Saturday, February 26, 2005

Pulinagak Konrai- my observations 6 (Concluding)

கதாபாத்திரம்:

கண்ணன் :
இப்பாத்திரம் கண்ணாடியெனச் சொல்லலாம். கதையின் ஓட்டத்தில், கண்ணனின் பாத்திரத்தின் வழியே , அவரது சிந்தனையின் வழியே , பல எண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. நம்பியின் ஒன்றுவிட்ட தம்பியாக வரும் கண்ணன், நம்பியின் கருத்துக்களால் ஆட்கொள்ளப்படுகிறார். அவரது அரசியல் கொள்கைகள், சமூகச் சிந்தனைகள் நம்பி, கோபாலபிள்ளை ,ராஜாராமன் போன்றோரின் பேச்சுக்களால் தாக்கம் பெறுகின்றன. மாறும் கொள்கைகள் கொண்டிருப்பதை ஒளிவில்லாமல் காட்டியிருப்பது, கண்ணனின் பாத்திரத்தை கண்ணாடியாகவே காணச்செய்கிறது.

மக்களின் போலித்தனத்தையும், தனிமனித மனமீறல்களையும் கண்ணனின் பாத்திர அமைப்பில் காட்டியிருக்கிறார்.
"கண்ணனுக்கு வெட்கமாக இருந்தது. மற்றவர்கள் தன்னைவிட மோசம் என்பதை அறியும்வரை.
கண்ணனின் சிந்தனைகள் என நடுவே ஆசிரியர் பேசியிருப்பது நன்று. எல்லாரும் தங்களது படிப்பின் ஆழத்தை மேற்கோள் காட்டுவதின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள். என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே, பலமணிநேரம் பேசுவார்கள்"

உமாவைக் காதலிக்கும் கண்ணன், பேருந்தில் போகும்போது, தான் படிக்கும் புத்தகத்தைப் பார்த்துப் பெண்களைக் கவரமுடியுமா எனப்பார்ப்பதான சிறிய சபலம்...
"உமா இதுபோல் குட்டித் துரோகங்கள் செய்வாளா?அவளது இருத்தலின் மையப்புள்ளியே நான் என ஒருமுறை எழுதியிருந்தாள். ஓரங்கள் எப்படியெனத் தெரியவில்லை. என்னுடையவை போல அவளுடையவையும் கறவப்படுகின்றனவா?" பக் 64

ராஜாராமன் அமெரிக்காவின் கலாச்சாரத்தைப் பற்றிப்பேசுவதால் கவரப்பட்ட கண்ணன், அவரோடு குழுவில் கலந்துகொள்கிறார்.
"அதிகம் தொந்தரவு செய்யாத குழு அது. கதீட்ரல் சாலையில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முனால் - அநேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் மூடியிருக்கும்போது- தொண்டை கிழியக் கத்திவிட்டு அருகில் இருக்கும் ட்ட்ரைவ் இன் உணவகத்துக்கு காபி குடிக்கப் போவார்கள்" பக் 211
ராஜாராமன் மைதிலியுடன் அமெரிக்காவில் குடியேறுகிறார்.

"ரெண்டு பேரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைஞ்சுட்டான்னு சொல்லு " என்கிறார் நம்பி கிண்டலாக. பக் 211

இதனால் கண்ணனின் பாத்திரம் கறைபடியவில்லை. உள்ளிருக்கும் கறைகளையும், பிற வழுகல் நிலங்களையும் காட்டுகிறது- தன்னில் ஒளி ஊடுரவ அனுமதித்து.

மது, ஆண்டாள், பட்சி ஐயங்கார், ரோஸா எனப் பலபாத்திரங்கள் இப்புலிநகக்கொன்றைத் தோட்டத்தில் அடர்ந்திருப்பினும், கவர்ந்த சிலபாத்திரங்களைப் பற்றி மட்டுமே என் எண்ணங்களை எழுதியிருக்கிறேன். பல சிந்தனை ஓட்டங்களை வாசகர்கள் தங்கள் வாசிப்பில் மேலும் சந்திக்கக் கூடும்.

நிதானமாகப் பலமுறை விட்டுவிட்டுப் படிக்கவேண்டிய புத்தகம் இது.
நல்ல வாசிப்பு அனுபவத்தை அளித்த பி.ஏ.கிருஷ்ணன் அவர்களூக்கு என் நன்றிகள்.

Friday, February 25, 2005

Pulinagak Konrai- my observations 5

பாத்திரப் படைப்பு

நம்பி : மார்க்ஸீயவாதத்தில் நிஜமாக வாழ்கின்ற மருத்துவர் . கம்யூனிசம் குறித்தான அவரது சிந்தனை இழைகள் இந்திய யதார்த்தமாக இருப்பினும், கண்மூடித்தனமான கம்யுனிசப் புரட்சிக்காற்றுக்கு அவை மிக மிக மென்மையானவை. அலட்சியப்படுத்தப்படுகின்றன. கலப்பு மணம் எனபதை அலட்டலாக, புரட்சியாகக் காட்டாமல், தனது வாழ்வின் இயல்பான மாற்றமாகவே ஆக்கிக்கொள்கிறார். ரோஸா என்ற சக மருத்துவரை(தன்னிலும் வயது முதிர்ந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்) மணந்துகொள்வதும் , கிராமங்களில் இலவசமாக மருத்துவ உதவிசெய்வதும், தனது கொள்கைகளின் காரணமாக என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், தன் மனதின்படி , சிந்தனையின் ஆழங்களில் , தானாகவே நம்பி எடுக்கும் முடிவுகள்.
நம்பியின் மார்க்சீயவாதம் கண்மூடித்தனமானதன்று. தவறாக எழுதப்பட்ட கம்யூனிச வாதங்களைத் தூக்கிஎறிகிறார்.

"சம்பாரண் விவசாயிகளின் போராட்டகாலத்திலிருந்தே, பெரு முதலாளிகள் மற்றும் பெருநிலப்பிரபுக்களின் ப்ரதிநிதியான காங்கிரஸ் தலைமை அகிம்சை, ராட்டை போன்றவற்றால் தேசீய இயக்கத்தை , ஏகாதிபத்தியத்திற்கும்.... இயந்ததாக அமைய முயற்சி செய்தது" இவ்வளவு வருஷத்திற்கு அப்புறமும் , காந்தியப்பற்றி இதுதான் இவங்களோட மதிப்பீடு-ன்னா இவங்க சங்காத்தமே வேண்டாம்-னு தோணுது" (பக் 282-83)
இந்த வார்த்தைகளைப்ப் பேசுவது, கம்யூனிசப் பாதையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பி.

