பாத்திரப் படைப்பு
நம்பி : மார்க்ஸீயவாதத்தில் நிஜமாக வாழ்கின்ற மருத்துவர் . கம்யூனிசம் குறித்தான அவரது சிந்தனை இழைகள் இந்திய யதார்த்தமாக இருப்பினும், கண்மூடித்தனமான கம்யுனிசப் புரட்சிக்காற்றுக்கு அவை மிக மிக மென்மையானவை. அலட்சியப்படுத்தப்படுகின்றன. கலப்பு மணம் எனபதை அலட்டலாக, புரட்சியாகக் காட்டாமல், தனது வாழ்வின் இயல்பான மாற்றமாகவே ஆக்கிக்கொள்கிறார். ரோஸா என்ற சக மருத்துவரை(தன்னிலும் வயது முதிர்ந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்) மணந்துகொள்வதும் , கிராமங்களில் இலவசமாக மருத்துவ உதவிசெய்வதும், தனது கொள்கைகளின் காரணமாக என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், தன் மனதின்படி , சிந்தனையின் ஆழங்களில் , தானாகவே நம்பி எடுக்கும் முடிவுகள்.
நம்பியின் மார்க்சீயவாதம் கண்மூடித்தனமானதன்று. தவறாக எழுதப்பட்ட கம்யூனிச வாதங்களைத் தூக்கிஎறிகிறார்.
"சம்பாரண் விவசாயிகளின் போராட்டகாலத்திலிருந்தே, பெரு முதலாளிகள் மற்றும் பெருநிலப்பிரபுக்களின் ப்ரதிநிதியான காங்கிரஸ் தலைமை அகிம்சை, ராட்டை போன்றவற்றால் தேசீய இயக்கத்தை , ஏகாதிபத்தியத்திற்கும்.... இயந்ததாக அமைய முயற்சி செய்தது" இவ்வளவு வருஷத்திற்கு அப்புறமும் , காந்தியப்பற்றி இதுதான் இவங்களோட மதிப்பீடு-ன்னா இவங்க சங்காத்தமே வேண்டாம்-னு தோணுது" (பக் 282-83)
இந்த வார்த்தைகளைப்ப் பேசுவது, கம்யூனிசப் பாதையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பி.
தனது கம்யூனிசக் கொள்கைகள் எவ்வாறு இந்திய இயல்பிற்கு ஒத்துவரும் எனத் தெளிவாக இருக்கிறார். முக்கியமாக முகுந்தன் என்ற நக்ஸல் ஆதரவாளருக்கும் , நம்பிக்கும் ஏற்படும் வாக்குவாதம். (பக் 321-323)
கம்யூனிஸ ஆதரவாளர்கள் என்றாலே, மதத்தை எதிர்க்கவேண்டுமென நம்பி நினைக்கவில்லை. மதம் மக்களுக்குக் கொடுக்கும் ஒரு நல்ல சக்தி - நம்பிக்கை. அது எல்லைகளுக்கு அப்பால் போய், மூடநம்பிக்கையாகும்போது விபரீதமாகிறது. அதுவே , சரியாக அணுகப்பட்டால் , வாழ்வினை சமாளிக்கத் தன்னம்பிக்கையையும் அளிக்கமுடியும். அளித்திருக்கிறது பல நூற்றாண்டுகளாக. மதத்தில் பல குறைகள் இருப்பினும் இது ஒன்றிற்காகவே அதன் இருத்தலை நியாயப்படுத்தமுடிகிறது. இதுதான் எதிர்காலத்தில் அதன் raison de etre ஆக இருக்க முடியும்- மதத்தின் பிற வெளிப்பாடுகள் சிதைபட்டாலும்
ஒரு மனிதனிடமிருந்து அவனது மதநம்பிக்கையென்னும் ஒரு கோட்டையைத் தகர்த்துவிடுவதற்கு சமூக அநியாங்கள், லாஜிக் கொண்டு நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் போன்றவற்றை கைக்கொள்ளலாம். ஆயின், அவ்வாறு நம்பிக்கை நீக்கப்பட்ட மனிதன், காப்பின்றி நிற்கிறான். அவன் காலபோக்கில் சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் என்னும் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வது எங்ஙனம்?
