Sunday, February 20, 2005

Pulinagak Konrai- my observations 2

புலி நகக்கொன்றை- 2

சாதி ஒழுங்குகளும் தனிமனித மீறல் முயற்சிகளும்
-----------------------------------------------

தென்கலை ஐயங்கார்கள் என்ற வகுப்பினை எடுத்துக் கொள்ளூம் போது ஆசிரியருக்கு பல வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. இச் சமூகத்தில் வடமொழி,
பிராமணீயம் சார்ந்த வேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை." பட்சி தென்கலை சம்ப்ரதாயத்தை விட்டுட்டு இப்படி மீமாம்சகா வழியிலே போறது ஆச்சரியமாயிருக்கு.அவனை நம்மாழ்வாரைத் திரும்பிப் படிக்கச் சொல்லு. குறிப்பா "சூழ் விசும்பி அணி முகில்" பாசுரங்களைப் படிக்கச் சொல்லு" நம்மாழ்வார் ( பக் 320)

ஆயினும் ,ப்ராமண சமூகமென முத்திரையிடப்பட்டதால், சடங்குகள் அவசியமாகின்றன.நாளடைவில் , சடங்குகள் வெற்றி கொண்டுள்ளன - இறுதியில்
கண்ணனை வைதிகம், புறவாழ்வில் வெற்றிகொள்வது போல சாதி அற்ற சமுதாயத்தை ஏற்படுத்த முயன்ற இராமானுசரின் கொள்கைகள் காலப்போக்கில் ஒரு சடங்குகள் நிறைந்த சாதியில் புதைந்தது.அச்சடங்குகளை மீறுவதில் உள்ள போராட்டத்தைக் காட்டுவதற்கு ,பிற கொள்கைகள் ( கம்யூனிசம், நாத்திகவாதம்) எவ்வாறு சாதீய வாதத்தை எவ்வாறு தாக்கின என்பதை இக்கதை யோட்டத்தில் பின்னிப் பிணைக்க ஆசிரியரால் முடிகிறது. ஒரு புறம் பகுத்தறிவு வாதம், மற்றொரு புறம் கற்றவர்களின் கையில் கம்யூனிசம் எனப் போர்க்கோலம் பூண்டிருக்க, சாதீய வாத ஒழுங்குகளைப் பின்பற்றவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் திணறிய இரு தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரால் நன்கு கையாளப் பட்டிருக்கிறது. பெரியாரின் பேச்சுகள், பகுத்தறிவாளர் ஒருவரின் மேடைப்பேச்சு ( பக்241-243)

இதற்கெல்லாம் முன்னே, ஆங்கிலேயரின் முயற்சிகள் -தாழ்சாதியைச் சேர்ந்தவொருவனின் பிண ஊர்வலம் நகருக்குள் செல்வதில் இருந்த எதிர்ப்பு, அதன் விளைவுகள்(பக் 34 ) இவை கதையை நகர்த்த தக்க இடங்களில் வசதியாக இருந்திருக்கின்றன.

.வடகலை- தென்கலை பிரிவினரின் பூசல்கள், ஐயர்-ஐயங்கார் பூசல்கள் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனை சமூகத்தில் பெரிதுபடுத்திக்காட்டியது
என்பது இக்கதையில் நன்கு உதவியிருக்கிறது.

