Saturday, February 26, 2005

Pulinagak Konrai- my observations 6 (Concluding)

கதாபாத்திரம்:

கண்ணன் :
இப்பாத்திரம் கண்ணாடியெனச் சொல்லலாம். கதையின் ஓட்டத்தில், கண்ணனின் பாத்திரத்தின் வழியே , அவரது சிந்தனையின் வழியே , பல எண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. நம்பியின் ஒன்றுவிட்ட தம்பியாக வரும் கண்ணன், நம்பியின் கருத்துக்களால் ஆட்கொள்ளப்படுகிறார். அவரது அரசியல் கொள்கைகள், சமூகச் சிந்தனைகள் நம்பி, கோபாலபிள்ளை ,ராஜாராமன் போன்றோரின் பேச்சுக்களால் தாக்கம் பெறுகின்றன. மாறும் கொள்கைகள் கொண்டிருப்பதை ஒளிவில்லாமல் காட்டியிருப்பது, கண்ணனின் பாத்திரத்தை கண்ணாடியாகவே காணச்செய்கிறது.

மக்களின் போலித்தனத்தையும், தனிமனித மனமீறல்களையும் கண்ணனின் பாத்திர அமைப்பில் காட்டியிருக்கிறார்.
"கண்ணனுக்கு வெட்கமாக இருந்தது. மற்றவர்கள் தன்னைவிட மோசம் என்பதை அறியும்வரை.
கண்ணனின் சிந்தனைகள் என நடுவே ஆசிரியர் பேசியிருப்பது நன்று. எல்லாரும் தங்களது படிப்பின் ஆழத்தை மேற்கோள் காட்டுவதின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள். என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே, பலமணிநேரம் பேசுவார்கள்"

உமாவைக் காதலிக்கும் கண்ணன், பேருந்தில் போகும்போது, தான் படிக்கும் புத்தகத்தைப் பார்த்துப் பெண்களைக் கவரமுடியுமா எனப்பார்ப்பதான சிறிய சபலம்...
"உமா இதுபோல் குட்டித் துரோகங்கள் செய்வாளா?அவளது இருத்தலின் மையப்புள்ளியே நான் என ஒருமுறை எழுதியிருந்தாள். ஓரங்கள் எப்படியெனத் தெரியவில்லை. என்னுடையவை போல அவளுடையவையும் கறவப்படுகின்றனவா?" பக் 64

ராஜாராமன் அமெரிக்காவின் கலாச்சாரத்தைப் பற்றிப்பேசுவதால் கவரப்பட்ட கண்ணன், அவரோடு குழுவில் கலந்துகொள்கிறார்.
"அதிகம் தொந்தரவு செய்யாத குழு அது. கதீட்ரல் சாலையில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முனால் - அநேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் மூடியிருக்கும்போது- தொண்டை கிழியக் கத்திவிட்டு அருகில் இருக்கும் ட்ட்ரைவ் இன் உணவகத்துக்கு காபி குடிக்கப் போவார்கள்" பக் 211
ராஜாராமன் மைதிலியுடன் அமெரிக்காவில் குடியேறுகிறார்.

"ரெண்டு பேரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைஞ்சுட்டான்னு சொல்லு " என்கிறார் நம்பி கிண்டலாக. பக் 211

இதனால் கண்ணனின் பாத்திரம் கறைபடியவில்லை. உள்ளிருக்கும் கறைகளையும், பிற வழுகல் நிலங்களையும் காட்டுகிறது- தன்னில் ஒளி ஊடுரவ அனுமதித்து.

மது, ஆண்டாள், பட்சி ஐயங்கார், ரோஸா எனப் பலபாத்திரங்கள் இப்புலிநகக்கொன்றைத் தோட்டத்தில் அடர்ந்திருப்பினும், கவர்ந்த சிலபாத்திரங்களைப் பற்றி மட்டுமே என் எண்ணங்களை எழுதியிருக்கிறேன். பல சிந்தனை ஓட்டங்களை வாசகர்கள் தங்கள் வாசிப்பில் மேலும் சந்திக்கக் கூடும்.

நிதானமாகப் பலமுறை விட்டுவிட்டுப் படிக்கவேண்டிய புத்தகம் இது.
நல்ல வாசிப்பு அனுபவத்தை அளித்த பி.ஏ.கிருஷ்ணன் அவர்களூக்கு என் நன்றிகள்.

No comments:

Post a Comment