தனது கம்யூனிசக் கொள்கைகள் எவ்வாறு இந்திய இயல்பிற்கு ஒத்துவரும் எனத் தெளிவாக இருக்கிறார். முக்கியமாக முகுந்தன் என்ற நக்ஸல் ஆதரவாளருக்கும் , நம்பிக்கும் ஏற்படும் வாக்குவாதம். (பக் 321-323)



கம்யூனிஸ ஆதரவாளர்கள் என்றாலே, மதத்தை எதிர்க்கவேண்டுமென நம்பி நினைக்கவில்லை. மதம் மக்களுக்குக் கொடுக்கும் ஒரு நல்ல சக்தி - நம்பிக்கை. அது எல்லைகளுக்கு அப்பால் போய், மூடநம்பிக்கையாகும்போது விபரீதமாகிறது. அதுவே , சரியாக அணுகப்பட்டால் , வாழ்வினை சமாளிக்கத் தன்னம்பிக்கையையும் அளிக்கமுடியும். அளித்திருக்கிறது பல நூற்றாண்டுகளாக. மதத்தில் பல குறைகள் இருப்பினும் இது ஒன்றிற்காகவே அதன் இருத்தலை நியாயப்படுத்தமுடிகிறது. இதுதான் எதிர்காலத்தில் அதன் raison de etre ஆக இருக்க முடியும்- மதத்தின் பிற வெளிப்பாடுகள் சிதைபட்டாலும்
ஒரு மனிதனிடமிருந்து அவனது மதநம்பிக்கையென்னும் ஒரு கோட்டையைத் தகர்த்துவிடுவதற்கு சமூக அநியாங்கள், லாஜிக் கொண்டு நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் போன்றவற்றை கைக்கொள்ளலாம். ஆயின், அவ்வாறு நம்பிக்கை நீக்கப்பட்ட மனிதன், காப்பின்றி நிற்கிறான். அவன் காலபோக்கில் சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் என்னும் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வது எங்ஙனம்?
மனிதன் கூடிவாழும் இயல்பினன். உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் பெருமளவில் கட்டுப்பட்டவன். எந்த தாக்குதல்களுக்கும் அவன் இந்த இரு சக்திகளின் உதவியை நாடுகிறான். இதில் தாக்கப்பட்ட உணர்வுகள் நம்பிக்கையில் அடைக்கலம் புகுகின்றன.. உணர்வுகள் தாக்கப்பட்ட சிந்தனைகள் கனன்று , மறுபடி தாக்கப்படுகையில், தானும் சேர்ந்து தளர்க்கும். இந்த விஷச் சுழற்றியில் (vicious circle) சிக்கித் திணறும் மனிதன் மீண்டும் நம்பிக்கையின் போதையை நாடுகிறான். அந்நேரம் தன்னம்பிக்கை கிட்டுமானால் பிழைத்தான். இல்லையேல், மூடப்பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதனிலும் கீழிறங்குகிறான், சமுகத்தின் முன்னே கனமான வீரமெனும் அங்கியணிந்து, உள்ளே நடுங்கி, இரட்டை வாழ்வு நடத்தியபடி.

எனவே, கம்யூனிசப் பாதைகள் கொள்ளவேண்டிய தார்மீகப் பொறுப்பு மனிதனை, வீண் நம்பிக்கையிலிருந்து, கம்யூனிச நம்பிக்கைக்கு தானே மாறச் செய்யத் தூண்டுவது, அதேநேரம், அவன் காலம்காலமாகக் கைக்கொண்டிருந்த நல்மத நம்பிக்கையில் கைவைக்காதபடி..

இதனை நம்பி சுருக்கமாகக் கூறுகிறார் - முகுந்தனுடனான வாக்குவாதத்தில்.
நாம(கம்யூனிசவாதிகள்), மக்களின் கலாச்சார, ஆன்மீகத் தவிப்புகளைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளலை.... நாம இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரத்தின் பின்னே போறவங்க என்ற எண்ணத்தைப் பரப்பிண்டு இருக்கோம். அது அவங்களுக்கு பல நன்மைகளை உண்மையிலேயே கொடுத்தாலும்...(பக் 320-321)

" கம்யூனிச மொழியே தனி மொழியா இருக்கு. நாம மக்களை மாறணும்னு சொல்லறோம். எப்படி மாறணும்னு சொல்லறது கிடையாது. ....
இந்த வழியெல்லாம் ( வழிபாடுகள்) குப்பைக்கூளம். ..ஒத்துக்கறேன்.ஆனா நம்பறவனுக்கு நாத்தம் பெரிசில்லை. நாம சொல்லறோம். எங்க வழில வா. நல்லதுதான் ஆனா அவன் வழியை அடைச்சுட்டு இதுல வா-ன்னா அவன் நம்பபோறதில்லை. நாம ஏன் அவனோட அந்த வழில கொஞ்சதூரம் போகக்கூடாது. குப்பையள்ளற வேலையைச் செய்யக்கூடாது? கடைசில நாம திசைதிரும்பி, இப்போ எங்ககூட வாங்க-ன்னு சொன்னா, அவன் நம்மவழியில வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு." (பக் 321)
"நான் மதத்தை மனிதகுலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த உபயோகப்படுத்தலாங்கறதை நிச்சயம் நம்பறேன்.அம்புலிமாமா கதைகள், மக்களுக்கு, அதுவும் மாற்றத்தின் விளிம்பில் இருக்கிற மக்களுக்கு, நிச்சயம் தேவை." (பக் 322).
"மதத்தின் மேல நமக்கு இருக்கிற மூடத்தனமான வெறுப்பும் , அதன் நல்ல அம்சங்களைக் கண்டுக்காம விடுவதும்தான் நம்மை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கு" பக்க் 323


இத்தனைத் தெளிவாக இருக்கும் நம்பி, தனது மரணத்தில் , கடிதம் மூலம் அவர் தனது வலிகளினூடே, தான் நடந்து வந்த பாதை தவறாகத் தெரிவதாகக் காண்பித்திருப்ப்பது யதார்த்தமாக இருக்கலாம். அது, நம்மாழ்வாரின் தயக்கப் புரட்சியாளரின் பாத்திரத்தையும் உறுதிப்படுத்தியிர்க்கலாம். ஆயின், நம்பியென்ற மிக அருமையான பாத்திரம் வீணே, கதைக்காக இறுதியில் வலுவிழக்கிறது எனப்படுகிறது.

