Saturday, February 19, 2005

Pulinagak Konrai- my observations 1

பி.ஏ.கிருஷ்ணனின் "புலிநகக் கொன்றை" படித்தேன்- ஐந்தாவது முறையாக. ஒவ்வொரு முறையும் ஒரு பரிமாணத்தைப் பிடித்துக்கொண்டு கதையை ரசிக்கும் அனுபவம் சமீபத்தில் இவ்வாறு ஏற்பட்டதில்லை.

ஒரு நான்கு தலைமுறைகளின் வளர்சிதைமாற்றம், வரலாற்றுப் பின்ணணி, தனிமனிதப் பாத்திரப்படைப்புகள், அவற்றின் குணாதிசயங்கள் என நீளும் இக்கதையின் genuinity of expression , கதையின் மீது ஒரு பற்றும், மரியாதையையும் ஏற்படுத்துகிறது.

ஒரு முறை - கம்யூனிசத் தத்துவம்,மற்றொரு முறை - சுதந்திரப் போராட்டத்தில் தனிமனித உணர்வுப் போராட்டம், ஒரு குடும்பத்தின் வளர்சிதை மாற்றம், மதக் கோட்பாடு களும் (அவற்றின்) மனித மீறல்களும் என பல பரிமாணங்களில் இக்கதையை அசைபோட வைத்ததே பி.ஏ.கிருஷ்ணனின் முதல் வெற்றி என நினைக்கிறேன்.

புலிநகக் கொன்றையின் தாழ்ந்த கிளைகளும் அவற்றில் கூச்சல் போடும் பறவைகளும் - இந்த உருவகம் குறித்து பல முறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. பறவைகள் பலவிதம் - ஓவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு விதமான கூச்சல்கள்.. பறவைகளின் ( எண்ணங்களின்) விவரிப்பு ப்ரமிக்க வைக்கிறது.

நம்மாழ்வார் என்னும் பாத்திரத்தின் உலக விரக்தி (?) அவரைத் தன் அன்னையிடமிருந்தே போக வைக்கிறது. தன் குழந்தையிடம் கூடப் பாசம் வளர்க்காது... இதன் பின்னணி கொஞ்சம் கூடவே சொல்லியிருக்கலாமோ? எனவும் படுகிறது.

எதையும் ஆராய்ந்து, சந்தேகப்பட்டுப் பின் கைக்கொள்வதில் தயக்கம் காட்டும் அறிவுஜீவியென --நம்பியின் பாத்திரப் படைப்பு அப்பாத்திரத்தோடு நம்மையும் பொருத்திப் பார்க்கக் தூண்டுகிறது.

கம்யூனிசக் கொள்கைகளின் தாக்கமும், தனிமனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளுதலும் என்பதில் தொடங்கி, முகுந்தனும், நம்பியும் அதுகுறித்துப் பேசுவது(பக் 321-322) வரை அருமையாகக் கொணர்ந்திருக்கிறார். கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றிய விவாதங்கள் என்பது அண்மைக் காலம் வரை சூடுபறந்துகொண்டிருந்தன. 50s-70s ல் இந்த விவாதங்கள் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் இருந்திருப்பதை அழகாகக் காட்டியிருக்கிறார். கம்யூனிசத் தலைவர்கள், அவர்களின் பேச்சுகள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் சரியான இடங்களில் கையாளப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக "மாவோவின் பேட்டி"

"....From the long range view, future generations ought to be more knowledgeable than we are. Their judgment would prevail, not ours and they would assses the work of revolution .....In thousand years from now all of us, even Max, Engels and Lenin would possibly appear rather ridiculous"

இந்த பரந்த தொலைநோக்குப் பார்வை , கண்மூடித்தனமான கம்யூனிசத் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் இல்லாது போனதும் அது உடைந்ததற்கு ஒரு காரணமாயிருக்குமோ?

மற்றொரு பரிமாணம் காணக்கிடைக்கிறது. தெளிவான மறுதலிப்பும் இல்லாமல் ,முழுதும் நம்பவும் இயலாத அறிவுஜீவிகள் கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு , உறுதியாக இயக்கங்களில் ஈடுபடாதது.

நம்பி சொல்கிறார்.(பக் 251)
"All we have gained by our unbelief
Is a life of doubt diversified by faith
For one of faith diversified by doubt"

"நான் மதத்தை மனிதகுலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த உபயோகப்படுத்டலாங்கிறதை நிச்சயமா நம்பறேன்...மதத்துமேல உள்ள முடத்தனமான வெறும்ப்பும் அதனுடைய நலல அம்சங்களைக் கண்டுக்காம விடறதும் தான் நம்மை மக்களிட இருந்து அன்னியப்படுத்தி இருக்கு" (பக் 323)

சிந்திக்கவேண்டிய வார்த்தைகள் இவை. பகுத்தறிவுப் பாசறையும் கம்யூனிசக் குழுக்களும் மதத்தைக் கையாடிய விதம்தான் அவற்றின் எதிர்ப்பலைகளுக்குக் காரணமோ?

இக்கதையின் வேறு கண்ணோட்டங்களை பின் காண்போம்.

2 comments:

  1. /பகுத்தறிவுப் பாசறையும் கம்யூனிசக் குழுக்களும் மதத்தைக் கையாடிய விதம்தான் அவற்றின் எதிர்ப்பலைகளுக்குக் காரணமோ?/
    WHOSE?

    ReplyDelete
  2. அவை சமூகத்தில் சந்தித்த எதிர்ப்பலைகள் என்றிருந்திருக்கவேண்டும்.

    ReplyDelete