வைணவச் சாதிஒழுங்குகள், உள்சாதி அரசியல்கள் எவ்வாறு பெண்களைப் பின் தள்ளியது என்பதற்கு ஆண்டாளின் மறுமண முயற்சித் தோல்வி காட்டுகிறது. ஜீயர் சொல்கிறார்" நான் இருக்கிற வரை சாஸ்திரத்திற்கு எதிரா நடக்க விடமாட்டேன். சாண்டில்யர் என்ன சொல்லறார் தெரியுமா?. விதவையானவா.. புருஷ சேர்க்கையையும் அறவே தவிர்க்கணுமாம். இதைப்பண்ணற விதவைகளெல்லாம் ரொளரவம் என்கிற நரகத்துக்குப் போவாளாம். மகாக் கொடூரமான நரகங்கள்ள ஒண்ணு ரெளரவம். உம்ம பொண் அங்க போக உமக்கு இஷ்டமா?.....ஏற்கெனவே வடகலையாரெல்லாம் நம்ம விதவைகள் முண்ணடனம் செய்துக்கலைன்னு தூஷிக்கிறா. இப்போ மறுவிவாகம் பண்ண ஆரம்பிச்சோமோ,
நாமெல்லாம் ப்ராம்ணாளே இல்லைன்னு சொல்லிடுவா....
தென்கலையாருக்கும் கெட்டபேர் வர்றபடியா எதாவது செய்துடாதயும்." (பக் 63)

இரு விதமான சங்கிலிகள் இங்கு கட்டிப்போட்டிருக்கின்றன.

1. புராணங்களின் அடிப்படையிலமைந்த ஒழுங்குமுறைகள் (mythical regulations).

2. பிற சமூகத்துடனான போராட்டம் ( inter group rivalry).

இந்த சமூகப்போராட்டங்களின் வலு, பட்சி ஐயங்கார் ஏற்று நடத்திய வழக்குகளில் தெரிகிறது.

இளம்விதவையான ஆண்டாளின் தேவைகள் சமூக ஒழுங்கால் காலநீரில் அமுக்கப்படுகையில், அவை பொத்துக் கொண்டு வெளிவர, எழும் போராட்டங்கள் ... அவள் பின்னால் மனநிலை குலைந்த நிலையில் இறக்கும்வரை வருவதாய்க் காட்டியிருப்பது , நம்மில் கனத்த மொளனத்தைக் கொண்டு
வருவது நிஜம்.

இச்சமூக ஒழுங்குகள் எவ்வாறு கண்ணனைத் தாக்கின என்பதையும், அவர் எவ்வாறு ஊரோடு ஒழுகுதல் என்பதற்காக சடங்குகளில் ஈடுபடுகிறார்
என்பதையும் இறுதியில் காட்டியிருப்பதில் இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதும் அவரது மனநிலையைச் சொன்னவிதம் நன்று.."அவனது(கண்ணனின்) பூணூல் புதியது. பளீர் என்ற வெள்ளை ( பக்கம்319)

நம்பி கண்ணைக் கசக்கிக்கொண்டு இக்குண்டத்தை வட்டமிடுகிறானா? அவனது மார்க்சிய ஆத்மா அவனுக்குப் படைக்கப்படுபவைகளை ஏற்றுக்கொள்கிறதா? (பக் 319)

பட்சி தென்கலை மார்க்கத்தை மறந்துவிட்டதாகத் தெரியவில்லை. அவரது வற்புறுத்தலால் கண்ணன் ஜீயர் செய்த பஞ்ச சம்ஸ்காரத்தில்
சேர்ந்துகொண்டான்.அவன் வைணவ மார்க்கத்தில் சேரும் சடங்கு (319)

புகை கண்ணை எரித்தது ....என்னுடைய ஆயுள் என வரும்போது கொள்கைகள் மறைந்துவிடுகின்றன....மதம் மனத்திற்கு அமைதி தருமானால் அதன்
மடியில் சேர்வது என்ன தவறு? (பக் 320)

அவன் ( நம்பி) நிச்சயமாக ப்ரத்யங்காரா வேள்வி பற்றிப் பேசவில்லை.அவன் பிராமண மதத்தோடு கை குலுக்கியிருப்பானா?இந்த நெய்யைக் குடிக்கின்ற
சடங்குகளில் கலந்து கொண்டு இருப்பானா? ( பக் 323)"

உள்ளெளும் கேள்விகளுடன் கண்ணன் நடத்தும் போராட்டங்களில் வெளியில் சமூகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆயின் , இந்தப் போராட்டமே
வெற்றியாகத் தான் எனக்குப் படுகிறது.

No comments:

Post a Comment