Wednesday, February 23, 2005

BIG THANKS!

சகோதரி ஜெயந்தி சங்கர் (சிங்கை) அவர்களுக்கு நன்றி. ஏனோதானோவெனக் கிடந்த இந்த வலைப்பூவின் வரிகளை உரிமையுடன் சீரமைத்துக் கொடுத்து உதவியதற்கு.

Tuesday, February 22, 2005

NaatuppuRappaadalkaL

நாட்டுப்புறப்பாடல்களுக்கெனத் தனி இடமுண்டு எந்த இலக்கியத்திலும். நமது நாட்டுப்புறப்பாடல்களின் எளிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும்பாங்கு, பொருட்செறிவு குறித்து எவ்வளவு எழுதினாலும் குறைவாகவே இருக்கும்.

பிற மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு ஆராயப்பட்டு பதிவு செய்யப்பட்டு , அம்முயற்சிகளின் முன்னோடிகளுக்கு மதிப்பும் கொடுக்கப் படுகிறது. இங்கு தான் நமது மொழி வளர்ச்சிக் கொள்கைகள் பிறழ்கின்றன.

1940-50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் திரு.அன்னகாமு அவர்கள். தென் தமிழ் நாட்டில்(குறிப்பாக மதுரை மாவட்டம்) கிராமம் கிராமமாகச் சொன்று இப் பாடல்களை மிகச் சிரமத்துடன் திரட்டியவர். ஒலிப்பதிவு வசதிகள், போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அக்காலக்கட்டத்தில் இப்பணி எளிதல்ல.இப் பாடல்களைத் திரட்டி, பதிவு செய்து புத்தகமாகவும் வெளியிட்டார். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்"எனப் பெயரிட்ட இப்புத்தகம் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தால் வெளியிடப் பட்டது 1970 களில் இறுதிப் பதிவாகியது - நான் அறிந்த வரை.

இந்நூலின் முகவுரையில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் இம்முயற்சியைப் பாராட்டி எழுதியிருக்கிறார். எனது இம்மடலின் நோக்கம் இந்நூலைப்பற்றி நாட்டுப்புறப் பாடல்களின் இக்காலத்து மன்னர்கள் பலரும் குறிப்பிடுவதில்லை என்னும் வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். எவரேனும் இதனை மறுதலித்து, இந்நூலைப்பற்றிப் பேசியிருப்பதை சுட்டிக்காட்டின், மிக மகிழ்வேன்.

இது பரவாயில்லை. இந்நூலில் நான் படித்த பாடல்கள் பலவும் திரைப்படங்களில்பெருவெற்றி பெற்ற பாடல்கள். ஒருவர் கூட அமரர். அன்னகாமு அவர்களின் முயற்சியைத் தம் திரைப்படங்களில் நன்றி தெரிவிக்கவில்லை என்பது மிக வருத்தற்குரியது.

உதாரணம் - சிந்து பைரவி "பாடறியேன் படிப்பறியேன்" - பாடல். இது இந்நூலில் பிரதானமாகக்காணப்படுகிறது. கவிஞர்கள் நாட்டுப் புறப்பாடலுக்கு என்ன ராயல்டி கொடுக்க வேண்டும் ? எனக் கேட்கலாம். நான் கேட்பது ராயல்டி -யல்ல. இப்பாடல் நமக்குக் கிடைக்கத் தந்ததற்கான நன்றியும், மதிப்பும்திரு.அன்னகாமு அவர்களுக்குக் கிடைக்கப் பெறவேண்டுமென்பதே.'ஊரார் உறங்கையிலே, உற்றாரும் தூங்கையிலே" -திருச்சி.லோகநாதன்டூயட்டாகப் பாடிய பழைய பாடல். பல பாடல்கள் , இந்நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் பெற்றவை என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்நூல் கிடைத்ததே ஒரு கதை.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகில் ஒரு அல்வாக் கடையருகே நின்று கொண்டிருந்தபோது, அருகேயிருந்த சைவசித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் கடையில் இருந்த புத்தகங்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அட்டை கிழிந்துப்போய், வேறு கலர் காகிதத்தால் அட்டை தைக்கப்பட்டு, கையால் தலைப்பு எழுதப்பட்டிருந்த இப்புத்தகம் கவனத்தைக் கவரவே, எடுத்துப்பார்த்து துணுக்குற்றேன். பத்து வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம்.... "இதுதான் கடைசிப் புத்தகம். கடைசிப்பதிப்பு" என்று கடைக்காரர் சொன்னபோது வருத்தம் வந்ததை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
என்று நாம் இம்முன்னோடிகளுக்கு மதிப்பு தரக்கற்றுக் கொள்கிறோமோ, அன்று தான் நம் மொழி வளர்ச்சி-களுக்கான முயற்சிகள் அர்த்தம் பெறும்.

Pulinagak Konrai- my observations 4

பாத்திரப் படைப்பு
--------------

பொன்னா: புரட்சிகரமானப் பாத்திரம் என்றில்லாவிட்டாலும், யதார்த்தமாகவும், அதே நேரம் தெளிவாகவும் சிந்தித்துச் செயல்படும் பெண்பாத்திரம். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏழ்மையிலிருந்து, வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண், தன் கணவனின் குறைபாடுகளை அறிந்து, தெளிவாகத் தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து தெளிவாக முடிவெடுக்கிறாள் - திருநெல்வேலியில் படிக்க வைப்பதாக.

பெண்கள் அதிகம் படிக்காத, தன் உணர்வுகளைப் பேசி வெளிக்காட்டவும் முடியாத காலகட்டத்தில், ஒரு சமையற்காரரின் பெண், இத்தனை தெளிவாக முடிவெடுப்பதே ஒரு புரட்சிதான்.

இளம் விதவையான தன் பெண்ணின் இளமைமீறல்களைப் பொறுமையாகவும், நிதர்சனமாகவும் எதிர்கொள்வதாகக் காட்டியிருப்பது,அப்பாத்திரத்தின் மேல் மதிப்பு கூட்டுகிறது.

