Tuesday, February 22, 2005

Pulinagak Konrai- my observations 4

பாத்திரப் படைப்பு
--------------

பொன்னா: புரட்சிகரமானப் பாத்திரம் என்றில்லாவிட்டாலும், யதார்த்தமாகவும், அதே நேரம் தெளிவாகவும் சிந்தித்துச் செயல்படும் பெண்பாத்திரம். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏழ்மையிலிருந்து, வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண், தன் கணவனின் குறைபாடுகளை அறிந்து, தெளிவாகத் தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து தெளிவாக முடிவெடுக்கிறாள் - திருநெல்வேலியில் படிக்க வைப்பதாக.

பெண்கள் அதிகம் படிக்காத, தன் உணர்வுகளைப் பேசி வெளிக்காட்டவும் முடியாத காலகட்டத்தில், ஒரு சமையற்காரரின் பெண், இத்தனை தெளிவாக முடிவெடுப்பதே ஒரு புரட்சிதான்.

இளம் விதவையான தன் பெண்ணின் இளமைமீறல்களைப் பொறுமையாகவும், நிதர்சனமாகவும் எதிர்கொள்வதாகக் காட்டியிருப்பது,அப்பாத்திரத்தின் மேல் மதிப்பு கூட்டுகிறது.

நம்மாழ்வார்: மிகப்பிடித்த பாத்திரங்களில் ஒன்று. சுயராஜ்ஜியச் சிந்தனை, புரட்சிப்பாதை, ஆஷ் கொலையின் பிண்ணணியில் வந்த பயம், ஒரு reluctant revolutionary எனக் கொள்ளலாம். வீட்டைவிட்டுப் போவதற்கான பின்னணி அழுத்தமாக இல்லை. அவரது தயக்கங்கள் ,மனைவி இறந்தபின் மனப் போராட்டம் போன்றவற்றால் சுயராஜ்ஜிய கொள்கையில் மனம் வழுகியது, என்பதைக் காட்டுவதாக எழுதப்பட்ட கடிதம் - வெளிப்படையாக அவரது குணாதிசய கவசத்தில் விழுந்த ஓட்டைகளைக் காட்டியிருப்பதாகக் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் வலிதாகக் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. திண்ணம், வீரம் போன்றவை பிராமண தயக்கங்களில் அழுந்திப்போகும் என்பதையும் காட்டுகிறது.

இதே போல, மற்றொரு கடிதத்தின் உதவியையும் ஆசிரியர் நாடியிருக்கிறார். அது நம்பியின் கடிதம் - கண்ணனுக்கு. "நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோஸாவுக்கோ ஒருபயனையும் இதுவரை அளிக்கவில்லை என இப்போது தோன்றுகிறது.....நிறைவேறவே முடியாதக் கொள்கைகளைக் கட்டிக்காப்பதில் என்ன கிடைக்கப்போகிறது? Now Gods, stand up for bastards. அவன் எப்போதும் வடிகட்டிய அயோக்கியர்களூக்கே துணை நிற்கிறான். அயோக்கியர்களுக்கு மட்டும்....

என் தவளை வயிறு அவளுக்குத் தெரியவேண்டாம்" பக் 327-328

வலியின் உச்சத்தில் , மனவுறுதி குலைந்த நிலையில் ஒர் கிறக்கத்தில் அவர் எழுதியதாகவே இருக்கட்டும். இருப்பினும், .இது மீண்டும் நம்மாழ்வாரின் நிலையைத் திரும்பிக்கொணர்கிறதோ ? கடைசி வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன "அவன் ( கண்ணன்) முடிவெடுக்கத் தெரியாதவர்களூக்கும் துணை நிற்கலாம்" பக் 328

No comments:

Post a Comment