றங்களை விட அதிகமாகப் பாதிக்கின்றன. கணவனை விட்டு வேறு சம்பந்தம் கொள்வதில் தரவாட்டு நாயர் மகளிர் கொண்டிருந்த சுதந்திரம், கார்த்தியாயினி , அனந்தன் நாயரையும், பிள்ளைகளையும் விட்டுப் போவதையும், குஞ்ஞம்மாவி அம்மாவனை விட்டு மற்றவனோடு பகிரங்கமாகச் செல்வதையும் தெளிவாகப் படம் பிடிக்கிறது. மருமக்கத் தாயம் என்ற முறை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் புதியதாக, ஒரு சமூக அதிர்ச்சியாக தோன்றியிருக்கக் கூடும். இன்றும் தோன்றக் கூடும்.
பொருளாதார வேறுபாடுகள், சமூகத்தில் மனிதனை வேறு தட்டுகளில் வைப்பது எவ்வாறு ஒரு பெண்ணின் மனதைக் கறைபடுத்தி அவளை குடும்பத்திலிருந்து ஓடிப் போகச் செய்கிறது என்ற குரூர யதார்த்த்த்தை பள்ளிகொண்ட புரம் முன் வைக்கிறது. இதுபோன்ற ஒரு அவலத்தை 18வது அட்சக்கோடு எடுத்துக் கொள்ளவில்லை. பணக்காரப் பெண்கள் பதட்ட காலத்திலும் ஐஸ்க்ரீம் சுவைத்த நிலை இருப்பதை நினைக்கும் சந்திரசேகரன், அத்தோடு அகதிகளாக செகந்திராபாத் ரயில் நிலையமருகே டெண்ட் அடித்துத் தங்கியிருக்கும் மனிதர்களையும் நினைக்கிறான். மென்மையாக மட்டுமே இந்த பொருளாதார வேறுபாடுகள் கதையைத் தாக்குகின்றன. களம் 1947-48களில் நிஜாம் அரசின் தெளிவற்ற நிலை, அங்கு வாழ்ந்த மக்களின் பதட்டம், ரஜாக்கர்கள் லம்பாடிகளுக்கு இழைத்த கொடூரங்கள் என்பதோடு , மத இனக் கலவரம் என்று மாறுகிறது. ஆனால், பள்ளி கொண்ட புரம், சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்களின் அவலங்களைச் சுட்டிக் காட்டி ,பொருளாதார வேற்றுமை, சமூக அவலங்கள் எப்படி தனிமனித , குடும்ப வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதைக் காட்டுவதில் தீவிரமாக நிற்கிறது.
ஒற்றுமைகள் எனப் பார்த்தால், இரு நகரங்களும் தத்ரூப வரைபட துல்லியத்தோடு காட்டப்படுகின்றன. அத்தோடு அதன் மக்கள் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு உரையாடுவதில், இடைவினை நிகழ்த்துவதில், கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது.
முடிவு வரும்போது, இரு கதைகளும் ஒரு திடுக்கிடலை வாசகன் முன் வைக்கின்றன. இனவெறியின் கொடூர முகத்தைப் பார்க்க இயலாமல் சந்திரசேகரன் ஓடிக்கொண்டேயிருக்க, தன் மகளிடமும், மகனிடமும், அவர்களது அன்னையைப் பற்றிய ஒர் உண்மையைக் கூறி மேல் நோக்கிப் பயண ஆயத்தமாகிறார் அனந்தன் நாயர். இரு கதைகளும் நகரத்தினுள் நடக்கும் நிகழ்வுகளை கதாபத்திரங்களின் பயணம் என்ற இயக்கத்தின் மேலேற்றிக் கொடுக்கின்றன. இரு கதைகளிலும் பயணங்கள் முக்கியமானவை. நிகழ்வுகள், பயணத்திற்கெனவே காத்திருப்பது போன்று நிகழ்கின்றன. அவற்றில் அடியோடும் வேர்களைப் பற்றியபடி கதை முன் நகர்கிறது.
இன்றும் திருவனந்தபுரம், ஐதராபாத் செல்லும்போது கையில் பள்ளி கொண்ட புரம், 18வது அட்சக் கோடு இருந்தால் ஒரு ஜி.பி.எஸ் போல பயன்படுத்தி இடத்தைச் சரிபார்ப்போம். காலத்தின், சமூகத்தின், அதன் சவால்களின் வரைபடங்களை இப்புதினங்கள் மனதில் பதிக்கின்றன. கதையில் நாமே சந்திரசேகரனும், அனந்தன் நாயருமாக ஆகிவிடுகிறோம். அவர்களின் பயணத்தில் நாமும் சிக்கி, உருமாறி, இறுதியில் மீண்டும் பயணிக்கிறோம். இந்த முழு உரு மாற்றலே (Metamorphosis) இப்புதினங்களின் , இந்நகர அனுபவங்களின் வெற்றி.
No comments:
Post a Comment