நம்மாழ்வார்: மிகப்பிடித்த பாத்திரங்களில் ஒன்று. சுயராஜ்ஜியச் சிந்தனை, புரட்சிப்பாதை, ஆஷ் கொலையின் பிண்ணணியில் வந்த பயம், ஒரு reluctant revolutionary எனக் கொள்ளலாம். வீட்டைவிட்டுப் போவதற்கான பின்னணி அழுத்தமாக இல்லை. அவரது தயக்கங்கள் ,மனைவி இறந்தபின் மனப் போராட்டம் போன்றவற்றால் சுயராஜ்ஜிய கொள்கையில் மனம் வழுகியது, என்பதைக் காட்டுவதாக எழுதப்பட்ட கடிதம் - வெளிப்படையாக அவரது குணாதிசய கவசத்தில் விழுந்த ஓட்டைகளைக் காட்டியிருப்பதாகக் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் வலிதாகக் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. திண்ணம், வீரம் போன்றவை பிராமண தயக்கங்களில் அழுந்திப்போகும் என்பதையும் காட்டுகிறது.

இதே போல, மற்றொரு கடிதத்தின் உதவியையும் ஆசிரியர் நாடியிருக்கிறார். அது நம்பியின் கடிதம் - கண்ணனுக்கு. "நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோஸாவுக்கோ ஒருபயனையும் இதுவரை அளிக்கவில்லை என இப்போது தோன்றுகிறது.....நிறைவேறவே முடியாதக் கொள்கைகளைக் கட்டிக்காப்பதில் என்ன கிடைக்கப்போகிறது? Now Gods, stand up for bastards. அவன் எப்போதும் வடிகட்டிய அயோக்கியர்களூக்கே துணை நிற்கிறான். அயோக்கியர்களுக்கு மட்டும்....

என் தவளை வயிறு அவளுக்குத் தெரியவேண்டாம்" பக் 327-328

வலியின் உச்சத்தில் , மனவுறுதி குலைந்த நிலையில் ஒர் கிறக்கத்தில் அவர் எழுதியதாகவே இருக்கட்டும். இருப்பினும், .இது மீண்டும் நம்மாழ்வாரின் நிலையைத் திரும்பிக்கொணர்கிறதோ ? கடைசி வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன "அவன் ( கண்ணன்) முடிவெடுக்கத் தெரியாதவர்களூக்கும் துணை நிற்கலாம்" பக் 328

Monday, February 21, 2005

Pulinagak Konrai- my observations 3

பாத்திரங்களின் சொற்ப்ரயோகங்கள் (º¢Ä ÁðÎõ)
--------------------------------------

தென்கலை ஐயங்கார் வார்த்தைப் ப்ரயோகங்கள் 19ம் நூற்றாண்டு- 20ம் நூற்றாண்டுத் தொடக்க வருடங்கள் ( 30கள் வரை)அதிக மணிப்பிரவாளமாகவே இருந்திருக்க வேண்டும்...( திருநெல்வேலித் தமிழ் கலந்ததாக - குறீப்பாக வானமாமலையில்) காலத்தால் ,சில வார்த்தைகள் இப்போது வழக்கில் இல்லை. இந்த CONVERSATIONAL DIALECT ஐக் கொண்டுவந்த விதம் பல இடங்களில் பாராட்டிற்க்கும், ஓரிரு இடங்களில் ஒரு மீள்பார்வைக்கும் வைக்கப்ப்படலாம்.

அன்றைய வக்கீல்/கல்லூரி படிப்புப் படித்தவர்களின் பேச்சில் ஆங்கிலம் பெரிதும் காணப்பட்டது.பெரும்பாலும் சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். (18ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் லத்தீனில் பேசுவது படித்தவர்களின் அடையாளமாக கருதப்பட்டது போல. இதனை கவனித்துக் கொணர்ந்திருக்கிறார்.) ஆயினும் தமிழில் இருக்கவேண்டும் என்பதற்காக , சில உரையாடல்களைத் தமிழில் நகர்த்தியிருப்பது ( அது தென்கலை ஐயங்கார் dialect ஆக இருப்பினும்), conscious efforts போலத் தோன்றுகிறது.

வரலாற்றுப் பாத்திரங்களின் அறிமுகம் இயற்கையாக அமைந்துள்ளது. பாரதியின் அறிமுகம் அவருக்கே உரித்தான முத்திரையுடன் நம்மாழ்வாருடன் உரையாடுவதாகத் தொடங்கியது மிக இயல்பு.

" உன் பெயரென்னடா? நம்மாழ்வார்.. இந்தப்பெயரை வைச்சுண்டு சிறியன சிந்திக்க முடியுமா?." பக் 124

"நம்மாழ்வார் ஈயைப் போல வாழ்க்கை நடத்தவேணுமா?பெரிதாகவே நினை." பக் 125 சத்தியமான பாரதி முத்திரைகள்..

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், திருவைகுண்டம் எனப் போகும் இடங்களில், பனங்காற்று வட்டாரமொழியில் கலந்திருக்கும். திருநெல்வேலித் தாமிரபரணியின் ஈரத்தோடு.. இது இருந்து பார்த்தவர்களுக்கு சற்று எளிதில் புலப்படும். சிதம்பரம்பிள்ளையுடனான உரையாடலில் திருநெல்வேலி வட்டாரமொழியோடு, தூத்துக்குடி வட்டாரவழக்கை சற்றுத் தூக்கலாகவே பயன்படுத்தியிருப்பது, மிக மிக நுண்ணிய வட்டார மொழி வேறுபாடுகளைப் பிடிப்பதில் ஆசிரியர் எடுத்துக்கொண்ட சிரமம் தெரிகிறது.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் அறிமுகம் தொடங்குவது அவர் வீட்டில்.

