Tuesday, February 22, 2005

NaatuppuRappaadalkaL

நாட்டுப்புறப்பாடல்களுக்கெனத் தனி இடமுண்டு எந்த இலக்கியத்திலும். நமது நாட்டுப்புறப்பாடல்களின் எளிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும்பாங்கு, பொருட்செறிவு குறித்து எவ்வளவு எழுதினாலும் குறைவாகவே இருக்கும்.

பிற மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு ஆராயப்பட்டு பதிவு செய்யப்பட்டு , அம்முயற்சிகளின் முன்னோடிகளுக்கு மதிப்பும் கொடுக்கப் படுகிறது. இங்கு தான் நமது மொழி வளர்ச்சிக் கொள்கைகள் பிறழ்கின்றன.

1940-50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் திரு.அன்னகாமு அவர்கள். தென் தமிழ் நாட்டில்(குறிப்பாக மதுரை மாவட்டம்) கிராமம் கிராமமாகச் சொன்று இப் பாடல்களை மிகச் சிரமத்துடன் திரட்டியவர். ஒலிப்பதிவு வசதிகள், போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அக்காலக்கட்டத்தில் இப்பணி எளிதல்ல.இப் பாடல்களைத் திரட்டி, பதிவு செய்து புத்தகமாகவும் வெளியிட்டார். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்"எனப் பெயரிட்ட இப்புத்தகம் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தால் வெளியிடப் பட்டது 1970 களில் இறுதிப் பதிவாகியது - நான் அறிந்த வரை.

இந்நூலின் முகவுரையில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் இம்முயற்சியைப் பாராட்டி எழுதியிருக்கிறார். எனது இம்மடலின் நோக்கம் இந்நூலைப்பற்றி நாட்டுப்புறப் பாடல்களின் இக்காலத்து மன்னர்கள் பலரும் குறிப்பிடுவதில்லை என்னும் வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். எவரேனும் இதனை மறுதலித்து, இந்நூலைப்பற்றிப் பேசியிருப்பதை சுட்டிக்காட்டின், மிக மகிழ்வேன்.

இது பரவாயில்லை. இந்நூலில் நான் படித்த பாடல்கள் பலவும் திரைப்படங்களில்பெருவெற்றி பெற்ற பாடல்கள். ஒருவர் கூட அமரர். அன்னகாமு அவர்களின் முயற்சியைத் தம் திரைப்படங்களில் நன்றி தெரிவிக்கவில்லை என்பது மிக வருத்தற்குரியது.

உதாரணம் - சிந்து பைரவி "பாடறியேன் படிப்பறியேன்" - பாடல். இது இந்நூலில் பிரதானமாகக்காணப்படுகிறது. கவிஞர்கள் நாட்டுப் புறப்பாடலுக்கு என்ன ராயல்டி கொடுக்க வேண்டும் ? எனக் கேட்கலாம். நான் கேட்பது ராயல்டி -யல்ல. இப்பாடல் நமக்குக் கிடைக்கத் தந்ததற்கான நன்றியும், மதிப்பும்திரு.அன்னகாமு அவர்களுக்குக் கிடைக்கப் பெறவேண்டுமென்பதே.'ஊரார் உறங்கையிலே, உற்றாரும் தூங்கையிலே" -திருச்சி.லோகநாதன்டூயட்டாகப் பாடிய பழைய பாடல். பல பாடல்கள் , இந்நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் பெற்றவை என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்நூல் கிடைத்ததே ஒரு கதை.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகில் ஒரு அல்வாக் கடையருகே நின்று கொண்டிருந்தபோது, அருகேயிருந்த சைவசித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் கடையில் இருந்த புத்தகங்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அட்டை கிழிந்துப்போய், வேறு கலர் காகிதத்தால் அட்டை தைக்கப்பட்டு, கையால் தலைப்பு எழுதப்பட்டிருந்த இப்புத்தகம் கவனத்தைக் கவரவே, எடுத்துப்பார்த்து துணுக்குற்றேன். பத்து வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம்.... "இதுதான் கடைசிப் புத்தகம். கடைசிப்பதிப்பு" என்று கடைக்காரர் சொன்னபோது வருத்தம் வந்ததை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
என்று நாம் இம்முன்னோடிகளுக்கு மதிப்பு தரக்கற்றுக் கொள்கிறோமோ, அன்று தான் நம் மொழி வளர்ச்சி-களுக்கான முயற்சிகள் அர்த்தம் பெறும்.

1 comment:

  1. முதல் நாலுவரிகள் "பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன், ஏடறியேன் எழுத்தறியேன்," வரை அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதன்பின் உள்ளவை வைரமுத்து படத்திற்கு ஏற்றபடி "தங்கமே நீயும் தமிழ்ப்பாட்டும்பாடு" என்று எழுதியிருப்பார். இருந்தாலும், எடுத்த இடத்தை டைட்டில்லயாச்சும் சொல்லியிருக்கலாம்.
    இத நான் யாஹூ குழுமத்திலேயும் எழுதியிருந்தேன்

    ReplyDelete