மனிதன் கூடிவாழும் இயல்பினன். உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் பெருமளவில் கட்டுப்பட்டவன். எந்த தாக்குதல்களுக்கும் அவன் இந்த இரு சக்திகளின் உதவியை நாடுகிறான். இதில் தாக்கப்பட்ட உணர்வுகள் நம்பிக்கையில் அடைக்கலம் புகுகின்றன.. உணர்வுகள் தாக்கப்பட்ட சிந்தனைகள் கனன்று , மறுபடி தாக்கப்படுகையில், தானும் சேர்ந்து தளர்க்கும். இந்த விஷச் சுழற்றியில் (vicious circle) சிக்கித் திணறும் மனிதன் மீண்டும் நம்பிக்கையின் போதையை நாடுகிறான். அந்நேரம் தன்னம்பிக்கை கிட்டுமானால் பிழைத்தான். இல்லையேல், மூடப்பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதனிலும் கீழிறங்குகிறான், சமுகத்தின் முன்னே கனமான வீரமெனும் அங்கியணிந்து, உள்ளே நடுங்கி, இரட்டை வாழ்வு நடத்தியபடி.
எனவே, கம்யூனிசப் பாதைகள் கொள்ளவேண்டிய தார்மீகப் பொறுப்பு மனிதனை, வீண் நம்பிக்கையிலிருந்து, கம்யூனிச நம்பிக்கைக்கு தானே மாறச் செய்யத் தூண்டுவது, அதேநேரம், அவன் காலம்காலமாகக் கைக்கொண்டிருந்த நல்மத நம்பிக்கையில் கைவைக்காதபடி..
இதனை நம்பி சுருக்கமாகக் கூறுகிறார் - முகுந்தனுடனான வாக்குவாதத்தில்.
நாம(கம்யூனிசவாதிகள்), மக்களின் கலாச்சார, ஆன்மீகத் தவிப்புகளைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளலை.... நாம இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரத்தின் பின்னே போறவங்க என்ற எண்ணத்தைப் பரப்பிண்டு இருக்கோம். அது அவங்களுக்கு பல நன்மைகளை உண்மையிலேயே கொடுத்தாலும்...(பக் 320-321)
" கம்யூனிச மொழியே தனி மொழியா இருக்கு. நாம மக்களை மாறணும்னு சொல்லறோம். எப்படி மாறணும்னு சொல்லறது கிடையாது. ....
இந்த வழியெல்லாம் ( வழிபாடுகள்) குப்பைக்கூளம். ..ஒத்துக்கறேன்.ஆனா நம்பறவனுக்கு நாத்தம் பெரிசில்லை. நாம சொல்லறோம். எங்க வழில வா. நல்லதுதான் ஆனா அவன் வழியை அடைச்சுட்டு இதுல வா-ன்னா அவன் நம்பபோறதில்லை. நாம ஏன் அவனோட அந்த வழில கொஞ்சதூரம் போகக்கூடாது. குப்பையள்ளற வேலையைச் செய்யக்கூடாது? கடைசில நாம திசைதிரும்பி, இப்போ எங்ககூட வாங்க-ன்னு சொன்னா, அவன் நம்மவழியில வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு." (பக் 321)
"நான் மதத்தை மனிதகுலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த உபயோகப்படுத்தலாங்கறதை நிச்சயம் நம்பறேன்.அம்புலிமாமா கதைகள், மக்களுக்கு, அதுவும் மாற்றத்தின் விளிம்பில் இருக்கிற மக்களுக்கு, நிச்சயம் தேவை." (பக் 322).
"மதத்தின் மேல நமக்கு இருக்கிற மூடத்தனமான வெறுப்பும் , அதன் நல்ல அம்சங்களைக் கண்டுக்காம விடுவதும்தான் நம்மை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கு" பக்க் 323
இத்தனைத் தெளிவாக இருக்கும் நம்பி, தனது மரணத்தில் , கடிதம் மூலம் அவர் தனது வலிகளினூடே, தான் நடந்து வந்த பாதை தவறாகத் தெரிவதாகக் காண்பித்திருப்ப்பது யதார்த்தமாக இருக்கலாம். அது, நம்மாழ்வாரின் தயக்கப் புரட்சியாளரின் பாத்திரத்தையும் உறுதிப்படுத்தியிர்க்கலாம். ஆயின், நம்பியென்ற மிக அருமையான பாத்திரம் வீணே, கதைக்காக இறுதியில் வலுவிழக்கிறது எனப்படுகிறது.
No comments:
Post a Comment