'கறுப்பு, குள்ளம். துளைக்கும் கண்கள் (சிதம்பரம் பிள்ளை) பக் 115

"இந்த மழையில வாரத்துக்கு என்ன அவசரம். எங்கவீட்டுல காப்பி குடிப்பீரா?" பக் 115

வெகு இயல்பான வார்த்தைகளின் ப்ரயோகம். 80களிலும் இந்தக் கேள்வி பல வீடுகளிலும் கேட்கப்பட்டது. "பேரு என்ன? நம்மாழ்வாரா?.. ஐயங்கார்ல இந்தப் பேரு பாக்குது சிரமமாச்சே?" பக் 115

"பேரு பாக்குது" என்பது தனிவட்டார வழக்கு. தென் மண்டலத்தில் ( குறிப்பாக நெல்லைக்குத் தென் கிழக்காக )குறிப்பாக சைவப்பிள்ளைமார்கள் வெகு சகஜமாகப் பயன்படுத்தும் வார்த்தைப் ப்ரயோகம். சிதம்பரனார் இவ்வாறு பேசினார் என்றால் கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்.

சிதம்பரனாரின் நகைச்சுவை உணர்வு வரலாற்றில் பல இடங்களில் சிலகிக்கப்படுகிறது.. அது வெள்ளையர்களை எதிர்த்துப் பேசுவதிலாகட்டும், சுப்பிரமணிய சிவாவுடனும், பாரதியுடனும் பேசுவதிலாகட்டும் - தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது satire பரவலாகவே வெளிப்பட்டது. இதனைக் கவனமாக அவரது உரையாடல்களில் ஆசிரியர் கையாடியிருக்கிறார். சிவாவுடன் சிதம்பரனார் மேடையினின்று மக்களிடம் பேசும்போது, அவர்களின் திடீர் உரையாடல்கள் மக்களை மேலும் தட்டியெழுப்பும். உற்சாகப் படுத்தும்.

உதாரணமாக
சிதம்பரம் ஒரு மேடைப் பேச்சில் சொன்னார் " வெள்ளையர்கள் இந்த நாட்டை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறவேண்டும்" சிவா உடனே எழுந்தார். "ஏல சிதம்பரம். என்ன சொன்னாய்? மூட்டை முடிச்சுகளுடனா? அவை நம்முடையவை. எல்லாத்தையும் இங்கனயே போட்டுட்டு ஓடணும்னு சொல்லு"

இது போன்ற பேச்சுகள் சர்வ சாதாரணமாய் புழங்கிய காலத்தில் கதையில் நம்மாழ்வார் சிதம்பரனாரைச் சந்திக்கிறார். "..வடகலையா? தென்கலையா? தென்கலைதானே? அதான பாத்தேன். வடகலையார் தமிழ்ப்பேர் வைக்கிறதாவது." பக் 115 உள்சாதிப் பூசல்களை கிண்டலாகச் சொல்வதில் சிதம்பரனாரின் satire தெரிகிறது. "எந்த ஊரு? ஆழ்வார் பிறந்த ஊரா? நாங்குநேரியா? "நோற்ற நோண்பிலேன் நுண்ணறிவிலேன். " இதுதான உம்ம ஊர்ப் பாட்டு? உமக்கு ரெண்டும் இருக்கும்போல இருக்கே?"
சிதம்பரனாரின் சொல்லாடல் , கூர்மையான அறிவுத்திறம், சமயோசிதமாகப் பேசும் திறம் எல்லாம் வெளிப்பட அமைந்திருக்கிறது.

Sunday, February 20, 2005

Pulinagak Konrai- my observations 2

புலி நகக்கொன்றை- 2

சாதி ஒழுங்குகளும் தனிமனித மீறல் முயற்சிகளும்
-----------------------------------------------

தென்கலை ஐயங்கார்கள் என்ற வகுப்பினை எடுத்துக் கொள்ளூம் போது ஆசிரியருக்கு பல வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. இச் சமூகத்தில் வடமொழி,
பிராமணீயம் சார்ந்த வேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை." பட்சி தென்கலை சம்ப்ரதாயத்தை விட்டுட்டு இப்படி மீமாம்சகா வழியிலே போறது ஆச்சரியமாயிருக்கு.அவனை நம்மாழ்வாரைத் திரும்பிப் படிக்கச் சொல்லு. குறிப்பா "சூழ் விசும்பி அணி முகில்" பாசுரங்களைப் படிக்கச் சொல்லு" நம்மாழ்வார் ( பக் 320)

ஆயினும் ,ப்ராமண சமூகமென முத்திரையிடப்பட்டதால், சடங்குகள் அவசியமாகின்றன.நாளடைவில் , சடங்குகள் வெற்றி கொண்டுள்ளன - இறுதியில்
கண்ணனை வைதிகம், புறவாழ்வில் வெற்றிகொள்வது போல சாதி அற்ற சமுதாயத்தை ஏற்படுத்த முயன்ற இராமானுசரின் கொள்கைகள் காலப்போக்கில் ஒரு சடங்குகள் நிறைந்த சாதியில் புதைந்தது.அச்சடங்குகளை மீறுவதில் உள்ள போராட்டத்தைக் காட்டுவதற்கு ,பிற கொள்கைகள் ( கம்யூனிசம், நாத்திகவாதம்) எவ்வாறு சாதீய வாதத்தை எவ்வாறு தாக்கின என்பதை இக்கதை யோட்டத்தில் பின்னிப் பிணைக்க ஆசிரியரால் முடிகிறது. ஒரு புறம் பகுத்தறிவு வாதம், மற்றொரு புறம் கற்றவர்களின் கையில் கம்யூனிசம் எனப் போர்க்கோலம் பூண்டிருக்க, சாதீய வாத ஒழுங்குகளைப் பின்பற்றவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் திணறிய இரு தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரால் நன்கு கையாளப் பட்டிருக்கிறது. பெரியாரின் பேச்சுகள், பகுத்தறிவாளர் ஒருவரின் மேடைப்பேச்சு ( பக்241-243)

இதற்கெல்லாம் முன்னே, ஆங்கிலேயரின் முயற்சிகள் -தாழ்சாதியைச் சேர்ந்தவொருவனின் பிண ஊர்வலம் நகருக்குள் செல்வதில் இருந்த எதிர்ப்பு, அதன் விளைவுகள்(பக் 34 ) இவை கதையை நகர்த்த தக்க இடங்களில் வசதியாக இருந்திருக்கின்றன.

.வடகலை- தென்கலை பிரிவினரின் பூசல்கள், ஐயர்-ஐயங்கார் பூசல்கள் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனை சமூகத்தில் பெரிதுபடுத்திக்காட்டியது
என்பது இக்கதையில் நன்கு உதவியிருக்கிறது.

வைணவச் சாதிஒழுங்குகள், உள்சாதி அரசியல்கள் எவ்வாறு பெண்களைப் பின் தள்ளியது என்பதற்கு ஆண்டாளின் மறுமண முயற்சித் தோல்வி காட்டுகிறது. ஜீயர் சொல்கிறார்" நான் இருக்கிற வரை சாஸ்திரத்திற்கு எதிரா நடக்க விடமாட்டேன். சாண்டில்யர் என்ன சொல்லறார் தெரியுமா?. விதவையானவா.. புருஷ சேர்க்கையையும் அறவே தவிர்க்கணுமாம். இதைப்பண்ணற விதவைகளெல்லாம் ரொளரவம் என்கிற நரகத்துக்குப் போவாளாம். மகாக் கொடூரமான நரகங்கள்ள ஒண்ணு ரெளரவம். உம்ம பொண் அங்க போக உமக்கு இஷ்டமா?.....ஏற்கெனவே வடகலையாரெல்லாம் நம்ம விதவைகள் முண்ணடனம் செய்துக்கலைன்னு தூஷிக்கிறா. இப்போ மறுவிவாகம் பண்ண ஆரம்பிச்சோமோ,
நாமெல்லாம் ப்ராம்ணாளே இல்லைன்னு சொல்லிடுவா....
தென்கலையாருக்கும் கெட்டபேர் வர்றபடியா எதாவது செய்துடாதயும்." (பக் 63)

இரு விதமான சங்கிலிகள் இங்கு கட்டிப்போட்டிருக்கின்றன.

1. புராணங்களின் அடிப்படையிலமைந்த ஒழுங்குமுறைகள் (mythical regulations).

2. பிற சமூகத்துடனான போராட்டம் ( inter group rivalry).

இந்த சமூகப்போராட்டங்களின் வலு, பட்சி ஐயங்கார் ஏற்று நடத்திய வழக்குகளில் தெரிகிறது.

இளம்விதவையான ஆண்டாளின் தேவைகள் சமூக ஒழுங்கால் காலநீரில் அமுக்கப்படுகையில், அவை பொத்துக் கொண்டு வெளிவர, எழும் போராட்டங்கள் ... அவள் பின்னால் மனநிலை குலைந்த நிலையில் இறக்கும்வரை வருவதாய்க் காட்டியிருப்பது , நம்மில் கனத்த மொளனத்தைக் கொண்டு
வருவது நிஜம்.

இச்சமூக ஒழுங்குகள் எவ்வாறு கண்ணனைத் தாக்கின என்பதையும், அவர் எவ்வாறு ஊரோடு ஒழுகுதல் என்பதற்காக சடங்குகளில் ஈடுபடுகிறார்
என்பதையும் இறுதியில் காட்டியிருப்பதில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதும் அவரது மனநிலையைச் சொன்னவிதம் நன்று.."அவனது(கண்ணனின்) பூணூல் புதியது. பளீர் என்ற வெள்ளை ( பக்கம்319)

நம்பி கண்ணைக் கசக்கிக்கொண்டு இக்குண்டத்தை வட்டமிடுகிறானா? அவனது மார்க்சிய ஆத்மா அவனுக்குப் படைக்கப்படுபவைகளை ஏற்றுக்கொள்கிறதா? (பக் 319)

பட்சி தென்கலை மார்க்கத்தை மறந்துவிட்டதாகத் தெரியவில்லை. அவரது வற்புறுத்தலால் கண்ணன் ஜீயர் செய்த பஞ்ச சம்ஸ்காரத்தில்
சேர்ந்துகொண்டான்.அவன் வைணவ மார்க்கத்தில் சேரும் சடங்கு (319)

புகை கண்ணை எரித்தது ....என்னுடைய ஆயுள் என வரும்போது கொள்கைகள் மறைந்துவிடுகின்றன....மதம் மனத்திற்கு அமைதி தருமானால் அதன்
மடியில் சேர்வது என்ன தவறு? (பக் 320)

அவன் ( நம்பி) நிச்சயமாக ப்ரத்யங்காரா வேள்வி பற்றிப் பேசவில்லை.அவன் பிராமண மதத்தோடு கை குலுக்கியிருப்பானா?இந்த நெய்யைக் குடிக்கின்ற
சடங்குகளில் கலந்து கொண்டு இருப்பானா? ( பக் 323)"

உள்ளெளும் கேள்விகளுடன் கண்ணன் நடத்தும் போராட்டங்களில் வெளியில் சமூகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆயின் , இந்தப் போராட்டமே
வெற்றியாகத் தான் எனக்குப் படுகிறது.

Saturday, February 19, 2005

Pulinagak Konrai- my observations 1

பி.ஏ.கிருஷ்ணனின் "புலிநகக் கொன்றை" படித்தேன்- ஐந்தாவது முறையாக. ஒவ்வொரு முறையும் ஒரு பரிமாணத்தைப் பிடித்துக்கொண்டு கதையை ரசிக்கும் அனுபவம் சமீபத்தில் இவ்வாறு ஏற்பட்டதில்லை.

ஒரு நான்கு தலைமுறைகளின் வளர்சிதைமாற்றம், வரலாற்றுப் பின்ணணி, தனிமனிதப் பாத்திரப்படைப்புகள், அவற்றின் குணாதிசயங்கள் என நீளும் இக்கதையின் genuinity of expression , கதையின் மீது ஒரு பற்றும், மரியாதையையும் ஏற்படுத்துகிறது.

ஒரு முறை - கம்யூனிசத் தத்துவம்,மற்றொரு முறை - சுதந்திரப் போராட்டத்தில் தனிமனித உணர்வுப் போராட்டம், ஒரு குடும்பத்தின் வளர்சிதை மாற்றம், மதக் கோட்பாடு களும் (அவற்றின்) மனித மீறல்களும் என பல பரிமாணங்களில் இக்கதையை அசைபோட வைத்ததே பி.ஏ.கிருஷ்ணனின் முதல் வெற்றி என நினைக்கிறேன்.

புலிநகக் கொன்றையின் தாழ்ந்த கிளைகளும் அவற்றில் கூச்சல் போடும் பறவைகளும் - இந்த உருவகம் குறித்து பல முறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. பறவைகள் பலவிதம் - ஓவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு விதமான கூச்சல்கள்.. பறவைகளின் ( எண்ணங்களின்) விவரிப்பு ப்ரமிக்க வைக்கிறது.

நம்மாழ்வார் என்னும் பாத்திரத்தின் உலக விரக்தி (?) அவரைத் தன் அன்னையிடமிருந்தே போக வைக்கிறது. தன் குழந்தையிடம் கூடப் பாசம் வளர்க்காது... இதன் பின்னணி கொஞ்சம் கூடவே சொல்லியிருக்கலாமோ? எனவும் படுகிறது.

எதையும் ஆராய்ந்து, சந்தேகப்பட்டுப் பின் கைக்கொள்வதில் தயக்கம் காட்டும் அறிவுஜீவியென --நம்பியின் பாத்திரப் படைப்பு அப்பாத்திரத்தோடு நம்மையும் பொருத்திப் பார்க்கக் தூண்டுகிறது.

கம்யூனிசக் கொள்கைகளின் தாக்கமும், தனிமனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளுதலும் என்பதில் தொடங்கி, முகுந்தனும், நம்பியும் அதுகுறித்துப் பேசுவது(பக் 321-322) வரை அருமையாகக் கொணர்ந்திருக்கிறார். கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றிய விவாதங்கள் என்பது அண்மைக் காலம் வரை சூடுபறந்துகொண்டிருந்தன. 50s-70s ல் இந்த விவாதங்கள் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் இருந்திருப்பதை அழகாகக் காட்டியிருக்கிறார். கம்யூனிசத் தலைவர்கள், அவர்களின் பேச்சுகள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் சரியான இடங்களில் கையாளப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக "மாவோவின் பேட்டி"

"....From the long range view, future generations ought to be more knowledgeable than we are. Their judgment would prevail, not ours and they would assses the work of revolution .....In thousand years from now all of us, even Max, Engels and Lenin would possibly appear rather ridiculous"

இந்த பரந்த தொலைநோக்குப் பார்வை , கண்மூடித்தனமான கம்யூனிசத் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் இல்லாது போனதும் அது உடைந்ததற்கு ஒரு காரணமாயிருக்குமோ?

மற்றொரு பரிமாணம் காணக்கிடைக்கிறது. தெளிவான மறுதலிப்பும் இல்லாமல் ,முழுதும் நம்பவும் இயலாத அறிவுஜீவிகள் கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு , உறுதியாக இயக்கங்களில் ஈடுபடாதது.

நம்பி சொல்கிறார்.(பக் 251)
"All we have gained by our unbelief
Is a life of doubt diversified by faith
For one of faith diversified by doubt"

"நான் மதத்தை மனிதகுலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த உபயோகப்படுத்டலாங்கிறதை நிச்சயமா நம்பறேன்...மதத்துமேல உள்ள முடத்தனமான வெறும்ப்பும் அதனுடைய நலல அம்சங்களைக் கண்டுக்காம விடறதும் தான் நம்மை மக்களிட இருந்து அன்னியப்படுத்தி இருக்கு" (பக் 323)

சிந்திக்கவேண்டிய வார்த்தைகள் இவை. பகுத்தறிவுப் பாசறையும் கம்யூனிசக் குழுக்களும் மதத்தைக் கையாடிய விதம்தான் அவற்றின் எதிர்ப்பலைகளுக்குக் காரணமோ?

இக்கதையின் வேறு கண்ணோட்டங்களை பின் காண்போம்.

ParundhukaL - a poem (பருந்துகள்)

பருந்துகள்
-------------

பருந்துகளை
விரும்பியிருந்தேன்,
போன வாரம்வரை


மற்ற பறவைகள்
அண்ணாந்து பார்க்கும்
உயரங்களில்
கூரிய நகங்களால்
வானைக் கிழித்துப் பறக்கும்
பருந்துகளின் உயரப் பறத்தல்
கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும்

சிறகடிப்பு கிளம்பும்வரைதான்.
உயரங்களிலோ மோனத்தவத்தில்
சிலைபோல உறைந்த பருந்தின் பறப்பு..


நிழல்கள் புவியில் படியாது
விண்ணையும் மண்ணையும்
பறந்தே ஆளும் பருந்தின்
கால்பிடியில் கற்களிலும்
துளைவிழும்.

வசந்தம் வந்தால் பாடாது,
வண்ணங்கள் வால்களில் மாற்றாது.
துணை மறைந்தால் சோகமாய்க்
கிளைகளில் கூவாது,
பறத்தல் மட்டுமே
தவமாய்க் கொண்ட
பருந்தை நான்
வியந்திருந்தேன்..

உயரப்பறத்தலிலும்
பார்வை புவியில் நாறும்
பிணங்களிலும், எலி,முயல்களிலும்
மட்டுமேயென
போனவாரம் அறிந்த வரை.

Salaam Bombay!

சலாம் பாம்பே!
--------------
பத்து வருடங்களாகிவிட்டன - மும்பை எனக்குப் பரியச்சமாகி. கொஞ்ச நாள் வெளியிலிருந்தாலும், மும்பையுடனான touch விட்டுப்போகவில்லை.

மும்பையிலிருந்து வெளியேபோகணும்னா எல்லோருக்கும் ஆசைதான்.. இந்த நெரிசல், polllution,நிரம்பிவழியும் குப்பைக் கூளங்கள்,சேரிகள். முதல்ல சம வெறுப்பாயிருந்தது. இப்போ பழகிப்போச்சு.கொஞ்சம் கொஞ்சமாய் இந்த நகரின் நல்ல குணங்களும் தெரியவாரம்பித்தன.

1. சுறுசுறுப்பு.: மும்பை உறங்கியதாகச் சரித்திரமில்லை. என்னநேரமென்றாலும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள். பேருந்துகளில் அடிபிடியிருக்காது. எங்கும் வரிசையில் நிற்கும் வழக்கம் பழக்கம் உண்டு- மின்வண்டிகளைத்தவிர.

2. நேரம் தவறாமை:அப்பாயிண்ட்மென்ண்ட்கள் உரிய நேரத்தில் நடைபெறும். நேரத்திற்கு மதிப்பு உண்டு.
அந்த நினைவில் சென்னையில் ஒரு அறிவியல் வல்லுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு சம்மதம் கேட்டேன். " "நாளைக்கு வாருங்கள் " என்றார் ,நான் பார்க்கவேண்டிய நபர்." நாளை எத்தனை மணிக்கு?" என்ற என் கேள்விக்கு ஆச்சரியமாகப் பார்த்தார். "வாங்க எப்பவேணும்னாலும். பேசுவம்". இந்த பதில் பல மும்பைக்காரர்களுக்கு புதிது.
பிதுங்கிக்கொண்டு ஓடும் லோக்கல் மின்சார ரயில் ( western railway atleast) 8.14க்கு ப்ளாட்பார்மில் வருமென்றால் வரும். அது 8.16 ஆக வாய்ப்பில்லை.- சாதாரணமாக.

3. வேலை ,வேலை : இது பரவலாக இருக்கிறது.பிச்சைக் காரர்கள் அதிகம் என்றாலும், என்னமாவது விற்று, சுயமரியாதையுடன் வாழ்பவர்கள் நிறையப் பேர். மின் வண்டிகளில் இதனை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். உதாரணமாக , பிள்ளைகளூக்கான சித்திரம் வரையும் புத்தகங்கள், சமையல் குறிப்புப் புத்தகங்கள், விலைமலிவான சீனப் பொம்மைகள், குழந்தைகளுக்கான வெளிநாட்டுப் பதிப்புப் புத்தகங்கள் ( கள்ளத்தனமாக Containerகளில் வந்தது). பத்து ரூவாய்க்கு பத்து பேனா முதலில் வந்தது இங்குதான்....

4. உதவும் குணம் : இது அவ்வளவு பரவலில்லை. ஆயினும் ஈரப்பசை இருக்கிறது. பசிமயக்கத்தில் தண்டவாளத்தில் விழப்போன கிழவரைப் பிடித்திழுத்துக் காப்பாற்றி, சூடான தேனீரும், பிஸ்கட்டும் வாங்கித் தந்த பின், சட்டையைச் சரிசெய்யபடி, தன் date-உடன் அடுத்த ரயிலில் ஏறிப் போன இளைஞனை எனக்குப் பரியச்சமுண்டு. செய்பவர்கள் சொல்லுவதில்லை. அலட்டுவதில்லை. இதற்கும் நேரமின்மைதான் காரணமாயிருக்கக் கூடும்.

5. காஸ்மோபொலிடன் சமூகம்: நிஜமான காஸ்மோபொலிடன் சமூகம் எனச் சொல்லவேண்டும். சிவசேனாவும், மராட்டி சமூகங்களும் lobby செய்யினும், தனி மனிதனளவில் இன்னும் மொழி, இன வெறி அவ்வளவாக வளரவில்லை. பாப்ரி மசூதி தகர்ப்பு,1993 குண்டு வெடிப்பு என நிகழ்வுகளில் மும்பை ஆடிப்போனாலும், கீழே விழவில்லை. குண்டு வெடித்த மறுநாள், அலுவலகங்களில் 90% வருகை பதிவாயிருந்தது.

6. கலை மதிப்பு: மும்பையில் இன்றும் இளைஞர்கள், இளைஞிகள் நாடகம் பார்க்கப் போகிறார்கள். நாடகங்களின் தரம் பலரகப்பட்டதெனினும், நல்ல நாடகங்களுக்கும் குறைவில்லை. அவற்றிற்கான வரவேற்பும் குறைவில்லை. பு.லெ. தேஷ்பாண்டே அறியாத மராட்டிய இளைஞன், ரஜினிகாந்த் தெரியாத தமிழ் மாணவனைவிடக் கேவலமாகப் பார்க்கப்படுவான். தமிழ்நாட்டில் நாம் எத்தனை நல்ல நாடகம் பார்த்திருக்கிறோம்/வந்திருக்கிறது ?

இன்னும் முன்னேறலாம். Plague வருவதற்கு முற்பட்ட சூரத் நகரமும், அதன்பின் அந்நகரின் மாற்றமும் நான் பார்த்தது தான். ஒரு தனிநபர் (Mr.Rao -Municipal commissioner)சூரத் நகரில் ஏற்படுத்திய மாற்றம் மும்பையில் இன்னும் வரவில்லை என்பது வருந்துதற்குரியதே.அரசியலும், தனிமனிதனின் அக்கறையின்மையும் முக்கியமான காரணங்கள்.

அன்புடன்
ஸ்ரீமங்கை

Thursday, February 17, 2005

Rail AthirvukaL இரயில் அதிர்வுகள்

இரயில் அதிர்வுகள்
--------------
போய்க்கொண்டேயிருக்கிறது
இத்தொடர் வண்டி
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்

பழுப்பு நிற அழுக்கு
இணைவுப்பெட்டிகளினூடே
புதிதாய் நீலநிறப்பெட்டி
எப்போதும் அதே வரிசையில்
இல்லாது நகரும்.
மெல்லியதாய் முனகியபடி


முட மறுக்கும் , திறந்த கண்ணாடி சன்னல்
திறக்க மறுக்கும் மூடிய இரும்பு சன்னல்
பகுதி திறந்திருக்கும் சன்னல்களோவெனில்
இன்னும் அபத்தம்.

காற்று சமனப்படுத்திய பெட்டிகளோவெனில்
இருண்ட கண்ணாடி சன்னல்களூடன்
அனைவரையும் குருடாக்க்கும்-
வெளியிலும் உள்ளிலும் சேர்த்து..

இன்று.
எதிர் இருக்கையில் புது மணமக்கள்
அருகினில் கால் வீங்கிய கிழவி,
பின்புற இருக்கைகளில் குழந்தைகளின்
கூச்சல்...
எதுவும் நேற்றிருந்த வண்டியில் இருந்ததில்லை.
நாளை , அருகில் பைத்தியக்காரனாயிருக்கலாம்.

அலறி விரைந்த வண்டி புள்ளியாய்ப் போனபின்
தண்டவாளங்களின் சேர்க்கை விலகி
அடுத்த வண்டி வரும்வரை
சல்லிக்கற்களில்
இவ்வதிர்வுகள்....

தேடிக்கொண்டிருக்கிறேன்
நீண்ட பனைமரங்களினுடே
தெரியும் அந்த அமைதியான குடிசைபோலவொன்று
அதிர்வுகளற்றோ .
அன்றி சன்னமாய் அதிர்ந்தபடியோ..


அன்புடன்
ஸ்ரீமங்கை